சர்வதேச அளவில் முதல் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு பண்டைய எகிப்தில் கி.மு 570 ஆம் ஆண்டு அஹ்மோஸ் II என்ற மன்னரின் ஆட்சிக்காலத்தில் நடத்தப்பட்டது. பண்டைய இந்தியாவில் முதன் முறையாக மௌரியப் பேரரசு ஆட்சியின் போது மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
தற்போதைய இந்தியாவில் முதன்முறையாக 1872 ஆம் ஆண்டு நாடு தழுவிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த கணக்கெடுப்பில் ஜாதி, மதம், தொழில், வயது போன்றவை தனித்தனியாக ஆவணப் படுத்தப்பட்டன. இந்தியாவில் நடத்தப்பட்ட முதல் ஜாதி வாரி கணக்கெடுப்பும் இதுவே ஆகும். அதனைத் தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு வரை ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது.
1931ம் ஆண்டில் நடத்தப்பட்ட ஆறாவது மக்கள்தொகை கணக்கெடுப்பில் கல்வியறிவு, வாழ்வாதாரம் போன்ற தகவல்களும் திரட்டப்பட்டன. இந்தியாவில் இறுதியாக வெளியிடப்பட்ட ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பும் இதுதான். அதன் பிறகு நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்புகளில் ஜாதிவாரி விவரங்கள் வெளியிடப்படவில்லை.
தமிழ்நாட்டில் முதன்முறையாக நீதிக்கட்சி, பார்ப்பனர் அல்லாதவர்களுக்கு வழங்கிய 44% இடஒதுக்கீடு, அண்ணல் அம்பேத்கரின் கோரிக்கையான பட்டியல் சமூகத்தினருக்குத் தனித் தொகுதிகள் போன்றவற்றுக்கு மட்டுமின்றி இன்று வரை இடஒதுக்கீடு வழங்கப்படுவதற்கு அடிப்படையாக அமைந்தது.
இவ்வாறு இடஒதுக்கீட்டின் மூலம் தங்கள் ஆதிக்கத்திற்கு ஆபத்து வந்து விட்டதை உணர்ந்தப் பார்ப்பனர்கள், தொடர்ந்து ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு முட்டுக்கட்டை போட்டனர். எவ்விதத் தரவுகளும் இன்றி உயர்ஜாதி பார்ப்பனர்களுக்கு 10% இட ஒதுக்கீடு பா.ஜ.க அரசால் வழங்கப்பட்டது. இந்தச் சமூக அநீதியை தடுத்து நிறுத்திட ஜாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் என்ற குரல் நாடெங்கும் ஒலிக்கத் தொடங்கியது.
ஒன்றிய அரசு மற்றும் உயர்ஜாதி பார்ப்பனர்களின் சூழ்ச்சியை முறியடித்து பீகாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பை முதல்வர் நிதிஷ்குமார் மற்றும் துணை முதல்வர் தேஜஸ்வி வெற்றிகரமாக நடத்தி முடித்தனர். அதன் விவரங்கள் அண்ணல் காந்தியடிகள் பிறந்தநாளன்று வெளியிடப்பட்டது. இதில் பீகாரின் மொத்த மக்கள் தொகை 13 கோடியே 7 லட்சத்து 25 ஆயிரத்து 310 என்றும், ஜாதி ரீதியாக மிகவும் பிற்படுத்தப்பட்டோர் - 36.01%, பிற்படுத்தப்பட்டோர் - 27.12%, பட்டியல் ஜாதி - 19.65%, இடஒதுக்கீடு இல்லாத உயர் ஜாதியினர் - 15.52%, பழங்குடியினர் - 1.68% என்றும், மத ரீதியாக இந்துக்கள் - 82%, முஸ்லிம்கள் - 17.7%, கிறிஸ்தவர் - 0.05%, பௌத்தர்கள் - 0.08%, சீக்கியர்கள் - 0.01%, எந்த மதத்தையும் பின்பற்றாதோர் - 0.0016% என்றும் கூறப்பட்டுள்ளது.
பீகாரைத் தொடர்ந்து ஒடிசா, கர்நாடகம் போன்ற மாநிலங்கள் ஜாதிவாரி கணக்கெடுப்பு விவரங்களை விரைவில் வெளியிட உள்ள நிலையில் நாடு தழுவிய ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென்ற முழக்கத்தை காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி முன்வைத்துள்ளார்.
2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் அயோத்தியில் ராமர் கோவிலைத் திறந்து பிற்படுத்தப்பட்ட மக்களை பகடைக்காயாகப் பயன்படுத்தி மீண்டும் வெற்றி பெற நினைக்கும் பா.ஜ.கவை வீழ்த்த “ஜாதிவாரி கணக்கெடுப்பு” நடத்த வலியுறுத்துவதே சரியான யுக்தியாகும். அப்போது தான் தமிழ்நாட்டில் திராவிட இயக்கங்கள் ஏற்படுத்திய அரசியல் விழிப்புணர்ச்சியை இந்தியா முழுவதுமுள்ள பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியில் ஏற்படுத்த முடியும்.
கமண்டல அரசியல் வீழட்டும்!
மண்டல் அரசியல் வெல்லட்டும்!!
- வழக்கறிஞர் இராம.வைரமுத்து