(சென்ற இதழ்த் தொடர்ச்சி)

மூடநம்பிக்கை

எந்தவொரு காரண - காரிய இயைபும் இல்லாமல் ஏதாவது ஒன்றை நம்புவதை “மூடநம்பிக்கை” என்கிறோம். புராதன சமூகத்தில் இருந்த மனிதன் பட்டறிவுக் குறைவால் தனது அறிவுக்கும் அனுபவத்திற்கும் எட்டாதவற்றின்மீது ஓர் பயங்கலந்த மரியாதை செலுத்தித் தொடங்கினான்; வணங்கவும் செய்தான். ஆண்டான் - அடிமைச் சமூகத்தில் அத்தகைய நம்பிக்கைகள் பெருகின. இன்றைய நிலப்பிரபுத்துவ - முதலாளித்துவ சமூகத்திலும் அவை நிலவி வருகின்றன. இந்நிலை ஆங்கிலேய ஆட்சியின்போதும் இருந்தது.

சகமனிதனால் வாழ்க்கை இழந்து நிற்கும் மனிதன், தனது தாழ்வு நிலைக்கான காரணங்களை ஆராய்ந்து நோக்க எண்ணாமல் கடவுளின் அவதா ரங்களாக அல்லது குறியீடுகளான விலங்குகளை வணங்கிய மூடநம்பிக்கையை மார்க்ஸ் கடுமையாக, நையாண்டியாக - விமர்சனம் செய்துள்ளார்.

“இயற்கையின் எஜமானாகிய மனிதன், குரங்காகிய அனுமான் முன்பும், பசுமாட்டின் முன்பும், தெண்டனிட்டு வணங்கியதில், இந்தச் சிறுமை காட்சியளித்தது. இவற்றையும் நாம் மறக்கக் கூடாது. அவை மனிதனது சிந்தனையைக் குன்றிய வட்டத்தில் சுழலச்செய்து, அதனை மூடநம்பிக்கைக்கு ஏற்ற கருவியாகவும் மரபின் அடிமையாகவும் செய்து, அதன் மேன்மை முழுவதையும் - வரலாற்றுப் படைப்பாற்றல் அனைத்தையும் - இழக்கச் செய்துவிட்டன என்பதையும் நாம் மறப்பதற்கில்லை.” (இந்தியாவைப் பற்றி., பக்.27-28).

என்ற அவரது விமர்சனம் இத்தகைய மூடநம்பிக்கையின் இழிநிலையையும் சிந்தனையை மழுங்கடிக்கும் தன்மையையும் பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தி நிற்கிறது.

“விலங்குகளை வணங்கும் மூடநம்பிக்கையை, இன்றும் இந்துக்கள் கோடிக்கணக்கான கடவுள்களை உருவத்துடன் மாத்திரமில்லாமல் பெண்டு, பிள்ளை, வைப்பாட்டி, ஆடு, மாடு, குதிரை, யானை, எலி, பெருச்சாளி, மயில், கருடன், பாம்பு ஆகிய உருவங்களுடன் வணங்குகிறார்கள். இவையெல்லாம் மேல்சாதி - கீழ்சாதி அனைவரிடமும் உள்ளன.” (பெரியார்: ஈ.வெ.ரா.சி., ப.1380).

என்று பெரியாரும் விமர்சித்துள்ளார். மார்க்ஸ் இத்தகைய மூடநம்பிக்கைகள் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்பதை விவரித்துள்ளார். பெரியார் அதை நையாண்டி செய்வதோடு, சமூகத்தில் தன்னை அறிவாளியென்று காட்டிக் கொள்கிற பிராமணரிடமும் இம் மூடநம்பிக்கை நிலவுகிறது என்பதைச் சுட்டியுள்ளார். இதைப் பிராமணர்களும் மூடத்தனமாக இருந்தார்கள் என்று புரிந்து கொள்ளக்கூடாது. மாறாக, இதைத் திட்டமிட்டே செய்தனர் என்றே கொள்ள வேண்டும். பெரியார் இந்த முரண்பாட்டை எடுத்துக்காட்டுவதன்மூலம் நடைமுறையளவில் பிராமணனும் மூடநம்பிக்கையைப் பின்பற்றுபவனே என்பதாக நையாண்டி செய்துள்ளார். மார்க்ஸ் குறிப்பிடும் ‘வரலாற்றுப் படைப்பாற்றல் இழப்பு’ என்பது எவ்வெவற்றால் நிகழ்ந்தது என்பதைப் பெரியார் பட்டியலிடும் பாங்கு வியக்கத்தக்கது.marx and periyar 365மனுதர்மம்

வேதங்களும் உபநிடதங்களும் கட்டமைத்த சமூக நிறுவனங்களை அப்படியே நிலைநிறுத்துவதற்கென்று எழுந்தது மனுதர்மம். அதாவது, இயல்பாக வளர்கின்ற சமூகத்தைத் தாம் விரும்புகிற அல்லது தமது கட்டளைக்குக் கட்டுப்பட்டிருப்பதாக நிலைநிறுத்துவதே மனுதர்மத்தின் அடிப்படை. இத்தகைய தன்மைகளோடு அவர் எதைச் செய்தாலும் அந்நடவடிக்கை மனுதர்மத்தின்பாற்பட்டதாகவே கொள்ளப்படும். அந்த வகையில், 1853 ஆம் ஆண்டில், இங்கிலாந்தின் இந்திய அதிகாரியாக இருந்த சர்.சார்லஸ்வுட் செயல்பட்டதால், மார்க்ஸ் அவரை ‘நவீன மனுதர்மன்’ என்றே குறிப்பிடுகிறார். ஏனென்றால், 1854 இல் காலாவதியாகும் கிழக்கிந்தியக் கம்பெனியின் சாசனத்தை ஒரேயடியாக மேலும் 20 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப் பரிந்துரை செய்தார் அவர். இந்திய விவகாரங்கள் குறித்து சட்டமியற்றும் எல்லா வேலைகளையும் ஒத்திப்போடும்படி இங்கிலாந்து மக்களும் இந்திய மக்களும் ஒருமித்த குரலில் கோரிய நிலையிலும் அவர் பிடிவாதமாய் நின்றார். மக்களின் விருப்பத்தைக் கணக்கிலெடுத்துக் கொள்ளாமல் மனுதர்மம் எப்படி விதிகளைத் திணிக்கிறதோ அதுமாதிரி சர்.சார்லஸ்வுட்டும் செயல்படுகிறார் என்பதற்கு அழுத்தம் கொடுப்பதற்காகத்தான் இந்தியப் புரிதலுக்கேற்ற ‘மனுதர்மன்’ என்ற சொல்லால் அவரைக் குறிப்பிடுகிறார் மார்க்ஸ்.

இது குறித்து மார்க்ஸ் எழுதுவது இதுதான்:

“உடனடியாகவும் நேரடியாகவும் அது (அரசு) 15 கோடி மக்களுக்குச் சட்டமியற்ற விரும்புகிறது. அதுவும் ஒரேயடியாக 20 ஆண்டுகளுக்குச் சட்டமியற்ற வேண்டுமென்கிறது. சர்.சார்லஸ் வுட் தன்னை நவீன மனுதர்மனாக நிலைநாட்டிக்கொள்ள விரும்புகிறார்.” (இந்தியாவைப் பற்றி., ப.8).

சமூகத்தின் இயல்புநிலைக்கு ஒவ்வாதவற்றைத் திணித்து, அதையே நிலையானதாக்க முயலுவதில் மனுவும் சர்.சார்லஸ் வுட்டும் ஒன்றுபடுகிறார்கள். இதர கருத்தியல்களைப் போலவே ஆங்கிலேயர்கள் இதையும் தங்கள் ஆதிக்கத்திற்கு உதவியாகப் பயன்படுத்திக் கொண்டனர்.

“வெள்ளைக்காரர்கள் இந்த நாட்டில் தங்களது ஆட்சி என்றும் நிலைத்திருக்கவும், இந்த நாட்டுச் செல்வத்தைத் தாராளமாய்த் தங்கள் நாட்டுக்குக் கொள்ளை கொண்டு செல்லவும் உத்தேசித்து, இந்த நாட்டில் யாருடைய தயவு தங்களுக்கு இருந்தால் தங்களது எண்ணம் தாராளமாய் நிறைவேறுமோ அவர்களது தயவைப் பூர்ணமாய்ச் சம்பாதிக்க வேண்டியே, அவர்கள் மனித தர்ம ஆட்சி என்பதை அடியோடு மறந்து முழுவதையும் கைவிட்டு மனுதர்மப்படி ஆட்சி முறையை வகுத்து நடத்த வேண்டியவர்களானார்கள்.” (பெரியார் :ஈ.வெ.ரா.சி.,ப.177).

என்ற பெரியாரின் மதிப்பீடும் மார்க்ஸின் கருத்தோடு ஒப்புமை உடையதாகவே விளங்குகிறது. மார்க்ஸ், மனுதர்மத் தன்மையோடு ஆங்கிலேயர்கள் ஆட்சியை நடத்தினார்கள் என்பதோடு நிற்க, பெரியாரோ மனுதர்மத்தின் காவலர்களான பிராமணர்களின் ஆதரவோடு - அவர்களுக்குப் பயன்விளைவதாகவே ஆட்சியை நடத்தினார்கள் என்றும் குறிப்பிடுகிறார்.

இந்தியக் கிராமங்கள்

“இந்த அமைதியான கிராமச் சமூகங்கள் சாதுக்களாகத் தோன்றிய போதிலும், கீழ்க்கண்ட கொடுங்கோன்மைகளுக்குத் திட்டமான அடிப்படையாக இருந்தன என்பதை நாம் மறக்க முடியாது; அந்தச் சமூகங்கள் மனித மூளையைச் சின்னஞ்சிறு கூட்டுக்குள் அடைத்து - அதைவிட மூடநம்பிக்கையின் சுலபமான கருவிகளாகவும் பரம்பரைச் சம்பிரதாய விதிகளின் அடிமையாகவும் ஆக்கியதையும், சகல வகைப்பட்ட சிறப்புக்களையும் சரித்திரப் பூர்வமான சக்திகளையும் மனித மூளை பெறமுடியாமல் செய்ததையும் நாம் மறக்க முடியாது.” (இந்தியாவைப் பற்றி.,ப.26).

என்று இந்தியக் கிராமங்களின் தன்மைகளை விவரிக்கிறார் மார்க்ஸ். ஒவ்வொரு கிராமத்தில் வாழும் மனிதனுக்கும் அவனது கிராமமே, மிஞ்சிப் போனால் சுற்றுப்பத்து (சுத்துப்பத்து) கிராமங்களே உலகம் என்பதான நிலையில் முந்தைய இந்தியா இருந்ததைத் துல்லியமாகப் பதிவு செய்துள்ளார் மார்க்ஸ். சமய விதிகளும் சமூக விதிகளும் இந்தியக் கிராம மக்களை, “தேக்கம் நிறைந்த அசைவற்ற வாழ்க்கை - சிருஷ்டிக்கும் திறனில்லாத செயலற்ற வாழ்க்கை” (இந்தியாவைப் பற்றி., ப.27).

வாழவைத்தது என்பதையும் மார்க்ஸ் தெளிவுபடுத்தியுள்ளார்.

சகல வகைப்பட்ட சிறப்புக்களையும் வரலாற்றுப்பூர்வமான சக்திகளையும் மனித மூளை பெற முடியாதபடிக்கு இந்தியக் கிராமங்கள் இருந்தன என்பதை மார்க்ஸ் குறிப்பிடுவதைப் போலவே பெரியாரும்,

“கிராமம் என்றால் என்ன? அதில் பள்ளிக்கூடமில்லை, ஆஸ்பத்திரி இல்லை. டிராமா இல்லை, பார்க் இல்லை, நீதி ஸ்தலமில்லை, போலீஸ் காவல் இல்லை, நல்ல ரோட்டு வசதியில்லை, விளக்கு இல்லை, நல்ல தண்ணீர் இல்லை, உயர்ந்த நாகரீகம் என்பது இல்லை, பெரும்பாலும் வயிற்றுக்கு ஆகாரம் சம்பாதிப்பதைவிட வாழ்வு ஆசைக்குப் பணம் சம்பாதிக்கும் வசதியில்லை - இப்படி இன்னும் பல வசதிகள் (நகரத்தானுக்கு இருப்பவைகள்) “கிராமத்தானுக்கு இல்லை.” (கிராமச் சீர்திருத்தம்,ப.6)

என்று அதே சிந்தனையோட்டத்தோடு கூறியிருப்பது ஒப்பு நோக்கத்தக்கது. பெரியார் பட்டியலிடும் மேற்கண்டவற்றைப் பெற்ற நகரமக்களின் வளர்ச்சியோடு எந்த வகையிலும் ஒப்பு நோக்கத்தக்கதாக இந்தியக் கிராமங்கள் அன்றைக்கும் இருக்கவில்லை என்பதே இருவரின் முடிவாகவும் இருப்பது நோக்கத்தக்கது. எனவே, உலக ஞானத்தைக் கிராம மக்கள் பெறுவதற்கு அறிவியல்பூர்வமான கண்டுபிடிப்புகளும் வாழ்க்கை முறையும் சிந்தனையும் அவர்களைச் சென்றடைய வேண்டும் என்பதே இருவரது எதிர்பார்ப்பாகும்.

விடுதலையும் சமூக மாற்றமும்

ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்து விடுதலை பெறப்போகும் இந்தியா, எத்தகைய தன்மையிலான விடுதலையைப் பெறப் போகிறது என்பதைத் தீர்க்கதரிசனத்தோடு கீழ்க்காணுமாறு எழுதுகிறார் மார்க்ஸ்:

“பிரிட்டனில் இன்று அதிகாரத்திலிருக்கும் ஆளும் வர்க்கங்கள் ஒழிக்கப்பட்டு, இயந்திரத் தொழிலாளி வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றுவது வரையிலும் அல்லது ஆங்கிலேய ஆதிக்கத்தை அறவே ஒழித்துக்கட்டும் அளவுக்கு இந்தியர்கள் வளர்ந்து வலிமைபெறும் வரையிலும் பிரிட்டிஷ் முதலாளிகளால் அங்குமிங்கும் உருவாக்கப்பட்டிருக்கும் சமுதாயத்தின் புதிய அம்சங்களின் பலன்களை இந்தியர்கள் அனுபவிக்க முடியாது. எது எப்படி இருந்தாலும் சரி, அந்த மகத்தான, கவர்ச்சியான தேசம் ஏறக்குறைய தூரத்திலுள்ள ஒரு காலத்தில் மறுமலர்ச்சியடைவார்கள் என்று நாம் நிச்சயமாக எதிர்பார்க்கலாம்”. (இந்தியாவைப் பற்றி., ப.107)

மார்க்சால் கவனமாகவும், சரியான புரிதலோடும் கையாளப்பட்டுள்ள வார்த்தை, “மறுமலர்ச்சியடைவார்கள்” என்பதாகும். இந்தியாவில் சமூக மாற்றம் ஒன்றும் இப்பொழுது நிகழப்போவதில்லை. ஆட்சி மாற்றம் நிகழ்வது மட்டும் நிச்சயம் என்பதை அந்த வார்த்தை அழுத்தமாகக் குறிப்பிடுகிறது. இத்தகைய ஆட்சி மாற்றம் அனைத்து மக்களுக்கும் பலனளிப்பதாக இருக்காது என்பதுதான் பெரியாரின் வாதமும். அதனால்தான் அவர்,

“இந்தியாவுக்கு ஏதாவது அரசியல் மாறுதல் ஏற்படுத்த வேண்டுமானால் அதில் மனுதர்மக் கொள்கைகள், வருணாசிரமக் கொள்கைகள் ஆகியவைகள் இல்லாத ஆட்சி ஏதாவது ஏற்படக்கூடும் என்கின்ற நம்பிக்கை சிறிதாவது இருந்தால்தான் இந்த ஆட்சியை மாற்ற முயற்சிக்கலாமே ஒழிய, மற்றபடி செய்யும் அரசியல் முயற்சிகள் பாமர மக்களின் தற்கொலை முயற்சியாகும்.” (பெரியார் :ஈ.வெ.ரா.சி.,ப.777).

என்று கருத்தறிவித்தார். இந்த அணுகுமுறைதான் இந்திய விடுதலை நாளைக் கறுப்புநாள் என்று அவரை அறிவிக்க வைத்தது. எனினும், சமூக வளர்ச்சி வரலாற்றில் மாற்றத்திற்கான ஒவ்வொரு பாய்ச்சலும் முயற்சியும் அவசியத் தேவையென்றே மதிப்பிடப்படுகிறது. அந்த வகையில், அந்நியச் சுரண்டலில் இருந்தும் ஆதிக்க - அடிமைத் தளத்திலிருந்தும் விடுதலையடைவது காலத்தின் தேவை என்றே கருத வேண்டியுள்ளது. இங்கு, பெரியாரின் அச்சம் நியாயமானதுதான் என்பதையும் இன்றைய அரசியல் சூழல் தெளிவாக்குகிறது. இன்று மனுதர்மம், வருணாசிரம பார்ப்பனக் கொள்கைகள் புத்துயிர்பெற்று எழுவது மக்கள் நலனுக்கு எதிரானது என்பது உண்மையே.

சமூக வரலாற்றில் ஒவ்வொரு சமூக அமைப்பும் அதற்கு முந்தைய சமூக அமைப்பைவிட முற்போக்கானது என்று மதிப்பிடப்படுகிறது. ஆங்கிலேயர் ஆட்சியின்போது இந்தியாவில் இருந்தது நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பாகும். இயங்கியலின்படி அது முதலாளித்துவ சமூகமாக மாற வேண்டும். அவ்வாறு இந்தியா முதலாளித்துவ சமூகமாக மாறுவதற்கும் சமத்துவச் சமூகத்தை நோக்கி நடைபோடுவதற்கும் தேவையான அடிப்படைப் பணிகளை ஆங்கிலேயர்கள் நிறைவேற்ற வேண்டுமென்று மார்க்ஸ் விரும்பினார்; ஏனெனில், ஒவ்வொரு சமூக அமைப்பும் தனக்கு நேர் எதிரான விளைவுகளை உண்டாக்கும் காரணிகளைத் தம்மை அறியாமல் தாமே உற்பத்தி செய்து கொள்கிறது என்பது மார்க்சீயம். எனவே,

“இந்தியாவில் இரண்டு கடமைகளை இங்கிலாந்து ஆற்ற வேண்டியிருக்கிறது; ஒன்று அழிக்கும் வேலை; மற்றொன்று புத்துயிரளிக்கும் வேலை. பழைய ஆசிய சமுதாயத்தை அழிக்கவேண்டும்; அத்துடன் ஆசியாவில் மேற்கத்திய சமுதாயத்தின் பௌதீக அடிப்படைகளை அமைக்க வேண்டும்.” (இந்தியாவைப் பற்றி.,ப.99).

என்று கூறினார். அவர் குறிப்பிடும் ‘அழிக்கும் வேலை’ என்பது இந்தியாவில் சனாதன - வருணாசிரம தர்ம முறையை அழித்தலேயாகும். ‘புத்துயிரளிக்கும் வேலை’ என்பது ஏற்கனவே இந்தியச் சமூகத்தில் வளர்ந்திருப்பது அன்றைய நிலையில் சக்தியற்றிருந்த உலகாயதச் சிந்தனைகளுக்குப் புத்துயிரளிப்பதாகும்.

அதை மேற்கத்திய சமுதாயத்தின் பௌதீக அடிப்படைகளான ஆலைகளையும் சிந்தனைகளையும் இந்தியாவில் அமைப்பதன் வாயிலாக நிறைவேற்ற வேண்டும் என்று விரும்பினார் எனலாம். எனினும்,

“ஆசியாவின் சமூக அடிப்படையான புரட்சி ஏற்படாமல், மனிதகுலம் தன் லட்சியத்தில் நிறைவு எய்துமா என்பதே கேள்வி.” (இந்தியாவைப் பற்றி.,ப.99).

என்ற அவரது கூற்றை ஆழ்ந்து நோக்கவேண்டியுள்ளது. ‘மனித குலத்தின் இலட்சியம்’ என்று மார்க்ஸ் குறிப்பிடுவது பொதுவுடைமைச் சமூகத்தை நிர்மாணிப்பதேயாகும். அது நிறைவேற வேண்டுமாயின், இந்தியச் சமுதாயத்தின் சிறப்புத் தன்மையான வருணாசிரம தருமத்தை அழிக்க வேண்டும் என்பதே அவரது எதிர்பார்ப்பு. ஆக, இந்தியச் சமூக நிறுவனங்களின் பழமைத் தன்மைகளை உடைத்தெறிய வேண்டியதை இந்தியச் சமூக மாற்றத்தை உருவாக்குவதற்கான அடிப்படைகளுள் ஒன்றாக மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த உலக மானுடப் பொதுவுடைமை வாழ்வியலை முழுமைப்படுத்துவதாகவும் அமையும் எனவும் மார்க்ஸ் கருதியுள்ளார் என்பது உறுதியாகிறது.

“இந்தியாவின் பொருளாதாரத் துறையைச் சீர்படுத்துவதற்கு, முதலாவது, வருணாசிரம முறை ஒழிய வேண்டும்; இரண்டாவது, மத சம்பந்தமான எண்ணங்கள் அகற்றப்பட வேண்டும்; மூன்றாவது, கோவில், குளம், சடங்கு, சாத்தான், சனி விலக்கு ஆகிய எண்ணங்கள் அழிக்கப்பட வேண்டும். பிறகு, அரசன், ஜமீன்தார் முதலிய தத்துவங்கள் அழிக்கப்பட்டாக வேண்டும்.” (மேற்கோள் பெரியார் : சுய /சம., ப.169).

என்றும்,

“... இந்தியாவுக்கு முக்கியமாய் வேண்டியதான காரியங்கள்...

1. மக்கள் பிறவியில் உயர்வு தாழ்வு உணர்ச்சி மறைதல்

2. ஆண், பெண் வித்தியாச உணர்ச்சி ஒழிதல்

3. ஏழை, பணக்காரன் என்ற தன்மை, உணர்ச்சி அழிதல்.” (மேற்கோள் பெரியார் : சுய /சம., ப.160).

என்றும் பெரியார் குறிப்பிடுகிறார்.

இருவருமே வர்க்க பேதமற்ற, மூடவழக்கங்களற்ற சமூகம் உருவாக வேண்டுமென்று விரும்பியுள்ளனர். ஆங்கிலேயர் ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்று பெரியார் கூறிய அதே வேளையில் ஆட்சி மாற்றம், அரசியல் மாற்றம் யார் கையில் வரப் போகிறது என்பதையும் உன்னிப்பாகக் கவனித்தார். எனவேதான், மனுதர்மம், வருணாசிரம தர்மம், பார்ப்பன ஆதிக்கம் ஒழிந்த ஆட்சியாக அது மலர வேண்டுமென்று உறுதிபடத் தெரிவித்தார். அதே காலகட்டத்தில் அரசியல் அதிகாரம் காங்கிரஸ் கைக்குப் போவதை - சுரண்டும் வர்க்கத்திடம் ஆட்சி அதிகாரம் செல்வதை - கம்யூனிஸ்டுகளும் மறுதலித்தார்கள் என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ள முடிகிறது.

மார்க்ஸ் சுட்டும் அழித்தல் வேலைக்கே பெரியாரும் மிகுந்த முக்கியத்துவம் அளித்தார். கிராமச் சீர்திருத்தத்தில் மேற்கத்திய பௌதீக அடிப்படைகளை அமைப்பதற்குரிய செயல்திட்டங்களையும் பெரியார் முன்வைத்துள்ளார் (கிராமச் சீர்த்திருத்தம். பக் 12-13).

சமூகத்தைத் தேக்கநிலைக்கு ஆளாக்கும் கருத்தியல்களை உடைத்தெறிந்து விட்டால் பௌதீக அடிப்படைகளை அமைப்பதற்கான சரியான சூழல் உருவாகும் என்று இருவருமே நம்பியுள்ளனர். ஆனால், இரண்டும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களின் செல்லத்தக்க தன்மைகளோடு இருக்க வேண்டும் என்பதுதான் வரலாற்றுத் தேவையாக உள்ளது. இதைத்தான், இன்றைக்குப் பொதுவுடைமை மற்றும் திராவிட இயக்கங்கள் தங்கள் படிப்பினையாகக் கற்றுக் கொண்டுள்ளன அல்லது கொள்ள வேண்டியுள்ளன எனில் அது மிகையில்லை.

துணைநூற் பட்டியல்

1. ஆனைமுத்து.,வே. (பதி.ஆ.) 1974 பெரியார்: ஈ.வெ.ரா.சிந்தனைகள் தொகுதி 1,2,3, சிந்தனையாளர் கழகம் திருச்சிராப்பள்ளி -2

2. கார்ல் மார்க்ஸ் பிரடெரிக் எங்கெல்ஸ் 1971 இந்தியாவைப் பற்றி, தமிழாக்கம்: எஸ்.ராமகிருஷ்ணன், ஆர்.எஸ்.நாதன், ஆர்.கிருஷ்ணய்யர், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பிரைவேட் லிட், 6, நல்லதம்பிச் செட்டித்தெரு, சென்னை.

3. தந்தை பெரியார் 1988 கிராமச் சீர்திருத்தம், பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன வெளியீடு, சென்னை-600 007.

4. நெடுஞ்செழியன்., க. 1990 தமிழ் இலக்கியத்தில் உலகாய்தம் மனிதம் பதிப்பகம் திருச்சி -21

5. ராஜதுரை., எஸ்.வி.கீதா.,வ. 1976 பெரியார்: சுயமரியாதை சமதர்மம் விடியல் பதிப்பகம், 3 மாரியம்மன் கோவில் வீதி, உப்பிலிப் பாளையம், கோவை -641 005

6. Karl Marx Friedrich Engels 1973 Collected Works, Vol-3 Progress Publishers, Moscow.

- முனைவர் சு.மாதவன், உதவிப் பேராசிரியர் & தலைவர் தமிழாய்வுத் துறை இராஜேஸ்வரி வேதாசலம் அரசு கலைக்கல்லூரி, செங்கல்பட்டு.

Pin It