ஒரு நாட்டில் 15 வயதிற்கு மேல் உள்ளவர்களில் எத்தனை பேர் எழுத, படிக்கத் தெரிந்தவர்கள் என்ற அடிப்படையில் எழுத்தறிவு சதவீதம் கணக்கிடப்பட்டு வருகிறது.

1900 ஆம் ஆண்டில் 5 சதவீதம் பேர் மட்டுமே இந்தியாவில் எழுத்தறிவு பெற்றிருந்தனர். 2011 ஆம் ஆண்டில் இது 74 சதவீதமாக உயர்ந்தது. தற்போது இன்னும் கூடியிருக்கக் கூடும்.

Einsteinஇத்தகைய 75 சதவீதம் படித்தவர்களைக் கொண்ட இந்நாட்டில் நாளுக்கு நாள் மூடநம்பிக்கை எனப்படும் தவறான நம்பிக்கையும் வளர்ந்து கொண்டே தான் இருக்கிறது.

மதப் பிரச்சாரம் செய்வதற்கு லட்சக்கணக்கானோர் தயாராக இருக்கும் இந்நாட்டில் அறிவியல் பரப்புரை அல்லது பிரச்சாரம் செய்ய படித்தவர்களில் 1 சதவீதம் அறிவுஜீவிகள் கூட முன்வராத நிலைதான் உள்ளது.

பிரச்சனைகளும் பிரச்சாரங்களும் இல்லாவிட்டால் மதம் என்றோ இல்லாமல் போயிருக்கும்.

ஆனால் அறிவியல் என்பது அழிவில்லாதது.

ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது. ஒருவகை ஆற்றலை மற்றொரு வகை ஆற்றலாக மாற்றலாம் என்பதே அறிவியல் கோட்பாடு.

அறிவியல் என்பது தவறான மூடநம்பிக்கைகளால் கட்டுண்டு கிடக்கும் நமது உள்ளத்தையும் உணர்வுகளையும் விடுவிக்கும் ஆற்றல் மிக்க ஒளி போன்றது.

சிறிது அறிவியல் ஒளி பற்றி பார்ப்போம். அறிவியலின் ஒளி மக்களுக்கு பல பயன்களை தந்து கொண்டிருக்கும் ஒன்று.

ஒளி என்றால் என்ன?

ஒளி என்பது ஆற்றலின் ஒரு வகை வடிவம். அறிவியல் ஒளியானது நம் உள்ளத்திலும் இயற்கையிலும் பல புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் தன்மையது.

போட்டான் எனப்படும் சக்தி வாய்ந்த ஒளித்துகள்களின் கற்றையே ஒளி ஆகும்.

ஒளிமின் விளைவு என்பது அறிவியலின் மிக முக்கிய கண்டு பிடிப்பாகும்.

இந்த ஒளிமின் விளைவு என்ற கண்டுபிடிப்பினால் நமக்கெல்லாம் கிடைத்த பயன் என்ன?

நாம் பார்க்கும் திரைப்படத்தின் தொழில்நுட்பத்திற்கு அடிப்படை ஒளிமின் விளைவு.

ஒரு உலோகப் பரப்பின் மீது ஒளி விழும்போது மின்னணுக்கள் தூண்டப்பட்டு உலோகத்தில் கட்டுண்டு கிடக்கும் எலக்ட்ரான்கள் ஆற்றலுடன் வெளியேற்றப்படுகின்றன. இதற்குப் பெயர்தான் ஒளிமின் விளைவு.

இந்த விளைவை அடிப்படையாகக் கொண்டு ஒளிமின்கலம் என்ற பயன்பாட்டுப் பொருள் உருவாக்கப்பட்டது. இந்த மின்கலம் ஒளி ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றுகின்றது.

ஒளிமின்கலமானது ஃபிலிமில் பதிவான ஒளியை, அதாவது ஒளி வடிவில் சேமிக்கப்பட்டிருக்கும் சுவையான பாடல், இசை மற்றும் வசனங்களை வெளிக்கொண்டு வந்து நமக்கு திரை விருந்தளிக்கிறது. தற்போதைய தொழில்நுட்பத்தில் டேட்டா எனப்படும் தரவுகளாக சேமிக்கப்படுகிறது.

இப்படி எத்தனையோ அறிவியலின் பயன்பாடுகளை நாம் நம் அன்றாட வாழ்வில் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.

நம் குழந்தைகளுக்கு அறிவியல் கற்றுக் கொடுத்து அறிவியலின் நன்மைகளை உணர வைத்து அறிவியல் பூர்வமாக அவர்களே சிந்தித்து செயல்பட விடவேண்டும்.

அதை விடுத்து நாம் குழந்தையாக இருந்தபோது நம் மீது திணிக்கப்பட்ட அறிவியல் பூர்வமற்ற பழக்க வழக்கங்களை நமது குழந்தைகளின் மீது திணிக்காமல் வாழப் பழக வேண்டும்.

அவர்களை அறிவியல் பூர்வமாய் சிந்திக்க பழக்க வேண்டும். அறிவியல் பூர்வமான கல்வி நம் சந்ததியினர் உரிமை என்பதை அனைத்து இந்திய மக்களும் உணர்ந்தாக வேண்டிய காலமிது.

அறிவியல் ஆயிரமாயிரம் பலன் தரக் கூடியது. சூரிய ஆற்றலை மின்னாற்றலாக மாற்றும் சோலார் பேனல்கள் எனப்படும் சூரிய கலங்களில் ஒளிமின் விளைவு பயன்படுகிறது.

விண்வெளி ஓடம் எனப்படும் விண்வெளியில் பறந்து செல்லும் வாகனமானது விண்வெளி வீரர்களை விண்வெளிக்குக் கொண்டு செல்லவும், மீள திரும்பவும் பயன்படுகிறது. அட்லாண்டிஸ், டிஸ்கவரி போன்ற விண்வெளி ஓடங்களின் வடிவமைப்பு தொழில்நுட்பத்தில் ஒளிமின் விளைவு முக்கிய பங்காற்றுகிறது.

அமெரிக்கா, ரஷ்யா, சீனாவைத் தொடர்ந்து இந்தியாவும் நிலவுக்கு மனிதர்களை சுமந்து செல்லும் விண்வெளி ஓடம் (space ship) தயாரிப்பில் ஈடுபட்டு வருவதாக தகவல் உள்ளது.

மேற்கண்ட முக்கிய பயன்பாட்டின் கண்டுபிடிப்பாளர் ஸ்விட்சர்லாந்தில் புதிய கண்டுபிடிப்புகளை பதிவு செய்யும் நிறுவனத்தில் காப்புரிமை பதிவு எழுத்தராகப் பணியாற்றியவர். அறிவியல் சிந்தனைகள் சாதாரண எழுத்தரை உலகம் போற்றும் விஞ்ஞானியாக மாற்றியது. ஆம் அந்த எழுத்தர் வேறு யாருமல்ல ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் தான். 1905 ஆம் ஆண்டில் ஸ்விட்சர்லாந்தில் காப்புரிமை எழுத்தராகப் பணிபுரிந்த காலத்தில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஒளிமின் விளைவைப் பற்றி இவ்வுலகிற்கு விளக்கினார். 16 வருடங்கள் கழித்து 1921 ஆம் ஆண்டில் நோபல் பரிசு பெற்றார்.

அறிவியலின் ஆற்றல் அபாரமானது. அனைத்து மக்களுக்கும் பொதுவானது. கால தாமதமானாலும் இந்திய மக்களின் மனதை கலங்கடிக்கும் தவறான நம்பிக்கைகளை விரட்டியடிக்கும் ஆற்றல் அறிவியலுக்கு உண்டு.

நாம் முக்கிய முடிவுகள் எல்லாவற்றையும் முழுமையாக சோதித்து அறிவியல் பார்வையில் அறிய முயல வேண்டும்.

சமூக ரீதியாக, அரசியல் ரீதியாக, பொருளாதார ரீதியாக, பண்பாட்டு ரீதியாக எவையெல்லாம் தனிமனிதனுக்கும், நமது மக்களுக்கும் முட்டுக்கட்டையாக இருந்து, முன்னேற்றத்தைத் தடுக்கிறதோ அவற்றையெல்லாம் நாம் கடந்து வர அறிவியல் பழகுவோம். அறியாத மக்களுக்கும் அறிவியலின் பயனைக் கொண்டு சேர்ப்போம்.

(வாசிப்பை அறிவியல் பூர்வமாக நேசிக்க வைத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் திருச்செந்தூர் ஒன்றிய குழுவிற்கு நன்றி)

- பவித்ரா பாலகணேஷ்

Pin It