உலகப் புரட்சியாளர்கள் வரிசையில் ஃபிடல் காஸ்ட்ரோவுக்கு என ஒரு தனித்துவமான இடமுண்டு. அவரின் உயரம், தோற்றப் பொலிவு, கம்பீரம், தீட்சண்யம், மன உறுதி, இலட்சியப் பிடிப்பு, எழுச்சியூட்டும் பேச்சாற்றல், தட்டியெழுப்பும் தலைமைத்தகுதி, புத்தக வாசிப்பை ஒரு தவம்போல் மேற்கொள்ளும் வாழ்வியல், ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நடத்திய வீரச்சமர் என அனைத்துமே மறக்க முடியாதவை. இவையனைத்தும் அவரைப்பற்றி அறிந்தவர்களின் ஆழ்மனதில் பதிந்து கிடப்பவை.

fidel castro 220நூல்களைப் பற்றியான ஒர் இதழில் இந்நூற்றாண்டு நாயகனைக் குறித்த ஒரு தலையங்கம் தவிர்க்க முடியாதது. தவிர்க்கக்கூடாதது. காஸ்ட்ரோவின் சிறை வாழ்க்கையும் அங்கு அவர் நடத்திய வாசிப்பு வேள்வியும் உலகப் பிரசித்தம்.

சிறைச்சாலைக்குள் ஒரு நூலகத்தை ஏற்படுத்தி அதற்கு வெளியிலிருந்து நூல்களை வரவழைத்து தான் வாசித்ததோடு, தனது சக புரட்சிகரக் கைதிகளையும் படிக்கத் தூண்டியவர் காஸ்ட்ரோ. தினசரி சிறைக் கொட்டடி திறக்கப்பட்டவுடன் காலை பத்து மணியிலிருந்து இரவு பூட்டப்படும் வரை கற்றல் – கற்பித்தல் அன்றாட நிகழ்வாக நடந்தேறியிருக்கிறது. மணிமேகலைக் காப்பியத்தில் சிறைச்சாலையை அறச்சாலையாக்கிய அற்புதத்தைக் கண்டிருக்கிறோம். அரசியல் காவிய நாயகனாக விளங்கிய காஸ்ட்ரோ தான் துன்பப்பட்டுக் கிடந்த சிறைச்சாலையை அறிவு தூண்டப்படுகிற கல்விக்கூடமாக உருமாற்றம் செய்துள்ளார். கரும்பலகையின் துணையைக் கொண்டு கற்றுத் தருகிற காரியமும் சிறையில் அரங்கேறியிருந்தது.

காஸ்ட்ரோ தாம் நிறுவிய சிறை நூலகத்திற்கு, மொன்கடா முற்றுகையின்போது குரூரமாகக் கொல்லப்பட்ட கறுப்பு இனத்தைச் சேர்ந்த கவிஞர் ராவோ கிராசியாவின் பெயரைச் சூட்டியுள்ளார்.

சிலருக்குப் பாலபாடத்திலிருந்து எழுதப்படிக்கக் கற்றுக் கொடுக்கப்பட்டது. அத்தகைய தேவையுள்ள சிலரும் அவர்களுள் இருந்தனர். மொழிப்பாடம் தனியாக எடுக்கப்பட்டது. ஆங்கிலம், ஸ்பானியமொழி, பிரெஞ்சு ஆகிய மொழிகள் ஆழமாக அங்கு கற்றுத்தரப்பட்டன. ஸ்பானியமொழித் தேர்ச்சிக்கு சிறப்பு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

உலகக் கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர்களின் வாழ்க்கை வரலாற்று நூல்கள், சிக்மண்ட் பிராய்டின் நூல்கள், ஏ.ஜே.கிரானின், டாஸ்டாவ்ஸ்கி உள்ளிட்ட நூல்கள் பாடங்களாகக் கற்றுத்தரப்பட்டன.

இரவு நேரங்களில் கொட்டடிக்குள் அடைத்துப் பூட்டப்பட்ட பின்னர் மின்விளக்கு வசதி இல்லாததால் எண்ணெய்த்திரி விளக்கில் புத்தகங்களை வாசித்து வந்தார் காஸ்ட்ரோ.

காஸ்ட்ரோ வழக்கின் இறுதி விசாரணை ஒரு தனி அறையில் நடத்தப்பட்டது. இரண்டு மணிநேர விசாரணை என்று நீதிபதி அறிவித்திருந்தார். அதில் ஒன்றரை மணிநேரம் தனது வாதங்களை ஒரு உரை பாணியில் எடுத்துரைத்தார் காஸ்ட்ரோ. விசாரணை முடிந்து வெளியில் வந்த காஸ்ட்ரோ வெளியில் நின்று கொண்டிருந்த இளம் பத்திரிகை நிருபர் ரோஜாசின் கைகளைப் பிடித்துக் குலுக்கிய பின்னர், ‘நான் எடுத்து வைத்த வாதங்களை முழுமையாகக் கேட்டு அவற்றை அப்படியே சுருக்கெழுத்தில் குறிப்பெடுத்துக் கொண்டீர்களல்லவா?' என்று கேட்டார். ‘ஆமாம்’, என்றார் நிருபர். ‘அதனை முழுமையாக மக்களுக்குக் கிடைக்கச் செய்யுங்கள்’ என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார் காஸ்ட்ரோ. அதுதான் பின்னர் 'வரலாறு என்னை விடுதலை செய்யும்' என்ற சரித்திரப்புகழ் மிக்க நூலாக வெளிவந்தது.

இந்த வழக்கில்தான் காஸ்ட்ரோவுக்கு பதினைந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை அளிக்கப்பட்டது.

இவை மற்றும் இவைபோன்ற இடையறாத போராட்டப் பயணங்களின் விளைவாக, காஸ்ட்ரோ தலைமையில் வெடித்த புரட்சி வெற்றிவாகை சூடியது. ஒரு கட்டத்தில் காஸ்ட்ரோ கியூபாவின் பிரதமரானார். பிரதமராவதற்கு முன்பிருந்தே அமெரிக்க ஏகாதிபத்தியம் பல வழிகளில் காஸ்ட்ரோவைக் கொலை செய்திட இரகசிய சதித்திட்டங்களைத் தீட்டிக் களமிறங்கியது. இத்தனை இடையூறுகளுக்கும் இடையில் காஸ்ட்ரோ சேகுவேராவுக்குக் கியூபக் குடியுரிமையை வழங்கி அவர் கியூபக் கம்யூனிஸ்ட் கட்சிப் பணிகளிலும் அரசு நிர்வாகத்திலும் பங்கேற்க வழிசெய்தார். கியூப மக்களும் இதை மகிழ்வுடன் வரவேற்றனர்.

பிரேசில், வெனிசூலா உள்ளிட்ட இலத்தீன் அமெரிக்க நாடுகளுக்கும் காஸ்ட்ரோ பயணம் மேற்கொண்டார். அங்கும் கியூபாவிலும் எழுச்சிமிக்க நான்கு மணிநேரச் சொற்பொழிவுகள் நடத்தினார். இவரது உரைகள் உலகத் தாக்கத்தை உண்டாக்கின. இவரை எப்படியேனும் முடித்துக்கட்ட வேண்டுமென முன்பை விட பலவகை இரகசிய முயற்சிகள் ஏகாதிபத்திய சதிகாரர்களால் மேற்கொள்ளப்பட்டன. அத்தனை சதிகளையும் தனது மதியாலும் அஞ்சாமையாலும் தனது அப்பழுக்கற்ற அரசியல் பலத்தாலும் கியூப மக்களின் ஏகோபித்த நல்லாதரவாலும் முறியடித்தார் காஸ்ட்ரோ.

தனது நாட்டின் வளர்ச்சிக்காக மட்டுமின்றி, வாடியும் வதங்கியும் கிடக்கிற பல நாட்டு மக்களுக்கும் கியூபா ஆதரவுக்கரம் நீட்டியது. தனது சொந்த நாட்டில் உணவு, உடை, இருப்பிடம், கல்வி, மருத்துவம் என மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொண்டே, பிற நாட்டுமக்களின் துயர்துடைக்கும் அறப்பணிகளையும் உலகமே வியக்கத்தக்க அளவில் செய்தது கியூபா.

கியூபப் புரட்சிக்குப் பிறகு, காஸ்ட்ரோவின் தலைமையிலான ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு கியூப மக்களின் வாழ்வில் ஏராளமான அடிப்படை மாற்றங்களும் முன்னேற்றங்களும் ஏற்பட்டன. ஒரு காலகட்டத்தில் கியூபாவை விட அதிகமான இத்தகைய சர்வதேச நிவாரணப் பணிகளை மேற்கொண்ட நாடு வேறு எதுவும் கிடையாது என்று சொல்லத்தக்க அளவில் அந்நாட்டின் உலக அளவிலான மனிதநேயப் பணி விளங்கியது. 1990களிலேயே தேர்ச்சி பெற்ற பத்தாயிரம் மருத்துவர்கள் பிற நாடுகளுக்குக் கியூப அரசால் அனுப்பப்பட்டு உலக மருத்துவச் சேவையை எவ்வித எதிர்பார்ப்புமின்றி செய்தனர். பல்லாயிரம் கியூப ஆசிரியர்கள் பின்தங்கிய நாடுகளுக்கு அனுப்பப்பட்டு அங்கு அறியாமையால் ஆழ்ந்து கிடக்கிற மக்களுக்குக் கல்வி வெளிச்சம் அளித்தனர்.

இத்தகைய போராட்ட வரலாற்றை, புரட்சிகர வரலாற்றை, சமத்துவ – சகோதரத்துவ வரலாற்றை, மனிதநேய வரலாற்றைத் தன்னகத்தே கொண்ட கியூபாவிற்கு இன்றளவும் அமெரிக்க ஏகாதிபத்திய சதியை எதிர்த்துப் போராடியே ஆகவேண்டிய நிலையும் நிர்பந்தமும் உள்ளதை உலகறியும்.

இது பிடல் காஸ்ட்ரோ பிறந்து நூறாவது ஆண்டு. வீரமும் – விவேகமும் – தலைமைத்துவமும் மிக்க காஸ்ட்ரோவுக்கு வீர வணக்கம் செலுத்துவோம். கியூப மக்களின் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போருக்குத் துணை நிற்போம்! தோள் கொடுப்போம்!

- உங்கள் நூலகம் ஆசிரியர் குழு

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.