நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர்கள் ஒவ்வொரு பனுவலும் தனித்தனியானவை; நிகழ்த்துதலின் போது பனுவல் மாறிக்கொண்டே இருக்கும் என்று சொல்லுகிறார்கள். அதாவது கலை நிகழ்த்தும் கலைஞன் நிகழ்த்துதலின் போது அன்றைய மனோதர்மப்படி பாடுவது விளக்கம் கூறுவது உரையாடுவது என்பது சகஜமாக நடக்கும்.

இதனால் ஒவ்வொரு நிகழ்ச்சிகளிலும் கொஞ்சமாவது வேறுபாடு இருக்கும். இந்த வேறுபாடு பார்வையாளர்கள் அல்லது ரசிகர்களின் மனநிலை, நிகழ்ச்சி நடக்கும் இடம், கோவிலைச் சார்ந்தவர்களின் வேண்டுகோள் ஆகியவற்றின் அடிப்படையில் அமையலாம்.

இது ஒரு புறம் இருந்தாலும் சாதி அரசியல், உள்பிரிவு அரசியல் காரணமாக கதைப்பாடல்களிலும் நிகழ்த்துக் கலைகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றன. இதை ஒரு கருதுகோளாகக் கொண்டு பார்க்க முடியும். இதற்குக் கதைப்பாடல்கள் வழி சான்றுகள் தேட முடியும்.

வில்லிசை நிகழ்ச்சியில் பாடப்படும் சமூகக் கதைபாடல்களில் முத்துப்பட்டன் கதைக்கு முக்கிய இடம் உண்டு. பிராமண இளைஞன் இரண்டு சக்கிலியப் பெண்களைத் திருமணம் செய்கிறான். தன் மனைவிகளின் இனம் காக்க திருடர்களுடன் சண்டை போடுகிறான்; அதனால் கொல்லப்படுகிறான்; வழிபாடு பெறுகிறான்.

இந்தக் கதைப்பாடலை முத்தையா என்பவர் முதலில் வெளியிட்டார் (1921). பின்னர் ராமலிங்க குருக்கள்(1932) மு.பெருமாள் நாடார் (1936) தம்பையா நாடார் (1942) சங்கு நூலகத்தார் (ஆ. இ) ஆகியோர் வெளியிட்டுள்ளனர். இந்தப் பதிப்புகள் வில்லிசைக் கலைஞர்களுக்கு உரியது. நா.வானமாமலை மதுரை பல்கலைக்கழகம் வழியே ஆராய்ச்சிப் பதிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் (1971). tamil drama 705இந்தப் பதிப்புகள் எல்லாவற்றிலும் முத்துப்பட்டன் ஆரிய நாட்டு பிராமணன் என்பதும் செங்கோட்டை காட்டுப்பகுதியில் வாழ்ந்த வாலப்பகடை (சக்கிலிய சமூகம்) என்பவனின் இரண்டு பெண் மக்களை (பொம்மக்கா, திம்மக்கா) விரும்பி மணந்தான்.

 இதன் பிறகு முத்துப்பட்டன் தன்னைச் சக்கிலியர் சமூகத்திற்குரிய பழக்கவழக்கத்திற்கு மாற்றிக்கொண்டான். இந்தக் கதைப்போக்கு ஏழு பதிப்புகளிலும் ஒரே மாதிரியாக உள்ளது. ஆனால் முத்துப்பட்டன் வழிபாடு பெறும் குறிப்பிட்ட சில கோவில்களில் வில்லிசை நிகழ்ச்சியில் கதையின் சில நிகழ்ச்சிகள் மாற்றப்பட்டுள்ளன. இவை வாய்மொழி வடிவில் உள்ளன.

 முத்துப்பட்டன் கதையின் இந்த மாற்றத்தை நா.வானமாமலை தான் முதலில் சொல்லுகிறார். முத்துப் புலவர் பாட்டின்படி முத்துப்பட்டனின் மனைவிகள் இருவரும் பிறப்பினால் சக்கிலியப் பெண்கள் அல்லர். ஒரு பிராமணனின் மனைவி இரட்டைக் குழந்தை பெற்றாள். அப்போது அவளது கணவன் காசிக்குச் சென்று இருந்தான். அதனால் அந்தப் பெண் இரண்டு குழந்தைகளையும் காட்டிலே விட்டுவிட்டாள்.

அந்தக் குழந்தைகளை தற்செயலாகக் கண்ட வாலப்பகடையும் அவனது மனைவியும் வீட்டுக்கு எடுத்துச் சென்றனர். வளர்த்தனர். ஆகவே பொம்மக்காவும் திம்மக்காவும் உண்மையில் பிறப்பால் பிராமணப் பெண்கள். அதனால் தான் பேரழகிகள் ஆக இருந்தனர் என்று வில்லுப்பாட்டு புலவன் வர்ணனையோடு பாடினார்.

இப்படியான மாற்றத்திற்கு உரிய காரணத்தை முத்துப் புலவர் வானமாமலையிடம் சொல்லி இருக்கிறார். பாபநாசம் சொரிமுத்து அய்யன் கோவிலில் உள்ள முத்துப்பட்டனின் கோவில் விழாவில் பதிவாக பாடுகின்றவர் முத்துப் பிள்ளை மூலக்கதையை அப்படியே பாடுவதைக் கோவிலுக்கு வந்த உயர் ஜாதிக்காரர்கள் விரும்பவில்லை. அவர்கள் கதையை மாற்றிப் பாடச் சொல்லி இருக்கின்றார்கள். அதனால் கதையை மாற்றியதாக அவர் சொன்னாராம்.

நாஞ்சில் நாட்டு வில்லிசைப் புலவர் புன்னார் குளம் கோலப்பபிள்ளையின் மகனை 1984 ல் நான் சந்தித்தபோது முத்துப்பட்டன் கதை கையெழுத்துப் பிரதி ஒன்றைக் காட்டினார். அவரது வீட்டில் வைத்து அதைப் படிக்கச் சொன்னார். படித்தேன். அதில் பொம்மக்காவும் திம்மக்காவும் செங்கோட்டை பிராமணப் பெண்ணுக்கு பிறந்தவர்கள்; வாலப் பகடையால் வளர்க்கப்பட்டவர்கள் என்று இருந்தது.

இந்த மாற்றத்தை கோலப் பிள்ளை குழப்பம் இல்லாமல் செய்திருக்கிறார். கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை முத்துப்பட்டன் கோவில் கொடை விழாவின் போது அந்த ஊர் பார்வையாளர்கள் சொன்னதன் காரணமாக அந்த மாற்றத்தை செய்ய வேண்டி வந்திருக்கிறது.

பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப இப்படியான மாற்றத்தைச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் வில்லிசைப் புலவர்கள் இருந்தார்கள். அறுபதுகளில் இந்த நிலை வந்துவிட்டது. மூலத்தில் நிகழ்ந்த மாற்றம் கோவிலைச் சார்ந்த மக்களின் ஜாதி அல்லது பார்வையாளர்களின் ஜாதி அடிப்படையில் அமைந்திருந்தது.

அச்சில் வந்த முத்துப்பட்டன் கதையின் ஏழு பதிப்புகளிலும் இந்த மாற்றம் இல்லை. இங்கு பார்வையாளர்கள் அல்லது கோவிலைச் சார்ந்தவர்கள் முன்னிலைப் படுத்தப்படுவதால் மாற்றம் ஏற்பட வேண்டிய சூழ்நிலை உருவானது. மூலத்தில் இந்த மாற்றத்தைப் பதிப்பாசிரியர்கள் செய்யவில்லை என்பது முக்கியமான செய்தி.

மதுரை வீரன் என்னும் தெய்வம் தமிழகத்தில் சேலம், திருச்சி, செங்கல்பட்டு, ராமநாதபுரம், மதுரை என்னும் மாவட்டங்களில் பரவலாக வழிபாடு பெறுகிறது. வேளாளர் உட்பட எல்லா ஜாதியினரும் மதுரை வீரனை வழிபடுகின்றனர். இந்த தெய்வம் முக்கிய தெய்வமாகவும் துணைத் தெய்வமாகும் வழிபாடு பெறுகிறது.

 காசியில் இருந்த துளசி என்னும் மன்னனுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அது கொடி சுத்திப் பிறந்ததால் நாட்டுக்கு கேடு என்று ஜோதிடன் சொன்னான். அவனது ஆலோசனைப்படி அரசன் அந்தக் குழந்தையைக் காட்டில் விட்டான். குழந்தையை ஒரு நாகம் பாதுகாத்தது. ஒரு சமயம் குழந்தைப்பேறு இல்லாத சக்கிலியர் சாதியினரான ஒருவரும் அவரது மனைவியும் காட்டு வழி வந்த போது குழந்தையைக் கண்டு எடுத்து வளர்த்தனர்.

குழந்தைக்கு வீரப்பன் எனப் பெயரிட்டனர். அவன் வளர்ந்து இளைஞனாக வீரனாக ஆனான், ஒரு சமயம் பொம்மனின் மகள் பொம்மியைக் காதலித்து கவர்ந்து சென்றான். மதுரை அரசனின் வேண்டுகோள் படி மதுரை சென்றான். அங்கு திருடர்களின் தொல்லையை ஒழித்தான்.

ஒருமுறை வெள்ளையம்மாள் என்ற தேவதாசியைக் கவர்ந்து சென்ற போது காவலரிடம் அகப்பட்டான். அரசன் வீரனை யார் என அறியாமலே கொலை செய்ய உத்தரவிட்டான். வீரன் கொலைப்பட்ட பின்பு மதுரை அரசன் மீனாட்சி அம்மனை வேண்டி மதுரை வீரனுக்கு உயிரைப் பெற்று கொடுத்தான். ஆனால் மதுரை வீரன் தன்னை மாய்த்துக்கொண்டான்.

மதுரை வீரன் கதையில் சக்கிலியனால் வளர்க்கப்பட்ட வீரன் நாயக்க ஜாதிப் பெண்ணையும் மணந்தான். கோவில் தேவதாசி பெண்ணை விரும்பினான். இதுவே அவன் கொலைப்படுவதற்குக் காரணம் ஆயிற்று. இந்தக் கதையை ஆராய்ந்த கோ.கேசவன், வானமாமலை போன்றோர் மதுரை வீரன் உண்மையிலேயே சக்கிலியனுக்குப் பிறந்தவன். அதனால் நாயக்க பெண்ணை மணந்தது முரண்பாடாயிற்று என்கின்றனர்.

மதுரை வீரன் அம்மானை 19 ஆம் நூற்றாண்டில் 1863, 1869, 1877, 1880, 1882, 1883, 1888, 1892 ஆகிய ஆண்டுகளில் பல்வேறு பதிப்பாசிரியர்களால் பதிப்பிக்கப்பட்டு உள்ளது. இவை தவிர வீரையன் அம்மானை (1879) மதுரை வீர சுவாமி பராக்கிரமம் (1899) மதுரை வீரன் நாடகம் (1928) மதுரை வீரன் பூசாரி பாட்டு (1936) என பல்வேறு வடிவங்களில் இக்கதை வந்திருக்கிறது. இந்தப் பதிப்புகளில் மதுரை வீரனின் பூர்வீகம் சக்கிலிய ஜாதி என்று கூறப்படவில்லை

மதுரை வீரன் கதை உடுக்கடிப்பாட்டு, பம்பை நாடகம், தெருக்கூத்து ஆகிய நிகழ்த்துக்கலை வடிவங்களில் பாடப்படுகின்றது. இக்கலை வடிவங்களிலும் மதுரை வீரன் சக்கிலிய ஜாதியில் பிறந்தவன் என்று கூறப்படவில்லை. வாய் மொழிமரபிலும் அப்படித்தான் என்று மதுரை வீரன் கதையை விரிவாக ஆராய்ந்த நீலமேகமும் அப்படியே குறிப்பிடுகிறார் (2005).

 மதுரை வீரன் வீரபத்திரனின் மறுபிறவி, வீரபாகு தேவரின் மறுபிறவி என்று கற்பிக்கும் கதைகள் அம்மானை வடிவில் வந்துள்ளன இந்த கற்பிதங்கள் 19ஆம் நூற்றாண்டு ஆரம்பத்தில் ஆரம்பித்துவிட்டது. மதுரை வீரன் வழிபாடு பரவலாக ஆரம்பித்த காலகட்டத்தில் இது போன்ற கதைகள் உருவாக்கப்பட்டு இருக்கலாம். இதனால் மதுரை வீரனை வழிபடுகின்றவர்களுக்குச் சாதிரீதியான பிரச்சனை வரவில்லை.

தமிழகத்தில் மதுரை வீரன் எல்லா ஜாதியினராலும் வழிபடப்படுகிறான். ஒரு வகையில் சக்கிலியர் மதுரை வீரனை பெரிய அளவில் வழிபடவில்லை. மதுரை வீரன் கதை திருமலை நாயக்கர்(1623-1659) காலத்தில் நடந்ததற்குச் சான்றுகள் உள்ளன. மதுரை வீரன் உயர் குலத்தவனாக காட்டும் முயற்சி ஆரம்பகாலத்தில் வழிபட்ட பக்தர்களின் விருப்பத்தால் ஏற்பட்டிருக்கலாம்.

காத்தவராயன் அம்மானை 19 ஆம் நூற்றாண்டு கடைசியில் அச்சில் வந்துவிட்டது. 206பக்கங்கள் 7460 வரிகள் கொண்ட இந்த அம்மானை பல பதிப்புகளைக் கண்டிருக்கிறது. நா.வானவாமலை 1971 இல் மதுரை பல்கலைக்கழகம் வழி காத்தவராயன் கதையை வெளியிட்டு இருக்கிறார். இதில், 1802 வரிகள்தாம் உள்ளன. இது நிகழ்த்துக்கலைக் கலைஞர் ஒருவர் பாடியதைக் கேட்டு எழுதியது. மூல அம்மானை கதைப்பாடலில் உள்ள பல செய்திகள் இப்பதிப்பில் இல்லை.

காத்தவராயன் கதை நிகழ்த்துக் கலையாகவும் நடக்கிறது. திருச்சி பகுதிகளில் கிராமங்களில் கழுவேற்ற விழா கூத்து என்னும் பெயரில் நடக்கும் இக்கலை சடங்காகவும் கூத்தாகவும் நடக்கிறது. இதில் உள்ள கதைப்பகுதி மூல அம்மானையிலிருந்து வேறுபட்டது. இந்தக் கூத்து சடங்கில் இருந்து பிரிக்க முடியாதது. ஆகவே இங்கு காத்தவராயன் சடங்கு சார்புடைய தெய்வமாகவே காட்டப்படுகிறான். இவன் காளி அம்சமான ஒரு பெண் தெய்வத்தின் மகனாக வருகிறான்.

 நிகழ்த்துக் கலைகளில் பாடப்படும் பாடல்களில் காத்தவராயன் தோற்றம் பற்றிய செய்தி மதுரை வீரன் அம்மானைக்கும் பொருந்தும். காத்தவராயன் முந்திய பிறவியில் தேவலோகத்தில் சிவனின் தொண்டனாக பணியாளனாக இருக்கிறான். ஒரு வகையில் தேவாரம் பாடிய சுந்தரனின் கதை போன்று இக்கதை உள்ளது. காத்தவராயனை தெய்வ அம்சமாகக் காட்டும் முயற்சி அம்மானை காலத்தில் ஆரம்பித்து விட்டது.

காத்தவராயனை அரசன் விடுதலை செய்வதாக அறிவித்தபோது அவன் தானாகக் கழுவில் ஏறிக் கொள்ளுகிறான். இறக்கிறான். கதைப்பாடலின் நாயகன் தான் விரும்பினால் மட்டுமே இறக்க முடியும் என்பது கதைப்பாடலின் பொதுத்தன்மையாகக் கூறலாம். எடுத்துக்காட்டாக காத்தவராயன் கதை, உடையார் கதை. தேவசகாயம் பிள்ளை நாடகம் எனச் சில கதைப்பாடல்களைக் கூறலாம்.

காத்தவராயன் பிராமணப் பெண்ணை மணந்த கதையில் ஏற்பட்ட மாற்றமே அவனுக்குத் தெய்வத்தன்மையைக் கொடுக்க வேண்டிய சூழ்நிலையை உருவாக்கியது. திருச்சி பகுதிகளில் உள்ள காத்தவராயன் கோவில்கள் (முக்கொம்பு, வடகரை) பதினெட்டாம் நூற்றாண்டுக்கு முற்பட்டது என்கின்றனர். இதனால் இதற்கு முன்பே காத்தவராயன் கதையில் மாற்றம் ஏற்பட்டு விட்டது என்று ஊகிக்கலாம். காத்தவராயன் பிராமணப் பெண்ணுக்குப் பிறந்து சுவர்க்க உலகத்தில் வாழ்ந்தவன் என்ற புனைவு முதல் பதிப்பு அம்மானையில் உள்ளது.

காத்தவராயன் கோவில்களில் ஆரியமாலாவும் அவனது இன்னொரு மனைவியும் சின்ன சாம்பான் தொட்டி கட்டி போன்றோர்களும் வழிபடு தெய்வமாக உள்ளனர். காத்தவராயன் கதை 1958 ல் இதே பெயரில் திரைப்படமாக வந்திருக்கிறது. 1941-ல் ஆரியமாலா என்ற பெயரிலேயே ஒரு திரைப்படம் வந்தது.

 சிதம்பர நாடார் கதை வில்லிசை நிகழ்ச்சியில் பாடப்படுகிறது. சிதம்பர நாடார் வட்டார ரீதியான தெய்வமாகவே கருதப்படுகிறார். கன்னியாகுமரி மாவட்டம் பறக்கை ஊரை அடுத்த மதுசூனபுரம் என்னும் குக்கிராமத்தில் இவருக்கு வழிபாடு நடக்கிறது. இவரது கதை முந்திய கதைகளிலிருந்து சற்று வேறுபட்டது.

 சிதம்பர நாடார் புத்தளம் பகுதியில் வரிப் பிரிக்கும் முன்சீப் என்னும் பதவியில் இருந்த இளைஞர் மந்திரவாதம் அறிந்தவர். ஒருமுறை பிராமணச் சுடுகாடு வழியாக இவர் சென்றார். அப்போது அங்கு ஒரு பெண்ணின் பிணத்தை எரிப்பதற்காகக் கொண்டு வந்தார்கள். பிணத்தை விறகின் மேல் அடுக்கியதும் எல்லோரும் சென்று விட்டனர். ஒன்றிரண்டு பேர் மட்டும் இருந்தனர். அவர்களிடம் சிதம்பர நாடார் அவள் இறந்த காரணத்தைக் கேட்டார். அவர்கள் அவள் பாம்பு கடித்து இறந்ததாகச் சொன்னார்கள். கொஞ்ச நேரத்தில் அந்த மனிதர்களும் சுடுகாட்டை விட்டு சென்று விட்டனர்.

 சிதம்பர நாடார் சுடுகாட்டில் தனியாக நின்றார். அந்த இளம் பெண்ணின் பிணத்தை எடுத்து தரையில் வைத்தார். அவளைப் பாம்பு தீண்டிய கால் பாதத்தை பார்த்தார். அவளைக் கடித்த பாம்பை தன் மந்திர மையைப் போட்டு வரவழைத்தார். அவள் உடம்பில் இருந்த விஷத்தை உறிஞ்சச் செய்தார். அவள் உயிர் பெற்றாள். அவர் நடந்த கதையைக் கூறி உன் வீட்டிற்கு நீ செல்லலாம் என்றார். அந்தப் பெண்ணோ உம்மை விட்டு நான் பிரிய மாட்டேன். நீரே என் கணவர் என்றாள். அவர் அவளைத் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.

சிதம்பர நாடார் அந்த பிராமணப் பெண்ணை முறைப்படியாக திருமணம் செய்து கொண்டார். கொஞ்ச நாளில் அவள் கர்ப்பமானாள். இதை அறிந்த பறக்கை பிராமணர்கள் அரசரிடம் முறையிட்டனர். அரசன் அவரை தூக்கில் போட உத்தரவிட்டான். சிதம்பர நாடார் தன் பக்க நியாயத்தை ஒரு ஆள் மூலம் அரசனுக்குச் சொல்லி அனுப்பினார். அரசன் தன் தீர்ப்பை மாற்றினான். சிதம்பர நாடாரைத் தூக்கிலே போட வேண்டாம் என்று உத்தரவிட்டான். அந்த உத்தரவைக் கொண்டு வந்த தூதன் வரும் முன்பே சிதம்பர நாடாரைத் தூக்கிலே போட்டுவிட்டனர்.

அவர் இறந்தபின் அவரது மனைவியான பிராமணப் பெண்ணும் அவரை எரித்த சிதையில் விழுந்து தன் பிராணனை விட்டாள். இருவரும் தெய்வமானார்கள்.

சிதம்பர நாடார் கதை அச்சில் வந்துள்ளது (1982). ஏட்டு வடிவிலும் கையெழுத்து வடிவிலும் உள்ளது இந்தக் கதையை நிகழ்த்திய கலைஞர் ஒருவர் சிதம்பர நாடாரைக் கொல்ல பிராமணர்களுடன் பறக்கை ஊர் வேளாளர்களும் சேர்ந்து கொண்டார்கள் என்று பாடினார்.

 இப்படியான ஒரு செய்தி மூல ஒலையில் இல்லை. அச்சில் வந்த நூலிலும் இல்லை. பார்வையாளர்களில் ஒருவர் இது தவறான தகவல் என்று சுட்டிக்காட்டிய பின்பு வில்லிசைப் புலவர் அப்படி பாடியதை நிறுத்திக் கொண்டார். முதலில் அப்படி பாடியதற்கு உள்ளூர் ஜாதி அரசியல் காரணம் என்பதை வில்லிசைப் புலவர் முத்துசாமி என்னிடம் சொன்னார்.

 சுடலை மாடன் என்ற நாட்டார்தெய்வம் தென் மாவட்டங்களில் பரவலாக வழிபாடு பெறுகிறது. இது வில்லிசை நிகழ்ச்சிகளிலும் பாடப்படுகிறது 19 ஆம் நூற்றாண்டு இறுதியில் இது அச்சில் வந்துவிட்டது. தொடர்ந்து பத்துக்கு மேல் பதிப்புகள் உள்ளன. காவ்யா சண்முகசுந்தரம் ஆராய்ச்சி பதிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார். இது பரவலாக அறிந்த கதைப்பாடல்.

 சுடலை மாடன் வேள்வியில் பிறந்து தெய்வமாகி தனது தீவிரமான சக்தியை வெளிப்படுத்தி பல இடங்களில் வழிபாடு பெறுகிறான். மலையாள தேசத்தில் மந்திரவாதிகளைப் பயமுறுத்தி கர்ப்பிணிப் பெண்ணை பலி வாங்குகிறான். பின் அங்கிருந்து புறப்பட்டு செங்கோட்டை வழி வந்து செம்போடை என்ற ஊருக்கு வருகிறான். அங்கே ஒரு சுனையில் சாம்பவர் ஜாதி பெண்ணொருத்தி அரை ஆடையுடன் குளித்துக் கொண்டிருக்கிறாள். அவளது பருத்த மார்பகத்தைப் பார்த்த சுடலைமாடன் மீனாக மாறி சுனையிலேயே குதித்து அவளை அணைக்கிறான். இந்த நிகழ்ச்சி வில்லிசை கதைப் பாடல்களைப் பாடுகின்றவர்களுக்குச் சங்கடத்தை ஏற்படுத்தியது.

ஆரிய சாம்பான் என்பவன் சாம்பவர் ஜாதியைச் சார்ந்தவர். இந்த சாதி ஒடுக்கப்பட்ட இன வரிசையில் வருவது. இவர்கள் தென் மாவட்டத்தில் மட்டுமே உள்ளனர். வில்லிசைப் பாடல்களும் தென் மாவட்டத்தில் மட்டுமே பாடப்படுகிறது. வில்லிசைக் கலைஞர்கள் ஆரியச் சாம்பான் என்ற பெயரை ஆரியன் என்று சொல்லுகின்றனர். பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை இப்படிச் சொல்லும் வழக்கம் இல்லை.

கதைப்பாடல்களான வில்லிசைப் பாடல்களை நிகழ்த்துகின்ற போதும் வாய்மொழிக் கதைகளை நிகழ்த்துகின்ற போதும் பனுவல்களில் மாற்றத்தைக் கொண்டு வருவது என்னும் போக்கு அண்மைக் காலத்தில் உருவானது என்று சொல்ல முடியாது.

பிராமணன் சக்கிலியரை மணம் செய்தது (முத்துப் பட்டன் பிராமணப்பெண்ணை நாடார் மணந்தது (சிதம்பர நாடார் கதை) பிராமணப் பெண்ணை பறையர் மணந்தது (காத்தவராயன் கதை) சக்கிலியர் நாயக்கப் பெண்ணை மணந்தது (மதுரை வீரன் கதை) என்னும் இந்தக் கதைப்பாடல்கள் பிரச்சனை நிகழ்த்துகின்ற போது தான் வந்தது. பனுவலாகவோ ஏட்டு வடிவிலோ அச்சுப் புத்தக வடிவிலோ இருப்பதில் அப்போது அதிக சிக்கல் வரவில்லை. நிகழ்த்துகின்ற போது பனுவலின் வடிவம் மாறி இருக்கின்றது. பார்வையாளராக அமர்ந்திருக்கும் ஜாதியினரின் செல்வாக்கைப் பொறுத்து வடிவம் மாற வேண்டிய சூழல் வந்திருக்கிறது.

பிரச்சனைக்குரிய ஜாதியைச் சார்ந்தவரை பிராமணர் அல்லது அரச குலத்தவராக மாற்றுவது அல்லது அவர்களின் பூர்வீகத்தை புராணத் தன்மையுடன் வர்ணிப்பது போன்ற காரியங்கள் நிகழ்த்துபவனுக்கு ஒரு பாதுகாப்பைக் கொடுத்து விடும். இதனால் பார்வையாளன் அல்லது பக்தனை திருப்திப் படுத்த முடிந்தது.

பெரும்பாலும் மூலப் பனுவல்கள் நிகழ்த்துதலின் போது தான் மாற்றப்பட்டன பனுவல்ககளை நிகழ்த்திக் காட்டும் கலைகள் மட்டுமல்ல, வேறு நிகழ்ச்சிகளிலும் இந்தப் பிரச்சனை இருந்திருக்கிறது.   கரகாட்டத்தின் துணை ஆட்டங்களாக இருந்த இடையன் இடைச்சி கதை, கருப்பாயி கூத்து, கல்யாண காமிக், குறவன் குறத்தி ஆட்டம், பேயாட்ட காமிக்கு, வண்ணான் வண்ணாத்தி கூத்து ஆகிய கலைகளில் சில மறைந்துவிட்டன. இதற்கும் சாதிரீதியான சிலவற்றில் வாய்மொழி வடிவம் மாறிவிட்டன.

- அ.கா.பெருமாள்

Pin It