தமிழ் இலக்கியப் பரப்பில் பிரபந்த இலக்கியங்கள் அல்லது சிற்றிலக்கியங்கள் குறிப்பிடத்தக்க இடத்தை வகிக்கின்றன. தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சிப் போக்கில் வெவ்வேறு காலக்கட்டங்களில் வெவ்வேறு இலக்கிய வடிவங்கள் தோன்றி வளர்ச்சிப் பெற்றுள்ளன. ஒவ்வொரு இலக்கிய வடிவமும் ஒரு குறிப்பிட்ட சமூகச் சூழலின் உந்துதலினால் தோற்றம் பெற்றன என்பதையும் அறியலாம். தமிழில் தோன்றிய சிற்றிலக்கியங்களும் இத்தகைய ஒரு பிற்புலத்திலேயே தோன்றின. பக்தி இலக்கிய மரபைத் தொடர்ந்து சிற்றிலக்கியங்கள் உருப்பெற்றன. காப்பிய இலக்கிய மரபிற்கும் சிற்றிலக்கிய மரபிற்கும் இடையில் வடிவம் சார்ந்த உறவுகள் காணப்பட்ட போதிலும் காப்பிய மரபிலிருந்து சிற்றிலக்கிய மரபு நேரடியாக மலரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவ்விரண்டு மரபுகளுக்கும் இடையில் பக்தி இலக்கிய மரபு அமைகின்றது. பக்தி இலக்கிய மரபோடு இணைந்து பிறந்த சிற்றிலக்கியங்கள் வடிவம் சார்ந்த உறவுகளில் ஒரு காலக்கட்டத்திற்கு முந்திய இலக்கிய மரபோடு தொடர்பு கொண்டிருந்தன.
சிற்றிலக்கியங்களில் ஏராளமான வகைமைகள் உள்ளன என்பதைப் பிற்காலத்தில் தோன்றிய பன்னிரு பாட்டியல் போன்ற இலக்கண நூற்கள் குறிப்பிடுகின்றன. சிற்றிலக்கிய வகைகள் பலவாக இருந்த போதிலும் பள்ளு, குறவஞ்சி, பிள்ளைத்தமிழ், உலா, அம்மானை, பரணி, தூது போன்ற ஒரு சில வகைமைகளே இலக்கிய மரபில் செல்வாக்கு செலுத்தின. அவ்வகையில் பள்ளு இலக்கியம் தமிழ்ச் சிற்றிலக்கிய மரபில் அழுத்தமான ஒரு வகைமையாக நிலைத்து நின்றது. இப்பள்ளு இலக்கியத்தின் தோற்றத்தையும் அதன் வளர்ச்சிப் போக்கையும் சமூகச் சூழல்களை அடிப்படையாகக் கொண்டு விளக்க முயல்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
பள்ளு இலக்கியத்தின் தோற்றத்தைக் குறித்துப் பேசும் இலக்கிய வரலாற்று ஆய்வாளர்கள் தொல்காப்பியத்தில் காணப்படும் எட்டு வகையான வனப்புகளையும் சுட்டிக்காட்டித் தொல்காப்பியக் காலத்திலேயே சில சிற்றிலக்கியங்கள் வழக்கில் இருந்தன என்பர். எட்டு வகை வனப்புகளில் ஒன்றாக சொல்லப்படும் புலன் என்பது பள்ளு இலக்கியத்தோடு தொடர்புப்படுத்தப்படுகிறது. தொல்காப்பியம் செய்யுளியலில் வனப்பு பற்றிக் குறிப்பிடும் நூற்பா இவ்வாறு அமைகின்றது.
தெரிந்த மொழி;யாற் செவ்விதிற்; கிளந்து
தேர்தல் வேண்டாது குறித்தது தோன்றிற்
புலனென மொழிப புலனுணர்ந் தோரே (தொல். செய்.233).
சேரி மொழியாவது பாடி மாற்றங்கள் அவற்றானே செவ்விதாகக் கூறி ஆராய்ந்து காணாமை பொருட்டொடரானே தொடுத்துச் செய்வது புலன் என்று சொல்லுவர் புலன் உணர்ந்தோர் எனப் பேராசிரியர் விளக்கம் தருவார். "அவை விளக்கத்தார் கூத்து முதலாகிய நாடக செய்யுளாகிய வெண்டுறைச் செய்யுள் போல்வனவென்பது கண்டுகொள்ள' என இதற்கு உதாரணம் எழுதினார் பேராசிரியர். பேராசிரியரும் நச்சினியார்க்கினியரும் தெரிந்த மொழி என்பதைச் சேரிமொழி எனப் பொருள் கொள்வர். "வழக்கச் சொல்லினானே தொடுக்கப்பட்டு ஆராய வேண்டாமற் பொருள் விளக்குவது புலனென்னும் செய்யுளாம்' என்பது இளம்பூரணர் உரை. விளக்கத்தார் கூத்து முதலாயின இக்காலத்து இன்னவென்றே அறியவியலாது. எனினும் செய்யுள் வனப்பில் புலன் என்பது ஒன்று எனவும், பாமரமக்கள் வழங்கும் சொற்களால் ஆக்கப்பட்டு அவர்கள் ஆடியும் பாடியும் வரும் நாடகச் செய்யுளே அதற்கு இலக்கியம் எனவும் அவர் கூறுதலால், அவர் காலத்துக்கு முன்னே அவ்வகை நூல்கள் பல இருந்தன (மு.அருணாசலம் 1945 :17).
புலன் என்பதற்குத் தொல்காப்பியர் தருகின்ற விளக்கமும் இளம், பேரா தருகின்ற விளக்கங்களும் எழுத்து மரபின் மற்றொரு முகத்தை நமக்கு எடுத்து காட்டுகின்றது. கற்றறிந்தவர்களிடம் வழக்கில் இருக்கும் இலக்கியம் ஒரு வகை, வெகுசன மக்களிடம் வழக்கில் இருக்கும் இலக்கியம் மற்றொரு வகை. கற்றறிந்தோரிடம் காணப்படும் இலக்கியங்கள் சாதாரண மக்களிடம் சென்றடைவதில்லை. இதனைப் போன்று சாதாரண மக்களிடம் வழக்கில் உள்ள இலக்கியங்களைக் கற்றறிந்தார் இலக்கியமாகக் கருதுவதில்லை. சாதாரண மக்களுக்காகப் படைக்கப்படும் இலக்கியங்கள் சாதாரண மக்களின் மொழியில் அமைவது இயல்பு. கற்றறிந்தாரின் இலக்கியத்திற்கும், சாதாரண வெகுசன மக்களின் இலக்கியத்திற்கும் இடையில் காணப்படும் இடைவெளி மிகவும் விரிந்து காணப்படுகின்றது. இதன் காரணமாக இவ்விரண்டு வகை இலக்கிய வகைமைகளுக்கும் இடையில் முரண்பாடு எப்போதும் இருந்து வருகிறது. தொல்காப்பியர் காலத்தில் இருந்து தற்காலம் வரையிலும் இம்முரண்பாடும் வெகுசன மக்களுக்காக இலக்கியம் படைத்தலும் தொடர்ந்து வந்துள்ளன என மு.அருணாசலம் குறிப்பிடுகிறார் (1945 :916)
தொல்காப்பியர் வனப்பின் ஒரு பகுதியாக புலன் என்பதைக் குறிப்பிட்டாலும் அது நேரடியாக பள்ளு இலக்கியத்தைக் குறிப்பிடுகிறது எனக் கருதும் வாய்ப்புக்கள் இல்லை. இருப்பினும் பள்ளு இலக்கியத்தின் கூறுகளை அடையாளம் காணும் வாய்ப்புக்கள் உள்ளன என்பதை மறுக்க இயலாது. பிற்காலத்தில் தோன்றிய இலக்கண நூற்களே பள்ளு இலக்கிய வகையின் இலக்கணத்தை வரையறுத்து கூறுகின்றன. பன்னிருபாட்டியல், வச்சணந்தி மாலை, நவனீதப்பாட்டியல், சிதம்பரப்பாட்டியல், பிரபந்த மரபியல், பிரபந்தத் தீபிகை, இலக்கண விளக்கப் பாட்டியல் முதலான இலக்கண நூல்களில்; பள்ளு பற்றியக் குறிப்புகள் காணப்பெறவில்லை. பன்னிருப்பாட்டியலில் உழத்திப்பாட்டு என்ற வகைமைக்குரிய இலக்கணம் தரப்பெற்றுள்ளது.
புரவலற் கூறி யவன்வா ழியவென்று
அகல்வயவ் தொழிலை யொருமை யுணர்ந்தனள்
எனவரும் ஈரைந்து உழத்திப் பாட்டே.(333)
அரசனை வாழ்த்தி உழவுத் தொழிலைக் கூறும் 10 பாட்டுக்களைக் கொண்டதாக உழத்திப்பாட்டு அமையும். “உழத்தி என்பதனால் இது பெண் பாடுவதாயிருக்கலாம். இது பள்ளுப் பிரபந்தத்தைக் குறிப்பதன்று. குறவஞ்சி குறத்திப்பாட்டு எனப் பெயர் பெற்றிருக்கலாமாயினும் இவ்விலக்கணத்தால் உழத்திப்பாட்டு பள்ளினின்றும் வேறானது என்பது தெளிவாகிறது. உழத்திப்பாட்டுக்கு இலக்கியம் இப்போது இருப்பதாகத் தெரியவில்லை'' என மு.அருணாசலம் குறிப்பிடுகிறார்(1945:1819).
உழத்திப்பாட்டே பள்ளு என்றும் பள்ளும் உழத்திப்பாட்டும் வேறு வேறு என்றும் இருவேறு கருத்து வேறுபாடுகள் உள்ளன. பதினான்காம் நூற்றாண்டில் தோன்றிய நவநீதப்பாட்டியல் 44 பிரபந்த வகைகளை விளக்குகின்றது. இவற்றுள் பள்ளு இடம்பெறவில்லை. ஆனால் பிற்காலத்தில் சேர்க்கப்பெற்றதாகக் கருதப்பெறும் பாடல்களில் உழத்திப்பாட்டு விளக்கப்பெற்று இது பள்ளு என்றும் அழைக்கப்பெறும் எனக் குறிப்பிடப்பெற்றுள்ளது.
செவ்விதிற் பாடு மதுஉழத்திப் பாட்டு பள்ளுமென்பர்
நவ்வி எனக்கண் மடவீர் பிறவிதம் நாட்டுவரே.
நவநீதப்பாட்டியல் உழத்திப்பாட்டுக்குத் தரும் விளக்கம் முக்கூடற்பள்ளுவின் அமைப்பை அப்படியே பிரதிபலிப்பதாக உள்ளது. எனவே தான் நவநீதப்பாட்டியல் பள்ளு இலக்கிய வகையையும் உழத்திப்பாட்டையும் ஒன்றாகவே கருதியது எனலாம். வீரமாமுனிவரால் ஆக்கப் பெற்ற சதுரகராதியின் தொகை அகராதியில் பிரபந்தங்கள் குறித்த விளக்கங்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றுள் உழத்திப் பாட்டுக்கு அவர் தரும் விளக்கம் நவநீதப்பாட்டியலை அப்படியே பின்பற்றியதாகத் தெரிகிறது. சதுரகராதி கி.பி 1732 ல் ஆக்கப்பெற்றது. முக்கூடற்பள்ளு 1680 எழுதப்பெற்றது. எனவே முக்கூடற்பள்ளிற்குப் பின் தோன்றிய நவநீதப்பாட்டியலும் சதுரகராதியும் உழத்திப்பாட்டைப் பள்ளு என்ற இலக்கிய வகைமையாகக் கருதியதில் வியப்பில்லை.
பெரும்பாலான இலக்கண நூற்கள் அவை எழுந்த காலத்தில் கிடைக்கப்பெற்ற பள்ளு இலக்கியங்களைக் கொண்டு இலக்கணம் தந்துள்ளன. பெரும்பான்மையான இலக்கணிகள் முக்கூடற்பள்ளை அறிந்துள்ளனர். எனவே அவர்கள் தரும் இலக்கணங்களும் முக்கூடற்பள்ளை அடிப்படையாகக் கொண்டே அமைந்திருந்தன. முக்கூடற்பள்ளு தோன்றிய காலக்கட்டத்தில் “மன்னார் மோகனப்பள்ளு'' என்ற நூல் எழுந்ததாக சொல்லப்படுகிறது. இந்நூலில் ஆற்று வெள்ளவரவு, மாட்டுவகை, விதைவகை, நடுகைசிந்து ஆகியவை இடம் பெற்றிருந்தன. எல்லா பாடல்களும் "பள்ளீரே' என்று முடிவடைந்துள்ளன. பாட்டின் சந்தம் முக்கூடற் பள்ளுவில் பயின்று வந்த சிந்து சந்தத்தில் அமைந்திருந்தது. இந்நூலில் பொதுபள்ளின் கதைப் போக்குக்குரிய சிலதனி அங்கங்கள் உள்ளனவே அன்றி இலக்கண நூற்களில் கண்ட செய்திகள் முழுமையும் இல்லை என்று மு.அருணாசலம் குறிப்பிடுகின்றார் (1945:2324).
தமிழில் முதலில் தோன்றிய பள்ளு இலக்கியம் எது என்பதில் கருத்து வேறுபாடுகள் உள்ளன. சிலர் முக்கூடற் பள்ளே முதலில் தோன்றியது எனவும் வேறுசிலர் "மன்னார் மோகன பள்ளுவே' முதலில் தோன்றியது எனவும் குறிப்பிடுகின்றனர். இவ்விரண்டு பள்ளுகளும் தோன்றுவதற்கு முன்னர் வேறுசில பள்ளு இலக்கியங்களும் இருந்திருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது. இக்கருத்து வேறுபாடுகளின் காரணமாகவும் உரிய சான்றாதாரங்கள் கிடைக்கப் பெறாமையாலும் பள்ளு இலக்கியத்தின் தோற்றத்தைத் தெளிவாக வரையறுத்துக் காண இயலவில்லை என அறிஞர்கள் கருதுகின்றனர். எவ்வாறாயினும் பள்ளு இலக்கிய வகை தமிழில் 17 நூற்றாண்டில் தான் தோன்றியது என்பதில் கருத்து வேறுபாடு இல்லை.
பள்ளர் வாழ்க்கையைப் பற்றி கூறுவதால் இது பள்ளு இலக்கியம் என அழைக்கப்பெற்றது. திருநெல்வேலி, தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் இவ்வகைமை செல்வாக்கு பெற்றிருந்ததாகச் சொல்லப்படுகிறது. ஏழை பள்ளன், பள்ளியரது வாழ்க்கையில் நிகழும் நிகழ்ச்சிகளை எளிய நடையில் சித்தரிப்பது பள்ளு இலக்கியத்தின் அடிப்படையாகும்.
பள்ளு கதை ஒன்றை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கும். பண்ணை ஒன்றில் வேலை செய்யும் இரு மனைவியரைக் கொண்ட பள்ளனின் வாழ்க்கையைச் சித்தரிப்பதாக அமையும். பண்ணையில் நிகழும் பயிர் தொழில், பள்ளன் விவசாயத்தையும் மாடுகளையும் கவனிக்கும் முறை, மாட்டுவகைகள், விதைவகைகள், மூத்தப்பள்ளிக்கும், இளையப்பள்ளிக்கும் இடையே நிகழும் சண்டை. இந்தச் சண்டையில் பண்ணையார் தலையீடு செய்தல் இறுதியில் மூத்தபள்ளியும் இளையபள்ளியும் சமரசமாகி பள்ளனோடு சேர்ந்து வாழ்தல் ஆகிய கதைக்கூறுகள் காணப்படும். இக்கதையமைப்பு பெரும்பான்மையான பள்ளு இலக்கியங்களுக்குப் பொதுவானதாகும். பிற்காலத்தில் தோன்றிய பள்ளு இலக்கியங்களில் இக்கதைக் கூறுகள் விரிக்கப்பெற்றும் சுருக்கப் பெற்றும் அமைந்திருப்பதைக் காணலாம்.
தமிழ்ச் சூழலில் பள்ளு இலக்கியங்கள் தோன்றிய காலச் சூழல் இன்றியமையாதது. நீண்ட கதை அமைப்புடைய காப்பிய இலக்கியங்களைத் தொடர்ந்து கதை அமைப்புடைய பிறிதொரு இலக்கிய வகை தோன்றுவது மரபு. இத்தகைய தொடர்ச்சி காப்பிய இலக்கியத்திற்கும் சிற்றிலக்கியத்திற்கும் இருந்தது. ஆனால் காப்பியங்களுக்கும் சிற்றிலக்கியங்களுக்கும் இடையில் பக்தி இலக்கியம் என்ற ஒரு நீண்ட பரப்பு வந்தமைகிறது. காப்பியங்களின் தொடர்ச்சியாக சிற்றிலக்கியங்கள் தோன்றவில்லை என்பதும் காப்பிய வடிவத்தின் சிதைவுற்ற வடிவமாக சிற்றிலக்கியம் அமைந்தது என்பதும் வரலாற்றுச் சூழல்களின் விளைவாகும்.
எனவே பள்ளு நூல்களின் காலமாகிய 17,18 ஆம் நூற்றாண்டுகளில் தமிழகத்தில் நிலையான, வலுவான, மையப்படுத்தப்பட்ட ஆட்சி இல்லை எனத் தெளிவாகிறது. ஓயாத போர்கள், நிலவுடமைக் குடும்பங்களின் வாரிசுச் சண்டைகள், அராஜக நிலை, கொடூரமான அதிகாரத்துவம், விவசாயத்தில் தேக்கநிலை, மக்களின் இழிநிலை ஆகியவற்றின் மத்தியிலேயே தான் இலக்கியம் ஒரே தடத்தில் சுழன்று கொண்டிருந்தது (கோ.கேசவன் 1981:2122). தமிழகத்தில் பேரரசுகளின் வீழ்ச்சியும் நிலையற்ற அரசியல் சூழல்களும் இலக்கிய வளர்ச்சிப் போக்கைப் பெருமளவில் பாதித்தது. சோழர்காலம் விஜயநகர பேரரசு காலம் ஆகியவற்றில் நிகழ்ந்த வளர்ச்சிப் போக்கு அதற்கு அடுத்த காலக்கட்டத்தில் முன் எடுத்து செல்லப்படாமல் தொய்வடையத் தொடங்கியது.
அக்காலத்திய அன்றாட நிகழ்வான போர்களில் பெரும் பங்கு செலவாயிற்று. நிலவுடமைக் குழாம்களின் முரண்பாடுகள் காரணமாக ஏற்பட்ட போர்களில் ஆளும்வர்க்கம் தன்னை ஈடுபடுத்திக் கொண்டது. மராட்டியர்கள், கன்னடர்கள், நாயக்கர்கள், மறவர்கள், முசுலீம்கள் ஆகிய அனைத்து நிலவுடமை குழாம்களின் போர் பந்தாட்டக் களமாகவே 17,18 ஆகிய நூற்றாண்டுகளில் தமிழகம் காட்சியளித்தது. இதில் டச்சு, போர்த்துகீசியா, பிரிட்டன் போன்ற நாடுகளும் தத்தம் பங்கை அந்தந்த நேரங்களில் ஆற்றின. தமிழகத்தில் இந்த இரண்டு நூற்றாண்டுகளில் நடந்த போர்களைப் போல வேறு எந்தக் காலத்திலும் நடந்திருக்குமா என்பது ஜயமே. இத்தகைய போர்களில் பெரும் தொகை செலவாயிற்று எனலாம் (கோ.கேசவன் 1981 :2930). தமிழகத்தின் அரசியல் சூழல் நெருக்கடியான சூழலில் இருந்தது என்பதை அறிய முடிகிறது. பொருளாதார நெளிவு, உற்பத்தியில் தோய்வு, சமூக இணக்கமற்ற நிலை ஆகியவை இக்காலக் கட்டங்களில் நிலவியது. இதே காலக்கட்டத்தில் ஏற்பட்ட பல்வேறு பஞ்சங்கள் சாதாரண குடிமக்களைப் பெருமளவில் பாதித்தது. “நிலவுடமை வர்க்கம் உற்பத்தி சக்திகளின் தேக்கத்தினால் வளர்ச்சி குன்றி உள்முரண்பாடுகளினால் பலவீனமாகி அரசியல் சமூக குழப்பங்களினால் சூழப்பட்டிருந்த காலத்து இலக்கியமாகவே பள்ளு நூலைக் காண்கிறோம்'' என்கிறார் கோ.கேசவன் (1981:39).
தமிழகத்தில் நிலைத்திருந்த சமயமரபு உயர்குலத்தவர்களையும், தாழ்ந்த குலத்தவர்களையும் பிரித்து வைத்திருந்தது. ஆளும்வர்க்கத்தினரின் நிருவாக அமைப்பாகவும், களஞ்சியங்களாகவும் திகழ்ந்த பெரும் பகுதிகளில் தாழ்ந்த குலமக்கள் அனுமதிக்கப்படவில்லை. பெருந்தெய்வங்கள் புனிதமானதாகவும் அவை நிலை பெற்றிருந்த இடங்கள் தூய்மையானவையாகவும் கருதப்பட்டன. அத்தெய்வங்களின் புனிதத் தன்மையைக் காத்தல் பொருட்டு தாழ்ந்த குலமக்கள் கோயில் வெளிகளுக்குள் விலக்கப்பட்டிருந்தனர். தீட்டு என்னும் கருத்தாக்கம் உயர்குலத்தவரின் வழிபாட்டு வெளிகளையும், சாதிப்பிரிவுகளையும் தங்களின் வசதிக்கேற்ற வகையில் பிரித்து ஒதுக்க வழி செய்தது. இது சமய மரபுகளின் ஒழுக்கமாக நெடுங்காலமாக ஒழுகப்பட்டு வந்தது.
17,18ம் நூற்றாண்டுகளில் நிலவிய அரசியல் சமூகச் சூழல்களும் சமயத்தின் ஒடுக்குமுறைகளும் தாழ்ந்தகுல மக்களின் சமூக உளவியலில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதன் காரணமாக ஒடுக்குமுறைகளிலிருந்து ஏதேனும் ஒரு வகையில் தப்பித்துக் கொள்ளும் வழிகளைத் தேட ஆரம்பித்தனர். இச்சூழலில் தமிழகத்தின் பல பகுதிகளில் அறிமுகமான கிறித்தவம் அவர்களுக்குப் பிரகாசமான எதிர்காலமாகத் தோன்றியது. எனவே ஒடுக்கப்பட்ட மக்கள் கிறித்தவத்தைத் தழுவத் தொடங்கினர். கிறித்தவத்தின் பரவல் சமய ஒடுக்கு முறைகளுக்கு அச்சுறுத்தலாக அமைந்தது. எனவே தமிழகத்தில் 16,17,18 ஆகிய நூற்றாண்டுகளில் சமூகத் தாழ்நிலை மனிதர்களிடத்தில், குறிப்பாக பள்ளர்களிடத்தில் பரவத் தொடங்கிய கிறித்துவச் சமயத்திற்கு எதிராக, பள்ளர்களைத் தம் சமயத்துக்குள்ளே இருக்கச்செய்யும் சைவ, வைணவ சமயங்களின் சமய இலக்கிய அளவிலான உத்தியே பள்ளு நூல்கள் எனும் தனிப்பிரபந்த வகையின் தோற்றத்திற்கு ஒரு காரணம் எனலாம் (கோ. கேசவன் 1981:60,61).
சைவ, வைணவ சமயங்கள் சமூக அடுக்குகளிலும் சமய மரபுகளிலும் பேணி பாதுகாத்து வந்த படிநிலை அமைப்பு கிறித்தவத்தின் வளர்ச்சியால் நெகிழ்வடைந்துவிடும் என்ற அச்சம் அவற்றிற்கு ஏற்பட்டன. தங்களுக்கு வசதியாக சமூக அமைப்பைக் காப்பாற்றிக் கொள்ள தங்களுக்குள் உள்முரண்பாடுகளைக் கொண்ட சைவத்திற்கும், வைணவத்திற்கும் பொதுத்தளத்தில் சமரசம் செய்து கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டது. தாங்கள் விலக்கி வைத்திருந்த சமூகக் குழுக்கள் இன்னொரு திசை வெளிக்குச் செல்வதைத் தடுப்பதற்காக பெருந்தெய்வங்களைத் தாழ்ந்தகுல மக்களும் சொந்தம் கொண்டாடும் வகையில் புதிய உறவுமுறை புராணங்களை உருவாக்கினர். இதற்குப் பள்ளு இலக்கிய வகை வசதியாக அமைந்தது.
பெருந்தெய்வக் கோயில்களுக்கு மானியமாக வழங்கப்பட்ட நிலங்கள் மிகுதியாக இருந்தன. சில கோயில்களுக்குப் பல கிராமங்கள் மானியமாக வழங்கப்பட்டதும் உண்டு. இவ்வாறாக இருந்த கோயில் நிலங்களில் விவசாயம் செய்ய பண்ணையடிமைகள் இருந்தனர். இப்பண்ணை அடிமைகளின் உழைப்பிலேயே கோயில் பொருளாதாரம் நிலைத்திருந்தது. இத்தகைய பண்ணையடிமைகளாகப் பள்ளர்கள் இருந்தனர் என்பதைப் பள்ளு இலக்கியங்கள் தெரிவிக்கின்றன. இப்பண்ணை அடிமைகள் கோயில்சார் நிலங்களை விட்டு வெளியேறாமல் பாதுகாக்க வேண்டிய தேவை கோயில் நிருவாகத்திற்கு இருந்தது. இத்தகைய நிலையைக் கிறித்தவத்தின் பரவல் சைவ, வைணவ கோயில்களுக்கு ஏற்படுத்தியது.
சைவமும், வைணவமும் தத்துவ நிலையில் முரண்பட்டவை. ஒன்றை ஒன்று ஏற்றுக் கொள்வதில்லை. இவற்றிற்கிடையில் சமயப் பூசல்களும், பகைமைகளும் நீண்ட காலமாகவே இருந்து வந்தன. “தமிழ்நாட்டை ஆண்ட விசயநகர மன்னரும், நாயக்க மன்னரும் வைணவர் அல்லது வீரசைவராக இருந்ததால், சைவசித்தாந்தத்திற்கு விசேட அரசியல் ஆதரவு கிடைக்கவில்லை. எனவே தமிழ்நாட்டில் முடிவில்லா சமய வாதங்கள் நடைப்பெற்றன. சமய பக்தியுள்ளவர்களுக்கு அலுப்பும், சலிப்பும் ஏற்படத்தக்க அளவுக்கு இந்த வீண்வாதங்கள் வளர்ந்து வந்தன. சமய வாழ்க்கைக்குச் சமயத் தத்துவத்தைக் காட்டிலும் சமய அனுபவமே முக்கியம் என்றுணர்ந்த சைவப் பெரியார்கள் சமரசம் போதிக்கத் தொடங்குதலைக் காணலாம்.'' என்கிறார் ஆ.வேலுப்பிள்ளை (1969:142). சைவ, வைணவத்திற்குப் பொது எதிரியாகக் கிறித்தவம் பார்க்கப் பெற்றது. கிறித்தவம் அடித்தட்டு மக்களைத் தன்வசம் ஈர்க்கும் போக்குடையதாக அமைந்ததால் சைவமும், வைணவமும் அடித்தட்டு மக்களைத் தன்னிடம் தக்கவைத்துக் கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதாயிற்று. எனவே சைவமும் வைணவமும் தமக்குள் இருந்த உள்முரண்பாடுகளைத் தள்ளி வைத்துவிட்டு அடித்தட்டு மக்களிடம் தங்களுக்குள் பிணைப்பு இருப்பதைக் காட்ட முனைந்தன. இதற்காக அடித்தட்டு மக்களை மையமாகக் கொண்ட இலக்கியங்களை உருவாக்கின. அவற்றுள் பள்ளு இன்றியமையாத இடத்தை வகிக்கின்றது.
கோயில் நிலங்களில் பண்ணையடிமைகளாக இருந்த பள்ளர்களின் வாழ்க்கை இலக்கியத்தின் பாடு பொருளாக்கப்பட்டது என்பது இயல்பான நிகழ்வு அன்று. அக்காலக்கட்டத்தில் நிகழ்ந்த சமூக அசைவியக்கங்களே இதற்குக் காரணம் என்பதை மனதில் கொள்ள வேண்டும். பள்ளு இலக்கியங்கள் காப்பியங்களைப் போன்று கற்பனையான பண்பாட்டு வெளியைக் கொண்டமையவில்லை. இவ்விலக்கியங்கள் அடித்தட்டு மக்களிடையே புழங்க வேண்டும் என்பதற்காகவே அவர்களது வெளியையும், வாழ்வியலையும் பாடுபொருளாக்கிக் கொண்டன. “ஆலயங்களில் திருவிழா நடந்த காலத்து மக்கள் அவ்வத்தலத்துக்குரிய பள்ளையும் குறவஞ்சியையும் பாடியும் கூத்தாக ஆடியும் அனுபவித்து வந்தார்கள். திருவாருரிலே திருவிழாவுக்காகக் கொடியேற்றும் போதும் இறக்கும் போதும் அத்தலத்துக்குரிய பள்ளும் குறவஞ்சியும் பாடி நடிக்கப்பட்டு வந்தன. தஞ்சை இராசராசேச்சுரத்திலும் அப்படியே. திருநெல்வேலி எங்கும் முக்கூடற் பள்ளு இவ்விதம் பாடியாடப்பெற்றது. கோலாட்டத்திற்கேற்ற பாட்டாயிருந்தது இது'' என்கிறார் மு.அருணாசலம்(1945:45) எனவே இவ்விலக்கியங்கள் அடித்தட்டு மக்களிடம் செல்வாக்குப் பெற்றிருந்தன என்பது தெளிவு.
இவ்வாறு பள்ளு இலக்கியம் அடித்தட்டு மக்களிடம் எளிதில் செல்வாக்குப் பெற அவ்விலக்கியங்கள் பள்ளர்களின் இனவரைவியலை உரையாடல் பாணியில் அமைத்துக் கொண்டது மற்றொரு காரணமெனலாம். பள்ளர்களின் இயல்பான பண்ணை வாழ்க்கையும், விவசாயம் செய்யும் முறை, நெல்வகை, மழை, மாட்டுவகை, ஏர்க்கால்வகை, நடவு, அறுவடை, நெல் அறுத்தல், தெய்வ வழிபாடு என வேளாண்வாழ்க்கை யதார்த்தமாக வருணிக்கப்பெற்றுள்ளது. மூத்தபள்ளி, இளையபள்ளி, பள்ளன் ஆகியவர்களின் ஊர்கள் கூட கற்பனைக் களங்களாக அமையவில்லை. பள்ளு இலக்கியங்கள் குறிப்பட்ட குழு ஒன்றின் வேளாண்வாழ்க்கை இனவரைவியலைப் பதிவுச்செய்துள்ளன என்பதை அவ்விலக்கியங்களைப் படிப்பவர்கள் வெளிப்படையாகவே உணர்வர்.
பள்ளு இலக்கியத்தின் மூலம் தொல்காப்பியத்தில் இருப்பதாகச் சுட்டினாலும் அது 16 ஆம் நூற்றாண்டிலேயே தனி இலக்கிய வகைமையாகப் பரிணமித்துள்ளது என்பதை அறியமுடிகின்றது. உழத்திப்பாட்டும், பள்ளு இலக்கியமும் தொடர்புடையவைப் போன்று காணப்பெற்றாலும் அவை வெவ்வேறானவை என்பதை உணரமுடிகின்றது. பள்ளு இலக்கியம் தோன்றுவதற்கும் வேகமாக வளர்ச்சி பெறுவதற்கும் தமிழகத்தில் 16, 17 ஆம் நூற்றாண்டுகளில் நிலவிய அரசியல், சமய சூழல்கள் காரணமாக அமைந்தன என்பதும் தெளிவாகின்றது. இக்காலக்கட்டத்தில் தமிழகத்தில் கிறித்தவம் அடித்தட்டு மக்களிடம் வேகமாக பரவியதால் சைவ, வைணவ சமயங்கள் தங்களது கட்டுக்குள் வைத்திருந்த அடித்தட்டு மக்களைத் தங்களுக்குள் நிலைநிறுத்திக் கொள்ள பலவகையான சமரசங்கள் செய்யவேண்டியதாயிற்று. அத்தகைய சமரசப் போக்கின் ஒரு அடையாளமே பள்ளு இலக்கியம் எனக் கருதலாம்.
துணை நின்ற நூற்கள்
1. அருணாசலம் மு. (ப.ஆ),1945: முக்கூடற்பள்ளு
2. கேசவன் கோ .,1991: பள்ளு இலக்கியம் ஒரு சமூகவியல் பார்வை, சிவகங்கை : அன்னம் (பி) லிட.;
3. வெள்ளைவாரணன் க. (உ.ஆ.), தொல்காப்பியம் செய்யுளியல் : உரைவளம், மதுரை : மதுரைகாமராசர் பல்கலைக்கழகம்.
4. வேலுப்பிள்ளை ஆ .,1969 : தமிழ் இலக்கியத்தில் காலமும் கருத்தும், சென்னை : தமிழ்ப் புத்தகாலயம்.