பார்வையற்றவர்களுக்கான தேசியக் கூட்டமைப்பின் தலைவர் கென்னத் ஜெர்னிகன் ஜூலை 03, 1974 இல் சிகாகோவில் நடந்த ஆண்டு விழாவில் ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க உரையின் தமிழாக்கம்.

வரலாறு, மனிதர்கள் செய்த செயல்களைப் பற்றிய பதிவு; இலக்கியம், அவர்களின் எண்ணங்களைப் பற்றியது. கடந்த ஆண்டு, வரலாற்றில் பார்வையற்றவர்களின் இடத்தைப் பற்றி நான் உங்களுடன் விவாதித்தேன் - நாம் என்ன செய்தோம் என்பதை மட்டுமல்ல, வரலாற்றாசிரியர்கள் நாம் செய்ததாக எதைக் கூறி வந்திருக்கிறார்கள் என்பதையும். நாம் கண்டறிந்தபடி இரண்டும் பெரிதும் வேறுபட்டவையாக இருந்தன.

இந்த ஆண்டு இலக்கியத்தில் பார்வையற்றவர்களின் இடத்தைப் பற்றி உங்களுடன் பேச விரும்புகிறேன். பார்வையற்றவர்களாகிய நாம் இலக்கியத்தில் எப்படி உள்வாங்கப்பட்டிருக்கிறோம்? நம்முடைய பங்கு என்ன? கவிஞர்கள், நாவலாசிரியர்கள், கட்டுரையாளர்கள், நாடகக் கலைஞர்கள் நம்மை எப்படிப் பார்த்திருக்கிறார்கள்? இருப்பதை அப்படியே பதிவு செய்திருக்கிறார்களா அல்லது அவர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டு எழுதியிருக்கிறார்களா!

வரலாற்றில் குறைந்தபட்சம் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஓர் அடிப்படை உண்மைத்தன்மை இருக்கும். திரிபுகள், புறக்கணிப்புகள் அல்லது தவறான விளக்கம் அல்லது அப்பட்டமான பொய் எதுவாக இருந்தாலும், உண்மைத்தன்மை நூலிழையாக எஞ்சி உரைகல்லாகத் தொடரும். ஏனெனில் வரலாறு தன்னை மறுவாசிப்புச் செய்து புதிய தரவுகளுக்கு என்றும் தன்னை ஒப்புக் கொடுக்கிறது. ஆனால் இலக்கியத்தில் அப்படி இல்லை. கனவுகள், கற்பனைகள், ஊகங்கள் மூலமாக உண்மைகளைத் தனக்கேற்றவாறு தகவமைத்துக் கொள்கிற வெளி எழுத்தாளனுக்கு உண்டு. வரலாற்றை விட ஆழமாகச் சென்று மக்களின் தொன்மங்களையும் உணர்வுகளையும் இலக்கியம் பதிவு செய்து வைத்திருக்கிறது. பள்ளிகள், தேவாலயங்கள், செய்தி ஊடகங்கள் அல்லது குடும்பத்தை விடவும்கூட, நமது சமூகத்தின் நம்பிக்கைகள், விழுமியங்களை இலக்கியம் அதன் அனைத்து வடிவங்களின் வழியாகவும் கடத்துகிற வேலையைச் செய்கிறது. அப்படியானால், பார்வையற்றவர்களாகிய நாம் இலக்கியத்தில் எந்தளவு பிணைக்கப்பட்டிருக்கிறோம்?blind peopleபார்வையற்றவர்களின் வாழ்க்கையைப் பற்றி ஒற்றைக் கருத்தையோ ஒற்றைப் பார்வையையோ இலக்கியப் பதிவுகள் வெளிப்படுத்தவில்லை. மாறாக, குழப்பத்தை உண்டாக்கக்கூடிய வேறுபட்ட பிம்பங்களையே காட்சிப்படுத்தியிருக்கின்றன. இவை பல்வேறு காலம் மற்றும் பண்பாடுகளுக்கு இடையில் அல்லது வேறுபட்ட எழுத்தாளர்களின் எழுத்துகளில் மட்டுமில்லாமல், ஒரு புத்தகத்தில் உள்ள பக்கங்களுக்கிடையிலேயே பார்வையற்றவர்கள் பற்றிய முரண்பாடான, நேர்மாறான பிம்பங்கள் இடம்பெற்றுள்ளன.

இன்னும் நுணுகி ஆராயும்போது இலக்கியம் மற்றும் வெகுஜனப் பண்பாட்டின் முக்கியமான அடிக்கருத்துகள், துணைக்கருக்களைச் சுருக்கமாகப் பின்வரும் ஒன்பது வகையில் அடக்கிக் கூறலாம்: பார்வையின்மை ஒரு மாற்றான அல்லது வியத்தகு ஆற்றல்; பார்வையின்மை என்பது முற்றிலும் துன்பியல்; பார்வையற்றவர்களை முட்டாள்களாக, கையறு நிலையிலுள்ள வர்களாகப் பார்த்தல்; தீய மற்றும் கொடூர எண்ணம் கொண்டவர்கள் பார்வையற்றவர்கள்; பார்வையற்றவர்கள் நிறைவான புண்ணியவான்கள்; பார்வையின்மை பாவத்திற்கான தண்டனை; இயல்புக்கு முரணானவர்களாகவும் மனிதநேயமற்றவர்களாகவும் பார்வையற்றவர்களைப் பார்த்தல்; பார்வையின்மை பாவத்தைக் களைதலின் வெளிப்பாடு; குறியீடு அல்லது நீதிக்கதையின் கருவாகப் பார்வையின்மை.

பார்வையின்மையென்பது எப்படி ஒரு மாற்றான ஆற்றலாக சித்திரிக்கப்பட்டுள்ளது என்பதிலிருந்து தொடங்குவோம். பார்வையற்றிருப்பதில் ஏதேனும் நன்மை இருக்கிறது என நான் நினைக்கிறேனா? என்று உங்களில் ஒருவர் என்னிடம் கேட்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். நான் அந்தக் கேள்விக்கு இவ்வாறு பதிலளிப்பது பொருத்தமாக இருக்கும்: ‘ஒருவகையில் ஒரு நன்மையும் இல்லை. ஆனால் பார்வையற்றிருப்பது ஒருவர் யூகிக்க இயலாத அளவிற்கான வியத்தகு ஆற்றல். ஆம், ஒரு புதிய உலகை அறிவதற்கான திறப்பு, புதிய அனுபவங்கள், புதிய வலிமைக்கான எழுச்சி; விசித்திரமான புதிய பார்வைகள்; இயல்பெல்லைக்குள் உட்படாத வாழ்க்கை.’ இந்தப் பதிலுக்கு நீங்கள் எப்படி வினையாற்றுவீர்கள்? நான் சந்தேகிக்கிறேன், நீங்கள் என்னை எள்ளிநகையாடி அறையைவிட்டு வெளியேற்றிவிடுவீர்களென்று. பொதுப்புத்தியிலுள்ள இம்மாதிரியான மூடத்தனத்தை நீங்கள் எவரொருவரும் ஏற்கமாட்டீர்கள் என்றே கருதுகிறேன். பார்வையின்மையென்பது இயல்பெல்லைக்குள் உட்படாத வாழ்க்கையோ புதிய வலிமைக்கான எழுச்சியோ விசித்திரமான புதிய பார்வையோ சாகசமான உலகை அறிவதற்கான திறப்போ இல்லையென்று உங்களுக்கும் எனக்குமுள்ள நேரடி அனுபவத்தின் மூலம் நாம் அறிவோம். நான் மேலே மேற்கோளாகக் கூறியது சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த ஒரு புகழ்பெற்ற நாவலில் வரும் பார்வையற்ற கதாபாத்திரத்தினுடைய வார்த்தைகள். (பார்வையற்றவர்கள் ஓர் ‘அகக் கண்’ பெற்றிருக்கிறீர்கள் என்ற பொருளில் வரும் இந்தக் கருத்துக்கு முக்கியத்துவம் உள்ளதா என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் புறக்கண்களுக்கொன்றும் குறைவில்லாதது இது).

பார்வையின்மையை மாற்று ஆற்றலுடன் இணைத்து ஒரு பார்வையற்ற துப்பறியும் கதாபாத்திரம் கூறியதாக நான் மேலே குறிப்பிட்டது, நம்மை செவ்வியல் தொன்மத்தைப் பாராட்டுகின்ற மரபை நோக்கி இட்டுச் செல்கிறது. பழங்கால கிரேக்க கடவுள்களிடையே பார்வையைப் பறிப்பது ஒரு விருப்பத்திற்குரிய தண்டனையாக இருந்தது- மேலும் இது மரணத்தை விடக் கொடிய தண்டனையாகக் கருதப்பட்டது - அப்படிப் பார்வை இழந்தவர்கள்மேல் கருணை கொண்ட கடவுள்கள் எதிர்காலத்தைக் கணிக்கக்கூடிய அசாதாரண ஆற்றலை அவர்களுக்கு வழங்கினார்கள் என நம்பப்பட்டது. இம்மாதிரியான ஒரு வரத்தின் வழியேதான் ஹோமர் கவிதை எழுதும் திறனைப் பெற்றதாகப் பரவலாகக் கருதப்படுகிறது. இதே போலத்தான் சோஃபகிளிஸ் எழுதிய நாடகங்களில் வரும் பார்வையற்ற டைரிசியஸ் ஒரு தீர்க்கதரிசியாகப் பார்க்கப்படுகிறார்.

கடவுள் பழிதீர்ப்பதன் பகுதியாகவே பார்வையற்றவர்கள் தெய்வீக ஆற்றலைப் பெறுகிறார்கள் என்ற கருத்து பேகன் மதங்கள் (Pagan Religions) வீழ்ச்சியிலிருந்த போதும் நிலைபெற்றது. ஷெர்லாக் ஹோம்ஸ் கதாபாத்திரத்தை உருவாக்கிய கடந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த நாவலாசிரியர்களில் ஒருவரான சர் ஆர்தர் கோணன் டோய்ல் தனது சர் நைஜெல் என்ற நூலில் ஹோம்ஸைப் போலத் துப்பறியும் திறமைகளுடன் கூடிய பார்வையற்ற கற்பனைக் கதாபாத்திரம் ஒன்றை உருவாக்கியிருப்பார். இந்தக் கதாபாத்திரம், படைவீரர்களால் முற்றுகையிடப்பட்ட கோட்டைக்கு அடியில் இருக்கும் ஒரு மறைவான குகையைத் தனது விசித்திரமான கேட்கும் திறனைக் கொண்டு கண்டுபிடிக்கக்கூடியதாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும். நாவலில் பார்வையற்ற கதாபாத்திரத்தின் வியத்தகு ஆற்றல், இரண்டு நபர்களுக்கு இடையேயான உரையாடல் மூலம் விவரிக்கப்பட்டுள்ளது:

'இந்த மனிதர் ஒரு காலத்தில் செல்வந்தனாகவும் நற்பெயருடனும் இருந்தார் [ஒருவர் கூறுகிறார்], ஆனால் இவருடைய செல்வம் திருட்டு அரசனொருவனால் கொள்ளையடிக்கப்பட்டதுடன் இவருடைய பார்வையும் பறிக்கப்பட்டது. அதனால் இவர் மற்றவர்களின் தயவில் பிழைத்துக்கொண்டு பல ஆண்டுகளாக இருளில் வாழ்ந்து வருகிறார்.

இவர் பார்வையற்றவராக இருப்பதால், நம்முடைய முன்னெடுப்பிற்கு இவரால் எவ்வாறு உதவி செய்ய முடியும்? [அவரின் நண்பர் கேட்கிறார்.]

பார்வையின்மை என்ற காரணத்தினாலேயே, மற்ற மனிதர்களைவிட இவர் அதிகமாகப் பயன்படுவார். ஏனென்றால், ஒரு மனிதன் ஒரு புலனை இழந்துவிட்டால், எஞ்சியிருக்கும் புலன்களின் திறன் கருணைமிக்க கடவுளால் கூர்மையாக்கப்பட்டிருக்கும். எனவே இந்த ஆண்ரேஸ் மரங்களில் உள்ள நீரோட்டத்தை அல்லது புதைகுழியிலுள்ள எலியின் சப்தத்தைக் கேட்கும் அளவிற்குத் திறன் கொண்டவராக இருப்பார்.’

பத்தொன்பதாம் நூற்றாண்டின் தலைசிறந்த நாவலாசிரியரான விக்டர் ஹியூகோ, தனது ‘தி மேன் ஹூ லாஃப்ஸ்’ என்ற நாவலில் பார்வையிழப்பிற்கான பரிகாரமாகப் புனிதத்தன்மையையும் பரவசத்தையும் பார்வையற்றவர்கள் பெற்றிருக்கிறார்கள் என்ற கருத்தைச் சித்திரித்திருக்கிறார். இச்சித்திரிப்பினை அக்கால நவீன எழுத்தாளர்கள் பலரிடமிருந்த சிந்தனையின் வடிவமாகவே பார்க்கலாம். இவரது நாவலில் வரும் ’டி’ என்ற பார்வையற்ற கதாநாயகி, பார்வையற்றவர்களுக்கே உரித்தானதாகக் கருதப்படும் பரவசத்தால் திளைத்திருப்பதாகவும் ஓர் உயிர்ப்பான இசையைக் கேட்கும்போது அதை ஆத்மார்த்தமாக உள்வாங்கிக்கொண்டு அந்த ரசனையில் தான் இழந்த ஒளியை ஈடுசெய்து கொள்வதாகவும் சித்திரிக்கப்பட்டிருக்கிறாள். பார்வையிழப்பு பற்றி ஹியூகோ கூறும்போது ’அது ஒரு முடிவற்ற நீண்ட குகையை நோக்கிய நகர்வு’ என்கிறார்.

பார்வையற்றவர்களோடு ’ஆறாவது அறிவு’ என்ற மாயக் கருத்தைப் பொருத்திப் பார்ப்பதே, புகழ்பெற்ற புனைகதைகளில் பார்வையற்றவர்கள் துப்பறிவாளர்களாகவும் புலனாய்வாளர்களாகவும் வருவதற்குக் காரணமாக இருக்கலாம். 1914 இல் வெளிவந்த மேக்ஸ் கராடோஸ் என்ற நூல் பார்வையற்றவர்கள் ‘நான்காவது பரிமாணத்தில்’ வாழ்வதைப் பற்றிப் பேசுகிறது. மேலும் மனித வாழ்க்கைக்கு அப்பாற்பட்ட வாழ்க்கை பற்றி 1920 களில் வெளிவந்த எழுத்துகளுக்கு இந்நூலை ஓர் உந்துதலெனக் கூறலாம். 1915 ஆம் ஆண்டில் வந்த மற்றொரு நாவல் தனது வழக்குகளில் தோல்வியே தழுவாத டேமன் காண்ட் என்ற பார்வையற்ற துப்பறிவாளர் பற்றிப் பேசியிருக்கிறது. இந்தக் கதாபாத்திரத்தையொத்ததுதான் கிளின்டன் எச். ஸ்டாக் உருவாக்கிய தோர்ன்லி கோல்டன் என்ற பார்வையற்ற துப்பறிவாளர் கதாபாத்திரமும். பார்வையில்லாது அகக்கண் வழிக் கண்டறிதலின் மூலம் புகழ்பெற்ற பார்வையற்ற துப்பறியும் கதாபாத்திரமான கேப்டன் டங்கன் மெக்லைன் பற்றிய தனித்தன்மைகள் நூலின் அட்டையின் மீதே இடம் பெற்றிருக்கும்:

’ஒலியைக் கேட்டுக்கொண்டே துப்பாக்கி சுடுவது, துல்லியமாகச் சதுரங்கம் விளையாடுவது, எதிர் பாலினத்தவரின் இதயங்களைத் தன்வசப்படுத்துவது என்பதான காரணங்களால் கேப்டன் மெக்லைன் விமர்சகர்களின் சமரசமில்லாத பாராட்டைப் பெற்றிருக்கிறார்.’

அந்த நாவலாசிரியர் கூடத் தனது கதாநாயகனின் மேதைமைத் தன்மையால் கவரப்பட்டிருந்தார். ’பல தருணங்களில் இயல்பான மனிதர்களை விடச் சற்றே அதிகமான ஆற்றலை டங்கன் மேக்லைனுக்கு வழங்கியிருந்தேன்’ என்று அவர் எழுதுகிறார். அத்தகைய தருணங்கள் அவருக்குக் கவலையளிப்பதாக இருந்திருக்கின்றன.

அந்தத் தருணங்கள் நமக்கும் வருத்தமுண்டாக்கக் கூடியதாகத்தான் இருக்கக்கூடும். ஏனென்றால் இயல்புக்கு மாறான அல்லது இயற்கைக்கு அப்பாற்பட்ட ஆற்றலைப் பார்வையற்றவர்கள் பெற்றிருப்பவர்களாகப் பார்க்கிற மாயாஜாலக் கருத்தானது, பார்வையற்றவர்கள் வேற்றுகிரகவாசிகள், இயற்கைக்கு மாறான, விசித்திரமான தன்மையைப் பெற்றவர்கள் என்று சமூகத்தில் உறைந்துகிடக்கிற பொதுப்புத்தியில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்துவதில்லை. மாயாஜாலக் கருத்துகள் பார்வையற்றவர்கள் பற்றிய பொதுப்புத்தியை மேலும் மோசமடையச் செய்வதாகத்தான் இருக்கிறது.

ஆற்றல் குறித்த கருத்தானது உண்மைக்குப் புறம்பானது மட்டுமல்ல, பார்வையற்றோருக்கு இழைக்கப்படும் கொடிய அவமானமும் கூட. ஏனெனில், பார்வையற்ற ஒருவர் எதைச் சாதித்தாலும் அது அவரது சொந்தத் திறனால் அல்ல, மாறாகப் பார்வையின்மையால் பெற்ற உள்ளார்ந்த சில மந்திர ஆற்றலால்தான் நிகழ்கிறது என்பதை இக்கருத்து அறிவுறுத்துகிறது. மாற்று ஆற்றல் பற்றிய இவ்வாறான அனுமானம், பார்வையற்ற நபரை ஒரு சாதாரண மக்களின் அன்றாட உலகத்திலிருந்து அகற்றி இயல்புக்குப் புறம்பான இடத்தில் வைக்கிறது. பார்வையற்றவர்களை இயல்பை மீறிய ஆற்றல் கொண்டவராகவோ அல்லது இயல்பைவிடத் தாழ்வான வாழ்க்கை வாழ்பவராகவோ பார்த்தலென்பது ஒரு பொருட்டல்ல - ஏனெனில் பொதுவாக அவர்களைப் பொறுப்பற்றவர்களாக, உரிமைகளற்றவர்களாக, சமூகமற்றவர்களாகப் பார்ப்பதே இயல்பாக இருக்கிறது. இரண்டாம்தரக் குடிமக்களாகக் கருதுகிற இந்தப் பார்வையில் நாம் நீண்ட காலமாக இணைக்கப்பட்டிருக்கிறோம். இந்த நாடகம் முடிந்துவிட்டது. இனிமேல் மந்திர ஆற்றலோ மாற்று ஆற்றலோ நமக்கு வேண்டாம். குடிமக்களாகவும் மனிதர்களாகவும் வாழ்கிற உரிமைகளைப் பெறுவதையே நாம் விரும்ப வேண்டும்.

வசீகரம் மற்றும் திறமையைப் பெற்றிருந்தும் மெக்லைன் ஒரு பெண்ணை, ஏன் எந்தப் பெண்ணையும் கைபிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. காதல், பாலுறவு, திருமணம் ஆகிய இயல்பான மனித நடத்தைகளுக்கே மெக்லைன் தகுதியற்றவர் என்று நாவலாசிரியர் கருதியிருக்கிறார். தங்களின் துணை ஆறுதலாக இருக்கிறது என்று தன்னிடம் கூறிய நண்பருக்கு மேக்ஸ் கராடோஸ் என்ற பார்வையற்ற கதாபாத்திரம் ’பார்வையின்மை நம்பிக்கையை அளிக்கக்கூடியது, நடந்து முடிந்த மனிதர்களிடையேயான போட்டியில் நாங்கள் பங்கேற்காமல் வெளியேதான் இருந்தோம்’ என்று பதிலளிக்கிறது.

மாற்று ஆற்றல் என்கிற பார்வை - பார்வையின்மையே வெகுமதி என்கிற கருத்தாடல் - இவை பாராட்டு அல்ல, அவமதிப்பு. மாற்று ஆற்றல் என்கிற கருத்தானது நமது சாதனைகளுக்கான அனைத்து நன்மதிப்பையும் நமது தோல்விகளுக்கான எல்லாவிதப் பொறுப்பையும் நம்மிடமிருந்து பறித்துவிடுகிறது. மேலும் இது நிலைமைகளைச் சமன்படுத்துவது, வாய்ப்புகளை வழங்குவது, நமக்கு நாமே உதவுவது ஆகிய கடமைகளிலிருந்து சமூகத்தைத் தெளிவாக விடுவித்து விடுகிறது. நம்மைச் சுற்றியுள்ள போட்டி மிகுந்த வாழ்க்கையில் இயல்பாக நாம் பங்கெடுப்பதற்கான தகுதியை இறுதியில் இல்லாமலேயே செய்துவிடுகிறது. சுருக்கமாகக் கூறினால் (இந்தப் பார்வையின்படி) பார்வையற்றவர்கள் அசாதாரணமானவர்களாக இருக்கலாமேயொழிய இயல்பான மனிதர்களாக இருக்க முடியாது. உங்களுக்கு நம்பிக்கையில்லையா! நாம் இயல்பான மனிதர்கள் - ஆசீர்வதிக்கப்பட்டவர்களோ சபிக்கப்பட்டவர்களோ அல்ல - இயல்புக்கு எதிரான இவ்வாறான கற்பனைகள் முடிவுக்கு வர வேண்டும். நாம் கேட்பதெல்லாம் மாயாஜால வித்தையோ அல்லது மந்திர ஆற்றலோ அல்ல - உரிமையும் சுதந்திரமுமுள்ள மனிதர்களாக, பொறுப்புள்ள குடிமக்களாக, சுயமரியாதையுள்ள மனிதர்களாக வாழ்வதற்கான அங்கீகாரம்.

புனைகதை, கற்பனை இலக்கியங்களில் விரவிக்கிடக்கும் பார்வையற்றவர்கள் குறித்த மற்ற கருத்துகளை ஒப்பிடும்போது மாற்று ஆற்றல் குறித்த பிம்பம் எதிர்மறையாக இருந்தாலும் குறைவான ஆபத்தையும் தீமையையும் தரக்கூடியது. பார்வையின்மை என்பது முற்றிலும் துன்பியல் என்ற கருத்துதான் மிகவும் பழமையானதாகவும் தொடர்ந்து வருவதாகவும் எல்லாவற்றையும்விட அதிகம் பாதிப்பு விளைவிப்பதாகவும் இருக்கிறது. இந்தக் கருத்தைப் பிரதிபலிக்கும் விதத்தில் ’பார்வையற்றவர் இறந்தவருக்கு சமம்’ என்ற பண்டைய ஹீப்ரு பழமொழிகூட உள்ளது. இடிபஸ் பற்றிய கிரேக்கத்தின் துன்பியல் நாடகங்கள், வாழ்க்கையென்பது பயனற்றது என்ற கருத்தை மிகத் தீவிரமாகத் அடுத்த கட்டத்திற்கு நகர்த்தின. இடிபஸ் ரெக்ஸ் என்ற நாடகத்தில் அரசன் தனது சொந்தக் கண்களைப் பறித்துக்கொள்ளும்போது, ’பார்வையற்றவராக வாழ்வதை விட நீ இறந்துவிடுவதே நல்லது’ என்ற வசனம் வருவதை இதற்குச் சான்றாகக் குறிப்பிடலாம். ஐரோப்பியாவில் பார்வையின்மையென்பது பெருந்துயரமாகக் கருதப்படுவதற்கு இந்தக் கருத்தே அடிப்படையாக இருக்கிறது என்று கூறலாம்.

ஜான் மில்டன் தனது சாம்சன் அகனிஸ்ட் என்ற துன்பியல் கவிதையில் இவ்வாறு கூறுகிறார்: ’எதிரிகள் மத்தியில் பார்வையற்றவர்கள் - அடிமைகளைவிடத் தாழ்வானவர்கள், பாதாளச் சிறைவாசிகள் பிச்சைக்காரர்கள், நலிந்த வயதினர்!... கொடியவர்களுக்கும் தாழ்வானவர்களாகிப்போன இவர்கள் தற்போது மனிதப் புழுக்களாக. இந்தக் கொடியவர்கள் என்னைவிடச் சிறப்பானவர்களாகிவிட்டார்களோ! அவர்கள் ஊர்ந்து செல்கிறார்கள், ஆனால் நானோ வெளிச்சத்தில் இருளைக் காண்கிறேன். நாள்தோறும் மோசடி, அவமதிப்பு, அத்துமீறல், அறைக்குள்ளோ அல்லது அறைக்கு வெளியிலோ தவறுகள்ஞ் மற்றவர்களின் அதிகாரத்தால் இன்னும் ஒரு முட்டாளாகவே நான். இப்போதெல்லாம் நானாகவே இருப்பதில்லை. என்றாவதுதான் அரிதான பாதி வாழ்க்கையை வாழ்வதாகத் தோன்றுகிறது. பாதிக்கு மேலானது காணாமல் போய்விட்டது.... எனது வாழ்க்கையே ஒரு நடமாடும் கல்லறையாகிவிட்டது.

மேலே குறிப்பிட்ட காவியக் கவிதையில் மிகவும் கவனிக்கத்தக்க செய்தி என்னவென்றால், நாம் எதிர்பார்த்தது போலப் பார்வையின்மை பெருந்துயரம் என்ற கருத்து அல்ல. அனைவரும் அறிந்த மில்டன் அதன் ஆசிரியர் என்பதுதான். பாரடைஸ் லாஸ்ட் உட்பட, அவருடைய மிகச்சிறந்த படைப்புகள் அனைத்தும் அவரது பார்வையிழப்பிற்குப் பிறகே எழுதப்பட்டவை. பிறகு ஏன் இவர் பார்வையற்றவர்கள் பற்றி இப்படிச் சித்திரித்திருக்கிறார்? பதில் எளிமையானது: பார்வையற்றவர்களான நாம், மற்றவர்கள் நம்மைப் பார்ப்பது போலவே நாமும் நம்மைக் காண்கிறோம். இது நமக்கு எதிரானதெனத் தெரிந்தாலும், நமது வரம்புகளைப் பற்றிய பொதுப் பார்வையை நாம் அப்படியே ஏற்றுக்கொள்கிறோம். அந்த வகையில் அந்த வரம்புகளை உண்மையாக்குவதற்கும் உதவுகிறோம். இலக்கியம் மற்றும் மரபார்ந்த சக்திகளால் ஏமாற்றப்பட்ட மில்டன், அவருக்கு எழுதக் கிடைத்த வாய்ப்பில் தனக்கும் தன்னையொத்த சகப் பார்வையற்றவர்களுக்கும் துரோகம் செய்திருக்கிறார். உண்மையில், மில்டனின் சுயஅனுபவம் இச்சித்திரிப்பிற்கு முரணாக இருந்தபோதும்கூட அவர் இதைச் செய்திருக்கிறார். இதன் மூலம் பார்வையற்றவர்கள் பற்றிய பொதுப்புத்தியை வலுப்படுத்தி அதைத் தீவிரமடையச் செய்திருக்கிறார். உண்மையில் இலக்கியத்தின் ஆற்றல் அப்படியானதாக இருக்கிறது.

பார்வையின்மை என்பது பெருந்துயரம் என்ற கருத்து மில்டனுடன் முடியவில்லை. பதினெட்டாம் நூற்றாண்டில் வெளிவந்த ஷில்லரின் வில்லியம் டெல் என்ற நாடகம் பார்வை பறிக்கப்பட்ட வயோதிக மனிதரொருவர் பிச்சைக்காரராக மாற வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவதை நமக்குக் காட்டுகிறது. அந்த நாடகத்தில் வரும் வயோதிகரின் மகன் இவ்வாறு கூறுகிறார்: ’ஓ, கண்ணின் ’ஒளி’தான் சொர்க்கத்திலிருந்து அன்பாக அளிக்கப்பட்ட அனைத்துப் பரிசுகளிலும் சிறந்தது... பார்வையற்றவர் தனது நாட்களை முடிவற்ற இருளிலேயே கடத்த வேண்டும். மரணிப்பது ஒன்றுமில்லை. ஆனால் பார்வையில்லாமல் வாழ்வது - ஓ, அது உண்மையில் அவலம்!

பார்வையின்மையைப் பெருந்துயரமாகப் பார்க்கும் கருத்தென்பது ஒரு நூற்றாண்டுக்குப் பிறகும்கூட எப்போதும் போலவே செல்வாக்குடன் இருந்து வருகிறது. தி லைட் தட் ஃபெயில்டு என்ற தனது நாவலில், பார்வையின்மை மரணத்தை விடக் கொடியது என்று அழுத்தமாகச் சித்திரிக்கிறார் கிப்ளிங். நாவலில் கதாநாயகன் டிக் ஹெல்டர், தனக்குப் பார்வை பறிப்போகப் போகிறது என்பதை அறிந்ததும் ’இது மரண வாழ்க்கை.... இருளில் அடைபட்டு வாழ வேண்டும்... யாரையும் பார்க்க முடியாது. நூறு ஆண்டுகள் வாழ்ந்தாலும்கூட நாம் விரும்புகிற எதையும் ஒருபோதும் வைத்திருக்க முடியாது’ என்று குறிப்பிடுகிறார். ’பார்வையற்றவர்கள் பற்றிப் பொதுப்புத்தியில் உறைந்து கிடக்கும் கருத்தானது இன்னும் மறையவில்லை. பார்வையற்றவர்கள் உயிரற்ற உடலாகவும் சுமையாகவுமே உலவி வருகிறார்கள்’ என்று கதாநாயகன் டிக் ஒட்டுமொத்த உலகத்திற்கெதிராக ஆவேசமாகப் பேசுவது நாவலின் பின்பகுதியில் காட்டப்பட்டுள்ளது. தன்னிரக்கப்படக்கூடிய டிக் என்ற கதாபாத்திரம் தொடர்புடைய அனைவரின் மனநிறைவுக்காகத் தற்கொலை செய்துகொண்டபோதுகூட‘தோட்டக்கள் அவருடைய தலையைத் துளைக்கும் கணத்தில்கூட அவருக்குத் தோட்டக்கள் கருணை காட்டின. அவருக்கு இறுதிவரை அதிர்ஷ்டம் இருந்தது’ என்று சிறந்த எழுத்தாளரென அனைவராலும் சொல்லப்படும் கிப்லிங் கூறுகிறார்.

ஜோசப் கான்ராட் தனது தி எண்ட் ஆஃப் தி டெதர் என்ற குறுநாவலில் பார்வையின்றி உயிருடன் இருப்பதைவிட இறந்துவிடுவதே சரியென்று கருதி கேப்டன் வாலி என்ற கதாபாத்திரம் நீரில் மூழ்கடித்துக் கொல்லப்படுகிறது. டி. எச். லாரன்ஸின் தி பிளைண்ட் மேன் என்ற சிறுகதையில் போரினால் பார்வையிழந்த மோரிஸ் என்ற கதாபாத்திரம் வருகிறார். விரக்தியிலும் துயரத்திலும் இருக்கும் மோரிஸ் அவற்றிலிருந்து மீள்வதற்கான எதிர்கால நம்பிக்கையில்லாதவராக வருகிறார். லாரன்ஸை விட மேன்மையானது அல்லது தாழ்வானது என்கிற வகையில் கூறத்தக்க ஒரு பார்வையிழந்த கதாபாத்திரத்தை ரோசாமண்ட் லெமன் தனது இன்விடேஷன் டு தி வால்ஸ் என்ற நாவலில் காட்டியிருப்பார். இந்நாவலில் வரும் போரினால் பார்வையிழந்த கதாநாயகன் மரியாதைக்குரிய வாழ்க்கையை வாழ்வதான தோற்றத்தைக் காட்டினாலும் நடைமுறை வாழ்க்கையில் நடைப்பிணமாக வாழ்வதாகவே சித்திரிக்கப்பட்டிருப்பார். பார்வையிழந்த கதாபாத்திரம் துன்பம் நிறைந்த வாழ்க்கையை மறைப்பதற்கு ஒரு போலியான வாழ்க்கை வாழ்வதாக நாவல் நமக்குக் காட்டுகிறது. எல்லாவற்றையும் கடந்து முன்னால் காதலியுடன் அவர் நடனமாடுகிற காட்சி துயரமான வகையில் காட்டப்படுகிறது. ‘அவரின் காதலி அன்புடனும் துயரத்துடனும் நடனமாடினாள்’ என்று நாவலாசிரியர் கூறுகிறார். ‘அவளை நெருக்கமாகப் பற்றியிருந்தபோதும்கூட அவர் அவளிடமிருந்து வெகுதொலைவிலேயே இருந்தார். அங்கு ஒலித்துக்கொண்ட இசையிலிருந்து விடுவித்துக்கொண்டு அந்நியமானவாராய் அவர். அவரின் இளமைப்பருவத்துடனும் மரணத்துடனுடன் நடனமாடியபடி அவள்.’

இது போன்ற எழுத்தாளர்களுக்குப் பார்வையின்மையினால் ஏற்படும் துயரத்தைத் தாங்க முடியாது. இதற்கு இரண்டு தீர்வுகளை மட்டுமே கற்பனை செய்து பார்க்க முடியும். பார்வையற்றவர் குணப்படுத்தப்பட வேண்டும் அல்லது அவர் கொலை செய்யப்பட வேண்டும். இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டை, சூசன் கிளாஸ்பெல்லின் தி க்ளோரி ஆஃப் தி கன்கார்டு என்ற நாவலிலிருந்து பார்க்கலாம். அந்நாவலைப் பற்றி ஓர் இரக்கமற்ற திறனாய்வாளர் இவ்வாறு எழுதுகிறார்: ’நூலின் இறுதியில் பார்வையற்ற அந்தக் கதாநாயகனைச் சாகடிப்பதே பிரச்சனைக்கு மிகவும் எளிதான வழி. ஏனெனில் அந்தக் கதாபாத்திரத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று அந்த நாவலாசிரியர்க்கும் தெரியவில்லை.’

இப்போது பார்வையின்மை துன்பியல் என்ற கருத்தை விட்டுவிட்டு, பார்வையற்றவர்களை முட்டாள்களாக, கையறு நிலையிலுள்ளவர்களாகப் பார்த்தல் என்பதை நோக்கி நகர்வோம். வேடிக்கைக்குரியவராகவும் கேலிக்குரியவராகவும் பார்வையற்றவர்களைக் காண்பதென்பது அங்கத நாடகங்களை விடப் பழமையானது என்பதில் சந்தேகமில்லை. மத்தியக்காலங்களில் பூசணிக்காயைத் தடவிப் பார்த்து உருவம் காணவைக்கிற கேலிக்கூத்து இருந்தது. அது வழங்கொழிந்து பின்னர்ப் பார்வையற்ற பிச்சைக்காரர்களை வட்டமாக நிற்கவைத்துக் கழுதையின் காதுகளில் பேசவைப்பதான காட்சிகள் விழாக்கால விடுமுறை நாட்களில் அரங்கேற்றப்படுவது வழக்கமாக இருந்தது. இவ்வாறான பொதுக்கேலிக்கூத்தைப் பிரதிபலிக்கும் வகையில், சாசர் தனது தி மெர்ச்சண்ட்ஸ் டேல் என்ற கதையில் ஓர் இளம் மனைவி பற்றிக் கூறுகிறார். வயதான பார்வையற்ற ஒருவரைத் திருமணம் செய்து கொண்ட அந்த இளம் மனைவி கணவனை நடைபயிற்சிக்கு அழைத்துச் செல்லும் போது கணவனை ஏமாற்றிவிட்டு மரத்தருகில் தனது காதலனைச் சந்திக்கிறார். சாசரின் முடிச்சு என்னவென்றால், இளம் மனைவி தனது காதலுடன் உறவு வைத்துக்கொண்டிருக்கும்போது கணவனுக்குத் திடீரென்று பார்வை திரும்புகிறது. அதை அறிந்த அந்தப் புத்திசாலிப் பெண் பார்வை திரும்புவதற்காக மட்டுமே இவ்வாறு செய்தேன் என்று விளக்குகிறார். ஷேக்ஸ்பியர் கூட இப்படித்தான் இழிவாகச் சித்திரித்திருக்கிறார். தனது கிங் லியர் என்ற நாடகத்தில் க்ளாஸ்டர் என்ற பார்வையற்ற கதாபாத்திரத்தை மிகவும் குழப்பமானவராகவும் கையறுநிலையிலுள்ளவராகவும் காட்சிப்படுத்தியிருக்கிறார். எதையும் நம்பவைத்து எந்தத் தந்திரத்தாலும் அவர்களை ஏமாற்ற முடியுமெனக் காட்டியிருக்கிறார். பழைய ஏற்பாட்டில் வரும் ஐசக், அவரது மகன் ஜேக்கப்பால் ஏமாற்றப்படுகிறார். அவர் தனது சகோதரர் ’எசே’ போல மூகமுடி அணிந்து மாறுவேடத்தில் ஆட்டுத்தோலைப் போர்த்திக்கொண்டு தனது தந்தை விரும்பிய மான் இறைச்சிக்குப் பதிலாக ஆட்டிறைச்சியைத் தருகிறார். முதியவரான ஐசக்கால் அதைக் கண்டறியமுடியவில்லை. ஏனெனில் பார்வை உட்பட அனைத்துப் புலன்களின் உணர்வையுமே நிச்சயம் இழந்திருக்கக்கூடும்.

பதினாறாம் நூற்றாண்டில் வெளிவந்த டெர் யுயென்ஸ்பிஜல் மிட் டென் பிளெண்டென் என்ற நாடகம் பார்வையற்றவர்கள் ஏமாற்றப்படுவதை பற்றி அறிந்து கொள்ள உதவும் அரிதான ஒரு கொடூரமான எடுத்துக்காட்டு. அந்த நாடகத்தில் மூன்று பார்வையற்ற பிச்சைக்காரர்களைச் சந்திக்கும் கதாநாயகன், அருகில் உள்ள விடுதியில் உணவிற்காகவும் தங்குவதற்காகவும் ஒரு மதிப்புமிக்க நாணயத்தை வழங்குவதாக உறுதியளிக்கிறார். ஆனால் அவர்கள் தேவைக்காக நாணயத்தைத் தேடும்போதுதான் ..அவர் அதை யாருக்கும் அளிக்கவில்லை என்பதை அறிகிறார்கள். ஓவ்வொருவரும் அதைப் பிறிதொருவர் பெற்றதாக நினைத்துக்கொண்டிருந்தார்கள். வேடிக்கையான முடிவை நீங்கள் கற்பனை செய்யலாம். அவர்கள் விடுதிக்குச் சென்று ஆடம்பரமாக உணவருந்திய பிறகு, விடுதிக் காப்பாளர் உணவிற்கான பணத்தைக் கோருகிறார். பணம் இல்லாததை அறிந்துகொண்ட பார்வையற்ற பிச்சைக்காரர்கள் ஒவ்வொருவரும் மற்றவர்களைப் பொய், திருட்டு எனப் பல்வேறு குற்றங்களைக் கூறிக்கொள்கிறார்கள். ‘நீங்கள் எல்லோரையும் ஏமாற்றுகிறீர்கள்’ என்று கூச்சல் போடும் விடுதிக் காப்பாளர் மூவரையும் தனது பன்றிபட்டிக்குள் அடைத்துப் பூட்டிவிட்டுத் தன் மனைவியிடம் புலம்புகிறார். ‘இவர்களை என்ன செய்வோம், இவ்வளவு சாப்பிட்டுவிட்டுக் குடித்துவிட்டு இருக்கும் இவர்களிடம் ஒன்றும் வாங்காமல் எந்தத் தண்டனையும் இல்லாமல் அனுப்பலாமா? ஆனால் நாம் அவர்களை இங்கே வைத்திருந்தால், சீலைப்பேன், கொசுக்களையெல்லாம் பரப்புவார்கள். மேலும் அவர்களுக்கு நாம் உணவளிக்கவும் வேண்டும். இவர்களைத் தூக்கு மேடையில் நிறுத்துவதையே நான் விரும்புகிறேன்.’ நாடகத்தின் முடிவு மகிழ்ச்சியானதே. ஆனால் பார்வையற்றவர்களைக் குற்றவாளிகள், ஏமாற்றுகிறவர்கள், அசுத்தமானவர்கள், குழப்பக்காரர்கள், வீடற்றுத் திரிகிறவர்கள், கையறு நிலையிலுள்ளவர்கள், வேற்றுகிரகவாசிகள் என்று காட்டும் பிம்பம் இந்த நாடகத்திலும் தொடர்கிறது. இவர்களின் வாழ்க்கைக் கதையை ‘கல்லிபெல்ஸ் டிராவல்ஸ்’ (Gullible’s Travels) என்று அழைக்கலாம்.

பார்வையற்றவர்களைக் கையறுநிலை யிலுள்ளவர்களாகக் காண்பது ஓர் உலகளாவிய பொதுப்புத்தி. மீட்டர்லிங்ஸ் என்பவரின் தி பிளைண்ட் என்ற நாடகத்தில் வரும் அனைத்துக் கதாபாத்திரங்களும் ஒரு தத்துவக் கருத்தை வெளிப்படுத்துவதற்காகப் பார்வையற்றவர்களாகச் சித்திரிக்கப் பட்டிருப்பார்கள். ஆனால் இதே நாடகம் மேடையில் அரங்கேற்றப்படும்போது பார்வையற்றவர்கள் திறந்தவெளியில் தடவுவது, முணுமுணுப்பது, ஏதோ ஒன்றைத் தாங்கிப் பிடிப்பதென அபத்தமாகக் காட்டப்படுவார்கள்.

பார்வையின்மை பற்றிய உண்மையை மறைத்து மிக மோசமாக அவமதித்தவர்களில் ஒருவர் புகழ்பெற்ற சமகால பிரெஞ்சு எழுத்தாளர் ஆண்ட்ரே கைடு. இவரின் லா சிம்ஃபொனி பாஸ்டரேல் என்ற நாவலில் இதைக் பார்க்கலாம். ஒரு பார்வையற்ற திறனாய்வாளர் இந்த நாவலை நன்றாக விவரித்துள்ளார்: ’பதினைந்து வயதுடைய பார்வையற்ற இளம்பெண் கேர்ட்ரூட் -டுக்கு, அவளின் போதகர் கல்வி கற்பிக்கத் தொடங்கும் முன்னரே அவள் அசட்டுத்தனத்திற்கான அனைத்து அறிகுறிகளையும் கொண்டிருந்தாள். இதற்குக் காரணமாக அவளுடைய பார்வையின்மையைக் கூறும் நாவலாசிரியர் கைடு, புறக்கண்களினால் பெறுகிற பார்வையில்லாமல் உண்மையை அறிய முடியாது என்றும் உறுதியாகக் கூறுகிறார். போதகர் உருவாக்கிக் கொடுத்த களங்கமற்ற உலகில் மகிழ்ச்சியாக வாழ்கிறாள் கேர்ட்ரூட். நிஜ உலகில் உள்ள தீமை, வலி பற்றி எதுவும் தெரியாதவளாகயிருந்தாள் அவள். பார்வையற்றவளாக அவளால் பழிபாவங்களை அறிய முடியாது, ஆதாமும் ஏவாளும் தடைசெய்யப்பட்ட பழத்தைச் சாப்பிடும்முன் எதையும் அறியாது எப்படிப் பேரின்பமாக இருந்தார்களோ அதைப்போலவே இருந்தாள் கேர்ட்ரூட். அவளுடைய பார்வை திரும்பியபோதுதான் அவள் உண்மையில் தீமையையும் அதற்கான காரணத்தையும் பழிபாவங்களையும் அடையாளம் கண்டுகொள்கிறாள். போதகருடன் தான் செய்தது பாவம் என்று அறியாத கேர்ட்ரூட் அதை அறிந்ததும் பரிதாபமாகத் தற்கொலை செய்து கொள்கிறாள்.’

இலக்கியத்தில் பார்வையற்றவர்கள் முட்டாள்களாக மட்டும் சித்திரிக்கப்படவில்லை, கொடூர எண்ணம் கொண்ட பிறவிகளாகவும் காட்டப் பட்டிருக்கிறார்கள். இதற்கு எடுத்துக்காட்டாக, ஸ்டீவன்சனின் ட்ரெஷர் ஐலேண்ட் நாவலில் வரும் வயதான பார்வையற்ற கடற்கொள்ளைக்காரக் கதாபாத்திரம் பியூ - வைக் குறிப்பிடலாம். இளம் நாயகனாக வரும் ஜிம் ஹாக்கின்ஸ், பியூவை முதன்முதலில் பார்த்த போது, இவரைப்போன்ற அச்சமும் கொடூரமும் நிறைந்த பார்வையற்ற ஓர் உயிரினத்தை இதுவரை பார்த்ததில்லை என்றும் பியூவின் கையைப் பற்றிக்கொண்டு ..ஜிம் உரையாடிய தருணத்தில் பியூவின் குரலைப் போல் கொடூரமான, அருவெருப்பான குரலைக் கேட்டதில்லை என்றும் உணர்கிறான்.

பார்வையற்றவர்கள் கொடூரஎண்ணம் கொண்டவர்கள் என்ற கருத்து வெகுகாலத்திற்கு முன்பாக, அதாவது பதினாறாம் நூற்றாண்டில் வெளிவந்த லாஜரில்லோ டி டோர்ம்ஸ் என்ற நாவலிலேயே காணலாம். லாஜரில்லோ என்ற சிறுவன் ஒரு வயதான பார்வையற்ற மனிதஒருவருக்கு வழிகாட்டியாக இருக்கிறான். ஆனால் அந்தப் பார்வையற்றவர் தீமையின் வடிவமாக இருக்கிறார். ’சிலையின் மீது காதை வைத்து ஒரு வித்தியாசமான சத்தத்தைக் கேட்கும்படிப் பார்வையற்றவர் லாஜரில்லோவிடம் சொன்னபோது, அதற்குக் கட்டுப்பட்டுக் கேட்டுக்கொண்டிருந்தபோது லாஜரில்லோவின் தலையைக் கடுமையாகத் தாக்குகிறார் அந்தப் பார்வையற்றவர். அந்தச் சத்தம் லாஜரில்லோவின் காதுகளில் மூன்று நாட்கள் ஒலித்துக் கொண்டிருந்தன.’

காலங்காலமாகப் பார்வையின்மை மற்றும் கொடூரத்திற்குமிடையேயான தொடர்பென்பது எழுத்தாளர்களுக்கு ஒருவகையில் தவிர்க்க முடியாததாக இருந்து வருகிறது. மேலும் இதை வாசகர்களும் விரும்பியவர்களாக இருந்திருக்கிறார்கள். ஏனெனில் நாட்டுப்புறக் கதைகள் மற்றும் கட்டுக்கதைகள் மூலமாக பார்வையின்மையென்பது கேடானது என்ற எண்ணம் ஏற்கனவே வாசகர்களிடம் உறைந்திருந்தது. இயல்பாகவே பார்வையற்றவர்கள் கொடூர எண்ணங்கொண்டவர்கள் என்று நிலவிவரும் கருத்து, பார்வையற்றவர்களைச் சித்திரிக்கும் அவலட்சணமான கேலிச்சித்திரங்களுக்கு ஒரு வசதியான காரணத்தையும் நியாயத்தையும் வழங்கியுள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக, பார்வையற்றவர்கள் கொடியவர்கள், இழிவான எண்ணம் கொண்டவர்கள் என்று கருதப்படுவதால் அவர்கள் அதற்கேற்பவே நடத்தப்படட்டும் - எந்தவிதக் கருணையுமின்றி.

பார்வையின்மை என்பது முற்றிலும் தீங்கானது என்ற கருத்திற்கு மாறானது பார்வையின்மை நல்லொழுக்கம் என்ற கருத்து. அனைவரும் அறிந்த இந்த இரண்டு பொதுப்புத்திகளும் மேலோட்டமாகப் பார்த்தால் முரண்பாடானவை. ஆனால் இவை ஒரு போலி நாணயத்தின் எதிரெதிர் பக்கங்கள். இதைப் புரிந்து கொள்ள பெரிய உளவியல் நுண்ணறிவு எதுவும் தேவையில்லை. இவற்றில் பொதுவானதென்பது பார்வையின்மையால் நிகழும் மாற்றம். இவ்வாறான மாற்றம், இயல்பான வாழ்க்கைச் செயல்பாடுகளிலிருந்தும் மனிதகுலத்திலிருந்தும் பார்வையற்றவர்களை முற்றிலுமாக அகற்றுகிறது.

பார்வையின்மை ஒரு பாவத்தின் அல்லது தீய ஆற்றலின் வடிவமாகவோ தேவதை அல்லது ஜோதியின் வடிவமாகவோ இருப்பதையே பார்க்க முடிகிறது. இரண்டாவது வகையைச் சார்ந்தது லாரா ரிச்சர்ட்ஸின் மெலடி என்ற நாவல். இந்நாவலில் மெலடி என்ற பார்வையற்ற குழந்தை தன்னுடைய வாழ்க்கையைத் தன் கையால் தொட்டுப்பார்த்தே அறிந்து கொண்டதாகக் காட்டப்பட்டுள்ளது. காட்டிலுள்ள ஒவ்வொரு மரத்தையும் அதன் பட்டையை வைத்து அறிந்து கொள்பவளாக அவள் இருந்தாள். எப்போது பூக்கும், எப்படிப் பூக்கும் என்பதையும்ஞ் அவளுடைய கிராமத்தில் உள்ள பூனை, நாயெல்லாம் மெலடியின் ஒரே அழைப்பில் தன் சொந்த எஜமானனையே விட்டுவிட்டு அவளிடம் வந்துவிடும். அவள் நல்லொழுக்கமுள்ளவள் மட்டுமல்ல; ஒரு மாயாஜாலக்காரி. அவள் எரியும் கட்டிடத்திலிருந்து குழந்தையைக் காப்பாற்றுகிறாள், நோய்வாய்ப்பட்டவர்களைப் பாடுவதன் மூலம் குணப்படுத்துகிறாள், மேலும் குடிகாரர்களை அந்தப் பழக்கத்திலிருந்து மீட்கிறாள்.

லாரா ரிச்சர்ட்ஸின் இந்தக் கதாபாத்திரம் விசித்திரமாக இருக்கிறது. இதில் எல்லாவற்றையும் விட விசித்திரமானது என்னவென்றால், இந்த அபத்தமான மெலடி கதாபாத்திரத்தை உருவாக்கிய லாரா ரிச்சர்ட்ஸ் பார்வையற்றவர்களின் முன்னோடிக் கல்வியாளரான சாமுவேல் கிரிட்லி ஹாவின் மகள் என்பது. மில்டனைப் போலவே ரிச்சர்ட்ஸுக்கும் பார்வையற்றவர்களைப் பற்றி நன்றாகத் தெரியும். மரபு, பழக்கவழக்கங்கள், நாட்டுப்புறக்கூறுகள் மற்றும் இலக்கியத்தின் தாக்கங்களுக்கு லாரா ரிச்சர்ட்ஸ் பலியாகியிருக்கிறாள். இதன்மூலம் அவள் தன்னையும் பார்வையற்றவர்களையும் ஏமாற்றிப் பார்வையற்றவர்கள் பற்றிய சமூகப் பொதுபுத்தியை மேலும் வலுப்படுத்தியிருக்கிறாள். எல்லாவற்றையும் விடக் கொடுமையானது என்னவென்றால், அவள் தான் என்ன செய்தேன் என்று ஒருபோதும் அறிந்திருக்கவில்லை. மேலும் பார்வையற்றவர்களுக்கு நன்மை செய்ததாகவும் அவர்களின் சிக்கல்களைப் பொதுவெளியில் கொண்டு சேர்த்ததில் வெற்றி பெற்றதாகவும் கருதுகிறாள். அறியாமை என்பது உண்மையில் அனைத்துத் துயரங்களிலும் மிகப் பெரியது.

எல்லாத் துயரமான மாயைகளிலும் புனிதமான கருத்தாக இருப்பது பார்வையின்மை ஒரு எதிர்பாராத வரம் என்பது. ஜான் ஜி. மோரிஸ் எழுதிய தி பிளைண்ட் கேர்ள் ஆஃப் ரிட்டன்பெர்க் என்ற நாவலில், ஒரு இளைஞன் நாயகியிடம் கூறுகிறான்: ’கடவுள் உன் பார்வையைப் பறித்துவிட்டார், ஆனால் உன்னுடைய இதயம் மிகவும் பிரகாசமான ஒளியால் மிளிர்கிறது.’ எனக்குத் தெரிந்த ஒவ்வொரு பார்வையற்ற பெண்ணும் இதுபோன்ற உளறல்களுக்கு முகத்திலேயே அறைந்திருப்பாள். ஆனால் நாவலில் வரும் கற்பனைக் கதாநாயகியின் பதில் எதார்த்தமான கருத்தை விட மோசமானது: ’உங்களுக்குத் தெரியாதா, பார்வையற்றவர்களாகிய எங்களுக்குள் ஓர் உலகம் இருக்கிறது, அது உங்களை விட அழகாக இருக்கலாம், எங்களுக்குள் ஓர் ஒளி இருக்கிறது. அது சூரிய ஒளியை விடப் பிரகாசமாக ஒளிர்ந்து கொண்டிருக்கிறது’ என்கிறாள்.

இதுபோன்ற கட்டுக்கதைகள் ஒருவகையில் தித்திப்பாய் இருந்தாலும் இவைகள் நம்மைக் காயப்படுத்தி மனிதகுலத்திடமிருந்து பிரித்தே வைக்கின்றன. ஜேம்ஸ் லட்லோவின் சகிக்கமுடியாத நாவலான டேபராவில் வரும் அகக்கண்களால் காணும் பார்வையற்ற சிறுவன் காலேப், டிக்கன்ஸின் தி கிரிக்கெட் ஆன் தி ஹார்த் என்ற குறுநாவலில் விவரிக்கமுடியாதளவிற்கு இனிமையும் மேன்மையும் பெற்று பார்வையற்ற நாயகியாகவும் இறுதியில் ஏறக்குறைய அறிவிலியாகவும் வரும் பெர்த்தா, தி லாஸ்ட் டேஸ் ஆஃப் பாம்பேயி நாவலில் தன்னையே தியாகம் செய்துகொள்ளும் நிடியா, ஹால் கெய்னின் ஸ்கேப் கோட் என்ற நாவலில் வரும் நயோமிஞ் போதும். இவையெல்லாம் ஒளியற்ற இனிமையாகவும் அறிவற்ற இலக்கியமாகவுமே உள்ளன.

புனைகதைகளின் வரலாற்றில் மிகவும் பழமையான மற்றும் கொடூரமான கருத்து பார்வையின்மை பாவத்திற்கான தண்டனையென்பது. கூடாப்பாலுறவுக்காக சோஃபகிளிஸ் கதாபாத்திரமான இடிபஸுக்கும் தகாத உறவுக்காக ஷேக்ஸ்பியரின் க்ளாஸ்டருக்கும் பார்வை பறிப்புத் தண்டனையாக வழங்கப்படுகிறது. இது பார்வையின்மை என்பது பாவத்தை நீக்கிப் புனிதப்படுத்துதல் என்ற பொதுப்புத்தியில் நிலவிவரும் கருத்துடன் கைகோர்த்துச் செல்கிறது. இந்தக் கருத்து கற்பலகையைச் சுத்தமாகத் துடைத்து இயல்புநிலைக்குக் கொண்டுவருவது போல மனிதத்தன்மையையும் புனிதப்படுத்தி நற்குணமுள்ளவனாக மாற்றுவது மாதிரியானது. கிங்ஸ்லியின் வெஸ்ட்வேர்டு ஹோ என்ற நாவலில் ஆமியஸ் லீ என்ற ஏமாற்றுப் பேர்வழிக் கதாபாத்திரம் மின்னல் தாக்கிப் பார்வையிழந்த பிறகு புனிதத்தன்மை வாய்ந்தவராக மாறுகிறார்.

மனிதநேயமற்றவர்களாகப் பார்வையற்ற வர்களைப் பார்த்தல் என்ற கருத்து இயல்பான வாழ்க்கை மற்றும் உறவுமுறைகளிலிருந்து பார்வையற்றவர்களைப் பிரிக்கிறது. இது அசிங்கமான கறையாகப் பல இலக்கியங்களின் கதைக்களங்களிலும் தொடர்ந்து இடம்பெறுகிறது. டிக்கென்ஸின் பார்வையற்ற நாயகி பெர்த்தாவும் பல்வர் - லிட்டனின் நாவலில் வரும் நிடியாவும் காதலுக்காக ஏங்கியபோது நாவல்களில் வரும் மற்ற கதாபாத்திரங்களோ வாசகர்களோ எவருமே சிறிதளவு கூட அவர்களை விரும்பவில்லை. கிப்ளிங்கின் ‘தே’ என்ற சிறுகதையில், குழந்தைகளை நேசிக்கும் ஆனால் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள தகுதியற்றவராகக் காட்டப்படுகிறார் ஃபுளோரன்ஸ் என்ற அழகான பார்வையற்ற குடும்பப்பெண். குழந்தைகளை ஏன் பெற்றுக்கொள்ள முடியாதென்று கதையில் கிப்ளிங் கூறவில்லை. ஆனால் பார்வையற்ற அவள் திருமணம் செய்து கொள்வதையோ அல்லது குழந்தைகள் வளர்ப்பதையோ அவளால் கற்பனை செய்து பார்க்க முடியாது என்பது இங்குத் தெளிவு. இந்த இழப்பிற்காக ஒரு வகையான மாயஜால ஆற்றலால் ஈடுசெய்யப்படுகிறார் ஃபுளோரன்ஸ். அக்கம்பக்கத்தில் இறந்த சிறு குழந்தைகள் ஆவியாக வந்து அவளைச் சூழந்து கொள்கிறார்கள். அவள் ஒரு கோட்டானைப் போலப் பித்துப்பிடித்தவள் என்று நாம் புரிந்து கொள்ளக்கூடாது - அவள் பார்வையற்றவள், அதனால் அவள் பயமுறுத்தும் செய்கைகளைச் செய்ய உரிமையானவள்.

புகழ்பெற்ற இலக்கியக் கருப்பொருள்களில் இறுதியானது அங்கதம் அல்லது நீதிக்கதைகளுக்காகப் பார்வையின்மையைக் குறியீடாகக் கையாள்வது. பார்வையில்லையென்றால் மக்கள் அழிந்து போவார்கள் என்ற பழமொழிக்கேற்ப, நாட்டுப்புறக் கதைகள் முதல் திரைப்படம் வரை பார்வையின்மை மரணத்தின் வடிவமாகவோ அல்லது சாபமாகவோ அல்லது வேறு வகையான கண்ணுக்குத் தெரியாத அடையாளமாகவோ காட்டப்பட்டு வருகிறது. ஹச் ஜி.வெல்லின் புகழ்பெற்ற தி கன்ட்ரி ஆஃப் தி பிளைண்ட், பால் கோரி எழுதிய தி ப்ளெணட் ஆஃப் தி பிளைண்ட், மீட்டர்லிங்கின் தி பிளைண்ட் ஆகிய படைப்புகள் எல்லாம் மேற்கூறிய வகையில் அடங்கக்கூடியவை. கான்ராட் ஏகன் என்பவரின் சைலண்ட் ஸ்னோ, சீக்ரெட் ஸ்னோ என்ற சிறுகதையில் பார்வையின்மை என்பது மூளைக்கோளாறின் உருவகமாகக் காட்டப்பட்டுள்ளது.

இதுவரை விளக்கப்பட்ட அனைத்திலும் பார்வையின்மையென்பது அறியாமை மற்றும் குழப்ப நிலையின் வடிவமாகக் காட்டப்பட்டுள்ளது. மேலும் இயல்பு மற்றும் விழுமியங்களுக்கு மாறானதாகவும் மரணத்தை விடக் கொடியதாக இல்லையென்றாலும் மரணத்திற்கு ஒத்ததாகக் காட்டப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் இந்த இலக்கிய மரபுகளால் பார்வையற்றவர்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட இழப்புகளைத் திரும்ப மீட்டெடுக்க இயலாது. ஆனால் எதிர்காலம் இன்னும் தீர்மானிக்கப்படாமலிருக்கிறது. அந்த எதிர்காலத்தை உண்மை என்ற ஆயுதம் கொண்டு தீர்மானிப்போம். தன்னை உணர்தல், தன்னைச் சார்ந்திருந்தல் ஆகியவை போர்க்குணத்திற்கான அடையாளமோ தன்னை அழித்துக்கொள்ளும் செயலோ அல்ல. நம் எதிர்காலத்தை நிர்மாணிக்கக்கூடிய சவாலை நாம்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும். நமக்குத் தெரியும் நாம் யாரென்று; நமக்குத் தெரியும் நாம் என்ன செய்ய முடியுமென்று; நாம் அறிவோம் குழுவாக எப்படி இயங்குவதென்று.

இந்த இலக்கிய ஆய்வுகளிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? இவையெல்லாம் என்ன உணர்த்துகின்றன? பார்வையற்றவர்களுக்காகப் பணிபுரிக்கூடிய பிரபலமான பல அறிஞர்களின் எழுத்துகளின் பார்வையைப் புதிய கண்ணோட்டத்தில் புரிந்து கொள்ள இவை உதவுகின்றன. பார்வையற்றவர்களுக்காகப் பணிபுரியும் தொழில்நுட்ப வல்லுநர்கள், பார்வையற்றோருக்காக இயங்கும் அமெரிக்க அறக்கட்டளை மற்றும் அமெரிக்க மருத்துவம் & கல்வி, நல்வாழ்வுத்துறையில் பணிபுரிபவர்கள், அரசாங்க மானியங்கள், உயரிய பட்டங்கள், கவர்ந்திழுக்கக்கூடிய ஆய்வுக்கட்டுரைகளைத் தன்னகத்தே வைத்துக்கொண்டு உலவும் போலியான விஞ்ஞானிகளெல்லாம் பார்வையின்மையென்பது ஒளியிழப்பு அல்ல ஒட்டுமொத்தமாக வேறுநிலைக்கு மாற்றக்கூடியது எனக் கூறிக்கொண்டிருக்கிறார்கள்.

பார்வையின்மையென்பது கண்களுக்கு மட்டுமல்ல, ஆளுமைக்கும் ஒர் இழப்பு என்று இவர்கள் கூறுகிறார்கள். பார்வையின்மை ஒரு மரணம், தனிமனித இருப்புக்கு ஓர் அடி என்று கூறும் இவர்கள், கண் ஒரு பாலினக் குறியீடு என்றும் பார்வையற்றவர் ஒரு முழு ஆணாகவோ பெண்ணாகவோ இருக்க முடியாது என்றும் சொல்கிறார்கள். மேலும் நம்மிடம் பல போதாமைகளும் குறைபாடுகளும் இருப்பதாக இவர்கள் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

பார்வையற்றோருக்கான அமெரிக்க அறக்கட்டளை நாம் பின்பற்றவேண்டிய நடத்தைகளாக 239 பக்க அளவில் ஒரு வழிகாட்டிக் கையேட்டை உருவாக்கியுள்ளது. இக்கையேட்டில் குளிப்பதற்கு உதவும் பதினாறு வழிகாட்டுதல் நெறிமுறைகளும் கைதட்டல் மற்றும் தலையை அசைப்பதற்கான குறிப்பிட்ட நுட்பங்களும் கூறுப்பட்டுள்ளன. மேலும் ரொட்டியில் வெண்ணெயைத் தடவுவதற்கும் காலணிகளைக் கட்டுவதற்கும் விரிவான வழிமுறைகள் இடம்பெற்றுள்ளன. மேல், கீழ் என்ற வார்த்தைகளுக்கான பொருள்களைப் புரிந்துகொள்வதற்கும் குறிப்புகள் உள்ளன. இவையனைத்தும் அமெரிக்க ஒன்றிய மானியங்களுடன் செய்யப்பட்டுள்ளன. மேலும் இவற்றைப் புதிய கண்டுபிடிப்பு என்றும் நவீனச் சிந்தனை என்றும் வற்புறுத்திக் கூறுகிறார்கள்

ஆனால் நமது இலக்கிய ஆய்வு இதைப் பொய் என்றும் இவையொன்றும் புதிய கருத்துகள் அல்ல என்றும் கூறுகிறது. இவையெல்லாம் இடைக்காலத்தில் நிலவிய அறிவற்ற கருத்துகளைப் போன்றவை. கிரேக்க நாடகமான இடிபஸ் ரெக்ஸ் போன்றே இக்கருத்துகளும் பழமையானவை. மனிதனுக்குப் பண்டையக் காலம்தொட்டு இருந்து வருகிற இருளைப் பற்றிய பயமே இவர்களிடம் உள்ளது என அறிவியல் கூறுகிறது. பார்வையற்றோர்க்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளெல்லாம் உண்மையல்ல, கற்பனையே. இவை புதியவைகளும் அல்ல, இவைகளெல்லாம் மந்திரங்கள். நவீனப் போர்வையில் அலங்கரிக்கப்பட்ட கணினிமயமாக்கப்பட்ட புராணங்கள். நமது அமெரிக்க ஒன்றிய அரசின் வரிப்பணத்தின் மூலம் நமக்குக் கிடைத்திருக்கிற தொழில்நுட்ப வசதிகள், ஏராளமான அரசாங்க மானியங்களெல்லாம் பழங்கால ஜோதிடத்தில் வரும் பழகிப்போன பழைய கட்டுக்கதைகள். இரவைப் பற்றிய அச்சத்தின் தொடர்ச்சி.

அமெரிக்காவின் பார்வையற்றோர் மற்றும் பார்வை குறைபாடுடையோர்க்குச் சேவை செய்யும் முகமைகளுக்கான தேசியத்தர நிர்ணய அமைப்பை நாம் மறந்துவிடக் கூடாது. இந்த அமைப்பின் பணியாளர்களும் உறுப்பினர்களும் நமது பாதுகாவலர்களாகவும் காப்பாளர்களாகவும் செயல்பட முயற்சிப்பது, எலிசபெத்தின் காலத்தில் ’ஏழைகளின் காவலர்கள்’ என்று சொல்லிக்கொண்டு மரியாதையுடன் நடத்தினார்களே அதைப் போன்றது. 600 ஆண்டுகளுக்கு முன்பிருந்த பூசணிக்காயைத் தடவிப் பார்த்து உருவம் காணவைக்கிற கேலிக்கூத்தை, எப்படி நேர்த்தியுடனும் அதிகச் செயல்திறனுடனும் கழுதையின் காதுகளில் நம்மை உளறவைக்க முயற்சித்தார்களோ அதையேதான் இவ்வமைப்பினரும் செய்து கொண்டிருக்கிறார்கள்.

நமது தாழ்நிலை, கையறுநிலை பற்றிய தவறான கட்டுக்கதைகளை இன்று நாம் நிராகரித்துவிட்டோம். நாம் மாயஜால ஆற்றல் கொண்டவர்கள், வெகுளியானவர்கள் அறியாமையிலுள்ளவர்கள் என்கிற கருத்துகளையெல்லாம் நிராகரித்திருக்கிறோம். கடந்த காலத்தில் வாழ வேண்டும் என்று நம்மை வற்புறுத்த முயற்சிப்பவர்கள் காணாமல் போவார்கள். ஒரு முறை மக்கள் சுதந்திரத்தை நுகர்ந்துவிட்டால், அவர்களால் திரும்பிச் செல்ல முடியாது. பிறரின் கவனிப்பில் இருக்கும் நிலைக்கோ இரண்டாம்தரக் குடிமக்களாகக் கண்காணிப்பு முகமைக்குள் வாழும் நிலைக்கோ நாம் மீண்டும் திரும்ப மாட்டோம். பழைய நிலை மீண்டும் அரங்கேறும் முன்பாக அதைத் தடுத்து நிறுத்த பார்வையற்றவர்கள், பார்வையுடையவர்களெல்லாம் இணைந்து தெருவில் இறங்கி அமைதியாகப் போராடுவோம்.

நாம் ஒருபோதும் இலக்கியத்தின் ஆற்றலை மறந்துவிடக் கூடாது. புரட்சிகள் தெருக்களில் தொடங்குவதில்லை, அவை நூலகங்களிலும் வகுப்பறைகளிலுமே தொடங்குகின்றன. வரலாறு முழுவதும் அவ்வாறுதான். எடுத்துக்காட்டாக, அமெரிக்காவில் நடந்த பயங்கரமான உள்நாட்டுப் போரில் எழுத்தாளர்கள், கவிஞர்கள் கூடப் போராடினர்கள். அமெரிக்காவின் தெற்கு இராணுவப் படைகள் புல்-ரன் என்ற இடத்திற்கு வந்தபோது, அவர்கள் சர் வால்டர் ஸ்காட் தனது நாவல்கள் மூலம் கற்றுக்கொடுத்த வாழ்க்கைப் பாடங்களை நெஞ்சில் நிலைநிறுத்தியபடி வந்தனர். ஸ்டோன்வால் ஜாக்சனின் தலைமையிலான தெற்குப் படைகள் பூர்வகுடியையைச் சார்ந்த வடக்குப் படை சிப்பாய்களைத் தாக்குவதற்கு வால்டர் ஸ்காட் நாவலின் இவான்ஹோ மற்றும் துணிச்சலான கிங் ரிச்சர்டு கதாபாத்திரங்கள் துணைநின்றன. கவிஞர்களின் கனவுகள் மட்டும் இல்லாமலிருந்திருந்தால் போர் விரைவிலேயே முடிந்திருக்கக்கூடும். வடக்குத் துருப்புகள் சவால் மிகுந்த பல மைல்தூரப் பாதையைக் கடந்து ரிச்மண்டிற்குச் சென்றபோது ஹாரியட் பீச்சர் ஸ்டோ-வின் பேட்டில் ஹிம் ஆஃப் தி ரிபப்ளிக் கவிதை நூலை உடன் எடுத்துச் சென்றனர். ஹாரியட் பீச்சர் ஸ்டோவின் அங்கிள் டாம், எலிஜா கதாபாத்திரங்களே தெற்குப் படைகளின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி அவர்களின் எல்லைக் கோடுகளைத் தகர்த்தெறிந்தன. வால்டர் ஸ்காட்டும் ஹாரியட் பீச்சர் ஸ்டோவும் நடந்ததைத் துல்லியமாக அவ்வாறே கூறினார்கள் என ஒருபோதும் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் அவர்கள் என்ன சொன்னார்களோ அதுவே நம்பப்பட்டது. அந்த நம்பிக்கையே நிஜமானது.

இலக்கியம் பார்வையற்றவர்களாகிய நமக்கு எதிரானதா என்ற வினாவுக்குப் பொருத்தமான விடையொன்று இருக்க முடியாது. ஒருவேளை கடந்த காலத்தை மட்டுமே நாம் கருத்தில் கொண்டால், உறுதியாக ’ஆம்’ என்பதே பதில். மரபைத் தூக்கிப்பிடிக்கும் வரலாற்றைப் போலவே இங்குப் புனைகதைகள் உள்ளன. இவைகள் எதார்த்தத்திற்கு மாறானதையே சொல்லியிருக்கின்றன. குறிப்பிடத்தக்க விதிவிலக்குகள் சில இருப்பினும் கதைகள் ஒரே மாதிரியாகவும் எதிர்மறையாகவும் இருக்கின்றன. நிகழ்கால இலக்கியத்தை நாம் கருத்தில் கொண்டால், கலவையானது என்பதே அதற்கான பதில். மாற்றத்திற்கான அறிகுறிகள் தென்படுகின்றன, ஆனால் சமூகத்தில் உறைந்து கிடக்கும் பொதுபுத்திகளும் தவறான பிம்பங்களும் இன்னும் ஆதிக்கம் செலுத்துகின்றன. ஆதிக்கம் செலுத்தும் இவைகள் நமக்காகப் பணிபுரியும் ’வல்லுநர்கள்’ பலரின் எழுத்துகள் மற்றும் நம்பிக்கைகளால் மேலும் வலுப்படுத்தப்பட்டு திரும்பப் புகுத்தப்படுகின்றன.

இலக்கியத்தில் நமது எதிர்காலமென்பது நமது வாழ்க்கையைப் போல முன்னரே தீர்மானிக்கப்பட்டதாக இருக்காது. அது நம்மால் தீர்மானிக்கப்படுவதாக இருக்கும். தனித்தனியாகவும் ஒன்றிணைந்தும் நம் வாழ்க்கையை நாம் வடிவமைப்பதுபோல ....நமது இலக்கியத்தையும் உருவாக்குவோம். எழுத்தாளர்கள் நம்மைப் பார்ப்பது போல் நாம் நம்மைப் பார்த்தால்தான் பார்வையின்மை ஒரு துன்பியல். இலக்கியப் பக்கங்களின் உள்ளடக்கங்கள் அந்தக் காலத்தின் நிலையைப் பிரதிபலிப்பதாக நம் பகுப்பாய்வின் வழிப் புரிந்து கொள்ளலாம். இலக்கியத்தின் அமைப்பு ஒரு கண்ணாடி அறை. நாம் எதைக் காட்டுகிறோமோ அதையே பிரதிபலிக்கிறது. அது வாழ்க்கையை விடச் சற்றுப் பெரியதாகவோ அல்லது சிறியதாகவோ கூட இருக்கும். இந்தச் சமூகத்தை விழிப்புணர்வுள்ளதாக உயர்த்தி அதன் மனசாட்சியை சீர்திருத்துவதே இன்று நமக்கு முன்னிருக்கும் சவால். கற்பனையில் ஊறிக்கிடக்கும் நமது கதைகளை விடுவித்து அவற்றை உண்மையை நோக்கி நகர்த்த வேண்டும். அப்பொழுதே எதார்த்தத்துடன் பொருந்தக்கூடிய ஓர் இலக்கியத்தையும் உண்மையுடன் பொருந்தக்கூடிய பார்வையின்மை பற்றிய பொதுபிம்பத்தையும் நம்மைப் பற்றி இயல்புக்கு ஒத்துப்போகிற எண்ணத்தையும் கட்டமைக்கமுடியும்.

கவிதை என்பது ஆற்றல்மிகு பாடல், ஆன்மாவின் மொழி. சுதந்திரத்திற்கான நமது போராட்டத்தின் மேடை - நமது இயக்கத்தின் கதை - பழைய கட்டுப்பாடுகளிலிருந்து பார்வையற்றவர்களை விடுவிப்பதற்கான நமது போராட்டம் - இருளைப் பற்றிய மனிதனின் ஆதிகாலப் பயம் - இவையெல்லாம் காவியங்களாக படைக்கப்படுவதற்கும் கவிதைகளாக வடிக்கப்படுவதற்கும் காத்துக் கொண்டிருக்கின்றன. கவிஞர்களும் நாவலாசிரியர்களும் வார்த்தைகளை எழுதலாம், ஆனால் நாம்தான் இசையை உருவாக்க வேண்டும்.

பார்வையற்றோர் வரலாற்றில் நாம் ஒரு முக்கியமான தருணத்தில் இருந்து கொண்டிருக்கிறோம். நாம் தடுமாறினாலோ அல்லது பின்வாங்கினாலோ பார்வையின்மையின் துயரம் உண்மையில் பெரிதாக இருக்கும். ஆனால், நிச்சயமாக, நாம் தடுமாறவோ பின்வாங்கவோ போவதில்லை. மாறாக, நாம் மனங்களில் மகிழ்ச்சியோடும் உதட்டில் புன்னகையோடும் முன்னோக்கிச் செல்வோம். எதிர்காலம் நம்முடையதே, இதையே நாவலாசிரியர்களும் கவிஞர்களும் பதிவு செய்வார்கள். வாருங்கள்! தடைகளுக்கான போராட்டத்தில் என்னுடன் இணையுங்கள், நாம் அவற்றை வென்றெடுப்போம்.

ஆங்கிலத்திலிருந்து தமிழில்: ப. பூபதி & இரா. தமிழ்ச்செல்வன்

Pin It