1.
கால் பரப்பி
குப்புற கிடந்தவனை
வெள்ளை துணியால்
போர்த்தினார்கள்
அவனிடமிருந்து
அலைபேசியின்
அம்ருதவர்ஷினியை
மழை கரைத்தது
சிறு கூட்டமும் தெறித்தது.

2.
மண் சிதை பொம்மையை
செய்தவனும்
விற்பவனும் ஆகியவன்
பெருகி வந்த
வட்டியையும் மழையையும்
எண்ணி சிதைந்தான்.
உள்வைத்த பொம்மைகளுக்குள்
ஒடுங்கினான்

3.
அவன்பாடு போய் சேர்ந்தான்
இவன்பாடு நிற்கின்றான்
மழை வலுத்தது.

 

பறத்தல்

சட்டையின் முன்
வரையபட்டிருந்த
மரமொன்றிலிருந்து பறவைகள்
ஒவ்வொன்றாய்
பின் விரிந்திருந்த
கிளையில் போய் அமர்ந்தது
கிளைகள் பறவைகளால் ஆனது.
எங்கும் நிரம்பியிருந்தது
சப்தங்களால்
வேறு ஒரு நாளில்
பறவையற்ற மரம்
சாய்ந்த பொழுதிலிருந்து
நிசப்தமானது
பரந்த கிளை மட்டும்
வெறுமையாய்.

- வேல்கண்ணன்