ஒரு சமூகத்தின் வரலாற்று வரைவிற்கு உதவும் சான்றுகளில் ஒன்றாக அச் சமூகம் உற்பத்தி செய்யும் பொருள்களும் பயன்படுத்தும் பொருள்களும் இடம் பெறுகின்றன. ஆனால் நீண்டகாலமாக நம் வரலாற்று வரைவில் இவற்றைப் புறக்கணித்து வந்துள்ளோம். இன்று மக்களை முன்னிலைப்படுத்தும் மக்கள் வரலாறு குறித்த பார்வை வளர்ச்சியடைந்துள்ள நிலையில் மரபு சார்ந்த வரலாற்றுத் தரவுகளுடன் நின்றுவிடாது புதிய வரலாற்றுத் தரவுகளைத் தேடும் போக்கு உருவாகியுள்ளது. இத்தேடலின் விளைவாக ‘பொருள்சார் பண்பாடு’ ‘ வாய்மொழி வரலாறு’ என்ற இரண்டு வகைமைகளையும் மையமாகக் கொண்ட வரலாற்று வரைவுகள் உருவாகியுள்ளன. அடித்தள மக்கள் வரலாறு, விளிம்பு நிலையினர் வரலாறு, மக்கள் வரலாறு என்ற புதிய வரலாற்றுப் பள்ளிகள் இவற்றுள் குறிப்பிடத் தக்கனவாகும் இவை ஒவ்வொன்றுக்கும் இடையே சிற்சில வேறுபாடுகள் இருப்பினும் மேட்டிமையோரை முன்னிலைப் படுத்தும் முந்தைய வரலாற்றுப் பார்வையில் இருந்து விலகி நின்று சாமானியர்களை வரலாற்றின் மையத்திற்கு அழைத்து வருகின்றன. இக்கட்டுரை இத்தகைய நோக்கிலேயே உருவாகியுள்ளது.

ஒரு நாட்டின் வளர்ச்சி நிலையின் அடையாளங்களுள் ஒன்றாக அந் நாட்டின் உள்நாட்டு வாணிபமும் அயல்நாட்டு வாணிபமும் வரலாற்று நூல்களில் இடம் பெறுகின்றன. இவை வாணிபப் பொருள், வாணிபப்பாதை, பண்டங்களைச் சுமந்து செல்லப் பயன்படுத்திய வாகனங்கள், கால்நடைகள், நாணய முறை, அளவை முறை, வாணிபம் செய்வோர் என விரிவான முறையில் பல செய்திகளை உள்ளடக்கி இருக்கும்.tamilnadu fishermenகடல் கடந்த அயல்நாட்டு வாணிபம் உள்நாட்டு வாணிகத்தின் வளர்ச்சியாக உருவாகியது. இன்று கடல்சார் வரலாறு என்ற புதிய வரலாற்று வகைமையில் கடல் வாணிபம் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது. வாணிபத்தின் வளர்ச்சியானது வணிகக்குழுக்களையும் நகரங்களையும் மாநகரங்களையும் உருவாக்கியது. தமிழக வரலாற்றில் இவை இடம் பெற்றிருந்தமைக்கான சான்றுகள் தொல் தமிழ்க் கல்வெட்டுக்களிலும் (தமிழ் பிராமி) சங்க இலக்கியங்களிலும் காவியங்களிலும் அகழ் ஆய்வுகளிலும் பரவலாக வெளிப்பட்டுள்ளன. இவ்வளர்ச்சி நிலை உருவாகும் முன்பும் உருவான பின்பும் வளர்ச்சி அடையாத தொடக்ககால வாணிபமுறையான பண்டமாற்று முறையும் வழக்கில் இருந்துள்ளது. பொருளியல் வளர்ச்சியின் அடையாளங்களுள் ஒன்றான நாணய முறை சங்ககாலத்தில் வழக்கில் இருந்துள்ளது. இது குறித்த தெளிவான சான்றுகள் சங்க இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளன (அகநானூறு 293: 6-7, 363:6-8). இந்த நாணயங்கள் பொன்னால் ஆகிய நாணயங்கள் என்றும் தெரியவருகிறது. இருப்பினும் நாணய அறிமுகத்திற்கு முன்னர் நடைமுறையில் இருந்த பண்டமாற்று முறை முற்றிலும் மறையவில்லை.இது குறித்த சங்க இலக்கியப் பதிவுகளைக் காணும் முன்னர் மானுட சமூகத்தின் வளர்ச்சியில் நிகழ்ந்த மூன்று வேலைப் பிரிவினைகள் குறித்து அறிந்து கொள்வது அவசியமாகிறது.

முதல் வேலைப் பிரிவினை:

ஒரு சமூகத்தின் வளர்ச்சிப் போக்கில் உழுதொழில் அறிமுகமாகி அது பரவலான பின்னர் அது வேளாண் சமூகம் என்றழைக்கப்படுகிறது. இச் சமூகத்திற்கு முந்தைய இனக்குழுச் சமூகமானது வேட்டையாடியும், காய்,கனி, கிழங்கு, தேன் ஆகிய காட்டு வளங்களைச் சேகரித்தும் வாழ்ந்தமையால் இங்கு நிலவிய வாழ்க்கை முறையை உணவு தேடி வாழும் வாழ்க்கை என்று மானுடவியலர் குறிப்பர். மார்க்சியம் இதனை வளர்ச்சி அடையாத பொருள் உற்பத்தி முறை என்று குறிக்கும்.

இச்சேகரித்தலில் பயன்படுத்திய கருவிகளின் வழி தம் உழைப்பைச் செலுத்தியமையாலும் அவற்றின் துணையால் எதையும் உற்பத்தி செய்யாமையாலும் இக்கருவிகள் உழைப்புக் கருவிகள் என்று பெயர் பெற்றன. இதன் வளர்ச்சி நிலையாக புன்செய் வேளாண்மையை இச் சமூகம் மேற்கொண்டது. புன்புல வேளாண்மை என்று சங்க இலக்கியங்கள் இதனைக் குறிப்பிடும்.

இதன் அடுத்த கட்டமாக கால்நடை வளர்ப்பு தோன்றியது. தொடக்கத்தில் கால்நடைகள் அவற்றின் ஊணுக்காகவே வளர்க்கப்பட்டன. அடுத்து அவற்றின் பாலும் பாலால் செய்யப்பட்ட பொருட்களும் உற்பத்திப் பொருளாகின. இச்சமூகம் குறித்து ‘இதுதான் சமுதாய ரீதியில் ஏற்பட்ட மாபெரும் முதல் வேலைப் பிரிவினையாகும்’ என்றும் இதன் தொடர்ச்சியாக அடிமை முறை உருவானது என்றும் எங்கெல்ஸ் குறிப்பிட்டுள்ளார். இவ்வேலைப் பிரிவினையின் வளர்ச்சியில் கால்நடைகள் பண்டமாற்றின் வடிவமாகிவிட்டன. அத்துடன் அவை தனிச் சொத்தாகவும் மாறத்தொடங்கின. இது குறித்து எங்கெல்ஸ்: "கால்நடை வளர்த்த குலங்கள் அண்டைமக்களிடம் பண்டமாற்றுக்குத் தந்த முக்கியமான பொருள் கால்நடைகள்தாம். கால்நடை என்ற சரக்கே மற்ற எல்லா சரக்குகளையும் மதிப்பிடுவதற்குரிய சரக்காக ஆயிற்று; மற்ற சரக்குகளுக்கு மாற்றுப் பண்டமாக எங்கும் அட்டியின்றி அது பெற்றுக் கொள்ளப்பட்டது. சுருங்கச் சொன்னால், பணத்தின் பணியை அது மேற்கொண்டுவிட்டது. ஏற்கெனவே இந்தக் கட்டத்தில் அது பணம் மாதிரியே பயன்பட்டு வந்தது" என்று குறிப்பிட்டுள்ளார். தமிழில் செல்வத்தைக் குறிக்கும் சொல்லாக ‘மாடு’ என்ற சொல் வழங்குகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது (திருக்குறள்:400).

இரண்டாவது வேலைப் பிரிவினை:

வேளாண்மைச் சமூகத்தில் கால்நடை வளர்ப்பு அறிமுகமானதை அடுத்து கைத்தொழில்கள் உருவாயின. இது வேளாண்மைச் சமூகத்தில் ஏற்பட்ட இரண்டாவது வேலைப்பிரிவினை ஆகும். நீரின் துணையால் வேளாண்மையை மேற்கொண்ட சமூகம் தன் தேவையை உழைப்பின் வாயிலாகப் பெற்றுக்கொண்டது. இதன் பொருட்டு உழைப்பிற்குத் துணைபுரியும் வகையில் கருவிகளையும் உருவாக்கிக் கொண்டது. இக்கருவிகள் பொருள் உற்பத்தியில் பங்களிப்புச் செய்தமையால் உற்பத்திக் கருவிகள் என்று அழைக்கப்படலாயிற்று.

உற்பத்திக் கருவிகளின் வளர்ச்சியால் கைத்தொழில்கள் தோன்றி வளர்ந்தன. வேளாண் உற்பத்தியும் கைத்தொழிலும் தொடக்கத்தில் இணைந்திருந்த நிலையில் வேளாண்மையில் இருந்து கைத்தொழில் பிரிந்து இரண்டாவது வேலைப் பிரிவினை உருவாயிற்று.

மூன்றாவது வேலைப் பிரிவினை:

மூன்றாவது வேலைப்பிரிவினையாக வணிகர்கள் உருவாக்கம் அமைந்தது. இது குறித்து எங்கெல்ஸ் "உற்பத்தியில் பங்கெடுக்காமல் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களைப் பரிவர்த்தனை செய்வதில் மட்டும் ஈடுபடும் ஒரு வர்க்கம் படைக்கப்பட்டது" என்று குறிப்பிட்டுள்ளார். வணிகர்கள் உருவான பின்னர் கைத்தொழிலில் நிகழ்ந்த உற்பத்தியானது தேவைக்காக மட்டுமின்றி ‘பண்டமாற்றத்துக்காக உற்பத்தி செய்யும் முறையாக’ மாறியது. இது குறித்து கார்ல் மார்க்ஸ் மிகத் தெளிவாக ஆராய்ந்துள்ளார். அவரது கருத்து வருமாறு:

"முன்பு வேளாண் வேலையில் ஓர் உபரி வேலையாக (பகுதி நேர வேலையாக) நூற்பையும் நெசவையும் மேற்கொண்டு வந்தவர்களை முழுமையாக நூற்பவர்களாகவும் நெசவு மேற்கொள்பவர்களாகவும் மாற்றிவிட்டார்கள். இதன் அடுத்தகட்டமாக வீடுகளில் இருந்த இவர்களை ஒரு தொழிற் கூடத்துக்குள் (பட்டறை) வேலை செய்பவர்களாக ஆக்கினர். இம் முறையில் மூலப் பொருள்களையோ தொழிற்கருவிகளையோ வணிகன் அவர்களுக்கு வழங்கவில்லை. அவன் செய்ததெல்லாம் படிப்படியாக அவர்களை ஒரு குறிப்பிட்ட வேலையை மட்டும் செய்பவர்களாக்கிவிட்டான். அத்துடன் தாம் உற்பத்தி செய்யும் பொருளை வாங்குவோரை (வணிகர்களை) சார்ந்திருப்பவர்களாகவும் அவர்களுக்காக உழைப்பவனாகவும் நெசவாளி மாறிவிட்டான். அவர்கள் நெய்யும் ஆடைகளை வாங்குவதன்வழி அவரகளது உழைப்பை வணிகன் வாங்கி விட்டான்.

இவ்வகையில் உற்பத்தியாளனுக்கும் நுகர்வோனுக்கும் இடையில் தவிர்க்க இயலாத ஒருவனாக வணிகன் தன்னை ஆக்கிக்கொண்டான். உற்பத்திப் பொருட்களை நுகர்வோரிடம் கொண்டு சேர்ப்பது மட்டும் வணிகரது பணியாயிற்று."

பண்டமாற்று:

வேளாண்மையில் இருந்து உருவான முக்கிய வேலைப் பிரிவினையான கைத்தொழிலும் வாணிபமும் அவற்றின் வளர்ச்சிப் போக்கில் வேளாண்மையில் இருந்து தம்மைத் துண்டித்துக் கொண்டன. குறிப்பிட்ட பொருள்களை உற்பத்தி செய்பவர்களாக கைத்தொழிலாளர் விளங்கினர்.

சேகரிக்கப்பட்ட இயற்கைப்பொருள்களையும், வேளாண் உற்பத்திப் பொருட்களையும், கைத் தொழிலில் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களையும் மக்களிடம் (நுகர்வோரிடம்) கொண்டு சேர்ப்பவர்களாகவும் வணிகர்கள் இருந்தனர்.

இவர்களது செயல்பாடுகள் வலுப்பெறு முன்னர் மக்களின் பண்டங்கள் தேவையை நிறைவேற்றும் ஒரு முறையாக பண்டமாற்று முறை விளங்கியது.பணத்தைப் பயன்படுத்தாமல் பொருள்களின் பரிமாற்றம் வழி நேரடியாக நிகழும் வாணிப முறையே பண்டமாற்று முறையாகும். இது தொன்மையான ஒன்றாகும். பணம் அறிமுகமான பின்னரும் கூட இது தொடர்ந்துள்ளது. உழைப்பிற்கான ஊதியம் கூட தானியவடிவில் வழங்கப்பட்டது. பிற்காலச் சோழர் ஆட்சியில் சமைத்த சோறு வழங்கப்பட்டுள்ளது. கொல்லர், தச்சர், குயவர், வண்ணார், முடிதிருத்துவோர். ஆகியோரின் பணியை வேளாண் உற்பத்தியில் கிடைக்கும் தானியங்களை வழங்கிப் பெற்றுக் கொள்ளும் முறை தமிழ்நாட்டுக் கிராமங்கள் சிலவற்றில் இன்றும் கூட நிலவுகிறது. (1968 கீழவெண்மணிக் கொடூரத்திற்கான காரணங்களில் ஒன்று நெல் வடிவில் அவர்கள் பெற்று வந்த ஊதியத்தில் கூடுதலாக அரைப்படி கேட்டதுதான்).

பண்டைத் தமிழகத்தில் பண்டமாற்று:

தமிழ்ச் சமூக வரலாற்றில் குறிப்பிடத் தக்க ஒன்றாகத் திணைச் சமூகம் இடம் பெற்றுள்ளது.பண்டையத் தமிழ்நாட்டின் நிலப்பகுதிகளை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்தாகப் பகுத்து, அவற்றின் நில அமைப்பு, அங்கு வாழும் மக்கள், அவர்களின் தொழில், உணவு, வழிபடும் தெய்வம் என்பனவற்றை தொல்காப்பியம் வரையறுத்துக் கூறுகிறது.மற்றொரு பக்கம் இத்திணை வாழ்க்கையையும் திணை சார்ந்த ஒழுக்க நெறியையும் குறித்த இலக்கியப் பதிவாக சங்க நூல்கள் விளங்குகின்றன. இவற்றிற்குப் பின்னால் உருவான காப்பியங்களிலும் இவற்றின் தாக்கம் காணப்படுகிறது. திணை சார்ந்த வாழ்க்கை முறையானது இலக்கிய முறையியலா? நடப்பியலின் பதிவா? ஐந்து திணைகளும் ஒரே காலத்தில் நடைமுறையில் இருந்தனவா அல்லது ஒரு திணை வாழ்க்கை முறையின் மறைவையடுத்து மற்றொரு திணை வாழ்க்கை முறை உருவானதா? என்பன போன்ற வினாக்கள் தமிழ் ஆய்வாளர்களிடம் உண்டு.

இவற்றிற்குள் புகாமல் சிவத்தம்பியின் ஒரு கருத்துடன் மட்டும் நின்று கொள்வது இக் கட்டுரையின் அடிப்படை நோக்கத்தில் இருந்து விலகிச் செல்வதைத் தவிர்க்கும். ‘திணைக் கோட்பாட்டின் சமூக உள்ளடக்கம்' என்ற தமது கட்டுரையில் ஒரே காலகட்டத்தில் ஐந்திணை வாழ்க்கையும் நடைமுறையில் இருந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளதுடன் ‘சமச்சீரற்ற வளர்ச்சி’ (Uneven Development) என்று அவர் அடையாளப்படுத்தி உள்ளார். சிவத்தம்பி அடையாளம் காட்டும் சமச்சீரற்ற வளர்ச்சியை உறுதிப்படுத்தும் வகையில் சங்க இலக்கியங்களில் காணப்பெறும்  பண்டமாற்று குறித்த செய்திகள் சான்றாக அமைந்துள்ளன. இச்சான்றுகள் சிலவற்றை இனிக் காண்போம்.

சான்று: 1 (நெல்லும் உப்பும்)

உப்பின் பயன்பாட்டை சங்ககாலத் தமிழர்கள் அறிந்திருந்தனர். நெய்தல் நிலப்பகுதியில் பாத்திகள் அமைத்து உப்பை விளைவித்துள்ளனர். உப்பு உற்பத்தியாகும் இடத்தை ‘உப்புவிளை கழனி’ என்றே குறித்துள்ளனர் (குறுந்தொகை269:6). உணவுக்குச்; சுவை ஊட்டியதன் அடிப்படையில் ‘உப்பமுது' என்ற பெயரால் உப்பு அழைக்கப்பட்டுள்ளது. தொடக்கத்தில் தாம் விளைவித்த உப்பை மாட்டு வண்டியில் ஏற்றிச் சென்று உள்நாட்டுப் பகுதியில் விற்றுள்ளனர். உமண்சாத்து என்று இவர்களைக் குறிப்பிடுவதால் ஒரு வணிகக் குழுவாக இவர்கள் இயங்கி உள்ளனர் என்று கூறமுடியும். தனிமனிதர்கள் மேற்கொண்ட உப்பு விற்பனையும் இருந்துள்ளது.

‘நெல்லின் நேரே வெண்கல் உப்பு கொள்ளிரோ’ என்று உமணப்பெண் ஒருத்தி கூவி விற்றுள்ளமையால் (அகநானூறு140:7) நெல்லும் உப்பும் சம அளவு மதிப்பில் பண்டமாற்றுப் பொருளாக இருந்தமை புலப்படுகிறது. இதே செய்தியை ‘நெல்லும் உப்பும் நேரே ,ஊரிர், கொள்ளிரோ’ எனச் சேரிதோறும் நுவலும் பெண்ணொருத்தியை மற்றொரு அகநானூற்றுச் செய்யுளும்(390:8-9) அறிமுகம் செய்கிறது.நெல்லுக்கு இணையான மதிப்பை உப்பு பெற்றிருந்தமை இதனால் புலப்படுகிறது. ‘தம் நாட்டு விளைந்த வெண்ணெல் தந்து பிறநாட்டு உப்பின் கொள்ளை சாற்றி’ என்று நற்றிணை(183:1-2) குறிப்பிடுகிறது. உப்பைக் கொடுத்து வெண்ணெல் வாங்கும் பொருட்டு உப்பளத்திற்குச் செல்லும் ஒரு தாயை குறுந்தொகை (269:5-6)குறிப்பிட உப்பைக் கொடுத்து வாங்கிய நெல்லைக் கொண்டு வெண்மையான சோறு சமைக்கப்பட்டதை அகநானூறு (60:4) அறிமுகம் செய்கிறது.

வேட்டைத் தொழிலை மேற் கொண்டு காட்டில் வாழும் வேடுவர் மான் இறைச்சிக்கு மாற்றாக நெல்லையும், ஆநிரை வளர்க்கும் ஆயர்குலப் பெண் தயிருக்கு மாற்றாக நெல்லையும் பெற்றுச் சென்றுள்ளனர் (புறநானூறு33:1-6). கள்ளைப் பண்டமாற்றாகத் தந்தும் நெல்லைப் பெற்றுள்ளனர் (அகநானூறு 61:10).

சான்று: 2 பண்டமாற்றில் மீன்

உணவுப் பொருளான மீன் பண்டமாற்றில் உப்பைப் போன்று நெல்லுக்கு இணையான மதிப்பைக் கொண்டிருக்காமல் கூடுதல் மதிப்பைப் பெற்றிருந்து என்பதை ‘சில மீன் சொறிந்து பலநெல் பெறூஉம்’ என்ற ஐங்குறுநூற்றுச் செய்யுள் அடியால் (49:2) அறிய முடிகிறது.

கடகப் பெட்டி அளவு கெளிற்று மீனுக்கு மாற்றாக பெரும்பயறு பெற்றதை ஐங்குறுநூற்றுச் செய்யுள்(7:1-2) குறிப்பிடுகிறது. காவிரி ஆற்றின் மடுவில் பிடித்த வாளை மீன்களுக்கு மாற்றாக செந்நெல்லைப் பெற்றுக் கொள்ளாது முத்துக்களையும் அணிகலன்களையும் வாங்கி வரும் பெண்ணை ‘பழஞ்செந் நெல்லின் முகவை கொள்ளாள், கழங்குஉறழ் முத்தமொடு நன்கலம் பெறூஉம்’ என்று அகநானூற்றுச் செய்யுள் (126:11-12) அறிமுகம் செய்கிறது. வரால் மீன் கொண்டு வந்த வட்டிலில் அதற்கு மாற்றாக வெண்ணெல் நிரப்பப்படுகிறது (ஐங்குறுநூறு48:2-3). இங்கு வரால் மீனும் நெல்லும் ஒரே சீரான மதிப்பில் உள்ளன.

சான்று: 3 (மது)

சங்ககாலத் தமிழர்களின் சிறப்பான நுகர் பொருளாக மது விளங்கியுள்ளது. கள் என்றழைக்கப்பட்ட மதுவானது தென்னை, பனை ஆகிய மரங்களில் இருந்து பெறப்பட்டுள்ளதுடன் வீட்டிலும் தயாரிக்கப்பட்டுள்ளது. இல்லத்தில் தயாரிக்கப் பட்டதன் அடிப்படையில் ‘இல்லடுகள்’ என்று அழைக்கப்பட்டுள்ளது. இதற்கான மூலப்பொருளாக அரிசி பயன்பட்டுள்ளது. கள் தவிர தேறல், நறவு என்ற பெயரிலான மதுவும் பயன்பாட்டில் இருந்துள்ளன.

பண்டமாற்றில் மதுவும் இடம்பெற்றிருந்தது. யானைக் கொம்பைக் கொடுத்து கள் வாங்கியுள்ளனர் (அகநானூறு 245:10-12). மீன் பிடித்தபோது கிடைத்த முத்தைக் கொடுத்து கள் வாங்கி உள்ளனர் (அகநானூறு 296:8-9).

சான்று: 4 (பிற பொருள்கள்)

ஆடு மேய்க்கும் ஆயர் ஒருவர் ஊருக்குப் புறத்தே உள்ள மேய்ச்சல் நிலத்தில் இருந்து ஊருக்குள் பாலுடன் வந்து கூழோடு திரும்புவதை ‘பாலொடு வந்து கூழொடு பெயரும், ஆடுடை இடை மகன்” என்று குறுந்தொகை (221:3-4) குறிப்பிடுகிறது. பாலைக் கொண்டு வந்து வீட்டில் கொடுத்துவிட்டு அங்கிருந்து கூழுடன் தொழிற்களத்துக்குத் திரும்புவதாக இதைக் கொள்ளலாம். கூழ் என்பதற்கு உணவு தானியம் எனப் பொருள்கொண்டு, ’பாலை விற்றுவிட்டு அதற்கு விலையாக உணவிற்குரிய தானியத்தைப் பெற்றுச் சென்றானெனலும் ஒன்று’ என்று குறுந்தொகைப் பதிப்பில் (2009:413) உ.வே.சா. எழுதியுள்ளார். அவரது உரையின் அடிப்படையில் பாலும் உணவு தானியமும் பண்டமாற்று செய்யப்பட்டன என்றும் கூறலாம். உணவு தேடி வாழும் வேடுவர்களும், மீன்பிடித்து வாழும் நெய்தல் நில மக்களும், நீரின் துணையால் நன்வேளாண்மை செய்வோரும் தமக்குள் நிகழ்த்திய பண்டமாற்று குறித்து பொருநராற்றுப்படை(214-217) பின்வருமாறு குறிப்பிடுகிறது.

தேன் நெய்யொடு கிழங்கு மாறியோர்

மீன் நெய்யொடு நறவு மறுகவும்

தீம் கரும்போடு அவல் வகுத்தோர்

மான் குறையொடு மது மறுகவும்.

(குறிஞ்சி நில வேட்டுவர்கள் நெய்தல் நில மக்களிடம் தேன், கிழங்கு என்ற இரண்டு கானகப் பொருள்களைக் கொடுத்துவிட்டு மாற்றாக மீனையும் கள்ளையும் பெற்றுக் கொண்டனர். நன்செய் நில உழவர்கள் இனிமையான கரும்பையும், நெல்லில் இருந்து உருவாக்கிய அவலையும் கொடுத்து விட்டு அதற்கு மாற்றாக மான் இறைச்சியையும் மதுவையும் பெற்றனர்.)

பண்டமாற்று வெளிப்படுத்தும் வரலாறு

பண்டமாற்று முறை குறித்து மேலும் சில சான்றுகள் உள்ள நிலையில் தேர்வு செய்யப்பட்ட சான்றுகளை அடிப்படையாகக் கொண்டே இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. இருப்பினும் இங்கு இடம்பெற்றுள்ள சான்றுகளின் துணையுடன் சில முடிவுகளை முன்வைக்க இடமுண்டு.

சங்க காலத்தை மாறுதல் நிகழும் காலம் (Transition period) என்பதற்கான அகச்சான்றுகள் சங்க இலக்கியத்தில் உள்ளன. மாறுதல் நிகழும் காலத்தில் பழையனவும் புதியனவும் ஒருசேர நிலவும். இவ்வகையில் நாணய முறையும், பண்டமாற்று முறையும் ஒரே நேரத்தில் வழக்கில் இருந்துள்ளன.

வணிகர்களும் அவர்களது வணிகச் சாத்துக்களும் (குழுக்கள்) இயங்கிக் கொண்டிருந்த சமூகத்தில் பண்ட மாற்று முறையும் தொடர்ந்துள்ளது.

தமிழக வரலாற்றின் தோற்ற காலத்திலேயே (பெருங்கற்காலம்-மெகலாத்திக்காலம்) நெற்பயிர் அறிமுகமாகி இருந்துள்ளது. ஆதிச்சநல்லூர், புதைகுழிகளில் கிடைத்த தாழிகளில் நெல் மணிகளும் உமிகளும் கிடைத்துள்ளன. குன்னத்தூர் அகழாய்வில் நெல்லரிசித் தவிடு கிடைத்துள்ளது. பண்டமாற்றில் மதிப்புறு பொருளாக நெல் இருந்துள்ளது. ‘நெல்உகுத்துப் பரவுங்கடவுள்' ‘நெல்லும் உயிரன்றே’ ‘நெல் பலபொலிக' என்ற சங்கப் பாடல் தொடர்களும்,வெறியாட்டு என்ற சடங்கில் நெல் பெறும் இடமும் இதன் முக்கியத்துவத்தை உணர்த்துகின்றன. நெல் வேளாண்மை நிகழும் வளம் மிக்க மருத நிலத்தின் பொருளாதார வளர்ச்சியும், கைத்தொழில்கள் உருவாக்கமும் அதைச் சார்ந்து உருவான அரசியல் மேலாண்மையும் இதன் பின்புலமாக இருந்துள்ளன. நெல்லுக்கு இணையான மதிப்பை உப்பு பெற்றிருந்ததானது (சான்று:1) அதுவும் ஒரு உற்பத்திப் பொருள் என்பதால்தான். அதன் கிடைப்பருமையும் மற்றொரு காரணமாக இருந்துள்ளது.

பண்டமாற்றானது பெரும்பாலும் உணவுப் பொருளை மையமாகக் கொண்டே நிகழ்ந்துள்ளது. இங்கு எடுத்துக் காட்டாகக் காட்டப்பட்ட சான்றுகளில் பெரும்பாலானவை அடிப்படைத் தேவையான நெல், மீன், பயறு, கள் என்பவைதாம்.

மதுரைக் காஞ்சி, பட்டினப்பாலை, ஆகிய நூல்களில் இடம்பெற்றுள்ள வாணிபப் பொருள்களுடன் இப் பண்டமாற்றுப் பொருள்களை ஒப்பிடும் போது இவை அன்றாட வாழ்வின் பயன்பாட்டிற்குரியன என்பதில் ஐயமில்லை.விதிவிலக்காக முத்துக்களும் அணிகலன்களும் இடம் பெற்றுள்ளன.

வணிகர்களும், வணிகக் குழுக்களும் நடத்திய வாணிபத்தில் விற்போர் விலையை முடிவு செய்வோராக விளங்கினர். பண்டமாற்று வாணிபத்தில் வாங்குவோர் விற்போர் என்ற பாகுபாடு இன்றி தேவையே முன் நிறுத்தப்பட்டது.இரு தரப்பினரும் தம்மிடம் இருந்த பொருட்களின் உரிமையாளராக இருந்தனர். அதன் மதிப்பை அவர்களே முடிவு செய்தனர். ஆயினும் உற்பத்திப் பொருட்களின் சுழற்சியில் பணத்தின் பங்களிப்புக்கு இணையாக பண்டமாற்று முறையால் செயல்பட முடியாது போனது. பண்டமாற்றில் இடம் பெற்றிருந்த பொருட்கள் குறித்து மேலும் விரிவாக ஆராய்ந்தால் அன்றையத் தமிழ்ச் சமூகத்தில் நிலவிய பொருளாதாரம் சார்ந்த சமூக வேறுபாடுகளை அறிய முடியும்.

- ஆ.சிவசுப்பிரமணியன்