சோசலிசம் மற்றும் கம்யூனிசத்திற்கான இயக்கம் இரசியாவில் 19-ஆம் நூற்றாண்டின் பிந்தைய பாதியில் வளர்ச்சி பெற்றது. “நரோதினிக்கள்” மற்றும் “சட்டபூர்வமான மார்க்சியவாதி”களுக்கு எதிரான தீவிர கருத்தியல் போராட்டத்தில் அது வளர்ச்சி பெற்றது.
புரட்சியில் முக்கிய பங்கை தொழிலாளி வகுப்பல்ல, விவசாயிகளே ஆற்றுவார்களென நரோதினிக்கள் பரப்புரை செய்தனர். மேலும் அவர்கள், மக்கள் திரள் போராட்டத்திற்கு பதிலாக தனிப்பட்ட வீரர்களுடைய போராட்டத்தை முன்வைத்தனர். “சட்டபூர்வ மார்க்சியவாதிகள்”, முதலாளி வகுப்பின் நலன்களுக்கு ஏற்ப தொழிலாளி வகுப்பு இயக்கத்தை மாற்றிக் கொள்ள விரும்பினர். அவர்கள் பாட்டாளி வகுப்புப் புரட்சி மற்றும் பாட்டாளி வகுப்பின் சர்வாதிகாரம் என்ற மார்க்சிசத்தின் முக்கிய கோட்பாடுகளையே மறுத்தனர்.
இந்த இரண்டு போக்குகளுக்கும் எதிராக, ஒரு விடாப்பிடியான போராட்டத்தை தோழர் லெனின் நடத்தினார். அவர் சாரின் ஆட்சி, நிலக்கிழார்கள் மற்றும் முதலாளி வகுப்பினருடைய ஆட்சியைத் தூக்கியெறிய ஒரு முக்கிய வழியாக தொழிலாளி வகுப்பின் தலைமையின் கீழ் தொழிலாளர்கள் மற்றும் உழவர்களுடைய ஒரு புரட்சிகரக் கூட்டணி என்ற கருத்தை முன்வைத்தார்.
1898-இல் உருவாக்கப்பட்ட இரசிய சமூக சனநாயக தொழிலாளர் கட்சியில் (RSDLP) முரண்பாடான சிந்தனைகளும், நிலைப்பாடுகளும், செயல்களும் 1911-வரை நிலவி வந்தன. லெனின் தலைமையிலான போல்ஷவிக்-களுடைய நிலைப்பாடானது, ஒரு ஆயதங்தாங்கிய மக்கள் எழுச்சியின் மூலம் சாரின் முடியாட்சியைத் தூக்கியெறிவதற்கும், உழவர்களைத் தங்கள் பக்கம் சேர்த்துக் கொள்வதன் மூலமும், அரசில் சட்டபூர்வ சனநாயக (கான்ஸ்டிடியூஷ்னல் டெமாக்கிரடிக்) முதலாளி வகுப்பைத் தனிமைப்படுத்துவதன் மூலமும், பாட்டாளி வகுப்பின் தலைமையை நிறுவுவதன் மூலம் முதலாளித்துவத்தைக் குழி தோண்டிப் புதைத்து விட்டு, சோசலிசத்தைக் கட்டுவதாகும். மென்ஷவிக்குகளுடைய நிலைப்பாடோ, சாரின் ஆட்சியைச் “சீர்திருத்தி”, அரசியல் சட்ட பூர்வ சனநாயக சக்திகளோடு ஒரு கூட்டணியை உருவாக்கி, முதலாளி வகுப்பின் மேலாதிக்கத்தை நிறுவுவதாகும். இதன் மூலம் புரட்சியை முதலாளி வகுப்பு சனநாயகத்தின் வரையறைக்குள் கட்டுப்படுத்துவதாகும்.
1912 சனவரியில் நடைபெற்ற இரசிய சமூக சனநாயக தொழிலாளர் கட்சியின் (RSDLP) ஒரு கருத்தரங்கில், எல்லா புரட்சியாளர்களும் போல்ஷவிக் கட்சியின் நிலைப்பாடோடு ஒன்றுபட்டு நின்றனர். மென்ஷவிக் நிலைப்பாடைப் பின்பற்றுவோர் கட்சியை விட்டு விலகிச் சென்றனர். ஒரு புது வகையான கட்சி தோன்றியது. அது தான் இரசிய சமூக சனநாயக தொழிலாளர் கட்சி (போல்ஷவிக்). பின்னர் இது சோவியத் யூனியனின் கம்யூனிஸ்ட் கட்சி (போல்ஷவிக்) என்று பெயர் மாற்றப்பட்டது.
சனநாயக மத்தியத்துவம் என்ற அடிப்படையில் ஒரு புரட்சிகர நிலைப்பாட்டையொட்டி எஃகு போல போல்ஷவிக் கட்சி ஒன்றுபட்டிருந்தது. பிராவ்தா என்றழைக்கப்பட்ட ஒரு சிறப்பான தொழிலாளர்களுடைய இதழைக் கொண்டு, கட்சி ஒரு புதிய தலைமுறை புரட்சிகரத் தொழிலாளர்களை வென்று அவர்களுக்கு பயிற்சியளித்தது. இது, பாட்டாளி வகுப்புப் போராட்டம் முன்னேற்றமடைய மிகப் பெரிய தாக்கத்தை உருவாக்கி, 1912 இலிருந்து துவங்கி, புரட்சிகர அலை எழுவதற்கு வழிகோலியது.
1914-இல் போர் வெடித்த போது, அதற்கு எதிராகத் தீர்மானங்களை வெளியிடுவதோடு மட்டும் போல்ஷவிக் கட்சி இருந்துவிடவில்லை. அது முழு மூச்சாக போருக்கு எதிராக வேலை செய்து அணி திரட்டியது. சட்ட ரீதியான வழிகளிலும், மற்ற வழிகளிலும் அது பொது மக்களிடையே ஆர்பாட்டங்களையும், பரப்புரைகளையும் நடத்தியது. இது, ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் கொண்டிருந்த கோபத்தைப் பிரதிபலிப்பதாக இருந்தது.
இரட்டை அதிகாரம் குறித்து லெனின்
ஒவ்வொரு புரட்சியின் அடிப்படைக் கேள்வியானது அரசு அதிகாரம் பற்றியதாகும். இந்தக் கேள்வியை நன்கு புரிந்து கொண்டாலன்றி, புரட்சியில் அறிவுடமையோடு பங்கேற்க முடியாது, புரட்சிக்கு வழிகாட்டுவது பற்றிய கேள்விக்கே இடமில்லை.
நம்முடைய புரட்சியின் ஒரு குறிப்பிடத்தக்க தன்மையானது, அது ஒரு இரட்டை அதிகாரத்தைக் கொண்டு வந்திருக்கிறது என்பதாகும். இந்த உண்மையை நாம் முதலில் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். இதைப் புரிந்து கொண்டாலன்றி நாம் மேற் கொண்டு முன்னேற முடியாது.....
இரட்டை அதிகாரம் என்றால் என்ன? முதலாளி வகுப்பின் அரசாங்கமாகிய தற்காலிக அரசாங்கத்தோடு, இன்னொரு அரசாங்கமும் தோன்றியிருக்கிறது. அது இது வரை பலவீனமாகவும், கருவிலிருந்து வெளிவருவதாகவும் அதே நேரத்தில் உண்மையிலேயே நிலவும் ஒரு அரசாங்கமாகவும், வளர்ந்து வருவதாகவும் தொழிலாளர்கள் மற்றும் படை வீரர்களுடைய சோவியத்துகளுடைய பிரதிநிதிகளின் அரசாங்கமாகவும் அது இருக்கிறது.
இந்த இன்னொரு அரசாங்கத்தினுடைய வகுப்புக் கலவை எப்படிப்பட்டது? அதில் பாட்டாளி வகுப்பும், உழவர்களும் (போர் வீரர்களுடைய உடையில்) உள்ளன. இந்த அரசாங்கத்தின் அரசியல் தன்மை என்ன? அது ஒரு புரட்சிகர சர்வாதிகாரமாகும். அதாவது அது ஒரு மத்தியப்படுத்தப்பட்ட அரசு அதிகாரத்தால் உருவாக்கப்பட்ட ஒரு சட்டத்தின் மீது சார்ந்திருப்பதாக இல்லாமல், அடித்தளத்திலுள்ள மக்களுடைய நேரடி செயலூக்கத்தின் மீதும், புரட்சிகரமாக கைப்பற்றப்பட்ட ஒரு நேரடி அதிகாரமாகவும் அது இருக்கிறது. அது, ஐரோப்பா, அமெரிக்கா ஆகிய முன்னேறிய நாடுகளில் இன்னமும் தொடரும் வழக்கமான பாராளுமன்ற முதலாளி வகுப்பின் சனநாயகக் குடியரசுகளில் நிலவும் அதிகாரத்திலிருந்து முழுவதும் வேறுபட்டதாக இருக்கும்....
1871 பாரீஸ் கம்யூனில் இருந்த அதே வகையான அதிகாரமாகும் இது. கீழ்வரும் அடிப்படைத் தன்மைகளைக் கொண்டிருந்தது -
1. அதிகாரத்தின் அடிப்படையானது, பாராளுமன்றத்தால் முன்னதாக விவாதிக்கப்பட்டு கொண்டுவரப்பட்ட ஒரு சட்டமல்ல. ஆனால், கீழ் மட்டத்திலுள்ள மக்களுடைய நேரடி செயலூக்கமாகும், அவர்களுடைய உள்ளூர்ப் பகுதிகளில் இந்த அதிகாரம் நேரடியாக “கைப்பற்றப்பட்டதாகும்”.
2. மக்களிடமிருந்து தனிப்பட்டதாகவும், அவர்களுக்கு எதிரானதாகவும் இருக்கும் நிறுவனங்களான காவல்துறை மற்றும் இராணுத்தை மாற்றி, எல்லா மக்களையும் நேரடியாக ஆயுதங் தாங்கியவர்களாக ஆக்குதல். அப்படிப்பட்ட ஒரு அதிகாரத்தின் கீழிருக்கும் அரசில் ஒழுங்கானது ஆயுதந்தாங்கிய தொழிலாளர்கள் மற்றும் உழவர்களாலேயே, ஆயுதந்தாங்கிய மக்களாலேயே கட்டுப்படுத்தப்படுகிறது.
3. அது போலவே, அதிகார நிலையும், அதிகாரிகளும் மக்களுடைய நேரடி ஆட்சியின் மூலம் மாற்றியமைக்கப்படுகிறது. அல்லது குறைந்த பட்சம் முக்கிய கட்டுப்பாட்டின் கீழ் வைக்கப்படுகிறது. அவர்கள் தேர்ந்தெடுக்கப்படும் அதிகாரிகளாக ஆவது மட்டுமின்றி, மக்களுடைய முதல் கோரிக்கையாலே திருப்பியழைக்கப்படக் கூடியவர்கள் ஆவர். அவர்கள் சாதாரண முகவர் நிலைக்கு குறைக்கப்படுகிறார்கள். முதலாளி வகுப்பு அளவில் மிக அதிகமாக சம்பளம் பெறும் “வேலைகளில்” இருக்கும் ஒரு தனிப்பட்ட குழுவினர் என்ற நிலையிலிருந்து, அவர்கள் சாதாரணத் தொழிலாளி பெறும் ஊதியத்தைக் காட்டிலும் அதிகமாகப் பெற முடியாத ஒரு “சேவைகள் பிரிவின்” தொழிலாளியாக ஆகிறார்கள்.
மூலம் – லெனின் தொகுப்பு நூல்கள், முற்போக்கு பதிப்பகம், 1964 மாஸ்கோ, தொகுதி 24, பக்கம் 38-41.
சோவியத்துக்கள்
தொழிலாளர் பிரதிநிதிகளுடைய சோவியத்து என்பது, தொழிலாளர்களே தம்மிடையிலிருந்து தெரிவு செய்து தேர்ந்தெடுக்கப்பட்ட தொழிலாளி வகுப்பின் புடம் போட்ட போராளிகளுடைய ஒரு குழுவாகும். இப்படிப்பட்ட தொழிற்சாலைத் தொழிலாளர்களுடைய பரந்துபட்ட அரசியல் அமைப்பு வடிவம், 1905 கிளர்ச்சியின் போது செயின்ட் பீட்டர்ஸ்பர்கில் (பின்னர் பெட்ரோகிராட் என்று பெயரிடப்பட்டது) தோன்றின.
சோவியத் பற்றிய கருத்து தொழிலாளர்களுடைய எண்ணத்தில் இருந்து வந்திருக்கிறது. சார் ஆட்சி தூக்கியெறியப்பட்டவுடன் அதை அவர்கள் செயல்முறைக்குக் கொண்டுவந்தனர். 1905-இல் தொழிலாளர் பிரதிநிதிகளுடைய சோவியத்துகள் மட்டுமே உருவாக்கப்பட்டன. பிப்ரவரி 1917-இல் போல்ஷவிக்குகளுடைய முன்முயற்சியின் காரணமாக, தொழிலாளர்கள் – உழவர்களிடையில் உறவுகளை வலுப்படுத்தும் நோக்கத்தோடு தொழிலாளர்கள் மற்றும் படை வீரர்களின் பிரதிநிதிகளுடைய சோவியத்துகள் தோன்றின.
பிப்ரவரி புரட்சியின் துவக்க நாட்களில் பெட்ரோகிராட் தொழிலாளர் பிரதிநிதிகளுடைய சோவியத்துகள் உருவாகின. சோவியத்துகளுக்கான தேர்தல்கள் தன்னிச்சையாக தனிப்பட்ட தொழிற்சாலைகளில் துவங்கின. மிகச் சில நாட்களிலேயே அது தலைநகரின் எல்லா தொழிற் சாலைகளுக்கும் பரவியது. டுரைட் பேலசில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் ஏறத்தாழ 300 பேர் பங்கேற்றனர். அவர்கள் ஒரு தற்காலிக செயற் குழுவைத் தேர்ந்தெடுத்தனர். ஒரு சில நாட்களிலிலே, தொழிற்சாலைகள் மற்றும் இராணுவத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் சோவியத்தில் இணைந்தனர். இரண்டு வாரங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுடைய எண்ணிக்கை 3000-மாக ஆகியது. இதே போன்ற நிகழ்வுகள் மாஸ்கோவிலும் மற்ற பிற நகரங்களிலும் நடை பெற்றன.
தொழிலாளர்கள் – படை வீரர்களுடைய அங்கமென, பெட்ரோகிராட் சோவியத்து தன்னைத் தானே அறிவித்துக் கொண்டது. சூன் 1917-இல் சோவியத்துக்களுடைய முதல் மாநாடு நடைபெறும் வரை, அது அனைத்து இரசிய புரட்சிகர இயக்கத்திற்கான மையமாக செயல்பட்டு வந்தது. அது, மாவட்ட சோவியத்துகளை அமைக்க சிறப்புப் பிரதிநிதிகளை நியமித்தது. 1000 தொழிலாளிகளுக்கு 100 தன்னார்வப் படையினர் என்ற அடிப்படையில் அது ஒரு இராணுத்தைத் திரட்டவும் தொடங்கியது. மார்ச் 14 அன்று, பெட்ரோகிராட் சோவியத் முதல் ஆணையை பெட்ரோகிராட் படைக்குழுவிற்கு கட்டளையிட்டது. “தொழிலாளர்கள் மற்றும் படை வீரர்களுடைய சோவியத்துகள்” கட்டளையானது :
“எல்லா இராணுவக் கம்பெனிகள், பெட்டாலியன்களில் பணியாற்றுபவர்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளிலிருந்து, குழுக்களை உடனடியாகத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
“எல்லா அரசியல் செயல்களிலும் படைகள், சோவியத்துகளுக்கும், குழுக்களுக்கும் அடிபணிந்தவையாகும்.
“அரசு டுமாவின் இராணுவக் குழுவின் ஆணைகள், சோவியத்தின் ஆணைகள் மற்றும் கட்டளைகளோடு முரண்படாமல் இருக்கும் வரை, மதிக்கப்பட வேண்டும்.
“எல்லா வகையான ஆயுதங்களும் இராணுவ கம்பெனி மற்றும் பட்டாலியனுடைய குழுவின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். எக்காரணம் கொண்டும், யார் கேட்டாலும், அவற்றை அதிகாரிகளுக்கு வழங்கக் கூடாது...”
மார்ச் 16 அன்று சோவியத்து, உணவு, இராணுவ வேலைகள், பொது முறை மற்றும் ஊடகம் என பல குழுக்களை நியமித்தது.
ஆதாரம் – மாபெரும் அக்டோபர் சோசலிசப் புரட்சியின் படங்களுடன் கூடிய வரலாறு. 1917, மாஸ்கோ, யு.எஸ்.எஸ்.ஆர், 1988. மார்ச் 1 அன்று முதலில் வெளியிடப்பட்டது.