பாலஸ்தீன மக்களுக்கு எதிராக 18 நாட்களாக இஸ்ரேல் நடத்திவரும் இனப்படுகொலைப் போரில் இதுவரை 3000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட 7000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனிய மக்கள் படுகொலை செய்யப்பட்டு இருக்கின்றனர். இதனை கண்டித்து உலக நாடுகள் பலவற்றிலும் மக்கள் போராட்டம் வலுக்கிறது. இஸ்ரேலை ஆதரிக்கும் ஐரோப்பிய ஒன்றியம், இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் கூட அரசு அடக்குமுறைகளையும் மீறி போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. இருப்பினும், தன்னை உலகின் முதன்மை ஜனநாயக நாடாக அறிவித்துக் கொள்கிற அமெரிக்கா, அக்டோபர் 7, 2023-ல் இஸ்ரேல்-பாலஸ்தீனம் போர் துவங்கிய முதல் நாளிலேயே இஸ்ரேலுக்கு தனது ஆதரவினை தெரிவித்தது. இஸ்ரேல் கூறுகிற அனைத்துப் பொய் பரப்புரைகளிலும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேரடியாக கலந்து கொள்கிறார். அரபு நாடுகள் முன்மொழிகிற போர்நிறுத்தம், அமைதி பேச்சுவார்த்தைகளை ஏற்காமல், அப்பாவி பாலஸ்தீனிய குழந்தைகளை கொல்லும் இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகளுக்கு தனது ஆதரவினைத் தெரிவிக்கிறார். மேலும், இஸ்ரேலுக்கு பெருமளவிளான ராணுவ உதவிகளை அமெரிக்கா செய்கிறது. அமெரிக்கா இஸ்ரேலை தாங்கி நிற்க வேண்டிய அவசியம் ஏன்?

வரலாற்றுப் பின்புலம்

யூத மத அடிப்படைவாதத்தை அடிப்படையாகக் கொண்டு, ஒரு சிறிய மேல்தட்டு யூதர்களின் அரசியல் பொருளாதார நலனுக்காக உருவாக்கப்பட்ட ஒன்றுதான் சியோனிசம் (Zionism) என்கிற கருத்தியல். 19-ம் நூற்றாண்டின் இறுதியில் தோன்றி மிகக் குறுகிய காலத்தில் மிக வேகமாக வளர்ச்சியடைந்த சியோனிசத்தின் அடிப்படையில், பாலஸ்தீனத்தின் நிலப்பரப்பு “கடவுளால் அறிவிக்கப்பட்ட யூதர்களுக்கான நாடாக” தேர்ந்தெடுக்கப்பட்டது. அடுத்த ஒரு நூற்றாண்டு காலத்துக்கு இங்கிலாந்தும் அமெரிக்காவும் தனது புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார நலனுக்காக இஸ்ரேல் நாட்டை கட்டமைத்து வளர்த்தெடுத்தது.us israel war criminalsமுதல் உலகப்போர் காலத்தில் அமெரிக்காவை தங்களுடன் இணைத்துக் கொள்ள வேண்டிய தேவை இங்கிலாந்துக்கு இருந்தது. அமெரிக்காவில் பெரும் பணம் படைத்தவர்களாக, யூதர்கள் இருந்தனர். அவர்களை கொண்டு அமெரிக்காவை உலகப் போரில் பங்கேற்க வைக்கலாம் என இங்கிலாந்து நினைத்தது. ஏற்கனவே, 1890-கள் துவங்கி வளர்ந்து வந்த சியோனிச கருத்தியல் அந்த பேரத்துக்குப் பயன்படும் என அது நினைத்தது. மேலும், முதல் உலகப்போர் காலத்தில் ஒரு வலிமையான நிதிக் கட்டமைப்பை சியோனிச அமைப்பு உருவாக்கி வைத்திருந்தது. கூடவே, கைகூடிவரும் இவ்வரசியல் சூழலை மிக சாமர்த்தியமாகப் பயன்படுத்திக் கொண்டனர் சியோனிஸ்டுகள்.

முதல் உலகப்போர், அரசியல் பொருளாதார ரீதியில் உலக ஒழுங்கில் மிகப்பெரிய மாற்றங்களை கொண்டுவந்தது. மத்திய கிழக்கு நாடுகளில் புதைந்திருக்கும் எண்ணெய் வளங்கள் ஏகாதிபத்தியங்களின் கண்களில் பட்டன. மேற்கில் மத்திய தரைக்கடலில் இருந்து கிழக்கில் ஈரான் வரையிலும், வடக்கில் கருங்கடலில் இருந்து தெற்கில் அரேபிய பெருங்கடல் வரையிலும் நீண்ட பகுதியை மத்திய கிழக்கு நாடுகள் என்கிறோம். இன்றைய அல்ஜீரியா, லிபியா, எகிப்து, பாலஸ்தீனம்/இஸ்ரேல், சிரியா, ஜோர்டன், ஈராக் மற்றும் இன்றைய ஈரானின் சில பகுதிகள் அடங்கிய மத்திய கிழக்கு நாடுகள் உதுமானிய பேரரசின் (Ottoman Empire) ஆட்சியின் கீழ் முதல் உலகப் போர் வரை இருந்தன. பின்னர், 1922ல் உதுமானிய பேரரசு வீழ்ந்தது. அப்பேரரசின் வீழ்ச்சிக்கு முன்பே 1917ல் இங்கிலாந்து பாலஸ்தீனத்தை தனது காலனியாக்கியது. அடுத்து வருகின்ற காலங்களில் மேற்குலக முதலாளியம் வளம் நிறைந்த அப்பகுதியில் கால்பதிக்க ஆரம்பித்தன.

அன்று புவிசார் அரசியலில் கவனம் செலுத்திய இங்கிலாந்து தன்னை ஒரு வல்லாதிக்க சக்தியாக மாற்றிக் கொள்ள மிக முக்கியமான பல நகர்வுகளை மேற்கொண்டது. 1940-களில் இங்கிலாந்து வெளியிட்ட ஆவணத்தில் தெற்காசிய பிராந்தியத்தில் ஆதிக்கத்தை நிலை நிறுத்த வேண்டுமெனில் இலங்கையையும் இஸ்ரேலைப் போல பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டது. மத்திய கிழக்கு அரபு நாடுகளை கட்டுப்படுத்த இங்கிலாந்தும் அமெரிக்காவும் இஸ்ரேலை பயன்படுத்தியது போல இந்தோ பசிபிக் பிராந்தியத்தைக் கட்டுப்படுத்த இலங்கையை பயன்படுத்தின என்பது இங்கே நாம் பொருத்திப் பார்க்க வேண்டியது அவசியம். இத்தகைய பிராந்திய நலனுக்காக 1917-களில் இஸ்ரேல் எனும் நாட்டையும் அங்கீகரித்தது இங்கிலாந்து.

அன்று, முதன்மை ஏகாதிபத்திய நாடாக இருந்த இங்கிலாந்து, முதல் உலகப் போருக்குப் பிறகு பாலஸ்தீனத்தை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது. மத்திய கிழக்கின் எண்ணெய் வளங்களும் புவிசார் அரசியல் நோக்கும் அப்போது அமெரிக்காவின் கவனத்தை ஈர்க்கவில்லை. 1927 வரை மத்திய கிழக்கின் எண்ணெய் வளங்களை இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் மட்டுமே பகிர்ந்துக் கொண்டிருந்தன. ஆனால் அப்பகுதியின் எண்ணெய் வளங்களைப் பற்றியும் பிராந்திய முக்கியத்துவத்தையும் அமெரிக்கா விரைவிலேயே புரிந்து கொண்டது. அதனையடுத்து, 30-களில் அமெரிக்க பெருநிறுவனங்கள் மிகப்பெரிய அளவில் மத்திய கிழக்கு நாடுகளில் கால்பதிக்கத் துவங்கின. இரண்டாம் உலகப் போருக்கு பிறகு அமெரிக்கா இங்கிலாந்தின் இடத்தை முழுமையாக எடுத்துக் கொண்டது என்றே சொல்லலாம். 

இஸ்ரேல் உருவாக்கத்தில் அமெரிக்காவின் பங்கு

இரண்டாம் உலகப் போரில் சோவியத்து பெரும் பங்காற்றி ஹிட்லர் தலைமையிலான நாசிசத்தை வீழ்த்தியது. அதன் விளைவாக மேற்குலகம் “கம்யூனிச பயம்” என்கிற அடிப்படையில் தனது இருப்பினை அனைத்து பிராந்தியங்களிலும் நிலை நிறுத்துவதற்கான பணிகளை செய்ய முனைந்தது. உலக ஒழுங்கு சோவியத் ஆதரவு - சோவியத் எதிர்ப்பு என்கிற அடிப்படையில் மாற்றியமைக்கப்பட்டன. அதன் அடிப்படையில் மத்திய கிழக்கில் தனக்கான ஒரு நண்பன் இருப்பதை சாதகமாக நினைத்தது அமெரிக்கா. மறுபுறம் உலக அரசியல் அரங்கில் அமெரிக்கா முன்னேறி வருவதை சியோனிஸ்டுகள் புரிந்துக் கொண்டு அதற்கேற்றாற்போல வேலை செய்யத் துவங்கினார்கள். முதல் உலகப் போரில் அமெரிக்கா தனக்கு துணை நிற்க வேண்டுமென சியோனிஸ்டுகளை வைத்து காய் நகர்த்திய இங்கிலாந்து இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு அதே காரணத்தாலேயே ஏகாதிபத்திய அரங்கில் இரண்டாம் இடத்துக்குச் சென்றது.

1920-களில் பெரும்பான்மை அரபு இன மக்கள் வாழும் பகுதியில் யூதர்களை குடியேற்றியது தவறு என்கிற அமெரிக்காவின் நிலைப்பாடு, 40-களில், சியோனிஸ்டுகளின் செல்வாக்கினால் மாற்றம் கண்டது. சியோனிஸ்டுகள் 1942ல் அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் ஒன்று கூடி ‘பால்டிமோர் திட்டம்’ என்ற ஒன்றை முன்வைத்தனர். அதன்படி பாலஸ்தீன பிரச்சனையில் அமெரிக்கா தலையிட்டு யூத குடியேற்றத்தை முறைப்படுத்த வேண்டும், யூத ராணுவக் குழுக்கள் தங்கள் சொந்தக் கொடியின் கீழ் செயல்பட வேண்டும் என்பவை பால்டிமோர் திட்டத்தின் பிரதான கோரிக்கைகள் ஆகும். 1944ல் நடந்த தேர்தலில் போட்டியிட்ட இரு ஜனாதிபதி வேட்பாளர்களும் இத்திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.

இவ்வாறு அமெரிக்காவின் பொருளாதார மற்றும் அரசியல் உதவியுடன் யூத குடியேற்றங்கள் பாலஸ்தீனத்தில் அதிகரிக்கத் துவங்கின. 1946ல் ஜூன் மாதம் பாலஸ்தீனத்தை இரண்டாகப் பிரிக்கும் திட்டத்தை அமெரிக்கா முன்மொழிந்தது. ஆனால் இங்கிலாந்து அதனை ஏற்காததால் அதற்கு எதிராக கிளர்ச்சிகள் வெடித்தன. ஜெருசலேமில் அமைந்திருந்த இங்கிலாந்து ராணுவ அலுவலகம் குண்டுவைத்து தகர்க்கப்பட்டது. மத்தியஸ்தம் செய்ய 1947ல் ஐநாவுக்கு இப்பிரச்சனை கொண்டு செல்லப்பட்டது. ஐநாவில் நவம்பர் 29ல் பாலஸ்தீனத்தை இரண்டாகப் பிரித்து இஸ்ரேல் நாட்டை உருவாக்க வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதற்கு ஆதரவாக 33 நாடுகளும் எதிராக 13 நாடுகளும் வாக்களித்தன. இவ்வாக்கெடுப்பில் இஸ்ரேலுக்கு ஆதரவான வாக்குகளைப் ஒருங்கிணைப்பதில் அமெரிக்கா மிக முக்கிய பங்காற்றியது.

இதன்மூலம் பாலஸ்தீனம் உலக அரங்கில் அதிகாரப் பூர்வமாக தோற்கடிக்கப்பட்டதில் மிக முக்கிய பங்கு அமெரிக்காவிற்கு இருக்கிறது. 500க்கும் மேற்பட்ட பாலஸ்தீன கிராமங்கள் உடனடியாக கைப்பற்றப்பட்டு அங்கே யூத குடியேற்றங்கள் உருவாகின. மே 14, 1948 ல் இங்கிலாந்து பாலஸ்தீனத்தை விட்டு வெளியேறியது. அடுத்த 11வது நிமிடம் இஸ்ரேலை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிப்பதாக அன்றைய அமெரிக்க அதிபர் ஹாரி ட்ரூமன் அறிவித்தார். அதில் இருந்து பாலஸ்தீன நிலத்தின் தார்மீக உரிமை யூதர்களுக்கானது என்பதும் பாலஸ்தீன மக்கள் இனப்படுகொலை செய்யப்படுவதற்கான தார்மீக நியாயம் இருக்கிறது என்கிற அடிப்படையிலான அமெரிக்க அதிபர்களின் நிலைபாடு தொன்றுதொட்டு தொடர்கிறது என்பதை பார்க்கலாம்.

2008 டிசம்பர்-ல் ஆப்பரேசன் காஸ்ட் லீட் என்கிற பெயரில் காசா மீது இனப்படுகொலைப் போர் ஒன்றை நடத்தியது இஸ்ரேல். 23 நாட்கள் நடந்த அப்போரில் 1,400க்கும் மேற்பட்ட பாலஸ்தீன பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர். அப்போது முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா “நாங்கள் இஸ்ரேலை கண்டிக்க முடியாது. காரணம் அது தனது தற்காப்புக்குத் தாக்குதலைத் தொடுக்கின்றது.” என்றார். 2019ல் காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 25 க்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டனர். அப்போது முன்னாள் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் “இஸ்ரேல் தன்னை பாதுகாத்துக் கொள்வதற்கு முழு உரிமையும் இருக்கிறது. அதற்கான உதவிகளை அமெரிக்கா அங்கீகரிக்கும். இஸ்ரேல் - அமெரிக்க உறவை உடைக்க முடியாது” எனவும் கூறினார். தற்போதைய அமெரிக்க அதிபர் பைடன் முதல் நாள் போரின் போதே “இஸ்ரேலின் தற்காப்புத் தாக்குதல்” கதையை பேசினார். இப்படி ஒரே மாதிரியான கருத்துகள் அமெரிக்காவின் கொள்கை நிலைப்பாடுகளில் இருந்து எழுபவையாக இருக்கின்றன. அதே கொள்கை நிலைபாடுகளில் இருந்தே இஸ்ரேலுக்கான ராணுவ- பொருளாதார உதவிகள் அமெரிக்காவால் செய்யப்படுகின்றது.

அமெரிக்காவின் ராணுவ உதவிகள்

போரின் முதல் நாளில் இருந்தே உலக நாடுகள் பலவும் போர் நிறுத்தத்தை வலியுறுத்துகின்றன. ஆனால் அதிபர் பைடன் இஸ்ரேல் சென்று அதன் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்து போரில் தனது ஆதரவைத் தெரிவித்தார். அக்டோபர் 16 ல் ரசியாவின் முன்னெடுப்பில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை (UNSC- United Nations Security Council) போர் நிறுத்தத்தை முன்மொழிந்தது. அதை சீனா, ரசியா, காபோன், மொசாம்பிக், மற்றும் ஐக்கிய அரேபிய நாடுகள் ஆதரித்து வாக்களித்தன. ஆனால் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் எதிர்த்து வாக்களித்து அதை தோற்கடித்தன.us foreign aidஅடுத்த இரண்டு நாட்களுக்குப் பிறகு, பிரேசில் ஐநாவின் பாதுகாப்பு அவையில் காசா மக்களுக்கு மருத்துவ உதவிகள் செய்ய போர் இடை நிறுத்தத்தை முன்மொழிந்தது. 15 உறுப்பினர்கள் கொண்ட அவையில் அமெரிக்கா அதை எதிர்த்து வாக்களித்தது. இந்த பாதுகாப்பு அவையில் அமெரிக்கா 5 நிரந்தர உறுப்பினர்களில் ஒன்றாக இருப்பதால் தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி இந்த போர் இடைநிறுத்த ஒப்பந்தத்தை தோற்கடித்தது. 1972 துவங்கி கடந்த 5 தசாப்தங்களில் இஸ்ரேலுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் அவையின் பாதுகாப்பு அவை கொண்டுவந்த தீர்மானங்களில் இஸ்ரேலுக்கு ஆதரவாக 53 முறை வாக்களித்து அதை தோற்கடித்திருக்கிறது அமெரிக்கா.

இவ்வாறு ஒருபுறம் அமைதிக்கான கதவை மூடிவிட்டு மறுபுறம் இஸ்ரேலுக்குத் தனது ராணுவ உதவிகளை செய்து வருகிறது அமெரிக்கா. அதிகாரப் பூர்வமாக ஒரு நாடாக உருவாகி வெறும் 30 ஆண்டுகளுக்குள், 1949ல் ஐந்து அரபு நாடுகளுடன் இஸ்ரேல் போரில் ஈடுபட்டது. அதில் அமெரிக்காவின் ராணுவப் பொருளாதார உதவியுடன் வெற்றியையும் அடைந்தது. 1946ல் இருந்து 2023க்குள் 263 பில்லியன் மதிப்பிலான நிதியை இஸ்ரேலுக்கு வழங்கியிருக்கிறது அமெரிக்கா. கூடுதலாக 127 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான நிதி ராணுவ உதவியாக மட்டும் வழங்கப்பட்டுள்ளன. தற்போது நடந்து வரும் போரில்கூட இஸ்ரேலுக்கு ஏற்பட்ட இழப்பினை சரி செய்ய தேவையான ராணுவ உதவியை அமெரிக்கா செய்யும் என அறிவித்தார் அதிபர் ஜோ பைடன். அதனையடுத்து 14.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான ராணுவ உதவி செய்யப்பட்டது.

இதைப் போலத்தான், தமிழீழ மக்களுக்கு எதிராக இலங்கை அரசால் நடத்தப்பட்ட இனப்படுகொலைக்கும் அமெரிக்கா பெருமளவில் நிதி மற்றும் ராணுவ உதவியளித்திருக்கிறது. 500 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கான நிதியும், ஆயுத உதவியும் பல்வேறுகட்ட ராணுவ பயிற்சியும் இலங்கைக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. 2002ல் அமைதி ஒப்பந்த காலத்தின்போது பசிபிக் பெருங்கடல் பகுதியில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு இலங்கையின் முப்படைகளுக்கு பரிந்துரைகளை வழங்கியது அமெரிக்கா.

அமெரிக்க சியோனிசம்

பாலஸ்தீனம் ஆபிரகாமிய மதங்களான இஸ்லாம், யூதம் மற்றும் கிறிஸ்தவம் ஆகிய மூன்றின் பிறப்பிடமாகும். மத அடிப்படையில் மூன்று மதங்களுக்கும் புனித தளமாக இருப்பது பாலஸ்தீனத்தின் தலைநகரான ஜெருசலேம். 1947-ல் ஐ.நா.வில் கொண்டுவரப்பட்ட நிலப் பிரிப்பு சட்டத்தின்படி ஜெருசலேம் சர்வதேச கண்காணிப்பின் கீழ் சென்றது. ஆனால் 1948 அரபு இஸ்ரேல் போரில் மேற்கு ஜெருசல்லேத்தையும், 1967 போரில் கிழக்கு ஜெருசலேத்தையும் இஸ்ரேல் ஆக்கிரமித்தது. மட்டுமல்லாமல் 1980ல் தனது தலைநகராக அறிவித்துக்கொண்டது. இது சர்வதேச சட்ட விதிகளை மீறிய ஒன்றாதலால் ஐநா அதை அங்கீகரிக்கவில்லை. ஆதலால் அப்போது அமெரிக்காவும் “ஆக்கிரமிக்கப்பட்ட பகுதி”யாக அதை அறிவித்தது.

சர்வதேச கண்காணிப்பின்கீழ் உள்ள பகுதியாக இருந்தாலும் அங்கு வாழும் பாலஸ்தீன மக்கள் “நிரந்தர வாழ்விட அட்டைகளை” வைத்துக் கொண்டு தான் வாழவேண்டிய சூழலில் இருக்கின்றனர். ஆனால் யூத மக்களுக்கு அப்படியில்லை. இருப்பினும் ஜெருசலேத்தை இஸ்ரேலின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது சியோனிச கோட்பாட்டின் அடிப்படையில் மிக முக்கியமான ஒன்று.

புராணக் கட்டுக் கதைகளின்படி “கடவுளால் அறிவிக்கப்பட்ட புனித தளத்தை” முழுமையாக உரிமை கோர முடியாமல் இருப்பதை தோல்வியாக கருதினார்கள் சியோனிஸ்டுகள். இதனால் இஸ்ரேலுக்கு ஜெருசலேமை முழுவதுமாக அபகரித்துக் கொடுக்க அமெரிக்கா முடிவு எடுத்தது. அதன்படி, முதலில் ஜெருசலேமில் அமெரிக்க தூதரகத்தை அமைக்க பாராளுமன்றத்தில் சட்டம் ஒன்று 1995ல் இயற்றப்பட்டது. கிளின்டன் அன்று அமெரிக்க அதிபராக இருந்தார். பெரும் அரசியல் நெருக்கடியை சந்தித்ததால் அவரும் அவருக்கு அடுத்து அதிபர் பதவியேற்ற ஜார்ஜ் புஷ் மற்றும் ஒபாமா ஆகியோர் அதை செயல்பாட்டிற்கு கொண்டு வரவில்லை.

ஆனால், முதல் கட்டமாக பாலஸ்தீன தலைமையிடம் அழுத்தம் கொடுத்து இஸ்ரேலை ஒரு தேசமாக அங்கீகரிக்க முயற்சிகள் எடுக்கப்பட்டது. 1995ல் ஒரு ஒப்பந்தத்தின்மூலம் கிழக்கு ஜெருசலேம் பாலஸ்தீனத்திற்கும் மேற்கு ஜெருசலேம் இஸ்ரேலுக்கும் என முடிவு எட்டப்படுகிறது. அதிபர் கிளின்டன் தலைமையில் நடைபெற்ற அவ்வொப்பந்தத்தில் இஸ்ரேலை தனி தேசமாக அங்கீகரிக்கவும் யாசர் அராஃபத் தலைமையிலான பி.எல்.ஓ. (Palestine Liberation Organisation) அமைப்பிற்கு அழுத்தம் தரப்பட்டது. சர்வதேச சமூகம் மட்டுமல்லாது பாலஸ்தீன தலைமையும் இஸ்ரேலை ஒரு தேசமாக அங்கீகரித்தது. அடுத்ததாக ஜெருசலேமை முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதே அவர்களின் இலக்காக இருந்தது.

டிசம்பர் 6, 2017ல் இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேத்தை அங்கீகரித்தது ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்கா. கூடவே மே 14, 2018ல் அமெரிக்க தூதரகத்தையும் ஜெருசலேமுக்கு அவர் மாற்றினார். இதற்கெதிராக 2018ல் கிளர்ந்த பாலஸ்தீன மக்கள் 170 பேர் கொல்லப்பட்டனர். பி.எல்.ஓ. அமைப்பிற்குப் பிறகு பாலஸ்தீனத்தில் செல்வாக்கு மிக்க மக்கள் அமைப்பாக வளர்ந்த ஹமாஸ் மீதே இதற்கும் குற்றம் சுமத்தியது மேற்குலக நாடுகள். அன்றும் வழக்கமான “தற்காப்புக்காக இஸ்ரேல் செய்தது” என்கிற கதை சொல்லப்பட்டது. அமெரிக்காவின் தூதரகமும் ஜெருசலேமில் கொண்டு வரப்பட்ட பிறகு பாலஸ்தீன மக்களுக்கு நெருக்கடிகள் அதிகமாகின. இஸ்ரேலுக்கு அங்கு பிடி அதிகமாகியது. இப்படி ஒவ்வொரு நகர்வும் திட்டமிட்டு பல ஆண்டுகளாக நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. அதில் எந்த ஒரு அமெரிக்க அதிபரும் விதிவிலக்காக இருக்க வில்லை. அனைவரும் சியோனிச கோட்பாட்டிற்காக தங்களது பங்கை செய்தனர்.

தன்னை உலகின் முதன்மை ஜனநாயக நாடாக பறைசாற்றிக் கொள்ளும் அமெரிக்கா இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு நடந்த பல போர்களுக்கு, பல தேசிய இனப்படுகொலைக்கு முக்கிய காரணியாக இருந்திருக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே. அமெரிக்கா வரலாற்றுப் பூர்வமாகவே குடியேற்ற காலனியத்தாலும் இனப்படுகொலையாலும் உருவான ஒரு நாடு. அந்த வகையில் தனது புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார நலனுக்காக மத்திய கிழக்கு நாடுகளில் இஸ்ரேலை அது வளர்த்தது. இப்படி வரலாற்றுப் பூர்வமாக இஸ்ரேலின் உருவாக்கத்திலும் பாலஸ்தீன இனப்படுகொலையிலும் அமெரிக்கா சியோனிஸ்டுகளுடன் துணை நின்றிருக்கிறது. ஜெருசலேமை ஆக்கிரமித்துக் கொடுத்து கலாச்சார அபகரிப்பை செய்தது. இனப்படுகொலைப் போரில் ராணுவ உதவிகளை செய்துக் கொண்டிருக்கிறது; அமைதி முயற்சிகளையும் இஸ்ரேலுக்கு எதிரான சர்வதேச கட்டுப்பாடுகளையும் இல்லாமல் ஆக்குகிறது. அரபு நாடுகளை சூழ்ச்சியின்மூலம் தனது கைப்பாவையாக வைத்துக் கொண்டிருக்கிறது. கூடவே மிக வலிமையான பிரச்சார கட்டமைப்பினைக் கொண்டு பாலஸ்தீன எதிர்ப்பு - இஸ்ரேல் ஆதரவு கருத்துருவாக்கத்தை செய்து வருகிறது. இதன் வெள்ளை இனவாதத்திற்கு இணையாக சியோனிச இனவாதத்தை கருதியிருப்பது ஆச்சரியப்படக் கூடியதல்ல. அந்த அடிப்படையில் உலகின் பல இடங்களில் தங்களுக்கான வலது சாரிய நண்பனை உருவாக்கி தேசிய இனங்களை இனப்படுகொலை செய்தது. ஈழத்திலும் இதுவே நடந்தது.

மேற்குலகம், இனவாத அடிப்படையிலும் தனது புவிசார் நலனின் அடிப்படையிலும் இலங்கையை பயன்படுத்தியது. ஐ.நா. மூலம் பி.எல்.ஓ. அமைப்பு முடக்கப்பட்டதைப் போல விடுதலைப் புலிகளையும் முடக்க சூழ்ச்சியில் இறங்கியது. ஆனால் புலிகள் அதற்கு உடன்படவில்லை. அதனால் புலிகளை சர்வதேச சமூகத்திடம் தீவிரவாதிகளாக சித்தரித்தது. சமாதானம் பேசுவதுபோல நடித்துக் கொண்டே இலங்கை ராணுவத்திற்கு உதவிகளை செய்தது. சமாதான காலத்தை புலிகள் அமைப்பின் வலிமையை குறைக்க பயன்படுத்தி சர்வதேச தொடர்புகளை இல்லாமல் செய்தார்கள். அதேவேளை இலங்கை ராணுவத்துக்கு பயிற்சி, ஆயுத உதவி, நிதி உதவி ஆகியவற்றை செய்து அவர்களை வலிமையானவர்களாக ஆக்கினார்கள். அதனால்தான் புலிகளை வீழ்த்த முடிந்தது. ஈழத்தில் நடந்தது போன்றே பாலஸ்தீனத்திலும் இனப்படுகொலையை திட்டமிட்டு முன்னகர்த்துகிறார்கள். இவை அனைத்தையும் இணைத்துப் பார்ப்பதே இந்த மோசடி அரசியலை புரிந்துக் கொள்ள உதவும்.

இந்தியாவின் ஊடகங்களோ அமெரிக்காவின் மொழியில், இஸ்ரேலின் குரலின் செய்திகளை நமக்கு வழங்கி வருகிறார்கள். அந்த வகையில் கடந்த காலத்தின் ஒரு இனப்படுகொலையை சந்தித்த ஒரு இனமாக பாலஸ்தீன தேசிய இன மக்களுக்காக நிற்க வேண்டியதும் மேற்குலகங்களின் சூழ்ச்சியை வெளியுலகிற்கு அம்பலப்படுத்துவதும் தமிழர்களாகிய நமது கடமையாக இருக்கிறது.

- மே பதினேழு இயக்கம்

Pin It