அதோ குண்டுகளின் சத்தங்கள் கேட்டுக் கொண்டு இருக்கின்றன. வீடுகள், நகரங்கள் தரைமட்டமாகின்றன. பிணக்குவியல்கள், உறுப்பு இழந்தவர்கள், அழுகுரல்கள். சகிக்க முடியாத வேதனையல்லவா இது! என்ன காரணம்?

நாடற்றவர்களாக, கேட்பாரற்றவர்களாக சிதறிக் கிடந்த யூதர்கள், பாலஸ்தீனத்தில் குடியேறத் தொடங்கினார்கள். பாலஸ்தீனத்தை அடுத்த ஜோர்தானும், பெத்தலேகமும் யூதர்களால் புனித இடங்களாகக் கருதப்பட்டன.

பாலஸ்தீனத்தின் மைந்தர்களான அரபு முஸ்லீம்களும் தங்களின் புனித இடங்கள் அங்கு இருக்கின்றன என்று சொன்னாலும், அது அந்த மண்ணின் மைந்தர்களுக்குச் சொந்தமான நாடு.

யூதர்கள் பாலஸ்தீனத்தை ஊடுருவி ஆக்கிரமிக்கத் தொடங்கியது முதல் பாலஸ்தீனியர் - யூதர் மோதல் தொடங்கி விட்டது.

இப்பிரச்சனையைத் தீர்க்க ஐ.நா. மன்றம் பாலஸ்தீனத்தை, பிரிட்டனிடம் ஒப்படைத்தது.

பிரிட்டன் நியாயமாக நடந்து கொள்ளவில்லை. பிரித்தாளும் சூழ்ச்சியுடன், யூதருக்கு ஆதரவாக ஒருபக்கம் சாய்ந்து நின்றது.

1917 நவம்பரில் பிரிட்டனின் ‘பால்போர் பிரகடன’ த்தில் “பாலஸ்தீனத்தில் யூதர்களுக்குத் தாயகம் ஏற்படுத்தித்தருவது பிரட்டனின் நோக்கம் “ என்று வெளிப்படையாகப் பிரகடனப்படுத்தியது.

1928, அரபுக் காங்கிரஸ் ஒன்றுகூடி ஜனநாயக முறையில் அரசு அமையவும், பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும் குரல் எழுப்பினார்கள். 1929இல் பாலஸ்தீனியர் - யூதர்களிடையே ஏற்பட்ட கலவரங்கள் வளர்ந்து, இன்று பாலஸ்தீன - இஸ்ரேல் பெரும்போராக மறிவிட்டன.

பாலஸ்தீனியர்கள் இழந்த மண்ணின் உரிமைக்காகப் போராடுகிறார்கள். இஸ்ரேலியர், தான் ஆக்கிரமித்த நாட்டைக் கொடுக்க மாட்டோம் என்று மல்லுக்கு நிற்கிறார்கள்.

அதுதான் இன்று ஹமாஸ் ஆயுதப் பிரிவினருக்கும், இஸ்ரேலுக்கும் இடையே போராக மூண்டு தீ பற்றி எரிகிறது.

எந்த ஒரு பிரச்சனையையும் ஆயுதங்களால் நிரந்தரமாகத் தீர்வு காண முடியாது. இன்றைய அறிவியலில் வளர்ந்துள்ள நவீன ஆயுதப் போர் என்பது, நினைத்துக் கூடப் பார்க்க முடியாத கொடுமையின் அடையாளங்கள். அழிவுகளின் மூலம் ஆக்கத்தைத் தரமுடியாது இரண்டு தரப்பினராலும்.

உடனடியாக ஐ.நா.மன்றம் இதில் தலையிட வேண்டும். முதலில் போரை நிறுத்த வேண்டும்.

உலக நாடுகள் அமைதி வழியில் இஸ்ரேல் -பாலஸ்தீனப் பிரச்சனைக்குத் தீர்வு காண முன்வேண்டும்.

யுத்தம், கொலை இவைகளை அனுமதிக்கக் கூடாது.

பைபிளின் மூலம் யேசு அன்பைச் சொல்கிறார் என்பதை யூத இஸ்ரேலியர் புரிந்து கொள்ள வேண்டும்!

குரான் மூலம் நபிகள் நாயகம் சகோதரத்துவத்தை வலியுறுத்துகிறார் என்பதைப் பாலஸ்தீனியர் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒழிந்து போகட்டும் போர்கள்! மலர்ந்து வளரட்டும் சமாதானமும், அமைதியும்!

Pin It