ஆய்வுச் சுருக்கம்:

 இலக்கிய வகைகளில் ஒன்று கவிதை. கவிதை என்பது கவிஞரின் அனுபவம் முழுவதையும் வெளிப்படுத்துவதற்கு உதவும் ஊடகம் ஆகும் . தமிழ்க் கவிதையின் பரிணாமப் பாதையில் புதுக்கவிதையின் தோற்றம் தவிர்க்கவும், தடுக்கவும் முடியாது. இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் காரணமாக இருந்தவர் பாரதி என்றே கூறலாம். சமகால பிரச்சனைகளை முன்னேடுத்து சொல்வதில் புதுக்கவிதை முதன்மையிடத்தைப் பிடிக்கிறது. வேறெந்த இலக்கிய வடிவத்தைவிட புதுக்கவிதைக்கு சக்தி அதிகம். மனிதனின் உள்ளத்தை விரைவாகவும், நெருக்கமாகவும் சென்று தொட கவிதை ஊடகமாகத் திகழ்கின்றது. மனிதகுல வளர்ச்சிக்கும் வித்திடுவது சமுதாய அமைப்பு, மனிதகுல வளர்ச்சிகேற்ற நிலையில் சமூக மாற்றங்களும் நிகழ்வது இயல்பான ஒன்றாகும். இத்தகைய மாற்றங்கள் ஏற்படும் போது சமுதாயத்தில் மறுமலர்ச்சி ஏற்படுகிறது. சமுதாயத்தில் மறுமலர்ச்சி ஏற்படும் போது அவற்றை வெளிப்படுத்த இலக்கியங்கள் என்று கூறலாம். சட்டங்களாலும் அதிகாரங்களாலும் சாதிக்க முடியாதவற்றைக் கவிஞர்கள் தங்கள் கவிதைகளின் வாயிலாகச் சாதித்து விடுகின்றனர். இத்தகு கவிஞர்களின் வரிசையில் தனக்கெனத் தனியிடம் பெற்றவர் கவிஞர் சினேகன்.

 snehanஇவரது இயற்பெயர் சிவசெல்வம் புதுக்கரியப்பட்டி என்ற சிறு கிராமத்தில் எட்டாவது மகனாகப் பிறந்து வளர்ந்தவர். இவரது குடும்பம் விவசாயக் குடும்பமாகும். இவர் பள்ளி படிக்கும் காலத்தில் நடந்த மாநில அளவிலான கவிதைப் போட்டியில் முதல் பரிசை வென்று அன்றைய முதல்வராக இருந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களிடம் பரிசைப் பெற்று தனக்கென ஒரு அடையாளத்தை அப்போதே பெற தொடங்கி விட்டார் கவிஞர். வளர்ந்து வரும் எழுத்தாளர்களின் பேனாவின் கூர்முனையில் அமர்ந்திருக்கும் சிந்தனை பலகோணங்களில் வெளிவரும். அதேபோல் தான் கவிஞரின் சிந்தனை முதன் முதலில் ‘புத்தம் புது பூவே’ என்ற ஒரு பாடலின் வழியே 1997 ஆம் ஆண்டு சினிமாவிற்குள் நுழைந்தார் கவிஞர் சினேகன். அன்றிலிருந்து இன்று வரையிலும் பல சாதனைகள் புரிந்து இதுவரை ஐந்து கவிதை தொகுப்பும், இருப்பத்து ஒன்று விருதுகளையும் பெற்றுத் திகழ்கினறார். எனவே கவிஞரின் சிந்தகைப் போக்கு அமைந்த விதம் பற்றியும், தன் தாய் மொழியின் சிறப்பு பற்றியும், திரையுலகில் சாதித்து வரும் நிலையினைப் பற்றி ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

முன்னுரை:

 செம்மொழி ஆம் நம்மொழி என எல்லோராலும் போற்றப்படும் மொழி தமிழ்மொழியே. தமிழ்மொழி இல்லையேல் நம்வாழ்வில் ஒளி இல்லை. “தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா” என்ற சொல்லுக்கேற்ப தமிழனைப் பெருமைப்பட வைப்பது நம் தமிழிமொழியே. “உயர்தனிச் செம்மொழி” எனப் போற்றப்பெறும் தமிழ்மொழி இன்று உலகில் பல நாடுகளிலும் உள்ள தமிழர்களால் பேசப்பட்டு வருகின்றது. தமிழ் எண்ணற்ற இலக்கண இலக்கியப் படைப்புகளைக் கொண்டது. இதனை

 “ வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி

 வாழிய வாழ்ய வே.”1 (பாரதியார் கவிதைகள் பக் -39)

 என்று பாரதியார் போற்றியுள்ளார். மேலும் தமிழைப் புகழ்ந்துரைக்கும் போக்கில்

 “ தழைமூங்கில் இசைத்து அசைத்ததாம்

 தழுவியே இசைத்த தாலே

 எழும் இசைத் தமிழே! 2 (பாரதிதாசன் கவிதைகள் பக் -446-447)

 என்று பாரதிதாசன்; கூறியுள்ளார்.

தமிழின் தொன்மையும் சிறப்பும்:

 தமிழ் இலக்கிய வரலாற்றைப் பார்க்கும்போது மக்கள் வாழ்ந்த சூழலுக்கு ஏற்பவே இலக்கியங்களும் வளர்ந்துவருகின்றன. சமுதாயத்தைச் சார்ந்தே இலக்கியங்கள் தோன்றுவதனால் இதனைக் காலத்தைக் காட்டும் கண்ணாடி என்று கூறுகின்றன. இலக்கியம் இலக்கணம் இரண்டும் மக்கள் வாழ்க்கையின் பிரதிப்பலிப்பாகவே இருக்கின்றன. இக்கால இலக்கியங்களைக் கவிதை, புதினம், சிறுகதை, நாடகம் போன்றவற்றைக் குறிப்பிடுகின்றனர். இலக்கியம் கண்டு அதற்கு இலக்கணம் இயம்பினர் சான்றோர். ஆதி மனிதர்கள் தம் வாழ்வில் சைகை மொழியால் கருத்துகளைப் பரிமாறி வந்தனர். அதன்பின் ஒலிவடிவத்தால் ஒருவருக்கொருவர் கருத்துப் பரிமாற்றம் செய்து வந்துள்ளனர். சிந்தனைத் திறம் வளர்ந்த காலத்தால் தமிழர் அந்தந்த ஒலிக்குறிப்புகளை வரிவடிவத்தால் வழங்கலாயினர். அதன்படி நோக்கும் போது அகத்திய மாமுனி வகுத்தளித்த இலக்கணமும் அதனைத் தொல்காப்பியர் ஐந்திலக்கணமாக நமக்களித்த பெருமையும் நம்மை உலகில் தலை நிமிர்ந்துநிற்கச் செய்துள்ளன. பின்னர் பலகாலம் கழித்துச் சங்கங்கள் நிறுவப்பெற்றுத் தமிழ் பேணிவளர்க்கப்பட்டது. மேல்கணக்கு கீழ்க்கணக்கு நூல்கள் நமக்குக் கிடைத்தன. காப்பியங்கள், இதிகாசங்கள், பக்தி இலக்கியங்கள் என்பவை தொடர்ந்தன.

 கவிதை என்பது மேலைநாட்டு இலக்கியத்தின் தாக்கத்தால் ஏற்பட்ட வளர்ச்சி நிலையேயாகும். கவிதை மரபுக்கவிதை, புதுக்கவிதை என இரு நிலையில் பாகுபாடு செய்யப் பெறுகின்றது.

 மரபுக்கவிதை என்பது எழுத்து, அசை, சீர், தளை, தொடை, என்ற செய்யுள் உறுப்பகளுடனும், இலக்கணத்தை அடிப்படையாகக் கொண்டும் எழுதப்பெறுவதாகும். வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா எனும் பாவகைகளை ஏற்றும் வருவன ஆகும்.

 புதுக்கவிதை என்பது இலக்கிய இலக்கணத்திற்கு முதன்மை தராமல் கருத்தை மட்டும் கொண்டு எழுதப்பெறுவதாகும். கவிஞரின் எண்ண ஓட்டங்களின் சுவைகலந்த வெளிப்பாடாகவும் அமையும்.

 “ இலக்கணச் செங்கோல்

 யாப்புச் சிம்மாசனம்

 எதுகைப் பல்லாக்கு

 மோனைத் தேர்கள்

 தனிமொழிச் சேனை

 பண்டிதபவனி

 இவையேதும் இல்லாத

 கருத்துக்கள் தம்மைத்தாமே

 ஆளக் கற்றுக் கொண்ட

 புதிய மக்களாட்சி முறையெ

 புதுக்கவிதை ” 3 (தமிழ் இலக்கிய வரலாறு பக் -274)

 என்று புதுக்கவிதை எவ்வாறு இருக்கவேண்டும் என்பதை மு. மேத்தா என்ற புதுக்கவிதையுலகில் சிறப்பிடம் பெற்ற அவர் கூறியுள்ளார்.

 பாரதியார். பாரதிதாசன், கவிமணி, கண்ணதாசன், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் போன்ற கவிஞர்கள் மரபுக்கவிதையும், வசனக்கவிதையும் எழுதி இன்று முடிசூடா மன்னர்களாகத் திகழ்கின்றனர்.

 புதுமைப்பித்தன், ந.பிச்சமூர்த்தி, வல்லிக்கண்ணன், அப்துல் ரகுமான,; ஈரோடு தமிழன்பன், நா. காமராசன,; வைரமுத்து போன்றோர் புதுக்கவிதை எழுதிப் புகழ் பெற்றுத் திகழ்கின்றனர். இவர்களைத் தொடர்ந்து இன்று திரைக்துறையிலும் புதுக்கவிதை நிலையிலும் புகழுறத் திகழும் பா.விஜய் மற்றும் இளவயதிலேயே கவிதைகள், திரைப்படப் பாடல்கள் எழுதிச் சாதிக்கும் எழுத்தாளர்களுள் கவிஞர் சினேகன் அவர்களும் ஒருவராகத் திகழ்ந்து வருகின்றார்.

சினேகனின் இளமை:

புதுக்கவிதைகளையும், திரையிசைப்பாடல்களையும் ஒருங்கே சுவைத்து வரும் இன்றைய இளையதளை முறையினருக்குக் கவிஞர் சினேகன் வழிகாட்டியாகத் திகழ்கிறார். சினேகன் தஞ்சையில் உள்ள புதுக்கரியப்பட்டி என்ற சிறிய கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் 23-06-1978 ஆம் ஆண்டுபிறந்தார். இயற்பெயர் சிவசெல்வம், திரையுலகில் தன்னைச் சினேகன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். இவர் கவிதை எழுதுவதிலும், திரைப்படப்பாடல்கள் இயற்றுவதிலும் சிறப்புப் பெற்று மேலும் பட நடிகராகவும், பேச்சாளராகவும், சமுகச் சிந்தனையாளராகவும் திகழ்கின்றார்.

 இவர் “புத்தம் புதுப் பூவே”என்ற திரைப்படத்தில் முதன்முதலில் பாடல் இசைத்தார். இவர் எழுதியபாடல் ‘பாண்டவர்பூமி’ என்ற திரைப்படத்தில் “அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்”என்றமுதல் பாடலாகும். இப்பாடல் மூலம் மக்கள் மனத்தில் நீற்காத இடத்தினைப் பிடித்தார். இவர் கவிதைகளும் பாடல்களும், மக்களின் நடைமுறை வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் வகையில் அமைந்திருக்கும். வாழ்வின் எதார்த்தங்களில் தம் சிந்தனையைப் பதிவு செய்த சிறந்த கவிஞர் எனும் பெருமையையும் பெற்றுத்திகழ்கிறார்.

சினேகனின் எழுத்துச் சிறகு:

முதல் அத்தியாயம்,

 இன்னும் பெண்கள் அழகாக இருக்கிறார்கள்,

 புத்தகம்,

 இப்படியும் இருக்கலாம்,

 புத்தகம்,

 அவரவர் வாழ்க்கையில்

என்பன போன்ற பல புத்தங்களைக் கவிதை உருவில் படைத்துள்ளார். இவர் படைத்துள்ள நூல்களிலும் சமூகப் பின்னணியைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

 இவர் கவிதையில் இயற்கை, நட்பு, காதல், சோகம், தோல்வி, உறவு, குழந்தையின் பண்பு என்று எல்லா நோக்கங்களிலும் எழுதியிருக்கிறார். பெண்ணியம் பற்றிய இயல்பான சூழல்களையும் விளக்கிச் செல்கிறார்.

 திரைப்படங்களுக்குப் பாடல்கள் எழுதிவதோடு அல்லாமல் பாடலாகிப்போன கவிதைகள் மீண்டும் கவிதையாகி இருக்கின்றன. அவர் எழுதிய இப்படியும் இருக்கலாம் என்ற புத்தகத்தில் மனிதனின் காலத்திற்கும் வயதிற்கும் ஏற்றவாறு பாடல்வரிகள் எழுதியுள்ளார். ஆண். பெண் நட்பு எல்லோருக்கும் வாய்க்கும். சிலருக்கு மட்டுமே நிலைக்கும். ‘பாண்டவர் பூமி’ என்ற படத்தில் தோழா...தோழா...என்ற பாடல்வரிகள் நட்பில் முழுமையடைந்தவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

 தோழா... தோழா...

 தோள் கொடுகொஞ்சம் சாஞ்சுக்கணும்

 ஆணும் பெண்ணும் பழகிக்கிட்டா

 காதலாகுமா...

 அது ஆயள் முழுதும் தொடர்ந்தாலும்

 நட்பு மாறுமா?4 ( படம்- பாண்டவர் பூமி)

 என்று அழகாக நட்புன் புனிதத்தை விளக்கியுள்ளார்.

 கடந்து வந்த வாழ்க்கையை மீண்டும் திரும்பிப் பார்க்கத் தூண்ட வைத்தார் சினேகன். அவர் எழுதிய பாடல் வரிகள்

 “ஞாபகம் வருதே ஞாபகம் வருதே

 பொக்கிசமாக நெஞ்சுக்குள் புதைந்த

 நினைவுகள் எல்லாம்”5 (படம் -ஆட்டோகிராஃப்)

 “மீண்டும் பள்ளிக்குப் போகலாம்

 நம்மை நாம் அங்கே தேடலாம்”6 (படம் - பள்ளிக்கூடம்)

 என்ற பாடல் வரிகள் தொலைந்த வாழ்க்கையை மீண்டும் நாம் காண்பது போல் ஓர் உணர்வு மனத்தில் தோன்றுகின்றது. தேடல்களின் தேவையையும் நம்மால் உணர முடிகின்றது. பள்ளிப் பருவக் குறும்புகளை நம் பார்வைக்கு முன் கொண்டு வருகிறது.

 இவர் 500 படங்களுக்கு மேல், 2500 பாடல்களுக்கு மேல் வெவ்வேறு இயக்குனர்களுடன் சேர்ந்து பாடல்கள் எழுதியும் பாடியும் உள்ளார்.

 சினேகனின் கவிதைகள் ஒருவனுக்காக எழுதப்பட்டவை அல்ல உலகமக்களுக்காகத் தான் கடந்து வந்த பாதையை வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளன. கவிதையைப் பேச்சு வழக்கிலே வடிவமைத்துள்ளார். இளஞ்சிறார்களும் எளிமையாக அறிந்து புரிந்து கொள்ளும் நடையில் கவிதை படைக்கும் ஒரு சீரிய திறமையைப் பெற்றுள்ளனர். படிக்கும் போது முடிக்கும் வரை பயின்று சுவைக்குமாறு எழுதுகிற ஆற்றலும் இவருக்கு உண்டு.

 “வெகுசனங்களை சென்றடையும் போதே ஒருபடைப்பு முழுமைபெறுவதாக நம்புகிறவன் நான.; எனவேதான் சனங்களுக்காக எழுத முற்படுகிறேன். என் கவிதைகளும் பாடள்களும் சனங்களுக்குத்தானே தவிர இலக்கியத்திற்கும் இலக்கணத்திற்கும் அல்ல.( சினேகன் புத்தகத்தில் பின் அட்டைபக்கம் ) என்று வெளிப்படையாகவே கூறியுள்ளார். இவர் தன்னுடைய சிந்தனைகள் மக்களைச் சென்றடைய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். “ கற்றபின் நிற்க அதற்குத் தக” என்ற திருவள்ளுவருடைய நோக்கத்தை நம் மக்கள் பின்பற்றினால் அறிஞர் பலரின் அரிய கருத்தக்கள் பெரிதும் பயன்தரும் நாட்டின் தூய்மை பேணப்பேறும் நிலை உண்டாகும் என்பதில் மறுப்பில்லை.

 “நீ

 தமிழனாய் பிறந்தவன்

 தமிழால் வளர்ந்தவன்

 உனக்கு அறிமுகமான

 தாலாட்டும்

 உன்னை அடக்கம் செய்யும்

 ஒப்பாரியும்

 தமிழிலும்

 தமிழ் மண்ணில் தான்

 இருக்கிறது. 7 (சினேகனின் புத்தகம் பக் -17-19)

 என்ற அவரின் கவிதை வரிகள் அவர் கொண்ட தமிழ் மொழிப்பற்றையும் நாம் தமிழன் என்ற உணர்வையும் வெளிக்காட்டுகிறது. இன்னும் மக்களின் வாழ்வில் ஏற்படும் இன்ப துன்பங்களைத் திரட்டியும் கவிதை வரிகள் அமைந்துள்ளன. மொழியின் மீது இவர் கொண்டிருக்கும் பற்றினைக் காட்டிலும் சமூகத்தின்பால் கொண்டிருக்கும் பற்றும் தெளிவாகப் புலப்படுகின்றது.

 சினேகன் இன்றைய புதுக்கவிஞர்களுக்கு இடையே தன்னையும் முத்திரைப் பதித்துக் கொண்டார். இவரின் இந்த முயற்சி பல கோணங்களில் பற்பல விமர்சனங்களை இவர் சந்திக்கின்ற நிலையையும் உருவாக்கியது. தடைகள் நேர்ந்த போதிலும் கலங்காமல் காத்திருந்து இவர் இன்று மேல்நிலைக்கு உயர்ந்தவர்.

கவிஞரின் மொழியுணர்வு:

 “நாடும் மொழியும் நமதிருகண்கள்” என்பர் நம் சான்றோர். நாட்டுப்பற்றும், மொழிப்பற்றும் உடையவர்களாகவே தேசத்தலைவர்களும் மொழியியல் அறிஞர்களும் வாழ்ந்தனர். கவிஞர்களும் தமிழ்மொழி மேலோங்க வேண்டுமென்ற முனைப்பில் பல கவிதைகளை எழுதினர். இதனையே பாவேந்தர்

 “எளியநடை யில்தமிழ்நூல் எழுதிடவும் வேண்டும்

 இலக்கணநூல் புதிதாக இயற்றுதலும் வேண்டும்

 ------------------------------------------------------------------------------

 ------------------------------------------------------------------------------

 உலகியலின் அடங்கலுக்கும் துறைதோறும் நூல்கள்

 ஒருத்தர்தயை இல்லாமல் ஊரறியும் தமிழில்

 சலசலவென எவ்விடத்தும் பாய்ச்சிட வேண்டும்”8

   ( பாரதிதாசன் கவிதைகள் பக்-83)

 என்ற பாடல்வரிகள் மூலம் பாவேந்தர் தமிழ்மொழியில் புதிய புதிய இலக்கியங்களை வரும் கவிஞர்கள் இயற்றிட வேண்டும் என்றும் மக்கள் மனத்தில் தமிழ் ஊற்றைப் பாய்ச்சிட வேண்டும் என்று தம் கவிதைகள் மூலம் எடுத்துரைக்கிறார். இதனைக் கருத்தில் கொள்வது போல கவிஞர் சினேகன் தனது கிராமத்து மொழிநடையிலேயே தனது கவிதைகளைப் படைத்துள்ளார். தனது பேச்சிலும் அழகான தமிழ் மொழியையே கையாளுகிறார்.

 “ எந்த மாநிலக் காரணும்

 தன் தாய்மொழியைத் தவிர

 வேறு மொழியில்

 தன்னை அறிமுகப்படுத்துவது

 இல்லை.....

 அந்நிய மொழிக்கு

 கருப்புக்கொடி

 காட்டசொல்ல வில்லை

 உன்னை....

 அம்மா தந்த மொழியை

 அடையாளம் காட்டுடா நீ......” 9 ( சினேகனின் புத்தகம் பக் -17-19)

 என்ற கவிதைவரிகள் மூலம் கவிஞர் எந்த மொழிக்குச் சொந்தகாரனும் தன் தாய் மொழியைத் தவிர வேறு மொழியில் தன்னை அறிமுகப்படுத்த மாட்டான் என்றும் தனது தாயாகத் திகழும்மொழி தாய்மொழி என்று அழகாகக் கூறுவதன் மூலம் அவர் தாய்மொழியின் மீதுள்ள பற்றினைத் தெளிவாக எடுத்துரைக்கிறார் கவிஞர்.

சினேகனைச் சிறப்பித்து அவருக்கு வழங்கப்பட்ட விருதுகள்:

  • கண்ணதாசன் விருது - மூன்று முறை.
  • பாரதி விருது - இரண்டு முறை
  • கம்பன் விருது - இரண்டு முறை
  • கம்பன் கழகம் விருது – ஒரு முறை
  • ஆ.பு.சு. விருது - இரண்டு முறை
  • அவ்வை விருது – ஒரு முறை
  • ஆதித்தனார் சிலம்ப கழகம் விருது – ஒரு முறை
  • நேதாஜி விருது - இரண்டு முறை
  • அப்துல் கலாம் விருது – ஒரு முறை
  • தமிழய்யா கல்வி கழகம் விருது – ஒரு முறை
  • மலேசியா எழுத்தாளர் சங்கம் விருது – ஒரு முறை
  • செஷல்ஸ் தமிழ் சங்கம் விருது – ஒரு முறை

கவிஞர் பெற்ற பட்டங்கள்:

  • கவிச்சிற்பி
  • சின்னபாரதி
  • கவி இளவரசு
  • எழுச்சி கவிஞர்

 என வழங்கப் பெற்ற பல சிறப்புப் பெயர்களை இளம்வயதிலேயே பெற்றுள்ளார். மேலும் தமிழ்நாடு அரசால் சிறந்த எழுத்தாளர் என்ற விருதுகளையும் பெற்று பெருமை சேர்த்தவர் கவிஞர்.

முடிவுரை:

 இவ்வாறு தமிழக் கவிதை உலகில் சிறப்பான ஓர் இடத்தைப் பிடித்த இளம் கவிஞர் எனும் பெருமையைப் பெற்றவர் சினேகன். இவருடைய கவிதைகள் தமிழ் மக்களிடையே ஒருவிதமான ஈர்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இவர் தம்மிடம் அமைந்துள்ள தனித்திறனைக் கொண்டு மேலும் பற்பல புதிய படைப்புகளைத் தமிழ் மக்களுக்கென வழங்குவார் என எதிர்பார்க்கின்றோம். இவர் படைப்புகளில் காணும் சமூகப் புரட்சி மிக்க கருத்துக்கள் நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் பெரிதும் பயனளிப்பவையாக அமையும். மேலும் செம்மண் பூமியில் சினேகன் பிறந்தாலும் அனைத்து நில மக்களின் வாழ்வியல் பற்றியும், மானிட சமூகத்தின் மேன்னை பற்றியும் பாடல்கள் இயற்றி அகமகிழ்ந்தார். ஏழு வயது சிறார்களும் எழுபது வயது சான்றோர்களும் ஏற்றுச் சுவைக்கும் பாடல்களை எல்லாராலும் எழுத இயலாது. ஆனால் சினேகன் இந்த எல்லையைக் கருத்தில் கொண்டு கவிதைகளைப் படைத்து நாடு போற்றும் ஒரு கவிஞராகத் திகழ்கிறார்.

கலைச் சொற்கள்:

 ஒளியில்லை - சிறப்பில்லை

 படைப்புகள் - உருவாக்கியவை

 தழைமூங்கில - இளம் மூங்கில்

 சைகை மொழி – கை அசைவு மொழி

 பரிமாற்றம் - ஒருவருக்கொருவர் கொடுத்தல்

 நிறுவுதல் - அமைத்தல்

 பாகுபாடு - வேறுபாடு

 சிம்மாசனம் - அரியணை

 பவனி - ஊர்வலம்

 பிரதிபலிக்கும் - வெளிப்படுத்தும்

 சீரிய - சிறப்பான

 பொக்கிஷம் - சொத்து

 புனிதம் - தூய்மை

 விமர்சனம் - கருத்தேற்றம்

 முத்திரைப்பதிவு - அடையாளப் பதிவு

 பேணப்பெறும் - காக்கப் பெறும்

 சனங்கள் - மக்கள்

 சிறார் - சிறுவர்

 ஈர்ப்பு - கவர்தல்

 செம்மண்பூமி - சிவந்தமண் கொண்ட நிலம்

சான்றெண் குறிப்புகள்:

  1. பாரதியார் கவிதைகள் பக் - 39.
  2. பாரதிதாசன் கவிதைகள் பக் - 446-447.
  3. தமிழ் இலக்கிய வரலாறு பக் - 274.
  4. படம் பாண்டவர் பூமி.
  5. படம் ஆட்டோகிராஃப்.
  6. படம் பள்ளிக்கூடம்.
  7. சினேகனின் புத்தகம் பக் - 17-19.
  8. பாரதிதாசன் கவிதைகள் பக் -83.
  9. சினேகனின் புத்தகம் பக் -17-19.

பார்வை நூல்கள்:

  1. வை.கோவிந்தன்,

மகாகவி பாரதியார் கவிதைகள்,

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் 9பி) லிட்

41-டீ சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,

அம்பத்தூர், சென்னை-98,

  1. பாரதிதாசன் கவிதைகள்,

மணிவாசகர் பதிப்பகம்,

31,சிங்கர் தெரு, பாரிமுனை,

சென்னை-600108.

  1. முனைவர் சு.சுபாஷ்சந்திரபோஸ்,

பாவை பப்ளிகேஷன்ஸ் வெளியிடு,

இரண்டாம் அச்சு மே-2003,

இராயம்பேட்டை, சென்னை-600014.

  1. படம் - பாண்டவர் பூமி,

இயக்கம்-சேரன்,

இசை-பலத்வாஜ்,

வெளியீடு-21 செப்டம்பர் 2001.

  1. படம் - ஆட்டோகிராஃப்,

இயக்கம் - சேரன்,

இசை – பரத்வாஜ்,

வெளியீடு – 14 பிப்ரவரி 2004.

  1. படம் - பள்ளிக்கூடம்,

இயக்கம்-தங்கர்பச்சான்,

இசை-பரத்வாஜ்,

வெளியீடு-10 ஆகஸ்டு 2007.

 - மு.சத்யா,  முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ் உயராய்வுத் துறை, மருதுபாண்டியர் கல்லூரி, தஞ்சாவூர்-613403, தமிழ்நாடு.

&

முனைவர் இராம. சிதம்பரம், இணைப் பேராசிரியர் மற்றும் ஆய்வு நெறியாளர், தமிழ் உயராய்வுத் துறை, மருதுபாண்டியர் கல்லூரி, தஞ்சாவூர்-613403, தமிழ்நாடு.

Pin It