போருக்கு இரண்டு ஆயுதங்கள் தேவை. ஒன்று இராணுவ வலிமை, இது எல்லாருக்கும் தெரிந்தது. மற்றொன்று இதைவிட ஆபத்தான, இந்தப் போருக்கு உந்தும் சத்தியான கருத்தியல். காசாவில் உள்ள கட்டிடங்களை இஸ்ரேல் ராணுவம் தகர்க்கும்போதும் அந்த மக்களை சிதறடித்தபோதும் அவர்களின் படை பலம் தொலைக்காட்சிகளில் தெரிந்தன. ஆனால் இந்த தாக்குதலுக்குப் பின்னால் இருக்கும் சித்தாந்தம், முக்கியமாக எபிரேய வேதாகமம் சார்ந்த இறையியல் சிந்தனை அதிகமாகக் கண்காணிக்கப்படவில்லை. இந்தக் குறைபாட்டை நிவிர்த்தி செய்ய இந்தக் கட்டுரை முயல்கிறது. இதையும் சொல்லவேண்டும். இப் பத்தியில் வேதவாக்கியங்கள் நிறைய வரும். படப்பிடிப்பின் போது பறவைகளும் மிருகங்களும் கொல்லப்படவில்லை என்று உரிமை கைதுறப்பு செயவதுபோல் வேத வசனங்கள் இங்கே திரிக்கப்படவில்லை.

வேதாகமத்தில் காணப்படும் "தெய்வீக உரிமைகள்," "தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள்", “கடவுளின் ஜனம்”, “பரிசுத்த மக்கள்”, "நில வாக்குறுதி," "யூதேயா," “சமாறியா” போன்ற சொற்கள் பலஸ்தீனத்தின் காலனித்துவத்தை எபிரேய ஆகமத்தின் அடிப்படையில் சட்டப்பூர்வமாகவும், அரசியல் நியாயத்தன்மை வழங்குவதற்காக தொடர்ந்து மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படுகின்றன.. இவை திருச்சபை வட்டாரங்களில் மட்டுமல்ல உயர்ந்த அரசியல் மட்டங்கள் மற்றும் ஐ.நா. பாதுகாப்பு அமர்வுகளில் இந்த வாக்கியங்கள் உபயோகிக்கப்பட்டிகின்றன. சமீபத்திய உதாரணம் ஐக்கிய நாடுகள் சபைக்கான இஸ்ரேலிய பிரதிநிதி டேனி டானன். டிசம்பர் 23, 2016 இல் ஆற்றிய உரை : “இந்தப் புனித நூலான எபிரேயே ஆகமம் 3,000 வருட வரலாற்றை கொண்டுள்ளது. இஸ்ரேல் தேசத்து யூத மக்களின் வரலாறு. இந்த வரலாற்றை யாராலும் மாற்ற முடியாது.” அத்துடன் நிறுத்தி விடவில்லை. எபிரேய ஆகமத்தைத் திறந்து அதன் முதல் புத்தகமான ஆதியாகமத்திலிருந்து ஒரு வசனத்தை வாசித்தார். அந்த வாக்கியம் : “அன்றியும், உனக்கு அன்னிய நாடாகிய இந்தக் கானான் நாடு முழுவதையும் உனக்கும் உன் சந்ததியாருக்கும் நித்திய உரிமையாகக் கொடுப்பேன். ” (17.7) “இதுதான் எங்கள் நிலத்தின் பத்திரம்” என்று எதிரே இருந்த பலஸ்தீன பிரதிநிதிகளின் கண்களை நேராகப்பார்த்து டானன் கூறினார்.isreal pm warஇதே மாதிரியான நிகழ்வு 1937 ஆம் ஆண்டு நடந்தது. இஸ்ரேலை நிறுவிய முக்கியமானவர்களில் ஒருவரும் நாட்டின் முதல் பிரதம மந்திரி டேவிட் பென்-குரியனுக்கும் பலஸ்தீனத்தின் பிரிவினை பற்றிய விசாரணைக்கான நியமிக்கப்பட்ட குழுவுக்குத் தலைமை தாங்கிய லார்ட் பீல் இடையேயான ஒரு உரையாடல். கதையின்படி, லார்ட் பீல் பென்-குரியனிடம் நீங்கள் எங்கே பிறந்தீர்கள் என்று கேட்டார். பென்-குரியன் அவர் போலந்தின் ப்லோன்ஸ்க் நகரைச் சேர்ந்தவர் என்று பதிலளித்தார். தான் சந்தித்த அரபுத் தலைவர்கள் அனைவரும் பலஸ்தீனத்தில் பிறந்தவர்கள் என்றும் பெரும்பாலான யூதத் தலைவர்கள் கிழக்கு ஐரோப்பாவைச் சேர்ந்தவர்கள் என்றும் லார்ட் பீல் சொன்னார். அத்துடன் இந்தத் தகவலையும் தெரிவித்தார். அரேபிய மக்களிடம் ஒட்டமான் இராஜியம் கொடுத்த மானிய நிலப் பத்திரம் இருக்கிறது. இந்தப் பத்திரம் அவர்களுக்கு நிலத்தின் உரிமையைக் கொடுத்திருக்கிறது. அதுபோல் இந்த நிலம் உங்களுக்குச் சொந்தமானது என்பதை நிரூபிக்கும் ஆவணம் உங்களிடம் உள்ளதா? என்று பென்-குரியனிடம் பீல் கேட்டார். அந்த நேரத்தில், பென்-குரியன் எபிரேய வேதாகமத்தை எடுத்துக் காட்டி “ இதோ இதுதான் எங்கள் நிலப் பத்திரம். இது உலகின் மிகவும் மதிக்கப்படும் புத்தகம். ஆங்கிலேயர்களான நீங்களும் இதை மிகவும் மரியாதையுடன் கருதுகிறீர்கள். இந்த நூலின் சான்றுப் படி இந்த நிலம் எங்களிடம் இருக்க வேண்டும்!”

புனைவியல்வாதிகளில் பாணிகளுக்கு ஏற்ப, பென்-குரியன் பழைய ஏற்பாட்டை யூத மக்களின் "தேசிய இதிகாசம்" என்று கருதினார். இவரின் எண்னப்படி இந்த நூல் அவர்களை ஒரு புகழ்பெற்ற பண்டைய கடந்த காலத்துடன் இணைக்கிறது மற்றும் நிலத்தின் சமகால இஸ்ரவேலரின் குடியேற்றத்தை நியாயப்படுத்துகிறது.

அரசியல்வாதிகள் மட்டும் அல்ல யூத தத்துவஞானிகளும் பலஸ்தீனம் தங்களுடையதே என்பதை நிரூபிக்க எபிரேய திருமறைக்கே திரும்புகின்றனர். அற்புதமான உதாரணம் மார்டின் புபர் (Martin Buber). I and Thou எழுதியவர். காந்தி ஒரு தேசிய வீட்டிற்கான கோரிக்கையை ஆதரிக்க விவிலியத்தில் தேடுவதில் எனக்கு அதிகம் ஈடுபாடு இல்லை என்று கருத்து தெரிவித்திருந்தார். அதை எதிர்த்து புபர் காந்திக்கு 1939 இல் எருசலேத்திலிருந்து இப்படி எழுதியிருந்தார்: பரிசுத்த வேதாகமத்தின் ஒவ்வொரு வாக்கியத்திலும் தெய்வீக வெளிப்பாட்டை நாம் தேடவில்லை. ஆனால் அவற்றை எழுதியவர்களின் மெய்கருத்தில்தான் நமக்கு நம்பிக்கை. எமக்கு தீர்க்கமானது நிலத்தின் உரிமையல்ல. மாறாக இந்த நாட்டில் சுதந்திரம் யூத சமூகத்துடன் பிணைக்கப்பட்ட தெய்வீகக் கட்டளைதான். ஏனென்றால், மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, இந்த மண்ணில் நாம் நுழைந்தது, பரம்பரை பரம்பரையாக நீதியான வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ள மேலிருந்து வந்த பணி என்று எபிரேய வேதம் நமக்குச் சொல்கிறது - மற்றும் நமது உள்ளார்ந்த அறிவு அதற்கு சாட்சியமளிக்கிறது. அத்தகைய வாழ்க்கை முறையை தனிநபர்கள் தங்கள் தனிப்பட்ட முறையில் உணர முடியாது, ஆனால் ஒரு தேசம் அதன் சமூகத்தை நிறுவுவதில் மட்டுமே உணர முடியும். இங்கே `மேலிடம்` என்று புபர் சொன்னதை வேத வாக்கு, கடவுளின் உத்தரவு என்று எடுத்துக்கொள்ளுங்கள்.

காலனித்துவ சாகசத்தை மேற்கொள்ள மக்களையும் நாடுகளையும் அபகரிக்க சக்திவாய்ந்த கூறுகள் எபிரேய ஆகமத்தில் நிறைய உண்டு.. ஒன்று, யூதர்களுக்கு வாக்களிக்கப்பட்ட நிலம்: “உங்கள் காலடிபடும் இடங்கள் எல்லாம் உங்களுடையவை ஆகும். பாலைநிலமும், லெபனோனும், யூப்பிரத்தீசு ஆறும், மேற்குக் கடற்கரையும் உங்கள் எல்லையாயிருக்கும். எவனாலும் உங்களை எதிர்த்து நிற்க இயலாது. ஏனெனில், கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குச் சொன்னபடியே, நீங்கள் செல்லும் நாடுகள் அனைத்திலும் உங்களைப்பற்றி அச்சத்தையும் திகிலையும் உண்டாக்குவார்.” (உபாகமம் 11.24)., காலனிய உச்சக்கட்ட நாட்களில் ஜரோப்பிய காலனி வாதிகள் அமெரிக்காவையும், ஆபிரிக்காவைவும் ஆஸ்திரேலியாவையும் ஆசிய நாடுகளையும் அபகரித்தபோது மிக மூர்க்கத்தனமாக நேர் பத அர்த்தத்தில் இந்த வசனத்தைப் பயன்படுத்தினார்கள். உலகில் பெரும் அழிவை ஏற்படுத்தியதற்கு இந்த வசனம் ஒரு முக்கிய காரணம். வசைமொழிகளுக்கு என்று ஒலம்பீக்ஸ் போட்டி நடத்தினால் இந்த வாக்கியம் தங்கப் பதக்கம் பெறும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் என்ற யோசனையும் பழைய ஏற்பாட்டின் ஒருங்கிணைந்துள்ள செய்தியாகும். “நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்தமான ஜனம், பூமியிலுள்ள எல்லா தேசங்களுக்கும் மேலாக, கர்த்தர் உங்களைத் தமக்கென்று ஒரு விசேஷமான ஜனமாகத் தேர்ந்துகொண்டார்” (உபாகமம்.14.2). இத்தகைய கருத்துக்கள் வேதப் புத்தங்களில் குறியிடப்படும் வரை ஆதிக்க சாதி இன்னுமொரு பலவீன சமுதாயத்தை நசித்து கொண்டே இருக்கும், காலனிய முயற்சிகளும் தொடரும். “தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள்”, “தெரிவுநிலை” என்ற கருத்துக்கள் ஆபத்தான சித்தாந்தமாக மாற்றப்பட்டிருக்கிறது. இது மத அடிப்படையிலான தேசியவாதம், குடியேற்ற காலனித்துவம் மற்றும் ஒரு இனத்தின் பேரழிவு இறையில் சம்மதத்தைத் தருகிறது.

இன்று இஸ்ரேயில் என்று அழைக்கப்பட்டும் இந்த நிலத்துக்கு வரலாற்றில் பல பெயர்கள் இருந்திருக்கின்றன. மிகத் தொன்மையானது கானான். இது இன்றைய பலஸ்தீனம், லெபனான் மற்றும் ஜோர்டானின் மேற்குப் பகுதியையும் கடலோர சிரியாவை உள்ளடக்கியது. இந்தப் பிரதேசத்தைத்தான் எபிரேய வேதம் பாலும் தேனும் வழிந்தோடும் நாடு என்று வர்ணித்திருக்கிறது. இந்திய மென்பொருள் பொறியாளரகள் கனவு காண்பதுபோல் போல் அமெரிக்காவை அல்ல. கானான் மறைந்தாலும், கானானியர்கள் கரைந்துவிடவில்லை. அவர்கள் வெவ்வேறு அடையாளங்களுடன் பலஸ்தீனத்தில் வசிக்கும் மக்களாகத் தொடர்ந்தனர். புதிய ஏற்பாட்டு நற்செய்தி நூல்களில் இவர்கள் குறிப்பிடப்பட்டிருக்கிறார்கள். இயேசு ஒரு கானானியப் பெண்னைச் சந்தித்தாக ஒரு சம்பவம் உண்டு.

பின்னர் இந்த நிலத்திக்கு இடப்பட்ட பெயர் பலஸ்தீனம், கிட்டத்தட்ட 2,500 ஆண்டுகளாக, இன்றுவரை இப் பெயர் தொடர்ந்து பயன்படுத்தப்படுகிறது. இங்கு வாழ்ந்த ஆதிக்கக் குடியினார்களின் தொடக்கம் சற்று குழப்பமானது. இடியப்பம் போல் பல அடுக்குகள் கொண்டது. வெண்கல யுகத்தின் பிற்பகுதியில் தெற்கு கடலோர கானானில் குடியேறிய கடல் மக்களில் ஒரு குழுவாகயிருந்த ஜனங்களில் ஒருவர் என்ற புனைவுகோள் உண்டு. பெலஸ்ட் (Pelast) என்று அழைக்கப்பட்டவர்கள் பிறகு பெலிஸ்தியர்கள் என்று பெயர் மாற்றப்பட்டார்கள். கிரேக்க வரலாற்றாசிரியரும் வரைபடவியலாளருமான ஹெரோடோடஸ் (புது யுகத்துக்கு முன்484-425) தான் டிரான்ஸ்ஜோர்டான் உட்பட முழு நிலத்தையும் குறிப்பிட்டு பலஸ்தீனமாக மாற்றினார். தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் குழந்தைகளுக்கு பெயர் வைப்பது போல் பிற நாடுகளுக்குப் நாமம் சூட்டுவது கிரேக்கர்களுக்கு ஒரு தேசிய பொழுதுபோக்கு. இவர்கள் இலங்கைக்கு வைத்த பெயர் தப்ராபேன் (Taprobane)

முதலாம் இரும்பு யுகத்தில் வந்த இன்னொரு பெயர் இஸ்ரேல். எபிரேய ஆகமம் எகிப்திலிருந்து அடிமையான யூதர்கள் ஜெகோவினால் விடுதலை ஆக்கப்பட்டவர்கள் என்று வர்ணிக்கிறது. யூதர்களின் எகிப்திய மீட்புச் சரித்திர உண்மை என்று ஏற்றுக்கொள்ள மகாபாரத விவரிக்கப்பட்டுள்ள குருக்ஷேத்திரப் போர் வரலாறில் நிகழ்ந்த சம்பவம் என்று நம்பும் மரபணுவுடன் பிறந்திருக்கவேண்டும். இன்றைய வரலாற்று ஆசிரியர்கள் இந்த ஆகம வரலாற்றை எற்றுக்கொள்வதில்லை. நாடோடி பழங்குடி­யினரான இவர்கள் கானானில் இருந்து எகிப்தியர்கள் வெளியேறியதன் பின் ஒருங்கிணைக்கப்பட்ட ஜனமாக யெகோவாமையமாகக் கொண்ட புதிய மத அடையாளத்துடன் ஒரு புதிய இராச்சியத்தையும் நிறுவினார்கள். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அவர்களின் மூதாதையினரான ஆபிரகாமுக்கு நிலம் வாக்குறுதியளிக்கப்பட்டதாக பெரும்பாலான யூதர்கள் நம்புகிறார்கள். அவர்கள் கானானை கைப்பற்றியதன் மூலம் நிலத்தை ஆக்கிரமித்தனர். இரண்டு ராஜ்­யங்களை ஒன்று வடக்கிலும் இன்னும் ஒன்று தெற்கிலும் உருவாக்கினார்கள். வடக்கு மாநிலம் கிமு 722 அசீரியர்களால் மற்றும் தெற்கில் 587 இல் பாபிலோனியர்களால் அழிக்கப்பட்டது.

விவிலியக் கதை இஸ்ரேல் இராச்சியத்தை ஒரு அரசியல் அமைப்பாக தாவீது ராசாவும் அவரது மகன் சாலொமோன் மாற்றினார்கள் என்று விவரிக்கிறது. இந்த வரலாறு தாவீது மற்றும் சாலொமோன் காலத்தை இஸ்ரேலின் உச்சக்கட்டமாகப் பின்னோக்கிப் பார்த்து, நடந்து போன காரியங்களை மகிமைப்படுத்தியது. பழைய ஏற்பாட்டுக் கதை இஸ்ரேலிய குடியேற்றத்தாருக்கு (settler colonialists) ஆதரவானதான ஆவணமாக, வரலாற்றாகப் பயன்படுத்தப்படுகிறது.

இஸ்ரேல் என்ற பெயர் இருபதாம் நூற்றாண்டில் ஒரு நவீன அரசியல் கட்டமைப்பு. இப்போது தற்போதைய இஸ்ரேலிய அரசாங்கத்தால் நில காலனித்துவத்திற்காக பயன்படுத்தப்படுகிறது. இது வேதாகமத்தினால் ஆதரிக்கப்பட்டு ஒரு பிரத்யேக இன மற்றும் மத அரசுக்கு அங்கீகாரம் தருகின்றது.

இதற்கு நேர்மாறாக, பலஸ்தீனம் என்ற பெயர் மட்டுமே "வரலாற்று ரீதியாக உள்ளடக்கிய தன்மையைக் கொண்டுள்ளது" என்று மீட்ரி ராஹேப் என்ற பலஸ்தீன விவிலிய அறிஞர் எழுதுகிறார். இந்த அர்த்தத்தில் பலஸ்தீனம் என்பது ஒரு அரசியல், மத அல்லது இன அமைப்பைக் குறிக்கவில்லை, மாறாக அதன் எல்லைக்குள் பலதரப்பட்ட அடையாளங்களையும் மக்களையும் உள்ளடக்கிய பல இன, பல-கலாச்சார மற்றும் பன்மடங்கு மண்டலத்தைக் குறிக்கிறது.பல நூற்றாண்டுகளாக, யூதர்கள், முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் பலஸ்தீன தேசத்தில் அருகருகே வாழ்ந்ததை ரஹேப் வாசகருக்கு நினைவூட்டுகிறார். (பார்க்க: Mitri Raheb, Decolonizing Palestine, 2023)

இஸ்ரவேல் தேசம் என்ற சொற்றொடர் யூதர்களின் ராஜாக்களான தாவீதும் அவருடைய மகன் சாலோமனும் இறந்த பின் எழுதப்பட்ட சாமுவேல் நூலில்தான் முதல்முதலாகக் காணப்படுகிறது. எபிரேய ஆகமத்தில் ஆறு முறை மட்டுமே இடம் பெறுகிறது. இதற்குக் காரணம் யூதர்களின் இறையியல்படி நிலம் கடவுளுக்குச் சொந்தமானது. நிலத்தின் தெய்வீக உரிமை மிகவும் வலுவானது, இஸ்ரவேலர்கள் பரதேசிகளாக கருதப்படுகிறார்கள். கர்த்தர் சொன்னாதாக வரும் இந்த வேதவாக்னகப் பாருங்கள்: “நிலம் என்னுடையது. நீங்களோ என்னைப் பொறுத்தவரையில் அந்நியரும் இரவற்குடிகளுமே”. (லேவியராகமம் 25.2)

வரலாறு வாகை சூடியவர்களால் எழுதப்படுகிறது என்பது வழக்கத்தில் நைந்துபோன ஒரு சொற்றொடர். வரலாறு மட்டுமல்ல வேதாகமங்களும் திருமறைகளும் ஆதிக்க, ஆண்டகை செய்கின்ற ஆண்வழி சமுதாயத்தினரால் எழுதப்பட்டவை. இன்றைய மத, இனவெறிக்கு சான்று கோள் காட்டும் நூல்களான மனுஸ்மிர்தி, மகாவம்சம் எல்லாம் ஆண்டகைகளால், ஆண்களால் எழுதப்பட்டவை. பொதுவகவே ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிராக எழுதப்பட்டவை.

ஜோர்டானைக் கடந்து கானானுக்குச் செல்லும் இஸ்ரேலியர்கள் நிலத்தின் மீது தெய்வீக உரிமை பெற்றவர்களாகக் காணப்படுகிறார்கள். கடவுளினால் தங்களுக்காகப் புனிதப்படுத்தப்பட்ட நாடு என்று கருதுகிறார்கள்.அவர்கள் நிலத்தைச் சேர்ந்தவர்களாகவும், முறையான வாரிசுகளாகவும் சித்தரிக்கப்படுகிறார்கள், அதே சமயம் பூர்வீகவாசிகள் பொல்லாதவர்களாகவும், சீரழிந்தவர்களாகவும் விவரிக்கப்படுகிறார்கள் (ஆதியாகமம் 9:35), அவர்கள் அந்த நிலத்திலிருந்து அகற்றப்படவேண்டும், இடம்பெயர்ந்து, அழிக்கப்பட வேண்டும் கர்த்தர் இஸ்ரவேலருக்குக் கொடுத்த அச்சம் தரும் முறட்டுக்குணமுடைய வாக்கியங்க்களை இங்கே தருகிறேன். “நீ சுதந்தரிக்கப்போகிற தேசத்தில் உன் தேவனாகிய கர்த்தர் உன்னைப் பிரவேசிக்கப்பண்ணி, உன்னைப்பார்க்கிலும் ஜனம் பெருத்த ஜாதிகளாகிய ஏத்தியர், கிர்காசியர், எமோரியர், கானானியர் பெரி­சியர், ஏவியர், எபூசியர் என்னும் ஏழு பலத்த ஜாதிகளை உனக்கு முன்பாகத் துரத்தி உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை உன்னிடத்தில் ஒப்புக்கொடுக்கும்போது, அவர்களை முறிய அடித்து, அவர்களைச் சங்காரம் பண்ணக்கடவாய்; அவர்களோடே உடன்படிக்கைபண்ணவும் அவர்களுக்கு இரங்கவும் வேண்டாம். அவர்களோடே சம்பந்தம் கலவாயாக. ” (உபாகமம் 7.1-3)யூதர்களுக்கு வாக்குறுதியளிக்கப்பட்ட நிலம், பலஸ்தீனர்களுக்கு காலனித்துவ நிலமாக தெரிகிறது.

இன்றைய யூதர்களுக்கும் வேதாகம யூதர்களுக்கும் என்ன தொடர்புண்டு. இந்த இணைப்பு சற்று மெல்லியது. ஆடுகள் மற்றும் குதிரைகள் உள்ளிட்ட விலங்குகளை தங்கள் தெய்வங்களுக்கு பலியிட்ட வேத கால ஆரியர்களும் இன்றைய ஆரியர்களும் ஒரே மாதிரியான ஆட்கள் என்று சொல்வது போன்றது. இன்றையவர்கள் அந்த பழைய காலத்தவர்களை மச்சி என்று சொந்தம் கொண்டவது கொஞ்சம் கஸ்டம். இதை நீடித்துப் பார்த்தால் ராஜபக்சே சகோதரர்கள் துட்ட கைமூனுவின் வம்சாவழியினர் என்று சொல்லக்கூடும்.

யூதர்களில் இரண்டு பிரிவுகள் உண்டு. அஷ்கெனாசி மற்றும் செபார்டிக் யூதர்கள் இவர்களின் வரலாறுகளை சிறுமைப்படுத்தாமல் எளிமைப்படுத்தப்பட்ட வடிவில் சொனால் அஷ்கெனாசிகள் மேற்கில் முக்கியமாக ஜெர்மனியில் வாழ்ந்தவர்கள். செபார்டிக் யூதர்களுடன் தொடர்புடைய முக்கிய நிலங்கள் ஸ்பெயின், வட ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஐரோப்பாவின் சில பகுதிகள். இன்று 80% யூதர்கள் அஷ்கெனாசிகள். இவர்கள் பழைய வேதகால வரலாற்று இஸ்ரேலியர்களிடமிருந்து வந்தவர்கள் அல்ல சந்ததிகளும் அல்ல. மாறாக இவர்களின் குல முதல்வர்கள் துருக்கிய மக்களான காசார்களாக (Khazar) இருக்ககூடும் என்கிறார் ஆர்தர் கொஸ்லர். (பார்க்க Arthur Koestler , The Thirteenth Tribe,1976 ). கிறிஸ்தவம், இஸ்லாம் என்ற இரண்டு பெரும் மதங்களிடையே மாட்டிக்கொண்ட காசர்கள் 8 ஆம் நூற்றாண்டில் யூத மதத்திற்கு மாறியிருக்கலாம். மற்றும் 12, 13 ஆம் நூற்றாண்டுகளில் காஸார் பேரரசு வீழ்ச்சியடைந்த போது மேற்கு நோக்கி கிழக்கு ஐரோப்பாவிற்கு இவர்கள் குடிபெயர்ந்ததார்கள் என்பது கோஸ்ட்லரின் அனுமாம். வேதகால 12 யூத கொத்திரங்களுடன் இவர்கள் நவீனகால பதின்மூன்றாவது கொத்திரம்.

19 ஆம் நூறாண்டில் உருவாகிய ஒரு சுதந்திர யூத அரசின் நாட்டம் கொண்ட யூத இனவாதிகளான சியோனிஸ்டுகளில் பெரும்பாலானவர்கள் (Zionists) ஐரோப்பாவிலிருந்து வந்தவர்கள். பலஸ்தீனர்கள் போல் செமிடிக்கள் அல்ல. இந்த செமிடியர்கள் அரேபியர்கள், யூதர்கள், அக்காடியர்கள் மற்றும் ஃபீனீசியர்கள் உட்பட மத்திய கிழக்கு மக்களுடன் தொடர்புடைய கலாச்சார இனக்குழு. இந்த சியோனிஸ்டுகள் அநேகமாக விவிலிய யூதர்களுடன் இரத்த பரம்பரையைப் பகிர்ந்து கொள்ளுகிறவர்கள் அல்ல. இந்தத் தொடர்பு நரேந்திர மோடியும் சந்திரகுப்த மவுரிய மன்னர்களின் இரத்தம் ஒன்றே என்று சொல்வது போன்றது.

இந்த ஐரோப்பிய சியோனிஸ்டுகளை விட செமிடிக் அரேபியர்களுக்குத்தான் நிலத்திற்கு அதிக உரிமை உண்டு, பலஸ்தீனிய பார்வையில் இந்த சியோனிஸ்டுகள் ஜரோப்பிய காலனித்துவவாதிகளாக கருதப்படுகிறார்கள்.

சியோனிசம் ஒரு பண்டைய கடந்த காலத்தின் மகிமைகளைக் கவனிக்கும் படி செய்கிறது. இனவாத, காலனிய வார்த்தைகளையும் சொற்றொடர்களையும் பேசும் எபிரேய ஆகமம் இஸ்ரேல் அரசின் மொழி­யியல் ஆதாரமாகவும் இலக்கிய முன்வடிவாகவும் (template) செயல்பட்டது.

இன்று இஸ்ரவேல் இராணுவம் பலஸ்தீன மக்களுக்கு செய்வது ஒரு கூட்டுத் தண்டனை. ஒரு எதிரியின் முழுச் சமூகமீதான வஞ்சத்தீர்வு எபிரேய வேதத்தில் இந்தத் தண்டனை பரவலாகக் காணப்படுகிறது, வேரூன்றியிருக்கிறது. பழிக்குப்பழி ஆழமாக பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. மூன்று உதாரணங்கள்:

பழைய ஏற்பாட்டில் உள்ள கூட்டுத் தண்டனையின் மிகவும் அறியப்பட்ட முன்னோடிநிகழ்வு பெரும் வெள்ளம் (ஆதியாகமம் 7:11-24): மனிதனின் அக்கிரமத்தையும் ஊழலையும் கண்டு கடவுள் கோபமடைந்து உலகத்தையே அழித்து விடுகிறார். (ஆதியாகமம் 6:5-8)

பழிவாங்கலுக்கு இன்னுமொரு எடுத்துக்காட்டு: இஸ்ரவேலர்களை அவர்களது அடிமைத்தனத்­திலிருந்து விடுவிக்குமாறு பார்வோனிடம் மோசே மன்றாடுகிறார், எகிப்திய அரசன் தன் மனதைக் கடினமாக்கிக்கொண்டு மறுத்துவிடுகிறார். இதனால் எகிப்து மீண்டும் மீண்டும் தண்டிக்கப்படுகிறது. பத்து உபாதைகளை அந்த நாட்டுமக்கள் அனுபவிக்க வேண்டியிருந்தது. “எடுக்கப்ப நடுராத்திரியிலே சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கும் பார்வோனுடைய தலைப்பிள்ளை முதல் காவல் கிடங்கிலிருக்கும் சிறைப்பட்டவனின் தலைப்பிள்ளை வரைக்கும், எகிப்து தேசத்தில் இருந்த முதற்பேறனைத்தையும் மிருகஜீவன்களின் தலையீற்றனைத்தையும் கர்த்தர் அழித்தார்” (யாத்திரகாமம்.12.29).

இன்றைய பலஸ்தீனர்களை எதிர்க்க உபயோகிக்கப்படும் மூன்றாவது வேதாமக பழிக்குப் பழி சான்று முதலாம் சாமுவேல் புத்தகத்திலிருந்து... தீர்க்கதரிசி சாமுவேல் ராஜாவான சவுலுக்குச் சொன்னது: “இப்போதும் நீ போய், அமலேக்கை முறியடித்து, அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சங்கரித்து, அவன்மேல் இரக்கம் வைக்காமல், புருஷரையும், ஸ்திரீகளையும், பிள்ளைகளையும், குழந்தைகளையும், மாடுகளையும், ஆடுகளையும், ஒட்டகங்களையும், கழுதைகளையும் கொன்றுபோடக்கடவாய் என்கிறார் என்று சொன்னான்.” (1 சாமுவேல் 15.3.) யார் இந்த அமலெக்கியர்கள்? எபிரேய வேதத்தில் அமலேக்கியர்கள் இஸ்ரேலின் பரம எதிரியாகக் கருதப்படுகிறார்கள். யாத்திராகமத்தில், எகிப்திலிருந்து தப்பித்தபோது இஸ்ரேலியர்களை இவர்கள் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இஸ்ரவேல் அமலேக்கியர்களை தோற்கடித்தாலும், அமலேக்கிய சந்ததியினர் மீது தெய்வீக சாபம் இடப்பட்டது. அமலேக்கிய தேசம் இப்போது இல்லை என்றாலும், யூத மக்களுக்கு எதிராக நடத்தப்படும் அனைத்து வகையான யூத எதிர்ப்பு நடவடிக்கைகளிலும் ஒரு வஞ்சகமான எதிரியின் நினைவாக இந்த மக்கள் வாழ்கிறார்கள். நெத்தன்யாகு சமீபத்திய செய்தியாளர் சந்திப்பில் காசாவை அழிப்பதற்காக இந்த முதலாம் சாமுவேல் தரும் விவிலிய ஆதிகார ஆணையை மூலம் நியாப்படுத்தினார். ஒளியின் மகன்களுக்கும் இருளின் குமாரர்களுக்கும் இடையே நடக்கும் சண்டை என்று வேத வசன ரீதியில் இந்தப் போரை போரை அவர் விவரித்தார்

பலரையும் இரட்சிப்புக்கு வழிகாட்டிய கிறிஸ்தவ வேதாகமம் எவ்வாறு தன்னை இரட்சித்து மீட்டுக்கொள்ள முடியும்? அதன் பக்கங்களில் உட்பொதிக்கப்பட்ட எதிர் கதைகள்தான் இந்தப் புனித நூலுக்கு நிவாரணம். அவற்றில் ஒன்று நாபோத்தின் திராட்சைத் தோட்டம்.

முதலாம் ராஜாக்கள் புத்தகத்தில் இப்படி ஒரு கதை உண்டு. என்னுடைய சுருக்க வடிவாக்கத்தில் தருகிறேன். நாபோத் என்ற ஒரு சாதாரண ஆளிடம் ஒரு திராட்சைத் தோட்டம் இருந்தது. அது இஸ்ரவேலின் அரசனான ஆகாபின் அரண்மனைக்கு அருகில் இருந்தது. ஆகாப் நாபோத்திடம் திராட்சைத் தோட்டத்தை விற்க முடியுமா என்று கேட்டார். நிலம் பரம்பரை பரம்பரைச் சொத்து என்பதால் நாபோத் மறுத்துவிட்டார். இதனால் அரசர் மனம் தளர்ந்து போனார். அவரின் மனைவி யேசபேல் திராட்சைத் தோட்டத்தை பெற ஒரு சூழ்ச்சி செய்தார். யேசபேலுக்கு முன்னால் தமிழ் தொலைக்காட்சித் தொடர் வில்லிகள் ஆவின் பால் அருந்தும் அப்பாவிக் குழந்தைகள் போல் தெரிவார்கள். நாட்டின் பெரியவர்களுக்கும் பிரபுக்களுக்கும் ஆகாபின் பெயரில் ஒரு கடிதம் எழுதி பிரச்சினையை யேசபேல் தீர்க்கமுயல்கிறாள்.. அந்தக் கடிதத்தில், நாபோத் கடவுளையும் ராஜாவையும் சபித்ததாகப் பொய்யாக குற்றம் சாட்ட இரண்டு சாட்சிகளை முன்வைக்க நாட்டின் பெருமகான்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அத்துடன் நகருக்கு வெளியே நாபோத்தை கல்லெறிந்து கொல்ல வேண்டும். அப்படியே நாபோத் கொலைசெய்யப்பட்டான். இதை அறிந்த கடவுள் தீர்கதரிசி எலியாவை ஒரு செய்தியுடன் ஆகாப்புக்கு அனுப்புகிறார். வேதாகமத்தை மேற்கோள் காட்டுகிற பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு இது அறுதல் தரும் வசனம் அல்ல. “நீ அவனைப் பார்த்து, நீ கொலை செய்து, கொள்ளையடித்திருக்கிறாய் இல்லையா? நாய்கள் நாபோத்தின் இரத்தத்தை நக்கின ஸ்தலத்திலே உன்னுடைய இரத்தத்தையும் நாய்கள் நக்கும்” என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.

நாபோத்தின் கதை இன்று பலஸ்தீனியர்களின் கதையாகும், அவர்களின் நிலங்கள் மேற்குக் கரையில் யூதக் காலனிகளை விரிவுபடுத்துவதற்காக அபகரிக்கப்படுகின்றன. இதே அதிகாரத்தில் இப்படி ஒரு வசனம் உண்டு. ஆகாபைப்போல் உலகில் கெட்டவன் எவனும் இருந்ததில்லை. ஆகாப்பை நெதன்யாகுவுடன் பொருத்திப்பார்த்தால் அது ஒரு தற்செயலான நிகழ்வுப்பொருத்தம் என்று எடுத்துக்கொள்ளுங்கள். எபிரேயக் கடவுள் வஞ்சம் தீர்க்கும் கடவுள். அவரே சொல்லுகிறார்: பிரியமானவர்களே, பழிவாங்குதல் எனக்குரியது. கடவுளாகத் தன்னை நினைத்துக்கொளும் டோலண்ட் டிரம்ப் இதைதான் சொல்லுகிறார்: நான் உங்கள் பழிவாங்கல். எதற்கும் விவிலியத்தை மேற்கொள் காட்டும் நெதன்யாகு கவனமாக இருப்பது நல்லது.

நன்றி: காக்கைச் சிறகினிலே. இது வெறுமனே மறு பதிப்பல்ல. திருத்தங்களும், புதிய தகவல்களும் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

- சச்சிதானந்தன் சுகிர்தராஜா

(கட்டுரையாளர், எழுத்தாளர், இலங்கைத் தமிழரான இவர் இங்கிலாந்தின் பர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்று அங்கேயே பேராசிரியராகப் பணியாற்றியவர். இவரது நூல்கள் ஆக்ஸ்போர்ட், கேம்பிரிட்ஜ், ஹார்டுவேர்டு பல்கலைக் கழகங்களின் வெளியீடுகளாக வந்துள்ளன. தமிழ், ஆங்கிலம், ஜெர்மன், ஸ்பானிஷ், இத்தாலியன், கொரியன், மலேயன், சீன மொழிகளிலும் இவரது நூல்கள் வெளிவந்துள்ளன.)