தனிமனித சுதந்திரம், ஜனநாயகம், மனித உரிமை எனக்குரல் எழுப்பி சிந்தனை உலகிற்குள் கால் பதித்த நவீனத்துவம் டேகார்ட்ஸ், கான்ட், ஹெகல் போன்ற தத்துவ அறிஞர்களால் பத்தொன்பதாம் நூற்றாண்டில் விஸ்வரூபம் பெற்றது. இத்தத்துவத்தின் நோக்கம் அறியாமை, மூடநம்பிக்கை, அடிமைத்தனம், பகுத்தறிவற்ற நிலை ஆகியவற்றிலிருந்து விடுதலை பெற்றுத்தர வேண்டும் என்பதாக தொடங்கிற்று. அமெரிக்க புரட்சி (1775-1783), பிரஞ்சு புரட்சி (1789-1799) மற்றும் தொழில் புரட்சி (1870-1913) போன்றவற்றின் மூலம் மன்னராட்சி, அரசியல் ஏகாதிபத்தியம், நிலபிரபுத்துவம் ஆகியவை தூக்கி எறியப்பட்டு குடிமக்களாட்சி நிலைநாட்டப்பட்டு இது பகுத்தறிவின் காலம் என்ற அறைக்கூவல் எழுப்பப்பட்டது.

அறிவியல், பகுத்தறிவு, தர்க்கம் என்பனவற்றைத் தாரகமந்திரமாகக் கொண்டு தனிமனித ஆளுமை, சுதந்திரம், பேராண்மை ஆகியவற்றை கொண்டாடுவோம் எனப் பறைசாற்றிய நவீனத்துவம், உலகப்போர், இனப்படுகொலை, நிறவெறி, மரணமுகாம் இயற்கைப் பேரழிவு ஆகியவற்றால் பெரும் வீழ்ச்சி அடைந்தது. அறிவியல் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்த அறிவொளி காலம் / இயக்கம் பகுத்தறிவியலை வளர்த்தது. ஆனால் மனித வாழ்வியல் சிக்கல்களை, உணர்வுகளை மறுதலித்ததன் விளைவாக அதே காலக்கட்டத்திலேயே பல எதிர்ப்புகளையும் சந்திக்க ஆரம்பித்தது.

நிச்சயமாக நவீனத்துவத்தின் பங்களிப்பை எவராலும் மறுக்க இயலாது. மனித சமூகத்தின் அறிவியல் வளர்ச்சிக்கு அது அசுர வேகத்தில் தன் ஆற்றலை கொண்டு செலுத்தியது. ஆனால் அறிவியலின் மீதும், பகுத்தறிவின் மீதும் அது வைத்த அதீத நம்பிக்கை மனித இனத்தின் அழிவிற்கு இட்டுச் சென்றது. அனைத்தும் நுகர்வு பொருளாக கருதப்பட்டது. இது ஆண்டான் அடிமை என்ற நிலைக்கே மறுபடியும் இட்டுச் சென்றது. உலகப் பிரச்சினைகள் அனைத்திற்கும் அறிவியலும் தொழில் நுட்பமும் தான் தீர்வு தரமுடியும் என்ற இயந்திரத்தனமான நம்பிக்கையால் நவீனத்துவம் மனித சாரத்தை இழந்தது.

தொழில் நுட்ப வாழ்க்கை மற்றும் பொருளியலின் மேல் நவீனயுகம் அதீத நம்பிக்கை கொண்டதின் விளைவாக ஏற்பட்ட வாழ்வியல் பிரச்சினைகளை அழகியல் மூலம் தாண்டிச் செல்லலாம் என பண்பாட்டு தளத்தில் நின்று கொண்டு சில நவீனத்துவ சிந்தனையாளர்கள் சிந்திக்கத் தொடங்கினர். இது தத்துவ உலகில் ஹிஸ்ரல், ஹைடக்கர், சார்த், நீட்சே போன்றவர்களால் நிகழ்வியல், இருத்தலியல் என்ற போக்கிலும், கலை இலக்கியத் தளத்தின் நவீன ஓவியங்கள் என்ற விதத்திலும் வெடித்து வந்தது.

பின்னர் விமர்சன கோட்பாடு, அமைப்பியல், புதிய மார்க்ஸியம் என வேறொரு கோணத்தில் நவீனத்துவத்திற்குள் நின்றே அதன் உள் நெருக்கடிகளையும், முரண்களையும் விமர்சிக்கவும், விவாதிக்கவும் தொடங்கின பல சிந்தினைக்குழுக்கள்.

இதன் பின்னர் 1968ஆம் ஆண்டு ஐரோப்பா, அமெரிக்கா வரலாற்றையே புரட்டிப்போட்ட மே மாதம் வந்தது. சார்பான், பெர்க்ஸி, பெர்லின், டோக்கியோ, பாங்காக், மெக்சிகோ நகரங்களின் மாணவர்கள் தெருக்களில் கூட்டங் கூட்டமாக திரண்டு வந்தனர். ஹெர்பர்ட் மார்க்கியுஸ் என்னும் புதிய இடதுசாரி விமர்சன கோட்பாட்டுச் சிந்தனையாளரின் தலைமையில் முதலாளித்துவம், காலனி ஆதிக்கம், ஏகாதிபத்தியம், இறுக்கமான கம்யூனிசம் போன்ற அனைத்து அதிகாரமையங்களையும் எதிர்த்து மாபெரும் போராட்டம் நடத்தப்பட்டது. இதன் போக்கில் கல்வி முறை, அரசு அமைப்பு, இராணுவ முறை இவற்றையும் தீவிரமாய் மாணவ எழுச்சி இயக்கம் எதிர்த்தது. இப்போராட்டம் வெற்றிப்பெறும் சூழலில் இருந்த போதும் சற்றும் எதிர்பாராத விதத்தில் தோல்வி அடைந்தது. விரக்தியடைந்த சிந்தனையாளர்களும் மாணவர்களும் கம்யூனிச கோடப்பாட்டின் மேல் கொண்டிருந்த நம்பிக்கையையும் பிடிப்பையும் இழந்தனர்.

அனைத்து சித்தாந்தங்களையும் விமர்சித்த இவர்கள் கம்யூனிசமும் ஒரு பெருங்கதையாடலே என எண்ணத்தலைப்பட்டனர். இதன் மூலம் முன்னூறு வருடங்களுக்கு மேலாக நவீனயுகத்தையும் இருபதாம் நூற்றாண்டில் நவீனத்துவம் எனும் கலை இலக்கிய இயக்கத்தையும் பெரிதும் பாராட்டி வந்த மேற்கத்திய தத்துவம் கட்டி எழுப்பி வைத்திருந்த ஒற்றைப் பண்பாட்டு மேலாதிக்க சிந்தனைகள் அனைத்தும் முற்றிலுமாக கேள்விக்குள்ளாக்கப்பட்டன.

மையம் தகர்க்கப்பட்ட வேறுபட்ட வாழ்க்கை முறைகளை கொண்டாடுவதன் மூலம் நவீன கலாச்சாரத்தைத் துண்டாடுவோம் என்ற அறைகூவல் எழுப்பப்பட்டது. உயர்ந்த கலாச்சாரம் மற்றும் தாழ்ந்த கலாச்சாரம் போன்ற இரட்டை எதிர்நிலைகளை கட்டுடைப்பது தொடங்கிற்று. அப்பாலை தத்துவங்களும் அனுபூதவியல் கோட்பாடுகளும் சமூகத்தில் விதைத்துள்ள ஆதிக்க மனோபாவத்தை, பாகுபாட்டை சமூகம் மற்றும் அரசியல் தளங்களில் கட்டவிழ்த்துக் காட்டுவோம் எனக் குரல் எழுப்பி கால்பதித்தது பின் நவீனத்துவம்.

இத்தகைய பின்நவீனத்துவ சிந்தனை பேராசிரியர் முத்துமோகன் அவர்களின் கட்டுரைகளில் எவ்வாறு விவாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை இக்கட்டுரை விவாதிக்க முனைகிறது. அவர் பின்நவீனம் குறித்து எழுதிய கட்டுரைகளான, பின்னை நவீனத்துவமும் மார்க்சியமும், பின்னை நவீனத்துவம் மேலும் சில குறிப்புகள், பின்னை நவீனத்துவத்திற்குப் பிறகு மார்க்ஸ் புன்னகைக்கிறார் போன்றவை ஆய்விற்கான பொருளாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றன.

பின் நவீனத்துவம் பன்முகப் பார்வையில் :

எப்பொழுதெல்லாம் பின்நவீனத்துவம் குறித்த சிந்தனைப் பகிர்வு நிகழ்கிறதோ அப்பொழுதெல்லாம் ஆரம்பத்திலும், ஏன் இறுதியிலும் எழும் கேள்வி பின் நவீனத்துவம் என்றால் என்ன என்பதாகும். பின் நவீனத்துவம் எனப்படுவது நவீனத்துவத்தின் தொடர்ச்சியா? நவீனத்துவத்தை மறுப்பதா? நவீனத்துவத்தின் நீட்சியா? நவீனத்துவம் ஏற்படுத்திய தாக்கமா அல்லது நவீனத்துவத்தால் விளைந்த ஒரு சிந்தனையா? அல்லது பின் நவீனத்துவத்தை நவீனத்துவத்தின் மறுபிறப்பு என்றே சொல்லலாமா? நவீனத்துவத்திற்கு அடுத்த நிலையா? அல்லது நவீனத்துவத்தின் இறப்பா? என்பவைப் போன்ற கேள்விகள் எழும். இச்சூழலில் பேராசிரியர் முத்துமோகனின் ஆய்வு நமக்கு பன்முகப்பட்ட புரிதலுக்கு வழிகோலுகிறது. நவீனத்துவத்தோடு பின்நவீனத்துவத்தை பொருத்தி பார்க்கும் இவர், பின்னை நவீனத்துவம் மேலும் சில குறிப்புகள் என்ற கட்டுரையில் நவீனத்துவத்தோடு தொடர்ச்சியற்றும், தொடர்ச்சி கொண்டும் பின்னை நவீனத்தும் தோன்றியது எனக்குறிப்பிட்டுள்ளார்.

நவீனத்துவத்தின் உன்னத தனிமனிதத்தை பின்னை நவீனத்துவர்கள் ஏற்கவில்லை என எடுத்துரைக்கும் முத்துமோகன் அதற்கான முக்கிய காரணங்களையும் முன்வைக்கிறார். மொழி, பண்பாடு ஆகியவற்றை முதன்மைப்படுத்தி அதிலும் சாதாரண மக்களின் கலைகளையும், இலக்கியங்களையும் தங்களின் தளமாக தேர்ந்தெடுத்தமையே பிரதான காரணம் என்கிறார்.

நவீனத்துவத்தின் உன்னத தனிமனிதத்திற்கு மாற்றாக பின்நவீனத்தவர்கள் தற்சார்புத் தனிமனிதத்தை முன்னிலைப்படுத்தினர் எனப்பேசும் பேராசிரியர் பின்னதையும் மார்க்ஸிய விமர்சனத்திற்குள்ளாக்குகிறார். பின் நவீனத்துவம் கூறும் தற்சார்புத் தனிமனிதமும் முதலாளியப் பண்பு கொண்டதே என்கிறார் முத்துமோகன்.

தற்சார்புத் தனிமனிதம் என்றால் என்ன என்பதை இங்கு முதலில் காண்போம். பின்நவீனத்துவம் முன்வைக்கும் தற்சார்புத் தனி மனிதம் என்னும் கருத்தியல் பன்மியத்தன்மையைக் கொண்டாடும் சிந்தனையாகும். இதில் ஆசிரியரின் மரணமும், வாசகரின் மறுபிறப்பும் அடங்கியுள்ளது. அதாவது பன்மிய வாசிப்பின் சிறப்பை இது எடுத்துரைக்கிறது. ஓர் உரைக்கு பல்வேறு அர்தங்களை அதன் வாசகர்கள் தருகின்றனர். அழகியல் என்ற தளத்திலும் இச்சிந்தனை சிதறடிக்கப்பட்டவைகளை, தொடர்ச்சியற்றவைகளை, துண்டாடப்பட்ட நிலைகளைக் கொண்டாடுகிறது. இவை அனைத்தையும் ஒப்புக் கொள்ளும் முத்துமோகன் இக்கருத்தியல், “தனிமனிதம் எனும் வர்க்க சமூகத்தின் பூர்வீக எல்லையை அது எப்பொழுதுமே தாண்டியது கிடையாது. பின்னை நவீனத்துவத்தின் இந்நிலைப்பாடு அரசியல் தளத்தில் அதிக சனநாயகத் தன்மை கொண்டதாக இருக்கலாம் ஆனால் மார்க்ஸியருக்கு இது போதாது'' என்கிறார். “பன்மைத் தன்மை, நெகிழ்வு நிலை, திறந்த ஜனநாயகம் என பறைசாற்றும் பின்நவீனத்துவம் அறைகூவல்கள் இல்லாத பிரதேசம்'' என்கிறார்.

இவை சாத்தியப்படுவதற்கான வாய்ப்புகள் அறவே இல்லை. அது வெறும் ஒரு லட்சிய பார்வை என்பதாக பின்நவீனத்துவத்தை விமர்சிக்கும் பேராசிரியர் அதன் சமூக அரசியல் பங்களிப்புகளையும் எடுத்துரைக்கிறார். “மொழி, இனம், நிறம், சாதி, பாலினம், சமயம் ஆகிய அடையாளங்களின் வழி நிலவும் வேறுபாடுகளையும் பின்னை நவீனத்துவம் பிரச்சினைக்கு உள்ளாக்கியது... விளிம்பு நிலைகளைப் படைப்பாற்றல் கொண்டவையாக மாற்றுவது என்பது ஓர் அரசியல் செயல்பாடு.

சமூக அடித்தளங்களில் தீவிர அசைவுகளை ஏற்படுத்தும் நோக்கம் கொண்டது இது. மார்க்சியரின் வர்க்க அணுகுமுறையைச் செழுமைப்படுத்தும் கூறுகள் இங்கு உண்டு. வர்க்க அரசியலும் அடையாள அரசியல்களும் இவ்விடத்தில் ஒன்று பட முடியும்'' என்கிறார்.

பேச்சு Vs எழுத்து விளையாட்டு :

பேச்சு Vs எழுதுதல் என்ற இரட்டை எதிர்நிலை மேற்கத்திய தத்துவ மரபில் மிக முக்கியமான சிக்கலாகும். சாக்ரடீஸ் காலம் தொட்டே இச்சிக்கல் விவாதிக்கப்பட்டு வந்திருக்கிறது. பேச்சு / எழுதுதல் எனப்படுவது யாதெனில்; பேச்சின் மூலம் கருத்து பரிமாறிக் கொள்வது மட்டுமே நேரடியான வழி. அதன் மூலம் மட்டுமே சொற்களுக்கான பொருள் சரியாகப் பெற முடியும். எனவே பேச்சு உயர்ந்தது. இதை பேச்சுக் குறியீடு மையம் என டெரிடா அழைக்கிறார்.

இக்கருத்தியலின் படி பேச்சு என்பது தான் அர்த்தத்தை வெளிப்படுத்தும் உண்மையான குறிப்பான். எழுதுதல் என்பது பேச்சின் பிரதிநிதி மட்டுமே. சிந்தனை பேச்சிற்கு பிறப்பு தருகிறது; பின்னர் பேச்சுதான் எழுத்து மொழியை உருவாக்குகிறது எனவும் வாதிடுகிறது. எனவே கருத்தியல் அல்லது கருத்து எனும் குறிப்பீட்டிலிருந்து முதலில் உருவாவது பேச்சு எனும் குறிப்பான் தான். பேச்சிலிருந்து பின்னர் உருவாவது தான் எழுத்து. எனவே அது பேச்சின் குறிப்பீடு, அதாவது குறிப்பீட்டின் குறிப்பீடு.

கருத்தியலின் உள்வட்டத்தில் இருக்கும் தகுதி பெற்றது பேச்சு மட்டுமே. எழுத்து என்பதோ வெளி வட்டத்தில் தான் இருக்க முடியும் என்ற நிலையில் உள்ளது.

மேலும் பேச்சின் உயர்ந்த நிலையை பறைசாற்ற பேச்சு குறியீடு மையம் மேலும் பல விஷயங்களை கூறுகிறது. பேச்சாளருக்கும் கேட்பவருக்கும் நேரடி தொடர்பு ஏற்படுத்துவது பேச்சு மட்டுமே எனவே அது உள்ளது என்ற நிலையைக் குறிக்கிறது. ஆனால் எழுத்து என்பதை இல்லாததை குறிக்கிறது. ஏனெனில் எழுத்திற்கு வாசிப்பாளர் நேரடியாக இருப்பதில்லை. எப்பொழுது கேட்பவர் நேரில் இல்லையோ அப்பொழுது மட்டுமே எழுத்துத் தேவைப்படுகிறது. எழுத்தாளரும் வாசிப்பாளரும் நேருக்கு நேர் இடம் பெற்றிருக்கும் பொழுது எழுத வேண்டிய அவசியமே இல்லை. அத்தருணத்தில் சிந்தனையை பேச்சின் மூலம் / மாற்று மட்டுமே என்கிறது பேச்சு குறியீடு மையக் கோட்பாடு.

 இது மிகத் தவறான கூற்று என்கிறார் டெரிடா. பேச்சு, எழுத்து ஆகிய இரண்டையும் மொழியின் அடிப்படையில் தீவிரமாக ஆராய்ந்து, அதில் கட்டமைக்கப்பட்டிருக்கும் தவறான கோட்பாட்டை தன் கட்டுடைத்தலுக்கு உள்ளாக்கும் டெரிடா “எழுத்து என்பது ஒலியின் மாற்று வடிவமாக மட்டுமே இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை என்கிறார். எழுத்து என்பது பேச்சு, ஒலி போன்றவற்றுடன் எந்த தொடர்பும் இல்லாமலும் இருக்கலாம். அதாவது எழுத்து வரைகுறியீடாக ஓவிய வடிவிலும் இருக்கலாம். எழுதுவது என்பதற்கு பல பரிமாணங்கள் உண்டு. அப்பரிமாணங்கள் ஒலிக்குக் கீழ்படிந்து இருக்க வேண்டிய அவசியமில்லை. அதற்காக எழுத்து என்பது தான் உயர்ந்தது என்றும் கூறவில்லை. குறிப்பானிற்கும் குறிப்பீட்டிற்கும் இடையிலான வித்தியாசத்தின் மூலமே சொற்களுக்கு அர்த்தம் கிடைக்கிறது. ஆகையால் உண்மைக்கு மிக அருகாமையில் இருப்பது ஒலி மட்டுமே என்னும் கூற்றும் அனுபூதவியல் தத்துவங்களால் கட்டமைக்கப்பட்ட ஒன்றேயாகும்'' என தன் கூர்மையான தத்துவ அணுகுமுறையால் எடுத்துரைக்கிறார் டெரிடா.

இத்தத்துவச் சிக்கலை தன் கட்டுரையில் முத்துமோகன் வேறொரு கோணத்தில் அணுகுகிறார். பேச்சு என்பதை உரையாடல் என்ற தளத்தில் விவாதிக்கிறார். பேச்சு எழுதுதல் என்ற பிரச்சினையை கட்டுடைக்கும் டெரிடாவை வாசிக்கும் பேராசிரியர் தன் புரிதல்களை முதலில் நமக்கு முன்வைக்கிறார். பேச்சின் மூலம் பொருண்மை உடனடியாக கிட்டும். பேச்சு தான் தகவல் பரிமாற்றத்திற்கு நம்பகத்தன்மையை வழங்குகிறது. பிளேட்டோ உரையாடலை உண்மை தேடுவதற்கான ஊடகமாக தேர்ந்தெடுத்ததற்குக் காரணம் உரையாடலில் பொருண்மைக் குழப்பத்திற்கு இடமில்லை என்பது போன்ற மேற்கத்திய தத்துவ நிலைகளை விளக்குகிறார். இதன் பின்னர் உரையாடல் என்ற விடயத்திற்குள் தன் விவாதங்களை கொண்டு செலுத்துகிறார். “சமமற்றவற்றை உரையாடல் ஏற்காது. அவற்றை அது முரண்பாடென ஒதுக்கி விடும்... இன்னொருவருடன் உரையாடுவதில் சமப்படுத்துதல் பிறழ்ந்து விடும் என்பதால் தத்துவவாதிகள் அகவயப்பட்ட பேச்சைத் தமது தேடல் முறைமையாகப் பயன்படுத்துகின்றனர். சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட சமப்படுத்தலின் மூலம் அகவயப் பேச்சு நிகழ்கிறது''. இங்கு மேற்கத்திய தத்துவ சிக்கல்களிலிருந்து இந்திய தத்துவ சிக்கல்களுக்கு நகர்ந்து செல்கிறார் முத்துமோகன்.

இதனைத் தொடர்ந்து “ஒற்றைப் பொருண்மை இல்லாத சொற்களை உரையாடல் ஏற்காது, தத்துவமும் முரண்பாடுகளை ஏற்காது, வேறுபாடு, விலகல், முரண்பாடு ஆகியவை உண்மைக்கு விரோதமானவை என்று தத்துவம் கூறுகிறது. முரண்பாட்டைத் தவிர்த்தல், முரண்பாட்டை தீமை எனக் கொள்ளுதல், முரண்பாட்டை அபிப்பிராயம் எனக் கருதுதல் ஆகியவற்றை அனுபூதவியல் தத்துவம் செய்து வந்திருக்கிறது'' என அனுபூதவியலை ஆழமாக விமர்சனத்திற்குள்ளாக்குகிறார் முத்துமோகன். இருப்பினும் ஒரு பின் நவீனத்துவ ஆய்வாளராக எழும் கேள்வி டெரிடா தத்துவ பிரச்சினைகளை முரண்பாடுகள் என்னும் கருத்தியலின் அடிப்படையில் ஆராய்ந்ததை காட்டிலும் வேறுபாடுகள் குறித்த சிக்கல்கள் என்ற தளத்தில் அதிகமாக ஆராய்ந்திருப்பதாக தோன்றுகிறது.

ஏன் பேச்சிற்கும் எழுத்திற்கும் இடையிலான சிக்கலை விடுவிக்க அவர் பயன்படுத்தும் சொல்லாடல் differ’a’nce. வேறுபாடு மற்றும் தள்ளிப்போடு என்னும் இரு பொருளையும் கொண்ட சொல் இது. பிரஞ்சு அமைப்பியல் சிந்தனையாளரான சசூரின் தாக்கத்தால் டெரிடா differ’a’nce எனும் Non concept (கருத்தியல் அல்லாதது) உருவாக்கினார்.

ஒரு சொல் அதற்கான அர்த்தத்தை ஒலியிலும் வடிவத்திலும் அச்சொல் பிற சொற்களிலிருந்து வேறுபடும் விதத்தை பொறுத்தே பெறுகிறது. மாடு என்ற சொல் அர்த்தம் பெறுவது அது ஆடு, நாடு, காடு போன்ற சொற்களின் ஒலி,எழுத்து வடிவிலிருந்து வேறுபடும் விதத்தை பொருத்து தான். அதே போன்று

 

       1      உ     3

              ண

              வு

இங்கு வடிவத்தில் உள்ள வேறுபாடு சொல்லிற்கான பொருளைத் தருகிறது. Differ’a’nce எனக் கூறும் பொழுது அங்கு வேறுபாடுகள் தாம் அர்தத்தைத் தருகின்றன என்ற பொருளுடன் சொல்லிற்கான அர்த்தமானது எப்பொழுதுமே தள்ளிப் போடப்படுகிறது என்னும் பொருளும் அதே சொல்லில் அடங்கியுள்ளது என டெரிடா குறிப்பிடுகிறார். முத்துமோகன் அவர்களும் இதை அழகாக விளக்குகிறார். “எந்த சொல்லுமே அதன் பொருண்மையை உடனடியாக, நேரடியாக, முடிந்த வடிவில் தராது. ஒரு சொல் இன்னொரு சொல்லை, அது மூன்றாவது சொல்லை எனக் குறிப்பான்களின் தொடர்ச்சியாக பொருண்மைக்கும் இடையில் தப்பித்துக் கொள்ளும் உறவு, வழுக்கிவிடும் உறவு உள்ளது.'' கட்டுடைத்தல் தத்துவத்தின் பலம் வாய்ந்த அதே நேரம் மிக நெகிழ்வான இக்கருத்தியல் அல்லாத குறி ஆதிக்கம் செலுத்தும் அனைத்துக் கருத்தியல்களையும் புரட்டிப் போடும் கருவியாகும். Differ’a’nce எனும் மொழியின் சிக்கலுக்குள் சிக்காத சொல்லாடலை ஆணாதிக்க மையம், மேட்டுக்குடி கலாச்சார மையம், ஆன்மா உடலை விட உயர்ந்தது என்னும் மையம் போன்ற மேலாதிக்க மையங்களை கட்டுடைக்க டெரிடா மிக நேர்த்தியாகக் கையாண்டார். டெரிடாவின் இச்செயல்பாட்டை வடிவம் என்கிறார் லியதார்த். பொதுமைப்படுத்தும் கொள்கைகளை அவை ஒட்டுமொத்தப்படுத்தும் என்கிறார் அவர். சமூகத்தில் நிலவும், பன்மீய அடையாளங்களை அங்கீகரிக்க மறுத்து ஒற்றுமைப்படுத்தும் போக்கு பொதுமைக் கொள்கைகளில் உண்டு என்கிறார் லியதார்த். பொதுமைப்படுத்துதல் அல்லது ஒட்டுமொத்தமாக்குதலின் போது ஓர் ஒற்றை மையம் உருவாகுகிறது எனச் சுட்டிக் காட்டுகிறார் முத்துமோகன். இவ்வாறு ஒற்றை மையம் எழுப்பப்படும் பொழுது பல சமூகக் குழுக்களின் அடையாளங்கள் அங்கு விளிம்பிற்கு தள்ளப்படுகிறது. அதில் மையமாகக் கருதப்படும் விடயம் மட்டும் உண்மை என்றும், உயர்ந்தது என்றும் பறைசாற்றப்பட்டு பிற சமூக குழுக்கள் தமது அடையாளங்களை அந்த ஒற்றை மையம் நோக்கி தகவமைத்துக் கொள்ளுமாறு நிர்ப்பந்திக்கப்படுகின்றன. ஒரே பொதுவிதிக்குள் சகலமும் கொண்டு வரப்படுகின்றன.

லியதார்தின் தனித்துவம் பெற்ற சொல்லாடலான “வட்டார தருக்கவியல்'' முத்துமோகன் வாசிப்பில் முக்கிய இடம் பெறுகிறது. “குறிப்பிட்ட ஒரு சமூகத்தில் வழக்கத்திலிருக்கும் எல்லாச் சொல்லாடல்களுக்கும் ஒரே பொது விதிகள் கிடையாது. ஒவ்வொரு சொல்லாடல் வகைமைக்கும் அதற்கே உரிய வாசிப்பு விதிகள் அமைந்திருக்கும்'' என்கிறார் லியதார்த், எனக் கோடிட்டுக் காட்டுகிறார் முத்துமோகன். இருக்கருத்தியலை விளக்குகையில் பேராசிரியர் உலக அளவில் இச்சொல்லாடலுக்கான முக்கியத்துவத்தை தொட்டுக் காட்டுகிறார். குறிப்பாக “உலக சூழலில் மூன்றாம் உலக நாடுகளின் சொல்லாடல்களுக்கு நியாயம் வழங்குவதையும் இது குறிக்கலாம். இந்தியச் சூழல்களில் விவசாயிகள், சிறுபான்மையினர், தலித்துகள், நாட்டார், பெண்கள், தேசிய இனங்கள் ஆகியோரது சொல்லாடல்களை இது குறிக்கலாம்'' என தேசியம்மீதும், சர்வதேசியம்மீதும் லியதார்த் முன்வைக்கும் விமர்சனங்களை பல்வேறு தளங்களுக்கு பொருத்திப் பார்கிறார் பேராசிரியர்.

பூக்கோவின் அறிவும் அதிகாரமும் பற்றி விவாதிக்கையில் முத்துமோகன் மார்க்ஸிய அறிவு தளத்திலிருந்து அறிவுக்கும் அதிகாரத்திற்கும் இடையிலான சிக்கல்களை விளக்குகிறார். அதிகார மையங்களை கட்டமைப்பதற்கும், சமூக அமைப்பில் ஏற்றத்தாழ்வுகளைக் கட்டி எழுப்புவதற்கும் அறிவு என்பது எத்தகைய பெரிய பங்கு வகிக்கிறது என விவாதிக்கும் ஃபூக்கோவின் சிந்தனையை மார்க்ஸிய பார்வையிலிருந்து நமக்குத் தெள்ளத்தெளிவாக எடுத்துரைக்கும் முத்துமோகன், “அறிவு சில கருத்துகளுக்குச் சமூக மரியாதையையும் உரிமையையும் பெற்றுத் தருகிறது. இன்னும் சில கருத்துக்களுக்கு மரியாதையின்மையையும் உரிமை இழப்பையும் பெற்றுத் தருகிறது. அறிவு முரண்பாட்டைக் கொல்லும். அதிகார எதிர்ப்பை, வேறுபாட்டைக் கொல்லும். அறிவிற்கான சமூக மரியாதை அடக்கு முறைக்கும், அதிகாரத்திற்கும் கிடைக்கும் சமூக ஒப்புதலாகும்'' என்கிறார்.

பூக்கோவின் பின்னை நவீனத்துவ சிந்தனை மீது மார்க்ஸிய விவாதங்களை கொண்டு செலுத்தும் பேராசிரியர் மார்க்சிய பார்வையில் அதிகாரம் என்பது சுரண்டலமைப்பின் ஒரு நிறுவனமாக கருதப்படும் பொழுது ஃபூக்கோவின் பார்வையில் குடும்பம், கல்வி நிறுவனம், சமயம், பிற சமூகக் கலாச்சார நிறுவனங்கள் அனைத்திலுமே அதிகாரம் செயல்படுத்துவதாக கருதப்படுகிறது என்கிறார், ஃபூக்கோவின் சிந்தனையை மேலும் பலப்படுத்த அவை அதிகார வர்க்க எதிர்ப்பியங்கள் எனும் ஒரு புதுவகைச் சமூக இயக்க வடிவத்தை உருவாக்குகின்றன என்கிறார்.

இதில் சுவாரஸ்யமான பகுதி எதுவெனில் ஃபூக்கோவின் அறிவிற்கும் அதிகாரத்திற்குமான உறவு பற்றிய விளக்கத்தை முத்துமோகன் ஐரோப்பிய அறிவு உற்பத்தி மற்றும் இந்திய அறிவு உற்பத்தி ஆகியவற்றின் சில பிரத்தியோகப் பண்புகளுடன் ஒப்பிடுவதாகும். இந்திய தத்துவம் பொதுவாக மனிதம் நோக்கியது என்றும் ஐரோப்பிய தத்துவம் வெளி உலகம் நோக்கியது என்றும் ஒரு கருத்து உண்டு. இந்த வேறுபாட்டை ஃபூக்கோவின் வழி நின்று விவாதிக்கும் போது “ஐரோப்பாவின் அறிவு உற்பத்தி வெளி உலகப் பொருள்களின் மீது ஆதிக்கம் செலுத்துவது. பிற நாடுகளை, மக்களை காலனிகளாக்குவது என்ற திசைவழி கொண்டதாகிறது. இந்திய தத்துவ அறிவு உற்பத்தி பெருமளவில் சொந்த மனிதர்களையே வருணசாதி அமைப்பின் கீழ் கொண்டு வருவதை நோக்கமாக கொண்டது என்றாகிறது'' என முத்துமோகன் புரையோடிப் போயிருக்கும் சமூக அநீதிகளின் முகத்திரையைக் கிழித்து காண்பிக்கின்றார்.

டெரிடாவை பற்றிய பல வி­யங்களை இக்கட்டுரை முன்பே முன்வைத்திருந்த போதிலும். இப்பகுதியில் முத்துமோகன் டெரிடா குறித்து பேசியிருக்கும் இன்னும் பிற வி­யங்களை காண்போம்.

பின்னை நவீனத்துவமும் மார்க்சியமும் என்ற கட்டுரையில் முத்துமோகன், “மார்க்சியர்களை வருத்தும் மற்றொருகோட்பாடு டெரிடாவின் கட்டுடைத்தல் என்ற கருத்தாக்கமாகும்'' என டெரிடாவை பற்றி எழுதத்தொடங்குகிறார். இப்பகுதியில் முத்துமோகன் டெரிடா இருத்தலியல் தத்துவாதியான ஹெய்டெகரின் அழித்தல் என்ற சொல்லிலிருந்து கட்டவிழ்த்தல் (De-construction) என்ற சொல்லாடலை எவ்வாறு கடைந்தெடுத்தார் என்பதில் தொடங்கி மேற்கத்திய அனுபூதவியல் மரபை எவ்வாறு கட்டுடைத்தார் என்பது வரை சுருக்கமாக அதே சமயம் ஆழமாக விவாதித்துள்ளார்.

ஆன்மா / உடல் / புனிதம் / தீட்டு, இறைவன் / உலகம் போன்ற இரட்டை எதிர்நிலை கோட்பாடுகளை தன் கருத்தாக்கமல்லாத (non concept) சொல்லாடல்களால் எவ்வாறு தகர்க்கிறார். கட்டுடைத்தலை டெரிடா ஒரு தீவிர அரசியல் செயல்பாடு என்று மதிப்பிடுகிறார் அவர் சிந்தனை; விளிம்பின் சிக்கல்களை நோக்கியதாக, மற்றமையின் ஆளுமையை தூக்கிப்பிடிப்பதாக இருக்கிறது என்பதையும், அதே நேரத்தில் கட்டுடைத்தல் வெறுமேனே பொறுப்பற்ற, அர்த்தமற்ற குறிம விளையாட்டாக விளங்கிக் கொள்பவர்களை டெரிடா தானே எச்சரித்துள்ளார், என்பதையும் எடுத்துரைக்கிறார் முத்துமோகன். இவை அனைத்திற்கும் மேலாக கட்டுடைத்தலையும் கட்டுடையுங்கள் என்று கூட டெரிடா அறைக்கூவல் விடுகிறார் என்பதையும் ஓரிரு பக்கங்களிலேயே சிறப்பாக விளக்குகிறார் பேராசிரியர்.

டெரிடாவின் சிந்தனைகளை ஆராயும் அப்பகுதியை, “கட்டுடையுங்கள், கட்டுடைத் தலையும் கட்டுடையுங்கள் என டெரிடா அறைகூவல் விடுகிறார். மிதமான அர்த்தத்தில், உருவாகும் ஒவ்வொரு புது அமைப்பும் அதற்குரிய சுய விமர்சனத்தை அதனுள்ளேயே கொண்டிருக்க வேண்டும் என்பதை அது குறிக்கலாம், ஆயின், அதன் தீவிர வடிவத்தில் பொருள் முதல்வாதப் பிடிப்பு இல்லாத அதீத இயங்கியலாக அது ஆகிவிடலாம்'' என முடித்துள்ளார். முத்துமோகனின் இக்கூற்று பொருள் முதல் வாதி என்னும் நிலைப்பாட்டை எடுத்துக் கொண்டமையால் உருவாக்கியிருக்குமோ எனத் தோன்றுகிறது.

டெரிடாவை பொருத்தவரை கட்டுடைத்தல் என்பது கோட்பாடோ, கருத்தாக்கமோ, வழிமுறையோ, கருத்தியலோ ஏன் ஓர் தத்துவம் கூட கிடையாது. அவர் தன் நேர்காணலில் இதை நேரடியாகவே கூறியுள்ளார். “கட்டுடைத்தல் என்ற ஒன்று இருக்குமானால் அது ஒருகட்டுடைத்தல் அல்ல. அது பன்மை நிலை மற்றும் கூட்டு நிலையாகும். கட்டுடைத்தலை தத்துவம் என்றும் கூறுவதற்கில்லை, நான் எப்பொழுதுமே என்னால் தத்துவர்த்தமாக எதையும் கூற முடியும் என எண்ணியதில்லை'' என்கிறார் டெரிடா.

டெரிடாவிற்கு தத்துவம் என்பதே சிக்கலான தளம் தான். அதில் உயர்வு / தாழ்வு, மையம் / விளிம்பு, அதிகாரம், ஆதிக்கம் போன்றவை என்றுமே இருந்து வந்துள்ளது. ஏனெனில் தத்துவம் மொழியியலுடன் தொடர்புடையது. மொழியியலின் ஊடுருவலுக்கு பின்னர் தத்துவம் என்றுமே சார்பற்று இருந்ததில்லை எனவே நான், தத்துவத்திற்கு வெளியே ஒர் அடி எடுத்து வைக்க முனைந்துள்ளேன். அதுதான் இந்த கட்டுடைத்தல் என்கிறார் டெரிடா. தத்துவக் கோட்பாடுகளுக்குள் இக்கட்டுடைத்தல் ஒளிந்து மறைந்து இருக்கவில்லை. ஏன்.. தத்துவத்தை கடந்த நிலை என்று கூட இதைச் சொல்லக் கூடாது. கடந்த நிலை என்ற சொல்லை பயன்படுத்தும் போதே மீண்டும் அனுபூதவியல் என்னும் சூழலுக்குள் அது கட்டுடைத்தலையும் இழுத்து செல்லும்.

உண்மையில் கட்டுடைத்தல் என்ற ஒன்று தன்னத்தனியே வெட்ட வெளியில் சஞ்சரித்து கொண்டிருக்கும் சித்தாந்தம் அல்ல. எங்கெல்லாம் அதிகார மையம் ஆதிக்கம் செலுத்துகிறதோ அங்கு தான், அத்தருணத்தில் தான் கட்டுடைத்தல் துளிர்க்கிறது எனலாம் அது ஒரு விதமான (heterogenous) இன்னும் இதை தெளிவாக புரிந்து கொள்ள பௌத்த தத்துவ சிந்தனையாளர் நாகார்ஜினாவின் சூனியவாதம் உதவும். சூனியம் என்ற சொல்லாடலை நாகார்ஜீனா அனைத்து பொருள்களும், கோட்பாடுகளும் சாரமற்றவை என்பதை உணர்த்த பயன்படுத்தினார். எந்த ஒரு விடயத்திற்கும் அதற்கென்ற பிரத்யேக பண்பு, விசேŒகுணம் என்ற ஒன்று உள்ளது என்பது போன்ற கருத்தியல்களை இச்சூனியவாதம் மறுக்கிறது, தகர்க்கிறது. பொருளுக்கான அர்த்தம் அது பிற பொருள்களுடன் தொடர்பு கொள்ளும் விதத்தில் தான் எழுகிறது என்கிறது நாகார்ஜினாவின் மாத்யமிக்க சிந்தனை. ஒவ்வொன்றும் மற்றமையை சார்ந்து இருக்கிறது என்கிறது இவர் கூற்று.

அனைத்தும் சூனியம் எனக் குறிப்பிடும் பொழுது அனைத்தும் என்பது சூனியவாதத்தையும் உள்ளடக்கியதேயாகும் என்கிறார் நாகார்ஜீனா. அவருடைய மூலமாத்யாமிக்ககாரிக்கா என்ற அடிப்படை நூல் சூனியவாதமும் சூனியம்தான் என்ற நேரடி கூற்றை முன்வைக்கிறது. சூனியம் என்ற ஒன்று இல்லாத போது எப்படி சூனிய வாதம் என்று அதை அழைக்கின்றீர்கள் என்ற வினாவிற்கு நாகார்ஜீனா தரும் பதில். “சூனியமிதி நாவக்தவ்யமா சூனியமிதி வா பவேத், உபயம் நோபயம் சேத்தி பிரஞ்பித்யர்த்தம் கத்யதே'' என்பதாகும். அதாவது, இதை சூனியம் என்றோ அல்லது சூனியம் அற்றது என்றோ எவரும் கூறக்கூடாது. அது சூனியமும் அல்ல சூனியம் அல்லாததும் அல்ல. இவை இரண்டும் அல்லாத வேறெதுவும் அல்ல. அதை சூனியம் என அழைப்பது தகவல் பரிமாற்றத்திற்காக மட்டுமே.

இதே போன்று தான் நம் டெரிடாவும் கட்டுடைத்தலை கையாளுகிறார். கட்டுடைத்தலின் கட்டுடைத்தல் எனக் கூறுவதன் மூலம் கட்டுடைத்தலின் அறம் வெளிப்படுகிறது. அதிகாரம் எனப்படுவது ஒரு கட்டமைப்பு என கட்டுடைத்தல் கருதுவதால் எந்த ஒரு தத்துவ கருத்தாக்கமும் அதிகாரம் செலுத்துமேயானால் அதுவும் கட்டுடைக்கப்பட வேண்டும் எனக் கருதுகிறது. கட்டுடைத்தல் சிந்தனைக்கும் இது பொருந்தும். எனவே கட்டுடைத்தல் எனும் செயல்முறை டெரிடாவால் எப்பொழுதுமே ஒட்டுமொத்தப்படுத்தப்படவில்லை.

பின்நவீனத்துவம், மார்க்சியம் ஒப்பீடு:

முத்துமோகன் அவர்கள் பின் நவீனம் குறித்த பெரும்பாலான கட்டுரைகளை மார்க்சியப் பின்னணியில் அணுகுகிறார். அவர் கட்டுரைகளை அமைத்திருக்கும் வடிவம் இயங்கியல் தத்துவமுறையை நினைவுப்படுத்துகின்றது. பின் நவீனத்துவ சிந்தனையை மார்க்சிய தத்துவத்துடன் ஒப்பிடுவதற்கான சாத்தியம் உள்ளதா எனக் கேள்வி எழுப்புபவர்களுக்கு “திடப்பட்டுப் போயிருப்பவை அனைத்தும் காற்றில் உருகிவிடும்'' என்ற முதலாளியச் சமூகம் பற்றி மார்க்ஸ் கூறிய கருத்து, பின்னை நவீனத்துவத்திற்குத் தாராளமாகவே பொருந்துகிறது என்றும் உடனடி விளக்கம் தருகிறார்.

மேலும் ஒப்பீட்டை பலபடுத்த பண்பாட்டு மார்க்சியத்தை முன்னிறுத்திய ஆந்தோணியோ கிராம்சி பாலமாக அமைவார் என்கிறார். அதிகாரத்தின் சமூக, கலாச்சார வடிவங்கள் பற்றியது ஃபூக்கோவின் சிந்தனை, கலாச்சார வாழ்வில் செயலாகும். அடக்கு முறையின் நுட்பமான வடிவங்களை பற்றியது ஆந்தோணியோ கிராம்சியின் சித்தாந்தம் என எடுத்துரைக்கிறார்.

மார்க்சியத்திற்கும் பின்நவீனத்துவத்திற்குமான ஒற்றுமைகளை முன்வைக்கும் அதே தருணத்தில் அவை இரண்டும் வெவ்வேறு வழித்தோன்றல்கள் என்பதையும் நேரடியாக கூறுகிறார் முத்துமோகன். பின்னை நவீனத்துவம் என்பது மார்க்சியமல்லாத மேற்கத்திய விமர்சன மரபின் ஒரு போக்கு என்றே தன் புரிதலை வாசகர்களுக்கு நொடியில் புலப்படுத்துகிறார்.

“இதுவரையில் தத்துவவாதிகள் உலகுக்குப் பல்வேறு விதமாக விளக்கம் தந்து வந்துள்ளார்கள்; உண்மையில் உலகை எவ்வாறு மாற்றுவது என்பதே நமது பிரச்சினை என்று மார்க்ஸ் கூறியதும் சொல் விமர்சனத்திலிருந்து செயல் விமர்சனத்திற்கு செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தவே. இதுவே மார்க்ஸியர்களின் நிலைப்பாடாக இருந்தது'' என எடுத்துரைக்கும் பேராசிரியர் பின்நவீனத்துவத்தோடு இக்கருத்தை இன்று பொருத்திப் பார்க்கிறார்.

“பின் நவீனம் மொழிக்கும், சொற்களுக்கும் மிகுந்த கவனம் செலுத்துகிறது. ஒரு சொல் எத்தகைய அர்த்தம் தருகிறது என்பதைக் காட்டிலும் எவ்வாறு அத்தகையப் பொருளை தருகிறது என்பதும் ஒரு சொல்லிற்கு எத்தனை விதமான அர்த்தங்கள் இருக்க முடியும் என்பதற்கும் மிகுந்த முக்கியத்துவம் தருகிறது. மொழி அமைப்பிற்குள் மறைந்திருக்கும் அதிகார மையத்தை பின்நவீனத்துவம் முகத்திரை கிழித்து காண்பிக்கிறது. மனித சமூகத்தில் புரையோடிக்கிடக்கும் அடக்குமுறை, ஆண்டான், அடிமை சிந்தனை, ஆதிக்க மனோபாவம், ஏற்றத்தாழ்வு ஆகியவற்றை களைய சொல்லாடல்களின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ள வேண்டும் என பின் நவீனத்துவம் வலியுறுத்துகிறது. இவ்வாறு சமூகம் குறித்து சுயவிமர்சனம் செய்து கொள்ளும் போக்கை பின்நவீனத்துவம் அடைந்திருப்பதால் மார்க்சியம் இன்று பின்நவீனத்துவத்தை அக்கறையோடு கவனிக்கிறது'' என்கிறார் முத்துமோகன். மார்க்சியத்தின் போதாமைகள் குறித்து பின்னை நவீனத்துவம் முன்வைக்கும் விமர்சனங்களையும் மார்க்சியர்கள் கணக்கிலெடுத்து கொள்ளத் தயாராகவே உள்ளனர் என்ற திறந்த விவாதத்தை எடுத்து வைக்கிறார்.

பின்னை நவீனத்துவம் சமீப காலங்களில் தீவிரம் கொள்ளும் ஒரு புதிய சனநாயக அலையின் கருத்தியல் என பின்நவீனத்துவத்திற்கு ஒரு அரசியல் அடையாளத்தையும் சூட்டுகிறார் முத்துமோகன். ஆனால் மற்றொரு பார்வையில் நவீனத்துவத்திற்கும் பின் நவீனுத்துவத்திற்கும் பெரிதாக வேறுபாடுகள் கிடையாது என்றே பகிரங்கமாகக் கூறுகிறார். உலகம் பற்றிய எல்லாச் சித்தரிப்புகளிலும் மனித மனத்தின் கறிபிதங்களுக்கு முதன்மையான இடம் உண்டு என்று கான்ட் கூறுகிறார்... பின்னை நவீனத்துவம் இந்த கான்டிய மறு உயிர்ப்பை மேலும் தீவிரப்படுத்துகிறது. அனுபவங்களாலும் கற்பிதங்களாலும் மொழியாலும் புற உலகம் குறித்த பார்வைகள் மட்டுமின்றி தனிமனிதனும் கூட கட்டமைக்கப்படுகிறான். எனது கட்டமைப்புகளே என்னை ஏமாற்றிவிட்டன என்று அவன் வேதனையோடு உணர்கிறான். அவனது சோகமே கேளிக்கையாக உருமாற்றம் பெறுகிறது... இது தான் பின்னை நவீனத்துவத்தின் தத்துவ நிலைப்பாடு என பின்நவீனத்துவ சிந்தனை பற்றிய தன் கருத்துக்களை, தன் விமர்சனத்தை பதிவு செய்திருக்கிறார் எனக் கூறலாம்.

பின்நவீனத்துவ சிந்தனையின் பரிமாணங்களில் இதுவும் ஒன்று என ஒப்புகொள்ள வேண்டி இருந்தாலும் முத்துமோகன் பின் பின்நவீனத்துவத்தின் கூறுகளில் ஒன்றான இத்தன்மை தான் பின்நவீனத் தத்துவத்தின் நிலைபாடு என முடித்திருப்பது வருத்தம் தருகிறது. வேறுபட்ட தனிமனிதர்களின் புலம்பல்கள் அவநம்பிக்கைகள் இவற்றின் குவிப்பே இச்சிந்தனை என்பது போல் அவர் எழுதியிருப்பது அவநம்பிக்கையான போக்காக தோன்றுகிறது.

விமர்சனங்களை முன்வைத்து கருத்தியல் அமைப்புகளைத் தகர்ப்பது மட்டுமே பின்நவீனத்துவத்தின் ஒரே குறிக்கோள் எனும் கூற்று ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். டெரிடா போன்ற பின் நவீனத்துவ சிந்தனையாளரின் தளம் மிகவும் பரந்துபட்டது. டெரிடா முன்வைத்த விவாதத்தின் வீச்சு எவ்வளவு வீரியமானது என்பதைப் புரிந்து கொள்ள அவர் இறப்பே மிகப்பெரியச் சான்றாகும். டெரிடா இறந்து விட்டார் என்பதை தத்துவவாதிகளும், பத்திரிக்கையாளர்களும் மட்டும் பேசவில்லை. இலக்கிய விமர்சகர்கள், பொருளாதார அறிஞர்கள், ஏன் சட்ட வல்லுனர்களும் உளவியல் ஆய்வாளர்களும் அச்சம்பவத்தை ஆழ்ந்த வருத்தத்துடன் வெளிப்படுத்தினர். கட்டுடைத்தல் போன்ற பின்நவீனத்துவ சிந்தனையின் மறுபக்கம் சமூக அரசியல் தளமாகும்.

தத்துவச் சிக்கல்களை கேள்விக்குள்ளாக்கிய அதே நேரத்தில் லியடார்ட், ஃபூக்கோ, இஹாப் ஹாசன், டெரிடா போன்ற பின்நவீனத்துவ சிந்தனையாளர்கள் மனித உரிமைகள், விலங்குகள் உரிமைகள், போர், தீவிரவாதம், இனப்படுகொலை, நீதி மரணம், நட்பு, சமாதானம், இனக்குழுக்களின் கலாச்சாரம், வட்டார கலாச்சாரங்கள் போன்ற சமூக பண்பாடு சார்ந்த விடயங்கள் குறித்த கருத்தாடல் பங்களிப்பை பெரிதும் ஆற்றியுள்ளனர்.

சமூக அரசியல் வட்டத்தில் ஒடுக்கப்பட்ட, உரிமை மறுக்கப்பட்ட மக்களின் இனக்குரல்களை அவர்கள் தூக்கிப்பிடித்து வந்துள்ளனர். ஓரின சேர்க்கையாளர்கள், கருப்பின மக்கள், குறுநில மக்கள், திருநங்கைகள் போன்ற முகம் மறுக்கப்பட்ட, மறைக்கப்பட்டவர்களின் உரிமைகளை முன்னிறுத்தி அவர்கள் அதிகார மையங்களை கட்டுடைக்க சிந்தனை பலம் அளித்துள்னர். மற்றமையின் உரிமைகள் மீது அக்கரை கொண்ட இவர்களின் சிந்தனைகள் பன்மிய நிலைகளை, வேறுபாடுகளை, வேற்றுமைகளை, நெகிழ்ச்சி தன்மைகளை, வித்யாசங்களை கொண்டாடும் மனோபவத்தை பறைசாற்றின. அதே சமயம் அச்சிந்தனைகள் எவ்வித தீவிர நிலைபாடுகளையும் முன்னிறுத்தவில்லை.

எனவே பின நவீனத்துவத்தை அழகியல் ரீதியான கலை இலக்கிய விமர்சனமாக மட்டும் புரிந்து கொள்ளாமல் அதன் தத்துவ அரசியலை, பரந்துபட்ட வீச்சை, சிந்தனை நீட்சியை உணர்ந்து கொள்வதன் மூலம் மட்டுமே பின் நவீனத்துவமானது சமூக கலாச்சார அரசியல் பொருளாதார ரீதியின் பன்முக நீதிக்கான தத்துவக் குரல் என்பதை புரிந்து கொள்ள முடியும்.