நாட்டின் தலைநகரம் கொஞ்சம் கொஞ்சமாக மத வெறுப்பின் நெருப்பில் எரிந்து கொண்டு இருக்கின்றது. கும்பல் வன்முறையாளர்களும், காவல் துறையும் ஒருங்கிணைப்போடு மனிதப் படுகொலைகளை அரங்கேற்றி வருகின்றனர். இதுவரை 20க்கும் மேற்பட்ட மனித உயிர்கள் துடிதுடிக்க கொன்று சாய்க்கப் பட்டிருக்கின்றன. 200க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்து இருக்கின்றார்கள். இறந்தவர்களில் 15க்கும் மேற்பட்டவர்கள் இஸ்லாமியர்கள் என்பதில் இருந்தும், காயம்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் இஸ்லாமியர்கள் என்பதில் இருந்தும் இந்தக் கலவரத்திற்கான நோக்கத்தை நாம் புரிந்து கொள்ளலாம்.
கலவரம் திட்டமிட்டு தோற்றுவிக்கப்பட்டு இருக்கின்றது. கலவரத்தில் ஈடுபடும் கும்பல்கள் குறிப்பாக சங் பரிவாரத்தைச் சேர்ந்த குண்டர்கள் முன்தயாரிப்போடு நன்கு பயிற்சி பெற்ற தாக்குதலை மேற்கொண்டு வருகின்றார்கள். அவர்கள் முஸ்லிம்களின் கடைகளையும், வழிபாட்டுத் தலங்களையும் குறி வைத்துத் தாக்குதல் தொடுக்கின்றனர். பார்ப்பனிய இந்து சமூகத்தின் கூட்டு மனசாட்சியை திருப்திபடுத்த மட்டும் இந்தக் கலவரம் நடைபெறவில்லை. மேலாக, இந்தியாவுக்கு வருகை தந்துள்ள உலக நாட்டாமையை மகிழ்விக்கவும்தான் இந்தக் கலவரம் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது. இஸ்லாமிய வெறுப்பில் ஊறிப்போன அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆன்மாவை குளிர்விக்க மோடி-அமித்ஷா கும்பலால் இதைவிட வேறு என்ன செய்துவிட முடியும்?
ஜனவரி 10- ஆம் தேதி குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப் பட்டதில் இருந்தே அதற்கு எதிரான போராட்டமும் தொடங்கி விட்டன. டெல்லியில் ஷாஹீன் பாக் பகுதியில் கடந்த 70 நாட்களுக்கும் மேலாக அமைதியான முறையில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. பிஜேபி ஆளும் மாநிலங்களில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடுபவர்கள் கொடூரமாக அடக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். டெல்லியில் கலவரம் நடக்கும் பகுதிகள் அனைத்துமே பிஜேபி வெற்றி பெற்ற தொகுதிகள் என்கின்றார்கள். வடகிழக்கு டெல்லியில் உள்ள ஜாப்ராபாத், மஜுபூர், சாந்த்பாக், குரேஜ்காஸ், பாஜன்புரா ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட கலவரம் தற்போது டெல்லியின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவிக் கொண்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை, வடகிழக்கு டெல்லியில் உள்ள ஜாப்ராபாத் பகுதியில் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கணக்கான மக்கள், அங்குள்ள மெட்ரோ நிலையத்துக்கு அருகில் கூடி போராட்டம் நடத்தினர். இதைக் கண்டித்த கபில் மிஸ்ரா, 'ஷாகின் பாக் போல டெல்லியின் மற்றொரு சாலையும் மறைக்கப்பட்டு விட்டது. இப்படியே போனால், பொதுமக்கள் சாலையில் செல்ல முடியாது’ என தன் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். அடுத்த சில நிமிடங்களில், 'ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, அதே ஜாப்ராபாத் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இதில், அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்’ என ட்விட்டரிலேயே கபில் மிஸ்ரா அழைப்பு விடுத்திருந்தார். (இந்த கபில் மிஸ்ரா கடந்த முறை காரவால் நகர் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் சார்பாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பிறகு பாஜகவில் இணைந்த இவர், நடந்து முடிந்த டெல்லித் தேர்தலில் மாடல் டவுன் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் ஆவார்.)
இதை அடுத்து அங்கு திட்டமிட்டு சங்கிகள் சி.ஏ.ஏ ஆதரவாளர்கள் என்ற போர்வையில் களத்தில் இறக்கி விடப்பட்டு முஸ்லிகள் மீது தாக்குதல் தொடுத்து இருக்கின்றார்கள். கலவரத்தில் ஈடுபட்ட பலர் மூவர்ணக் கொடிகளை ஏந்தியிருந்தனர் என்றும், ஒன்றிரண்டு காவிக் கொடிகள் இருந்தன என்றும், அவர்கள் 'ஜெய் ஸ்ரீராம்', 'பாரத் மாதாவுக்கு ஜே', 'வந்தே மாதரம்', ’அவர்கள் தேசத்தின் துரோகிகள்; அவர்களைச் சுடுங்கள்’ என்று கோஷங்கள் எழுப்பியபடி சென்றனர் என்றும் கலவரத்தை நேரில் ஆய்வு செய்த பிபிசி செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இப்படி கலவரம் செய்ய குவிக்கப்பட்ட தொழில்முறை கும்பல் வன்முறையாளர்கள் மத்தியில் பேசிய மிஸ்ரா "என் ஆதரவாளர்கள் அமெரிக்க அதிபரின் வருகைக்காக மட்டுமே அமைதி காக்கிறார்கள்; இல்லை என்றால், டெல்லி போலீஸ் உட்பட யாருடைய பேச்சையும் நாங்கள் கேட்க மாட்டோம். சி.ஏ.ஏ எதிர்ப்பு ஆர்ப்பாட்டக் காரர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட அனைத்து சாலைகளையும் நாங்கள் விடுவிப்போம்” என்று பேசி இருக்கின்றார்.
ஆர்.எஸ்.எஸ் பாஜக தலைமைக்குத் தெரியாமல் கபில் மிஸ்ரா போன்றவர்களால் நிச்சயம் இப்படி வெளிப்படையாக பேசி இருக்க முடியாது. இவை அனைத்தும் பாஜக கும்பலால் திட்டமிட்டு நடத்தப்பட்டுக் கொண்டிருகின்றது. ஏற்கெனவே குஜராத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்களின் உயிரைக் கொன்று அவர்களின் வாழ்வாதாரத்தை சூறையாடிய அயோக்கியர்கள், இப்போது டெல்லிலும் அதே போல இனப்படுகொலையை நடத்தி முடிக்க களத்தில் இறக்கி விடப்பட்டு இருக்கின்றார்கள்.
கலவரத்தை தூண்டி விடுவதும், மறுபக்கம் கலவரத்துக்கும் தனக்கும் சம்மந்தமே இல்லை என்பது போல நாடகமாடுவதும் ஆர்.எஸ்.எஸ் பிஜேபி கும்பலின் வழக்கமாகும். தற்போது, டெல்லியில் கலவரத்தைத் தூண்டிவிட்டு உலகமே பார்த்து காறித் துப்பும் அளவுக்கு வன்முறை வெறியாட்டத்தை நிகழ்த்திவிட்டு கொலைவெறியன் மிஸ்ரா சொல்கின்றான், "எதற்கும் வன்முறை தீர்வாகாது, மக்கள் வன்முறையில் ஈடுபடுவதை நிறுத்த வேண்டும். சி.ஏ.ஏ ஆதரவாளர்களும், எதிர்ப்பாளர்களும் முதலில் அமைதி காக்க வேண்டும். டெல்லியில் சகோதரத்துவத்துக்கு எந்தக் களங்கமும் வந்துவிடக் கூடாது” என்று.
டெல்லியில் நடக்கும் கலவரமானது நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடும் ஒட்டுமொத்த இஸ்லாமிய மக்களுக்கும், ஜனநாயக சக்திகளுக்கும் விடப்பட்ட எச்சரிக்கை ஆகும். தங்களால் என்ன செய்ய முடியும் என்பதை அவர்கள் அப்பட்டமாக ஊடகங்களின் முன்னாலேயே காட்டுகின்றார்கள். இந்த நாட்டில் இஸ்லாமியர்கள் எப்படி வாழ வேண்டும் என்பதை அவர்கள் தங்களின் கலவரங்களின் மூலம் உணர்த்துகின்றார்கள். ஆம் ஆத்மிக்கு பெரும்பான்மையாக வாக்களித்து தேர்ந்தெடுத்த மக்களை இன்று அந்த அரசு அம்போவென விட்டிருக்கின்றது. கலவரத்துக்கு எதிராக எந்தவித உருப்படியான செயல்பாட்டையும் ஆம் ஆத்மியிடம் இதுவரை காண முடியவில்லை. கெஜ்ரிவால் போன்ற முதலாளித்துவ அடிவருடிகள் எப்போதும் பாசிசத்துடன் கைகோர்த்து விடுவார்கள் என்பதைத்தான் இது காட்டுகின்றது.
முப்படைகளையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஓர் அரசு இந்தக் கலவரத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என்பதை நாம் எப்படி பார்க்க வேண்டும் என்றால், இன்று நாட்டில் முப்படைகளும் கும்பல் வன்முறையாளர்களுக்கு ஆதரவாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது, அவை பாசிசத்தை காவல் காக்கும் பெரும் பணியை ஏற்றிருக்கின்றது என்றுதான். கண்டு கொள்ளாமல் விடுதல் என்பதைத்தான் இப்போது டெல்லியில் காவல் துறையும், அரசு உறுப்புகளும் கடைப்பிடித்து வருகின்றன. முடிந்தவரை கொன்று குவிப்போம், அதற்குப் பின்னால் ஜனநாயகத்தின் விழுமியங்களைப் பற்றி வாய்கிழியப் பேசி மக்களை நம்ப வைப்போம் என்பதுதான் கலவரத்தை நடத்தும் பாசிஸ்ட்டுகளும், அவர்களை அனுமதிக்கும் அரசும் வழக்கமாக செய்து வருவது.
நடக்கும் கலவரத்தை ஒரு பார்வையாளராய் நின்று பார்ப்பது எவ்வளவு பெரிய வலி என்பதை நாட்டில் இருக்கும் அனைத்து ஜனநாயக சக்திகளும் உணர்ந்திருக்கின்றார்கள். ஆனால் ஆர்.எஸ்.எஸ். போன்ற சித்தாந்த ரீதியாக பயிற்றுவிக்கப்பட்ட ரவுடிக் கும்பலிடம் இருந்து நாம் எப்படி இஸ்லாமிய மக்களையும், ஜனநாயக சக்திகளையும் காப்பாற்றப் போகின்றோம்?. இந்தியப் புரட்சி பற்றி பேசும் மாவோயிஸ்டுகள் காடுகளைத் தாண்டி நடக்கும் எந்த ஒரு பிரச்சினைக்காகவும் குரல் கொடுப்பது போல் தெரியவில்லை. சமவெளிப் பகுதியில் பாசிசத்தை நேருக்கு நேர் எதிர்கொள்ள வேண்டும் என்றால், நாமும் பயிற்சி அளிக்கப்பட்ட ஒரு படையை கட்டி அமைப்பது மிக முக்கியமானதாகும். இந்தியாவில் இருக்கும் அனைத்து முற்போக்கு சக்திகளும் ஒரணியில் இணைந்தாலே இதைச் சாத்தியப்படுத்திவிட முடியும். நாம் தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் பாசிசத்தின் எல்லை விரிவாகிக் கொண்டே போகின்றது என்பதை உணர வேண்டும். இன்று டெல்லியில் நடக்கும் கலவரங்கள் நாளை நாடு முழுவதும் நடக்காது என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை.
- செ.கார்கி