தமிழ்ச்சூழலில் ‘நிறப்பிரிகை‘, ‘பின்நவீனத்துவம்‘ ‘உண்மை கண்டறியும் குழு‘ போன்ற புதிய செயல் உருவாக்கங்களை எண்ணுந்தோறும் கூடவே நினைவுக்கு வருபவர் அறிவார்ந்த செயல்பாட்டாளரான அ.மார்க்ஸ். நாற்பதாண்டுகளுக்கும் மேலாக விளிம்புநிலை மக்களுக்கான எழுத்து, பேச்சு, ஆய்வு, களச் செயல்பாடுகள், மனித உரிமைப் போராட்டங்கள் எனத் தொய்வில்லாமல் தொடர்ந்து இயங்கி வருபவர் பேராசிரியர் அ.மார்க்ஸ். எந்தச் சூழ்நிலையிலும் அஞ்சாமல் அதிகாரத்திற்கெதிரான குரலை ஒலித்துக் கொண்டேயிருக்கும் அவரை சென்னை அடையாறிலுள்ள அவரது இல்லத்தில் சந்தித்தோம்.
தமிழகக் கலை இலக்கிய அரசியல் சூழலில் ஒரு மாற்றுப் போக்கை முன்வைத்தது ‘நிறப்பிரிகை’-யின் செயல்பாடுகள். அதைப்பற்றி இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்ளும்படிக் கூறலாமா?
நிறப்பிரிகையின் முதல் இதழ் 1990 அக்டோபரில் வெளிவந்தது. அதன் முதல் தலைப்புக் கட்டுரை “ரஷியா, சீனா மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களும் அவை மார்க்சியத்தின் முன் எழுப்பியுள்ள கேள்விகளும்” என்பது. நிறப்பிரிகை முன்வைத்த பல முக்கிய மாற்றங்களில் ஒன்று ‘கூட்டுக் கட்டுரை’ என்கிற ஒரு வடிவம். இதற்குமுன் யாரும் இப்படியான முயற்சி எதையும் செய்ததாக நினைவில்லை. அன்றைய சூழலில் மேலுக்கு வந்துள்ள ஒரு முக்கியமான பிரச்சினையை எடுத்துக்கொண்டு அது குறித்து பலரும் விவாதித்து, அதனூடாகக் கூடிய அளவிற்கு ஒரு பொது முடிவை முன்வைப்பது என்பது அதன் நோக்கம். மாற்றுக் கருத்துக்களாக முன்வைக்கப்பட்டவையும் கூட உரிய முக்கியத்துவத்துடன் அதில் சேர்க்கப்படும். தமிழகத்தில் எந்த ஊரில், என்ன தலைப்பில், எந்தத் தேதியில் விவாதம் நடைபெறும் என்பதும் முன்னதாகவே நிறப்பிரிகை இதழ்களில் வெளியிடப்படும். அவ்வாறு முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் மிக்க நடுநிலையுடன் வெளியிடப்படும். இந்த முதல் இதழிலேயே சோவியத் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டிருந்த மாற்றங்கள் இப்படி விவாதத்திற்கு முன்வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்க ஒன்று.
ஒவ்வொரு விவாதத்தின் போதும் வந்து கலந்து கொள்ளும் தோழர்களுக்கு தேநீர் மற்றும் மதிய உணவும் அளிக்கப்படும். எந்த ஊரில் விவாதம் நடக்கிறதோ அந்தப் பகுதித் தோழர்களில் யாரேனும் ஒருவர் அல்லது குழுவினர் செலவுகளைப் பகிர்ந்து கொள்வார்கள். நண்பர் வேல்சாமி இதழ் அச்சிடுவதற்கு ஒரு தொகை அளிப்பார். அச்சிட்டு வினியோகிக்கும் பொறுப்பு ஒரு குறிப்பிட்ட காலம் வரை ரவிக்குமாரின் பங்காக இருந்தது. அவரது கட்டுரைகளும் அவ்வப்போது நிறப்பிரிகையில் வெளி வரும். பின் ஒரு கட்டத்தில் அவர் விலகிக் கொண்டார். அப்படி இடைக் காலத்தில் விலகிக் கொண்ட இன்னொருவர் நண்பர் பொதியவெற்பன்.பல்வேறு நம்பிக்கைகள், கருத்துக்கள் கொண்ட நண்பர்களும் இப்படிப் பல்வேறு மட்டங்களில் இப்படி இந்தக் கூட்டுக் கட்டுரை முயற்சியில் பங்கு பெற்றது மறக்க இயலாத ஒன்று.
குகி வா தியாங்கோவின் “துப்பாக்கியும் பள்ளிக்கூடமும்”, எழுத்தாளர் பிரேமின் “புரட்சியை நோக்கி சில உளவியல் சிந்தனைகள்” தோழர் கேசவனின் “சோஷலிசம் மற்றும் முதலாளிய மீட்சி” குறித்த நூல் ஆய்வு, “மார்க்சியமும் தேசிய இனப் பிரச்சினையும் குறித்து இன்று கவனத்தில் எடுக்க வேண்டிய படிப்பினைகள்” என்கிற தலைப்பில் எழுதப்பட்ட என் விரிவான கட்டுரை முதல் இதழில் வெளிவந்த போது பெரிய அளவில் அது அக்கால கட்டத்தின் கவனத்தை ஈர்த்தது.
தொடர்ந்து அருணன், சாரு நிவேதிதா, ரவிக்குமாரின் “அதிமனிதர்களும் குப்பைக் கூளங்களும்” என்கிற வரலாறு எழுதுதல் உள்ளிட்ட கட்டுரைகள், வில்கம் ரெய்ச், ரொமிலா தாபர் முதலானோரின் முக்கிய கட்டுரைகள் முதலியவை குறித்த கட்டுரைகளின் பெயர்களை எல்லாம் சொல்லி மாளாது. நண்பர் நாகார்ஜுனனின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கன. இலக்கிய இணைப்பு, பெண்ணியம் தொடர்பான கட்டுரைகள் என நிறப்பிரிகையின் அன்றைய முயற்சிகளைச் சொல்லிக் கொண்டே போகலாம். நீண்ட பாரம்பரியம் மிக்க தமிழ் இலக்கிய முயற்சிகள் குறித்து எவ்வளவோ சொல்லலாம். அவற்றுள் சமீப காலத்தின் ஆக முக்கியமான ஒரு முயற்சியாக ‘நிறப்பிரிகை’ அமைந்ததை யாரும் மறுக்க இயலாது.
இன்றைய சூழலில் நிறப்பிரிகை போன்ற ஒரு மாற்று இயக்கத்தின் தேவை மற்றும் அதற்கான சாத்தியங்கள் பற்றிக் கூறுங்களேன்...
மாற்று இயக்கங்களின் தேவை மிக மிக முக்கியம் என்பதற்கு நிறப்பிரிகை ஒரு எடுத்துக்காட்டு. ஒரு குறிப்பான அரசியல் நோக்குடன் நிறப்பிரிகை செயற்பட்டபோதும் அது என்றும் ஒரு கட்சிப் பத்திரிகையாக மாறவில்லை. இதன் பொருள் கட்சிப் பத்திரிகைகளைக் குறைத்துச் சொல்வதல்ல. இலக்கியக் களத்தில் கம்யூனிஸ்டுகள், திராவிட இயக்கத்தினர் ஆகியோரின் பங்குகள் அதில் முக்கியமாக இருந்துள்ளன. அவற்றுக்கான தேவைகளையும் நாம் புரிந்துகொள்கிறோம். எனினும் குறிப்பான கட்சி அடையாளங்களுடன் இறுக்கமாக நில்லாமல் இலக்கியப் பத்திரிகைகள் செயல்படும் போதுதான் பன்முகத் தன்மையுடன் அவை வெளிப்பட முடியும். அதனூடாக புதிய, நவீனக் கருத்துக்களை பல தரப்பினரிடமும் கொண்டு செல்ல முடியும்.
விவாதங்கள், புதிய கருத்துக்களை நடுநிலையோடு அணுகுதல் முதலியன ஒரு கட்சிக்காரருக்கு முக்கியமில்லை என்பதல்ல. இலக்கியம் முதலானவற்றில் அப்படியாக சற்றே நெகிழ்ச்சியான ஒரு அணுகல் முறை சில பத்தாண்டுகளைக் காட்டிலும் இப்போது மார்க்சிஸ்டுகள் மத்தியில் உருவாகியுள்ளதை நாம் உணர முடிகிறது. எனினும் அப்படியான ஒரு நிலை எல்லா மட்டங்களிலும் உருப்பெறவில்லை என்றே நான் உணர்கிறேன்.
மனித உரிமை, சமூகநீதி, உண்மை கண்டறியும் குழு என்று களச் செயல்பாடுகளில் தீவிரமாக இயங்கி வருபவர் நீங்கள். அதன் பயன் விளைவுகள் எப்படியானதாக இருந்திருக்கிறது?
மனித உரிமைக் களத்தில் சுமார் முப்பதாண்டுகளுக்கும் மேலாக நான் செயல்பட்டு வருகிறேன். மனித உரிமைச் செயல்பாடுகளின் ஊடாக உடனடியான பயன்கள் உண்டு. முப்பதாண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு சுமார் எழுபதுக்கும் மேற்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து நானும் எனது குழுவினரும் அறிக்கைகள் சமர்ப்பித்துள்ளோம். மனித உரிமைப் பிரச்சினைகளில் பெரும்பாலும் அடித்தள மக்கள், தாழ்த்தப்பட்டோர், சிறுபான்மையினர். பெண்கள் ஆகியோர்கள்தான் பாதிக்கப்படுகின்றனர். மனித உரிமை அமைப்புகளுக்கு அரசு ஆதரவுகள் கிடையாது. இருந்த போதிலும் சொந்தச் செலவில் குழுக்களை அமைத்து பாதிக்கப்பட்டவர்களின் மீதான அத்துமீறல்களை நண்பர்களின் ஒத்துழைப்புடன் நாங்கள் செய்தி ஆக்கி உள்ளோம்.
பாதிக்கப்பட்ட மக்கள் சில நேரங்களில் தங்களின் பாதிப்புகளை மிகைப்படுத்திச் சொல்லலாம். அவற்றை எல்லாம் மிக நுணுக்கமாக நாங்கள் ஆய்வு செய்து வன்முறைக்கு ஆளானவர்களின் மீதான பாதிப்புகள், அந்தப் பாதிப்பிற்குக் காரணமானவர்கள் என்பதை எல்லாம் வெளிக் கொணர்ந்துள்ளோம். மனித உரிமைக் களச் செயல்பாட்டாளனின் ஒரே பலம் அவனது நேர்மைதான். எனினும் பல அதிகாரிகள் நாங்கள் கூறுபவற்றைக் கவனத்துடன் கேட்டு உரிய நடவடிக்கை எடுத்துள்ளனர். எனினும் அப்படியானவர்களின் எண்ணிக்கை குறைவு.
குறிப்பாக அரசு, காவல்துறை அத்துமீறல்கள், என்கவுண்டர் படுகொலைகள் ஆகியவற்றில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைப்பதில்லை. இது குறித்து மனித உரிமை அமைப்பினர் பேசினால் மட்டும் போதாது. அரசியல் கட்சிகள் பேச வேண்டும். நடுநிலையாளர்கள் குரல் கொடுக்க வேண்டும்.
மதுரையில் சில ஆண்டுகள் முன் சுமார் பத்துக்கும் மேற்பட்ட சிறுபான்மையினர் மீது பொய் வழக்குகள் போடப்பட்டு அவர்கள் பல காலம் வழக்குகளில் துன்புறுத்தப்பட்டபோது நாங்கள் அளித்த அறிக்கையை மேற்கோள் காட்டி அது தொடர்பாக ஆய்வு செய்த அதிகாரி, அவர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்ததோடு இழப்பீடுகள் வழங்க ஆணையிட்டது குறித்து நான் சில கட்டுரைகளில் விரிவாக எழுதியுள்ளேன்.
தொழிற்சங்கச் செயல்பாடுகளால் பல்வேறு இடையூறுகளைச் சந்தித்துச் சாதித்தவர் நீங்கள். அதைப் பற்றி...
அது என்னுடைய தனிப்பட்ட சாதனை அல்ல. அது அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தின் சாதனை. நான் அவ்வமைப்பின் தலைவர்களில் ஒருவன் மட்டுமே. அது ஒரு காலம். அப்போது சாத்தியமாகிய சில இன்று சாத்தியமற்றுப் போயுள்ளன. சுமார் மூன்று முறை எங்கள் அரசு கல்லூரி ஆசிரியர் அமைப்பு போராடி சில நூறு ஆசிரியர்களை நிரந்தரம் ஆக்கியது. அது சங்கத்தின் மிகப்பெரிய சாதனை. ஆனால் இன்று அதெல்லாம் சாத்தியமில்லாத நிலை ஏற்பட்டுள்ளதையும் நாம் கவனத்தில் கொள்வது அவசியம். ஒரே பணியில் முழு ஊதியமும் பெறும் நிரந்தரப் பேராசிரியர்கள் எனவும் அதைவிட மிகமிகக் குறைவான ஊதியத்துடன் அதே அளவு வேலை செய்யும் ஒப்பந்த ஆசிரியர்கள் எனவும் இன்று கல்லூரிகளில் நியமிக்கப் படுகின்றனர். அதுமட்டுமல்லாமல் எந்த நேரத்திலும் இந்த ஒப்பந்த ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்படும் நிலையும் இன்று உள்ளது. ஒரே வேலைக்கு இப்படி இரு வேறு ஊதியம் முதலிய கொடு அநீதி இன்று இயல்பாகி விட்டது. தொழிற்சங்கங்களால் இந்தக் கொடுமையை ஒழித்துக்கட்ட இயலாத நிலை இன்று ஏற்பட்டுள்ளது. இருபது ஆண்டுகளுக்கு முன் நிலைமை அவ்வாறு இல்லை. நான் அரசு கல்லூரியில் ஆசிரியராக இருந்தபோது எனது தொழிற்சங்க நடவடிக்கைகளுக்காகவும், மன்னார்குடி அரசு கல்லூரியில் தலித் மாணவர்களுக்கு அவர்கள் தங்கிப் படிக்கும் வகையில் ஆதரவாக நின்றதற்காகவும் இரண்டு முறை வெகுதூரத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டேன். என் பிள்ளைகள் பள்ளியில் படித்த காலத்தில் அவர்களோடு இருக்க இயலாத நிலை ஏற்பட்டதோடு ஓராண்டு காலம் என் ஊதிய உயர்வும் நிறுத்தப்பட்டது. அவ்வளவுதான். மற்றபடி பெரிய பிரச்சினை எதையும் நான் சந்திக்கவில்லை. அன்று ஒரே பணிக்கு தற்காலிக ஆசிரியர்களுக்கு ஒரு ஊதியம், நிரந்தர ஆசிரியர்களுக்கு ஒரு ஊதியம் என்றும் வேறுபாடுகள் இல்லை. இன்று எல்லாம் மாறிவிட்டது.
ஆனால் இன்றைக்கு அதிகாரத்தை எதிர்க்கும் பல போராட்டங்கள் எதிர்பார்க்கும் வெற்றியை அடைய இயலாததற்கு என்ன காரணம்?
உலகளாவிய சோஷலிசத்தின் வீழ்ச்சி இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதை வெறும் தொழிலாளி வர்க்கக் கோட்பாட்டின் வீழ்ச்சியாக மட்டும் கருத வேண்டியதில்லை. இன்னொன்றையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இப்போது வெறும் சோஷலிசம் மட்டும்தானா வீழ்ச்சி அடைந்துள்ளது.
தொழிலாளர் போராட்டங்கள் மட்டும்தானா சரிந்துள்ளன. அரசின் கட்டுப்பாடுகள் உதிர்ந்து குறைவதற்குப் பதிலாக அவை இன்னும் இறுக்கமாகப் பிணைந்து தேசங்களைக் கடந்த ஒன்றாகவும் உருமாறி வருகிறது. ஜனநாயகம் இன்று உலகளாவிய ஒரு நெருக்கடியை எதிர் கொண்டுள்ளது. இன்றைய சூழலை நாம் இப்படித்தான் புரிந்து கொள்ளல் வேண்டும். முதலாளி, தொழிலாளி, ஏகாதிபத்தியம், காலனியம், நவ காலனியம் எல்லாம் முன்னைப்போல இறுக்கமாக வரையறுக்கப்பட்ட “தெளிவுடன்” நம்முன் காட்சி அளிப்பதில்லை.
யார் தன்னுடைய முதலாளி என்றுகூடத் தெரியாத அளவிற்கு இன்றைய தொழிலாளி ஆக்கப்பட்டுள்ளான். எல்லா வரையறைகளும் இன்று தெளிவற்றதாக ஆகியுள்ளன. இதன் பொருள் தொழிலாளி வர்க்கம் அதன் பொருளில் அழிந்துவிட்டது என்பதோ, இல்லை, அமைப்பு ரீதியாகத் திரள சாத்தியமற்றதாக ஆகிவிட்டது என்பதோ அல்ல. மார்க்ஸ் காலத்திற்கும் நமக்கும் இடையே அடிப்படை மாறிவிடவில்லை. ஆனால் சூழல்கள் பெரிதும் மாறியுள்ளன. வால்ஸ்ட்ரீட் மற்றும் அதை ஒட்டி உலகெங்கிலும் நடந்த போராட்டங்களை எல்லாமும் நாம் முற்றாகப் புறக்கணித்துவிட வேண்டியதில்லை. மார்க்சின் காலத்தில் இல்லாத இம்மாற்றங்களை எல்லாம் கணக்கில் கொண்டு மார்க்சியத்தை நவீன சிந்தனைகளுடன் நாம் வளர்த்தெடுக்க வேண்டும்.
இப்போதைய சூழ்நிலையில் மார்க்சியம் எனும் கருத்தாக்கத்தின் தேவை குறித்த தங்களின் பார்வை?
மார்க்சியச் சிந்தனைகளின் தேவை இன்று அதிகம் ஆகி உள்ளது என்பதுதான் என் கருத்து. சென்ற நூற்றாண்டில் சோவியத் யூனியனின் வீழ்ச்சி, வார்சா ஒப்பந்தம் அழிக்கப்பட்டு அதனுடைய அங்கங்கள் முதலாளிய நாடுகளின் கூட்டணியான ‘நேட்டோ’ வில் (NATO) இணைதல், கம்யூனிச மற்றும் சோஷலிச முயற்சிகள் வலுவிழந்து உலகம் முதலாளியப் பாதையை நோக்கித் திரும்புதல் எல்லாம் நடந்துள்ளன. புரட்சிக்குப் பிந்திய சமுதாயங்கள் எல்லாம் வீழ்ந்து விட்டன. லத்தீன் அமெரிக்க நாடுகள் உட்பட எல்லாம் சந்தைப் பொருளாதாரத்தை ஏற்றுக் கொண்டுவிட்டன என்பதெல்லாம் உண்மைதான். சோஷலிசம் வீழ்ந்து விட்டதாகவும் இனி நாகரிகங்களுக்கு இடையேயான மோதல்கள் (clash of civilization) மட்டுமே சாத்தியம் எனவும் சாமுவேல் ஹட்டிங்டன் முதலான முதலாளியக் கருத்தியலாளர்கள் கூவுகிற காலம் இது என்பதும் உண்மைதான்.
இன்னொரு பக்கம் இந்தப் பின்னணியில் தொழிலாளி வர்க்கமும், பொது மக்களும் சென்ற நூற்றாண்டில் பெற்றெடுத்த அனைத்து சமூகப் பாதுகாப்புகளும் இன்று அழிந்து வருகின்றன. நிரந்தர வேலை, ஓய்வூதியம், தொழிற்சங்க உரிமைகள், சமூகப் பாதுகாப்பு, கல்வி, மருத்துவ உரிமைகள், சமூகப் பாதுகாப்பு என்பனவெல்லாம் இன்று காலாவதியாகி விட்டன.
மார்க்சியம் தோற்று விட்டதாகக் குதூகலிப்போர் இரண்டு அம்சங்களைக் கணக்கில் கொள்ள வேண்டும். இந்த வீழ்ச்சி வெறும் தொழிலாளி வர்க்கக் கோட்பாடுகளின் வீழ்ச்சி மட்டும் அல்ல. எல்லாச் சமூக அறங்கள் மற்றும் சமூக நீதிகளின் வீழ்ச்சி. மார்க்சியம் தோற்றுவிட்டதாகச் சொல்வோர் யாரும் இதுவரை மார்க்ஸ் முன்வைத்த முதலாளிய விதிகள் எவ்வாறு பொய்யாகிவிட்டன என்றெல்லாம் நிறுவியதே இல்லை.
மார்க்ஸ் சொன்னதுபோல முதலாளியம் தொடர்ந்து நெருக்கடிகளைச் சந்தித்துக் கொண்டுதான் உள்ளது. 2008 இல் உலகைக் குலுக்கிய பொருளாதார நெருக்கடியை நேரில் அனுபவித்தவர்கள்தானே நாம். மார்க்சியம் தோற்றுவிட்டதாகச் சொல்வோர் அதற்கு முன்வைக்கும் ஒரே ஆதாரம் சோஷலிசக் கட்டுமானங்களின் வீழ்ச்சி ஒன்றுதான். ஆனால் மார்க்சியம் என்றும் சோஷலிசக் கட்டுமானம் எப்படி இருக்கும் என்றெல்லாம் சொன்னதில்லை. பல்வேறு புரட்சிக்குப் பிந்திய நாடுகள் பல்வேறு வழிகளில் சோஷலிசக் கட்டுமான முயற்சிகளை மேற்கொண்டன. சுற்றிலும் முதலாளியக் கட்டுமானங்களின் மத்தியில் அவை போராடித் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டியவையாக இருந்தன. அவற்றை வழி நடத்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் சில தவறுகளும் செய்தன. பாட்டாளிவர்க்கச் சர்வாதிகாரம் எனச் சொல்லி மக்களின் ஜனநாயக உரிமைகள் பறிக்கவும் பட்டன. இப்படியான தவறுகள் மற்றும் அதன் விளைவுகள் ஆகியன மட்டுமே மார்க்சியத்தின் தோல்வியாகி விடாது.உலகளவிலும். இந்தியாவிலும், இன்றைய இடதுசாரிகளின் நிலை பற்றி உங்கள் மதிப்பீடு?
நிறைய மாற்றங்கள் இன்று ஏற்பட்டுள்ளன. தாங்கள் மேற்கொண்ட தவறுகளையும் அவர்கள் உணர்கின்றனர். ஆனால் மார்க்சியத்திற்கு ஏற்பட்ட பின்னடைவு என்பது இதற்குத் தீர்வல்ல என்பதையும் மார்க்சியத்திற்குப் பிந்திய இன்றைய உலகம் இன்னும் ஆபத்தானது என்பதையும் அவர்கள் உணர்கின்றனர். அது குறித்து அவர்களின் கட்டுரைகள் சிலவற்றை நான் மொழிபெயர்த்து ‘நவதாராளவாதம்’ எனும் பெயரில் நூலாகவும் வெளிவந்துள்ளது. இன்றைய நவதாராளவாதத்தின் ஆபத்துக்களை அந்த மொழிபெயர்ப்புகளில் நான் விரிவாகக் கூறியுள்ளேன்.
பௌத்தம், இஸ்லாமியம், மார்க்சியம், பெரியாரியம், தலித்தியம், அம்பேத்கரியம், காந்தியம், எனப் பல்வேறு தளங்களில் பேசியும், எழுதியும், இயங்கியும் வருகிறீர்கள். இவற்றுக்கு இடையேயான ஒற்றுமை என எதைக் கருதுகிறீர்கள்?
எல்லாவற்றிலும் உள்ள நல்ல அம்சங்களை நாம் எடுத்துக்கொள்ள வேண்டியதுதான். நீங்கள் இக்கேள்வியில் குறிப்பிட்டுள்ள அத்தனை தளங்களிலும் உள்ள முக்கியமானவற்றையும், நமது சூழலில் முக்கியத்துவம் அளிக்க வேண்டியவற்றையும் நான் மிக விரிவாகவும், தெளிவாகவும் என் நூல்களின் ஊடாக முன்வைத்துள்ளேன். “இவரென்ன ஒரே நேரத்தில் கார்ல் மார்க்சையும் பேசுகிறார், இவற்றையும் பேசுகிறார்” எனத் தொடக்க காலங்களில் விமர்சித்தவர்கள் எல்லாம் இன்று இதனை ஏற்றுக் கொள்டுள்ளனர்.
என் தந்தை ஒரு நாடு கடத்தப்பட்ட கம்யூனிஸ்ட். ஒரு கூலித் தொழிலாளியாக ஒன்றாக இருந்த மலேசியா - சிங்கப்பூர் சென்ற அவர் அங்கு செயல்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியில் “தூக்கில் தொங்கிய கணபதி” முதலானோருடன் இயங்கியவர். அன்றைய பிரிட்டிஷ் அரசு கொடூரமாக கம்யூனிஸ்ட்களை வேட்டை ஆடியபோது என் தந்தையும் தேடப்பட்டார். போரில் உடைந்த கப்பலொன்று இந்தியா வழியாகச் சென்றபோது அதில் தமிழ்த் தாயகத்திற்கு அவர் வந்தார். இங்கும் அப்போது பிரிட்டிஷ் ஆட்சிதான் நடந்தது. அது அப்போது அவரைக் கைது செய்தது. எனினும் அடுத்த சில நாட்களில் அது இந்தியாவுக்குச் சுதந்திரம் அளித்துவிட்டுச் சென்றபோது அவரும் விடுதலை செய்யப்பட்டார். நாடு கடத்தப்பட்டு இந்தியாவிற்கு அனுப்பப்பட்ட ஒரு தோழரையும் அவர் தம்பியையும் தன் மகனாக ஏற்று தன் சொந்தங்களில் அவர்களுக்குத் திருமணம் செய்வித்துக் கடைசிவரை அவர்களோடு ஒரே குடும்பமாய் வாழ்ந்தவர் அவர்.
மதிப்பிற்குரிய தோழர் கே.டிகே தங்கமணி அவர்கள் சிங்கப்பூர் வந்து சுமார் இரு மாத காலம் தங்கியபோது அப்பாவின் பொறுப்பில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திலும் அவர் தங்கி இருந்தார். இதர தோழர்களுடன் என் தந்தையும் அவரும் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று இன்றும் என்னிடம் உள்ளது. தஞ்சை மாவட்டத்தில் உள்ள பாப்பாநாடு எனும் சாலை ஓரக் கிராமத்தில் அப்பாவின் இறுதிக்காலம் கழிந்தது. அன்றைய ஒன்றாக இருந்த கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் பலரும் என் சிறு வயதில் வீட்டிற்கு வந்து சென்ற நிகழ்ச்சிகளை மறக்க முடியாது. அப்பா எனக்குக் மார்க்ஸ் எனப் பெயரிட்டது மட்டுமின்றி நல்ல பல எழுத்தாளர்களையும் அவர்களின் எழுத்துக்களையும் அறிமுகப் படுத்தியவரும் அவர்தான்.
நாடு கடத்தப்பட்ட கம்யூனிஸ்டாகிய அவர் மகாத்மா காந்தியின் மீதும், நேருவின் மீதும் இறுதி வரை மிக்க மரியாதை கொண்டிருந்தார். ‘மார்க்ஸ்’ எனும் பெயரை எனக்கு இட கிறிஸ்தவ ஆலயம் மறுத்தபோது, அது குறித்துக் கவலைப்படாமல் என்னை வீட்டிற்குத் தூக்கி வந்தவர் அவர். ‘மார்க்ஸ்’ எனும் பெயருக்காக திருச்சி கிறிஸ்தவக் கல்லூரி ஒன்று எனக்கு இடமளிக்க மறுத்தபோதும் அவர் அது குறித்துக் கவலைப்படாமல் என்னை அரசு கல்லூரியில் கொண்டுவந்து சேர்த்ததையும் இந்தக் கணத்தில் உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
முற்காலத்தைவிட இன்று மதவாத அரசியல் பெரிய அளவில் முன்நகர்ந்து இருக்கிறதே, எதிர்காலத்தில் இதன் நிலை என்னவாக இருக்கும்?
இது பெரிய அளவில் கவலையையும் வருத்தத்தையும் அளிக்கும் ஒன்று. இந்தப் பின்னணியில்தான் இன்று மதவாத பா.ஜ.க அரசு இங்கு வேரூன்றி உள்ளது என்பது ஒரு மிகப்பெரிய கொடுமை. உங்கள் கேள்வியில் நீங்கள் சொல்லியுள்ளதுபோல உலக அளவில் இப்படியான ஒரு சூழல் உருவாகி உள்ளது உண்மைதான். எப்போது தொடங்கி இப்படியான போக்கு தீவிரமாக உருவாகியுள்ளது எனச் சற்று யோசித்துப் பார்த்தோமானால் உலகளவில் சோஷலிசத்தின் வீழ்ச்சிக்குப் பின்தான் இப்படியான மதவெறி உருப் பெற்றுள்ளது என்பதை உணர முடியும்.
இதன் விளைவுகள் எத்தனை கொடுமையாக இருக்கும் என்பதை விளக்க வேண்டியதில்லை. இந்தியத் துணைக் கண்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சிறுபான்மை மக்களின் ஆலயங்கள், குறிப்பாக முஸ்லிம் பள்ளிவாசல்கள் தகர்க்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்வது என்பது மிகவும் ஆபத்தான ஒன்று.
இன்றைய தமிழ்க் கலை இலக்கியச் சூழல் எவ்வாறுள்ளது?
குறிப்பிட்டுச் சொல்வதற்குப் பெரிதாக ஏதுமில்லை. நமக்கு ஒரு மிகப் பெரிய கலை இலக்கிய வரலாறு உண்டு. அவற்றின் முக்கியத்துவத்தை இளைய தலைமுறைகளுக்கு அளிப்பது அவசியம்.
சரி. தமிழ், தமிழர்கள், தமிழகம் குறித்து,,,
தமிழகம் தன்னளவில் ஒரு மிகப்பெரிய நாடு. நீண்ட வரலாறு உடைய ஒன்று. பல மத நம்பிக்கைகள் உள்ள ஒரு நாடும் கூட. இப்படியான ஒரு சூழலில் இன்று மத வெறியர்கள் மக்கள் மத்தியில் வெறுப்பு அரசியலை வெற்றிகரமாக நிறைவேற்றிக் கொண்டுள்ளனர். தமிழ் பேசும் நம் எல்லோரையும், இந்த மண்ணின் மக்களாக இதுகாறும் அறியப்படும் எல்லோரையும் மத அடிப்படையில் ஒருவருக்கு ஒருவர் எதிரியாக நிறுத்தும் அவலம் இன்று ஏற்பட்டுள்ளது. பாபர் மசூதி தகர்க்கப்பட்டது மட்டுமின்றி அரசு ஆதரவுடன் இன்று அந்த இடத்தில் ஆலயம் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. அப்படி ஒரு சாரர் இரண்டாம்தரக் குடிமக்களாக ஆக்கப்படுவது ஒட்டுமொத்தத்தில் நாட்டுக்கு நல்லதல்ல. இந்நிலையில் தமிழர்கள் எனும் அடையாளத்துடன் தமிழ் பேசும் மக்கள் அனைவரும் தங்களை அடையாளப் படுத்திக் கொள்வது இன்றைய தேவை ஆகிறது. தமிழ், தமிழர்கள் என்கிற அடையாளத்துடன் நாம் எல்லோரும் ஒன்றாவோம்.
தங்களது பழைய நினைவுகளை எழுதும்போது அற்புதமான புனைவெழுத்துச் சாத்தியம் இருந்தும் ஏன் அதில் நாட்டம் கொள்ளவில்லை. அல்லது சூழல் இல்லை எனக் கருதுகிறீர்களா?
“அற்புதமான புனைவெழுத்துச் சாத்தியம்” உள்ளவனாக என்னை வாழ்த்தியமைக்கு முதலில் என் மனமார்ந்த நன்றிகள். புனைவு எழுத்துக்களில் நாட்டம் உடையவன்தான் நான். ஐந்தாவது வகுப்புடன் ஒரு கூலித் தொழிலாளியாக மலேசியா சென்று தொழிற்சங்கம் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியில் செயல்பட்ட என் தந்தை மிகச் சின்ன வயதிலேயே புனைவு எழுத்துக்களில் என்னை ஈடுபடுத்தினார். என்னுடைய கட்டுரை ஒன்றில் நாடு கடத்தப்பட்ட என் தந்தையின் வளர்ப்பு மகன் ஒருவரைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளேன். அவர் பாப்பாநாடு எனும் என்னுடைய ஊரில் உள்ள பஞ்சாயத்து போர்டில் வேலை செய்தபோது நான் மிகவும் தாராளமாக அங்கு சென்று அங்குள்ள நூலகத்திலிருந்து புத்தகங்களை எடுத்து வருவேன். பெரும்பாலும் ஆங்கில ஆசிரியர்கள் எழுதிய தமிழ் மொழிபெயர்ப்பு நூல்கள்தான் அங்கு அதிகம் இருந்தன. அவற்றை ஆர்வத்தோடு படித்து வந்தேன். ஆனந்த விகடன், குமுதம் முதலான நூல்கள் வீட்டுக்கு வரும்.
அப்போது ஒரு இதழில் எழுத்தாளர் ஜெயகாந்தனின் ஒரு நீண்ட சிறுகதை வெளிவந்திருந்தது. அதை சுட்டிக்காட்டி அப்பா என்னைப் படிக்கச் சொன்னார். அது “சில நேரங்களில் சில மனிதர்கள்Ó என நினைவு. அது முதல் நான் ஜே.கேயின் ரசிகன் ஆனேன். அந்தக் காலகட்டத்தில் ஏராளமான நாவல்களைப் படித்துத் தீர்த்தேன்.
எழுதும் முயற்சி என்பது எனது கல்லூரி நாட்களில் உருவானபோது நான் தீவிரமான அரசியல் பார்வை உடையவனாக ஆகியிருந்தேன். பின்னாளில் சி,பி,எம் கட்சியில் நான் இணைந்து செயல்பட்ட போது கட்சி இதழில் ஏராளமான கட்டுரைகள் எழுதினேன். இரண்டு கட்டுரைகள் கட்சி நூல்களாகவும் வெளிவந்தன. இப்படித் தொடங்கியதுதான் என் எழுத்துப் பணி. அரசியல் கட்டுரைகளே ஆனாலும், நீங்களே சொல்லி இருப்பது போல, அவை இலக்கியத் தரத்துடன் அது அமைந்துள்ளது என்றால் அதன் பின்னணி இதுதான்.
இதுவரையிலான ஒட்டுமொத்த திராவிட இயக்க ஆட்சிகளைப் பற்றிச் சொல்ல முடியுமா?
பெரிதாகச் சொல்ல ஒன்றுமில்லை. நக்சல்பாரி இயக்கத்தில் செயல்பட்ட இடைக் காலத்தில் அவர்களின் “தேர்தல் பாதை திருடர் பாதை” எனும் முழக்கத்தை ஏற்றிருந்தேன். கடந்த பல ஆண்டுகளாக தேர்தல் பாதையை ஏற்றுக்கொண்ட இடதுசாரிக் கட்சிகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறேன். வாக்களிக்கும்போது இடதுசாரிக் கட்சிகளுக்கும் அவை அதரவு அளிக்கும் கட்சிகளுக்கும் வாக்களிக்கிறேன். மற்றபடி என் அரசியல் பார்வைகளை வெளிப்படையாக எழுதி வருகிறேன்.
பெரியார் நினைத்திருந்த பெண் கல்வி, முன்னேற்றம், சமூகநீதி போன்றவற்றை எட்டிவிட்டோமா?
பெரியார் நினைத்த அளவு இங்கு மாற்றங்கள் ஏற்படவில்லை. ஆனாலும் நீங்கள் குறிப்பிடும் இந்தத் துறைகளில், பிற இந்திய மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழகத்தில் சில குறிப்பிடத்தக்க வரவேற்புக்குரிய மாற்றங்கள் இங்கு உருவாகியுள்ளன என்றால் அதற்கான பெருமைகள் பெரியாருக்குத்தான் உரியது. பெரியாரின் புரட்சிகரமான கருத்துக்களுக்கு இணையாக இன்றளவும் இந்தியா முழுவதும் யாரையும் சுட்டிக் காட்டிவிட முடியாது. பெரியாரின் முக்கியத்துவத்தையும், அவரது சிந்தனைகளின் கூர்மையையும் எட்டியவர்கள் இங்கு யாரும் இல்லை. எனிலும் பெரியாரின் புரட்சிகரக் கருத்துக்களை இந்திய அளவில் கொண்டு செல்வதில் நாம் தோற்றுள்ளோம் என்றுதான் சொல்ல வேண்டும்.
சிறுபான்மை, பெரும்பான்மை மதங்களைப் பொருத்தமட்டில் நீங்கள் ஒருபக்கச் சார்பாளர் என்கிற ஒரு சராசரிக் குற்றச்சாட்டு குறித்து...
சிரிப்புத்தான் வருகிறது. இது சராசரிக் குற்றச்சாட்டு அல்ல. சராசரியைவிடக் கீழான குற்றச்சாட்டு. சிறுபான்மை மக்களுக்கு ஆதரவாகப் பேசி வருகிறேன் என்கிற பொருளில் இது கூறப்பட்டுள்ளது. இன்று சிறுபான்மை மக்கள் எந்த அளவிற்கு ஓரங்கட்டப்பட்டு பல்வேறு வகைகளில் இரண்டாம் தரக் குடிமக்களாகக் கருதப்படும் நிலை உள்ளது என்பதை நாம் ஒருவருக்கு ஒருவர் விளக்கிக் கொண்டிருக்கத் தேவையில்லை. மனச் சாட்சியுள்ள யாரும் இதை ஏற்க முடியாது.
“நானும் கோமாதாவைக் கும்பிடுகிறவன்தான். ஆனால் என்னுடைய கடவுள் எப்படி இன்னொருவரின் கடவுளாக இருக்க முடியும்?” எனக் கேட்ட மகாத்மா பிறந்த நாடு இது. அந்த மகாத்மாவையே சுட்டுக் கொன்ற நாடுதானே இது என்று நீங்கள் திரும்பிக் கேட்டால் என்னிடம் பதில் இல்லை.
தமிழகத்தில் கார்ல் மார்க்ஸ் சிலை வைக்கும் திட்டம் எந்த நிலையில் உள்ளது?
உலகமே கொண்டாடும் மாபெரும் சிந்தனையாளனான கார்ல் மார்க்சுக்கு இதுவரை தமிழகத்தில் சிலை வைக்கப்படாமை மிகவும் வருத்தத்திற்குரிய ஒன்று. இது தொடர்பாக ஒரு குழு அமைத்து கடந்த இரண்டு ஆண்டுகளாக நாங்கள் செயல்பட்டு வருவதை அனைவரும் அறிவார்கள்.
தி.மு.க அரசின் முன் எங்கள் கோரிக்கைகளைப் பலமுறை முன்வைத்திருந்தும் அது குறித்து தி.மு.க தலைமை இதுவரை கண்டுகொள்ளவில்லை. ஒரு இரண்டு நிமிடங்கள் ஒதுக்கி எங்களின் வேண்டுகோளுக்குக் காது கொடுத்துக் கேட்கவும் தலைவர்கள் தயாராக இல்லை. எங்களைக் கூப்பிட்டுக் கேட்காவிட்டாலும் பரவாயில்லை. அரசே முடிவெடுத்து அறிவித்தாலே போதும்.
கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களும் எங்கள் கோரிக்கையை முழுமையாக ஏற்று அரசை வேண்டியுள்ளனர். ஆனாலும் நமது ஆட்சியாளர்கள் மவுனம் காப்பது மிகவும் வருத்தத்திற்குரிய ஒன்று.
காரல் மார்க்சுக்குச் சிலை வைக்கக் கூடாது என யாரும் சொல்லப்போவதில்லை. உரிய நடவடிக்கை எடுக்குமாறு அரசை மீண்டும் வேண்டுகிறோம்.
- அ.மார்க்ஸ்
நேர்காணல்: ஜி.சரவணன்