கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

‘திராவிடம் / திராவிடர்’ என்ற சொல்லானது இந்திய கலாச்சார - பண்பாட்டு வெளியினில் பரவலாக பண்டைய காலம்தொட்டு பயன்படுத்தப்பட்டு வந்துள்ளதனை பல்வேறு வரலாற்று, இலக்கியத் தரவுகள் நமக்கு உணர்த்துகின்றன. குறிப்பாக தமிழக கலாச்சார பொது வெளியினைப் பொருத்தமட்டில் ‘திராவிடம் / திராவிடர்’ என்ற சொல்லானது கலாச்சார ரீதியிலும், பண்பாட்டு ரீதியிலும் ஒரு தனித்த இடத்தினைப் பெற்று வரலாற்று வெளியினில் பல சமயங்களில், பல இடங்களில், பல பொருட்களில் தொடர்ந்து இடை நில்லாமல் புழக்கத்தில் இருந்து வந்துள்ளதனை அறிய முடிகின்றது.

பொதுவாகவே ஒவ்வொரு சொல்லும் அது பயன்படுத்தப்படும் சூழலிற்கிணங்க அதன் அர்த்தத்தினைப் பெறுகின்றது. அந்த வகையினில் ‘திராவிடம்/திராவிடர்’ என்ற சொல்லானது சில தளங்களில் ஒரு இனக் குழுவினையோ, மொழிக் குடும்பத்தினையோ, கலாச்சாரத்தினையோ, பண்பாட்டினையோ, நிலத்தினையோ, நாட்டினையோ, சாதியினையோ, இதிகாச - புராண கதை மாந்தர்களையோ குறிப்பதற்காக பல்வேறு வகைகளில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது / வருகின்றது. அந்தகைய சூழலில் இந்த ஆய்வுக் கட்டுரையானது ‘திராவிடம்/திராவிடர்’ என்ற சொல்லின் வழி பேசப்பட்ட வரலாற்று ரீதியிலான பரிணாம வளர்ச்சிகளையும், அது முன்வைத்த/வைக்கும் அரசியலினையும் பற்றி உரித்த தரவுகளுடன் விளக்க முற்படுகின்றது.

குறிச்சொற்கள்

திராவிடம், திராவிடர், பண்டிதர் அயோத்திதாசர், பாபாசாகேப் அம்பேத்கர், தந்தை பெரியார் ஈ.வெ. இராமசாமி, ஜவகர்லால் நேரு.

1.0. முன்னுரை

சொற்கள் என்பது மனித உணர்வுகளையும் எண்ணங்களையும் கடத்தும் மிக முக்கிய காரணியாக அமைந்து வந்துள்ளது. சொற்கள் என்றுமே வெறும் வெற்று ஒலியாக மட்டுமே அமைவது இல்லை. ஒவ்வொரு சொல்லிற்கும், அதற்கான அர்த்தமும், தாக்கமும் இருந்தே வருகின்றது. பொதுவாகவே, ஒரு சராசரி மனிதன் பயன்படுத்தும் பல வார்த்தைகள் எந்தவித தாக்கமும் இன்றி கடந்து செல்கின்ற பொழுது சில சொற்கள் மனித நாகரீகத்தின் பரிணாம மாற்றத்தினையும், மானுடத்தின் மீதான ஆழ்ந்த நம்பிக்கைகளையும் நமக்குள் விதைத்து வந்துள்ளன என்பதை மறுக்க இயலாது. அவ்வகையில் சில சொற்கள் வரலாற்றினில் தனித்த கவனத்தினைப் பெற்றுவந்துள்ளன. சுதந்திரம், சகோதரத்துவம், சமத்துவம் போன்ற சொற்கள் உலக அளவில் தனித்த மரியாதையினைப் பெற்றுள்ள பொழுது, இந்திய அளவில் குறிப்பாக தமிழக நிலப்பரப்பினில் ‘திராவிடம்/திராவிடர்’ என்ற சொல்லானதும் வரலாற்றில் குறிப்பிடத்தக்க பங்கினைப் பெற்று இருக்கின்றன. அந்த வகையினில் இந்த ஆய்வுக் கட்டுரையானது ‘திராவிடம்/திராவிடர்’ என்ற சொல்லின் வரலாற்று ரீதியிலான பரிணாம வளர்ச்சிகளையும், அது முன்வைத்த/வைக்கும் அரசியலினையும் பற்றி உரித்த தரவுகளுடன் ஆராய முற்படுகின்றது.women in farm1.1. ‘திராவிடம் / திராவிடர்’ என்ற ஒற்றைச் சொல் தரும் பல பொருள்கள்*

‘திராவிடம் / திராவிடர்’ என்ற சொல்லானது வரலாற்று வெளியில் பல சமயங்களில், பல இடங்களில், பல பொருட்களில் தொடர்ந்து இடை நில்லாமல் புழக்கத்தில் இருந்து வந்துள்ளது. ஒரு சொல் பொதுவாகவே அது பயன்படுத்தப்படும் சூழலிற்கு இணங்க அதன் உட்பொருளினைப் பெறுகின்றது. அந்த வகையினில் ‘திராவிடம்/திராவிடர்’ என்ற சொல்லானது சில தளங்களில் ஒரு இனக் குழுவினையோ, மொழிக் குடும்பத்தினையோ, கலாச்சாரத்தினையோ, பண்பாட்டினையோ, நிலத்தினையோ, நாட்டினையோ, சாதியினையோ, இதிகாச-புராண கதை மாந்தர்களையோ குறிப்பதற்காக பல்வேறு வகைகளில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது/வருகின்றது.

ஆச்சார்ய வஜ்ரநந்தி என்ற சமண அறிஞர் 469ல் (பொது நூற்றாண்டு) மதுரையில் ‘திராமிழ சங்கா’ என்ற நிறுவனத்தை நிறுவி தமிழ் மொழியினையும், சமண சமயக் கருத்தியலையும் இம்மண்ணில் வளர்க்க ஏற்படுத்தியதாக அறியமுடிகின்றது. தமிழ் சங்கம் என்ற கருத்தாக்கமே மேற்குறிப்பிட்ட சமண சமய சங்கத்தின் அடிப்படையிலேயே பின்னாளில் கட்டமைக்கப்பட்டது என மொழியியலாளர் ஜீயார்ஜ் ஹார்ட் அவர்கள் குறிப்பிடுகின்றார். (Hart. 1975: 9-10)

‘திராவிட’ என்ற சொல்லானதும் ஒரு குறிப்பிட்ட இன மக்களைக் குறிக்கின்றது என மோனியர் வில்லியம்ஸ் அவர்கள் தனது சமஸ்க்ருத-ஆங்கில நிகண்டினில் குறிப்பிடுகின்றார். (Williams. 1872.) பதின்மூன்றாம் நூற்றாண்டினைச் சார்ந்த ப்ராகிருத இலக்கண நூலானது ’திரமிழ’ (dramila) என்ற சொல்லினை ஒரு குறிப்பிட்ட சாதியினைப் பற்றி குறிக்கப் பயன்படுத்தியது. (Dravidian Encylopaedia. 1990: 233.) மகாபாரதம் (பாகம் 2. 27.), நாட்டிய சாத்திரம் (இருபத்தி ஏழாம் தொகுதி. 36.), மனுஸ்ரும்தி (பத்தாம் பாகம். 43.) போன்ற பார்ப்பனீய (Brahmanical) இதிகாச-இலக்கியங்கள் ஆரியர் அல்லாத மக்களை குறிக்க ‘திராவிட’ என்ற சொல்லினைப் பயன்படுத்தி வந்துள்ளதினை அறியமுடிகின்றது. இவற்றினில் மனுஸ்ரும்தியானது ‘திராவிட’ என்ற சொல்லினை ‘பண்பாட்டு அளவில் சீரழிந்த கீழான சத்திரியர்கள்’ என்ற அர்த்தம் பொருள்படும் படியான வகையினிலேயே பயன்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். (Mani. 1975: 246.) ‘திராவிடம்’ (Tiravidam) என்ற சொல்லினைப் பற்றி அபிஞாண சிந்தாமணி குறிப்பிடும் பொழுது தமிழ் மக்களைக் குறிக்க ஆரியர் பயன்படுத்திய சொல் என்றே குறிப்பிடுகின்றது. (Mudaliyar. 1982.)

மூன்றாம் மற்றும் இரண்டாம் (பொது நூற்றாண்டிற்கு முந்தைய) நூற்றாண்டினைச் சார்ந்த இலங்கையில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு சான்றுகளில் உள்ள ‘டமேட’ (dameda) அல்லது ‘டமேழ’ (damela) அல்லது ‘டமிழரட்ட’ (damilarattha) என்ற சொல்லாடல்களானது இலங்கைக்கு பயணம் மேற்கொண்ட தமிழக வணிகர்களைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டதாக அறிய முடிகின்றது. (Pillai. 54-59.) இதுவே வரலாற்றினில் ஆரியர் அல்லாத தனித்த இனக் குழுக்களைப் பற்றி குறிக்கும் வகையினில் பயன்படுத்தப்பட்ட முதல் சொல்லாக அறிய முடிகின்றது. (Dravidian Encylopaedia. 1990: 233.) சமண இலக்கியத் தரவுகளானது தென்னிந்திய மக்களை குறிப்பதற்காக ‘திரமிழ’ என்ற சொல்லினை பயன்படுத்தியதாக ப்ராகிருத - இந்தி சொல்லகராதி மூலம் அறியமுடிகின்றது. (மேற்குறிப்பிட்ட நூல். 233.)

சி.பி. ப்ரெளன் அவர்களின் தெலுங்கு-ஆங்கில நிகண்டானது ‘பஞ்சதிராவிட’ என்ற சொல்லினை திராவிட, கர்நாடக, குர்ஜார, மகாராட்டிர மற்றும் தெலுங்க மக்களைக் குறிக்கப் பயன்படுத்தினர். (மேற்குறிப்பிட்ட நூல். 234.) அதேபோல், மலையாள-ஆங்கில நிகண்டானது ‘பஞ்சதிராவிட’ என்ற சொல்லினை தமிழ், கேரள, துளுவ, கர்னாடக மற்றும் ஆந்திர மக்கள் குழுவினைக் குறிக்கப் பயன்படுத்தி உள்ளதனை அறிய முடிகின்றது. (மேற்குறிப்பிட்ட நூல்.233.) அகிட்டிஜாதகா (Akittijataka) என்ற புத்தமத கருத்தியல் சார்ந்த இலக்கியமானது காவேரிப்பட்டினம் என்ற நிலப்பரப்பினைச் சுற்றியுள்ள பகுதிகளை குறிக்கவே ‘திராவிட’ என்ற சொல்லினை பயன்படுத்தியதாக அறியமுடிகின்றது. (மேற்குறிப்பிட்ட நூல்.) இவற்றைத் தவிர்த்து, வித்தியாசமாக ‘திராவிட’ என்ற சொல்லினை ஆந்திர, கர்நாடக, குர்ஜார, திரைலிங்க மற்றும் மகாராட்டிர நிலப்பரப்பில் உள்ள மக்கள் குழுவினை குறிப்பாக பார்ப்பனர்களைப் பற்றி குறிக்கவும் பயன்படுத்தியதனை மோனியர் வில்லியம்ஸ் தனது சொல்லகராதியினில் குறிப்பிடுகின்றார். (Williams. 1872.) கன்னட-ஆங்கில நிகண்டானதும் ‘திராவிட’ என்ற சொல்லினை தென்னிந்திய பார்ப்பனர்களைப் பற்றி குறிப்பிட பயன்படுத்தியதனை அறிய முடிகின்றது. (Dravidian Encylopaedia. 1990: 233.)

தென்னிந்திய நிலப்பரப்பினைப் பற்றி குறிப்பிடும் வகையினில் ‘டமிழரட்ட’ (damilarattha) என்ற சொல்லானது பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும். ‘திராவிட’ என்ற சொல்லினைப் பற்றி சமஸ்க்ருத-ஆங்கில நிகண்டானது குறிப்பிடும் பொழுது அதனை தக்காண பீடபூமியின் கிழக்கு கடற்கரை நிலப்பகுதியினுள் உள்ள நாடு என்று பொருள்படும்படி குறிப்பிடுகின்றது. அதே பொருள்படும்படியே, ‘டமிரிகே’ (damirike) என்ற கிரேக்க சொல்லும் (Schoff. 1912.), ‘லிமிரிகே’ (limirike)) என்ற இலத்தீனிய சொல்லும் (McCrindle. 1883.) குறிப்பிடுகின்றது. இலங்கையின் நான்காம் நூற்றாண்டினைச் (பொது நூற்றாண்டு) சார்ந்த பாலி மொழி பெயர்ச் சொல்லகராதியில் ‘டமிழ’ (damila) என்ற சொல்லின் அடிப்படையானது இந்திய நிலப்பரப்பின் கிழக்கு கடற்கறையினைச் சார்ந்த மக்களை குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது. (Dravidian Encylopaedia. 1990: 233.) அதேபோல் ‘திராவிடம்’ (dravidam) அல்லது ‘திராமிடம்’ (dramidam) என்ற மலையாளச் சொல்லும், ‘திராவிடம்’ (dravidam) அல்லது ‘திராவிளம்’ (dravilam) என்ற கன்னட சொல்லும் தக்காண பீடபூமியின் கிழக்கு கடற்கரை நிலப்பகுதியினுள் உள்ள நாடு என்றே குறிப்பிடுகின்றன. அதுமட்டுமல்லாமல், ‘திராமிடம்’ என்ற சொல்லினை முதன் முதலாக பதினைந்தாம் நூற்றாண்டினைச் (பொது நூற்றாண்டு) சார்ந்த லிலாதிலகம் என்ற நூலினுள் பயன்படுத்தியதனையும் அறியமுடிகின்றது. (மேற்குறிப்பிட்ட நூல்.)

‘திராவிடமு’ (dravidamu) என்ற தெலுங்கு சொல்லானது ஆந்திர, கர்நாடக, குர்ஜார மற்றும் திராவிட மக்கள் வாழும் நிலத்தினைக் குறிக்கின்றது. மேலும், ‘திராவிடம்’ (tiravitam) என்ற சொல்லாடாலும் ஆந்திர, தமிழ் நாடு, கர்நாடக மற்றும் மராட்டிய நிலங்களைப் பற்றி குறிப்பிடுகின்றது. (Mudaliyar. 1982.) பத்ரபாகு என்பவரால் இயற்றப்பட்ட சமண சமய கருத்தியல் சார்ந்த பிரிஹட் கல்ப பாஸ்ய (Brihat Kalpa Bhashya) என்ற நூலானது திராவிட நாட்டினில் குளங்கள் மூலம் விவசாயம் நடைபெற்றது என்ற குறிப்பினைப் பற்றி குறிப்பிடுகிறன்து. (Dravidian Encylopaedia. 1990: 233.) பன்னிரெண்டாம் நூற்றாண்டினைச் (பொது நூற்றாண்டு) சார்ந்த ஹேமச்சந்திரனின் ஸ்தவிரவலி சரித (Sthaviravali Charita or Parisishtaparvan) என்ற நூலின் மூலம் அசோகப் பேரரசரின் பேரப்பிள்ளையான சம்ப்ரதி (Samprati) என்பவர் சமண துறவிகளை திராவிட நாடு உட்பட பல நாடுகளுக்கு சமணக் கொள்கைகளை பரப்ப அனுப்பியதாக அறிய முடிகின்றது. (Chandra. 1977: 75.)

அதுமட்டுமல்லாமல், ‘திராவிட’ என்ற சொல்லானது குறிப்பாக தமிழ் நிலப்பரப்பினைப் பற்றி குறிப்பிடவே பெரும்பாலும் பயன்படுத்தியதனையும் வரலாற்று ஆவணங்களும் இலக்கியத் தரவுகளின் மூலம் அறியமுடிகின்றது. உதாரணங்களாக செங்கடலினைச் (எரித்ரேயன் கடல்) சார்ந்த பெரிப்ளஸ் (Periplus of the Erythraean Sea) என்ற நூலானது ‘டமிரிகே’ (damirike) என்ற நிலப் பரப்பு ஆந்திர நிலத்தின் நீட்சி என்று குறிப்பிடுகிறது. (Schoff. 1912: 138.) தெலுங்கு மொழியிலும் ‘திராவிட’ என்ற சொல்லென்பது தமிழ் நாட்டினைப் பற்றி குறிப்பிடவே பயன்படுத்தபட்டு வந்துள்ளது என்பதையும் அறியமுடிகின்றது. வாகஸ்பட்யம் (Vacaspatyam) என்ற சமஸ்க்ருத நிகண்டும் ‘திராவிட’ என்ற சொல்லின் மூலம் தென்-கிழக்கு இந்திய நிலப்பகுதியினைப் பற்றியே குறிப்பிடுகின்றது. (Tarkavachaspati. 1962.)

பாலி மொழி பெயர்ச் சொல்லகராதியின் கூற்றின்படி அங்குட்டர நிகய (Anguttara Nikaya 338 and Commentary) என்ற நூலானது ‘திரமிழபாஷா’ (dramilabhasa) என்ற சொல்லின் மூலம் ஆரியர் அல்லாத மக்கள் பேசும் மொழி என்ற பொருள்படும்படி பயன்படுத்தப் பட்டுள்ளதனை அறிய முடிகின்றது. (Dravidian Encylopaedia. 1990: 233.) ப்ராக்ருதம், தமிழ் மற்றும் மலையாள நிகண்டுகள் ‘திராவிடி’ (dravidi) என்ற சொல்லினை ஒரு குறிப்பிட்ட மொழியினைக் குறிக்கவே பயன்படுத்தியதனை அறியமுடிகின்றது. (நாட்டிய சாத்திரம். XVIII.43.) ‘தமிழி’ (damili) என்ற சொல்லானது சமண மதக் கருத்தியல் நம்பிக்கையின் அடிப்படையில் பதினெட்டு எழுத்து வடிவமைப்பினுள் ஒன்றாகவும் (Mahalingam. 1974: iii.), ‘திராவிடலிபி’ (diravidalipi) என்ற சொல்லானது புத்த மதக் கருத்தியல் நம்பிக்கையின் அடிப்படையில் அறுபத்து நான்கு எழுத்து வடிவமைப்பினுள் ஒன்றாகவும் குறிப்பிடப் படுகின்றது. (மேற்குறிப்பிட்ட நூல். 130-134.) ‘திராவிட வேதம்’ என்ற சொல்லானது வைணவத்தின் தமிழ் வேத மரபினைப் பற்றி குறிக்கவே பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனை லிலாதிலகம் என்ற முன்னர் குறிப்பிட்ட மணிப்பிரவாள மலையாள இலக்கியமானது குறிப்பிடுகின்றது. (Dravidian Encylopaedia. 1990.)

அதுமட்டுமல்லாமல், இதிகாச புராணங்களிலும் ‘திராவிட’ என்ற சொல்லானது ஒரு சில புராண கதை மாந்தர்களைப் பற்றி குறிப்பிட பயன்படுத்தியாதாகவும் அறிய முடிகிறது. குறிப்பாக, இச்சொல்லானது ஸ்ரீகிருட்டிணரின் மகனான விருஸபாஸ்வாமின் (Vrishabhasvamin) மகன்கள் மற்றும் மனுவின் மகன்களில் ஒருவரான ப்ரியவரத (Priyavrata) என்ற அரசனின் குடும்பத்தினைச் சார்ந்த மக்களின் பெயராகவும் (Mani. 1975: 246.), உக்கிர சேனரின் மனைவியினை பாலியல் வற்புணர்ச்சிக்கு உட்படுத்தி அதன் மூலம் கம்சனின் தந்தையான ஓர் கந்தர்வரின் பெயராகவும் (மேற்குறிப்பிட்ட நூல்.), ஒன்பது யோகிகளில் ஒருவர் (திரமிழன்) எனவும் இருந்து வந்துள்ளதனை அறிய முடிகின்றது. (Dravidian Encylopaedia. 1990.)

1.3. சங்ககாலத்தில் ‘திராவிடம்/திராவிடர்’ என்ற சொல்லின் மூலம் முன்வைக்கப்படும் வாதங்கள்

‘திராவிடம்/திராவிடர்’ என்ற சொல்லானது சங்க காலம் தொட்டே பயன்பாட்டில் இருந்து வந்துள்ளதனை அறியமுடிகின்றது. உலகம் முழுவதும் ‘திராவிடம்’ என்ற சொல்லானது தமிழ் நிலத்திற்கானதாகவும் தமிழ் நிலத்தினில் வாழ்ந்த மக்களைக் குறிக்கும் பெயராகவுமே இருந்து வந்துள்ளதனை வரலாற்று-இலக்கியத் தரவுகள் அளிக்கின்றன. உலகின் புகழ் பெற்ற வரலாற்றாசிரியரான ஹெரடோடஸ் அவர்கள் ‘திராவிடர்கள்’ என்பதை அறிந்து இருந்ததை அவரது குறிப்புகளின் மூலம் அறிய முடிகின்றது. (Schoff. 1912: 213.)

கிரேக்க மொழியில் ‘திராவிடம்’ என்ற சொல்லினை பின்வருமாறு பயன்படுத்தினர், ‘Δράβιδα’. முதலாம் நூற்றாண்டினைச் சார்ந்த (பொது நூற்றாண்டு) கிரேக்க மொழிப் பயண இலக்கியமான செங்கடலினைச் சார்ந்த பெரிப்ளஸ் (Periplus of the Erythraean Sea) என்ற நூலானது பண்டைய கடல் பயண வழிகளையும், வாணிபம் தொடர்பான தரவுகளையும் முடிந்தவரை வரலாற்று பிழைகளின்றி கொடுக்கக் கூடிய ஒர் அறிய நூலாகும். அந்த நூலானது இன்றைய தமிழக நிலப்பரப்பினையும், அங்கு வாழ்ந்த மக்களினையும் குறிக்க திராவிடம்/திராவிடர் என்ற சொல்லினையே பயன்படுத்தி உள்ளது. (மேற்குறிப்பிட்ட நூல். 138.) மேலும், அந்த நூலானது ஆரியர்கள் (பார்ப்பனீயக் கருத்தியலானது) தென்னிந்தியாவில் நிலை பெற்றிருந்த திராவிட இனக்குழுவின் மீது பண்பாட்டு திணிப்பிணைச் செய்ய முற்பட்டதினையும் எடுத்தியம்புகின்றது. (மேற்குறிப்பிட்ட நூல்.)

கிரேக்க வார்த்தையான Oryza என்ற சொல்லும், அரேபிய வார்த்தையான al-ruzz அல்லது நவீன காலத்தில் பயன்படுத்தப்படும் rice, riso, riz, arroz மற்றும் இன்னும் பிற வார்த்தைகளும் தமிழ் சொல்லான அரிசி என்பதிலிருந்தே வந்திருக்க வேண்டும் என்றும் பாரசீக சொல்லான virinzi அல்லது சமஸ்கிருத சொல்லான vrihi என்பவைகளில் இருந்து கிடைக்கவில்லை என்ற கருத்தினை முன்வைத்தவரான (மேற்குறிப்பிட்ட நூல். 176.) செங்கடலினைச் சார்ந்த பெரிப்ளஸ் நூலின் ஆசிரியர் அவர்கள் மேலும் குறிப்பிடுவதாவது, ‘தமிரிக’ (Damirica) என்ற சொல்லின் மூலம் சுட்டுவது தமிழர்களின் நாடு என்றும், அந்த பகுதியினை ஆண்ட முதலாம் நூற்றாண்டினைச் சார்ந்த விடுதலைப் பெற்ற தனித்த சேர - சோழ - பாண்டிய அரசுகளை திராவிடப் பேரரசு என்றும் குறிப்பிட்டுள்ளதோடு, அவர்கள் ஆண்ட நிலப்பிரப்பினை ‘திராவிட தேசம்’ என்ற சொல்லாடல்களைக் கொண்டும் குறிப்பிட்டுள்ளார். (மேற்குறிப்பிட்ட நூல். 197, 205.)

ஓல்ட்ஹம் எனும் அறிஞரும் பண்டைய சேர மன்னர்கள் திராவிடர்களேயாவர் என்று குறிப்பிடுகின்றார். (Oldham. 1905: 157.) சேர வாரிசுகளே (சேரபுத்திரர்) திராவிட அதிகாரத்தினை தென்னிந்தியாவில் நிலைநிறுத்தினர் (Schoff. 1912: 208.) என்றும், தென்னிந்தியாவில் இருந்த திராவிடர்கள் மிகச் சிறந்த வணிகர்களாகவும், இலங்கை போன்ற நாடுகளில் தங்களது காலனியாதிக்கத்தினை நிலைநிறுத்தி, அங்கே இருந்த சிங்கள மக்களை அடக்கி, முத்து குழிப்பில் அன்று சிறந்திருந்த இலங்கையின் வடக்கு மாகாணங்களை ஆண்டனர் என்றும் (மேற்குறிப்பிட்ட நூல்.239.) செங்கடலினைச் சார்ந்த பெரிப்ளஸ் நூல் குறிப்பிடுகின்றது. அது போலவே இரண்டாம் நூற்றாண்டினைச் சார்ந்த தொலெமி (Ptolemy) எனும் கிரேக்க அறிஞரும் திமிரிகே (Dimirike) என்று தமிழக நிலத்தினைப் பற்றி தனது நூலான, Geographike Hyphegesis--ல் குறிப்பிடுகின்றார். (McCrindle. 1883.)

1.4. இடைக்காலத்தில் ‘திராவிடம் / திராவிடர்’ என்ற சொல்லின் மூலம் முன்வைக்கப்படும் வாதங்கள்

‘திராவிடம் / திராவிடர்’ என்ற சொல்லானது தமிழக வெளியினில் பார்ப்பனீயக் கருத்தியலின் எதிர்ச் சொல்லாகவே இடைக்காலத்தில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளதனை இடைக்கால வரலாற்று தரவுகளிலும், இலக்கியங்களின் வழியும் அறியமுடிகின்றது. பக்தி இலக்கிய ஆளுமைகளில் தலைசிறந்தவர்களில் ஒருவராக கருதப்படும் சைவ சமய குறவரான திருஞானசம்பந்தர் அவர்களை ‘திராவிட சிசு’ (draviďa śiśurāsvādya) என்று ஆதிசங்கரர் அவர்கள் தனது சொந்தர்ய லகரி நூலினுள் குறிப்பிடுகின்றார். (Subrahmanya Sastri and Srinivasa Ayyangar. 1937: 212-217.) இங்கே பார்ப்பன குலத்தினைச் சார்ந்த திருஞானசம்பந்தர் அவர்களை ‘திராவிட சிசு’ என அழைக்கவும், அவ்வாறு அழைத்ததன் நோக்கமும் ஆதிசங்கரர் பார்வையில் அவரை குறைத்து மதிப்பிடுவதற்காகவே என அறிய முடிகிறது.

திருஞானசம்பந்தர் அவர்கள் பார்ப்பனர் குலத்தினில் பிறந்திருந்த போதிலும், ஆரிய (பார்ப்பன) கருத்தியலினை முற்றாக ஏற்றவராக அறியமுடியவில்லை. பார்ப்பனியத்தின் ‘ஆதிக்கத் தன்மையினை’ தவிர்த்து தமிழ் மரபின் அடிப்படையிலான ‘ஆதிக்கத் தன்மையற்ற’ மரபினை வளர்த்தெடுத்து சைவ நெறியினில் இரண்டறக் கலந்து தமிழ் பண்பாட்டு சமயவெளியில் இன்றைய சைவ சித்தாந்தந்தின் அடிப்படைக் கட்டமைப்பை வடிவமைத்தவர் திருஞானசம்பந்தர் அவர்களே ஆவார். மேலும், காபாலிகத் தன்மையினை இல்வாழ்வோடு பேசவேண்டும் என்றும், தமிழ் பண்பாட்டு மரபினில் நிலைநிறுத்தி, எல்லா பொருள்களிலும் கடவுள் உள்ளார் என்றும், மக்களை பேதப்படுத்த முடியாது என்றும், கடவுளும், ஆன்மாவும் ஒன்றாக சேர்ந்து சிறப்பு பெருபவைகள் என்றும், அவைகளை பிரிக்க முடியாது என்றும் திருஞானசம்பந்தர் அவர்கள் குறிப்பிடுகின்றார்.

மேலும், சிவனினை தமிழ் பண்பாட்டோடு இயக்கிய முறையினை அதாவது, கூத்தர் பெருமான் என்று காரைக்காலம்மையாரால் வழிபட்ட கடவுளை, சிவன் என்ற கடவுளாகவும் முருகப்பெருமானின் அடையாளத்தோடு கூடியதாகவும் தமிழ் நிலப்பரப்பினில் பரவ திருஞானசம்பந்தரே காரணமானவராவார். இத்தகைய சிறப்பினை உடையவரையே ஆதிசங்கரர் அவர்கள் ‘திராவிட சிசு’ என்று சுட்டுகின்றார். அதேபோலவே, வைணவ சமயத்தின் ஆகச் சிறந்த ஆளுமைகளில் ஒருவராக அறியப்படும் நம்மாழ்வார் அவர்கள் ஒடுக்கப்பட்ட வகுப்பினைச் சார்ந்தவர் ஆவார். அவரால் இயற்றப்பட்ட திருவாய்மொழியினைப் பற்றி நாதமுனி அவர்கள் குறிப்பிடும்மொழுது ‘திராவிட வேதம்’ (த்ராவிட வேத) என்றே அறிமுகப்படுத்துகின்றார். (Sethu Pillai. 1971: 1.)

1.5. நவீன காலத்தில் ‘திராவிடம் / திராவிடர்’ என்ற சொல்லின் வழி முன்வைக்கப்பட்ட வாதங்கள்

உலக வரலாற்றினைப் பொருத்த வரையில் மனித சமூகத்தின் வளர்ச்சியில் பத்தொன்பதாம் நூற்றாண்டு என்பது தனித்துவமானது ஆகும். நிலவுடமை சமூகத்தின் வீழ்ச்சியும், கொள்ளை நோயின் (Black Death) தாக்கத்தினையும் தொடர்ந்து பதினைந்து மற்றும் பதினாறாம் நூற்றாண்டின் இறுதியில் ஐரோப்பாவில் ஏற்பட்ட சமூக சீர்திருத்தங்கள், மானுட சிந்தனையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை விதைத்தன. மதம் சார்ந்த நம்பிக்கைகளைக் கடந்து மானுடத்தின் மீதான நாட்டமானது அதிகரித்தது. பிரன்சு புரட்சியாகட்டும், அதன் அடிநாத முழக்கங்களான சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் விடுதலை போன்ற கருத்தியல்களாகட்டும் மானிட இன எழுச்சியின் முக்கியத்துவத்தையும், விடுதலையினையும், தனித்த சுயமரியாதையுடன் கூடிய அடையாள மீட்பினைப் பற்றி பறைசாற்றின.

உலக வரலாற்றினில் நிகழ்ந்த இத்தகைய மாற்றங்கள் இந்திய சமூக வெளியினையும் விட்டுவைக்கவில்லை. காலனிய ஆதிக்கத்தின் கட்டுக்குள் வந்த இந்திய சமூகமானது சாதியக் கட்டுமானத்தின் மீதான அடிப்படையினைத் தகர்க்கத் தொடங்கியது. இந்திய வெளியினில் மகாத்மா ஜோதிராவ்-சாவித்ரி பாய் பூலே, பண்டிதர் அயோத்தி தாசர், பாபாசாகேப் அம்பேத்கர், தந்தை பெரியார் ஈ.வெ. இராமசாமி போன்றோர்கள் பார்ப்பனீயக் கருத்தியலின் ஆதிக்கத்தையும் அதன் மீதான விமர்சனத்தையும் எந்த சமரசமுமின்றி முன்வைத்து அதனை எதிர்த்து போராடினர். அவர்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ ‘திராவிடம்/திராவிடர்’ என்ற சொல்லினை பார்ப்பனீயக் கருத்தியலை எதிர்க்கக் கூடிய ஒரு கருத்தியல் ஆயுதமாகவே பயன்படுத்தியதனை பின்வரும் விவாதங்களின் மூலம் காணலாம்.

1.5.1. அம்பேத்கர் அவர்கள் சுட்டும் திராவிடம் / திராவிடர்

திராவிடர்கள் யார் என்ற கேள்விக்கான பதிலினை பாபாசாகேப் அம்பேத்கர் அவர்கள் வரலாற்று ரீதியில் கண்டறிந்தார். இந்தியாவினைப் பொருத்தமட்டில் இரண்டு இனக்குழுக்களே உள்ளன. அவைகள் ஆரியர் மற்றும் நாகர்கள் (Ambedkar. 1948: 59.) என்ற பாபாசாகேப் அம்பேத்கர் அவர்கள், திராவிடரும் நாகர்களும் வேறுவேறானவர் அல்ல என்றும், இந்திய நிலப்பரப்பு முழுமையும் அவர்களே பரவி இருந்தனர் என்கிறார். (மேற்குறிப்பிட்ட நூல். 51, 55, 59.) வரலாற்றினில் ‘தாசர்கள்’ என்று கருதப்பட்டவர்களும், நாகர்களும், திராவிடர்களும் ஒருவரே என்கிறார் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்கள். (மேற்குறிப்பிட்ட நூல்.59.) நாகர்கள் என்பது ஒரு இனத்தின், கலாச்சாரத்தின் பெயராக இருந்ததாகவும், அவர்களின் மொழியியல் அடிப்படைப் பெயரென்பது ‘திராவிடம்/திராவிடர்’ என்பதாகவுமே இருந்தது என்றும் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்கள் குறிப்பிடுகின்றார். (மேற்குறிப்பிட்ட நூல்.) ‘தமிழ்’ அல்லது ‘திராவிட’ என்பது தென்னிந்தியாவினை மட்டும் சார்ந்த மொழியியல் குடும்பமாகக் கருதமுடியாது என்ற பாபாசாகேப் அம்பேத்கர் அவர்கள் அது ஆரியர் வருகைக்கு முன் இந்திய நிலப்பரப்பு முழுவதும் வேறூன்றிய மொழி என்றே குறிப்பிடுகின்றார். (மேற்குறிப்பிட்ட நூல். 58.)

‘அசுரர்கள்’ அல்லது ‘நாகர்களானவர்கள்’ திராவிட அரசுகளைச் சார்ந்தவர்கள் என்ற பாபாசாகேப் அம்பேத்கர் அவர்கள் (மேற்குறிப்பிட்ட நூல். 57.), திராவிடர் என்பவர்கள் தென்னிந்தியாவினைச் சார்ந்த ‘அசுரர்கள்’ அல்லது வடஇந்தியாவினைச் சார்ந்த நாகர்களே என்று கருதினார். (மேற்குறிப்பிட்ட ட நூல். 58.) ஓல்ட்ஹோம் என்ற அறிஞர் அவர்களும், பண்பாட்டு வெளியினில் அசுரர்கள் என்று குறிப்பிடப்படுபவர்கள் தென்னிந்தியாவினைச் சார்ந்த திராவிடர்களே என்கிறார். (Oldham. 1905: 55.)

‘அசுரர்கள்’ என்று அழைக்கப்பட்ட ‘திராவிடர்கள்’ ஆரிய மொழிக் குடும்பத்தினைத் தவிர்த்த மொழிகளையே பேசி வந்தனர். அதேவேளையில் வடஇந்திய நாகர்களோ தமிழினைத் தவிர்த்துவிட்டு சமஸ்கிருதத்தை பயன்படுத்தத் தொடங்கினர் என்று குறிப்பிடுகின்றார். இதுவே இந்தியா முழுவதும் நாகர்கள் இருந்த பொழுதும், வடஇந்தியாவினில் மட்டும் தங்களை ‘திராவிடர்கள்’ என அழைக்கப்படாததன் காரணம் என பாபாசாகேப் அம்பேத்கர் அவர்கள் குறிப்பிடுகின்றார். (Ambedkar. 1948: 55.)

தென்னிந்தியாவில் இருந்த நாகர்களோ, தமிழினை தன்னகத்தே கொண்டு ஆரியர்களின் மொழியான சமஸ்கிருத்தத்தை புறம்தள்ளினர் என்று பாபாசாகேப் அம்பேத்கர் அவர்கள் குறிப்பிடுகின்றார். (மேற்குறிப்பிட்டட நூல். 58.) அதாவது சமஸ்கிருத இலக்கிய-இலக்கணத்திற்கு மாற்றாக திராவிட மொழிக் குடும்பத்திற்கானதாகவே உள்ளது என்கின்றார். (மேற்குறிப்பிட்ட ட நூல். 55-56.) மேலும், ஆரியம் தவிர்த்த தமிழ் மற்றும் இன்னும் பிற மொழிகளையே அசுரர்கள் (திராவிடர்கள்) பேசியதாக அறியமுடிகின்றது. (மேற்குறிப்பிட்டட நூல். 58.) பாபாசாகேப் அம்பேத்கர் அவர்கள் கூற்றின்படி ‘திராவிடம்’ என்பது ஆரிய மற்றும் சமஸ்கிருத மொழிக்கு மாற்றாகவே பயன்படுத்தியதனை அறியமுடிகின்றது.

பாபாசாகேப் அம்பேத்கர் அவர்கள் போன்றே சமதர்ம கொள்கைகளில் தீவிர நாட்டம் கொண்டவரும், இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேரு அவர்களும் தனது நூலினுள் ‘திராவிடர்’ என்ற சொல்லாடலை பல இடங்களில் ஆரியப் பண்பாட்டு கலாச்சாரக் கருத்தியலுக்கு எதிராகவே பயன்படுத்தி உள்ளதை அறிய முடிகின்றது. (Nehru.1990: 72,73,84,111.)

ஜவகர்லால் நேரு அவர்களின் கூற்றின்படி, சிந்து சமவெளி நாகரீகத்தின் பண்பாட்டு கலாச்சாரக் கூறுகள் என்பது தென்னிந்தியாவினைச் சார்ந்த திராவிட இனக் குழுவினையேச் சாரும் என்பதேயாகும். (மேற்குறிப்பிட்ட நூல். 72.) அதுமட்டுமல்லாமல் சிந்து சமவெளி நாகரீகத்தின் வீழ்ச்சிக்குப் பின், இந்தியத் துணைக் கண்டத்திற்கு புதிதாக வருகை தந்த ஆரியர்களாலே இங்கே சில அரசியல் மற்றும் பண்பாட்டு பிரச்சனைகள் எழுந்ததாக நேரு அவர்கள் வரலாற்று புரிதலுடன் குறிப்பிட்டு, அவ்வாறு புலம்பெயர்ந்த ஆரியர்களின் பண்பாட்டு கலாச்சாரக் கூறுகளும், இந்தியத் துணைக்கண்டத்தின் பூர்வகுடி மக்களின் திராவிடக் கலாச்சாரக் கூறுகளும், முதன் முதலாக ஒன்றினைந்தன என்கிறார். (மேற்குறிப்பிட்ட நூல். 73, 84.) புத்த சமய மரபின் ஜாதகா இலக்கியங்கள் தனது இறுதி வடிவத்தினை இந்த இரண்டுவகை இனக்கலப்பின் உச்சத்தில் இருந்த பொழுதே நடைபெற்றது என்ற ஜவகர்லால் நேரு அவர்கள் (மேற்குறிப்பிட்ட நூல். 111.), பின்னாளில் தங்களை தாங்களே உயர்வாக கருதிக் கொண்ட ஆரியர்கள், பண்பாட்டினில் சிறந்து விளங்கிய பூர்வகுடிகளான திராவிடரிடமிருந்து தங்களை தனித்து காட்டவே சாதிய கட்டமைப்பினை ஏற்படுத்தினர் என்று குறிப்பிடுகின்றார். (மேற்குறிப்பிட்ட நூல். 84.)

1.5.2. பண்டிதர் அயோத்தி தாசர் அவர்களின் வாதம்

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் தமிழகத்தினில் வாழ்ந்த ஆகச் சிறந்த ஆளுமைகளில் ஒருவரான பண்டிதர் அயோத்தி தாசர் அவர்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் இன விடுதலைக்காக கருத்தியல் ரீதியாக போராடியவர் ஆவார். அவரின் கொள்கை முழக்கங்களை ஒரு பைசா தமிழன் போன்ற வார இதழ்களானது ஆவணப்படுத்தி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும். தமிழ் இலக்கியங்களில் ஆழ்ந்த அறிவினைப் பெற்ற பண்டிதர் அயோத்தி தாசர் அவர்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் பண்பாட்டு மீட்சியினைப் பற்றியும், அவர்களின் வீழ்ச்சிக்கான காரணங்களைப் பற்றியும் தனக்கே உரிய பாணியில் வரலாற்று தரவுகளுடன் ஆணித்தரமாக முன்வைத்தார். தமிழக வெளியினில் பௌத்தத்தின் வீழ்ச்சியும், பார்ப்பனியத்தின் எழுச்சியும் ஒரு சேர நிகழ்ந்ததாகவே பண்டிதர் அயோத்தி தாசர் அவர்கள் குறிப்பிடுகின்றார். (Geetha and Rajadurai. 1998: 96.)

பார்ப்பனீயக் கருத்தியலின் வெற்றியானது தமிழ் மொழியின் வீழ்ச்சியுடன் நேரடித் தொடர்பாகவே அமைந்தது என்று பண்டிதர் அயோத்தி தாசர் அவர்கள் குறிப்பிடுகின்றார். (மேற்குறிப்பிட்ட நூல்.96.) ஒடுகப்பட்ட மக்களாக கருதப்பட்டவர்கள் இம்மண்ணின் பூர்வ குடிகளேயாவார்கள். அவ்வகையினில் அவர்களை அந்தப் பொருள்படும்படி குறிக்கவும், அவர்களை ஒருமுகப்படுத்தவும், அவர்கள் தெரிவு செய்து பயன்படுத்திய சொல் ‘ஆதிதிராவிடர்கள்’ என்பதேயாகும். அதுமட்டுமல்லாமல், அவர்களின் ஒருங்கமைந்த கூட்டமைப்பிற்கு திராவிட மகாஜன சங்கம் மற்றும் பறையர் மகாஜன சபா என்றும் பெயரிட்டு அழைக்கலாயினர். 1890-களில் தொடங்கப்பட்ட திராவிட மகாஜன சங்கமானது அரசியல் விடுதலையினைப் பற்றி சிறிதும் கவலை கொள்ளாமல், சமூகத்தினில் ஊன்றியுள்ள தீண்டாமையின் பல்வேறுபட்ட கூறுகளைக் களையவே அரும்பாடுபட்டது. (மேற்குறிப்பிட்ட நூல். 175.) பின்னாளில் பார்ப்பனர் அல்லாத மக்களின் உயர்விற்காக பாடுபட வந்த நீதிக்கட்சியும் ‘திராவிடர்’, ‘திராவிடம்’ என்ற கருத்தாடல்களையே பயன்படுத்தத் தொடங்கினர்.

1.5.3. தந்தை பெரியார் அவர்களின் வாதம்

தந்தை பெரியார் அவர்கள் தன்னை ‘திராவிடன்’ என்று பிரகடனப்படுத்தி (பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள். தொகுதி. 1. பகுதி. 2. 2009: 332.) உரிமைகள் அற்ற எளியவர்களுக்காக போராடியவர் ஆவார். தமிழர்களின் தாழ்மைக்கு காரணம் என்ன என்று ஆக்கபூர்வமாக சிந்தித்த தந்தை பெரியார் அவர்கள், ‘திராவிடம்’, ‘திராவிடர்’ என்ற சொல்லினை ஒரு பண்பாட்டு புரட்சிக்கான கருத்தியல் ஆயுதமாக பயன்படுத்தினார். தந்தை பெரியார் அவர்கள் ‘திராவிடம்’, ‘திராவிடர்’ என்ற சொற்களின் மூலம் பார்ப்பனீயக் கருத்தியலினை ஏற்காத அல்லது புறம் தள்ளிய தமிழ் மக்களையும், அவர் தம் கலாச்சாரத்தையும், ஆரியப் பார்ப்பனீயக் கலாச்சரத்திற்கு எதிரானதாகவும், மாற்றாகவும் பயன்படுத்தியுள்ளதனை அறியமுடிகின்றது. (குடி அரசு. 17-09-1939.) அதாவது ‘திராவிடம்’, ‘திராவிடர்’ என்பதனை பிறப்பின் அடிப்படையில் மட்டும் தந்தை பெரியார் அவர்கள் ஒருபோதும் வரையறுக்காமல், சுயமரியாதை வாழ்விற்கான அடையாளக் குறியீடாகவே கையாண்டார் என்பது அவரின் எழுத்துக்களைக் காணும்பொழுது அறியமுடிகின்றது.

1.6. மொழியியல் அடிப்படையில் ‘திராவிடம்’ என்ற சொல்லாடல் பயன்படுத்தப்படும் விதம்

மொழியியல் அடிப்படையிலும் ‘திராவிடம்’ என்ற சொல்லானது தமிழின் தனித்த அடையாளத்தினைப் பற்றி குறிக்கவே பயன்படுத்தப்பட்டு வந்துள்ளதனை அறியமுடிகின்றது. பத்தொன்பதாம் நூற்றாண்டினைச் சார்ந்த ப்ரான்சிஸ் வொய்ட் எல்லீஸ் மற்றும் இராபர்ட் கால்ட்வெல் போன்ற இந்திய சூழலினை நன்கறிந்த ஐரோப்பியர்களும் ‘திராவிடம்’ என்ற சொல்லாடலையே சமஸ்கிருத மொழி ஆதிக்கத்தினைத் தவிர்க்க தெரிவு செய்து பயன்படுத்தியுள்ளனர். தமிழின் தனிச் சிறப்பினையும், தலைமைத் துவத்துனையும் நவீன உலகிற்கு வெளிச்சமிட்டுக் காட்டிய இராபர்ட் கால்ட்வெல் அவர்கள் தமிழ் உலகின் மூத்த மொழிகளில் முக்கியமானது என்ற வரலாற்று உண்மையினை உரித்த தரவுகளுடன் கல்வியியல் சூழலில் நிறுவினார். அவர் தமிழின் தனித்த பண்பாட்டு மொழியியல் அடையாளத்தினைப் பற்றி குறிக்க 'திராவிடம்' என்ற சொல்லாடலையே பயன்படுத்தினார். இங்கே 'திராவிடம்' என்ற சொல்லானது சமஸ்கிருத மொழிக் குடும்பத்திலிருந்து தமிழ் மொழிக் குடும்பம் முற்றிலும் மாறுபட்டது என்பதனைக் குறிக்கும் ஒரு சிறப்பு வார்த்தையாக பயன்படுத்தியதனை அறிய முடிகின்றது. (Caldwell. 1875.)

மொழிஞாயிறு என்று தமிழர் அனைவராலும் பாரட்டப்படும் ஞா.தேவநேயப் பாவாணர் அவர்களும் தனது நூலான திராவிடத்தாய் என்பதில், “பவளம்” என்ற சொல் “ப்ரவளம்” என்று வட மொழியில் திரிந்தது போலவே, ‘தமிழம்’ (தமிழ்) என்ற சொல்லும் ‘த்ரமிளம்’, ‘த்ரமிடம்’, ‘த்ரவிடம்’ என்றாகி, பின்னர் தமிழில் வந்து வழங்கும் போது மெய் முதலெழுத்தாக விதி இல்லாததால் ‘திரவிடம்’ என்பது ‘திராவிடம்’ என்று தமிழில் வழங்கும் என்றும், ஆகையால் தமிழினின்றே “திராவிடம்” எனும் சொல் தோன்றிற்று என்று குறிப்பிடுகிறார். (தேவநேயப் பாவாணர். 2012: 17.) மேலும், அவர், செந்தமிழும், கொடுந்தமிழும் சேர்ந்ததே தமிழாதலானும், தமிழல் - திராவிட மொழிகளெல்லாம் பழைய கொடுந் தமிழ்களே ஆதலானும், திராவிடரெல்லாம் ஒரு குலத்தாரே ஆதலானும், ஆரியக் கலப்பின்றி அவர் பேசும் சொற்களும் இவற்றிய நூல்களும் திரவிடமே யாதலானும், எல்லாத் திரவிட மொழிகளும் சேர்ந்தே முழுத்திரவிடமாகும் என்று ‘திராவிடம்’ என்ற சொல்லிற்கான பொருளினை வரையறை செய்கின்றார். (மேற்குறிப்பிட்ட நூல். 31.)

1.7. முடிவுரை

‘சுதந்திரம்’ என்ற பொருள்படும்படி பயன்படுத்தப்படும் ஆங்கிலோ-ப்ரஞ்ச் சொல்லான, ‘லிபர்டி’ (liberty) என்பது பதினான்காம் நூற்றாண்டின் தொடக்கம் முதலே சமூகத்தினில் புலக்கத்தில் இருந்து வந்துள்ளது. ‘லிபர்டி’ என்ற சொல்லின் மூலம் என்பது இலத்தீனிய மொழியின் ‘லிபெர்டஸ்’ (libertas), ‘லிபெர்டட்’ (libertat) என்பதாகவே உள்ளது. இங்கே, ‘லிபெர்டஸ்’ என்ற சொல்லானது ரோமானியர்களின் மத நம்பிக்கையின் அடிப்படையில் தோன்றியதாகவும், அவர்கள் வணங்கிய பெண் கடவுள் ஒருவரின் பெயராகவுமே இருந்து வந்துள்ளது. அவ்வாறு அந்தச் சொல் மத நம்பிக்கையின் அடிப்படையினில் எழுந்த பொழுதும், தற்போதைய சமூக வெளியினில் மதச் சார்பற்ற மானுட விடுதலை மீட்பின் கருப்பொருளாகவே பயன்படுத்தப்பட்டு வருகின்றது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது ஆகும்.

அதேபோல், ‘சர்/சார்’ (sir) என்ற ஆங்கில வார்த்தையானது, பதின்மூன்றாம் நூற்றாண்டு முதல் ஆங்கில ஏகாதிபத்திய அரசினால் தங்களுக்கு விசுவாசமாக இருந்தவர்களை கௌரவிக்கும் பொருட்டு ‘Sire’ என வழங்கப்பட்ட ஒரு சொல்லாகவே அறிய முடிகின்றது. அந்தச் சொல்லே காலப்போக்கினில் மருவி வேறு பல பொருள்படும்படி, குறிப்பாக தங்களைவிட உயர்ந்த அதிகாரிகளைக் குறிக்கும் விதமாகவோ, சக மனிதர்களை மரியாதையுடன் அழைக்கும் விதமாகவோ, ஆசிரியர்களைக் குறிக்கவோ பயன்படுத்தப்பட்டு வருகின்றது. பொதுவாகவே, அந்த குறிப்பிட்ட சொல்லானது ஆண் பாலினைக் குறிக்கும் வகையினிலே பொதுவாகவே பயன்படுத்தப்பட்டு வருகின்ற போதிலும், கேரளா போன்ற இந்திய நிலப்பரப்பினில் பெண் உயர் அதிகாரிகளையும் கூட குறிக்கப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது என்பது தனிச் சிறப்பாகும். அதாவது, ஒரு சொல்லின் பொருளானது அது பயன்படுத்தப்படும் சூழலிற்கிணங்க அதன் பொருளும் உள்ளடக்கமும் மாறுபட்டு வருகின்றன என்பது உள்ளங்கை நெல்லிக் கனியாகும்.

அந்தவகையினில் ‘திராவிடம்/திராவிடர்’ என்ற சொல்லும் இந்திய கலாச்சார-பண்பாட்டு வெளியினில் பரவரலாக பண்டைய காலம்தொட்டு பல்வேறு பொருளினைத் தரும் வகையினில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளதனை பல்வேறு வரலாற்று, இலக்கியத் தரவுகள் நமக்கு உணர்த்துகின்றன. உலக அளவினில் செல்வாக்கு பெற்ற வரலாற்று ஆசிரியரான ஹெரடோடஸ் அவர்களாகட்டும், செங்கடலினைச் சார்ந்த பெரிப்ளஸ் என்ற நூலாகட்டும், டாலமி ஆகட்டும், சனாதன இலக்கியங்களான, மகாபாரதம், போன்றவைகளாகட்டும், சமண - பௌத்த இலக்கியங்களாகட்டும், கல்வெட்டு ஆவணங்களாகட்டும், பக்தி இலக்கியங்களாகட்டும், மொழியியல் சான்றுகளாகட்டும் ‘திராவிடம்/திராவிடர்’ என்ற சொல்லினை தமிழினை / தமிழர்களை ஆதாரமாகவும், அடிப்படையாகவும் கொண்டது என்றும், ஆரிய-பார்ப்பனீய கலாச்சாரத்திற்கு எதிரானதாகவுமே பயன்படுத்தி வந்ததனை வரலாற்று ரீதியில் தெளிவாக அறியமுடிகின்றது.

‘திராவிடம்/திராவிடர்’ என்ற ஒற்றைச் சொல் தரும் பல பொருள்கள் என்ற உபதலைப்பினில் உள்ள கருத்துகள் பெரும்பாலும் Dravidian Encylopaedia என்ற கலைக்களஞ்சியத்தில் இருந்து எடுத்தாளப்பட்டுள்ளது.

குறிப்புதவி நூல்கள்

1.           ஆனைமுத்து, வே. பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள். தொகுதி. 1-6. சென்னை: பெரியார் ஈ.வெ. இராமசாமி- நாகம்மை கல்வி, ஆராய்ச்சி அறக்கட்டளை, 2009.

2.           தேவநேயப் பாவாணர், ஞா. திராவிடத்தாய். சென்னை: பூம்புகார் பதிப்பகம், 2012.

3.           பெரியார்: இன்றும் என்றும். கோவை: விடியல் பதிப்பகம், 2007.

4.           Ambedkar, B.R. The Untouchables: Who Were They and Why They Became Untouchables?. New Delhi: Amrit Book Co., 1948.
5. Caldwell, Robert. A Comparative Grammar of the Dravidian or South-Indian Family of Languages. London: Trubner and Co, 1875.
6. Chandra, Moti.Trade and Trade Routes in Ancient India. New Delhi: Abhinav Paublications, 1977, 75.
7. Dravidian Encylopaedia . Vol . I . Thiruvananthapuram: The International School of Dravidian Linguistics, 1990: 233.
8. Geetha, V and S.V. Rajadurai. Towards A Non-Brahmanin Millennium: From Iyothee Thass to Periyar. Calcutta: Samya, 1998.
9. Hart III, George L. The Poems of Ancient Tamil. Berkeley: University of California Press, 1975.
10. Mahalingam, T.V. Early South Indian Palaeography. Madras: University of Madras, 1974: iii.
11. Mani, Vettam. Puranic Encyclopaedia. Delhi: Motilal Banarsidass, 1975.
12. McCrindle, J.W. Trans and Ed. Ancient India As Described by Ptolemy. London: Trubner and Co, 1883.
13. Mudaliyar, Cinkaravelu A. Abitana Chintamani. Asian Educational Services, 1982.
14. Nehru, Jawaharlal. The Discovery of India. New Delhi: Jawaharlal Nehru Memorial Fund, 1990.
15. Oldham, C.F. The Sun and the Serpent: A Contribution to the History of Serpent-Worship. London: Archibald Constable and Co Ltd, 1905:157.
16. Pillai, K.K. “South India and Sri Lanka.” Journal of Royal Asiatic Society XXXV: 54-59.
17. Schoff, Wilfred H. Trans. The Periplus of the Erythraean Sea. New York: Longmans, 1912.
18. Sethu Pillai, R.P. Ed. Tiruvaymoli. Vol. I. Madras: University of Madras, 1971.
19. Subrahmanya Sastri, S and T.R. Srinivasa Ayyangar. Trans. Saundarya-Lahari (The Ocean of Beauty) of Sri Samkara-Bhagavat-Pada. Madras: The Theosophical Publishing House, 1937.
20. Tarkavachaspati, Sri Taranatha. Vacaspatyam (A Comprehensive Sanskrit Dictionary). Varanasi: Chowkhamba Sanskrit Series Office, 1962.
21. Williams, Monnier. A Sanskrit-English Dictionary. Oxford: The Clarendon Press, 1872.

- முனைவர். ச.ஜீவானந்தம், உதவிப் பேராசிரியர், வரலாற்றுத் துறை, சிக்கிம் பல்கலைக்கழகம்