மொழிக்கு உரமாகிய ஈகியர்கள் -  4

1965ஆம் ஆண்டு சனவரி 26 ஆம் நாள் இந்திய அரசின் இந்தி ஆட்சி மொழிச் சட்டம் நடைமுறைக்கு வரப்போவதையொட்டி சனவரி 25 முதலே இந்திய அரசமைப்பின் 17 வது பகுதியை மதுரை, சென்னை, கோவை என பல்வேறு மாவட்டங்களில் மாணவர்கள் எரித்தனர். இதன் விளைவாக ஆயிரக்கணக்கான மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். அறிஞர் அண்ணா எதிர்வரும் குடியரசு நாளைத் துக்கநாளாகக் கொண்டாட அழைப்பு விடுத்தார். அன்றைய தினம் தமிழர் ஒவ்வொருவர் வீடுகளிலும் கறுப்புக்கொடி ஏற்றப்படும் என்றும், மாலையில் துக்க நாள் பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என்றும் அறிவித்திருந்தார். இந்தித் திணிப்புக்கு எதிராக தமிழக மாணவர்களும் தொடர் போராட்டத்தைத் தொடங்கியிருந்தனர்.

sivalingam hindi agitation25 சனவரி அன்று காலை மதுரை மாணவர்கள் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள திலகர் திடலை நோக்கி "இந்தி ஒழிக", "தமிழ் வாழ்க என்ற முழக்கங்கள் இட்டவாறு சென்று கொண்டிருந்தனர். வடக்கு மாசி வீதியில் இருந்த காங்கிரசு மாவட்ட அலுவலகம் அருகே ஊர்வலம் வந்தபோது மாணவர்களின் போராட்டத்தில் புகுந்து காங்கிரசார் வன்முறையை ஏவினர். கத்திகளுடன் மாணவர்களைத் தாக்கினர். இதனால், கொதித்தெழுந்த மாணவர்கள் காங்கிரசு அலுவலகத்தின் முன்னர் குடியரசு தின கொண்டாட்டங்களுக்காகப் போடப்பட்டிருந்த பந்தலைத் தீயிட்டுக் கொளுத்தினர்.

இந்தச் செய்தி காட்டுத்தீயாகப் பரவி தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளிலும் போராட்டங்கள் வெடித்தன. இந்தப் போராட்டங்களை அறிந்த தமிழுணர்வு கொண்ட சிவலிங்கத்திற்கு தான் ஏதாவது செய்ய வேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டது.

இதன் விளைவாக, 1965 ஜனவரி 26-ம்தேதி விடியும் போதே இந்தி எதிர்ப்புக்களம் இந்தியாவை உலுக்கிப் போட்டது. ஆம். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கோடம்பாக்கம் சிவலிங்கம் என்ற இளைஞர் இந்தி ஒழிக என்று கூறிக் கொண்டே தன்னுடலுக்கு தீயிட்டு தமிழ் மொழிக்காக ஈகியானார்.

சென்னை கோடம்பாக்கம் விசுவநாதபுரத்தில் 1941 இல் பிறந்தவர் சிவலிங்கம். சிவலிங்கத்தின் இளம் வயதிலேயே பெற்றோர் இறந்துவிட்டதால் அண்ணன் வீட்டில் தங்கியிருந்தார். சென்னை மாநகராட்சி ஊழியராக 75 உரூபா ஊதியத்தில் பணியாற்றி வந்தார். சிவலிங்கம் தமிழ் மொழியின் மீது தனது சிறு வயது முதலே தீராக் காதல் கொண்டவர். 1938 இல் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போரில் முதல் வீராங்கனையாக கலந்து கொண்ட டாக்டர் தருமாம்பாள் பெயரில் அமைக்கப்பட்ட மன்றத்தில் தன்னுடைய சிறு வயதிலேயே உறுப்பினராக இருந்துள்ளார்.

திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டராகவும் நுங்கம்பாக்கம் பகுதி பொருளாளராகவும் இருந்துள்ளார். மொழிப்பற்றும் இந்தி எதிர்ப்பு உணர்வும் இளம் வயதிலேயே ஊறிப் போயிருந்த காரணத்தால் 1965 இல் நடைபெற்ற இந்தி திணிப்பதற்கு எதிரான போரில் தானும் பங்கெடுப்பதென முடிவு செய்தார்.

24.1.1965 இரவு தன் தங்கையிடம் ”நாளைக் காலை நீ எங்கும் போகக் கூடாது வெளியே ஒரே கலவரமாக உள்ளது. நான் அதிகாலையிலேயே தொடர் வண்டி நிலையத்தில் கறுப்பு கொடியேற்றிவிட்டு வந்து விடுகிறேன் என்னை பற்றிப் யாரும் கவலைப்பட வேண்டாம்” என்று கூறியுள்ளார் சிவலிங்கம்.

தன்னை எரித்துக் கொள்வதென திட்டமிட்ட சிவலிங்கம் அருகே சென்று பெட்ரோல் வாங்கி வந்துள்ளார். பெட்ரோல் டின்களுடன் சிவலிங்கம் செல்வதைப் பார்த்தவர்கள் "இந்த பெட்ரோல் டின் எதற்கு?" என்று கேள்வி எழுப்பியதற்கு, "ஆபீசுக்கு வாங்கிப் போகிறேன்" என்று பதிலளித்துவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.

25ந்தேதி மாணவர்களின் போராட்டத்தால் தமிழகம் பற்றி எரிந்த நிலையில் 25ந் தேதி இரவு சிவலிங்கம் தம் நண்பர்களுடன் இந்தி மொழியின் ஆதிக்கம் குறித்து கோபமாகப் பேசியுள்ளார் “நாளைக்கு இந்தி ஆட்சி மொழி ஆகப்போகிறது. இது துக்க நாள். நாளை நான் கறுப்புச்சின்னம் அணியப் போகிறேன்” என்று அவர்களிடம் கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.

25.01.1965 அன்று இரவும், வழக்கம்போல், வீட்டுத் திண்ணையில் படுத்திருந்தார். அதிகாலை 4 மணிக்கு அவர் அண்ணன் காளிமுத்து எழுந்து பார்த்தார். வழக்கமாக வீட்டின் திண்ணையில் படுத்துறங்கும் தம்பி சிவலிங்கத்தைக் காணாததால் அவரது அண்ணனுக்கு எதுவும் புரியவில்லை. வெளியே எங்கேயும் போய்விட்டானோ என்ற எண்ணத்தில் இருந்தவரை வீட்டுக்கு எதிரே உள்ள மைதானத்தில் தீப்பிழம்பாய் ஒரு உருவம் எரிந்து கொண்டிருந்ததைப் பார்த்தவுடன் தூக்கிவாரிப் போட்டது. நெருப்பு எரியும் இடத்தை நோக்கி ஓடிப் போய் பார்த்தார் அவரது அண்ணன். அதற்குள் அங்கு உடல் முழுவதும் எரிந்த நிலையில் கிடந்தார் சிவலிங்கம். அவர் எரிந்து கிடந்த அவரது உடலுக்கு அருகே 2 பெட்ரோல் டின்கள் இருந்தன. அதற்கு அருகிலேயே, இந்தி ஆட்சிமொழி ஆவதைக் கண்டித்துத் தீக்குளித்துச் சாகிறேன்" என்றும் “உயிர் தமிழுக்கு; உடல் தீயிக்கு” என்றும் எழுதப்பட்ட காகிதங்கள் கிடந்தன.

சிவலிங்கத்தின் எழுத்தைத் தெரிந்து கொண்ட அண்ணன், கருகிக் கிடந்த உடலைக் கட்டிப்பிடித்துக் கதறினார். இருபத்து நான்கு வயது சிவலிங்கம் 26.11.1965 அன்று விடியற்காலையில் 4.00 மணிக்கு வீட்டைவிட்டு சென்று தீக்குளித்து மாண்டார்.

சின்னச்சாமியைப்போல ஒரு பத்துத்தமிழனாவது உயிர் நீத்தால்தான் நமது தமிழுக்கு விமோசனம் கிடைக்கும். இந்தி ஆதிக்கம் ஒழியும்." என்று அடிக்கடி பேசிவந்த கோடம்பாக்கம் சிவலிங்கம், கீழப்பழுவூர் சின்னச்சாமி வழியில் தானும் தீக்குளித்து மொழிப்போரில் இரண்டாவதாகத் தமிழக்குத் தன்னையே கொடையாகக் கொடுத்தார்.

(சிவலிங்கம் 1939 ஆம் ஆண்டு தென் ஆற்காடு மாவட்டத்தில் உள்ள தேவனூர் என்ற சிறிய கிராமத்தில் ஒரு பெரிய ஆதரவற்ற குடும்பத்தில் பிறந்தார் என்று மற்றொரு செய்தி தி.மு.க இதழில் குறிப்பிடுகிறது. அவர் தேவனூரில் ஐந்தாம் வகுப்பு வரை படித்தார் என்றும் பின்னர் பக்கத்து கிராமமான சட்டன்பட்டியில் உள்ள நடுநிலைப் பள்ளியில் தினமும் இரண்டு மைல் நடந்து சென்று கல்வி கற்றார் என்றும் அவரது தமிழ் ஆசிரியர், திராவிடக் கவிஞரான பொன்னி வளவன், அவருக்குத் தமிழ் மீதான அன்பை வளர்த்தார். தனது கல்வியைத் தொடர முடியாமல், சிவலிங்கம் தனது தந்தை மற்றும் மூத்த சகோதரனைப் பின்தொடர்ந்து சென்னைக்குச் சென்றார், அங்கு அவர் கட்டுமானத் தளங்களில் கூலி வேலை செய்தார். தி.மு.க.வில் ஈடுபட்டார் (இலட்சியப்பாதை, 28 மார்ச் 1993, 20-21). ) என்ற கருத்தும் உள்ளது)

- க.இரா.தமிழரசன்

Pin It