jeyalalitha 450தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து மறுமலர்ச்சி திமுக விலகியபோது வருத்தம் தோய்ந்த குரலில் பேசிய மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், சில நாள்கள் கழித்து, “கூட்டணியில் இருந்து பாமக விலகினால் எங்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை” என்று தொனி மாற்றினார். கூட்டணி உருவாக்கத்தில் பெரும் பங்களிப்பைச் செய்த பொன்னாரிடம் இருந்து இவ்வளவு வீரியத்துடன் பதில் வந்தபோதே தீய்ந்த வாடை அடித்தது.

ஒருவேளை, சின்னஞ்சிறு கட்சிகளுடன் அரும்பாடுபட்டு கூட்டணி அமைத்து, ஏராளமான “பொருட்செலவில்” சொற்ப இடங்களைப் பெறுவதைவிட, பெரிய கட்சியான அதிமுகவுடன் அணி அமைத்து கணிசமான இடங்களைப் பெறுவதற்கு தமிழக பாஜக தயாராகிவிட்டதோ என்ற அய்யம் ஏற்பட்டது. அது சமீபத்திய ஜெயலலிதா - அருண் ஜெட்லி சந்திப்பின்மூலம் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்திருக்கிறது.

உண்மையில், கடந்த மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின்போது மோடியையோ, பாஜகவையோ விமரிசிப்பதைத் தவிர்த்தே வந்தார் ஜெயலலிதா. அதன்மூலம் அதிமுக - பாஜக ரகசிய உறவு இருப்பதாகத் திமுக பொருளாளர் ஸ்டாலின் மேடைக்கு மேடை சந்தேகம் எழுப்பினார். அதன்பிறகே வேறு வழியின்றி விமர்சிக்கத் தொடங்கினார் ஜெயலலிதா. அதுவும் மோடியை அல்ல, மோடியின் குஜராத்தை.

தேர்தலின் முடிவில் 37 இடங்களை வென்றபிறகும் மோடி அரசு அமைய தங்கள் பங்களிப்பைச் செய்யமுடியவில்லையே என்ற வருத்தம் அதிமுகவுக்கு இருந்தது. அதேசமயம், மக்களவையில் அசுர பலத்துடன் இருந்த பாஜகவுக்கு மாநிலங்களவையில் போதுமான பலம் இல்லை என்ற அம்சம் அதிமுகவுக்குச் சாதகமாக இருந்தது. அதைப் பயன்படுத்தி மக்களவையின் முக்கிய எதிர்க்கட்சி இடத்தைப் பிடிக்க அதிமுக முயன்றது.

அது சாத்தியமில்லை என்று தெரிந்ததும் பாஜகவின் ஆதரவுடன் மக்களவைத் துணைச் சபாநாயகர் பதவியைப் பெற்றுக் கொண்டது அதிமுக. அந்தக் கட்சியின் மூத்த உறுப்பினர் எம். தம்பிதுரை மக்களவைத் துணைச் சபாநாயகரானார். அப்போது முதலே அதிமுக - பாஜக இடையே உள்ளுக்குள் நல்லுறவு இருந்தது. ஆனால் வெளிப்பார்வைக்கு எதிரெதிர் நிலைப்பாடு கொண்டவர்களாகத் தோற்றம் கொடுத்தனர்.

அந்தச் சமயத்தில்தான் இருவேறு சம்பவங்கள் நடந்தன. ஒன்று, சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு நான்காண்டு சிறைத்தண்டனையும் நூறுகோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. அதன் எதிரொலியாக முதல்வர் பதவியை இழந்தார் ஜெயலலிதா. மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை தொடங்கியது.

அதன் தீர்ப்பு எப்படி அமையப்போகிறது என்ற பதற்ற நெருப்பு அதிமுக முகாமில் பற்றியெரியத் தொடங்கியது. ஒருவேளை, மேல்முறையீட்டு மனுவின் தீர்ப்பு ஜெயலலிதாவுக்கு எதிராக அமையும் பட்சத்தில் அது அதிமுகவுக்குப் பெரும் பின்னடைவைக் கொடுத்துவிடும் என்ற நெருக்கடியான நிலை. இன்னொரு பக்கம், பாஜகவுக்கு இரண்டு விதமான சிக்கல்கள். ஒன்று, மாநில அளவிலான கூட்டணிக் குளறுபடிகள். மற்றொன்று, தேசிய அளவிலான நிர்வாகச் சிக்கல்கள்.

தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக்கூட்டணி என்ற ஒன்று இருக்கிறதா என்ற சந்தேகம் பாஜக தலைமைக்கே வந்துவிட்டது. கூட்டணிக்கு முதல் நபராக வந்த மதிமுக முதல் நபராக வெளியேறியும் விட்டது. பாமகவுடன் உரசல் மட்டுமே இருக்கிறது. எங்கள் தலைமையில்தான் கூட்டணி என்கிறது பாமக. நாங்கள்தான் கூட்டணிக்குத் தலைமையேற்போம் என்பது பாஜகவின் நிலைப்பாடு.

விளைவு, ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் பாமகவின் ஆதரவு எந்தக் கட்சிக்கும் இல்லை என்று அறிவித்துவிட்டார் டாக்டர் ராமதாஸ். கைவசம் இருப்பது தேமுதிக மட்டுமே. ஆக, தேமுதிக மற்றும் சில உதிரிகளைக் கொண்டு எதிரியை வீழ்த்தமுடியாது என்பது பாஜக தலைமைக்குப் புரிந்துபோனது. அதுதான் அதிமுகவை நோக்கி நகரவேண்டியதன் அவசியத்தையும் உணர்த்தியது.

அதேபோல, மாநிலங்களவையில் போதிய பலம் இல்லாததன் காரணமாகப் பல்வேறு சட்டங்களை அவசரச்சட்டம் என்கிற கொல்லைப்புற வழியாகக் கொண்டுவரும் முயற்சியில் இறங்கியது பாஜக. அதற்கு எதிர்க்கட்சிகள் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்தன. உச்சகட்டமாக, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் இருந்தும் அதிருப்திக் கணைகள் வந்துசேரவே, ஆகவேண்டிய காரியங்களைச் செய்யத் தொடங்கியது பாஜக.

ஆம், மாநிலங்களவையில் தங்களுடைய ஆதரவுத்தளத்தை விரிவுபடுத்தும் முயற்சியில் கூட்டணிக்கு அப்பால் உள்ள கட்சிகள் பலவற்றையும் தொடர்பு எல்லைக்கு உள்ளே கொண்டுவர முயற்சிகளை எடுத்தது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உள்ள பலமுள்ள கட்சிகளின் பலவீனங்களை ஆராயத் தொடங்கியது. அவற்றை ஆயுதமாகக் கொண்டு சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்கியது. அதன் முக்கிய நகர்வே, அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி சந்தித்த நிகழ்வு.

சொத்துக்குவிப்பு வழக்கின் மீதான மேல்முறையீட்டு மனு விசாரணக் கட்டத்தில் இருக்கும் நிலையில், அந்த வழக்கின் தீர்ப்பை ஒட்டுமொத்த இந்தியாவே உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கும் நிலையில், ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளியான ஜெயலலிதாவை மத்திய அமைச்சரவையின் சக்திவாய்ந்தவர்களுள் ஒருவரான அருண் ஜெட்லி சந்தித்துப் பேசியிருப்பது பலத்த சந்தேகங்களையும் சர்ச்சைகளையும் எழுப்பியிருக்கிறது.

உண்மையில், ஜெயலலிதாவும் ஜெட்லியும் சந்தித்துப் பேசுவதற்கு எவ்வித சட்டத்தடையும் இல்லை என்பது உண்மைதான். அப்படி சந்திக்காமல் இருப்பது என்பது வெறும் மரபு மட்டுமே, அதை மீறுவதில் தவறில்லை என்றே வைத்துக்கொள்வோம். ஏனெனில், டான்சி வழக்கில் அரசுப்பதவியில் இருப்பவர் அரசு நிலத்தை வாங்கக்கூடாது என்பது மரபுதானே தவிர விதிமீறல் அன்று என்று சொல்லி மரபுமீறலுக்கு உச்சநீதிமன்றமே நற்சான்றிதழ் வழங்கிவிட்ட நிலையில், இதுபோன்ற மரபுமீறல்களை என்னவென்று கேள்விகேட்பது? போகட்டும்.

jeyalithasasikala 600இங்கே என்ன கேள்வி எழுகிறது என்றால், மத்திய அரசின் சக்திவாய்ந்த அமைச்சர்களுள் ஒருவரான அருண் ஜெட்லி வந்து தண்டனை பெற்ற குற்றவாளியான ஜெயலலிதாவைச் சந்தித்துப் பேசினால், அது ஜெயலலிதா மீதான வழக்கில் தாக்கத்தை ஏற்படுத்தாதா என்பதுதான். இந்தக் கேள்வியை எழுப்ப வேண்டிய ஊடகங்களின் நிலையோ இன்னும் கொடுமை.

பாஜக என்ன சொல்கிறது? மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவைச் சந்தித்தாரே தவிர தண்டனை பெற்ற குற்றவாளியை அன்று. ஆகவே, ஜெயலலிதாவுடனான சந்திப்பை வேறு பாதையில் திசை திருப்பி அரசியல் செய்யும் காரியத்தில் எதிர்க்கட்சிகள் ஈடுபடுகின்றன என்பது பாஜகவின் குற்றச்சாட்டு.

செய்தி என்னவென்றால், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவைப் பாஜகவின் அகில இந்தியத் தலைவர் அமித் ஷா சந்தித்துப் பேசியிருந்தால், அதுவும் தமிழகத்தில் பாஜகவைத் தடம்பதிக்கச் செய்ய, சாம, பேத, தான, தண்ட முறைகள் அனைத்தையும் பயன்படுத்த அடிக்கடி தமிழகம் வந்துபோகும் அமித்ஷா ஜெயலலிதாவைச் சந்தித்துப் பேசியிருந்தால் இந்தச் சர்ச்சைக்கே இடமிருந்திருக்காது. அரசியல் கட்சித் தலைவர்களின் சந்திப்பையும் சொத்துக்குவிப்பு வழக்கையும் எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட யாருமே இணைத்துப் பேசியிருக்கமாட்டார்கள்.

இங்கே பிரச்னை என்பது அமைச்சர் அருண் ஜெட்லி - ஜெயலலிதா சந்திப்புதான். அதாவது, அமைச்சர் - குற்றவாளி சந்திப்புதான். ஆக, மக்களுக்குச் சந்தேகத்தை எழுப்பியது அருண் ஜெட்லி - ஜெயலலிதாதானே தவிர எதிர்க்கட்சிகள் அல்ல.

எப்படியோ, ஜெயலலிதா - அருண் ஜெட்லி சந்திப்பு நடந்தேறிவிட்டது. அதன்மூலம் அரசியல் காய் நகர்த்தல்கள் தொடங்கிவிட்டன. அணி மாற்றத்துக்கான அசைவுகள் தொடங்கிவிட்டன. மக்களவையிலும் மாநிலங்களவையிலும் பாஜக அரசுக்கு அணுக்கமாகவே அதிமுக நடந்து கொள்ளும் என்பதற்கான எல்லா சமிக்ஞைகளும் வரத் தொடங்கிவிட்டன.

அதற்கான பிரதிபலனாக அதிமுக எதிர்பார்ப்பது என்ன? அல்லது அதற்கான பரிசாக பாஜக அரசு அதிமுகவுக்குக் கொடுக்கப் போவது என்ன? என்ற கேள்விகள்தான் இப்போது பொதுமக்கள் மனத்தில் பேருருவம் எடுத்து நிற்கின்றன!

Pin It