இந்நூலினை இரண்டு பகுதிகளாகப் பிரித்து அறிந்துகொள்ளமுடிகிறது. ஒன்று, மன்னர் காலத்தில் ஆங்கிலேயர்களை எதிர்த்து நின்று போரிட்ட வீரமகளிர்கள். அடுத்தது, சுதந்திரப் போராட்டக் காலத்தில், மகாத்மாகாந்தி அழைப்பு விடுத்த ஒத்துழையாமை இயக்கம் மற்றும் உப்பு சத்தியாகிரகம் உள்ளிட்ட போராட்டங்கள் மற்றும் சேவைகளில் பங்கெடுத்துக் கொண்ட வீரமகளிர்கள் பற்றியதாகும். இந்நூல் தொகுப்பினுள் மொத்தம் 50 வீரமகளிர் பற்றிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றினையெல்லாம் தனித்தனியாக விவரித்தால் பக்கங்கள் நீண்டுவிடும் என்பதால், விரிவஞ்சி முக்கியமான வீரமகளிர் பற்றி சுருக்கி அளிக்கப்படுள்ளது.

சிவகங்கை இராணி வேலு நாச்சியார்

1735இல் இராமநாதபுரம் மன்னர் செல்லமுத்து விஜயரகுநாத சேதுபதியின் மகள்தான் வேலு நாச்சியார். 1772இல் மன்னரையும் இளையராணியையும் ஆங்கிலேயர் கொன்றுவிட, வேலுநாச்சியார் தனது சின்னஞ்சிறு மகனைப் பாதுகாத்தபடி, காளையார்கோவிலிலிருந்து தப்பிச் சென்று, சிவகங்கைச் சீமையிலுள்ள மக்களைத்திரட்டி ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் படைகளை உருவாக்கினார். மருது சகோதரர்களும் இப்போராட்டத்திற்குத் தலைமை தாங்கினர். போரின்போது, தன் கணவரைக் கொன்ற ஆங்கிலேயர்களை பழிதீர்த்து அரசை மீட்ட வேலுநாச்சியார் 1796ல் மறைந்தார்.

viduthalai kalaththil veera magalirஜான்சிராணி லட்சுமிபாய்

1828 நவம்பர் 19இல் பிறந்த மனு, 1842இல் ஜான்சி மன்னர் கங்காதர்ராவ் நெவல்கர் என்பவரை மணந்து, மனு ஜான்சிராணி ஆனார். 1851இல் மகன் தாமோதர்ராவ் பிறந்த நான்கே மாதங்களில் இறந்துபோக, ஆனந்த்ராவ் என்பவரை மகனாகத் தத்தெடுத்து வளர்க்கின்றனர். இந்நிலையில் மன்னர் நோய்வாய்ப்பட்டு இறந்து போக, மகனை மன்னராக்க முயற்சிக்கின்றனர். அப்போது, டல்ஹெளசி பிரபு உருவாக்கிய அவகாசியிலிக் கொள்கையின்படி, நேரடி வாரிசு இல்லாத மன்னரின் அரசு தங்களுக்கே சொந்தம் எனக்கூறி வாரிசுரிமையை நிராகரித்தது ஆங்கிலேய அரசு. இதனையொட்டி, அண்டைநாட்டு மன்னர்களின் உதவியைப் பெற்று, மக்கள் படைகளையும் திரட்டிய ஜான்சிராணி, குவாலியர்மீது படையெடுத்து அக்கோட்டையைக் கைப்பற்றினார். 1856ல் குவாலியரில் முகாமிட்ட ஆங்கிலேயப் படை போரினை நடத்தி, குவாலியரைக் கைப்பற்றியது. போரில் ஜான்சிராணி படுகாயமடைந்து மரணமுற்றார்.

அன்னிபெசண்ட் அம்மையார்

1847இல் அயர்லாந்தில் பிறந்த அன்னிபெசண்ட், தனது 19 வயதில் பிராங்க் பெசண்ட் எனும் மதகுருவை மணக்கிறார். கருத்துவேறுபாடின் காரணமாக, கணவரைப்பிரிந்து லண்டன் திரும்பினார். பகுதிநேரப் படிப்பு, சமூகப்பணி, சீர்திருத்தப் பரப்புரை என தொடர்கிறது பணி. 1889ல் பாரீஸில் பிளாவட்ஸ்கி அம்மையாரைச் சந்தித்தவுடன் அன்னியின் சிந்தனைப்போக்கில் மாற்றம் ஏற்பட்டு, பிரம்மஞான சங்கத்தில் உறுப்பினரானார். 1891ல் பிளாவட்ஸ்கி மரணமடைய அன்னிபெசண்ட் அச்சபையின் முக்கியஸ்தரானார். 1893இல் இந்தியா வந்தடைந்த அன்னிபெசண்ட், சென்னை அடையாறில் பிரம்மஞானசபையின் தலைமையகத்தினை நிறுவினார். 1907ல் சூரத் நகரில் நடைபெற்ற இந்தியக் காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்டார். ஹோம்ரூல் இயக்கத்தை நாடு முழுக்கத் தொடங்கி விடுதலை இயக்கத்துக்கு வலுவூட்டினார். 1913ல் ‘காமன்வீல்’ எனும் வாரப்பத்திரிகையையும்,1914ல் ‘நியூ இந்தியா’ எனும் பெயரில் நாளேடு ஒன்றையும் துவங்கி நடத்தினார். 1917இல் காங்கிரஸ் தலைவர்களோடு அன்னிபெசண்ட் அம்மையாரும் கைதாகி சிறைசென்று விடுதலையானார். அந்தவருடம் கல்கத்தாவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் அக்கட்சியின் தலைவராக ஓராண்டுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அருணா ஆசஃப் அலி

1909 ஜூலை 16இல் பஞ்சாப் மாகாணம் நல்காவில் பிறந்த அருணா பட்டம் பெற்றபின் கொல்கத்தா நினைவுப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வரும்போது, பகத்சிங்குக்காக வாதாடிய வழக்கறிஞர் முகமது ஆசஃப் அலியை மணந்தார். திருமணத்திற்குப் பின் இந்திய தேசிய காங்கிரஸில் இணைந்து அரசியலில் ஈடுபட்டார். உப்புச்சத்தியாகிரகம், சட்டமறுப்பு போராட்டத்திலும் ஈடுபட்டு கைதாகி சிறைவாசமிருந்தார். 1942 இல் வெள்ளையனே வெளியேறு தீர்மானத்தை கொண்டு வரும் வாய்ப்பினை மகாத்மாகாந்தி அருணாவுக்கு அளித்தார். ஆகஸ்ட் 8ந் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதனையும் நிறைவேற்றினார். வெள்ளையனே வெளியேறு மாபெரும் மக்கள் இயக்கமாக மாறியது. போராட்டத்தை ஒடுக்க நினைத்த ஆங்கிலேய அரசு அருணாவிற்கெதிராக கைது வாரண்ட் பிறப்பித்தது. அருணாவோ ராம் மனோகர் லோகியாவோடு இணைந்து ‘இன்குலாப்’ எனும் இதழ் நடத்திவந்தார். 1946ல் அருணாவுக்கெதிராக கைது வாரண்ட் விலக்கிக் கொள்ளப்பட்டதும் தலைமறைவிலிருந்து வெளியே வந்தார். தேச விடுதலைக்குப்பின், பெண்கள் சம உரிமை, முன்னேற்றத்தினை வலியுறுத்தி ‘இந்திய மாதர் சம்மேளனத்தினை’ உருவாக்கி பாடுபட்டார். பல்வேறு விருதுகளைப் பெற்ற அருணா ஆசஃப் அலி 1996 ஜுலை 26 ந்தேதி மறைந்தார்.

ருக்மணி லெட்சுமிபதி

1892 டிசம்பர் 6இல் பிறந்த ருக்மணி, தனது விருப்பப்படி 1911இல் டாக்டர் லட்சுமிபதியை கலப்புமணம் புரிகிறார். பெண்களைத் துன்பத்தில் ஆழ்த்தும் பிரச்சினைகளைக் களைய மதுவிலக்குப் பிரச்சாரம், தேவதாசி முறை ஒழிப்பு, பால்யவிவாஹம் போன்றவற்றிற்காக பாடுபடலானார். உப்பு சத்தியாகிரக போராட்டத்தில் கலந்து கொண்டார். 1927இல் சென்னையில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் மாதர் பிரிவுச் செயலாளரானார். பின்னர் 1928இல் தண்டி யாத்திரை தின ஊர்வலத்தினை தடையை மீறி நடத்தினார். தீண்டாமை எதிர்ப்பு மாநாட்டில் நிதி சேகரிப்புக்காக தனது நகைகளை காந்தியடிககளிடம் பரிசாக அளித்தது மட்டுமின்றி, தனது வீட்டில் பணியாளர்கள் அனைவரரையும் ஒடுக்கப்பட்டவர்களாவே வேலைக்கு அமர்த்தினார். ராஜாஜி அமைச்சரவையிலும், அதன்பின் சென்னை மாகாண அமைச்சரவையில் பொதுச்சுகாதார அமைச்சராகவும் பணியாற்றிய இவர் 1951-ல் காலமானார்.

அம்மு சுவாமிநாதன்

கேரளாவின் மலபாரில் பிறந்தவர் சுவாமிநாதன். இளம்வயதில் தனது தந்தையை இழந்ததால், கல்வி பயில சிரமம் ஏற்பட்டது. அப்போது அவ்வூர் நகராட்சித்தலைவராக இருந்த கோவிந்தமேனன், சுவாமிநாதனுக்கு கல்விபயில உதவினார். படிப்பு முடிந்ததும் தாயகம் திரும்பியவருக்கு யாரும் பெண்கொடுக்க முன்வரவில்லை. மலபாரில் தனக்கு உதவிய கோவிந்தமேனன் குடும்பம் நினைவுக்குவர, அவரது கடைசி மகள் அம்முவை திருமணம் செய்து கொள்கிறார். அம்முவின் விருப்பப்படி, அவரது வீட்டிலேயே ஆங்கிலக் கல்வி பயிற்றுவிக்கப்பட்டது. அவர்கள் வீட்டின் பணியாளர்கள் பலரும் சாதி வேறுபாடின்றி நியமிக்கப்பட்டனர். அத்தம்பதியர்களுக்குப் பிறந்தவர்களில் முக்கியமானவர் கேப்டன் லட்சுமி, பிரபல விஞ்ஞானி விக்ரம் சாராபாயின் மனைவி மிருணாளினி ஆவர். அம்மு 1917ல் அன்னிபெசண்ட், மார்க்கரெட் சகோதரிகள், முத்துலெட்சுமி ரெட்டி ஆகியோருடன் சேர்ந்து மகளிர் சங்கத்தினைத் தொடங்கினார். பெண்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்ற முடிவுக்கு வந்த இந்த அமைப்பு, குழந்தைத் திருமணத்தை முடிவுக்குக் கொண்டுவர நீண்ட போராட்டத்தை நடத்தியது மட்டுமின்றி, பெண்கள் வாக்குரிமைக்காகவும் போராடியது. 1942ல் வெள்ளியனே வெளியேறு போராட்டம் நடத்தியதற்காகச் சிறைசென்றார். 1946ல் அரசியல் நிர்ணய சபை உறுப்பினரானார். சுதந்திரத்திற்குப்பின் பல்வேறு பதவிகளை வகித்த அவர் 1978 ஜூலையில் காலமானார்.

டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி

1886 ஜுலை 30இல் புதுக்கோட்டை சமஸ்தான மன்னரின் ஆலோசகராக இருந்த நாராயணசாமி அய்யர் - சந்திரம்மாள் தம்பதியரின் மகள்தான் முத்துலெட்சுமி. புதுக்கோட்டைப் பகுதியில் மெட்ரிக்குலேஷன் தேர்வு எழுதிய முதல்பெண் இவர்தான். முத்துலெட்சுமி கல்லூரிப் படிப்பைத்தொடர மன்னர் உபகாரச் சம்பளத்துடன் அனுமதியளித்தார். இண்டர்மீடியட் தேர்வில் சென்னைப் பல்கலைக்கழகத்திலேயே முதலிடம் பிடித்து தேர்ச்சிபெற்று, சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து 1912ல் மருத்துவப்பட்டமும் பெற்றார். தமிழ்நாட்டிலேயே பணிபுரியத் தொடங்கிய முதல் பெண் மருத்துவருமாவார். டாக்டர் முத்துலெட்சுமிக்கு ஏற்கனவே அன்னிபெசண்ட், கவிக்குயில் சரோஜினி, டாக்டர் நஞ்சுண்டராவ் ஆகியோருடனான தொடர்பினால், சமூகச் செயல்பாடுகளுக்கு முன்னுரிமை தந்து செயல்பட்டுவந்த சமயம், டாக்டர் சுந்தரரெட்டியை திருமணஞ்செய்துகொண்டார். பின்னர், அரசின் நிதியுதவி பெற்று புற்றுநோய் குறித்து மேற்படிப்பு பயில இங்கிலாந்து சென்றார். படிப்பு முடிந்ததும், தாயகம் திரும்பி, சென்னை மாகாணச் சட்டமன்ற உறுப்பினரானார். பின்னர், மகளிர் வாக்குரிமை, இருதார மணச் சட்டம், பெண்களுக்குச் சொத்துரிமை, பால்ய விவாஹச்சட்டம் போன்ற பல சீர்திருத்தங்களை முன்னெடுத்தார். காந்திஜியின் உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தினை ஆதரித்து, தனது பதவியினைத் துறந்தார். புற்றுநோய் சிகிச்சை மையத்தினை திறந்து சேவையாற்றினார். இவ்வாறு மக்களின் நலனுக்காகாக உழைத்தவர் 1968 ஜுலை 28இல் மறைந்தார்.

கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்

மதுரை மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகிலுள்ள அய்யங்கோட்டை எனும் கிராமத்தில் பிறந்தவர்தான் கிருஷ்ணம்மாள். உள்ளூரில் ஏழாம்வகுப்புக்கு மேல் படிக்க வசதியில்லாததால், மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு அருகில் இருந்த தட்டிப்பள்ளிக்கூடத்தில் சேர்த்துவிடப்படுகிறார். அங்கும், எட்டாம் வகுப்போடு தட்டிப்பள்ளிக்கூடம் முடிய, பள்ளித் தலைமையாசிரியரோ அவரை டாக்டர். சௌந்தரம் அவர்களிடம் அடைக்கலமாக்கினார். படிப்பைத் தொடர்ந்த கிருஷ்ணம்மாள் ஆதரவற்ற பெண்களுக்கு எழுத்தறிவித்து வந்தார். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தனது கல்லூரிப் படிப்பை முடித்தார். ஒருமுறை காந்திஜி மதுரை வந்திருந்தபோது, காந்திஜியின் உதவியாளர் சுசிலா நய்யாருக்கு உதவிட கிருஷ்ணம்மாள் பணிக்கப்பட்டார். அதுவே காந்திஜியை சந்திக்கும் முதல்வாய்ப்பாக அமைந்தது. டாக்டர் சௌந்தரம் அம்மாள் மூலமாக காந்திகிராமத்தில் சமூகப்பணியாற்றி வந்தார். டாக்டர் சௌந்திரம் அம்மாளின் கணவர் இராமச்சந்திரன் மூலமாக காந்தியடிகளுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட ஜெகந்நாதனை திருமணம் செய்துகொள்கிறார். தேச விடுதலைக்குப் பின்னர், இருவரும் சேர்ந்து, மக்கள் நலப்பணி, சர்வோதயத் தொண்டு ஆற்றிவந்தனர். வினோபாவின் பூமிதான பாதயாத்திரையில் உதவியாளராகச் சென்றார் கிருஷ்ணம்மாள். ஜெகந்நாதன் தமிழ்நாட்டு பூமிதான இயக்கத்திற்கு பொறுப்பாளரானார். சுயசார்பு பொருளாதாரத்திற்கு ஏற்ற வாய்ப்புக்களை உருவாக்கி இன்றும் தொண்டினைத் தொடர்கிறார் கிருஷ்ணம்மாள்.

கேப்டன் லட்சுமி

1914 அக்டோபர் 24இல் அம்மு சுவாமிநாதனின் மகளாகப் பிறந்தவர்தான் லட்சுமி. ஒருமுறை சரோஜினி நாயுடுவின் சகோதரி சுஹாசினி நம்பியார் மீரட் சதி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு, தேடப்பட்டு வந்தபோது, சுஹாசினையை அம்மு சுவாமிநாதன் தனது வீட்டில் தங்க வைத்திருந்தார். அவருடனான லட்சுமியின் உரையாடல்கள் அவரை மார்க்சியத் தத்துவம் நோக்கியும் ருஷ்யப் புரட்சி குறித்தும் சிந்திக்கத் தூண்டியது. சென்னை மருத்துவக் கல்லூரியில் பட்டம் பெற்று சேவையாற்றி வரும்போது, விமானியான ராவ் என்பவரை மணந்து கொண்டார். அத்திருமணம் முறிந்து போகிறது. இச்சூழலில், தனது உறவினர் ஒருவருக்கு மருத்துவ உதவி செய்ய வேண்டி 1940இல் சிங்கப்பூர் சென்றார். பிறகு அங்கேயே ஒரு மருத்துவமனையைத் திறந்து பணியாற்றி வந்தார். இதற்கிடையே 1941இல் ஜப்பானியர் சிங்கப்பூரைத் தாக்கினர். பிரிட்டிஷ் படை பின்வாங்கியது. அப்போது அங்கே இந்திய தேசிய ராணுவம் உருவாகிறது. இதன் மக்கள் சேவை அமைப்புதான் இந்தியச் சுதந்திர லீக் ஆகும். அதன் உறுப்பினராக லட்சுமி சேருகிறார். 1942இல் பிரிட்டிஷ்- ஜப்பான் போரில் காயமடைந்தவர்களுக்கு சேவையாற்றுவது லட்சுமியின் பணியாக இருந்தது.

1943இல் இந்திய சுதந்திர லீக்கின் அழைப்பின் பேரில் சுபாஷ் சந்திரபோஸ் சிங்கப்பூர் வந்தார். அப்போது, இந்தியச் சுதந்திரப் போரில் பெண்களும் ஆயுதப் போரட்டத்தில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட, ஜான்சிராணி படையின் தளபதியானார் கேப்டன் லட்சுமி. அச்சமயத்தில் மருத்துவமனை குண்டு வீசி தாக்கப்படுகிறது. அத்தாக்குதலில் கேப்டன் லட்சுமி கைதியாக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டார். இந்தியாவிற்குள் அடியெடுத்து வைத்து சுதந்திரத்திற்காகப் போராடுவோம் என்கிற லட்சுமியின் குரல் பிரிட்டிஷாருக்கு எட்டவே, லட்சுமி விசாரணையின்றி இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். இங்குவந்தும் சிங்கப்பூரிலிருந்து பிழைத்து வந்த இந்திய தேசிய இராணுவ வீரர்களின் புனர்வாழ்விற்காகப் பாடுபட்டார். நாடு விடுதலை பெற்றபின், இந்திய தேசிய இராணுவத்தில் பணியாற்றிய கர்னல் பிரேம்குமார் சேகலை மணந்து கொண்டார். பொதுஉடைமை இயக்கத்தில் ஈடுபாடுகொண்ட கேப்டன் லட்சுமி 1971ல் மர்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரானார். இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் முக்கியத் தலைவரான கேப்டன் லட்சுமி 2002இல் இந்தியக் குடியரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்றார். 2012 ஜுலை 23 ந்தேதி மறைந்தார்.

விடுதலைக்களத்தில் வீர மகளிர் |

உமா மோகன் | பாரதி புத்தகாலயம்,

சென்னை-18. | விலை. ருபாய் 160/-

நிகழ் அய்க்கண்

Pin It