காவிரியில் தமிழ்நாட்டின் உரிமைப்படி ஜூன் மாதம் 9.19 டி எம் சி தண்ணீர் தமிழ்நாட்டிற்கு கர்நாடகம் வழங்கி இருக்க வேண்டும். ஆனால் வழங்கவில்லை. மாறாக 2.833 டிஎம்சி தண்ணீர் மட்டுமே வழங்கியது. தமிழ்நாட்டின் உயிர்த் தேவைக்கு தண்ணீர் வழங்காமல் ஒட்டுமொத்த கர்நாடக அரசியல் கட்சிகளும் அங்கே ஒன்றுபட்டு நின்று காவிரியை மறிக்கிறது.

குறுவை அறுவடைக் காலம் வரையிலும், அதன் பின்னர் சம்பா சாகுபடிக்கும் இப்போது நமக்குத் தண்ணீர் வேண்டும். ஆனால் ஒரு சொட்டு நீரைக் கூடத் தமிழ் நாட்டிற்குத் திறந்து விடக் கூடாது என கர்நாடக அரசை மிரட்டுவது ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே தேர்தல் என்று ஒரே ஒரே கோட்பாடு போடுகிற பாஜகவின் கர்நாடக முன்னாள் முதல்வர் பொம்மைதான்.

காவிரி நீர் மேலாண்மை வாரியத் தலைவர் சந்திப்பு, காவிரி நீர் ஒழுங்காற்று குழுவில் முறையீடு, பிரதமருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு, மீண்டும் செப்டம்பர் 19ஆம் தேதி அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஒன்றிய அமைச்சர் சந்திப்பு என நெடிய சட்டப் போராட்டத்தை இடைவிடாமல் நடத்தி வருகிறது தமிழ்நாடு அரசு.stalin at assembly 677அதேசமயம் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருக்கும், பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதிக்கும் உள்ள மாறுபட்டக் கருத்தை அண்மையில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் மாண்புமிகு திராவிட மாடல், தமிழ்நாடு முதலமைச்சர் கொண்டு வந்த ‘ஒன்றிய அரசை வலியுறுத்துகிற’ தீர்மானத்தின் மீது மேற்கண்ட இருவரும் பேசிய பேச்சிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

பாஜகவின் வானதிக்காவது திருடனைத் தேள் கொட்டிய கதை.

தீர்மானத்தை ஆதரித்து விட்டால், ‘ ப்ரௌடு கன்னடிகா’ மிஸ்டர் அண்ணாமலையின் கோபத்திற்கும், ஒரே நாட்டின் ஒரே பிரதமர் மோடியின் கோபத்திற்கும் ஆளாக வேண்டும்.

அதற்குப் பதிலாக தமிழ்நாட்டின் உரிமைக்கும், தமிழர்களின் குறிப்பாக டெல்டா பாசன விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கும் துரோகம் இழைத்தாலும் சரி, முதல்வரின் தீர்மானத்தை மட்டும் ஆதரித்து விடக்கூடாது என்கிற கவலையில் எதையெதையோ சம்பந்தமில்லாமல் உளறி கொட்டி விட்டு வெளியேறி விட்டார்.

எடப்பாடி பழனிசாமி சொல்கிறார், தண்ணீர் தராத கர்நாடக ஆட்சியாளர்களான காங்கிரசோடு திமுக எப்படிக் கூட்டணி வைக்கலாம்?

இண்டியா கூட்டணிக் கூட்டத்தில் ஏன் காவிரி நீரைக் கேட்கவில்லை? என்றெல்லாம் பேசுகிறார். அவரது மொழியிலேயே சொல்வதானால்

“இதெல்லாம் ரொம்ப தப்புங்க பழனிசாமி”

கர்நாடகாவிடம் ஏன் பேசவில்லை என்று பிரச்சனையை மீண்டும் ‘ரிவர்ஸ் கியரில்’ தொடங்கச் சொல்லுகிறார் பழனிசாமி. இப்போது பழனிச்சாமி, காவிரி நீரை திறந்தால் தான் கூட்டணி என்று திமுக சொல்ல வேண்டும் என்கிறார்.

கட்சி, அரசியல், கூட்டணி, கொள்கை, கோட்பாடு என்று எதுவும் தேவையில்லை பழனிசாமிக்கு. காரணம் அவர் வந்த வழித்தடம் அப்படி. மண்டி போடவும், காலைத் தேடவும் திறமை இருந்தால் போதுமானது என்கிற கொள்கைதான் மிஸ்டர் பழனிச்சாமியின் ஒரே கொள்கை.

திருவாளர் பழனிசாமிக்கு நாம் இரண்டு கேள்வி தான் கேட்க விரும்புகிறோம். பாஜகவின் எந்தத் திட்டத்தை, எந்தச் சட்டத்தை அல்லது எந்த செயல்பாட்டைக் கண்டித்துக் கூட்டணியில் இருந்து விலகி வந்தீர்கள் பழனிசாமி?

இரண்டாவது நேற்று வரை வெளிப்படையான கூட்டணியிலும், இன்று வரை ரகசிய ஒப்பந்தக் கூட்டிலும் இருக்கிற மிஸ்டர் பழனிசாமி அவர்களே, பாஜகவை எதிர்த்தல்ல ஒன்றிய அரசு தமது கடமையைச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிற தமிழ்நாடு அரசின் தீர்மானம் எந்த அடிப்படையில் உங்களுக்கு மாறுபட்டது?

பழனிசாமிகளிடம் இதற்குப் பதில் இருக்காது என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான்.

ஆனால் சமூக நீதித் தமிழ்நாடு இவை அனைத்தையும் கவனத்தில் எடுத்துக் கொண்டு காத்திருக்கிறது

தேர்தல் களத்தில் கணக்கு தீர்க்க!

பழனிசாமிகளும் வானதிகளும் தயாராக இருங்கள்.

மக்கள் உங்களுக்கு விடை கொடுக்கும் காலம் தொலைவில் இல்லை!