நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கருத்துக் கணிப்புகளை எல்லாம் கடந்து அதிமுக கூட்டணி அமோக வெற்றியைப் பெற்றுள்ளது.

தேர்தலில் ஆளுங்கட்சி எதிர்க்காட்சியாக மாறுவதும், எதிர்க்கட்சி ஆளுங்கட்சியாக மாறுவதும் சகஜமான ஒன்றுதான். கடந்த கால அவலங்கள் மீண்டும் தொடரக் கூடாது, புதிதாக தேர்ந்தெடுக்கப்படுகிற அரசாங்கம் மக்கள் நலன் பேணும் அரசாக இருக்க வேண் டும் என்கிற எதிர்பார்ப்போடு தான் மக்கள் வாக்களிக்கிறார்கள்.

வரலாறு காணாத 2ஜி ஸ்பெக்ட்ராம் ஊழல், கடுமையான மின் வெட்டு, விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு பிரச்சினை, முஸ்லிம்களுக்கான தனி இட ஒதுக்கீடுச் சட்டத்தை நிறைவேற்றுவதில் நடந்த குளறுபடிகள் ஆகியவை மக்களை திமுகவிற்கு எதிராக திருப்பியது அதிமுகவிற்கு ஆதரவாக வாக்களிக்க வைத்தது.

திமுக ஆட்சியில் நடந்த தவறுகள் மீண்டும் தொடரக் கூடாது என்றுதான் மக்கள் அதிமுகவிற்கு அமோக ஆதரவு அளித்திருக்கிறார்கள். வெற்றி பெற்ற இரண்டே நாட்களில் ஜெயலலிதாவின் நடவடிக்கைகள் மக்களுக்கு முகச் சுளிப்பை ஏற்படுத்தியிருப்பது மறுக்க முடியாத உண்மை.

தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் தங்கள் தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவிப் பது தமிழ்நாட்டில் வாடிக்கையான ஒன்றுதான். கடந்த 14-05-2011 அன்று மாலை 4.30 மணிக்கு அண்ணாசாலையில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்தார் ஜெ. இதனால் மதியம் 1 மணியிலிருந்தே அந்தப் பகுதியில் போக்குவரத்து கெடுபிடிகள் துவங்கி விட்டது. வாகன ஓட்டிகள் பொறுமையிழந்து எழுப்பிய ஹாரன் ஒலி எச்சரிக்கை ஒலி என்பதை ஜெயலலிதா புரிந்து கொள்ள வேண் டும்.

ஜெயலலிதா பயணிக்க வேண்டுமென்பதற்காக அந்தச் சாலையில் பயணிப்பவர்கள் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டுமென்பது ஜெயலலிதாவின் நன்மதிப்பை கெடுக்கும் விஷயம் என்பதை உணர வேண்டும்.

கடந்த முறை ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கு பல்வேறு இடங்கள் ஆய்வு செய்யப்பட்டன. அதனை நிறைவேற்ற விடாமல் கருணாநிதி மறைமுகமாகவும், நேரடியாகவும் இடைஞ்சல்கள் செய்தார் என்பது உண்மைதான்.

அடுத்து கருணாநிதி ஆட்சிக்கு வந்தவுடன் அரசினர் தோட்டத்தில் 450 கோடி ரூபாய் செலவில் புதிய தலைமைச் செயலகத்தை நிர்மாணித்து பயன்பாட்டுக்குள்ளாக்கினார்.

ஜெயலலிதா அண்மையில் வெற்றி பெற்றவுடன் தலைமைச் செயலகத்தை செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு மாற்றியுள்ளார். ஆட்சிக்கு வருபவர்கள் தங்கள் சுய விருப்பு வெறுப்புகளை மறந்து விட்டு மக்கள் நலத்திற்காக பணியாற்ற வேண்டும். முந்தைய ஆட்சியாளர்கள் நிறைவேற்றும் திட்டத்தை அடுத்து வருகிற ஆட்சியாளர்கள் சுய விருப்பு வெறுப்பிற்காக மாற்றுவது மக்களின் வரிப்பணத்தை வீணாக்கும் நடவடிக்கையாகும்.

கடந்த திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்தில் அமைச்சரவையில் இரண்டு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். தற்போது ஜெயலலிதா அமைத்துள்ள அமைச்சரவையில் ஒரேயொரு முஸ்லிமுக்கு மட்டுமே வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

கருணாநிதி அளித்த தனி இட ஒதுக்கீடு சதவீதத்தை உயர்த்தித் தர வேண்டும் என்று முஸ்லிம் சமுதாயம் கோரிக்கை வைத்து வரும் நிலையில் அமைச்சரவையில் கருணாநிதி அளித்த எண்ணிக்கையை விட குறைத்து தந்துள்ளது முஸ்லிம் மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

உச்சகட்டமாக ஜெயலலிதாவின் பதவியேற்பு விழாவில் நரேந்திர மோடி பங்கேற்றிருப்பது சிறுபான்மையினருக்கும், நடுநிலையாளர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை அளித் துள்ளது.

முன்னர் ஒருமுறை இந்துத்துவா சக்திகளிடம் கைகோர்த்த ஜெயலலிதா சென்னை கடற்கரையில் கூடிய முஸ்லிம் சமுதாயத்தினரிடம்தான் தவறு செய்து விட்டதாக கூறி மன்னிப்பு கேட்டுக் கொண்டார். அப்படிப்பட்ட ஜெயலலிதாவின் முதல்வர் பதவியேற்பு விழாவில் மோடி பங்கேற்றிருப்பது மீண்டும் ஜெயலலிதா தவறு செய்கிறாரோ என்ற சிந்தனையை ஏற்ப டுத்தி உள்ளது.

மக்களின் அமோக ஆதரவோடு வெற்றி பெற்ற இரண்டு, மூன்று நாட்களிலேயே மக்களிடத்தில் அதிருப்தி குரல்கள் எழுவது ஜெயலலிதா கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாகும். முதல் கோணல் முற்றிலும் கோணலாக மாறாமல் முளையிலேயே கிள்ளி எறிய வேண்டியது ஜெயலலிதாவின் பொறுப் பாகும்.

ஆட்சிக்கு தேவையானதை விட அதிகபட்சமான மெஜாரிட்டியை பெற்று விட்டோம். நாங்கள் நினைத்ததை செயல்படுத்து வோம் என்று நினைத்தாரென்றால்,

"இடிப்பா ரில்லா எமரா மன்னன் கெடுப்பா ரிலானுங் கெடும்'' என்ற திருக்குறளை நினைவில் கொள்வது அவருக்கும் நல்லது; ஆட்சிக்கும் நல்லது.

Pin It