மொழியும் சமுதாயமும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போன்றன. மொழி வளரச் சமுதாயமும் சமுதாயம் வளர மொழியும் பெரிதும் துணை நிற்கின்றன. மொழிவளர்ச்சி என்று குறிப்பிடும்பொழுது ஒரு மொழியில் படைத்தளிக்கப்படும் இலக்கியம், இலக்கணம், புதினம், நாடகம், கவிதை, உரைநடை என்பனவற்றையே குறிப்பிடுவதாகப் பலரும் எண்ணுகின்றோம். ஒரு நிலையில் இவை மொழி வளர்ச்சிக்கு உறுதுணை செய்வன. இவை சமுதாயத்தோடு இணைந்து மக்களைப் பண்படுத்தி நல்வழிப்படுத்தவும் வளர்ச்சிப் பாதையில் செலுத்தவும் துணை நிற்கின்றன. மொழியின் கருத்துப் பரிமாற்றத்திறன் அடிப்படையில் பார்க்கும்பொழுது காலவளர்ச்சியில் ஒரு மொழி எவ்வாறு உலகம் தழுவிய அறிவியல் கண்டுபிடிப்புகளையும் கருத்துகளையும் தன்னுள் அடக்கி மக்களுக்கு வெளிப்படுத்தும் திறனைப் பெற்றுள்ளது என்பதைப் பொறுத்தே மொழி வளர்ச்சி அமைகின்றது. இவ்வடிப்படையில் மொழியின் அக, புற அமைப்பில் ஏற்படும் மாற்றங்களும் பொருள் விரிவும் கலைச்சொல்லாக்கமும் மொழி வளர்ச்சிக்கு உறுதுணை செய்வனவாக உள்ளன.

கலைச்சொல் என்பது மறுபெயர் இடுவது மட்டுமின்றி பொருட்களை மறு ஒழுங்குபடுத்துவதாகவும் உள்ளது என்கிறார் விக்கெல்.books 368கலைச்சொல்லாக்கம் என்பது நமக்குப் புதிதன்று; காலந்தோறும் தமிழில் பிற மொழிச் சொற்களும் கலந்து வந்திருக்கின்றன. புதிய கருத்துகள் மொழியில் புகும்போது அதற்கேற்ற சொற்களை ஆக்கவேண்டிய சூழ்நிலை அக்காலத்திலும் இருந்திருக்கின்றது. சான்றாக, சமயக் கருத்துகள் புகும்போது புதுச்சொற்களும் உருவாக்கப்பட்டன. அறவாழி (தர்ம சக்கரம்) போன்ற சொற்கள் இங்ஙனம் உருவாக்கப்பட்டதே. 12ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு இலக்கிய வளர்ச்சியில் சமஸ்கிருதத்தின் ஆதிக்கம் அதிகமாயிற்று. இக்காலத்தில் ஏராளமான சமஸ்கிருத நூல்கள் தமிழ் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டன. இக்கட்டத்தில் பொதுவாக நோக்கினால் சிறப்புப் பெயர்களே அதிகமாகப் புகுந்துள்ளதைக் காணலாம். தமிழ் மரபு விதிக்கேற்ப ப்ரம்மன்-பிரமனாகவும் இதுபோல கம்பன் காவியத்தில் ராமன்-இராமனாகவும் விபீஷணன்-விபீடணன் ஆகவும் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இங்ஙனம் சங்ககாலம் தொடங்கி இன்றளவும் தமிழ்ச் சமூகத்தினரின் மொழிப் பயன்பாட்டிற்கேற்ப கலைச்சொல்லாக்கங்கள் நிகழ்ந்து கொண்டே வருகின்றன.

கலைச் சொல்லாக்கத்திற்குரிய வளம்

தொடக்கத்தில் கலைச்சொற்கள் உருவாக்கத்தில் மொழிவளம் ஆதாரமாக அமைந்திருந்தது. ஆகையால் தொடக்கக் காலத்தில் பெரும்பாலான சொற்கள் சமஸ்கிருதமயமாக அமைந்திருந்தன. உடல் என்பதற்கு தேகம் என்பதும் முதல் என்பதற்கு ஆதி என்பதும் கை என்பதற்கு கரம் என்பதும் வேதியியல் என்பது இரசாயனமாகவும் இயற்பியல் என்பது பௌதீகமாகவும் பல்கலைக்கழகம் என்பது சர்வகலாசாலையாகவும் இருந்தன. ஆங்கிலத்தின் இடத்தை சமஸ்கிருதம் பிடித்திருந்தது. தூயதமிழ் இயக்கம் மெல்ல மெல்ல வளர்ந்ததால் சமஸ்கிருதச் சொற்கள் தூய தமிழ்ச் சொற்களால் மாற்றப்பட்டன. தமிழ்மொழி வரலாற்றில் குறிப்பாக, தமிழ்க் கலைச்சொற்கள் வரலாற்றில் - இது முக்கியமான ஒரு மொழிக்கொள்கை மாற்றம். (சுந்தரம் இராம, தமிழ் வளர்க்கும் அறிவியல், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பி.லிட், சென்னை, 2009, ப.154)

கலைச்சொல் உருவாக்கத்தின் தொடக்கக் காலத்தில் சமஸ்கிருதம் சொல்லுருவாக்கத்திற்கு ஆதார வளமாகப் பயன்பட்டது. தூய தமிழ் இயக்கத்தின் செல்வாக்கு கலைச்சொற்கள் ஆதாரங்களுக்குத் தமிழையே வளமாகப் பயன்படுத்தியது. ஒன்று பழந்தமிழை அடிப்படையாகக் கொண்டு கலைச்சொற்களை உருவாக்குவது; இரண்டாவது பேச்சுத் தமிழில் ஒரு கலைச்சொல்லுக்கான ஆதாரங்களைத் தேடுவது. இவ்விரு வழிகளிலும் கலைச்சொற்கள் தமிழில் படைக்கப்படுகின்றன. தூய தமிழில் சொற்களை உருவாக்குவதை அரசியல் இயக்கங்களும் தங்களுடைய மொழிக் கொள்கையாகக் கொண்டுள்ளன. எல்லா அறிவுத் துறைகளின் கோட்பாடுகளும் கொள்கைகளும் கல்வியில் தாய்மொழிவழி கிடைக்க வேண்டும் என்பது மொழிக் கொள்கையின் மையப்பகுதி. மேலும் ஒரு மொழி அம்மொழியைப் பேசும் மக்கள் மனங்களைக் காட்டும் கண்ணாடி என்பர் மொழியின் உட்கிடக்கை (The Psychology of Language) எனும் நூலினை எழுதிய பில்லஸ்பரி, மியாடர் (Pillsburry, Meader) எனும் அறிஞர்கள். இவ்வறிஞர்தம் கூற்று ஆங்கில மொழிக்கும் தமிழ்மொழிக்கும் பெருமளவு பொருந்தி வருவதைக் காணலாம். (மொழியும் அதன் பயன்பாடும், வாகரைவாணன், நின்றநெறிதமிழ், 2000, ப.4)

கலைச்சொல் உருவாக்கத்தில் சமூகம், அரசியல், பண்பாடு ஆகியவற்றின் முக்கியப் பங்கு

மனிதன் பயன்படுத்தும் தொடர்பாடல் ஊடகங்களுள் மொழியே மிகவும் முக்கியமானது என மொழியியல் அறிஞர்கள் கூறுவர். காலத்தின் கட்டாயத் தேவைகளுள் மொழி வளர்ச்சியும் ஒன்று. ஏனெனில் மொழி ஒரு சமூக சாதனம். எனவே சமூகத்தில் ஏற்படும் மாற்றங்களும், வளர்ச்சிகளும் மொழியில் பாதிப்பினை ஏற்படுத்தக்கூடியன. இது குறித்து எம்.ஏ.நுஃமான் பின்வருமாறு கூறுவார்.

"மொழி வளர்ச்சி என்பது ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில், ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் தொடர்பால் தேவைகளுக்கு ஏற்ப அச்சமூகத்தின் மொழி பெறும் இணக்கப்பாட்டைக் குறிக்கும். காலம்தோறும் ஏற்படும் சமூக வளர்ச்சி அச்சமூகத்தின் தொடர்பால் தேவை அதிகரிக்கிறது. அதனை ஈடுசெய்யும் வகையில் மொழியும் வளர்ச்சியடைகின்றது." (எம்.ஏ.நுஃமான், பதிப்பாசிரியர், 1993, இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், கொழும்பு, மொழி வளர்ச்சி, இலக்கணத் தூய்மையும் மொழித் தூய்மையும், ப.9)

பொருள்களின் குணாம்சங்கள்

தமிழ் மொழியில் புதுசொல்லாக்கம் எனக் குறிப்பிடும்போது அறிவியலின் துரித வளர்ச்சி பல புதிய சொற்களை ஆக்கியுள்ள தன்மையைக் குறிப்பாகக் கவனிக்க வேண்டும்.

கலைச்சொல் பொருள்களின் குணாம்சக் கூறுகளின் அடிப்படையில் உருவாகுவது.

சைக்கிள் - துவிச் சக்கரவண்டி > ஈருருளி > மிதிவண்டி. இரண்டு சக்கரங்கள் என்பதன் அடிப்படையில் சமஸ்கிருதச் சொற்களைக் கொண்டு கலைச்சொல் உருவாக்கப்பட்டது. சமஸ்கிருதச் சொல் தவிர்க்கப்பட வேண்டும் என்பதனால் ஈருருளி என்பது உருவாக்கப்பட்டது. சைக்கிளின் முக்கியக்கூறு மிதிப்பது என்பதன் அடிப்படையில் மிதிவண்டி என்ற கலைச்சொல் உருவாகியது. இங்குப் பொருளின் தனித்தன்மைக் கூறுகளுள் ஒன்றை அடிப்படையாகக் கொண்டு கலைச்சொல் உருவானது.

கலெக்டர் > மாவட்ட தண்டல் நாயகம் > மாவட்ட ஆட்சித்தலைவர் > ஆட்சியர். பின்னர் ஆங்கிலச் சொல் முதலில் பயன்படுத்தப்பட்டது. முதல் சொல் சமஸ்கிருதத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. தூய தமிழில் கலைச்சொற்கள் உருவாக்கப்படவேண்டும் மொழிக் கொள்கையின் அடிப்படையில் மாவட்ட ஆட்சித் தலைவர் என்ற சொல் உருப்பெற்றது. கலைச்சொற்கள் சுருக்கமாக (brevity) அமைவது நல்லது என்ற கொள்கையின் அடிப்படையில் ஆட்சியர் என்ற சொல் உருவானது.

கலைச்சொல் தேர்வின் அடிப்படை

1. பொருள் தெரிவு, 2. சொற்சுருக்கம், 3.தமிழுணர்வு வெளிப்பாடு, 4.சமுதாய உணர்வு வெளிப்பாடு ஆகியவை கலைச்சொல் தேர்வுக்கு அடிப்படைகளாகும்.

1. பொருள் தெரிவு

ஒரு கருத்தமைவுக்குப் பல கலைச்சொற்கள் இருப்பினும் அவற்றுள் பொருத்தமான சொல்லைத் தரப்படுத்தல், நூலடைவு, நூலோதி, நூற்பட்டியல் என பல கலைச்சொற்கள் இருப்பினும் அதில் நூலோதி என்ற சொல்லே பொருத்தமுடையது.

Anatomy - மனுஷ அங்காதி பாதம், உடற்கூறு, சரீர இயல், உடற்கூறியல், உடற்கூற்றியல், உடற் கூற்றறிவு எனப் பலப்பல கலைச்சொற்கள் இருந்தாலும் உடற்கூறியல் என்னும் சொல்லே தெளிவு நோக்கித் தரப்படுத்தப்பட்டுள்ளது.

2. சொற்சுருக்கம் (எளிமை, சிறியது)

மொழிசார் கொள்கையாகக் கலைச்சொற்கள் சுருக்கமாக இருத்தல் சிறந்தது என்பதன் அடிப்படையில் சொற்கள் சுருக்கப்பட்டன. இதில் தூய தமிழ் இயக்கத்தின் செல்வாக்கு முக்கிய பங்கு ஆற்றியது.

எந்தச் சொல் நாம் பயன்படுத்துவதற்கு எளிமையாகவும் சிறியதாகவும் இருக்கிறதோ அதனை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அல்லது அந்தச் சொல் விரிவாக இருந்தால் அந்தச் சொல்லை எளிமையாக்கிப் பயன்படுத்திக் கொள்கிறோம்.

அ. அஞ்சல் நிலையம் - அஞ்சலகம்

ஆ. மின்சார வாரியம் - மின்வாரியம்

3. தமிழுணர்வின் வெளிப்பாடு

கலைச்சொற்களைத் தேர்வு செய்ய பல்வேறு முறைகளைக் கையாண்டாலும் மொழித் தூய்மை கருதி, தமிழ்ச் சொல்லைத் தேர்வு செய்வதற்கு முன்னுரிமை வழங்க வேண்டும். (இந்நிலைப்பாட்டில் சீனா, ஜப்பான், கொரியா, மங்கோலிய மொழிகள் முன்நிற்கின்றன)

எ.கா: ரசாயனம் - வேதியியல்; பிராணவாயு - உயிர்வளி, நீர்மம், நல்கை, தனிமம், தேர்தல் ஆகியவை புதுச்சொல்லாக்கமாகும்.

புதுச்சொல் படைக்கும்போது மொழியுணர்வு மட்டுமின்றி சமுதாய உணர்வும் இடம்பெறக் காணலாம்.

கலைச்சொல்லாக்கம்

இவ்வமைவு மூன்று வகையான தன்மைகளைக் கொண்டுள்ளது 1) ஒரு பொருள் 2) பொருட் களம் 3) பொருள் வரையறை

ஒரு பொருள்

ஒரு கலைச்சொல்லிற்கு ஒரு துறையில் ஒரு பொருளும் வேறொரு துறையில் இன்னொரு பொருளும் இருக்கலாம். வேலை என்னும் சொல் இயற்பியலில் ஒரு பொருளையும் பொருளாதாரத்தில் வேறொரு பொருளையும் குறிக்கும்.

ஒரு கலைச்சொல் ஒரு கருத்தையோ நிகழ்வையோ விளக்குகிறது. ஊட்டக்குறைவு என்னும் கலைச்சொல் சத்துக்குறைவு, புரதச்சத்து, வைட்டமின் குறைவு, இரும்புச்சத்து ஆகிய தொடர்புடைய பொருள்களை உள்ளடக்குகிறது. இவ்வாறு ஊட்டக் குறைவு எனும் கலைச்சொல்லின் மூலம் அது உள்ளடக்கிய பல்வேறு கருத்துக்களையும், நுட்பங்களையும் விளங்கிக் கொள்கிறோம்.

பொருட்களம்

ஒவ்வொரு கலைச்சொல்லுக்கும் ஒரு பொருள் வரையறை உண்டு. அதுதான் அதற்குப் பொருள். எந்த இடத்தில் அதைப் பயன்படுத்தினாலும் அதே வரையறைக்கு உட்பட்ட பொருள்தான் உண்டு. எனவே கலைச் சொல்லாக்கத்தில் முதன்மையாக இடம் பெறுவது ஒரு கருத்தமைவின் தெளிவான வெளிப்பாடேயாகும். இதை மனத்தில் கொண்டே தொடக்கக் காலம் தொட்டு, தமிழ்க் கலைச் சொல்லாக்கிகள் கலைச் சொற்களை உருவாக்கினார்.

கலைச்சொல்லை உருவாக்கும்போது தமிழ்ச்சொல்லுக்கு முன்னுரிமை தரவேண்டும் என்று கூறினாலும் 19ஆம் நூற்றாண்டில் டாக்டர் சாமுவேல் ஃபிஷ்கீரின் (Samuel Fiskgreen) கலைச் சொற்களைத் தேர்ந்தெடுக்கும் முறைகளைக் கூறும் வழிமுறை தமிழில் உண்டோ என்ற பின் 2) பரிபூரணமான சொல் பெற வழுவும் பொழுது சமஸ்கிருதத்தில் தேடவும் 3) தமிழிலாவது சமஸ்கிருதத்திலாவது காணாதபோது ஆங்கிலத்தில் என்று தெளிவாகக் கூறுகிறார். (நரேந்திரன்.சு., கிறித்தவமும் அறிவியலும், கொற்றவை, 2014, சென்னை, பக்.118) இவரது கலைச்சொல் கோட்பாடு, தமிழுக்கு முதலிடம் கொடுத்தாலும் அக்கால கட்டத்தில் வடமொழி உயர்ந்த மொழி, அறிவியல் மொழி என்ற கருத்தின் காரணமாக வடமொழியையும், ஆங்கிலத்தையுமே பயன்படுத்தியுள்ளார்.

தொடக்கக் காலத்தில் வடமொழி சமய மொழியாக மக்களிடம் ஏற்றம் கொண்டிருந்ததாலும், அறிவியல் அறிவு பெற்றவர்கள் தமிழைவிட வடமொழியறிவு நிரம்பப் பெற்றவர்களாக இருந்ததாலும், இந்நூற்களில் கலைச்சொற்கள் பெரும்பாலும் வடமொழியிலேயே அமைந்தன. மேலும் உயர்சாதிக்காரர்களுக்கே உயர்படிப்பு என்றிருந்தது. இது தவிர இந்திய மொழிகள் அனைத்திலும் அக்காலத்தில் சமஸ்கிருத சொல்லாட்சி இருந்து வந்துள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது. ஆங்கிலேயர் வருகைக்குப் பின்னர் அறிவியல் தொழில்நுட்பம் வளர கல்வியும் வளரத் தொடங்கியது. தொழில் புரட்சிக் காரணமாகவும் 19ஆம் நூற்றாண்டிற்கு முன் எழுதிய அல்லது மொழி பெயர்த்தவர்களில் பெரும்பாலும் பாதிரியார்கள், படிப்பு அந்தஸ்துடைய உயர்சாதி வகுப்பினர் மட்டுமே. எனவே, கலைச்சொல்லை உருவாக்கும் போது தமிழ்ச் சொல்லுக்கு முன்னுரிமை தரவேண்டும் எனக் கருதப்பட்டாலும் தொடக்கக் காலத்தில் சமஸ்கிருதம் செல்வாக்கு பெற்றிருந்தது என்பதே தமிழ்க் கலைச் சொல்லாக்கச் செய்தியாகும். (பல்கலைத்தமிழ், அறிவியல் தமிழ், இராதா செல்லப்பன் (பதிப்), பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி, 2008, ப.205).

அதன்பிறகு 1932இல் சென்னை அச்சுக்குழு, வேதியியல், இயற்பியல் போன்ற 12 துறைகளில் ‘கலைச்சொல்’ பட்டியலை வெளியிட்டது. இக்குழுவினரால் உருவாக்கப்பட்ட கலைச்சொற்கள் வடமொழிச் சொற்களை அதிகம் கொண்டிருந்ததால் எளிய தமிழில் சொற்களை உருவாக்க வேண்டுமென்று 1934இல் சென்னை மாகாண தமிழ்ச்சங்கம் கலைச்சொல் குழுவை அமைத்தது. அது நல்ல தமிழ்க் கலைச்சொற்களை வெளியிட்டது. இக்காலகட்டத்தில்தான் தனித்தமிழ் இயக்கம் வேரூன்றியது. அத்துடன் இந்தி எதிர்ப்பு போராட்டமும் நடைபெற்றது. இதனால் தமிழ் உணர்வு தலையெடுத்ததன் காரணமாக

விஞ்ஞானம் அறிவியலாயிற்று. சரித்திரம் வரலாறாயிற்று. இம்மொழி உணர்வு தமிழில் புதுக்கலைச்சொற்கள் உருவாக வழிவிட்டது. பல சமஸ்கிருத ஆங்கிலச் சொற்கள் மாற்றியமைக்கப்பட்டன. சமஸ்கிருத ஆங்கில மொழியுணர்வுக்கு மேலாகத் தமிழுணர்வு மேலோங்கிய காலம் இது. இதன் மூலம் தமிழில் அறிவு பரப்பும் பணியும் தொடங்கியது.

தற்போது கலைச்சொல் உருவாக்கத்தில் (Tamilization) ஈடுபட்டுள்ளவர்கள் தமிழில் தக்க சொல் கிடைக்காத நிலையில் ஆங்கிலச் சொற்களைத் தற்காலிக நிகழ்வாக ஏற்றுப் பயன்படுத்துகின்றனர். சமஸ்கிருதப் பயன்பாடு (Sanskritization) பெரிதும் குறைந்துவிட்டது. இதற்கு ஓர் காரணம் திராவிடக் கட்சிகள் தமிழ்நாட்டில் ஆட்சியில் இருப்பதேயாகும்.

எ.கா - ஹிர்தயம் - ஹார்ட்டாகி (Heart) பிறகு இருதயம் ஆகி தற்பொழுது இதயம் என்று அழைக்கப்படுகிறது. ஹிர்தயம் > ஹிருதம் >இருதயம் > இதயம்.

ஜுவாலை - சுடர் (Flame) ஆகவும் உலோகம் - மாழை (Metal)யாகவும் மாறிவிட்டது.

நன்னூலும் சமுதாய உணர்வும்

தமிழ்க் கலைச்சொல்லாக்கத்தில் காணப்படும் இம்மொழி உணர்வைத் தொடர்ந்து சமுதாய உணர்வும் இடம்பெறக் காண்கிறோம். மொழி என்பது சமுதாயத்தின் விளைபொருள். சமுதாய நிகழ்வுகளை மொழி எதிரொலிக்கும். இது குறித்து நமது மரபு இலக்கண நன்னூல் சொல்வது என்ன? தகுதி வழக்கு. ஒரு பொருளை அறிவதற்கு உரிய சொல்லால் சொல்வது தகுதி என்று எனக் கருதி வேறொரு சொல்லால் சொல்வது தகுதி என்று நினைத்துக் கூறுதல் வழக்கு எனப்பட்டது. (நன்னூல் இலக்கணம் சொல்லதிகாரம், மணிவாசகர் நூலகம், (2004) மறுபதிப்பு) தகுதி வழக்கு மூவகைப்படும்.

இடக்கரடக்கல்

நன்மக்களிடத்தில் / முன்னிலையில் சொல்லத் தகாத சொல்லை மறைத்து பிற சொல்லால் சொல்வது. எ.கா. மலம் கழுவி வந்தேன் - கால் கழுவி வந்தேன். பீ-ஆப்பீ, பகரவீ. இதுவே இடக்கரடக்கல் எனப்படும்.

மங்கல வழக்கு

மங்கலம் இல்லாத சொல்லை நீக்கி மங்கலமாகச் சொல்வது. எ.கா. சுடுகாடு - நன்காடு, செத்தார் - துஞ்சினார், காராடு (கருப்பு ஆடு) - வௌ¢ளாடு என்பது. கடவுளுக்கு ஏற்றும் விளக்கை அணை என்று சொல்லுதற்குப் பதிலாக Ôவிளக்கை பெரிசு பண்ணுÕ என்று கூறுதல் மங்கல வழக்காகும்.

குழுஉக்குறி

ஒரு கூட்டத்தார் ஏதேனும் ஒரு காரணத்தால் ஒரு சொல்லுக்குப் பதிலாக வேறொரு சொல்லைப் பயன்படுத்தல். எ.கா. பொன் - பறி (தட்டார்); முட்டை - வௌ¢ளை எலுமிச்சைப்பழம், கள் - சொல் விளம்பி (வேடர்) என்பர். இவை யாவும் பொதுமொழியில் காணப்படும் சமுதாய உணர்வின் காரணமாக மொழியில் ஏற்படும் நிலைமைகள் மற்றும் கெடுபிடிகள் காரணமாக தமிழில் பல புதிய சொற்கள் புகுந்துள்ளன. இவை ஒரு குழுவுக்கே புரியும்.

பயங்கரவாதம், போராளி, பெண் போராளி, வண்டு - உளவறியும் ஆளில்லா விமானம், கோள்மூட்டி - கீ-பிளேன், குழுஉக்குறிகளாக இவை பயன்படுத்தப்படினும் இவை புதிய கருத்துப் படிமங்களாகவும் அமைந்துள்ளவை. இவை தருகின்ற அர்த்தப்பாடுகள் இவை வழங்கும் சூழலில் வைத்தே கணிக்கப்படவேண்டியவை. இவை மரபிலக்கணங்கள் காட்டும் மரபிலக்கணங்கள் காட்டும் மொழிக்கும் சமூகத்திற்கும் உள்ள தொடர்பாகும்.

தமிழ் இன உணர்வு

இலங்கையின் இனப்பிரச்சினை தொன்மை மீட்புவாதமாகிய தனித்தமிழ்க் கொள்கைக்கு மீளவும் புத்துயிர் கொடுத்திருப்பதனைத் தமிழ்ப் பிரதேசங்களில் குறிப்பாக வடக்கு கிழக்கில் அதிலும் குறிப்பாக இராணுவ கட்டுப்பாடற்ற பகுதிகளில் நிர்வாக நடைமுறைகளில் காணமுடிகிறது. 1) Bakery - வெதுப்பகம், 2) Bread - வெதுப்பு, 3) Economics - பொருண்மியம், 5) Saloon - முடிதிருத்தகம் (லூயி வலன்ரீனா பிரான்சிஸ், தமிழ் மொழியில் கலை பண்பாட்டுக்களரி, மட்டக்களப்பு, (இலங்கை), பக்.20, 16)

4. கலைச்சொற்களில் சமுதாய உணர்வு

புதிய சமூக விழுமியங்கள் தோன்றியுள்ள இக்காலத்தில் சமூக ஏற்றத்தாழ்வுகளைக் களையவும், பால், இன சமத்துவத்தைப் பேணவும் அடுத்தவர் மனம் புண்படாமல் மொழியை, குறிப்பாகக் கலைச் சொற்களை படைத்துக் கொள்வதும் அவசியமாகிறது. கலைச் சொற்களில் வெளிப்படும் சமூக உணர்வை இப்பிரிவில் காணலாம்.

1. சாதி ஏற்றத்தாழ்வுகளைக் களைதல்

வண்ணான் - சலவைத் தொழிலாளி; அம்பட்டன், பரியாரி - முடிதிருத்துவோன்; கீழ்ச்சாதியினர் - ஒடுக்கப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், மேளக்காரர் - இசை வேளாளர்.

2. உடல், மன ரீதியாகப் புண்படுத்தும் சொற்களைக் களைதல்

குருடர், செவிடர் என்பன சொற்சுருக்கம், பொருள் திட்பம் உடையன என்றாலும் அவற்றை அன்றாட வழக்கில் இழித்தும். பழித்தும் பேசுவதற்குப் பயன்படுத்துவதால் அவற்றை மாற்றி அவை சுட்டும் பொருளைக் கலைச்சொல்லாகக் கொண்டு வழங்கும் நிலை தோன்றியுள்ளது. உடற்குறைகளை நேரடியாகச் சுட்டிக் காட்டாமை.

நொண்டி - முடவன்; ஊனமுற்றோர் - மாற்றுத் திறனாளி; குருடர் - பார்வையற்றோர்; செவிடர் - காதுகேளாதோர்; குஷ்டரோகி - தொழுநோயாளி; குஷ்டம் - பெருநோய், தொழுநோய்; பைத்தியம் - மனநோயாளி, மனநலம் குன்றியோர்; எய்ட்ஸ் - ஏமக்குறைவு நோய்;  Orthopedics - முடநீக்கியல் - எலும்பு இயல், நுடசிகிச்சை, எலும்பு மருத்துவம்; இதுபோல ஆங்கிலத்திலும் Handicapped - Differently abled எனக் கூறப்படுகிறது.

3. கொச்சை வழக்குச் சொற்களை நல்ல (நாகரீக) சொற்களால் வெளிப்படுத்துதல் (Polished way) (Taboo)

மூத்திரம் - சிறுநீர்; கழிச்சல் - வயிற்றுப் போக்கு; யோனி - பிறப்புறுப்பு, புணர்குழாய்.

இலவசம் என்ற சொல்லுக்குப் பதிலாக விலை­யில்லா மடிக்கணினி, விலையில்லா மிதிவண்டி, கட்டணமில்லாப் பேருந்து இவ்வாறு சொற்களைப் படைத்துக் கொள்கிறோம். இது ஒரு வகையான சமுதாய உணர்வை வெளிப்படுத்துகிறது. விலை­யில்லா என்பது விலை மதிப்பற்ற என்ற பொருளைத் தருவதாகவும் உள்ளது. இலவசம் என்பது இனாம், தானம் போன்றவை மதிப்பற்றவை போல் தோன்றுகின்றன. எனவே அவை தவிர்க்கப்படுகின்றன.

பெரியாரின் பெயருக்கு மரியாதை

மரியாதைப் பன்மையை பயன்படுத்தும்போது அவற்றின் பன்னாட்டுப் பொதுமை பாதுகாக்கப்படவில்லை என்றாலும் இலங்கையினர் அறிஞர் பெயர்களை எழுதும்போது மரியாதைப் பன்மையான அர் என்பதை அன்னுக்குப் பதிலாகப் பயன்படுத்துகின்றனர்.

சிமக்கலி - ராமர் விளைவு - smekal - Raman effect - இலிண்டேயம்சர் முறை - Linde - Hangion method (அறிவியல் தமிழ், ச.ஈஸ்வரன், சாரதா பதிப்பகம், சென்னை, பக்.99) தமிழகத்திலும் இத்தகைய போக்கு காணப்படுகிறது. (மு.வரதராசனார், தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்)

பெண்ணியம் - பெண்ணிலை வாதம்

தமிழில் புதிய சொல்லாக்க முயற்சிகளைச் சமுதாய உணர்வுடன் ஏற்படுத்தி வருவதில் பெண்ணியவாத அமைப்புகளும் சிந்தனையாளர்களும் முக்கிய பங்காற்றி வருவதனைத் தற்காலத்தில் காண முடிகின்றது. அதாவது பெண்ணியவாத சிந்தனைகள் முனைப்பு பெற்றுள்ள இக்காலகட்டத்தில் அத்துறை சார்ந்தும் புதிய சொல்லாக்கங்கள் உருவாக்குவதனை அறியலாம்.

(எ.கா) கற்பழிப்பு என்ற சொல்லாக்கம் - வன்புணர்வு, பாலியல் வன்கொடுமை, பாலியல் சீண்டல், பாலியல் வல்லுறவு எனக் குறிப்பிடப்படுகிறது; விபசாரி - விலைமாதர், பாலியல் தொழிலாளி; அலி - திருநங்கை, திருநம்பி, பாலின சார்பற்றோர்; விதவை - கைம்பெண்.

இது தொடர்பாக, மௌ.சித்திரலேகாவின் பின்வரும் கருத்துக்கள் கவனிக்கத்தக்கது. ஒரு சமூகத்தில் புதிய வளர்ச்சிகள் ஏற்படும் போது அவற்றை உள்வாங்கும் வகையில் மொழியில் சொற்கள் உருவாவது வழக்கமாகும். எனினும் அவை உணர்வு பூர்வமாக மனிதராலேயே உருவாக்கப்படுகின்றன. பெண்ணிலைவாத சிந்தனைகள் என்னுள் வளரத் தொடங்கிய காலத்திலிருந்து கடந்த பத்து, பதினைந்து, வருடங்களாக சில புதிய சொற்றொடர்கள் வழங்கி வந்துள்ளன. பெண்ணியம், பெண்ணிலைவாதம் போன்றவற்றைக் குறிப்பிடலாம். பால் வாதம், தந்தையாதிக்கம், ஆணாதிக்கம் போன்றவையும் இத்தகையனவே. (சித்திரலேகா.மௌ., மொழியும் அதிகாரமும், பெண்ணிலை நோக்கிலான சில குறிப்புகள், இளந்தென்றல், 1998, பக்.11, தமிழ்ச் சங்கம், கொழும்புப் பல்கலைக்கழகம்)

இதேபோல ஆங்கிலத்தில் Chairman என்பதற்கு பெண்ணியச் சொல் இல்லாத நிலையில் Chairperson என்று குறிப்பிடப்படுகிறது. இங்கு man என்பது ஆணைக் குறிப்பதால் பால் பொதுமையான சொல்லாகிய Person என்பதால் மாற்றப்படுகிறது. இதே போல கவிஞர் - கவிதாயினி, தொகுப்பாளர் - தொகுப்பாளினி போன்ற எடுத்துக்காட்டுக்களையும் சுட்டலாம்.

வரலாற்றுப் பின்புலங்கள்

அரசு அல்லது நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பு என்பது மையப் பொருள்.  பண்டைய காலத்தில் மன்னர்கள் / வேந்தர்கள் ஆட்சியின் தலைமையில் இருந்தார்கள்.

இந்த மையப் பொருளை மையமாகக் கொண்டு பல்கலைக்கழகத்தின் தலைமைப் பொறுப்பு வகிக்கும் ஆளுநரை, வேந்தர் என்ற சொல் குறிக்கிறது. இணைவேந்தர் என்பது வேந்தருக்கு அடுத்தநிலை என்பதால் துறை சார்ந்த பல்கலைக்கழகங்களின் அமைச்சர் இணைவேந்தர் என்று குறிப்பிடப்படுகிறார். Pro-in favour of, supporting என்று விளக்கம் அளிக்கப்படுகிறது. இந்த நிலையில் இணைந்திருப்பவர்களை இச்சொல் குறிக்கிறது. Vice-having a position second or importance to the position mentioned - வேந்தர் என்பதோடு துணை என்பது இணைந்து துணைவேந்தர் என்ற சொல் உருவாக்கப்பட்டது. மையப் பொருளோடு இச்சொற்கள் தொடர்பு உடையனவாக இருப்பினும் சொல்லின் உருவாக்கம் நிலப்பிரபுத்துவ / மன்னராட்சியின் சாயலோடு உருவாக்கப்பட்டுள்ளது. பட்டப் பெயர்கள் பலவற்றில் இதன் சாயலை நாம் காண இயலும். புன்னகை மன்னன் / காதல் மன்னன், தளபதி போன்ற சொற்களை நாம் காட்டலாம். ஜனநாயகக் காலகட்டத்தில் நாம் வாழ்ந்தாலும் நம் வரலாற்றுப் பின்புலங்கள் நம்மீது ஆதிக்கம் செலுத்துகின்றன. மன்னர் பரம்பரை அடிப்படையில் நாம் மந்திரி / அமைச்சர் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறோம். இது ஜனநாயகப் போக்கைக் காட்டுகிறது. இது நாம் அரசியலில் ஆங்கிலேயர் ஆட்சியை முன்மாதிரியாகக் கொண்டதைக் காட்டுகிறது. மேதகு என்ற பழைய சொல் Excellency என்ற புதுப் பொருளில் பயன்படுத்தக் காண்கிறோம். இங்கு அரசியல் செல்வாக்கு உள்ளதை நாம் பார்க்க முடிகின்றது.

Sub-way என்பதற்கு இணையாக சுரங்கப்பாதை என்ற சொல் உருவாக்கப்பட்டுள்ளது. சுரங்கப்பாதை என்பது அரசர்கள் போர்க்காலத்தின்போது தப்பிச் செல்வதற்குப் பயன்பட்டது.

இன்றைய காலகட்டத்தில் இது பொருந்தாது, மன்னராட்சியின் செல்வாக்கு நம்மீது ஆதிக்கம் செலுத்துவதை இது நமக்குக் காட்டுகிறது. தமிழ் மொழியை ஒரு பொக்கிஷமாக நோக்கக்கூடாது. இத்தகைய மனப்பான்மை தமிழை சமஸ்கிருதத்தின் நிலைக்கு இட்டுச் செல்லும். இவற்றுக்கு மாறாக மொழியைப் பயன்பாட்டு நோக்கில் அணுக வேண்டும். சமகாலப் பயன்பாட்டுக்குரிய வகையில் மொழியை சமுதாய உணர்வுகளுக்கு ஏற்ப சீர்திருத்துவது அல்லது மாற்றியமைப்பதைப் பற்றி சிந்தித்துக் கொண்டே இருக்க வேண்டும். ஏனெனில் மொழி என்பது சமுதாயத்தின் விளைபொருள்.

முடிவுரை

தொகுத்து நோக்குமிடத்து பல்வேறு சூழ்நிலைகளின் காரணமாக தமிழ்மொழியில் புதிய சொல்லாக்கம் சமுதாய உணர்வுடன் இடம்பெற்று வருவதனை நம்மால் காணமுடிகிறது. இச்சொல்லாக்கம் இனியும் பெருகுவதோடு இன்னும் புதுப்புது வடிவப் பண்புகளையும் எடுக்கக்கூடும். தமிழின் வளர்ச்சிக்கு இப்போக்கு அவசியமானது. எளிமையாக்கப்பட்ட வடிவத்தில் அவை பயன்படுத்தப்படுவது அதன் நீட்சிக்கு உதவும். அப்போதுதான் அவை நிலை பெறும். ஒரு மொழியின் வரலாறு அம்மொழியைப் பேசும் மக்களுடைய வரலாற்றுடன் மிக நெருக்கமாகப் பிணைந்திருப்பதையும் தமிழர்களுடைய வரலாற்றில் நிகழ்ந்த சமூக அரசியல் நிகழ்வுகளையும் அவர்கள் பேசும் மொழியிலும் தாக்கத்தை ஏற்படுத்தியதையும் இப்புதுமையாக்கத்தின் மூலம் அறியமுடிகிறது.

பொது மொழியில் காணப்படும் சமுதாய உணர்வின் காரணமாக மொழியில் ஏற்படும் தாக்கங்களைப் பார்க்கும்போது மொழியும் சமுதாயமும் பின்னிப் பிணைந்துள்ளதையும், அவை ஒன்றை ஒன்று பாதிப்பதையும் அத்துடன் சமூகங்களிடையே மொழி வழக்குகள் நிலவுவதையும் காணமுடிகிறது. முடிவாக, கலைச் சொல்லாக்கத்தில் சமுதாய உணர்வு மேம்படும்போது மொழிவழி சமூகத்தைப் பண்படுத்த முடியும் என்பது தெளிவு.

நோக்கீட்டு நூல்கள்

1.            நரேந்திரன்.சு., கிறித்தவமும் அறிவியலும், கொற்றவை வெளியீடு, (2014), சென்னை - 17.

2.            சுந்தரம்.இராம., தமிழ் வளர்க்கும் அறிவியல், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடு, சென்னை.

3.            நன்னூல் இலக்கணம் சொல்லதிகாரம், மணிவாசகம் நூலகம், 2004 (மறுபதிப்பு)

4.            இன்டர்நெட் தமிழ் : 2000 தொகுப்பாளர் வாகரை வாணன். கலைப் பண்பாட்டுக் களரி, மட்டக்களப்பு (1999)

5.            ஈஸ்வரன் ச., அறிவியல் தமிழ், சாரதா பதிப்பகம், சென்னை (200).

6.            செல்லப்பன்.இராதா, பல்கலைத் தமிழ், அறிவியல் தமிழ், பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி, 2008

(கோலாலம்பூரில் நடைபெற்ற 11வது உலகத் தமிழ் மாநாட்டில் வாசித்தளித்த கட்டுரை)

- டாக்டர் சு.நரேந்திரன், எழுத்தாளர், சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக சிறப்புநிலைப் பேராசிரியர்.

Pin It