முதுநிலை மருத்துவப் படிப்புக்கான ‘நீட்’ தேர்வும், வெளிநாடுகளில் மருத்துவம் படித்தவர்களுக்குத் தகுதித் தேர்வாகவும் ஒன்றிணைந்த நெக்ஸ்ட்’ (National Exit Test- NExT) தேர்வு முறையைக் கொண்டு வர தேசிய மருத்துவ ஆணையம் முடிவு செய்துள்ளது.
எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ். மருத்துவ மாணவர்கள் நெக்ஸ்ட் தேர்வில் வெற்றி பெற்றால் ஒழிய பயிற்சி மருத்துவர் ஆக முடியாது.
எம்.பி.பி.எஸ்., இறுதியாண்டு பயிலும் மாணவர்கள், நெக்ஸ்ட் முதல் நிலைத் தேர்வில் வெற்றி பெற்றால்தான் பயிற்சி மருத்துவராக முடியும். அடுத்து நெக்ஸ்ட் இரண்டாம் நிலைத் தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே முதுநிலை மருத்துவப் படிப்பில் சேர முடியும். அயல் நாடுகளில் மருத்துவப் படிப்புப் படித்தவர்களுக்கு இந்தத் தேர்வு கட்டாயமாகும்.
“கல்வியில் நீட் தேர்வு மூலம் மாநில உரிமையைப் பறித்ததுபோல், தற்போது ‘நெக்ஸ்ட்’ (NExT) என்ற தேர்வு மூலமும், அனைத்து இடங்களுக்குமான ஒற்றைச் சாளர மாணவர் சேர்க்கை மூலமும் மாநில உரிமையைப் பறிப்பதற்கான முயற்சிகளை ஒன்றிய பா.ஜ.க அரசு தொடங்கியுள்ளது கண்டனத்துக்கு உரியதாகும்” என்று இத்தேர்வு மாநில உரிமையைப் பறிப்பதாக ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
மருத்துவப் படிப்பில் நீட் தேர்வைக் கொண்டு வந்ததால் தமிழ்நாட்டில் ஏழை பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, கிராமப்புற மாணவர்கள் மன உளைச்சளுக்கு ஆட்பட்டுப் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
பா.ஜ.கவினால் கொண்டு வரப்படும் இப்படிப் பட்டத் தகுதித் தேர்வுகள் மூலமாக பொருளாதார வளமிக்க, குறிப்பிட்ட மேட்டுக்குடிச் சமூகத்தவர்கள் மட்டுமே பெரிதும் பயன் பெறுவார்கள்.
அதனால் அடுத்த ஆண்டு நடைமுறைப்படுத்த இருக்கும் NExT (நெக்ஸ்ட்) தேர்வையும், நடைமுறையில் இருக்கும் NEET ( நீட்) தேர்வையும் ரத்து செய்ய வேண்டும்.
இப்போது கொண்டு வந்திருக்கும் நீட் தேர்வுக்கு முன்னர் மருத்துவம் படித்த தமிழ் நாட்டு மருத்துவர்கள் மிகத் திறமையாளர்கள் என்பதை மறுக்க முடியுமா?
இந்திய ஒன்றியத்திலேயே 1976 ஆம் ஆண்டில் சென்னை, கோடம்பாக்கம் விஜயா மருத்துவமனையில் முதல் Open heartic Surgery யை வெற்றிகரமாக செய்துள்ளார்கள்.
எனவே நீட், நெக்ஸ்ட் தேர்வுகள் தான் மருத்துவர்களின் தகுதியை உயர்த்தும் என்று பிடிவாதம் பிடித்தால், ஏழை, எளிய மருத்துவ மாணவர்கள் எதிர்காலத்தில் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.
கடைசியாகக் கிடைத்த செய்தியின்படி நெக்ஸ்ட் தேர்வை தேசிய மருத்துவ ஆணையம் ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளது. ஒத்திவைப்பது தீர்வல்ல, அதை ரத்து செய்ய வேண்டும்.
- எழில்