தஞ்சாவூர் போயிருக்கிறோம். புதுக்கோட்டை எந்த பக்கம் என்று அறியோம். ஆசான் அகன் ஐயா... விஷயத்தை சொல்லி புதுக்கோட்டை என்று சொல்லி விட... பிறகு கோகுலன் வழி காட்ட புதுக்கோட்டைக்குள் அரூவமாய் சுற்றி அலைந்து... பிறகு இரும்பு யானையில் இடம் பிடித்தோம்.

தம்பி காதலாரா 'வழக்கம் போல' வந்து சேர்ந்திருந்தான். 12.30 க்கு வர வேண்டிய இரும்பு யானை என்னையும் பார் என் அழகையும் பார் என்று 1.10 வந்து சேர்ந்தது. ஏறி அமர்ந்து எங்கே அமர.. நேராக படுக்கை தான். நமக்குதான் பயணத்தில் பறக்கும் வியாதி இருக்கிறதே. தூக்கம் வருமா.

வயதான தம்பதிகள் இடம் மாற்றி கேட்டார்கள். மாற்றிக் கொடுத்து மனதை ஆற்றுப்படுத்தி... பேச பேசவே அவர்கள் தூங்கிப் போனார்கள். தம்பியும் தான். அதன் பிறகு கண்களை மூடிக்கொண்டு நானும்தான் தூங்கறேன் என்பதாக கிடக்க... இரும்பு யானைக்கு சரியான பசி போல. பொதுவாக இப்பிடி இப்பிடி தானே தள்ளாடும். இந்த முறை இப்பிடி இப்பிடி என்று போட்டு குலுக்கி கொத்து புரோட்டா போட்டு விட்டது. ஆனாலும்... மனதுக்குள் மலை உச்சி காத்திருக்க... அதன் மத்தியில் இதயம் வீற்றிருக்க... விடிந்தால்... பச்சைமலை பூவும் உச்சி மலைத்தேனும் கிடைக்க போகிறது என்ற சிறுபிள்ளை சிரிப்பு. அடங்க மறுக்கும் அநியாய சுயம்.veethi puthukottai functionஇரும்பு யானை ஆட்டம் தானே தவிர வேகம் இல்லை. திருச்சிக்கே 5.30 என்றால்.. தஞ்சாவூருக்கு... அதன் பிறகு புதுக்கோட்டைக்கு... விளங்கும் என பரபரவென முடிவெடுத்தோம். திருச்சியிலேயே இறங்கி... ஆட்டோ பிடித்து.. பேருந்து நிலையம் அடைந்து... புதுக்கோட்டை பேருந்திலும் ஏறி விட்டோம். அந்த நேரத்திலும் பேருந்து முழுக்க ஹெல்மெட்டு தலைகள். (எங்க போகுதுங்க) பெயருக்கு கூட ஒரு கூந்தல் தலை இல்லை.

7.30 க்கு புதுக்கோட்டை. நம்மை தாலாட்டி வரவேற்றது. தோழர் கீதாவுக்கு அலைபேச... வழி சொல்லி.... விடுதி முன்பு காத்திருந்தார். விடுதியும் காத்து வாங்க எங்களுக்கு காத்து தான் இருந்தது.

புன்னகை முகத்தில்... நிகழ்வு சுமை. ஒருங்கிணைப்பாளர்க்கே உண்டான உள்ளத்தின் கணக்கு தோழர் கீதாவின் நெற்றியில் ஓட...எங்களை விடுதி சேர்த்து அரங்கம் வந்து சேரும் வழியையும் சேர்ப்பித்து விட்டு அடுத்த பணிகளுக்கு பறந்து விட்டார்.

நாங்கள் புறப்பட்டு தயாராகி... அதற்கு முன் காலை சிற்றுண்டி பற்றி சொல்ல வேண்டும். சிற்றுண்டியா அது. பெரு உவகை. தட்டு நிலாக்கள்... இத்தனை சுவையாக இருக்குமா என்று திக்கு முக்காட வைத்து விட்டது.. அந்தக் கடை இட்லிகள். இனி மல்லிகை பூவுக்கு இட்லி என்றே பெயர் வைக்கலாம். அத்தனை பக்குவம். மற்றவர்கள் இட்லி சுட... இவர்கள் கொய்திருக்கிறார்கள். வயிறு நிறைய... வானம் விழித்தது.

மீண்டும் ஆட்டோ பிடித்தோம். அடுத்த பத்தாவது நிமிடத்தில் அரங்கம்.

வெளியே வைத்திருந்த பதாகையில் ... உச்சி மலைத் தேனோடு பச்சை மலைப் பூவும் பூத்திருந்தது. பெருமை அருமை என்றெல்லாம் தோன்றவில்லை. பதற்றம்... பக்குவம் என்றே பதறியது. உள்ளே சென்றோம். ஐயா முத்துநிலவன் யுகம் மலர வரவேற்றார். முத்து நிலவரா அவர். கொத்து நிலவர். சிரித்துக் கொண்டே பேசி சிரிக்க சிரிக்க பேசி... சிந்திக்கவும் வைத்து விடும்... சித்து. இயல்பும் மாறாமல்... இயந்திரத்தனமும் கூடாமல்... நிகழ்வுக்கு தலைமை ஏற்று நடத்தியது.. சித்திரத்தில் சிதறாத வண்ணங்களைக் கையாண்டது போல. நகைச்சுவைக்கு சுவை கூட்டி கருத்துகளுக்கு பலம் கூட்டி... வீதி அமைப்புக்கு இவர் தூண் மட்டும் அல்ல. தோகையும்.

வீதி இலக்கியக் களம் புன்னகையோடு எங்களை ஏந்திக் கொண்டது. எந்த முகத்திலும் இலக்கிய பூச்சு இல்லை. இயல்பின் வழியே ஒரு கொண்டாட்ட மொழியைக் கண்டேன். எழுத்தாள தோழர்கள் ஒவ்வொருவருமே ஒவ்வொரு புத்தகம் போல திறந்து கிடந்தது... போகிற போக்கிலேயே படித்து விட முடிந்தது.

விழா நாயகன் அகன் ஐயா வரும் வரை ஒரு தோற்றம் அரங்கத்துக்கு. அவர் வந்த பிறகு வேறொரு தோற்றத்தில் வண்ண வண்ண சிமிட்டல்கள். உங்கிட்ட குடுக்க மாட்டேன்.. குருகிட்ட தான் குடுப்பேன் என்ற துள்ளல் சிறுவன் மொழியோடு பச்சைமலை பூவையும் உச்சி மலைத் தேனையும் என் கைகளில் கிடத்தினார். எழுதுகிறவனுக்கு அவன் நூல்கள் உயிர்க்கு சமம். பரவசம் பொங்க... அவசரமானேன். பிரித்து பிரித்து பார்த்தேன். நூலை வெகு அழகாக வடிவமைத்திருந்தார்கள். தீர தீர தீராத திளைத்தல் ஒவ்வொரு பக்கத்திலும். காரமும் இனிக்கும் தருணம் எனதெங்கும்.

விழா... குறித்த நேரத்தை விட கொஞ்சம் தாமதமாகத்தான் தொடங்கியது. அது ஞாயிறின் தூபம்.

தோழர் கீதா வரவேற்புரை நிகழ்த்த... குரல் வழியே ஒலி நயம் சற்று குறைபட்டுக் கொண்டதை உணர்ந்தோம். அத்தனை அலைச்சல். ஒரு கல்யாணத்தை நடத்துவதைப் போல தான்... இலக்கிய நிகழ்வை நடத்துவது. யாருக்கு என்ன செய்ய போகிறோம். எப்போது ஆரம்பித்து எப்போது முடிப்பது... இடையே தொய்வில்லாமல் நிகழ்வை தொடர என்ன செய்வது... எழுத்தாள கூட்டம் கொஞ்சம் தொட்டா சிணுங்கி கூட்டம். முணுக்கென்றால் மூக்கை உரிந்து கொண்டு விடுவார்கள். ஆக... பார்த்து பார்த்து பத்திரமாய் நெருங்க வேண்டும். பார்த்து பார்த்து பக்குவமாய் விலக வேண்டும். கை தேர்ந்தவராக இருக்கிறார் தோழர். ஒற்றை மனுஷிக்கு பின்.. உறுதுணைக்கு தோழர்கள் இருக்கிறார்கள். ஆனாலும் முன் நின்று முதல் பிடியை இறுக்க... பக்குவம் வேண்டும். பரந்துபட்ட பொறுமை வேண்டும். இருக்கிறது. வாழ்த்துகள்.

தலைமையுரை என்று அடுத்தடுத்து நிகழ நிகழ நிழல் நீங்கி சுடர் கூட தொடங்கியது அரங்கம். ஒவ்வொரு நூலாக வெளியிட்டு ஆசிரியருக்கு மரியாதையை செய்தார்கள். வெளியிட்டவருக்கும் மரியாதை. வாங்கி கொண்டவர்களுக்கும் மரியாதை. எந்த அவசரமும் இல்லை. எந்த அலட்டலும் இல்லை. பொன்னாடையும் பெயர் பொறித்த கேடயமும்... கூட கூடும் புகைப்படங்களும் மெய் சிலிர்க்க செய்தன. மேடை நடுவே நிறைந்த மை கூடென நிற்பது... இதுவரை வந்த தூரத்துக்கான ஆசுவாசம். இனி போக போகின்ற தூரத்துக்கான மைல்கல். எழுதுகிறவனுக்கு இது தான் நம்பிக்கை. இன்னும் எழுத தூண்டும் இரத்த ஓட்டம் அது. இதயம் சமநிலைப் பட இதுபோன்ற பாராட்டுக்கள் அவசியம். படைப்பாளி வாழும் காலத்திலேயே கொண்டாடப்பட வேண்டும் என்று அடிக்கடி அகன் ஐயா சொல்வார்கள். அது தான் நிகழ்ந்தது.

உச்சி மலைத்தேனோடு சேர்ந்து 5 நூல்கள் வெளியீடு.

நீடு வாழ்க நிகழ்காலத்திலே... எழுதித் தீரா வலி... எது கவிதை என்ன செய்யும் அது.. வீதி 100 தொகுப்பு என்று ஐந்து முத்துகள். அடுத்தடுத்து வெளியிட்டு அது பற்றி பேசி.. சிலாகித்து.. அதில் இருக்கும் உட்கருத்தை வெகு நயமாக எடுத்துரைத்து.. ஐயா முத்துநிலவர் கோர்த்தது... முத்து மணி மாலை. எமைத் தொட்டு தொட்டு தாலாட்டியது.

"பச்சை மலைப்பூவு நீ உச்சீ மலைத்தேனு... குத்தங் குறை ஏது நீ நந்தவனத் தேரு.." என பாட்டில் தான் ஆரம்பித்தார். பறந்த கவிஜியை இழுத்து இழுத்து அமர வைக்க பாடாய் போனது. மேடையேற்றி நம்மை மலை ஏற்றி விட்டார்கள். மலையில் இருந்து இறங்க மறுக்கும் மனதோடு தான் அமர்ந்திருந்தேன். உச்சி மலைத்தேன் வடியும் பாறையில்... சிறு பறவை என்ன செய்யும். தவ்வி தவ்வி வானம் குடிக்கும்.

"வீதி" க்குள் இருந்த ஒவ்வொரு மணியும்... வெண்பனி சூழ உணர்ந்தேன்.

அடுத்து நிகழ்வின் மையத்துக்கு வந்து விட்டோம். அகன் ஐயாவின் படைப்புலக நகர்வு.

முதலில் "பயணங்களில் அகன்" என்ற தலைப்பில் முனைவர் நேரு பேசினார். நேர்மையான பேச்சு. மெல்ல ஆரம்பித்து மெருகேறியது. "உரைநடைகளில் அகன்" என்ற தலைப்பில் தோழர் வித்யா பேசினார். மெல்லிய ஓடையில் மிதந்த மென்பழுப்பு இலையென. மேகம் கூட துணைக்கு சேர்ந்து கொண்டது. அடுத்து "கவிதைகளில் அகன்" என்ற தலைப்பில் பெருந்தகைகள் போட்டு தாக்கினார்கள். சிரிப்பு வெடிக்கும் பஞ்சமில்லை. சிந்தனை வடிவத்துக்கும் பஞ்சமில்லை. சிரிக்க சிரிக்க பேசி ஞாயிறு மதிய சோர்வை போக்கினார்கள். அகன் ஐயாவின் சிறப்புகளை... அவரின் சிந்தனை களத்தை... அவரின் ஞான தளத்தை தனிப்பட்ட முறையில் நான் அறிவேன். ஆனால் தெரியாதவர்களுக்கு திரள் திரளாய் தித்திக்கும் இலக்கிய பரிமாறல் அது. ஒரு மெல்லிய பூங்கொத்தாக மேடை ஓரத்தில் அமர்ந்திருந்த அகன் ஐயா நிறைந்த குடம். மற்றவர்கள்.... 'முன்னால வாங்க' என்று கூப்பிடும் போதும் தன்னை பின்னாலயே வைத்துக் கொள்ளும் தன்மை... பேரழகு. எத்தனை மேடைகள் கடந்த பிறகும்... புது மேடையைப் போல நடந்து கொள்ளும் அவரின் பக்குவம் நாம் கற்றுக்கொள்ள வேண்டியது.

நான் ஆவலோடு காத்திருந்த அவரின் ஏற்புரை... வழக்கம் போல அப்படியே. இந்தப் புலியும் பாயுமா என்பது போல பதுங்கி பதுங்கி... ஒரு கட்டத்தில் அதிரி புதிரி பாய்ச்சல். சொல்லில் ஆடல்... வாக்கியத்தில் கபடி... பேச்சில் பட்டாசு... என நின்றபடியே வானத்துக்கும் பூமிக்கும் மொழியை நிகழ்த்துவது அவருக்கு இயல்பு. நமக்கு அதிர்வு. புதுவை தந்த பேச்சு கொஞ்ச நேரமே ஆனாலும்.. புதுகை நிறையும் பேச்சு.

இடையே கவிஜியை வாழ்த்தி அவர் பேசியது.. வாழ்நாள் உற்சாகம். இன்னும் கொஞ்ச தூரம்தான்... ஓடு.. விடாத என்ற உத்வேகம். மௌனம் நிறைந்து அமர்ந்திருந்தேன்.

தோழர் சோலச்சி (இவர் பெயரே பிரம்மாதம். அட என்றிருந்தது.) தேனீர் தான் தருகிறார் என்று பதறி வேண்டாம் என்றேன். அது சிறுதானிய கஞ்சி என்று பிறகு தான் தெரிந்தது. பார்த்து பார்த்து கவனித்தார். கேட்டு கேட்டு தேவையைப் பூர்த்தி செய்தார். இடையிடையே வயிறு காயாமல் பார்த்துக் கொண்ட தோழரின் சேவை... பேரழகு. கனத்த மீசையில்... எங்கள் சேகர் மச்சானை நினைவு படுத்தினார். கையை ஆதுரமாகப் பற்றிக் கொண்ட தருணம் அத்தனை பலமாக இருந்தது. பேருக்கு கை குலுக்குவது அல்ல. சிலர் தொட்டு கொடுத்து போவார்கள். இது அது அல்ல. இறுக்கி பிடித்து நீயும் நானும் ஒன்று என்று சொல்வது. பற்றிக் கொண்ட கையை விட மாட்டோம் என்ற உறுதி உணர்ந்த போது.. கொஞ்சம் சகஜமானேன். நம்ம கொஞ்சம் ரிசர்வ்ட் தானே. பழகிய கூட்டத்தில் தான் பல்டி அடிப்பதெல்லாம். மற்றபடி தூரத்து பூனைதான்.

நீங்க தான் கவிஜியா... உங்கள நிறைய படிச்சிருக்கேன்.. ஐயோ நேத்து கூட பேசிட்டு இருந்தேன்.. இன்னைக்கு பாத்துட்டேன் என்று ஒரு சிறுமியாக துள்ளிய விஜிம்மாவை வியக்காமல் இருக்க முடியாது. விருந்தோம்பலை விழிகளிலே கூட தர முடியுமா என்ற வியப்பின் உச்சம் அது. பார்க்க புத்தன் மாதிரி இருந்துட்டு கண்ணுல குறும்பு என்றார். ஹைக்கூவுக்குள் இன்னொரு வரி ஆனது போல அப்படி ஒரு ஹா. தோழர் துவாரகா தேடி பிடித்து வந்து தோள் தொட்டார். எத்தனை நம்பிக்கையான கைகள் அவை. புன்னகை மாறாத வெளிர் அன்பு. குறுகிய நேரத்திலும் நிறைய பேசி நிறைந்த கண்களோடு மீண்டும் அரங்கத்துக்குள் அமர்ந்தேன். புகைப்படம் எடுப்பவர் ஒரு புகைப்படம் போலவே இருந்ததைக் கண்டு ரசித்தேன். தோழர் சூர்யா சுரேஷ்... ராஜ தந்திரம் படத்தின் ஹீரோவின் சாயல். வித வித கோணங்களில் வீதிக்குள் வெளிச்சம் காட்டினார். வெளிச்சத்தில் நம்மைத் தீட்டினார். தோழர் கஸ்தூரி விழா மேடையிலேயே நமக்கான சிம்மாசனத்தை விரித்தார். விழா முடிந்ததும் அன்பின் நிழலை மிக அருகே உணர வைத்தார். தோழர் உமா மகேஷ்வரியின் அறிமுகம் இனிப்பு தூவல். தோழர் அண்டனூர் சுரா வந்திருந்தார். அவரின் கதைக்குள் இருந்து வந்தது போலவே இருந்தது. குல்லாவ கழட்டிறாதீங்க. அடையாளமா மாறிடுச்சு...என்று இதயத்தில் இருந்து எழுகிறது ரசனை.

மதிய உணவு போதும் போதும் என்றளவுக்கு மலர்த்தி எடுத்தது. தோழர் கீதாவின் விருந்தோம்பல்.. திணற அடித்தது. புல் கட்டு எல்லாருமே. மொத்தத்தில் மனம் நிறைந்த நிகழ்வு. புதுக்கோட்டை நம்மை அழகு படுத்தி திருப்பி அனுப்பியது. பெயர் தெரியாமல் அகம் நிறைந்த முகங்கள் நிறைய. ஒரு நல்ல நிகழ்வில் கலந்து கொண்ட திருப்தி. வீதிக்கு பெரும் நன்றிகள். நிகழ்வை தொகுத்த தோழர்களுக்கு வாழ்த்துகள்.

அறை வந்து சற்று ஓய்வெடுத்து விட்டு கிளம்பினோம்.

பேருந்தேறி தஞ்சாவூர் சென்று இரவு உணவு முடித்து இரும்பு யானை ஏறினோம். இப்போதும் 15 நிமிடம் தாமதம். ஆடி அசைந்து... பாவம் அதற்கும் சோர்வு இருக்கும் தானே. உள்ளே சென்றால் எங்கள் படுக்கையில் ஒரு பெரியம்மா. கேட்டால் அந்தம்மா படுக்கையில் டிக்கெட் எடுக்காத ஒரு குடிகாரர். என்னடா சோதனை இது என்று யோசனை. அந்த பெரியம்மா அவர் பையன் மருமகள் இரு சிறு குழந்தைகள்.. என அவர்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. எத்தனை சொன்னாலும் குடிகாரர் எழுந்து போக மாட்டேங்கிறார். இது என் சீட்டு என்கிறார். தம்பியும் நானும் எவ்வளவோ சொல்லியும் ம்ஹும். பிறகு புகார் அளித்து போலீஸ் வந்து அப்புறப்படுத்தி.. கிட்டத்தட்ட ஒரு மணி நேர போராட்டம். அப்பாடா என்று படுத்தோம். பத்தே நிமிடத்தில் அந்த மருமகள் படக்கென்று எழுந்து லைட் போட்டது. பார்த்தால்.. இன்னொரு குடிகார மகான் வெள்ளை வேட்டியில் கதம் கதம் என்று கையை காட்டிக் கொண்டு கால் மேட்டில் அமர்ந்திருக்கிறார். என்ன என்று கேட்டால்.. இது ஜனநாயக நாடு. யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் அமரலாம் என்று இன்னும் இன்னும் என்னென்னவோ உளறல். எதிரே மேலே கீழே என்று நாலைந்து பையன்கள். ஒருத்தனும் கண்டுக்க மாட்டேங்கிறான். அந்த புள்ளையா.... பதறுது. அந்த புருஷன் பரிதாபமாக எங்களை பார்க்கிறார். எத்தனை முறை தான் புகார் அளிப்பது. கவிஜி விழா சோர்வில் பேக்குக்குள் சுருண்டு கொண்டான். யுத்தன் விழித்துக் கொண்டான். ஒரு சவுண்ட். "ஏய்ய்ய்...... எந்தர்ரா மேல..." என்று மேல் பெர்த்தில் இறங்க இறங்கவே எழுந்து விட்டார்.. ஜனநாயகவாதி. சரி சரி.. என்ற உடல்மொழியோடு அப்படியே நகர்ந்து படி பக்கம் சென்று விட்டார். தம்பி லைட்ட ஆப் பண்ணுடா என்று இன்னொரு சத்தம். பக்கத்தில் வேடிக்கை பார்த்த கூட்டமும் சேர்ந்து லைட்டை அணைத்து விட்டது.

ஓங்கும் குரல் உண்மையாக இருக்கும் பட்சத்தில் அதன் தேவை... தேவை தான். சற்று நேரத்தில் TTER வந்து அந்த ஜனநாயகவாதியை இழுத்து சென்று விட்டார்.

விடிகையில் கோவை பழமாய் சிவந்திருந்து வானம். வீடடையில் மன உச்சி குளிர்ந்திருந்தது மலை.

இறுதியாக

அடிக்கடி சொல்வது தான். எழுத சொன்னால் மேடை என்னை சுமக்கும். பேச சொன்னால் மேடையை நான் சுமப்பேன். ஏற்புரைக்கு நேரம் இருக்காது... விட்டு விடுவார்கள் என்று நினைத்தேன். ம்ஹும். நிகழ்ச்சி நிரலின்படி... நீ வா... நீ வா என இழுத்து இழுத்து மேடையில் விட்டு ம்ம்ம் நடக்கட்டும் என்பது போலவே பார்த்தார் ஐயா முத்து நிலவர். நானாக பேசினால்...நிறைய பேசி வம்பிழுத்து விடுவேன். தொடர் பேச்சில் விடுபட்டு போகும் கண்டெண்ட் கண்ணிளும். ஆகவே எழுதி வைத்திருந்ததைப் படித்து விட்டேன். அரங்கம் அமைதியாய் கேட்டது. அன்பாய் பாராட்டியது. சில கைகள் தட்டி கொடுத்தன. சில கண்கள் மிட்டாய் கொடுத்தன.

இதோ என் ஏற்புரை... இப்போதும்..

அனைவருக்கும் வணக்கம்,

மேடையில் வீற்றிருக்கும் படைப்பாளர்களுக்கும்... அரங்கில் நிறைந்திருக்கும் சான்றோர்களுக்கும்... நிகழ்வை நடத்திக் கொண்டிருக்கும் "வீதி கலை இலக்கியக் கள"த்துக்கும் மற்றும் தோழர்கள் நண்பர்கள் அன்பர்கள் அனைவருக்கும் எனது அன்பும் வணக்கமும்.

எழுதுவது சுலபம். ஆனால் அதை நூலாக்குவது எப்போதுமே சவாலான விஷயம். அந்த வகையில் இது எனது பத்தாவது சவால். ஆம். பச்சை மலைப் பூவும் உச்சி மலைத் தேனும் எனது பத்தாவது நூல்.

எனது ஒன்பதாவது நூல் "ஆனைமலைக் காடுகளில் சுள்ளி பொறுக்குகிறேன்" வந்த சூடு குறைவதற்கு முன்பே.. இதோ இந்த நூலை அகன் ஐயாவின் ஒரு துளிக்கவிதை வெளியீடாக வெளி வருவது மிகுந்த மகிழ்வை கொடுக்கிறது.

அவ்வப்போது முகநூலில் நான் எழுதிய சின்ன சின்ன கவிதைகளை 'தொகுத்து அனுப்பு குரு' என்று எங்கள் ஆசான் அகன் ஐயா சொல்ல.. அவ்வாறே ஆனது இந்த நூல். மூன்று வரி கவிதையில் ஆரம்பித்து நான்கு வரி ஐந்து வரி என்று பத்து வரிகளையும் தாண்டி அதனதன் கருவுக்கான களத்தை அதுவதுவே நிகழ்த்திக் கொண்டது. தகுதி உள்ளவைகளை தொகுத்து நூலாக்கி இருக்கின்றோம்.

ஒரு துளிக்கவிதை வெளியீடாக இது எனது மூன்றாவது நூல். எனது முதல் கவிதை தொகுப்பு - 'நிழல் தேசத்துக்காரனின் சித்திரப் பறவைகள்' - ஒரு துளிக்கவிதை மூலமாக அகன் சார் தான் கொண்டு வந்தார். கடந்த வருடம் எனது "தட்டு நிலாக்கள்" கட்டுரைத் தொகுப்பையும் ஒரு துளிக்கவிதையே வெளியிட்டது.

எழுத்து இணைய தளத்தில் என்ன ஏதென்று தெரியாமல் எழுத வந்த போது கை பிடித்து வழி காட்டியவர் அகன் சார். என் எழுத்து உலகத்தில் ஒவ்வொரு முறையும் எனக்கான முதல் கதவை அவர் தான் திறக்கிறார். இலக்கியத்துக்கும் இலக்கியத்தில் இதயம் சுமப்போருக்கும் எப்போதும் உறுதுணை அவர். உள்ளம் மகிழ நன்றிகளை உரித்தாக்கி கொள்கிறேன்.

இந்தத் தொகுப்பில் இருக்கும் ஒவ்வொரு கவிதையும்... நாம் தினசரி காணும் வாழ்வின் போக்கில் உருவானவை. வெவ்வேறு கால கட்டத்தில் எழுதி இருந்தாலும்... வேர் என்று தொடர்ந்தால்... ஆழத்தில் நானே ஆயிரம் கைகளோடு எழுத்துகளை ஏந்தி நிற்பேன்.

சிரிப்பும் அழுகையும்... விமர்சனமும் நக்கலும்... கோபமும் நையாண்டியும்... காதலும் அரசியலும்... சக உயிர்கள் இயற்கை முகங்கள் என்று எல்லா உணர்வுகளையும் வெளிப்படுத்தும் கவிதைகள் இவை. சின்ன சின்ன பத்திகளில் வாழ்வின் நுட்பங்களை பற்றிக் கொள்ள செய்யும் சித்து விளையாட்டின் கொத்து முடிச்சு இந்த நூல்.

அவ்வப்போது முகநூலில் பதிந்த கவிதைகளின் தொகுப்பு என்றும் சொல்லலாம். மன நூலில் முகமூடி அற்று திரியும் அகத்தின் நுட்ப கோலங்கள் என்றும் சொல்லலாம். இவ்வருடத்தின் முதல் நூல் இது. முழுமை அடைந்து பறக்க தொடங்கி இருக்கிறது. கொஞ்சம் நிமிர்ந்து என் வானம் பாருங்கள்.

சில கவிதைகளில் நானாக... சில கவிதைகளில் நீங்களாக... சில கவிதைகளில் நான் நீங்களாக... சில கவிதைகளில் நான் நீங்கலாக... சில கவிதைகளில் நாமாக.. சில கவிதைகளில் யாரோவாக... சில கவிதைகளில் யாவுமாக.. இப்படி எதிர் நின்று எனை பார்க்கவுமாக... என்னில் நின்று எதிரே பார்ப்பதுமாக இந்த "பச்சை மலைப் பூவும் உச்சி மலைத் தேனும்"

எழுத்து ஒருபோதும் எழுதுகிறவனை கை விடாது என்று மீண்டும் நிரூபித்திருக்கிறது....இவ்விழாவும் வெளியீடும்.

நூல்கள் வெளியிட்டு தலைமையுரை ஆற்றிய ஐயா முத்துநிலவன் அவர்களை வணங்குகிறேன். நாங்கள் இருக்கின்றோம் நீங்கள் எழுதுங்கள் என்று சொல்வது போலவே இருந்தது. நன்றிகள் ஐயா.

"பச்சை மலைப் பூவும் உச்சி மலைத் தேனும்" நூலை பெற்றுக் கொண்ட பேராசிரியர் விஸ்வநாதன் அவர்களுக்கு மனம் நிறைந்த நன்றிகள். சக நூலாசிரியர்களுக்கும் நூலை பெற்றுக் கொண்ட சக ஆசிரியர்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகளும் பாராட்டும். அகன் அய்யாவின் படைப்புலகம் பற்றி பேசிய அனைவருக்கும் வாழ்த்துகள். அற்புதங்களை அவரவர் வழியே நிகழ்த்தினார்கள். அவர் ஒரு நூலகம். அமைதியாக உள்ளே செல்வோருக்கு உற்சவம் உண்டு.

நிகழ்வை ஒருங்கிணைத்து அமர்க்களப்படுத்திய "வீதி கலை இலக்கியக் கள" தோழர்கள் அனைவருக்கும் பாராட்டுகளும் நன்றிகளும். தங்கள் வானத்தில் இந்த சின்ன சிறகுக்கும் இடம் கொடுத்தமைக்கு மனம் நெகிழ்ந்த நன்றிகள். தொடரட்டும் இலக்கிய சேவை. தொடர்ந்து பேசட்டும் இலக்கிய தேவை. வீதி- பெயரே ரொம்ப நெருக்கமாக இருக்கிறது. வீதி சுற்றும் நிலவென நிற்கிறேன்.

நிகழ்வுக்கான வரவேற்பை முன்பே வாட்ஸப்பில் தந்து அசத்திய ஐயா முத்துநிலவன் அவர்களுக்கும் ஒருங்கிணைப்பாளர் தோழர் கீதா அவர்களுக்கும் மனம் நிறைந்த நன்றிகள்.

அகன் சாருக்கும்... ஒரு துளிக்கவிதை அமைப்புக்கும்... வீதிக்கும்... மற்றும் வந்திருக்கும் அனைவருக்கும் மீண்டும் எனது மனம் நிறைந்த நன்றிகளை கூறிக்கொண்டு விடைபெறுகிறேன்.

எழுதுவதால் வாழ்கிறேன். எழுதுவதற்கே வாழ்கிறேன்.

- கவிஜி

Pin It