இந்திய சமூகத்தைப் பற்றிய வரையறைகளையும் அனுமானங்களையும் உள்நாட்டு - வெளிநாட்டு அறிஞர் பலரும் வெளியிட்டுள்ளனர். அனைவருமே அவரவர் ஏற்றுக்கொண்ட மெய்யியலின் கண்ணோட்டத்திலிருந்தே விளக்கியுள்ளனர். எனினும் அவை யாவும் இந்தியச் சமூகத்தைப் பற்றிய புரிதலுக்கான திறவுகோல்களாக இலங்குகின்றன. அந்த வகையில் இந்தியச் சமூகத்தைப் பற்றி மார்க்சும் பெரியாரும் கூறியுள்ள சில கருத்துக்களை ஒப்பிட்டு ஆராய முயல்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

மார்க்சும் பெரியாரும்

இந்தியாவைப் பற்றிய மார்க்சின் குறிப்புகளாகக் கிடைப்பவை 1853 முதல் 1857 வரையிலான காலகட்டத்தில் அவரால் “நியூயார்க் டெய்லி டிரிபியூன்” என்ற இதழில் எழுதப்பட்ட கட்டுரைகளாகும். இவற்றில் அந்தக் காலகட்டத்தில் இந்தியாவில் நிகழ்ந்த நிகழ்வுகளைப் பற்றிய தமது மதிப்பீடுகளைப் பதிவு செய்துள்ளார். இம்மதிப்பீடுகளில் இந்தியக் கலாச்சாரப் பண்பாட்டுக் கூறுகளின் தன்மையைக் காண முடிகிறது.

பெரியாரைப் பொறுத்தவரையில் இந்தியக் கலாச்சார பண்பாட்டுக் கூறுகளைப் பற்றிய தமது மதிப்பீடுகளைத் தாம் நடத்திய குடியரசு, புரட்சி, விடுதலை ஆகிய ஏடுகளில் பதிவு செய்துள்ளார். இவையே பெரியாரின் சமூகம், அரசியல், கலாச்சாரம், பண்பாடு பற்றிய வரலாற்று ஆவணங்களாகும். 50 ஆண்டு காலப் பொதுவாழ்வில் காங்கிரஸ், நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம் மற்றும் பல்வேறு களங்களில் இந்தியச் சமூக மாற்றத்திற்கான தமது கருத்துக்களை முன்வைத்தவர் பெரியார்.marx and periyarஇவ்விருவரில் மார்க்சு காலனியாதிக்க அரசின் ஆவணங்கள் மற்றும் இதழ்களின் செய்திகளிலிருந்து இந்தியச் சமூகத்தைப் பற்றிய வரையறைகளை உருவாக்கினார். ஆனால் பெரியாரோ இச்சமூகத்திலேயே வாழ்ந்து அதன் பண்பாட்டுக் கூறுகளை அறிந்துகொண்டு விமர்சித்தார்.

இந்தியச் சமூகம்

சமூக வளர்ச்சி அம்சங்களை மார்க்சியம் கீழ்க்காணுமாறு வரையறுக்கிறது:

1. மனித சமூகமானது பொருளாதாரத்தை அடிக்கட்டுமானமாகவும் கலாச்சார - பண்பாடு - அரசியல் அம்சங்களை மேல்கட்டுமானங்களாகவும் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது.

2. அடித்தளமே மேல்கட்டுமானங்களின் உருவாக்கங்களையும் தன்மைகளையும் இயக்கப் போக்குகளையும் தீர்மானிக்கிறது.

3. எனினும், மேல்கட்டுமானங்களின் வீரிய கருத்தியல் வீச்சினால் அடிக்கட்டுமானம் பாதிப்படைவதற்கான சாத்தியங்களும் உண்டு (ஆக்க நிலையிலோ அழிவு நிலையிலோ).

இந்த வரையறையின் அடிப்படையில் நோக்கும்பொழுது உலகிலுள்ள எந்தவொரு சமூகத்தைவிடவும் இந்தியச் சமூகம் 3-வது அம்சத்தில் மிகுந்த அழுத்தம் பெற்றதாக விளங்குகிறது எனலாம்.

இந்தியச் சமூகத்தைக் கட்டமைத்துள்ள மேல்கட்டுமான அமைப்பைப் பற்றி மார்க்சு குறிப்பிடுவதாவது:

“தீர்க்க முடியாத முரண்பாடுகள் உள்ள பல்வேறு இனங்கள், குலமரபுகள், சாதிகள், சமயக் கோட்பாடுகள், அரசுகள் ஆகியவைகளை ஒன்றுசேர்த்து, உருவாக்கப்பட்டிருக்கிற பூகோள ஒற்றுமையைத்தான் இந்தியா என்று அழைக்கிறோம்” (இந்தியாவைப் பற்றி, ப.111)

இந்தியச் சமூக நிறுவனங்களுக்குள் இணக்கமான உறவுநிலை இல்லை என்பதை மார்க்ஸ் தெளிவாக்குகிறார். இத்தகைய சமூக அமைப்பைப் பற்றிப் பெரியாரும்,

“இந்தியா சுமார் 500 வருஷங்களுக்கு முன்வரையில் -ஏன் வெள்ளையன் வருகிற வரையில் சில சந்தர்ப்பங்கள் தவிர இனம், மொழி, சீதோஷ்ணநிலை, பூர்வீக நாடு முதலியவைகளுக்கு ஏற்ற தனித்தனி நாடுகளாக இருந்துவந்த நாடாகும். இப்படி எல்லாம் இருக்கக்கூடிய நாடு எவ்வித நன்மைக்கும் பயன்படாத வகையில் ஒரே நாடாகப் பிணைக்கப்பட்டிருக்கிறது. (பெரியார் : ஈ.வெ.ரா.சி.,ப.1197)

என்றே எழுதுகிறார்.

ஒன்றுக்கொன்று முற்றிலும் முரண்பட்ட இந்தியச் சமூக நிறுவனங்களை ஒன்றிணைத்திருப்பது வெறும் பூகோள ஒற்றுமை மட்டுமே என்று மார்க்ஸ் வரையறுப்பதும், “எவ்வித நன்மைக்கும் பயன்படாதவகையில் ஒரே நாடாகப் பிணைக்கப்பட்டிருக்கிறது” என்று பெரியார் மதிப்பிடுவதும் ஒரே புரிதல்தன்மையின் வேறுவேறு வெளியீட்டு வடிவங்களே எனலாம்.

இவ்வாறு ஒருங்கிணைக்கப்பட்டிருப்பதாகக் காரணம் அரசியலே. அரசியல், மேல்தளக் கட்டமைப்பின் ஒரு கூறுதான். எனினும், இதர மேல்தளக் கூறுகளான சாதி, மதம், குலமரபுகள் ஆகியவை அரசியலைக் கட்டமைப்பதற்கான சூழலை உருவாக்குவனவாய்த் திகழ்கின்றன. பிற எந்த தேசத்தைக் காட்டிலும் இந்தியாவில் அரசியலுக்கான முக்கியப் பின்புலங்களாக இவை விளங்குகின்றன. இதைத்தான்,

“அதன் சரித்திரம் என்று நாம் அழைப்பதெல்லாம் எதிர்க்காமலும், மாறாமலும் உள்ள சமுதாயத்தின் அடங்கி ஒடுங்கி இருக்கிற தன்மையின் அஸ்திவாரத்தில் இடைவிடாமல் தொடர்ச்சியாக ஆக்கிரமித்த அன்னியர்கள் தங்கள் சாம்ராஜ்யங்களைக் கட்டினார்களே அவைகளின் சரித்திரம்தான்.” (இந்தியாவைப் பற்றி, ப.99)

என்று மார்க்ஸ் குறிப்பிடுகிறார். எதிர்க்காமலும் மாறாமலும் உள்ள சமுதாயத்தின் அடங்கி ஒடுங்கி இருக்கிற தன்மையானது, இந்து சனாதனக் கருத்தியலாதிக்கத்தினால் உருவாக்கப்பட்டுள்ளது. எனவேதான்,

“இந்தியாவின் கடந்த காலத்தில் அரசியல் எவ்வாறு மாறிய போதிலும் சமுதாயநிலை மாறவில்லை. பண்டு ஒழிந்த காலத்திலிருந்து பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கம்வரை மாறவே இல்லை.” (இந்தியாவைப் பற்றி, ப.22)

என்று குறிப்பிடுகிறார் மார்க்ஸ். இங்கு 19ஆம் நூற்றாண்டுவரை இந்தச் சமுதாயநிலை மாறவே இல்லை என்று அழுத்தமாகக் கூறுவது கவனத்திற்கும் ஆய்விற்கும் உரியது. அவரால் ‘சமுதாயநிலை’ என்று குறிப்பிடப்படுவது ‘இந்திய வருணாசிரமம் தரும் முறை’யேயாகும். இதே கண்ணோட்டத்திலேயே பெரியாரும் இந்தியச் சமூகத்தை விளக்கினார் என்பதை,

“பேதங்களால் ஒற்றுமை இல்லை என்பது மாத்திரமில்லாமல் பொது முன்னேற்றம் என்பது வகுப்புத் துவேசமாகக் கருதப்படுகிறது. இதன் காரணமாகவே இந்நாடு அனேக காலமாக தேக்கம் அடைந்திருப்பதோடு, கேடும் அடைந்து வருகிறது. ஆகவே, இந்த நாட்டு முன்னேற்றத் தடைக்கும், விடுதலைத் தடைக்கும் ஜனசமுதாய அமைப்பே முக்கிய காரணம் என்று சொல்லத்தக்க வண்ணம் இந்நாட்டுச் சமுதாயம் இருந்து வருகிறது.” (பெரியார் :ஈ.வெ.ரா.சி.,ப.1202)

என்று அவரது கருத்து உணர்த்துகிறது.

ஆக, இந்தியச் சமுதாய அமைப்பில் புரட்சிகரமான மாற்றங்கள் நிகழாமைக்குக் காரணங்களாக; நிகழும் மாற்றங்களையும் நீர்த்துப் போக வைப்பவையாக - இங்குள்ள சாதீய அமைப்புமுறையும் அதைத் தாங்கிப் பிடிக்கும் சனாதன இந்து மதமும் இவற்றுக்கான கருத்தியல்களும் இருக்கின்றன என்பதை மார்க்சும் பெரியாரும் ஒருங்கே வெளிப்படுத்தியுள்ளனர் என்று புரிந்து கொள்ளலாம்.

ஆங்கிலேயரும் இந்தியாவும்

இந்திய அரசியல் வரலாற்றின் பெரும்பகுதியும் அன்னியர்களின் ஆட்சி வரலாறாகவே இருந்தது என்பதைக் குறித்த மார்க்ஸின் கருத்து ஏற்கனவே குறிப்பிடப்பட்டது. இந்தியச் சமூகங்களுக்குள் இருந்த தீர்க்க முடியாத முரண்பாடுகள்தாம் இத்தகைய நிலைக்கும் காரணங்களாக விளங்கின. எனவே, ஆங்கிலேயர்கள் இந்தியாவின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவது கடினமான வேலையாக இருக்கவில்லை. இதை மார்க்ஸ் கீழ்க்காணுமாறு விவரிக்கிறார்:

“இந்தியாவில் ஆங்கிலேய ஆதிக்கம் அமைக்கப்பட்டதே, அது எவ்வாறு ஏற்பட்டது? மாபெரும் மொகலாய சக்கரவர்த்தியின் மேலாதிபத்தியத்தை மொகலாய வைஸ்ராய்கள் உடைத்தெறிந்தார்கள்; அந்த வைஸ்ராய்களின் அதிகாரத்தை மகாராஷ்டிரர்கள் உடைத்தெறிந்தார்கள்; மகாராஷ்டிரர்களின் அதிகாரத்தை ஆப்கானியர்கள் உடைத்தெறிந்தார்கள். இவ்வாறு அனைவரும் அனைவரையும் எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்ததால், பிரிட்டன் வேகமாக உள்ளே நுழைந்து, அனைவரையும் அடக்கி அடிமைப்படுத்த முடிகிறது.” (இந்தியாவைப் பற்றி, ப.22)

“தீர்க்க முடியாத முரண்பாடுகள் உள்ள பல்வேறு இனங்கள், குலமரபுகள், சாதிகள், சமயக் கோட்பாடுகள், அரசுகள் ஆகியவைகளை ஒன்று சேர்த்து உருவாக்கப்பட்டிருக்கிற பூகோள ஒற்றுமையைத்தான் இந்தியா என்று அழைக்கிறோம். இவைகளுக்கு இடையே இருந்த தீர்க்க முடியாத முரண்பாடுகள்தான் பிரிட்டிஷ் மேலாதிக்கத்திற்கு மிக முக்கியமான அடிப்படையாகத் தொடர்ந்து இருந்தது.” (இந்தியாவைப் பற்றி, ப.22)

மேற்கண்ட மார்க்ஸின் கருத்துகளிலிருந்து, ஆங்கிலேயர்கள் இந்தியாவின் ஆட்சியைக் கைப்பற்றவும் தக்க வைத்துக் கொள்ளவும் சாத்தியமாக இருந்த இரு அம்சங்களைத் தொகுக்கலாம்:

அவை,

1. ஆதிக்க வர்க்கங்களுக்குள் இருந்த அதிகார ஆக்கிரமிப்புக்கான முரண்பாடு.

2. சமூகக் கட்டமைப்பின் பண்பாட்டு ஏற்றத் தாழ்வுக் கூறுகளுக்கிடையிலான முரண்பாடு.

இந்த இரண்டு அம்சங்களும் பெரியாரின் கருத்துக்களிலும் எதிரொலிப்பதைக் காண முடிகிறது. முதல் அம்சத்தைப் பொறுத்தவரையில், அவர்களில் ஒவ்வொருவரின் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகும்போதும் இந்திய வரைபடத்தில் அங்குமிங்குமாக பொருத்தமற்ற கோடுகள் கிழிக்கப்பட்டன என்று பெரியார் கூறுகிறார்.

இரண்டாவது அம்சத்தின்மீது அதிகமான கவனம் செலுத்தியுள்ளமை அவரது கருத்துக்களிலிருந்து தெரிய வருகிறது. பெரியாரின் கருத்துக்கள் வருமாறு:

“பொருத்தமில்லாதவற்றை ஒன்றுபடுத்தி இருப்பதற்கும் பொருத்தமுள்ளதை வேறுபடுத்தி இருப்பதற்கும் சரித்திர சம்பந்தமானதோ அல்லது அவசிய சம்பந்தமானதோ ஆகிய காரணம், அவ்வப்போது படையெடுத்து வந்து வென்ற அரசர்கள் ஒன்று சேர்ந்ததும் பிரிந்ததும் தவிர வேறு ஒரு காரணமும் தென்படவில்லை.” (பெரியார் :ஈ.வெ.ரா.சி, ப.1197)

“நமது நாட்டில் உள்ள வர்ணாசிரம தர்மந்தான் இந்நாட்டிற்கு வெள்ளைக்கார ஆட்சி முதலிய முதலாளிகள், ஆட்சியைக் கொண்டு வந்துவிட்டதாகும். இன்று அவ்வாட்சியை நடத்திக் கொடுப்பதே - அதைக் கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டிருப்பதே - நமது நாட்டு வர்ணாசிரம் தரும முறையேயாகும்.” (மேற்கோள், பெரி/சுய/சம, ப.207)

பெரியாரின் மேற்கண்ட கருத்துக்கள் மார்க்ஸ் குறிப்பிடும் இரு அம்சங்களையும் உள்ளடக்கியதாக விளங்குகின்றன. ஆதிக்கச் சக்திகள் மக்களின் நலனையோ, பண்பாட்டுத் தனித்தன்மைகளையோ கணக்கிலெடுத்துக் கொள்ளவில்லை என்பதையும் அதே முறையில்தான் ஆங்கிலேயர்களும் இந்தியாவின்மீது ஆதிக்கம் செலுத்தினர் என்பதையும் இருவருமே பதிவு செய்துள்ளனர்.

ஆதிக்கத்திற்குதவும் கருத்தியல்கள்

இந்தியச் சமூக வரலாற்றில் இந்திய, அந்நிய ஆதிக்கவர்க்கங்கள் தங்கள் மேலாண்மையை ஏற்படுத்தவும், நிலைநிறுத்தவும் மக்களின் அறியாமையினால் உருவாகியுள்ள - உருவாக்கப்பட்டுள்ள மதம், மூடநம்பிக்கைகள், தலைவிதி போன்ற கருத்தாக்கங்களைப் பயன்படுத்திக் கொண்டன. இன்னும் சொன்னால், அவற்றை வளர்த்தெடுப்பதற்கான சூழலையும் உருவாக்கின. இந்நிலை ஆங்கிலேய ஆட்சியின்போது இருந்தது என்பதை மார்க்சும் பெரியாரும் துல்லியமாக விவரித்துள்ளனர். இந்நாட்டு மக்களுக்காகக் களத்தில் பணியாற்றியவர் என்கிற வகையில் பெரியாரின் பங்களிப்பு மகத்தானதாகும். அதே நேரத்தில் உலகின் ஒரு கோடியில் இருந்து கொண்டு இந்தியச் சமூக இயங்கியலை நாடி பிடித்துப் பார்த்துச் சொன்ன மார்க்சின் பங்கும் மகத்தானதே.

மதம்

மதத்தைப் பற்றிய மார்க்ஸின் புகழ்பெற்ற கருத்து அனைவரும் அறிந்ததே அக்கருத்து ‘மதம் ஒரு அபின்’ என்பதாகும். அபின் என்பது ஒருவகைப் போதைப் பொருள். அதை உபயோகித்தவன் எவ்வாறு புத்திபேதலிப்பானோ - சொன்னதையே சொல்வானோ - அப்படிப்பட்ட செக்குமாட்டுச் சிந்தனையைத்தான் மதம் தரும் என்பது அவரது கருத்தின் உட்கிடை எனலாம். இதே கண்ணோட்டத்தோடுதான் பெரியாரும் மதத்தை அணுகினார் என்பதை,

“கள்ளினால் உண்டாகும் வெறியைவிட இம்மாதிரி மதங்களால் ஏற்படும் வெறி அதிகமான கேட்டைத் தருகிறது. கள், குடித்தவனைக் கெடுக்கிறது; மதம், மனத்தில் நினைத்தவனையே கெடுக்கிறது” (இந்தியாவைப் பற்றி, ப.22)

என்ற அவரது கருத்து உறுதிப்படுத்துகிறது. இருவருமே மதத்தை இவ்வாறு காரசாரமாக விமர்சிப்பதற்குக் காரணம் சமூகத்தின் - மக்கள் வாழ்வியலின் -மேற்கட்டுமான அம்சங்கள் அனைத்தையும் பாதிக்கவும், தேக்கமடையவும் செய்யும் கருத்தியலாக அது உள்ளதாலேயாகும். எனவேதான்,

“எல்லா விமர்சனங்களுக்கும் அடிப்படையானது மதத்தைப் பற்றிய விமரிசனமே ஆகும்” (Marx Engels, p.175)

என்று மார்க்ஸ் வலியுறுத்தினார். மார்க்ஸ் விரும்பியவாறு, 20 ஆம் நூற்றாண்டில் மதத்தை ஈவிரக்கமின்றி விமர்சித்தவர்களுள் பெரியார் முதன்மையானவரும் முக்கியமானவரும் ஆவார். அவர் மதத்தை விமர்சிப்பதையே பிரதானமாகக் கொண்டிருந்தார். ஏனென்றால்,

“அது வாழ்க்கையின் ஒவ்வொரு முறையையும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. தலைமயிர் முதல் கால் செருப்பு வரை, மதத்துக்குச் சம்பந்தப்பட்டிருக்கின்றன. நடை, உடை, ஆகாரம், பாவனை, கல்வி, மரணம், வாழ்வு, தொழில், பணம் சேர்த்தல், பணம் செலவழித்தல், தர்மம் எல்லாம் மத ஆதிக்கத்தில் - மதப் பிரவேசத்தில் இருக்கின்றன.” (பெரியார் :ஈ.வெ.ரா.சி., ப.1197)

என்கிறார் பெரியார். அவரது நுட்பமான நோக்கு இதிலிருந்து பெறப்படுகிறது. பெரியார் கூறுவதுபோல், வாழ்க்கையின் எல்லா அங்கங்களையும் கட்டமைத்து இயக்குவதால் மார்க்சும் எல்லா விமர்சனங்களுக்கும் அடிப்படையானது மதத்தைப் பற்றிய விமரிசனமே என்றார்.

இந்து மதம்

வேதம், உபநிடதம், அரண்யகம், புராணம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது வைதீக மதம்; இதனைப் ‘பார்ப்பன மதம்’ (Brhaminical Religion) எனவும் குறிப்பர். இம்மதம் ஒரு காலத்தில் ஒரு சிலருக்கு மட்டுமே உரியதாக இருந்து காலப்போக்கில் பரவலான இந்திய மக்களுக்கும் உரியதாகத் திணிக்கப்பட்டது. ஆதிக்கச் சக்திகள் பொருள் குவிப்பதற்கும் இன்பம் பெறுவதற்கும் உரிய கட்டமைப்பைக் கொண்டதாக நிலப்பிரபுத்துவச் சமூக அமைப்பில் இது இருந்தது. பின்னர் நாட்டுப்புற வழிபாட்டு மரபு மற்றும் அறுவகைச் சமயங்களையும் தன்னுள் ஐக்கியப்படுத்திக் கொண்டபின் ஏற்பட்ட பொதுப்பெயரே ‘இந்து மதம்’ என்பதாகும். அதோடு, எதிரெதிர் பண்பாட்டுக் குழுக்களையும் தன்னுள் ஐக்கியப்படுத்திக் கொள்வதாகவும் இருந்தது. இந்து மதத்தைப் பற்றி,

“சிற்றின்ப ஈடுபாடு உலகமும் மிகுதுயர் வருந்தும் உலகமும் வியப்பான முறையில் சேர்ந்திருப்பதை இந்துஸ்தான் சமயத்தின் பண்டைய மரபுகள் முன்பே உணர்ந்து புலப்படுத்தியிருக்கின்றன. அந்த மதம் புலனுணர்ச்சி இன்பங்களில் மூழ்கித் திளைத்திருப்பதை வலியுறுத்தும் மதமாக உள்ளபோதே, தன்னைத் தானே வதைத்துக் கொள்ள வேண்டுமென்று வற்புறுத்தும் துறவு மதமாகவும் விளங்குகின்றது. லிங்கத்தை வழிபடும் சமயமும் அதுவே; சன்னியாசியின் சமயமும் அதுவே.” (இந்தியாவைப் பற்றி, ப.118)

என்று மார்க்ஸ் தனது அவதானிப்பை வெளியிட்டுள்ளார். இதில் “தேவதாசி மதமும் அதுவே; சன்னியாசியின் சமயமும் அதுவே” என்று குறிப்பிடுவதை இந்து மதத்தின் பேரால் நிலப்பிரபுக்களால் நடத்தப்பட்ட இழிவான செயல்களை ஏராளமான விமர்சனங்களைப் பெரியாரும் முன்வைத்துள்ளார்.

மதமும் வர்க்கமும்

இந்தியாவில் வருண அடிப்படையைக் கொண்டதும் நிலப்பிரபுத்துவ அமைப்பைக் கொண்டதுமான ஒரு சமூகம் ஓங்கி வளர்ந்திருந்த நேரத்தில் ஆங்கிலேயர்கள் இங்கு வந்தனர். இயல்பாகவே, முதலாளித்துவத்தின் உற்பத்தி எந்திரங்கள் வந்துவிட்டால் சமூகக் கட்டமைப்பில், மக்களின் சிந்தனையில் மாற்றம் நிகழ்வது தவிர்க்க இயலாதது. அவ்வாறு மாற்றங்கள் நிகழ்ந்த போதும், அவர்களின் மதம் அவற்றுக்கு இடம் தராதபோதும் இந்தியர்களின் மதம் சார்ந்த சடங்கு, சம்பிரதாயங்களில் கைவைக்க முயன்றபோதெல்லாம் சனாதனவாதிகளின் கடும் எதிர்ப்பைச் சந்திக்க நேர்ந்தது. ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை நிலைநிறுத்தப் பயன்படும் கருத்தியல் கவசமாக அவை இருந்ததால் அவற்றைத் தடுக்கவில்லை; மாறாக, வளர்த்துவிட்டனர். ஏனெனில், ஒவ்வொரு செயல்பாட்டுக்கும்கீழ் ஒரு வர்க்கத்தின் நலன் ஒளிர்ந்திருக்கிறது அல்லவா? அவ்வாறே தங்களது சொந்த லாபத்துக்காக ஆங்கிலேயர்கள் இந்துமத நடவடிக்கைகளை ஊக்கப்படுத்தியதைப் பற்றி,

“நமது புனிதமான மதத்தைப் பாதுகாக்கிறோம் என்ற போர்வையில், பிரஞ்சுப் புரட்சியை எதிர்த்த அதே நபர்கள், அதே சமயத்தில் கிறிஸ்தவ மதப்பிரச்சாரத்தை நடத்தக்கூடாது என்ற தடை செய்யவில்லையா? வங்காளத்திலும், ஒரிஸ்ஸாவிலும் உள்ள ஆலயங்களுக்குச் சாரிசாரியாகச் செல்லும் ஏராளமான யாத்திரிகர்களிடமிருந்து பணத்தைப் பிடுங்கும் நோக்கத்தோடு, ஜெகன்னாதர் ஆலயத்தில் நரபலியையும், விபச்சாரத்தையும் நிரந்தரமாக்கி அவைகளைப் பயன்படுத்திக்கொண்டு தாங்களே வியாபாரம் செய்யவில்லையா? இவர்கள்தான் சொத்துக்கள், அமைதி, குடும்பம், மதம் ஆகியவைகளின் பாதுகாவலர்களாம்” (இந்தியாவைப் பற்றி, பக்.108-109)

என்று பரிகாசம் செய்துள்ளார் மார்க்ஸ். மேலும்,

“சில ஆண்டுகளாகக் கொடுமை செய்வதை உட்கொண்ட ஒரு மதத்தின் நரபலிச் சடங்குகளை ஆதரித்து, பாதுகாத்து, ஜகன்னாதர் ஆலயத்தில் திருவிழா நடக்கும் பொழுது வரிவிதித்து, அதன் மூலம் வருமானத்தையும் பெற்று வந்த(னர்) ஆங்கிலேயர்கள்” (இந்தியாவைப் பற்றி, பக்.141)

என்றும் குறிப்பிடுகிறார் மார்க்ஸ். நரபலிச் சடங்குகள் போன்ற மூடத்தனமான செயற்பாடுகளில்லாத கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்த ஆங்கிலேயர்கள், தங்கள் ஆதிக்கத்திற்காக அதைப் பயன்படுத்திக் கொண்டனர். இதில் வர்க்கநலன் ஒளிந்தல்ல; வெளிப்படையாகவே தெரிகிறது.

மார்க்சு சுட்டுவதைப் போலவே பெரியாரும் ஆதிக்க வர்க்க நலனுக்குரிய கருவியாகவே மதம் உள்ளது என்பதை,

“மதக்கடவுள் பல! அவைகளின் சரித்திரங்கள் விபரீதம். அதன் பயனாய் மனித சமூகம் பிரிக்கப்பட்டிருக்கிறதே தவிர, ஒன்றுபடுத்தப்படவில்லை. சடங்குகள், பிரார்த்தனைகள் முதலியவை பொருளாதாரக் கேட்டுக்கும் ஒருவரையொருவர் சுரண்டுவதற்கும் ஏற்ற வண்ணமே வழங்கப்பட்டு வருகிறதனால் - ஒரு வகுப்பு உயர்வு, ஒரு வகுப்பு தாழ்வும் ஆகி வருகிறது; மதத்தால் நாடு கெட்டது.” (பெரியார் :ஈ.வெ.ரா.சி, ப.1198)

என்றும்,

“சமுதாய வாழ்வில் மனிதர்களுக்குள் உயர்வு தாழ்வு கற்பிக்கிறது மாத்திரமில்லாமல், பொருளாதாரத்தில் உயர்வு தாழ்வு கற்பிப்பதற்கும் மதம் மூலக்காரணமாய் இருக்கிறது.

உண்மையில் நீங்கள் யோசித்துப் பாருங்கள்; உடல் வலிக்கப் பாடுபட ஒரு சாதியும், நோகாமல் உட்கார்ந்து கொண்டு சாப்பிட ஒரு சாதியும் மதம் சிருஷ்டிக்கவில்லையா?” (பெரியார் :ஈ.வெ.ரா.சி, ப.1382).

என்றும் பெரியார் குறிப்பிடுபவை ஆழ்ந்து சிந்திக்கத்தக்கவை. இவற்றிலிருந்து வர்க்க - சாதிய வேறுபாடுகளை நீடிக்கச் செய்வதற்கான கருத்தியலாக மாத்திரமல்லாது நிறுவனமாகவும் மதம் செயல்படுகிறது என்பதை அறிய முடிகிறது.

மார்க்ஸ், அன்னிய முதலாளிகள் இந்தியாவிற்கு வந்து தமது மேலாதிக்கத்தை நிலைநாட்ட மதத்தை எவ்வாறு பயன்படுத்தினார் என்பதை விளக்கியுள்ளார். பெரியார் இந்தியப் பார்ப்பன மற்றும் பணக்காரர்கள் தங்களின் சுரண்டல் தொடர்வதற்கு மதத்தை எவ்வாறு பயன்படுத்தினர் என்பதை விவரித்துள்ளார்.

சாதி

பிறப்பினடிப்படையில் சமூகத்தின் எந்தவொரு விளைச்சலையும் பூரணமாக அனுபவிப்பதைத் தடுப்பது இந்தியச் சாதீய அமைப்பு முறை யாகும். இதனால் ஒட்டுமொத்த சமூக வளர்ச்சியும் கேள்விக்குறியாகவே இருந்துவந்தது. இன்றுங்கூட அதன் எச்சங்கள் இருக்கத்தான் செய்கின்றன.

பிரிட்டிஷாரின் ஆட்சியின்போதும், அதற்கு முந்தைய காலங்களிலும் உலகெங்கிலும் இல்லாத விசித்திரமான சமூகக் கட்டமைப்பு இந்தியாவில் மட்டும் நிலவிவந்தது. பிற நாடுகளில் தொழில் பிரிவினையிலிருந்து தொழிலாளி வர்க்கம் தோன்றியது. இந்தியாவிலோ தொழில் பிரிவினையிலிருந்து சாதி தோன்றியது; மக்கள், வர்க்கமாகத் திரள்வதைச் சாதி தடுக்கிறது; நீர்த்துப் போகவும் செய்கிறது. ஒவ்வொரு சாதியினருக்கும் உரிய தொழில் இதுதான் என்றும், குறிப்பிட்ட சாதியில் பிறப்போர், தாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அந்தத் தொழிலைச் செய்துதான் ஆகவேண்டும் என்றும் நிர்ப்பந்திக்கப்பட்டது. ஒவ்வொரு தொழில் செய்யும் சாதியினரும் சமூக இயக்கத்தின் தவிர்க்கவியலாத அங்கம் என்பதை எண்ண மறந்து அவர்களுக்குள் உயர்வுதாழ்வுகளை பார்ப்பதோ தீண்டுவதோ கூடாது என்பதுவரை - கற்பித்துக் கொண்டனர்; கற்பிக்கப்பட்டது. இதனால் படித்தோன் காலங்காலமாகப் படித்தோனாகவும் துவைத்தோன் காலங் காலமாகத் துவைத்தோனாகவும் என்றும் இருப்பதற்கான; இருக்க வைப்பதற்கான கருத்தியல்கள் உருவாக்கப்பட்டன. இதைத்தான், ‘வர்ணாசிரமதர்மம்’ என்கின்றனர். இந்தியச் சமூகத்தின் ஈடுஇணையற்ற அழுக்கான இச்சாதீய அமைப்பே அதன் முன்னேற்றத்தைத் தடுக்கிறது என்பதை,

“இந்தியாவின் முன்னேற்றத்திற்கும் இந்தியாவின் அறிவாற்றலுக்கும் மிக முட்டுக்கட்டையாக இருக்கும் இந்தியச் சாதிகளுக்கு அஸ்திவாரமாக விளங்கும் பரம்பரைக் குலத்தொழில் பிரிவினைகளை இருப்புப்பாதை அமைப்பதிலிருந்து உருவாக்கப்படும் நவீன இயந்திரத் தொழில்கள் கலைத்துவிடும்.” (இந்தியாவைப் பற்றி, ப.108).

“இந்தச் சிறு சமூகங்கள் சாதி வேறுபாடுகளாலும், அடிமை முறையாலும் களங்க மடைந்திருந்தன.” (இந்தியாவைப் பற்றி, ப.108).

என்ற மார்க்ஸின் நிர்ணயிப்புகள் தெளிவுபடுத்துகின்றன. இங்கு மார்க்ஸ் எதிர்பார்த்தது மாதிரி நவீன எந்திரத் தொழில்கள் வந்தும் வளர்ந்தும் சாதீயத்தின் வலிமை அவ்வளவாகச் செயலிழக்கவில்லை என்பது ஆழ்ந்து பரிசீலிக்கத் தக்கதாகும்.

அதைப் போலவே, சமூகக் கூறுகள் ஒவ்வொன்றுக்கும் அடித்தளமாக விளங்குவது பொருளாதாரமே என்பதை நிறுவிய மார்க்ஸ் இந்தியச் சமூகத்தின் சாதீய அமைப்புக்கு அஸ்திவாரமாக இருப்பது குலத்தொழில் முறையே என்று கூறியிருப்பது ஆழ்ந்து சிந்திக்கத் தக்கது. பொருளியல் காரணிகளைவிட கருத்தியல் காரணிகளின் ஆதிக்கமும் தாக்கமும் இந்தியச் சமூகத்தில் அதிகமாக இருந்துவந்துள்ளது என்பதை மார்க்ஸின் கருத்து நிறுவுகிறது. அறிவு வளர்ச்சிக்கான தடைக்கல்லாகச் சாதி உள்ளது என்ற மார்க்ஸின் கணிப்போடு பெரியாரின் விமர்சனம் பெரிதும் பொருந்துகிறது:

“உண்மையில் எனது தொண்டு சாதி ஒழிப்புத் தொண்டுதான் என்றாலும் அது நமது நாட்டைப் பொருத்தவரையில் கடவுள், மதம், சாஸ்திரம், பார்ப்பனர் ஒழிப்புப் பிரச்சாரமாகத்தான் இருக்க முடியும். இந்த நான்கும் ஒழிந்த இடம்தான் சாதி ஒழிந்த இடமாகும்... ஏனெனில், சாதி என்பது இந்த நான்கில் இருந்தும் ஆக்கப்பட்டதே ஆகும். மனிதன் மடையனாக - அடிமையாக ஆக்கப்பட்ட பின்புதான் சாதி புகுத்தப்பட்டதாகும். சுதந்திர உணர்ச்சியும், அறிவும் மடைமைக்கும், அடிமைத்தனத்துக்கும் ஆக்கம் அளித்துச் சாதியை நிலைநிறுத்துவதுதான். சாதி ஒழியாமல் பாதுகாப்பதுதான் கடவுள், மதம், சாஸ்திரம், பார்ப்பனர்கள் என்பவையாகும்” (மேற்கோள், பெரி/சுய/சம : பக் 449-450).

மார்க்ஸ் குறிப்பிடும் இந்தியச் சாதிகளுக்கு அடிப்படையாக விளங்கும் பரம்பரைக் குலத்தொழில் பிரிவினைகள் பெரியார் குறிப்பிடும் கடவுள், மதம், சாஸ்திரம், பார்ப்பனர் ஆகியவற்றால் உருவாக்கப்பட்டது என்பது வரலாற்று உண்மை. சமூக ஒத்திசைவுக்கும் வளர்ச்சிக்கும் ஊறு விளைவிப்பதாகச் சாதி உள்ளது என்பதும் அது அகற்றப்பட வேண்டும் என்பதும் இருவரின் உள்ளக்கிடக்கையாகும். மார்க்சால் ‘பரம்பரைக் குலத்தொழில்’ என்று சுட்டப்படுவதும், பெரியாரால் ‘சாஸ்திரம்’ என்று குறிப்பிடப்படுவதும் வருணாசிரம தரும முறையேயாகும்.

- முனைவர் சு.மாதவன், உதவிப் பேராசிரியர் & தலைவர் தமிழாய்வுத் துறை, இராஜேஸ்வரி வேதாசலம் அரசு கலைக்கல்லூரி, செங்கல்பட்டு.

Pin It