எஸ்.வி.ராஜதுரையின் மொழிபெயர்ப்பில் நியூ செஞ்சுரி புத்தக நிறுவன வெளியீடாக ‘இந்திய அரசமைப்பு அவையில் அண்ணல் பி.ஆர்.அம்பேத்கர் ஆற்றிய உரை (நவம்பர் 25- 1949) எனும் சிறுநூலை 18.03.2023 அன்று சென்னையில் வெளியிட்டு பாராளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன் அவர்கள் ஆற்றிய உரை.
உடல்நிலை சீராக இல்லாத நிலையிலும்கூட நீலகிரி மாவட்டத்திலிருந்து நெடுந்தூரம் பயணம் செய்து வந்திருக்கிறார் பெருமதிப்பிற்குரிய தோழர் எஸ்விஆர் அவர்கள். அவர் இருந்தால்தான் இந்த நூலை வெளியிடுவது சிறப்பு. அவர் இல்லாமலேகூட வெளியிடுமாறுதான் கேட்டுக்கொண்டார். ஆனால் எவ்வளவு எளிமையான நிகழ்வாக இருந்தாலும் அவர் நம்மோடு இருக்கவேண்டும் என்று நான் என்னுடைய விருப்பத்தைத் தெரிவித்தேன். அதன்படி அவர் பயணம் செய்ய இயலாத நிலையிலும்கூட பயணித்து வந்து ஏற்புரை ஆற்றியிருக்கிறார்.
தமிழாக்கம் செய்து தமிழ்ச்சமூகத்திற்குக் கொடையளித்திருப்பதற்காகவும் இந்த எளிய நிகழ்வில் வருகை தந்து ஏற்புரை நிகழ்த்தியதற்காகவும் தோழர் எஸ்விஆர் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.
தோழர் சாமுவேல்ராஜ் அவர்கள் இந்த உரையில் புரட்சியாளர் அம்பேத்கர் என்ன சொல்லியிருக்கிறார் என்பதைக் குறிப்பிட்டார், எத்தகைய நெருக்கடிகளையெல்லாம் அவர் கடந்து இதைப் படைத்திருக்கிறார் என்பதையும் பதிவு செய்தார். தோழர் எஸ்விஆர் அவர்கள் நீண்ட நேரம் பேசக் கூடியவர்தான். ஆனாலும் நீங்கள் பேச வேண்டும் என்பதற்காக நான் ஒரே நிமிடத்தில் முடித்துக் கொள்கிறேன் என்று சுருக்கமாக உரையை முடித்துக் கொண்டார்.
இப்போது நாடாளுமன்றம் இருப்பதைப்போல அப்போது நாடாளுமன்றம் தனியாக இல்லை.அரசியல் நிர்ணய சபை இருந்தது. அதற்கு குடியரசுத் தலைவர்தான் தலைவர். அரசியல் நிர்ணய சபை என்பதைத்தான் ஆங்கிலத்தில் constituent assembly என்று சொல்வார்கள். அதற்கு உறுப்பினர்கள் வாக்களித்து தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அப்படி புரட்சியாளர் அம்பேத்கரும் தேர்தலில் நின்று வெற்றி பெற்று அரசியல் நிர்ணய சபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் ஒருவர்.
அந்த அரசியல் நிர்ணய சபையிலிருந்து தனியே ஒரு அவை உருவாக்கப்பட்டது. அதுதான் drafting commitiee. இந்தியாவுக்கு அரசியலமைப்புச் சட்டத்தை எழுதுவதற்கென்று ஒரு வரைவுக்குழு உருவாக்கப்பட்டது. அந்த வரைவுக் குழுவின் தலைவராக புரட்சியாளர் அம்பேத்கர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் அரசியல் நிர்ணய சபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதால்தான் அரசியல் சட்டத்தை எழுதுவதற்கான வரைவுக்குழுவில் இடம் பெறுவதற்கான வாய்ப்பு கிடைத்தது.
பட்டியல் சாதிப்பிரிவினரின் நலனைப் பாதுகாப்பதைத் தவிர வேறு எந்தப் பெரிய ஆர்வத்துடனும் நான் அரசமைப்பு அவைக்குள் வரவில்லை. நான் தேர்தலில் நின்று வெற்றிபெற்று அரசமைப்பு அவைக்குள் வருவதற்கு ஒரே ஒரு காரணம்தான் இருந்தது. எஸ்சி, எஸ்டி மக்களுடைய பிரச்சினையை அங்கே வந்து பேசவேண்டும். அது மட்டும்தான் எனக்கு ஆர்வமாக இருந்தது. அதைத்தவிர வேறு பெரிய ஆர்வம் எனக்கு இல்லை என்று அவர் பதிவு செய்கிறார்.
எனது நண்பர் சர் அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் போன்ற என்னைவிடப் பெரிய சிறந்த மேலதிகத் திறமை வாய்ந்தவர்கள் வரைவுக்குழுவில் இருந்தனர். என்மீது இந்தளவு நல்லெண்ணத்தையும் நம்பிக்கையையும் வைத்து என்னை அவர்களுடைய கருவியாகத் தேர்ந்தெடுத்து நாட்டுக்குத் தொண்டாற்றும் வாய்ப்பைக் கொடுத்த அரசமைப்பு அவைக்கும் வரைவுக்குழுவுக்கும் நான் நன்றியுள்ளவனாக இருப்பேன் என்று புரட்சியாளர் அம்பேத்கர் குறிப்பிடுகிறார்.
மேலும் எனக்குக் கொடுக்கப்பட்டுள்ள பெருமை உண்மையில் எனக்குரியதல்ல என்றும் கூறுகிறார்.ஏற்கெனவே அரசியலமைப்புச் சட்டம் தயாரிக்கப்பட்டு அதை ஆய்வு செய்து விரிவுபடுத்துவதோ, சுருக்குவதோ அல்லது விரிவுபடுத்துவதோ மேம்படுத்துவதோ போன்ற பணிதான் வரைவுக்குழுவுக்குத் தரப்பட்டது. அதற்கு முன்பு ஒரு டிராப்ட் கான்ஸ்டிடியூசன் எழுதப்பட்டிருக்கிறது. அதனை எழுதியவர் பி.எம்.ராவ். அவர் அரசமைப்புச் சட்டத்தினுடைய சட்ட ஆலோசகராக இருக்கிறார்.
அதுதான் அடிப்படையான கருப்பொருள். அதனை வடிவமைத்துக் கொடுத்தவர் சர் பி.எம்.ராவ்.உண்மையிலே பாராட்டுக்கும் பெருமைக்குமுரியவர் சர் பி.எம். ராவ் அவர்கள்தான் என்று நன்றியுணர்வோடு பதிவு செய்கிறார்.
அவருக்கு மட்டுமல்லாமல் அரசியலமைப்புச் சட்டத்தில் சிறப்பான ஆலோசனைகள் வழங்கிய எஸ்.என்.முகர்ஜி அவருடைய பங்களிப்பு மகத்தானது என்றும் குறிப்பிடுகிறார். இன்னொருபுறம் அரசியல் நிர்ணய சபையிலும் வரைவுக்குழுவிலும் காங்கிரஸ் கட்சி இடம் பெற்றிருந்தது பலவகையில் பேருதவியாக அமைந்தது. அவர்கள் இடம் பெற்றதால்தான் திசை மாறாமல் குழப்பங்கள் உருவாகாமல் இயல்பாகச் சென்றதற்குக் காரணம் காங்கிரஸ் கட்சி இதில் இடம் பெற்றதுதான். அதனால் காங்கிரஸ் கட்சிக்கும் நன்றி என்றும் அம்பேத்கர் குறிப்பிடுகிறார்.
முழுதாக நிறைவேற்றி வரைவு அறிக்கையாக விவாதத்துக்கு முன்வைக்கப்பட்டபோது சிலபேர் கடுமையான விமர்சனங்களை செய்தார்கள்.அவர்களையெல்லாம் கலகக்காரர்கள் என்று அம்பேத்கர் சொல்கிறார்.
அரசமைப்பு அவையின் நடவடிக்கைகள் கட்சிக் கட்டுப்பாட்டு விதிக்கு உட்பட்டிருந்தால் மந்தமானதாக இருந்திருக்கும். எல்லாவிதமான இறுக்கங்களையும் கொண்டுள்ள கட்சிக் கட்டுப்பாடு இந்த அவையை ஆமாம் சாமிகளின் கூட்டமாக மாற்றியிருக்கும். நல்வாய்ப்பாக கலகக்காரர்கள் இருந்தார்கள். திரு.காமத்.முனைவர் பி.எஸ்.தேஷ்முக்.திரு.சித்வா, பேராசிரியர் சக்சேனா பண்டிட் தாகூர்தாஸ் பார்கவா. அவர்களோடு பேராசிரியர் கே.டி.ஷா, பண்டிட் ஹிர்தய்நாத் குன்ஸ்ரு ஆகியோரையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவர்களெல்லாம் கலகக்காரர்கள். இவர்களெல்லாம் பிரச்சினை செய்து கிரிட்டிஸிஸம் செய்தார்கள்.
பெரும்பாலும் அவர்கள் எழுப்பிய பிரச்சினைகள் கருத்துநிலை சார்ந்தவை ஆகும். அவர்களுடைய ஆலோசனைகளை நான் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கவில்லை என்பதன் பொருள் அவர்களின் ஆலோசனைகளின் மதிப்பைக் குறைப்பதோ அல்லது அவை நடவடிக்கைகளை உயிரோட்டமுள்ளதாக ஆக்குவதில் அவர்களின் சேவையைக் குறைத்துவிடுவதல்ல, அவர்களுக்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன். அவர்கள் இல்லாமல் இருந்திருந்தால் அரசமைப்புச் சட்டத்திற்கு அடிப்படையாக உள்ள கோட்பாடுகளை இயந்திரகதியில் அரசமைப்புச் சட்டத்தை நிறைவேற்றுவதைவிட முக்கியமாக இவற்றை விளக்குவதற்கு வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்காது.
அவர்கள் இப்படி பிரச்சினை செய்து குழப்பத்தை உருவாக்கியதால்தான் அமைப்பினுடைய அடிப்படைக் கோட்பாடுகளில் என்னால் கவனம் செலுத்த முடிந்தது.செழுமைப்படுத்த முடிந்தது.கூடுதலாக விவாதிப்பதற்கான வாய்ப்பும் கிடைத்தது. இதுபோல குயுக்தியாக செயல்படுபவர்களைக்கூட பாஸிட்டிவாக எடுத்துக்கொள்கிற தன்மை புரட்சியாளர் அம்பேத்கரிடம் இருந்ததை அவர் பதிவு செய்கிறார்.
எனவே அரசமைப்புச் சட்டத்தின் தகுதிகளைப் பற்றி சொல்வதற்கு முனையமாட்டேன், ஓர் அரசமைப்புச் சட்டம் எவ்வளவு நல்லதாக இருந்தாலும் அவை செயல்படுத்த அழைக்கப்பட்டவர்கள் (ஆட்சிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்) மோசமானவர்களாக இருந்தால் அதன் விளைவும் மோசமானதாகவே இருக்கும் என்று நான் கருதுகிறேன். அதேபோல ஒரு அரசமைப்புச் சட்டம் எவ்வளவு மோசமானதாக இருந்தாலும் அதனை செயல்படுத்த அழைக்கப்பட்டவர்கள் நல்லவர்களாக இருப்பின் நன்மையே விளையும் என்கிறார்.
அரசமைப்புச் சட்டம் நல்ல முற்போக்கு சிந்தனையுள்ளவர்கள். சமத்துவ சித்னையுள்ளவர்கள், சகோதரத்துவ சித்னையுள்ளவர்கள், ஜனநாயக சிந்தனையுள்ளவர்களின் கைகளிலிருந்தால் நாட்டுக்கு நல்லது விளையும். இல்லையெனில் நாட்டை எவராலும் காப்பாற்ற முடியாது என்று இந்த சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு. முதல்நாள் அம்பேத்கர் பேசியிருக்கிறார். இதனை நடைமுறைப்படுத்துவதற்கு மக்களும் அரசியல் கட்சிகளும் முக்கியம் என்று குறிப்பிடுகிறார். நல்ல ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு மக்கள் கையிலும் அரசியல் கட்சிகளின் கைகளிலும் இருக்கிறது என்று குறிப்பிடுகிறார்.
அந்த நேரத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினர் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான கருத்தை முன்வைக்கிறார்கள். அவர் எந்தளவுக்கு கம்யூனிஸத்தையும் கம்யூனிஸ்ட்டுகளையும் புரிந்து வைத்திருக்கிறார். சமூகத்தில் நிலவுகிற பிரச்சினைகளையும் புரிந்து வைத்திருக்கிறார்.அதனை கம்யூனிஸ்ட் கட்சி எப்படி அணுகுகிறது என்பதையும் புரிந்து வைத்திருக்கிறார். அந்த முரண்கள் எப்படிப்பட்டவையாக இருக்கின்றன என்பதையும் அவர் எவ்வாறு புரிந்து வைத்திருக்கிறார் என்பது இந்த விளக்கத்தில் தெரிகிறது.
அம்பேத்கர் சொல்கிறார். அரசமைப்புச் சட்டத்தின் மீது பெரிதும் கண்டனம் கம்யூனிஸ்டு கட்சி, சோஸலிஸ்ட் கட்சி ஆகிய இருதரப்புகளிலிருந்தும் வருகிறது. அவை ஏன் அரசமைப்புச் சட்டத்தை கண்டனம் செய்கின்றன? என்பதை விளக்குகிறார். அந்த சட்டம் மோசமானது என்பதால் அல்ல. பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்ற கோட்பாட்டின் அடிப்படையிலான ஒரு அரசமைப்புச் சட்டத்தை கம்யூனிஸ்ட் கட்சி விரும்புகிறது. இதுதான் கம்யூனிஸ்ட் கட்சியின் எதிர்பார்ப்பு என்று சொல்லிவிட்டு நாடாளுமன்ற ஜனநாயகம் என்பதை அடிப்படையாகக் கொண்டது என்பதால் அவர்கள் கண்டனம் செய்கிறார்கள். சோஷலிஸ்டுகள் இரண்டு விஷயங்களை விரும்புகிறார்கள். முதலாவது அவர்கள் ஆட்சிக்கு வருவார்களேயானால் இழப்பீடு எதுவும் தராமல் தனிச்சொத்து அனைத்தையும் நாட்டுடமை ஆக்கவோ அல்லது சமூகஉடைமை ஆக்கவோ அரசமைப்புச் சட்டம் அவர்களுக்கு அதிகாரம் தரவேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். இரண்டாவது அரசமைப்பு சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் எந்த வரம்புகளுமின்றி முழுமுற்றானவையாக இருக்கவேண்டும் என்பதுமாகும் என்று குறிப்பிடுகிறார்.
இன்று நான் உருவாக்கியிருக்கிறேன். அடுத்தடுத்த தலைமுறைகளுக்கேற்ப வேறு கருத்துகள் வரலாம்.மாற்றிக்கொள்ள இதில் வாய்ப்பு இருக்கிறது.இதுவே சாசுவதம் என்று நீங்கள் நினைக்கவேண்டாம்.இது இந்த தலைமுறைக்கான கருத்து, வரைவுக்குழுவினருடைய கருத்து என்பதை நீங்கள் புரிந்துகொண்டால் போதும் என்று கம்யூனிஸ்டுகளுக்கு அவர் பதில் சொல்கிறார். அதாவது கம்யூனிஸ்டுகளின் கருத்தை எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்த முடியும். அதாவது உன்னுடைய தேவைக்கேற்ப அடுத்த தலைமுறையினரின் சிந்தனைக்கேற்ப அவர்களின் புரிதலுக்கேற்ப இந்த அரசமைப்புச் சட்டத்தைத் திருத்தமுடியும் என்பதைத்தான் அம்பேத்கர் நமக்குச் சொல்ல வருகிறார்.
அரசமைப்புச் சட்டத்தைத் திருத்துவதற்கான மிக எளிதான நடைமுறையை அது வழங்கியுள்ளது.இப்பொழுதுள்ள சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு உலகில் வேறெங்கேனும் எந்த அரசமைப்பு அவையும் அரசமைப்புச் சட்டத்தைத் திருத்துவதற்கான இத்தகையதொரு எளிய நடைமுறையை வழங்கியிருக்கிறதா என்று கூறுமாறு நமது அரசமைப்புச் சட்டத்தை விமர்சிப்பவர்களுக்கு அறைகூவல் விடுக்கிறேன் என்று கூறிவிட்டு நாம் உருவாக்கியிருக்கும் அரசமைப்புச் சட்டம் மேலதிகமான கூடுதலான நெகிழ்வுத்தன்மையைக் கொண்டிருக்கக்கூடியது. எந்தச் சூழ்நிலையிலும் இந்தச் சட்டத்தைத் திருத்திக்கொள்ளமுடியும் எனப் பதிவு செய்கிறார்.
இந்த அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை கூட்டாட்சி தத்துவம். மாநில அரசுக்கும் மைய அரசுக்கும் இடையே உள்ள உறவு என்பதே அடிப்படைக் கோட்பாடு.
இறையாண்மை, சமதர்மம், மதசார்பற்ற ஜனநாயகம் நிறைந்த குடியரசு என்பதுதான் இந்திய அரசு. மற்ற நாடுகள் போல அல்லாமல் இந்தியா மதச்சார்பற்ற நாடு. அம்பேத்கர் அவரது அறிவார்ந்த ஆற்றலால் பிற அறிவார்ந்த தலைவர்களை சமாதானம் செய்து இந்தியாவுக்கென்று ஒரு மதத்தை அறிவிக்கக்கூடாது என்றார். ஏனெனில் இங்கு எந்த மதத்தை அரச மதமாக அறிவிக்கமுடியும்? கிறித்தவ மதத்தை, இஸ்லாமிய மதத்தை, சீக்கிய மதத்தை அறிவிக்க முடியாது. பெரும்பான்மை மதத்தைத்தான் அறிவிக்கமுடியும். பெரும்பான்மை மதம் பாகுபாடுகள் நிறைந்த நச்சுத்தன்மை கொண்டதாக இருக்கிறது. இந்த மதம் பிற மதங்களைப்போல சகோதரத்துவத்தை வலியுறுத்துகிறதாக இருந்தால் பிரச்சினை இல்லை.இங்கு இந்து மதம் என்று சொல்லப்படக்கூடிய ஒரு மதம் கிடையாது.ஏனென்றால் அது ஒரு கற்பனாவாதம்.இந்து மதம் என்று ஒன்று கிடையாது.ஏனென்றால் அதற்கு புனித நூல் கிடையாது.நிறுவனர் கிடையாது. ஒரு தலைவர் கிடையாது.ஆக இந்து மதம் என்பது நாமாக கற்பனையாக சொல்லிக்கொண்டிருக்கிறோம்.
ஆக இந்துவை வரையறை செய்வதற்கு இங்கு அடையாளங்கள் எதுவும் இல்லை. இங்கு சமத்துவத்தைக் கொண்டுவரவேண்டுமெனில் மதச்சார்பற்ற அரசாகச் செயல்பட்டால்தான் முடியும்.
மிசாவைக் கொண்டுவந்தபோது எவ்வளவோ விமர்சனங்கள் இருந்தாலும் இந்திரா காந்தி அம்மையார் இந்திய அரசமைப்புச் சட்டத்திற்குள் மூன்று திருத்தங்களைக் கொண்டுவந்து சொற்களை இணைத்தார். இந்திய அரசு எனும் வரையறையில் சோசலிஸ்ட், செக்குலியர் என்ற இரண்டு வார்த்தைகளை அவர் இணைத்தார். ஒற்றுமை என்பதோடு ஒருமைப்பாடு என்ற வார்த்தையையும் சேர்த்தார்.
இந்துத்வ கருத்துகளுக்கு அம்பேத்கர்தான் கடுமையான எதிரியாக இருந்தார். இந்த மண்ணில் பெரியார் மிகக் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தவர். ஆனால் இவர்களையெல்லாம் கோட்சே குறி வைக்கவில்லை. நூறு சதம் இந்துத்வ சிந்தனையாளராக, ஹரே ராம் ஹரே ராம் என்று மூச்சுக்கு முந்நூறு முறை சொல்லக்கூடியவராக, இம்மையிலும் மறுமையிலும் நம்பிக்கை உடையவராக, ஒரு இந்துத்வவாதியாகவே வாழ்ந்த காந்தியடிகளை ஏன் சுட்டுக் கொன்றான் என்றால் காந்தியடிகள் மதச்சார்பற்ற அரசு என்பதில் உறுதியாக இருந்தார் என்பதால்தான்.
இந்த தேசத்துக்கு ஹிந்துஸ்தான் என்று பெயர் வைக்கக்கூடாது. இந்துக்களின் நாடு என்பது அன்றைக்குக் கோரிக்கையாக இருந்தது. அதற்கு காந்தியடிகள் ஒத்துக்கொள்ளவில்லை. அதனால்தான் அவரைச் சுட்டார்கள்.
கூட்டாட்சித் தத்துவத்தைக் காப்பாற்றுவதற்கு நான் முக்கியத்துவம் கொடுத்துள்ளேன் என்று புரட்சியாளர் அம்பேத்கர் குறிப்பிடுகிறார், கூட்டாட்சித் தத்துவத்தின் முதன்மையான அடையாளமென்பது சட்டமன்ற நிர்வாக எந்திர அதிகாரம் மைய அரசாங்கத்திற்கும் மாநில அரசுகளுக்கும் பிரித்துக் கொடுக்கப்பட்டிருப்பதுதான் என்று கூட்டாட்சித் தத்துவத்துக்கு எந்த ஆபத்தும் இல்லை எனக் குறிப்பிடுகிறார்.
இந்தியர்கள் நாட்டைத் தங்கள் நம்பிக்கைகளுக்கு மேலானதாக வைப்பார்களா அல்லது தங்கள் நம்பிக்கைகளை நாட்டிற்கு மேலானவையாக வைப்பார்களா? எனக்குத் தெரியவில்லை.ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். கட்சிகள் தங்கள் நம்பிக்கையை நாட்டிற்கு மேலானதாக வைக்குமென்றால் நமது சுதந்திரம் இரண்டாவது முறையாக ஆபத்துக்கு உள்ளாக்கப்படுவதுடன் ஒருவேளை அது என்றென்றைக்குமாக இழக்கப்படலாம். நமது கடைசித்துளி இரத்தத்தைச் சிந்தியேனும் நமது சுதந்திரத்தைப் பாதுகாக்க நாம் உறுதி பூண்டவர்களாக இருக்கவேண்டும் என்கிறார். இப்படி சிந்திப்பவர்களுக்குப் பெயர்தான் தீர்க்கதரிசி.
ஆர்எஸ்எஸ் ஜனசங்கமாக மாறும் பிஜேபியில் மோடி வருவார் அமித்ஷா வருவார், என்றெல்லாம் அம்பேத்கருக்குத் தெரியுமா? ஆனால் இப்படி வந்தால் என்ன செய்வது என்று புரட்சியாளர் அம்பேத்கர் சிந்தித்திருக்கிறார்.
இன்று நாடு எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை இந்து ராஷ்ட்டிரம் என்றுதான் நாங்கள் பெயர் வைப்போம் என்கிறார்கள். வருணாசிரம தர்மம்தான் இருக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள்.சமூகநீதிக்கு எதிராகச் சிந்திக்கிறார்கள். சமத்துவத்துக்கு எதிராக சிந்திக்கிறார்கள். ஒரு நாடு ஒரு கலாச்சாரம் என்கிறார்கள். ஒரு தேசம் ஒரு மொழி என்கிறார்கள். இந்த நாட்டைவிட அவர்களுடைய நம்பிக்கைகள் முக்கியம் என்று நினைக்கிறார்கள்.
அரசமைப்புச் சட்டத்தில் முக்கியமான மூன்று கோட்பாடுகள். 1. பன்மைத்துவம் 2.மதச்சார்பின்மை 3.கூட்டாட்சித் தத்துவம்.
முதலில் பன்மைத்துவத்தை குலைக்கப் பார்க்கிறார்கள். அரசாங்கத்திற்கு மதம் கூடாது என்பது அரசமைப்புச் சட்டத்தினுடைய அடிப்படைகளில் ஒன்று. மதச்சார்பின்மையை இல்லாமலாக்க முயற்சி செய்கிறார்கள். இது இந்துஸ்தான். இந்து மதத்தைச் சார்ந்த அரசு. ஆக அரசமைப்புச் சட்டத்தினுடைய அடிப்படைக் கோட்பாடுகளில் கை வைக்கிறார்கள்.நாடு அவர்களுக்கு முக்கியமில்லை. தேசியக் கல்விக்கொள்கை என்ற பெயரில் மாநில அதிகாரத்தில் தலையிடுகிறார்கள். இது கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது.
இப்படியாக அடிப்படைக் கோட்பாடுகளைத் தகர்க்கக்கூடியவர்கள் பின்னாளில் வருவார்கள் என்பதை உணர்ந்தே அம்பேத்கர் தனது கவலையைப் பதிவு செய்கிறார்.
1950 ஜனவரி 26ஆம் நாளிலிருந்து இந்தியா ஜனநாயக நாடாக மாறிவிடும் என்று சொல்லிவிட்டு அம்பேத்கர் குறிப்பிடுகிறார். நான் முதலில் குறிப்பிட்ட அதே சிந்தனை என் மனதில் தோன்றுகிறது.இதனுடைய ஜனநாயக அரசமைப்பைப் பாதுகாக்க இயலக்கூடியதாக அது இருக்குமா?அல்லது அதை மீண்டும் இழந்துவிடுமா? இந்த இரண்டாவது சிந்தனை என் மனதில் தோன்றி முதல் சிந்தனையைப் போலவே என்னைக் கவலையுறச் செய்கிறது.
மற்ற எந்த தேசத்தைக் காட்டிலும் இந்தியாவிற்கு இந்த எச்சரிக்கை மிகமிக அவசியமானது. ஏனென்றால் பக்தி அல்லது அர்ப்பணிப்பு மார்க்கம் அல்லது வீரர் வழிபாடு என்று சொல்லப்படக்கூடியது இந்திய அரசியலில் வகிக்கும் பாத்திரம் வேறு எந்த நாட்டின் அரசியலில் அது வகிக்கும் பாத்திரத்துடன் ஒப்பிடும்போது ஈடுஇணையற்றதாக உள்ளது. மத விஷயத்தில் பக்தி என்பது ஆன்மாவின் விமோசனத்துக்கான பாதையாக இருக்கலாம்.ஆனால் அரசியலில் பக்தி அல்லது வீரர் வழிபாடு என்பது சீரழிவுக்கும் நாளடைவில் சர்வாதிகாரம் ஏற்படுவதற்குமான நிச்சயமான பாதை என்கிறார் அம்பேத்கர்.
இது முக்கியமாக கவனிக்கவேண்டிய விஷயம். ஆன்மீகத் தளத்தில் பக்தி என்பது வேறு.அவர்கள் இறை வழிபாடு மேற்கொள்வதால் நாட்டுக்கோ ஜனநாயகத்துக்கோ எந்த ஆபத்தும் இல்லை.
வழிபாடு, பக்தி என்று எவரும் உள்ளே போனாலே அது ஆர்எஸ்எஸ்க்கும் சங் பரிவாருக்கும் பிஜேபிக்கும் துணையாய்ப் போவதில் போய் முடியும்.அதற்கு நாம் இடமளித்து விடக்கூடாது.
சமூக ஜனநாயகம் இல்லையென்றால் அரசியல் ஜனநாயகம் பயனில்லை. சகோதரத்துவமும் சமத்துவமும் சமூக ஜனநாயகம். அது இல்லையென்றால் பிரிட்டிஷிடமிருந்து விடுதலை பெற்றதில் எந்த அர்த்தமுமில்லை என்கிறார் அம்பேத்கர். சமூக ஜனநாயகம் என்பதன் பொருள் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை வாழ்க்கை நெறிகளாக அடையாளப்படுத்தும் வாழ்க்கை முறை என்பதாகும்.
சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை உள்ளடக்கிய சமூக ஜனநாயகம் இல்லையென்றால் தேர்தல் நடத்தி வெற்றிபெற்று அரசியல் ஜனநாயகம் மட்டும் இருந்தால் எந்தப் பயனுமில்லை.
சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் இது மூன்றும் ஒன்றுதான். அதனைப் பிரித்துப் பார்க்கக்கூடாது. அப்படிப் பார்த்தால் ஜனநாயகம் தோற்கடிக்கப்பட்டுவிடும் என்கிறார்.
ஒரே சதவீதம் உள்ள ஆட்களிடம் இந்தியாவின் அனைத்து சொத்துகளும் இருக்கின்றன. எட்டே ஆண்டுகளில் உலகத்தின் மூன்றாவது பணக்காரனாக அதானி வரமுடிவது எப்படி? நம்பமுடியாத இந்த விஷயத்திற்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு துணை போகிறது. மக்களுக்குத் தொண்டு செய்யவேண்டிய பிரதமர் அதானிக்கு வேலை செய்துகொண்டிருக்கிறார். ஒருசிலர் மட்டுமே பொருளாதாரத்தில் முன்னேறும் நிலை போன்றவற்றையெல்லாம் அம்பேத்கர் முன்கூட்டியே சிந்தித்துப் பார்த்திருக்கிறார்.
தோழர்களே! புரட்சியாளர் அம்பேத்கர் ஒரு புதிய இந்தியாவை கட்டமைக்க விரும்பினார். அது ஜனநாயக இந்தியா. சமத்துவ இந்தியா அல்லது சகோதரத்துவ இந்தியா என்று நாம் சொல்லலாம். அந்த இந்தியாவைக் கட்டமைப்பதற்கு பாதுகாக்கப்படவேண்டிய ஒன்று இந்திய அரசமைப்புச் சட்டம்.
இந்திய அரசமைப்புச் சட்டத்திற்குத்தான் இப்போது ஆபத்து வந்திருக்கிறது. பன்மைத்துவத்துக்கு எதிரானவர்களின் கைகளில், மதச்சார்பின்மைக்கு எதிரானவர்களின் கைகளில், கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானவர்களின் கைகளில், சமூக ஜனநாயகக் கோட்பாடுகளுக்கு எதிரானவர்களின் கைகளில் ஆட்சி அதிகாரம் இருக்கிறது. அவர்கள் அரசமைப்புச் சட்டத்தை எந்தச் சூழ்நிலையிலும் தூக்கி எறிந்துவிடுவார்கள்.
ஆகவே இந்திய அரசமைப்புச் சட்டத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பதுதான் நம் முன்னாலிருக்கிற சவால். அதற்கு புரட்சியாளர் அம்பேத்கரின் இந்த உரை நமக்கு ஒரு தெளிவைக் கொடுக்கும் என்று நான் நம்புகிறேன். இதை அனைவரும் வாங்கிப் படிக்கவேண்டும் என்பதைச் சொல்லி இதைத் தமிழாக்கம் செய்த பெருமதிப்பிற்குரிய தோழர் எஸ்.வி.ஆர் அவர்களை நெஞ்சாரப் பாராட்டி, நம் அழைப்பை ஏற்று சிலமணி நேர இடைவெளியில் இசைவு தந்து இங்கே வருகை தந்த தோழர் ஜென்ராம், தோழர் சாமுவேல் ராஜ் ஆகியோருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து, இதனைப் பதிப்பித்துக் கொடுத்திருக்கிற என்சிபிஎச் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சண்முகம் சரவணன் அவர்களுக்கும் நன்றியைச் சொல்லி நிறைவு செய்கிறேன்.
- தொல்.திருமாவளவன்
எழுத்தாக்கம்: ஜி.சரவணன்