guruswamy 350விருதுநகர் மாவட்டம் பாறைப்பட்டி என்னும் பின்தங்கிய சிற்றூரில், பின்தங்கிய ஒரு சமூகத்தில், சுமாரான ஒரு குடும்பத்தில் பிறந்த மா.பா.குருசாமி தன் வாழ்க்கையை “எப்படி இப்படி” என்னும் தலைப்பில் ஒரு நூலாக வெளியிட்டிருக்கிறார். 

பாறைப்பட்டி மாரியப்ப நாடார் - சொர்ணம் அம்மாள் இணையரின் மகனாகப் பிறந்த மா.குருசாமி அவருக்கானத் தனித்த அடையாளத்துக்காக மா.பா.குருசாமி எனப் பெயர் மாற்றப்பட்டு, ஆறாவது வகுப்பில் சேர்ந்து படிப்பதற்கே பெரும் போராட்டம் நடத்த வேண்டியதாயிற்று. அந்தப் பத்து வயதுச் சிறுவன் தமிழகத்தின் சிறந்த கல்வியாளர்களில் ஒருவராக, எப்படி வளர்ந்தார், மலர்ந்தார் என்பதை விளக்கும் நூல்தான் இந்தத் தன்வரலாறு.

மதுரை காந்திய புத்தக மையத்தின் தலைவராக இருந்து வருபவர் மா.பா.குருசாமி. திண்டுக்கல் மாவட்டத்தின் இன்றைய அரிஜன சேவா சங்கத்தின் செயலாளரும் இவரே. அய்யா பாதமுத்து என்னும் தெளிந்த காந்தியச் சிந்தனையாளர், பேராசிரியர் மார்க்கண்டன், அருட்செல்வர் நா.மகாலிங்கம் இவர்களையெல்லாம் தனக்கு மிக நெருக்கமானவர் களாகப் பெற்றவர் இவர். நூற்றிஐம்பது நூல்களின் ஆசிரியர். எண்பது வயதிலும் நாற்பது வயதுக்குரிய சுறுசுறுப்பு, நினைவாற்றல் பெற்றவர். 

வகுப்பாசிரியர் வெங்கடராம அய்யர், வகுப்பறையில் சொன்ன ஏகலைவன் கதையிலிருந்து, இந்து மதத்தினுள்ளே சாதிய ஏற்றத்தாழ்வு இவ்வளவு பயங்கரமாக இருந்திருக்கிறதே என்பதை உணர்ந்தார். ஆயினும் அதைவிட்டு வெளியேறாமல், அதனுள்ளேயே தன் உரிமைகளுக்காகத் தொடர்ந்து போராடிப் போராடித் தன்னை விசாலப்படுத்திக் கொண்டார் இவர்.

டி.கல்லுப்பட்டி மகாவித்யாலயத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த காலத்தில், பிராமணர்கள் வாழும் தெருவில் இவர் தன் குடும்பத்தோடு வசிக்க நேர்ந்தது. இவர் மனைவி தேமொழி அம்மையார் பிராமணர்கள் நீர் இறைக்கும் கிணற்றில் நீர் அள்ளப் போயிருக்கிறார். கிணறு தீட்டுப்படுகிறது, வராதே என்றார்கள் பிராமணப் பெண்கள். தீண்டாமை ஒரு குற்றம் என்பதை எடுத்துச் சொல்லி, நீங்கள் எது வேண்டு மானாலும் செய்யுங்கள், நான் நீர் இறைக்கத்தான் செய்வேன் என்று அவர்களுக்கு எதிராகப் போர்ப் பிரகடனம் செய்து, வெற்றி பெற்றவர் மா.பா.குருசாமி.

கிறிஸ்தவத்தில் ஈடுபாடு கொண்ட இவர் “கிறிஸ்தவர் வேதநூல் ஒரு பொக்கிஷம்” என்ற தலைப்பில் பள்ளியில் நடத்தப்பட்ட போட்டிக்காக ஒரு கட்டுரையை எழுதிப் பள்ளித் தலைவரான பாதிரியாரிடம் கொடுத்தார். கட்டுரை பரிசு பெறவில்லை. பள்ளியின் நிர்வாகியான அந்தக் கத்தோலிக்கச் சாமியாரைக் கேட்டார். கட்டுரையை நீ தரவில்லை என்றார் சாமியார். “இல்லை அய்யா, நான் தந்தேன்” என்று மறுத்தார் இவர். அந்தப் பாதிரியாரோ கோபம் கொண்டு இவரைத் தன் வீட்டின் முன் ஒருமணி நேரம் முட்டிபோட வைத்துக் கொடுமைப்படுத்தினார். காரணம் இல்லாமல் தண்டனை பெற்றதால் நொந்து போன குருசாமி சொல்லுகிறார்: “இந்து மதத்தின் கோளாறுகளுக்காகக் கிறிஸ்தவத்தில் சேரலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தவன் நான், அப்படி சேரவிடாமல் தடுத்தது பாதிரியாரின் இந்த செயல்.” இதுமாதிரிச் சம்பவங்கள் இந்த நூலில் ஏராளம்.

புத்தகப் பிரியர் மட்டும் அல்ல குருசாமி, புத்தக வெறியர் என்றும் சொல்லலாம். நத்தம்பட்டியில் ஒரு பெரியவர் வீடு, வடுகப்பட்டி ரங்கூன்செட்டியார் வீடு, விருதுநகர் சுயமரியாதை நூலகம், இங்கெல்லாம் சென்று நல்ல நூல்களைத் தேர்வு செய்து, தீவிரமாக வாசித்துத் தன்னை வளர்த்துக் கொண்டார் இவர். 

பள்ளி இறுதி வகுப்பில் இவருக்கு ஹால் டிக்கட் வழங்க நிர்வாகம் மறுத்தது. காரணம் இவர் பள்ளிக் கட்டணத்தில் பாக்கி வைத்திருந்தார். அந்த நேரம் இவர் எழுதிய கதை ஒன்றுக்குப் பரிசாய் ரு. 100 வந்தது. அந்த நூறு ருபாயைப் பள்ளியில் கொடுத்துக் கணக்கைத் தீர்த்து ஹால் டிக்கட் பெற்றார். 

தன் வழிகாட்டியான பாதமுத்து அண்ணனிடம் காந்திய சிந்தனையைத் தொடர்ந்து கற்றார் குருசாமி. மதுரையில் மார்க்சியப் பெருஞ்சிந்தனையாளர் எஸ்.ஆர்.கே.யின் பொதுவுடைமை வகுப்புகளுக்குச் சென்று மார்க்சியம் கற்றார். அன்று புகழின் உச்சியில் இருந்த டாக்டர் மு.வ.வைத் தேடிச் சென்று அளவளாவி, அவர் வழியைக் கற்றார். தீபம் நா.பார்த்தசாரதியை வலியத் தேடிச் சென்று நண்பராக்கினார். தோழர் ப.ஜீவானந்தத்தோடு உறவை வளர்த்துத் தன்னை விசாலப்படுத்திக் கொண்டார். அவர் எழுதிய கவிதை ஒன்றைப் பார்த்துவிட்ட ஜீவா, அதை ஜனசக்தியில் வெளியிட்டு, அவருக்கு ஊக்கமளித்தார். பேராசிரியர் நா.வானமாமலையின் நெல்லை ஆய்வுக் குழுக் கூட்டங்களில் கலந்துகொண்டார். அவர் தலைமையில் நடந்த பட்டிமன்றங்களில் கலந்து கொண்டார். துணிந்து ரகுநாதன் கருத்துகளுக்கு மறுப்புத் தெரிவித்தார். எதிர்ப்பு வந்தபோது, ரகுநாதனே எதிர்த்துப் பேசியவர் களை அடக்கி, இவருக்கு நம்பிக்கையூட்டினார். தாமரையில் தொடர்ந்து கதைகள் எழுதினார்.

இவ்வாறு இடதுசாரித் திசையிலே பயணம் செய்த குருசாமி, ஏன் திசை மாறினார்? அவரே சொல்லுகிறார், “டாக்டர் குமரப்பா அய்யாவை நான் வாசிக்கவில்லை என்றால், கம்யூனிஸ்டாகவே மாறியிருப்பேன்.” அந்த அளவுக்கு இடதுசாரி சிந்தனையாளர்களோடு அவருக்கு தொடர்பு இருந்தது. இந்த தொடர்புகளாலேயே, இவர் திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் பணியாற்றிக் கொண்டிருந்த காலத்தில், இன்னொரு பேராசிரியர் இவரைப்பற்றி மேலிடத்துக்குக் கோள் சொல்லி உசுப்பேற்றிக் கசப்பை உருவாக்கினார். அந்தப் பகைமையையும் வெற்றிகரமாகச் சமாளித்தார் குருசாமி.

இரண்டு துணைவேந்தர்கள் இவர் வாழ்வில் குறுக்கிட்டவர்கள். ஒருவர் டாக்டர் மு.வ. மா.பா.கு.வின் நேர்மை, காந்தியச் சிந்தனையில் அவருக்கிருந்த பற்று, கடும் உழைப்பு, ஒழுங்கு, இவை அவரைக் கவர்ந்தன. மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக அவர் பணி செய்தபோது, மா.பா.கு.வை அங்கே அழைத்து, அவருக்கு வேலையும் போட்டுக் கொடுத்தார். அவர் படிக்கவும், ஆய்வு செய்யவும் எல்லா வசதிகளும் செய்து கொடுத்தார். ஆராய்ச்சிகளுக்குத் தேவையான நிதியுதவி ஏற்பாடு செய்து கொடுத்தார். ஒரு மூத்த சகோதரர் போல இவர் வளர்ச்சியில் கண்ணுங்கருத்துமாக இருந்தார். ஆனால் அவருக்குப் பின்வந்த துணைவேந்தர் சிட்டிபாபு இவரை அப்படிப் பார்க்கவில்லை.

ஆதித்தனார் கல்லூரியின் நிர்வாகத் தலைவர் சிவந்தி ஆதித்தனார் குருசாமியை அவர் பண்புகளுக்காக, உழைப்புக்காக, நேர்மைக்காக, சாமர்த்தியத்துக்காக நேசித்தார். அவரை விடுதிக் காப்பாளராகவும் நியமித்தார். எதையும் நேர்படச் செய்யவேண்டும் என்று விரும்பிய மா.பா.குருசாமி விடுதிக் கணக்குவழக்குகளைச் சரிபார்த்தார். ஒன்றும் ஒழுங்காக இல்லை. எழுபத்தி ஐய்யாயிரம் ரூபாய் கையாடல் நடந்திருப்பதைக் கண்டுபிடித்தார். அதுமட்டுமல்ல, போலியான ஒரு முத்திரையைச் செய்து, அந்த விடுதி நிர்வாகி அதைத் திருட்டுத்தனமாகப் பயன்படுத்திக் கொண்டிருந்ததையும் கண்டுபிடித்தார். அவரைக் கல்லூரி விடுதியைவிட்டே வெளியேறவும் செய்தார்.

இன்னொரு சுவையான சம்பவம். கல்லூரி விடுதியில் யாரும் சீட்டாடக் கூடாது என்பது விதி. விதியை மீறி ஒரு மாணவர் சில நண்பர்களுடன் சீட்டாடினார். அறிவுரை சொன்னார் மா.பா.கு. வசதி உள்ள குடும்பத்தைச் சார்ந்த அந்த மாணவரோ மறுத்துப் பேசினார். முடிவு? கல்லூரியில் இருந்து அந்த மாணவர் நீக்கப்பட்டார். நீண்ட காலத்துக்குப் பின் மா.பா.கு. எழுதிய ஒரு நூலுக்காக அண்ணாமலைச் செட்டியார் விருது இவருக்கு வழங்கப்பட்டு, அந்த விருதைப் பெற அங்கு அவர் போனபோது, முன்பு கல்லூரியில் இருந்து நீக்கப்பட்ட மாணவர் இவரிடம் வந்து “அய்யா அன்று நீங்கள் கண்டித்துத் தண்டித்ததால் இன்று நன்றாக இருக்கிறேன். உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்,” என்று மனம் நெகிழ்ந்து சொன்னார். 

கல்லூரிக் கல்வியை மா.பா.குருசாமி முடித்ததும் அவருக்கு முதலில் கிடைத்த வேலை வணிக வரித் துறையில். அங்கே அளவுக்கு அதிகமான சலுகைகள், தேவையில்லா பண வரவுகள், எலிகளும், பெருச்சாளி களுமாக எங்கும் கும்மாளம் போடும் லஞ்சமும், ஊழலும். இவரால் அங்கு தாக்குப்பிடிக்கவே முடியவில்லை. அந்த வேலையை விட்டு விட்டு

தி.கல்லுப்பட்டிக்கு ஆசிரியர் வேலை பார்க்கப் போனார்.

இப்படியான சுவையான செய்திகள் நூலெங்கும் விரவிக் கிடக்கின்றன. மா.பா.குருசாமியின் 80ஆவது வயது நிறைவையட்டி வெளியிடப்பட்டுள்ள இந் நூலில் ஏராளமான வாழ்வியல் செய்திகள் மற்றும் படங்கள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்க ஒன்று.

எப்படி இப்படி

ஆசிரியர்: டாக்டர் மா.பா.குருசாமி

வெளியீடு: குரு தேமொழி பதிப்பகம்,

தாயன்பகம், 6-வது தெரு,

எ.கே.எம்.ஜி.நகர்,

திண்டுக்கல் - 624 001.

விலை: `300/-

Pin It