சார்லஸ் டார்வின் அவர் துணைவியாருடன் ஆழமான அன்பு வாழ்வில் இருந்தவர். ஒரு முறை அவர் துணைவியார், ஓருயிர்ச் செல்-பெருகி இப்படி ஆனாது என்றால், அந்த ஓருயிர்ச் செல்லை யார் படைத்தார் என்று டார்வினிடம் கேட்கிறார். ஒரு செல் என்றால், ஒரே நேரத்தில், ஒரு செல் உயிரிகள் பல தோன்றி அடுத்த அடுத்த கட்டமாக மாறுகின்றது. உயிர் என்பதே இயக்கம் தானே தவிர வேறு ஏதும் இல்லை என்றார். அப்படி என்றால் உயிர் இல்லை, கடவுள் இல்லை என்று சொல்ல வருகின்றாயா என்ற தன் துணைவியாரின் கேள்விகள் மிக சிக்கலானது என்று குறிப்பிடுகின்றார். ஆன்மாவை மறுப்பது தான் திராவிட இயக்கமும். ஒருமுறை பெரியார் கடிகாரத்திற்கு சாவி கொடுத்தால் ஒடுகின்றது. கடிகாரம் நின்ற பிறகு சாவி கொடுத்தாயே அது எங்கே என்று கேட்டால் என்ன சொல்வது? அதுபோல் தான் உடல் இயங்கும் வரையில் உயிர்ப்புடன் இருக்கின்றது. இயக்கம் நின்றவுடன் இறக்கின்றது. ஆன்மா என்று எல்லாம் ஒன்றும் இல்லை என்றார்.

charles darwin 380உலகம் முழுவதும் எதிர்ப்புகள் வந்தாலும், 170 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்தில் எங்கோ பிறந்த டார்வினைக் குறித்து மதுரையிலே இங்கே நாம் பேசிக்கொண்டு இருக்கிறோம் என்றால் டார்வின் இன்னமும் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார் என்பது தான் அதன் பொருள். அத்தனை புரட்சிகரக் கண்டுபிடிப்பு டார்வினுடையது. இத்தனைக் கண்டுபிடிப்புகளுக்கு பிறகும் மதம் அசையாமல் இருக்கின்றது. இதனை இங்கர்சால்தான் சொல்வார், எத்தனை காலத்திற்கு மனிதனுக்கு அச்சமும், அறியாமையும் இருக்கின்றதோ, அத்தனைக் காலத்திற்கு கடவுளும், மதமும் இருக்கும் என்று. கடவுளுக்கு எதிராக டார்வின் எந்த எண்ணமும் கொள்ளவில்லை, ஆனால் அவர் ஆய்வு முடிவுகள் கூறும் உண்மைகள் அப்படி ஆகின்றன.

நம்ம ஆளுங்க தஞ்சை பெரிய கோயிலில் அர்ச்சனை செய்வார்கள், வேளாங்கண்ணியில் மெழுகுவர்த்தி ஏற்றுவார்கள், நாகூரில் சர்க்கரை வாங்கிக் கொடுத்துவிட்டுப் போவார்கள். எந்தக் கடவுளுடனும் பிரச்சனை வேண்டாம் என்று நினைப்பவர்கள். கடவுள் இருக்கா? இல்லையா? என்று கேட்டால் ஒருவேளை இருந்துவிட்டால் உன் பேச்சைக் கேட்டு நானும் இல்லை என்று கூறி மாட்டிக்கொள்ளவா? கடவுள் இருந்து விட்டுப் போகட்டுமே என்று கூறுவது ஒருவித அச்சத்தின் காரணமாகத்தான். அதனால்தான் அதற்கு பயபக்தி என்று பெயர்.

ஆனால் லமக்கின் சொற்களை எடுத்து டார்வின் சொல்கிறார், இயற்கை சிலவற்றை மன்னிப்பதே இல்லை; பொருளையும் நேரத்தையும் விரயம் செய்யும். எதையும் இயற்கை மன்னிப்பதே இல்லை. மதம் உங்கள் செல்வத்தையும் நேரத்தையும் விரயம் செய்கின்றது. மிக துருவத்தில் இருப்பவர்களை இயற்கை தாங்கிக் கொள்வதில்லை. அடிமுட்டாளும் அதிபுத்திசாலி என்ற நினைப்பும் ஆகாது. புத்தர் சொன்னதைப் போல நடுப்பாதையில் நட. இயல்பாக இரு. மிகக் கடினமானது இயல்பாக இருப்பது தான். மத அடிப்படையில் நாம் செய்யும் செலவுகள், திருமணத்தின் செலவுகள், நடுத்தர மக்கள் தன் வாழ்நாள் சேமிப்பையே அதற்கு விரயம் செய்கிறோம். இயற்கை மன்னிக்காது. பெரியாரின் சுயமரியாதைத் திருமணம் என்பது சிக்கனத் திருமணம். நேர மேலாண்மை என்பது மிக முக்கியமானது. நேர விரயத்தை இயற்கை மன்னிக்காது என்கிறார் டார்வின். எல்லாவற்றையும் மீண்டும் பெற முடியும். ஆனால் இழந்த காலத்தைப் பெற முடியாது.

முதலில் சொன்ன ஒன்றிக்கு விடை சொல்லி முடிக்கின்றேன். குரங்கில் இருந்து வந்தவன் மனிதன் என்று டார்வின் சொல்லவில்லை. மாறாகக் குரங்கு மனிதன் போன்றவை ஒரு மூதாதையிடம் இருந்து வந்து இருக்க வேண்டும். அந்த உயிரினம் இப்பொழுது இல்லை. அது பல விதத்தில் தன்னை தகவமைத்துக் கொண்டதால் தான் நாம் வந்து இருக்கிறோம். மனிதனுக்கு என்று தனிச் சிறப்பெல்லாம் இல்லை. நாமும் ஒரு உயிரினம் தான் என உணர்ந்து, மற்ற உயிரினங்களுடனும் அன்பாக இருப்போம். வள்ளலாரின் 200 ஆம் ஆண்டில் நாம் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். உலகில எந்த நாடும் வல்லரசாக வருவதை நாம் ஏற்கக்கூடாது, நல்ல அரசாக இருக்க வேண்டும். போரற்ற உலகம் தான் வேண்டும். உயிர்களின் மீது அன்புதான் வேண்டும். அன்பே சிறந்தது. எந்த உயிரும் உயர்ந்ததும் இல்லை, தாழ்ந்ததும் இல்லை. அன்பும் நட்பும் மனிதநேயமும் உடைய மனிதர்களாக வாழ்வோம் நன்றி.

- பேராசிரியர் சுப.வீரபாண்டியன்

தொகுப்பு : மதிவாணன்

Pin It