பிறவி வருண சாதி - தீண்டாமை எதில் எதில் இருக்கிறது?

பிறவி உள்சாதி - தீண்டாமை எதில் எதில் இருக்கிறது?

3

“சிந்தனையாளன்” 2015 அக்டோபர் இதழில், இத்தலைப்பிலான கட்டுரையின் 2ஆம் பகுதி வெளிவந்தது.

அதன் முடிவில், “அரசமைப்புச் சட்ட விதி 17 என்பது, இதற்கு மிகவும் உதவும் என்று, முட்டாள்தனமாக, பெரியாரை வைத்துக் கொண்டே, பெரியார் திடலில், 9-12-1973 அன்று, சாதி இழிவு ஒழிப்பு மாநாட்டில் தீர்மானம் போட்ட பொறுப்பற்ற தனத்தை, இன்னமும் பெரியார் தொண்டர்கள் எடுத்து எழுதிக் கொண்டாடுவது தகாதது” என்று குறிப்பிட்டி ருந்தேன்.

“இழிவுக்குரியதல்ல இடஒதுக்கீடு” என்ற தலைப்பில் 15, 14/15-8-2015 “விடுதலை” நாளிதழில், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி விடுத்துள்ள அறிக்கையில், “தி இந்து” தமிழ் நாளிதழில், 12-8-2015இல் வெளிவந்த ஒரு கட்டுரைக்கு விடை பகர்ந்துள்ளார்.

தம் விடையில், அவ்ர் குறிப்பிட்ட பின்கண்ட பகுதியைப் பற்றி நாம் எல்லோரும் கவலையோடு சிந்திக்கவேண்டும்.

“தந்தை பெரியார் அவர்கள் சென்னையில் தம் வாழ்நாளில் இறுதியாக நடத்திய தமிழர் சமுதாய இழிவு ஒரிப்பு மாநாட்டில் கூட (டிசம்பர் 1973), இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இடம் பெற்றிருக்கும் தீண்டாமை ஒழிக்கப்படுகிறது என்பதற்குப் பதிலாக ஜாதி ஒழிக்கப்படுகிறது என்று திருத்தம் கொண்டு வரப்படவேண்டும் என்று தீர்மானத்தையே நிறைவேற்றினார். 1957இல் இதற்காக இந்திய அரசமைப்புச் சட்டத்தின் ஒரு பகுதியை எரிக்கும் போராட்டத்தை நடத்திய துண்டு” என்கிற கருத்து, சாதியை ஒழிக்கப் பயன்படாது. ஏன்?

எல்லா வடிவங்களிலும் உள்ள தீண்டாமையை ஒழிக் கவே பயன்படாது. எனவே,

அரசமைப்புச் சட்டவிதி 17இல், தீண்டாமை என்கிற சொல் இரண்டு தடவைகள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

அந்த இரண்டு இடங்களிலும் “தீண்டாமை” என்று, மேற்கோள் குறிக்குள் அச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. அப்படி ஒரு சொல்லை மேற்கோள் குறிக்குள் குறிக்கிற நடைமுறை சட்டவிதிகளில் பயன்படுத்தப்பட்டால், அதற்கு வேறு ஒரு பொருளும்-அர்த்தமும் உண்டு என்பதை உள்ளடக்கமாக வைத்ததே, அப்படி விதி 17 இல் “தீண்டாமை” என்ற சொல் அமைக்கப்பட்டுள்ளது.

அந்த உள்ளடக்கம் என்பது-‘எல்லர் இடங்களிலும்-எல்லா வடிவங்களிலும் உள்ள தீண்hடமை ஒழிக்கப்பட வில்லை’ என்பதாகும்.

 அதாவது :

1.            இந்துக்கோவில் கருவறையில் உள்ள தீண்டாமை பார்ப் பனரல்லாதார் அர்ச்சராக வரமுடியாது என்கிற தீண்டாமை-ஒழிக்கப்படவில்லை; ஒழிக்கப் பயன்படாது.

2.            இந்துமத மடங்களில் குறிப்பிட்ட வருணசாதிக்காரர், அல்லது குறிப்பிட்ட உள்சாதிக்காரர் வேறு உள்சாதிக்காரர் தவிர்த்த வேறு வருணத்தாரோ வேறு உள்சாதிக்காரரோ மடாதி பதியாக வரமுடியாது என்கிற தீண்டாமை ஒழிக்கப்பட வில்லை-ஒழிக்கப்பட முடியாது என்பதே அந்த உள்ளடக்கம்.

தந்தை பெரியார் அவர்கள் சாதி ஒழிப்பு-பழக்கவழக்கச் சட்ட ஒழிப்புக்குத் தீர்வாக-விதிகள் 13, 19, 25, 26, 372 இவற்றை அடியோடு நீக்கவேண்டும் என்றே கோரினார். அவ்விதிகளை மொழிபெயர்த்து அச்சிட்டு ஒருபடி காலணா என மக்களுக்குத் தந்தார். அதைத்தான் 10,000 தொண் டர்கள் எரித்தனர்.

அந்த 9-12-1973 மாநாட்டுக்கான தீர்மானங்களை வடித்தவர்கள், திராவிடர் கழக மத்திய செயற்குழு உறுப்பி னராக இருந்த என்போன்ற பலருக்கும் காட்டவில்லை.

நான் 8-12-1973 காலை 9 மணிக்கு, நான் முன் மொழிய விரும்பிய தீர்மானங்களைத் தந்தை பெரியாரிடம் தந்தேன். அவர், “வீரமணியிடம் கொடுங்கள்” என்றார். தோழர் கி. வீரமணியிடம் கொடுக்கச் சென்ற போது, “சார், நேற்றே எல்லாம் முடித்துவிட்டோம்” என்று மட்டும் அவர் சொன்னார்.

இதற்கு ஒரு கசப்பான பின்னணி உண்டு.

இக்கட்டுரையில் அது பற்றிக் குறிக்க நான் விரும்ப வில்லை. தேவை நேரிட்டால், தனியே ஒரு கட்டுரை எழுது வேன். நிற்க.

இன்று ‘தீண்டாமை ஒழிப்பு’ என்பதன் உண்மையான தன்மை அரசமைப்பு விதி 17இன்படி, எப்படி இருக்கிறது?

கேரளத்தில் மட்டும் இருந்த ‘கண்டால் தீட்டு’, ‘அண்டினால் தீட்டு’ என்கிற இழிவுகள் மறைந்துவிட்டன. ஆனால், ‘தொட் டால் தீட்டு’ என்கிற வடிவிலான தீண்டாமை தமிழ்நாட்டிலோ, இந்தியாவின் பிற மாநிலங்களிலோ முற்றிலுமாக ஒழிக்கப் படவில்லை. இந்தியாவிலுள்ள 6 இலக்கம் சிற்றூர்களில் - தமிழகத்தில் உள்ள 54 ஆயிரம் சிற்றூர்களில் பெரும்பாலான வற்றில் இந்தத் தீண்டாமை இன்றும் அன்றாடம் இழிவைச் சுமத்திக் கொண்டே இருக்கிறது; நடப்பில் அப்படியே இருக்கிறது.

நடப்பில் இருப்பது என்றால் என்ன? எங்கெங்கே? எப்படி?

ஓர் சிற்றூரில் உள்ள கோவில்கள், சத்திரம், அரசுச் சாவடி, முடிதிருத்தகம், உணவு விடுதிகள், தேநீர்க் கடைகள், ஏரிகள், குடிநீர்க் கிணறுகள், குளங்கள், இடுகாடு, சுடுகாடு இவை அனைத்தும் ஊர் மக்கள் அனைவர்க்கும் பொதுவான இடங்கள். இந்தப் பொதுவான இடங்களில் இன்றும் பறை வண்ணார் எனப்படும் புதிரை வண்ணார் தொடங்கி, பறையர், பள்ளர் எனப்படும் மள்ளர், சக்கிலியர் முதலான வகுப்பினர் நுழையவும், புழங்கவும் மற்றவர்களோடு சமத்துவமாக அமரவும், உண்ணவும் இடம் கொடுக்கப் படுவது இல்லை.

ஊர்ப் பொதுக் கோவில்களில் நடைபெறும் வழிபாடு, குடமுழுக்கு விழா, திருவிழா, தேரோட்டம், தீமிதி, பாரதம் படித்தல் இவற்றில் இவர்களுக்கு இடம் தரப்படுவது இல்லை. இவற்றைச் “சமூக இயலாமைகள்” (Social Disabilities) என்று வெள்ளையர் காலத்தில் வகைப்படுத்தினர். இவற்றை விலக்குவதற்கான சட்டங்களையும் செய்தனர்.

சிற்றூர்ப் பள்ளிகளில் உள்ளே நுழையலாம். பேருந்து களில் ஏறிப் பயணம் செய்யலாம் என்கிற உரிமைகள் மட்டும் 1923-1927க்கு இடையில் தமிழகத்திலும், பம்பாயிலும் (இன்று மும்பை) நடப்புக்கு வந்தன. ‘அரசு, நிதி உதவி நிறுத்தப்படும்’ என்று ஆணையிட்ட பிறகுதான், ‘அரசுப் பள்ளிகளில் தீண்டப்படாதாரை அனுமதித்தனர்’. ‘பேருந்து ஓட்டும் உரிமம் புதுப்பிக்கப்படமாட்டாது’ என்று ஆணையிட்ட பிறகுதான், அன்றிருந்த தனியார் பேருந்துகளில் தீண்டப் படாத வகுப்பினர்க்கு ஏற இடம் தந்தனர். இவை நிருவாக ஆணைகள் மூலமே, பார்ப்பனரல்லாதார் நீதிக் கட்சியின் ஆட்சிக்காலத்தில், செயல்பாட்டுக்கு வந்துவிட்டன.

இவற்றை அன்னியில் ‘சமூக இயலாமை விலக்கச் சட்டங்கள்’ பல இயற்றப்பட்டன. காட்டாக, ‘1833ஆம் ஆண்டைய சமூக இயலாமைகள் விலக்கச் சட்டம்’ (Disabilities Removal Act, 1833); ‘1939ஆம் ஆண்டைய சென்னை மாகாண கோவில் நுழைவுச் சட்டம்’ (Madras Temple Entry Act, 1939) முதலானவற்றை நாம் குறிப்பிடலாம். இந்தச் சட்டங்கள் வெள்ளையர் காலத்தில் நிறைவேற்றப்பட்டவை.

வெள்ளையர் வெளியேறிய பின்னர், 26.11.1949இல் நிறைவேற்றப்பட்டு, 26.1.1950இல் நடைமுறைக்கு வந்தது, ‘இந்திய அரசமைப்புச் சட்டம்’. இச் சட்டத்தின் வரைவுக் குழுவின் தலைவராக விளங்கியவர் மேதை அம்பேத்கர் அவர்கள் என்பதை நாம் அனைவரும் அறிவோம். இச் சட்டத்தில் தீண்டாமை ஒழிப்புக்கான வலி மையான விதி இடம்பெற்றுள்ளது. அது விதி எண்.17 ஆகும்.

அவ்விதி என்ன கூறுகிறது?

விதி 17 : “தீண்டாமை” அகற்றப்பட்டுள்ளது. அதனை எந்த வடிவத்தில் நடைமுறையில் காட்டுவதும் தடை செய்யப் பட்டுள்ளது.

“தீண்டாமை”யால் விளைந்துள்ள எந்த இயலா மையை நடைமுறையில் காட்டுவதும் சட்டப்படி தண்டிக்கப்படு வதற்கான ஒரு குற்றமாகும்.

(“Untouchability” is abolished and its practice in any form is forbidden. The enforcement of any disability arising out of “Untouchability” shall be an offence punishable in accordance with law).

இந்த விதியில் இரண்டு செய்திகள் உள்ளன.

முதலாவது : தொட்டால் தீட்டு, கண்டால் தீட்டு, அண்டி னால் தீட்டு என்கிற வடிவத்தில் எந்த எந்தப் பொது இடங்களில் தீண்டாமையை நடைமுறையில் காட்டுவதும் அகற்றப் பட்டும், தடை செய்யப்பட்டும் உள்ளது. அப்படி மீறி நடை முறையில் காட்டப்பட்டால் அது தண்டனைக்குரிய குற்ற மாகும் என்பது.

இரண்டாவது : “தீண்டாமை” என்ற சொல் கையாளப் பட்டுள்ள இரண்டு இடங்களிலும் அந்த ஒரு சொல்லை மட்டும் மேற்கோள் (“தீண்டாமை”) குறிக்குள் அமைத்துத் தனி யொரு பொருளைக் குறித்திட வழிகோலப்பட்டுள்ளது என்பது. இதுபற்றியும் இறுதியில் பார்ப்போம்.

முதலாவதாகப் பெறப்படும் பொருளின் நோக்கம் சமூகத்தின் அன்றாட வாழ்வின் எல்லாப் பிரிவு மக்களின் பயன்பாட்டுக்கும் புழக்கத்துக்கும் உரிய எல்லாப் பொது இடங்களிலும் தீண்டாமை என்கிற இயலாமைக்கு ஆட்படுத் தப்பட்ட பிரிவு மக்களை எவரும் தடுக்கவோ அவர்களை இழிவாக நடத்தவோ கூடாது என்பது ஆகும். ஆனால் இன்றும் நடப்பது என்ன?

ஏற்கெனவே எவை எவை ஊர்ப் பொதுமக்கள் அனை வர்க்குமான பொது இடங்கள் என்று நாம் குறிப்பிட்டோமோ அந்தப் பொது இடங்களில் எதிலும் இன்றும் தீண்டப்படாத வகுப்பு மக்கள் தீண்டப்படாதவர்களாகவே நடத்தப்பட்டு - சமூக சமத்துவ உரிமை மறுக்கப்பட்டவர்களாகவே பல ஊர்களில் நடத்தப்படுகிறார்கள். குறிப்பாகக் கோவில்கள், சத்திரம், சாவடி, உணவுக் கடைகள், இடுகாடு, சுடுகாடு இவற்றிலும், மற்ற மத விழாக்களிலும் இம் மக்கள் தடுக்கப் பட்டவர்களாகவே வாழ்கின்றனர். இது உலகில் எந்த மதத் திலும் இன்று நடைமுறையில் இல்லாத மானுட சமத்துவ உரிமை மீறலும் உரிமைப் படுகொலையும் ஆகும். இப்படி நடைபெறும் மனித உரிமை மீறலை ஒழிக்கும் நோக்கத்தில், இதைச் செயல்படுத்துகிறவர்களைத் தண்டிப்பதற்கென்று தனிச் சட்டம் ஒன்று 1955இல் இயற்றப்பட்டது.

அது, தீண்டாமை காரணமாக எழும் குற்றங்கள் பற்றிய சட்டம் - (“The Untouchability (Offences) Act, 1955”) என்ற பெயரில் நிறைவேற்றப்பட்டது. பின்னர் அதுவே சமூக உரி மைகள் பாதுகாப்புச் சட்டம் (The Protection of Civil Rights Act - PCR Act) எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இது குற்றவியல் சட்டப்படி வழக்குத் தொடர்ந்து, குற்றம் இழைத்த வர்களைத் தண்டிப்பதை நோக்கமாகக் கொண்டது.

ஆனால் தமிழ்நாட்டிலோ, பிற மாநிலங்களிலோ ஊர்ப் பொது இடங்களில் தீண்டப்படாத மக்கள் சமூக சமத்துவ உரிமை பெற்றுவிட்டார்களா அல்லது பெறாமல் தடுக்கப் படுகிறார்களா என்பது பற்றிய எந்த ஆய்வும் அந்தந்த அரசினரால் துல்லியமாகச் செய்யப்படுவது இல்லை. அப் படிச் செய்யப்பட்டிருந்தாலும் அது உண்மையான நிலைமை களைப் படம்பிடித்துக் காட்டுவது இல்லை.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக, தீண்டப்படாத வகுப்பு மக்கள் வலிமையாக இந்த உரிமைகளுக்காக ஏன் போராட வில்லை என்பதையோ - மற்ற வகுப்பினர் ஏன், எதனால் இந்தச் சமூக உரிமை மறுப்புகளை இவர்கள் பேரில் சுமத்தி இழிவுபடுத்துகிறார்கள் என்பதையோ அறிவியல் தன்மை யில், அரசினரோ, அரசியல் கட்சியினரோ, சமூக ஆய்வாளர் களோ, அரசு சார்ந்த ஆணையர்கள் குழுக்களோ ஆய்வு செய்வதோ இணக்கமான தொடர் நடவடிக்கைகளை மேற் கொள்ளுவதோ இல்லை.

பொத்தாம் பொதுவாக “சாதி இந்துக்களின் ஆணவம்”, “பிற்படுத்தப்பட்டவர்களின் சாதித் திமிர்” என்று தீண்டப் படாத வகுப்பினராலும், “பார்ப்பனியத்தின் கொடுமை” என்று முற்போக்குக் கொள்கையினராலும்; “நிலவுடைமை ஆதிக்கம்” - “நிலமற்ற தன்மை” எனப் புரட்சியாளர்களாலும் காரணங்கள் கூறப்படுகின்றன. இந்த ஒவ்வொரு கூற்றும் தனியான காரணமாக இல்லை; இவை அத்துணையுமே காரணங்களாக இருக்கின்றன; இவற்றுக்கு அப்பாலும் பல காரணங்கள் இருக்கின்றன.

இவற்றை இப்படிப் பார்த்திட எல்லாத் தரப்பினரும் தவறுவதால்தான் - 1833க்குப் பிறகு 1955 வரையில் எத்தனையோ சட்டங்கள் வந்தும்கூட, இந்தியாவில் உள்ள 126 கோடி மக்களில் 18 கோடிப் பேராக இருக்கிற - தமிழகத் திலுள்ள 6 கோடிப் பேரில் 1.2 கோடிப் பேராக இருக்கிற தீண்டப்படாத வகுப்பு மக்களுக்கு இன்றும் சமூக சமத்துவ - மானுட மரியாதை உரிமை வரவில்லை.

1. தமிழ்நாட்டில் 54 ஆயிரம் சிற்றூர்கள் உள்ளன; 25 ஆயிரம் தாழ்த்தப்பட்டோர் குடியிருப்பு (சேரி)கள் உள்ளன. இவை நீண்ட நெடுங்காலமாக, ஊர் தனி - சேரி தனி என்று பிரித்து, ஒதுக்கியே அமைக்கப்பட்டுள்ளன. ‘ஊருக்கு வெளியேதான் சண்டாளர்கள் குடியிருக்க வேண்டும்’ என்கிற மநுசாத்திர விதி, கி.பி.800க்குப் பிறகு இங்கு மிக வலிமை யாகவும், கொடூரமாகவும் பின்பற்றப்பட்டது. அதனால் ஏற்பட்டதுதான் இந்தப் “பறைச்சேரி”.

கடைசியான பாண்டியர் அரசு 14ஆவது நூற்றாண்டுத் தொடக்கத்தில் மறைந்தது. அதன் பின்னர் தமிழகத்தின் பல பகுதிகளை ஆண்ட இசுலாமியர், தெலுங்கு நாயக்கர், மராட்டியர் மற்றும் சிற்றரசர்களோ, இவர்களுக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த ஆங்கிலேயரோ, பிரெஞ்சுக்காரரோ, டச்சுக்காரரோ இந்தச் சமூக உரிமைகள் பற்றிய எந்த ஒரு கூறையும் தொடவே இல்லை. எல்லோரும் மக்களை அடக்கி ஆண்டு சுரண்டிக் கொழுப்பது என்பதில் மட்டுமே நாட்டம் கொண்டவர்கள். எனவே, சமூகப் பழக்கவழக்கங்கள், மத உரிமைகள் இவற்றில் இவர்கள் அறவே தலையிடவில்லை.

ஆனால், மனுநீதியின்படி சாதி பார்த்துத் தண்டனை விதிக்கும் குற்றவியல் சட்டத்தின் பெரும்பகுதியை இசுலா மியர்கள் இசுலாமியச் சட்டத்திற்கு ஏற்ப மாற்றினர்; எஞ்சிய சில கொடிய வழக்கச் சட்டங்களை வெள்ளையர் மாற்றினர். எனவே, குற்றவியல் சட்டத்தில் மதம் - சாதி - பணக்காரன் - ஏழை என்கிற வேறுபாடுகள் நடைமுறைப்படுத்தப்பட முடியவில்லை.

அத்துடன், சமூக உரிமையைப் பொறுத்தவரையில், அப்படிச் சமத்துவம் மறுக்கப்பட்டது எதனால் - யாரால் - எப்போது முதல் - ஏன் - எப்படி என்பது வெளிப்படையாகக் கல்வித் திட்டத்திலோ, அரசு அலுவலர்க்கான பயிற்சித் திட்டத்திலோ, செய்தி ஊடகங்களின் வழியாக நடுநிலையி லிருந்து எடுத்துக் கூறி விளக்கப்படவில்லை.

அப்படி உணர்த்தப்பட்டிருந்தால் “தனிக் குடியிருப்பு” - “ஒதுக்கப்பட்ட குடியிருப்பு” இருப்பது மிகப்பெரிய இழிவும் கொடுமையும் ஆகும் என்பது முதலில் தீண்டப்படாத வகுப்பினர்க்கும், அடுத்து மற்ற மற்ற வகுப்பினர்க்கும் புரிந்திருக்கும்.

தனியான குடியிருப்பு - ஒதுக்கப்பட்ட குடியிருப்பு என்று இருப்பதே “அங்கே குடியிருப்பவர்கள் வேறுபட்டவர்கள்” என்பதை உடனேயே உணர்த்தி விடுகிறது. “அங்கே குடியிருப்பவர்களைத் தொட்டுக்கொண்டால் தீட்டு” என்கிற எண்ணத்தைக் காலங்காலமாக வளர்த்து நிலைக்க வைத்திட உதவுகிறது. “நமக்கு உள்ள உரிமைகள் அவர்களுக்கு இல்லை” என்பதை எவரும் சொல்லிக் கொடுக்காமலே, அன்றாட வாழ்வில் செயலில் நடத்திக் காட்டுவதன்மூலம் எல்லோருடைய நெஞ்சிலும் பதிய வைக்கிறது.

இந்தத் தனிக் குடியிருப்புகளிலேயே, ஊரில் இருக்கிற எல்லா வசதிகளையும் செய்து கொடுத்தும், ஊருக்கும் சேரிக்கும் இடையில் உள்ள நத்தம் குடியிருப்பு மனை களையோ, கோவில் காலி மனை இடங்களையோ ஒதுக்கி அங்கே இவர்களுக்கு வீடுகளைக் கட்டித் தந்து, ஊர்ப் பொது இடங்களில் - சுடுகாடு, இடுகாடு உள்பட அனைத்து இடங் களிலும் இவர்களுக்குச் சமூக சமத்துவ உரிமைகள் வர உதவுவதற்கு மாறாக - ஊர் என்பதிலிருந்து ஒரு கிலோ மீட்டர், இரண்டு கிலோ மீட்டருக்கு அப்பால் “ஆதித் திராவிடர் குடியிருப்பு” (S.Cs’ Colony) அமைத்திடத் திட்டமிடுவதும்; அங்கு எந்த வசதியையும் செய்து தராமல் அவர்கள் துன்பப் படச் செய்வதும் தவறு என்கிற உணர்வும் சிந்தனையும் அரசுக்கோ, படித்தவர்க்கோ வரவில்லை. இந்தச் சிந்தனை, முதலில், தாழ்த்தப்பட்டு வைக்கப்பட்ட வகுப்பு மக்களுக்கு வந்து தீர வேண்டும்.

2. இந்தியா முழுவதிலும், தமிழகத்திலும் பெரும்பாலான சிற்றூர்களில் தீண்டப்படாத வகுப்பு மக்கள் சிறுபான்மை எண்ணிக்கையிலேயே உள்ளனர். சில ஊர்களில் மொத்தத் தில் பெரும்பான்மை எண்ணிக்கையினராக உள்ளனர் என்பதும் உண்மை.

சிறுபான்மையினராக இருந்தாலும், பெரும்பான்மை யினராக இருந்தாலும் - “தீண்டப்படாத வகுப்பு மக்கள்” என்போரில் பெரும்பாலானவர்களுக்கு - 50%, 60%, 70%, 80%, 90% பெயர்களுக்கு உண்மையில் ஒரு செண்டு பரப்புள்ள வேளாண் நிலம்கூடச் சொந்தச் சொத்தாக இல்லை என்பது ஒரு பெரிய உண்மை.

தமிழ்நாட்டில் சக்கிலியர் எனப்படும் அருந்ததியர் வகுப் பில் நிலமற்றோர் மிக அதிகம் பேர்; பறையர் வகுப்பில் நில மற்றோர் அதிகம் பேர்; பள்ளர் எனப்படும் மள்ளர் வகுப்பி னரில் சிறு நில உடைமைக்காரர்கள் அதிக விழுக்காட்டினர். ஏணிப்படிக்கட்டுச் சாதிமுறை நடப்பு இப்பிரிவினரிடையேயும் உள்ளது; இதே ஏணிப்படிக்கட்டுச் சாதி அமைப்பைப் போன்றே இப்பிரிவினரிடையே நிலமற்ற நிலைமை அப்படியே நூற்றுக்கு நூறுமாக இருக்கிறது.

எனவே அந்தந்த ஊரில் பெரிய நில உடைமைக்காரர் களாக இருக்கிற பார்ப்பனர், கார்காத்தார், தொண்டை மண்டல வேளாளர், வடுக நாயக்கர், ரெட்டி என்கிற மேல் வகுப்புச் சூத்திரரையோ; நடுத்தர - சிறிய நில உடைமைக் காரர்களாக உள்ள வன்னியர், முக்குலத்தோர், முத்தரையர், நாடார், செங்குந்தர், நத்தமர், மீனவர், தேவாங்கர், யாதவர் முதலான நூற்றுக்கணக்கான கீழ் வகுப்புச் சூத்திரரையோ பொருளாதாரம் காரணமாகச் சார்ந்தும் - எதிர்பார்த்தும் - நம்பியும் வாழ்ந்து தீரவேண்டிய கொடிய நிலையில் வைக்கப்பட்டிருக்கிறார்கள். இப்படி இவர்கள் வைக்கப்பட்டு விட்ட காலம் 1200 ஆண்டுகள். இப்படி வைத்தவர்கள் மனுநீதிப்படியே இதைச் செய்த தமிழ் அரசர்களும், அவர் களுக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த எல்லா ஆட்சியாளர்களுமே ஆவர். வெள்ளையர் காலத்தில் இவ்வகுப்பினர்க்காக ஒதுக் கப்பட்ட “பஞ்சமர் நிலம்” நீதிக்கட்சி ஆட்சிக் காலத்தில் ஓரளவு இவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்பின்னர் ஆங்காங்கு உள்ள மேல்சாதியினரால் இந்நிலம் கைப்பற்றப்பட்டுவிட்டது.

“நிலமற்றவர்களுக்கு நிலம் தருவது”, “குடியிருப்பு மனை இல்லாதவர்களுக்கு வீட்டு மனை தருவது” என்கிற திட்டங்கள் பெயரளவுக்கு நிறைவேற்றப்பட்டன. எப்படி இதை அறிகிறோம்?

1991 கணக்குப்படி தமிழ்நாட்டிலுள்ள தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்களில் 100க்கு 64 பேருக்குச் சொந்தமாக வேளாண் நிலம் இல்லை என, அனைத்திந்தியத் தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் ஆணையர் அறிக்கை தந்துள்ளார். இந்த விழுக்காடு 71 ஆகும் என இன்னோர் அறிக்கை கூறுகிறது.

மேதை அம்பேத்கர், இறுதியான அரசமைப்புச் சட்ட வரைவை முன்மொழிந்து 25.11.1949இல் அரசமைப்பு அமைப்பு அவையில் உரையாற்றிய போது, ‘அரசியல் சுதந் தரம் போதாது; சமூக சுதந்தரம், பொருளாதாரச் சுதந்தரம் வராவிட்டால் குருதி சிந்தப்படும் நிலைமை நேரிடலாம்’ எனத் தொலைநோக்கோடு கூறினார். சமூக சுதந்தரம் வரவில்லை; பொருளாதார சுதந்தரம் வரவில்லை. ஆனாலும் குருதி சிந்திப் போராடும் நிலை இன்னும் இங்கு வரவில்லை.

எனவே, தீண்டாமை ஒழிவது என்பது பொருளாதார விடுதலை அரசியல் விடுதலையோடும் பிணைக்கப்பட்டிருக் கிறது என்பதை நாம் அறிதல் மிக மிக நல்லது. சமூக சமத்து வம் வேண்டிப் போராடிட அறிவோடும் தன்மான உணர் வோடும் எழுச்சியோடும் ஒன்றுசேருவோர், தொடர்ந்து போராட முயன்று போராட முடியாமல் தடுப்பவை மற்ற சாதியினரின் பொருளாதார ஆதிக்கமும் - பிடிப்பும், சாதி ஆணவமும், அறியாமையும்தான்.

எந்தச் சிற்றூரிலும் ஒரே சாதியினர் பெரிய எண்ணிக் கையில் இருப்பது ஏதாவது ஒரு பிற்படுத்தப்பட்ட சாதிதான். பிற்படுத்தப்பட்டோர் தம் எண்ணிக்கை வலிமை - அறியாமை, பழங்காலப் பழக்கம் காரணமாக மேலோங்கி உள்ள போலி ஆணவம், படிப்பு - பண்பாட்டு வளர்ச்சி இன்மை போன்றவை காரணமாக, வன்னியர், முக்குலத்தோர், செங்குந்தர், கொங்குவேளாளர் போன்ற வகுப்பினர் தீண்டப்படாத வகுப்பினர்க்குக் கொடுமை இழைப்பவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் எல்லோரிடமும் பார்ப்பனியம் படிந்திருக்கிறது.

மேலும், பார்ப்பன ஆண்களும், பெண்களும், 1200 ஆண்டுகளாக, வேளாண் வேலையிலோ, வேறு உடலு ழைப்பு வேலையிலோ பிற்படுத்தப்பட்டோரைப் போல், தீண்டப் படாதோருடன் கலந்தும் நெருங்கியும் வேளாண் வேலை களைச் செய்வது இல்லை.

மேல்சாதியினர் பார்ப்பனியத்தின் மொத்தக் குத்தகை தாரர்கள்; சாதி ஆணவத்தின் பிறப்பிடங்கள். ஆனால் எல்லா ஊர்களிலும் எண்ணிக்கையில் மிகச் சிறுபான் மையினர். எனவே காட்டுத்தனமான தாக்குதலை அவர்கள் எந்தச் சமூகத்தின் பேரிலும் தொடுப்பதில்லை; தொடுக்கவும் முடியாது. “பார்ப்பனர்கள் நல்லவர்கள் - சூத்திரர்கள்தான் கொடியவர்கள்” எனத் தீண்டப்படாதோர் பார்வையில் ஒரு பொய்த் தோற்றம் இருப்பதற்கும், அது உண்மை என்று நம்பிப் பலராலும் அப்படிப் பரப்புரை செய்யப்படுவதற்கும் இதுவே உண்மை யான காரணம்.

3. கல்வி மறுக்கப்பட்டவர்கள் சூத்திரர்களும், ஆதிச் சூத்திரர்களுமே ஆவர். இவர்களுக்கு இப்படி இவை மறுக் கப்பட்ட காலமும் 1200 ஆண்டுகளுக்கு மேலானது. கடந்த 100 ஆண்டுகளில் இவர்கள் பெற்ற கல்வி வாய்ப்பு, இவர் களில் 100க்கு 100 பேருக்கும் படிப்பு வந்துசேரப் போத வில்லை. இந்தியாவில் தீண்டப்படாத வகுப்புப் பெண்களில் தெற்கே 100க்கு 60ரூ விழுக்காட்டுப் பேருக்கு எழுத்தறிவே இல்லை; வடக்கே 70ரூ, 80ரூ பேருக்கு எழுத்தறிவே இல்லை. பிற்படுத்தப்பட்ட ஆண்களிலும் பெண்களிலும் 30ரூ முதல் 40ரூ பேருக்கு எழுத்தறிவு இல்லை.

எழுத்தறிவு பெறாத மக்கள் விழிப்புணர்ச்சி பெற முடியாது; பழைய கட்டுகளை உடைக்கத் துணிய முடியாது; எனவே போராடிப் போராடிச் சமூக, பொருளாதார விடுதலை களை இவர்கள் தேடிக்கொள்ள முடிவதில்லை. தீண்டாமை நீடித்திட இவையும் வலிமையான முட்டுத் தூண்களாகும்.

4. தமிழ்நாட்டில் இன்று 140 இலக்கம் பேர் தாழ்த் தப்பட்டோர் உள்ளனர். இவர்களில் காவலர், ஏவலர், உதவி யாளர், மேலாளர், வட்டாட்சியர், கோட்ட ஆட்சியர், மாவட்ட ஆட்சியர், துணைச் செயலாளர், இணைச் செயலாளர், செயலாளர், சிறப்புச் செயலர் - இதற்கு ஒப்பான படி நிலை களில் உள்ள காவல்துறை, நீதித்துறை, மற்ற துறைகளில் உள்ள எல்லாப் பதவிகளிலும் சேர்த்து 127 ஆயிரம் பேர்தான் இருக்கிறார்கள். இது இவர்களின் மக்கள் தொகையில் (1ரூ) ஒரு விழுக்காட்டுக்குச் சற்றுக் கூடுதல். அதேபோல் இவர்களுள் நாடாளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சிமன்ற உறுப்பினர்கள் சில ஆயிரம் பேர், மத்திய அரசுப் பணிகளில் 42 இலட்சம் பேர்களில் ஏறக்குறைய 7 இலட்சம் பேர் இருக்கிறார்கள்.

இவர்கள் அரசு வேலைகளுக்கும் பதவிகளுக்கும், சட்டமன்றப் பதவிகளுக்கும் அமைச்சுப் பதவிகளுக்கும் வந்ததால், ஆட்சியிலும் அதிகாரத்திலும் ஆட்சிச் சக்கரத்திலும் இடம்பெற்று ஒரு சமூக மரியாதையும், பொருளாதார உயர் வும், உயர்படிப்புக்கான வாய்ப்பும், ஓரளவு பொருளாதார விடுதலையும் பெற்றிருக்கிறார்கள்.

இந்தத் துறையில், இவர்களுக்கு இவ்வளவும் வேண்டும் என முதலில் கோரியவர்கள் மகாத்மா புலே, பண்டித அயோத்திதாசர் ஆவர். இவர்களின் கோரிக்கைகளை அரசு வேலைகளிலும், பதவிகளிலும் பெற்றுத் தந்தவர்கள், சாகு சத்திரபதி (1902), நான்காம் கிருஷ்ணராஜ உடையார் (1920), டாக்டர் பி.ஆர். அம்பேத்கர், இரட்டைமலை சீனிவாசன் (1931-1950), டாக்டர் டி.எம். நாயர், சர்.ஏ. இராமசாமி முதலியார் (1919, 1935) ஆகியோர். கல்வியிலும், வேலையிலும் உரிமை பெற்றுத் தந்தவர்கள் தந்தை ஈ.வெ. இராமசாமி (1951), டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் (1951) ஆகியோர் ஆவர்.

இவற்றால் நேரடிப் பயன் பெற்றோர், இந்தியா முழுவதி லும் தாழ்த்தப்பட்டோர் 15 முதல் 20 இலக்கம் பேரே; பிற் படுத்தப்பட்டோரின் எண்ணிக்கை அரை கோடிக்குக் குறை வாக இருக்கலாம்; சரியான விவரம் தெரியவில்லை. இவர் கள்தான் தீண்டாமை ஒழிப்பு முற்றிலுமாக வெற்றிபெற முன் னின்று போராட வேண்டியவர்கள். இவர்கள் முன் வராத வரையில் வெகுமக்கள் சரியான வழிகாட்டுதல் இன்றித் தவிப்பர். இது கெட்டியான ஓர் உண்மை.

இவ்வாறு, அவரவர் சார்ந்த சமூகத் தலைவர்களின் உழைப்பால் கடந்த 100 ஆண்டுக் காலத்தில் நேரடிப் பயன்பெற்று இன்று துய்ப்பவர்களில் 10ரூ பேர்கூடத் தத்தம் சமூகத்தின் விடுதலைக்குப் பங்களித்து நன்றிக்கடன் ஆற்றும் பண்பினராக இல்லை. இவர்கள் இப்படி இருப்பதைக் கண்ணாரக் கண்டு 1956 மார்ச்சு 18இல் கண்கலங்கினார், மேதை அம்பேத்கர். “நான் செய்வது நன்றியை எதிர்பாராத பணி (Thankless Job)” எனக் கூறி மனதைத் தேற்றிக் கொண்டார், பெரியார்.

5. ஆதித் திராவிடர் நலத்துறையின்கீழ், ஒரு கட்டத்தில், ஆதித் திராவிடர் நலத் தொடக்கப் பள்ளிகள் அமைக்கப்பட்டன. அன்றைய உடனடித் தேவை கருதி அவை சேரிக்குள்ளேயே அமைக்கப்பட்டன. ஊருக்குள் மேல்சாதியினர் இடம்கொடுக் காததும் ஒரு பெரிய காரணம்.

5 வயது முதல் 10, 11 வயது வரையுள்ள தீண்டப்படாத வகுப்புப் பிள்ளைகளை இன்றும் தனிமையாகவே வைத்துக் கல்வி தருவது சரியா என்பதைத் தாழ்த்தப்பட்டோர் வகுப்புப் பெற்றோர்களும், ஆசிரியர்களும், சமூகத் தலைவர்களும் பொறுப்போடு சிந்தித்து, இது இனி வேண்டப்படாதது என்று முடிவு செய்யவேண்டும். ஊருக்குள் இருக்கிற அரசுப் பொதுப் பள்ளிகளில் எல்லா வகுப்புக் குழந்தைகளும் ஒருசேர அமரவும், பழகவும், பேசவும், விளையாடவும், படிக்கவும் வழிசெய்வது உடனடித் தேவை, ஆதித்திராவிடர் நலத்துறைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் - பணிமூப்புப் பாதிப்பு, பதவி உயர்வுப் பாதிப்பு இன்றி உரிய பாதுகாப்பு அளித்து, அதன்பிறகு இந்தப் “பள்ளிகள் இணைப்பு” ஏற்பாட்டை விரைந்து அரசு மேற்கொள்ள வேண்டும்.

தீண்டப்படாதார் வேறு-மற்றவர் வேறு என்கிற எண்ணம் பிஞ்சு நெஞ்சங்களில் வேரூன்றுவதைத் தடுத்திட இது உதவும்.

தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர்க் கான - உயர்நிலை, மேல்நிலை, கல்லூரி மாணவ - மாணவிகளுக்கான இலவச உணவு விடுதிகளும், அந்தந்த வகுப்புப் பெயர்களைத் தாங்கித் தனித்தனி மாணவர் விடுதி களாக இருப்பது மாற்றப்பட வேண்டும்.

இன்று தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மாணவர் - மாணவியர் உணவு விடுதிகள் ஓராயிரத்துக்கு மேல் உள்ளன. பிற்படுத்தப்பட்டோர் மாணவ - மாணவியர் உணவு விடுதிகள் ஏறக்குறைய ஓராயிரம் உள்ளன. இவற் றில் மாணவர் சேர்க்கை, முறையே 75:15:10 விழுக்காடு எனத் தாழ்த்தப்பட்டோர் விடுதிகளிலும், அதேபோல பிற் படுத்தப்பட்டோர் விடுதிகளிலும் நடைபெறுகிறது. பிற்படுத் தப்பட்டோர் விடுதியில் தாழ்த்தப்பட்டோர் 15ரூ இருப்பர். தாழ்த்தப்பட்டோர் விடுதியில் பிற்படுத்தப்பட்டோர் 15ரூ இருப்பர். இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திப் பிற்படுத்தப் பட்டோர் விடுதிகளில் தாழ்த்தப்பட்ட வகுப்பினரை இழிவாக நடத்தவும்; தாழ்த்தப்பட்டோர் விடுதிகளில் பிற்படுத்தப்பட் டோரைப் பழித்துப் பேசவும் இடம் தரப்பட்டு, சாதிப் பற்று, சாதிப் பகைமையை வளர்க்கும் நல்ல நாற்றங்கால்களாக இவ்விடுதிகள் உருவாக்கப்பட்டுவிட்டன. இது 30 ஆண்டு களாகவே விசையாக வளர்த்தெடுக்கப்பட்டுவிட்டது. இதை வளர்த்தெடுக்க அந்தந்த விடுதியிலுள்ள காப்பாளர்களும், உயர்நிலை - மேல்நிலைப் பள்ளி, கல்லூரி ஆசிரியர்களும், வெளியில் உள்ள அந்தந்தச் சமூகத்தின் தலைவர்கள் என விளம்பரம் பெற்றவர்களும், தகுதி வாய்ந்த வழிகாட்டிகள் போல் செயல்படுகின்றனர். இதற்கு உடனடியாக முற்றுப் புள்ளி வைக்கப்பட வேண்டும்.

இவ்விடுதிகள் அனைத்தையும் “அரசு மாணவர் இலவச உணவு விடுதி”, “அரசு மாணவியர் இலவச உணவு விடுதி” எனப் பெயரிட்டு அமைத்திட வேண்டும். இவற்றுக் கான துறைகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், அலுவலர் கள், பணியாளர்களுக்குப் பணிமூப்பு, உரிய பதவி உயர்வு இவற்றுக்குப் பாதுகாப்புத் தந்து, இதை, உடனே நடை முறைக்குக் கொண்டுவர வேண்டும்.

உணவு விடுதிகளுக்கான மாணவர் சேர்க்கையைப் பொறுத்து, இனி, ஆண்டுதோறும் ஒவ்வொரு வகுப்பார்க்கும் எத்தனை மாணவர்கள் என்பதை வரையறை செய்து, அத்தனை மாணவர்களும் அவரவர் படிக்கிற பள்ளி - கல்லூரிகளை ஒட்டி உள்ள விடுதிகளில் சேர்க்கப்பட வழி கோல வேண்டும்.

“ஒதுக்கி வைப்பது” என்பது செயற்கையாகப் பிரித்து வைப்பதுதான். இது தீண்டாமையை வளர்க்கவே பயன் படும். கல்வியில் இடஒதுக்கீடு என்பது அப்படி அன்று. கல்வி யில் இடங்கள்தான் ஒதுக்கப்படுகின்றன; ஆனால் எல்லா வகுப்பினருடனும் இணைந்தே ‘தீண்டப்படாதார்’ படிக்கின்றனர். வேலையில் இடஒதுக்கீடு மூலம், இடங்கள்தான் ஒதுக்கப் படுகின்றன. ஆனால் எல்லா வகுப்பினருடனும் இணையாக அமர்ந்தே ‘தீண்டப்படாதோர்’ பணிபுரிகின்றனர். உண்மை யில் தீண்டாமை ஒழியவும், சாதி மறுப்பு மணம் விரைந்து நடைபெறவும் இவை நல்ல களங்கள்.

இந்த ஏற்பாடுகளை “ஒதுக்கி வைப்பது”, “தனிமையாக வைப்பது”, “பிரித்து வைப்பது” என்று பொருள் படுகிற “Segregation, Seclusion, Isolation”, “Reservation” என்பவற்றோடு சேர்த்துக் குழப்பிக் கொள்ள வேண்டாம் என வேண்டுகிறோம்.

சாதி மறுப்புத் திருமணத்தை வேகப்படுத்த கல்வியிலும், வேலையிலும் சாதியின் பேரால் இடஒதுக்கீடு இருப்பது என்பது ஒரு நல்ல ஏற்பாடு எனக் கண்டோம்.

தமிழகத்திலும் இந்தியாவிலும் கோடிக்கணக்கான குழந்தைகள் மேல்நிலை வகுப்புகள்வரை படிக்கிறார்கள்.

அவர்கள் படிக்கும் பாடநூல்களில் :

“தீண்டாமை ஒரு பாவச் செயல்; தீண்டாமை ஒரு பெருங்குற்றம்; தீண்டாமை ஒரு மனிதத் தன்மையற்ற செயல்” - என்ற மூன்று வரிகளையும், அவரவர் தாய்மொழி யிலும், ஆங்கிலத்திலும் பாடநூலின் முதல் பக்கத்திலேயே பெரிய எழுத்தில் அச்சிட்டிருக்கிறார்கள்.

ஆனால், இந்து மதத்தில் மட்டும்தான் - சாத்திரப்படி தீண்டாமை என்கிற பாவச் செயல் நியாயப்படுத்தப்பட்டது என்பதாக இரண்டு பக்க அளவில்கூட ஒரு பாடம் இல்லை; தீண்டாமை என்கிற பழக்கத்தை மொத்தச் சமூகமும், ஒவ்வொரு சாதியும் பின்பற்ற வேண்டும் என்பது அரசனின் - அரசின் கட்டளையாகவே ஆயிரம் ஆண்டுக்கு மேலாகப் பழக்கத்தில் இருந்தது என்பதாக ஒரு பாடம்கூட இல்லை; இப்போது அத் தீண்டாமை என்பது, அரசினால், சமூகத்தில் நீக்கப்பட்டுவிட்டது - ஆனால், சமய வழிபாட்டில் அது நீக்கப்படவில்லை என்பதாக ஒரு பாடம்கூட இல்லை.

இவற்றை மூடி மறைத்துவிட்டு, ‘மந்திரச் சொல்’ போல் இந்த மேலே கண்ட வரிகளை அச்சிட்டு, தீண்டாமை ஒழிப் புக்கு அரசு தீவிரமாக முயலுவதாகச் சொல்லுவது ஓர் ஏமாற்று; ஒரு பொய்; ஓர் அநீதி என்பதை முதலில் கல்வியாளர்களும், சமுதாயத் தொண்டு செய்வோரும் உணர வேண்டும். பொய்யும் பகட்டான வேடமும் சடங்குமுறைச் செயலும் எந்தக் குறிக்கோளையும் வெற்றிபெற வைக்க உதவமாட்டா.

அப்படியானால், “தீண்டாமை” எங்கே இருக்க முடியும்?

தமிழ்நாட்டில் உள்ள 50,000 பெரிய - சிறிய கோவில்களில் பார்ப்பனர் மட்டுமே இன்றும் அர்ச்சகர்கள்; மற்ற எல்லோரும் அங்கே அரசமைப்பு விதி 17இல் தீண்டப் படாதவர்கள். இந்தியா முழுவதிலும் உள்ள கோடிக்கணக் கான சைவ - வைணவக் கோவில்களில் பார்ப்பனர் மட்டுமே இன்றும் அர்ச்சகர்கள்; மற்றெல்லோரும் அங்கே தீண்டப் படாதவர்கள்.

இந்தியா முழுவதிலும் உள்ள இலட்சக்கணக்கான இந்து மடங்களில் - மடாதிபதியாக வர உரிமை அற்ற, மற்ற மற்ற ஒவ்வொரு சாதியினரும் தீண்டப்படாதார். இது பள்ளி களில் படிக்கும் அனைவர்க்கும், நம் ஒவ்வொருவருக்கும் புரிய வேண்டும்.

விதி 17இல், “தீண்டாமை” என்ற சொல்லை மட்டும் மேற்கோள் குறிக்குள் இட்டது அந்தப் பொருளில் மட்டும் தான். அதை மாற்றி சாதி (ஊயளவந) என்று போடுவதால் ஒரு போதும் வருணசாதி, உள்சாதி இரண்டும் இந்துக் கோவில் களிலும் இந்து மடங்களிலும் ஒழிக்கப்பட முடியாது.

(தொடரும்)

Pin It