இப்பொழுது நமது நாட்டை ஆண்டு கொண்டிருக்கும் வெள்ளைக் காரர்களைத் துரத்தி விட்டு இந்நாட்டின் அரசாட்சியை நாமே ஆள வேண்டும் என்று தேசீயவாதிகள் ஜனங்களிடம் கிளர்ச்சி செய்து அவர்களைத் தூண்டி வருகிறார்கள். இதற்காக சட்டமறுப்பு, வரிகொடாமை முதலிய இயக்கங்களை நடத்தி வருகிறார்கள். ஆனால், தாழ்த்தப்பட்ட வகுப்பினர்களாகவும், தீண்டாத வகுப்பினர்களாகவும் உள்ள சுமார் 7 கோடி மக்கள் இந்துக்களின் ஆட்சியை விட வெள்ளைக்காரர்களின் ஆட்சியையே - அதாவது அவர் களின் பாதுகாப்பையே விரும்புகின்றனர். இவ்வாறு இவர்கள் விரும்புவது நியாயமானதே என்பதும் இதற்குக் காரணம் இல்லாமற் போகவில்லை என்பதுமே நமது அபிப்பிராயமாகும்.

நமது நாட்டிற்கு வெள்ளைக்கார ஆட்சி வருவதற்கு முன் பல ஆயிரக்கணக்கான வருஷங்களாக இந்துக்களுடைய ராஜ்யபாரம்தான் இருந்து வந்தது. அக்காலத்தில் அதாவது அந்தப் பல ஆயிரம் ஆண்டுகளிலும் தீண்டத்தகாத வகுப்பினர்களெல்லாம், தீண்டத்தகாதவராகவும்! தெருவில் நடக்கத் தகாதவராகவும், கண்ணால் பார்க்கத் தகாதவராகவும், சண்டாளராகவும், அடிமைகளாகவும், சுகாதாரமற்ற சதுப்புநிலங் களில் வசிக்கின்றவர்களாகவும், உண்ண உணவில்லாதவராகவும் உடுக்க உடை இல்லாதவராகவும் தான் இருந்து வந்தார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. இவ்வுண்மையை இந்துக்களின் பரிசுத்தமான நூல்களாகக் கருதப்படும் புராணங்கள் ஸ்மிருதிகள் முதலியவைகளைக் கொண்டும் இந்திய நாட்டின் சரித்திரத்தைக் கொண்டும் அறியலாம். இன்றும் வெள்ளைக் கார அரசாங்கத்தார், தீண்டத்தகாதவர்களுக்குச் செய்ய முன் வரும் சில நன்மைகளையும் மதம், வழக்கம், சாஸ்திரம் என்பவைகளின் பேரால் தடுத்துக் கொண்டிருக்கிறவர்கள் உயர்ந்த சாதி இந்துக்களே என்பதை யாரும் மறுக்க முடியாதல்லவா?

periyar kamarajarநமது மதத்திலும், நமது சமூக சீர்திருத்தங்களிலும் தலை யிடாமல் இருக்கும் அந்நிய ஆட்சியிலேயே உயர்ந்த ஜாதி இந்துக்கள், தாழ்த்தப்பட்ட தீண்டாதார்களைப் பலவகையிலும், தொந்தரவு பண்ணி அடிமையாக்கி மிருகங்களைப் போல் வைத்திருக்க விரும்புகின்றார்கள்; அவர்கள் விரும்பும் சமத்துவத்திற்கும் சுயமரியாதைக்கும் எதிராக பலமான கிளர்ச்சி செய்கின்றார்கள் என்றால் இப்படிப்பட்டவர்கள் கையிலேயே ராஜ்ய அதிகாரமும் கிடைத்துவிட்டால் அப்பொழுது நமது நாட்டு ஒடுக்கப்பட்டவர் களின் கதி என்ன ஆகும்? தென்னாப்பிரிக்காவில் உள்ள வெள்ளையர்கள், இந்தியர்களை எவ்வாறு முன்னேற முடியாமல் அடக்கி வைக்கவும், அந்த நாட்டை விட்டு ஓட்டி விடவும் முயலுகின்றார்களோ, அதைவிட இன்னும் பன்மடங்கு அதிகமாகத் தீண்டாதார்களை அடக்கி வைக்க முயல்வார்கள் என்பதில் சிறிதும் ஐயமில்லை. தென்னாப்பிரிக்கா வெள்ளையர்களாவது தங்களுடைய சுய நலத்தையும் பொருளாதார நிலையையும் கருதி இந்தியர்களை அடக்கி வைக்க நினைக்கிறார்களேயொழிய வேறு மத சம்பந்தமான குருட்டு எண்ணம் அவர்களிடம் ஒன்றுமில்லையென்று சொல்லலாம். ஆனால் நமது நாட்டு வருணாச்சிரம தரும இந்துக்களோ சுயநலத்தோடுங் கூட தீண்டாதவர்கள் எப்போதும் தீண்டாதவர்களாகவே அடக்கி வைக்கப்பட வேண்டுவது மத கட்டளையாகவும் “கடவுள்’’ சித்தமாகவும், சாஸ்திர சம்மத மாகவும் கருதுகிறார்கள்; கருதுவார்கள் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை.

இக்காரணங்களை முன்னிட்டே இன்று தீண்டாத வகுப்பினரும், மற்ற சிறு பான்மை வகுப்பினரும் இந்துக்களின் அதாவது வருணாச்சிரம தரும உயர்தர ஜாதி இந்துக்களின் ஆட்சியை விட அந்நியர்களாகிய வெள்ளையர்களின் பாதுகாப்புள்ள ஆட்சியையே மேலானதாக விரும்புகிறார்கள் என்பதை வட்ட மேஜை மகாநாட்டில் டாக்டர். அம்பெட்கார், திரு. சீனிவாசன் முதலிய வர்கள் கூறிய அபிப்பிராயங்களை கொண்டும் இந்தியாவில் பல பாகங்க ளிலும் அவர்கள் நடத்திய மகாநாடுகளின் தீர்மானங்களைக் கொண்டும் அறியலாம். இவ்வாறு விரும்புவதில் தவறு ஒன்றுமில்லை என்றே நாமும் உறுதியாகச் சொல்லுகிறோம். இவ்விஷயத்தை இன்னும் உறுதியாக வற்புறுத் துவதற்குச் சென்ற டிசம்பர் மாதம் 27, 28, 29 ஆகிய மூன்று தினங்களிலும் கல்கத்தாவில் நடைபெற்ற அகில இந்திய சுயராஜ்ய சங்க மகாநாட்டின் தீர்மானங்களே போதுமானதாகும்.

ஆகையால் அம்மகாநாட்டுத் தீர்மானங்களைக் கவனிப்போம்.

1. “தீண்டாதவர்கள் இந்து மதத்தில் சேர்ந்தவர்கள் தான்”

2. “தீண்டாதவர்கள், வேதம், புராணம், ஸ்மிருதி, முதலிய வைகளைப் பின்பற்றுகிறவர்களென்று அவர்கள்மேல் மற்ற உயர்ந்த ஜாதி இந்துக்கள் சகோதர வாஞ்சை காட்டி வருகின்றனர்”.

3. “சில சீர்திருத்தக்காரர்களால், அவர்கள் அனாவசியமாகக் கிளப்பிவிடப்பட்டது காரணமாக, அவர்கள் வருணாச்சிரம தருமி களுக்கு விரோதிகளாய் விட்டனர்”.

என்று தீர்மானங்கள் நிறைவேற்றியிருக்கின்றனர். இத்தீர்மானங் களினால் தீண்டாதாருக்கு இன்னும் ஆபத்தேயொழிய ஒரு சிறிதும் நன்மை யில்லை என்பது உறுதி. தீண்டாதவர்கள் இந்துக்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கும் வரையிலும் அவர்கள் அடிமையாகத்தான் இருந்து தீரவேண்டும். சமத்துவம் பெறவே முடியாது. இந்து மத வேத, புராண, ஸ்மிருதிகளை ஒப்புக் கொள்ளுகிறவர்கள்தான் இந்துக்களாவார்கள் என்பதை நாம் சொல்ல வேண்டியதில்லை. வேத, புராண ஸ்மிருதிகளை ஒப்புக் கொண் டால் வருணாச்சிரம தருமத்தையும் ஒப்புக் கொண்டாக வேண்டும். வருணாச்சிரம தர்மத்தை ஒப்புக்கொண்டால் பார்ப்பான் உயர்ந்தவன், க்ஷத்திரியன் பார்ப்பானுக்குத் தாழ்ந்தவன் ஆகையால் பார்ப்பான் சொன்னபடியே கேட்க வேண்டும்; வைசியன் பார்ப்பானுக்கும் க்ஷத்திரியனுக்கும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்; சூத்திரன் மேற்கூறிய மூவர்களுக்கும் வேலை செய்ய வேண்டும்; பஞ்சமன், சண்டாளன், தெருவில் நடக்கக் கூடாது ஊருக்கு வெளியில்தான் கிடக்க வேண்டும்; கல்வி கற்கக் கூடாது; நல்ல உணவு கொள்ளக் கூடாது; நல்ல உடை தரிக்கக் கூடாது; எந்தப் பொது இடங்களுக்கும் வரக் கூடாது என்ற நிலையில் இருந்துதான் ஆக வேண்டும். ஆகவே இந்த நிலையில் இருக்கத் தீண்டாதவர்கள் தம்மை இந்துக்கள் என்று கூறிக் கொள்ளச் சம்மதிக்கலாமா? அப்படி சம்மதிப்பதனால் தம்முடைய தாழ்ந்த நிலையை - அடிமைநிலையை - கஷ்டமான நிலைமையை விட்டுக் கரையேற வழியுண்டா? என்று தான் கேட்கிறோம்.

மேல் உள்ள தீர்மானங்களில் மூன்றாவது தீர்மானத்தில் அவர்கள் தங்கள் சமத்துவத்திற்குப் போராடுவது தகாது என்று கூறிவிட்டார்கள். “சீர்திருத்த வாதிகளால் அனாவசியமாக கிளப்பிவிடப்பட்டார்கள்” என்று சொல்லுவதிலிருந்து “தீண்டாதவர்கள் கேட்கும் சமவுரிமை அனாவசியமான தென்று” அகில இந்திய வருணாச்சிரம சுயராஜ்ய சங்கத்தார் அபிப்பிராயப் படுகிறார்களெனவும், “தீண்டாதவர்கள் இது வரையிலும் இருந்த அடிமை வாழ்க்கையில் இருப்பதே அவசியமானதென” அபிப்பிராயப்படுகிறார்கள் எனவும் பட்டப்பகல் போல் உணரக்கிடக்கின்றதல்லவா?

இன்னும் அவர்கள் செய்திருக்கும் தீர்மானங்களைப் பார்த்தால் நாம் மேலே கூறியதில் எள்ளளவும் பிசகில்லை என்பதையும், அவை முற்றும் உண்மை என்பதையும் அறிந்து கொள்ளலாம். அத்தீர்மானங்கள் வருமாறு:-

4. “நாசிக் ஆலயத்தையும், ராமகுண்ட தீர்த்தத்தையும் அசுத்தப்படுத்த முயற்சி செய்கின்றவர்களைக் கண்டிக்கின்றது”.

5. “இந்தச் சத்தியாக்கிரகிகளைக் கஷ்டத்தோடு எதிர்க்கும் சனாதன தர்ம இந்துக்களை இம்மகாநாடு பாராட்டுகின்றது. இவர்களுக்குத் தேவைப் படும் பண உதவியையும், மற்ற உதவிகளையும் செய்யத் தயாராயிருப்பதாக உறுதி கூறுகிறது”.

6. “தீண்டாத வகுப்புப் பிள்ளைகளுடன் வருணாச்சிரம தருமி களின் பிள்ளைகளும் சேர்ந்து பள்ளிக்கூடங்களில் படிக்கும்படி வற்புறுத்தும் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் போக்கையும் இந்திய சமஸ் தானங்களின் போக்கையும் கண்டு இம்மகாநாடு வருந்துகிறது”.

இத்தீர்மானங்களும் அம்மகாநாட்டில் நிறைவேற்றப்பட்டிருப் பதிலிருந்து அவர்களுடைய மனப்பான்மை இன்னதென்பதை அறியலாம். இந்த மனப்பான்மை தான் நமது நாட்டில் உள்ள உயர்ந்த ஜாதி இந்துக்களாகிய பார்ப்பனர்கள், அவர்கள் வலையில் சிக்குண்டு கிடக்கும் பார்ப்பனரல்லா தார்கள், இந்துமத பக்தர்கள் எல்லோரிடத்திலும் குடி கொண்டிருப்பதாலும், இந்த அபிப்பிராயமுள்ள மக்களே மிகுதியாக இருக்கும் ஒரு தேசத்தில் உள்ள ஒரு ஏழைத் தீண்டத்தகாத மக்கள் எப்படி முன்னுக்கு வரமுடியும்? அதிலும் இவர்கள் கையில் அதிகாரமும் ராஜ்ய பாரமும் வந்துவிட்டால் இன்று சம தர்மக் கிளர்ச்சி செய்கின்றவர்களின் கதியும், தீண்டத்தகாத மக்களுக்குப் பாடு படும் தலைவர்களின் கதியும் என்னவாகும்? திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் காலத்தில் சமணர்களுக்குக் கிடைத்த கழுவேற்றத்தைப் போல தூக்குத் தண்டனையும் சித்திரவதையும் தீவாந்தர சிட்சையும் சிறைத் தண்டனையும் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை அல்லவா.

இவ்வளவு காரியங்களைச் செய்ய இந்து மதமும், இந்து மதச் சாஸ்திரங்களும் தடை செய்யாமல் இவற்றுக்கு அனுகூலமாகவே இருக்கும் என்று உறுதியாகக் கூறுகிறோம். ஆகையால் தான் நாம் இந்து மதமும், ஜாதிகளும் ஒழிய வேண்டும் என்று கூறிவருகின்றோம். இவை ஒழிந்தால் இத்தகைய ஆபத்துகள் ஒன்று மில்லை. கல்கத்தா, “அகில இந்திய வருணாச்சிரம சுயராஜ்ய சங்க” மகா நாட்டார் தீண்டாதார்களை இந்துக்களென்று முடிவு கட்டிய பின்னர்தான், “அவர்கள் சமத்துவம் பெறுவதற்கு தகுதியுடையவர்கள் அல்லர்” என்று தீர்மானம் பண்ணியிருக்கிறார்கள் என்பதை ஆலோசித்துப் பார்ப்பவர்கள் எவரும், இந்து மதம் இருக்க வேண்டும் என்று சொல்லமாட்டார்கள். இந்து மதத்தை வைத்துக் கொண்டு ஜாதிக் கொடுமைகளை ஒழிக்கலாமென்றாவது, சமத்துவம் பெறலாம் என்றாவது சொல்லவும் முன் வரமாட்டார்கள்.

இன்னும் அந்த “அகில இந்திய வருணாச்சிரம சுயராஜ்ய சங்க மகா நாட்டில்” மற்றொரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அது.

``தீண்டத்தகாதவர்களின், வர்ணாச்சிரமதர்மத்திற்கு விரோத மான தவறானஅபிப்பிராயத்தை ஒழிப்பதற்காக நாடெங்கும் உபதேசிகள் பலரை அனுப்ப வேண்டும்’’

என்பதாகும்.

இத்தீர்மானம் எதற்காக என்று யோசித்துப் பார்த்தால் உண்மை விளங்காமல் போகாது. தீண்டத்தகாதவர்களின் சுயமரியாதை உணர்ச்சியை சமதர்ம உணர்ச்சியை அடக்கி அவர்களை இந்து மதத்தவர்களாக - அதாவது அடிமைகளாக - பாவிகளாக - சண்டாளர்களாக - மிருகம் போன்றவர்களாக இருக்கச் செய்ய வேண்டும் என்பதற்காகச் செய்யப்பட்டது தானே ஒழிய வேறில்லை என்பது நிச்சயமாகும்.

இந்த மாதிரி இன்னும் வருணாச்சிரம தர்மப்பிரசாரம் செய்து கொண்டிருக்கும் இந்த நாட்டில் எப்படி சுயராஜ்யம் நியாயமாக நடக்க முடியும்? என்று யோசித்துப் பார்க்கவேண்டுகின்றோம். இத்தகைய வருணாச் சிரம தரும மனப்பான்மையை மாற்ற திரு. காந்தியாலாவது அல்லது மற்ற எந்த தேசீயவாதிகளாலாவது முடிந்ததா? என்று கேட்கின்றோம். இம் மாதிரி யான ஜாதி வருணாச்சிரம தருமக் கொடுமைகளையும், இக்கொடுமை களுக்குக் காரணமாக இருக்கும் மதங்களையும், ஒழித்தால்தான் நாம் சமத்துவம் பெறமுடியும்; நாம் ஒற்றுமையடைய முடியும்; நாம் ராஜ்ய பாரத்தை நீதியோடு - சமாதானத்தோடு - எல்லா மக்களும் சுகமடையும்படி நடத்த முடியும் என்று கூறுகின்றவர்களைத் தேசத்துரோகிகள் என்று சொல்லும் கூட்டம் மெஜாரிட்டியாக இருக்கும் ஒரு தேசம் எப்படி முன்னேற்றமடைய முடியும்? அத்தேசத்தில் உள்ள - கொடுமைப் படுத்தப்படுகின்ற மக்கள் - சிறுபான்மைச் சமூகத்தினர் எப்படி சமஉரிமை பெற்று எதை எப்படி அனுமதிக்க முடியும்? என்பதை யோசித்துப் பார்க்க வேண்டுகிறோம்.

நமது நாட்டிலேயே பிறந்து, நமது நாட்டிலேயே வளர்ந்து, நமது நாட்டிலேயே வாழும் மக்களைக் கொடுமைப்படுத்தும் வருணாச்சிரம தர்மிகளாகிய சகோதரத் துரோகிகளை அடக்க முடியாமல் - அவர்களுடைய செல்வாக்கை ஒழிக்க முடியாமல் - அவர்களுடைய மதங்களையும், சாஸ்திரங்களையும் சுட்டுப் பொசுக்க முடியாமல், அப்படிச் செய்வதற்கும் மனமில்லாமல் இருக்கின்ற நாம் எந்தக் காரியத்தில் தான் வெற்றி பெற முடியும்? என்று கேட்கிறோம். “சுயராஜ்யம்” “சுயராஜ்யம்” என்று சொல்லி பாமர மக்களை ஏமாற்றத்தான் முடியுமே ஒழிய வேறு ஒன்றும் முடியாது என்று உறுதியாகக் கூறுகிறோம்.

(குடி அரசு - தலையங்கம் - 17.01.1932)

Pin It