மத்தியில் ஆளும் கட்சியான பாஜகவிடமிருந்தும், பாஜகவை ஆளும் ஆர்எஸ்எஸ் தலைவரிடமிருந்தும் இந்த ஒரே வாரத்தில் இரண்டு செய்திகள் வந்துள்ளன.
கடந்த 18 ஆம் தேதி, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், புதுதில்லியில் நடைபெற்ற 'ஞான உத்சவ்' நிகழ்ச்சியில் நிறைவுரையாற்றும்போது, சமூக நீதியைச் சாய்த்துவிடும் நோக்கில் ஒரு கருத்தைச் சொல்லியுள்ளார்.
"தாழ்த்தப்பட்ட பழங்குடிகள் பிற்படுத்தப்பட்டோர், ஆகியவர்களுக்குத் தற்போது இந்திய அரசமைப்புச் சட்டம் அளித்துள்ள உரிமைப்படி, வழங்கப்பட்டு வரும் இடஒதுக்கீட்டை நீக்கிவிட, இடஒதுக்கீடு வேண்டும் என்பவர்களும், வேண்டாம், கூடாது என்பவர்களும் சுமுகமான சூழ்நிலையில் அமர்ந்து விவாதித்து அதுபற்றி ஒரு நல்ல முடிவுக்கு வர வேண்டும்."
என்கிறார் மோகன் பகவத். உள்நோக்கம் தெளிவாகப் புரிகிறது. இடஒதுக்கீடு வேண்டுமா, வேண்டாமா என்பது குறித்துப் பேச அவர் எல்லோரையும் அழைக்கவில்லை. அதனை நீக்கிட என்ன வழி என்று ஆராய்வதற்கு மட்டுமே அழைப்பு விடுக்கிறார்.
இன்று மோகன் பகவத் பேசியுள்ளதை, நாளை மோடி பேசுவார். ஆகமொத்தம், இடஒதுக்கீட்டை நீக்குவதே அவர்களின் அடுத்த திட்டம் என்பது புரிகிறது. அதனையும் செய்துவிட்டால், அவர்களின் நிகழ்ச்சி நிரல் பெருமளவிற்கு நிறைவு பெற்றுவிடும்.
ஏற்கனவே இடஒதுக்கீட்டு உரிமையை (சலுகை அன்று) இழந்து கொண்டுள்ளோம். அரசுப் பணிகளில் மட்டுமே இடஒதுக்கீடு உள்ளது. அது மொத்தமுள்ள வேலைவாய்ப்பில் 15 விழுக்காட்டிற்கும் குறைவே. மீதமுள்ள 85% வேலைவாய்ப்புகள் தனியார் வசமே உள்ளன. அங்கு இடஒதுக்கீடு இல்லை. அரசுப் பணிகளிலும், மாதம் 65000 ரூபாய் ஊதியம் பெறும் 'ஏழைகளுக்கு' 10% இடஒதுக்கீடு வழங்கப்பட்டு விட்டது. கொஞ்ச நஞ்சம் இருக்கின்ற இடஒதுக்கீட்டையும் முற்றிலுமாக ஒழித்துவிட்டால், வெறும் 3 விழுக்காடு மட்டுமே உள்ள அவர்கள், 90% விழுக்காடு அரசு வேலைகளைக் கைப்பற்றிக் கொள்வார்கள். ஏவல் வேலை, துப்புரவுப் பணி போன்ற 10% விழுக்காடு வேலைகள் நமக்குத்தான், அவர்கள் அதில் நம்முடன் போட்டிக்கு வரமாட்டார்கள்.
இது ஒருபுறமிருக்க, நேற்று (23.08.19) மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடு கடுமையான நிதி நெருக்கடியில் இருப்பதை ஏற்றுக்கொண்டுள்ளார். வேலையில்லாத் திண்டாட்டம் என்றுமில்லாத அளவுக்குக் கூடி வருவதையும், வேறு வழியின்றி ஒப்புக் கொண்டுள்ளார்.
ஆம், கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத பொருளாதார நெருக்கடியை, நாடு இன்று சந்தித்து வருகின்றது. அதே போல லட்சக்கணக்கான ஊழியர்கள் தங்கள் வேலைகளை இழக்கக்கூடிய நிலையும் கண்கூடாகத் தெரிகிறது.
எல்லாவற்றிற்கும் முந்தைய காங்கிரஸ் ஆட்சிதான் காரணம் என்கின்றனர். அப்படியானால், கடந்த 5 ஆண்டுகளில் பாஜக அரசு என்னதான் செய்தது?
மோடி ஆட்சி கொண்டுவந்த பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரி போன்றவைகளே இன்றைய நிலைக்குக் காரணம் என்கின்றனர் பொருளியல் வல்லுநர்கள்.
செய்ய வேண்டியவைகளைச் செய்யாமலும்,செய்ய வேண்டாத மதவெறிச் செயல்களைச் செய்தும், நாட்டை அழிவுப்பாதைக்கு அழைத்துச் சென்று கொண்டுள்ளது இன்றைய மத்திய அரசு.
வழக்கம்போல் இந்தியாவை வழிநடத்த வேண்டும் தமிழகம்!