நீட் தேர்வு என்னும் சமூக அநீதி குறித்து தமிழகம் எங்கும் விவாதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கு, இந்தியா முழுமைக்குமான ஒரு பொது நுழைவுத் தேர்வினைக் கொண்டுவரும் முயற்சி 2010ஆம் ஆண்டில் மத்திய அரசு (இந்திய மருத்துவக் கவுன்சில்) தொடங்கிய காலத்தில் இருந்தே தமிழகம் அதனை உறுதியுடன் எதிர்த்து வருகிறது. தமிழகத்தின் பிரதான கட்சிகள் அனைத்தும், இந்த விசயத்தில் ஒரே கருத்துடன் இருந்திருக்கின்றன.
மருத்துவக்கல்வி: கடந்து வந்தவை
நுழைவுத் தேர்வு குறித்து தமிழ்நாடு கொண்டிருக்கும் நிலைப்பாடு என்பது அனுபவப் பூர்வமானது. 1984 ஆம் ஆண்டு வரை தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரி சேர்க்கை என்பது, நேர்முகத் தேர்வின் ((Interview) அடிப்படையில் நடந்து வந்தது. அந்த முறையைக் கைவிட்டு, 1984 ஆம் ஆண்டுமுதல் மாநில அளவிலான நுழைவுத்தேர்வினைத் தமிழக அரசு அறிமுகப்படுத்தியது. மாநில அரசின் பள்ளி பாடத்திட்டத்தின் அடிப்படையில் அந்தத் தேர்வு முறை இருந்துவந்தது.
ஒப்பீட்டளவில் நேர்முகத்தேர்வு முறையை விட, நுழைவுத்தேர்வு என்பது, சார்புநிலையற்ற தேர்வு முறையாக இருந்தது. ஆனால் காலப் போக்கில், தமிழகமெங்கும் நுழைவுத்தேர்வுப் பயிற்சி மய்யங்கள் தோன்றி, நுழைவுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கான உத்திகளைக் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தன. பொருளாதார வசதி குறைந்தவர்களுக்கும், கிராமப்புறங்களில் வசிப்பவர் களுக்கும், நகரங்களில் கிடைக்கும் நுழைவுத்தேர்வு பயிற்சிகள் கிடைக்காத காரணத்தினால், அவர்கள் பெருமளவு மருத்துவக்கல்லூரிகளில் சேர முடியாத நிலை ஏற்பட்டது.
இந்தச் சூழலைச் சரி செய்வதற்காக, 1989 ஆம் ஆண்டு, அப்போது ஆட்சியில் இருந்த திமுக அரசு, முதல் தலைமுறை மாணவர்களுக்கு போனஸ் மதிப்பெண்களாக 5 புள்ளிகள் வழங்கும் ஒரு முறையைக் கொண்டுவந்தது. ஓரிரு ஆண்டுகள் அந்தத் திட்டம் நடைமுறையில் இருந்தது. பிறகு உயர் நீதிமன்றத் தலையீட்டினால், அது கைவிடப்பட்டது.
பிறகு 1996 ஆம் ஆண்டு மீண்டும் ஆட்சிக்கு வந்த திமுக அரசு, கிராமப்புற மாணவர்களுக்கு 15 சதவீதம் உள்இடஒதுக்கீடு வழங்கும் முறையைக் கொண்டுவந்தது. சில ஆண்டுகள் நடைமுறையில் இருந்த அந்தத் திட்டம், மீண்டும் உயர்நீதிமன்றத் தலையீட்டினால் கைவிடப்பட்டது.
இறுதியாக, 2006 ஆம் ஆண்டு, அதுவரை தமிழக அரசு நடத்திவந்த நுழைவுத் தேர்வு முறையைக் கைவிட்டது. அதன் பிறகு குறிப்பிடத் தக்க எண்ணிக்கையில், கிராமப்புற மாணவர் களுக்கும், முதல் தலைமுறைப் பட்டதாரி மாணவர் களுக்கும் மருத்துவம் படிக்கக்கூடிய வாய்ப்பு கிடைக்கப்பெற்றது.
எனவே, தமிழகம் நுழைவுத்தேர்வு வேண்டாம் என்கிற முடிவுக்கு வருவதற்கு முன்பு பல சோதனை முயற்சிகளைச் செய்து அதன் படிப்பினைகளின் அடிப்படையில்தான் இந்த முடிவிற்கு வந்திருக் கிறது.
நீட் டை ஏன் எதிர்க்கிறோம்?
நாம் நீட் தேர்வினை எதிர்ப்பது, அது ஒரு நுழைவுத் தேர்வு என்கிற காரணத்திற்காக மட்டு மல்ல, கூடுதலாக வேறு சில முக்கியமான காரணங் களும் உள்ளன.
1. நீட் தேர்வு மத்திய அரசுப் பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படுகிறது.
2. மாநில அரசு தன்னுடைய சொந்த நிதி ஆதாரத்தில் நடத்துகிற மருத்துவக் கல்லூரிகளில் மாநில அரசு எப்படி மாணவர் சேர்க்கை நடத்துவது என்கிற உரிமையைப் பறிக்கிறது.
3. ஐ.ஐ.டி. போன்ற கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவிகளின் எண்ணிக்கை என்பது மிக மிக குறை வானதாக, 10ரூ என்கிற அளவில்தான் இருக்கிறது. அதற்கு முக்கியக் காரணம், நம் நாட்டில், இலட்சக் கணக்கில் பணம்கட்டி கோச்சிங் சென்டர்களில் பெண் குழந்தைகளைப் படிக்க வைக்க, பெற்றோர்கள் தயாராக இல்லை. ஆனால், கடந்த ஆண்டுவரை, தமிழகத்தில் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தவர்களில் 50 ரூ மேல் மாணவிகளே இருந்தனர். நீட் தேர்வு என்கிற நுழைவுத் தேர்வு பெண் கல்வியில் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தும்.
4. ஒரு மாணவர், 3 முறை நீட் தேர்வினை எதிர்கொள்ளலாம். அதாவது, இந்த ஆண்டு போதிய மதிப்பெண்கள் கிடைக்கவில்லை என்றால், கூடுதலாக பயிற்சி எடுத்துக்கொண்டு, அடுத்த ஆண்டு மீண்டும் எழுதலாம். அதற்கு அடுத்த ஆண்டும் எழுதலாம். பெரும்பாலும், கிராமப்புற மாணவர்களும், ஏழை - நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களும், இத்தகைய முயற்சிகளை துணிச்சலாகச் செய்ய மாட்டார்கள். நடப்பு ஆண்டில் தேர்வு எழுதுகிற முதல் தலைமுறை மாணவர்களையே இது பெரிதும் பாதிக்கும்.
5. தமிழ்நாட்டில் 69 சதவீத இடஒதுக்கீடு நடை முறையில் இருக்கிறது. மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கையைப் பொறுத்தவரை, கடந்த ஆண்டுவரை, இடஒதுக்கீடு செய்யப்படாத 31 சத இடங்களிலும் பெரும்பாலான இடங்களை இடஒதுக்கீட்டு பிரிவினரே பெற்றுவந்தனர். தோராயமாக, 90 சத இடங்களை இடஒதுக்கீடு பெற்ற பிரிவினரான, பி.சி, எம்.பி.சி, எஸ்.சி, எஸ்.டி பிரிவினரே பெற்றுவந்தனர். நீட் நுழைவுத் தேர்வு என்பது இந்த சூழலைப் பாதிக்கும்.
இந்த ஆண்டு நீட் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடந்து முடிந்து விட்டது. 2016ஆம் ஆண்டிலும், 2017ஆம் ஆண்டிலும் மருத்துவக்கல்லூரியில் இடம்பிடித்த மாணவர்களின், சமூகரீதியிலான பகுப்பாய்வினை அட்டவணையில் காணவும். இடஒதுக்கீடு இல்லாத பிரிவினர், அதாவது முன்னேறிய சாதியினர் (எஃப்.சி), இந்த ஆண்டு கூடுதலாக 245 இடங்களைப் பெற்றிருக்கிறார்கள். பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் (பி.சி) சேர்ந்த மாணவர்கள், இந்த ஆண்டு 280 இடங்களைக் குறைவாகப் பெற்றிருக்கிறார்கள். மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் (எம்.பி.சி), 39 இடங்களையும், பட்டியல் சாதியினர் (எஸ்.சி), 15 இடங்களையும் கடந்த ஆண்டைவிடக் குறைவாக பெற்றிருக்கிறார்கள்.
நீட் தேர்வு இழைத்திருக்கும் அநீதிகளி லெல்லாம் பெரும் அநீதியாக நாம் பார்க்க வேண்டியது, சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவர்கள் பெற்றிருக்கும் இடங்கள். மொத்த மாணவர் எண்ணிக்கையில், வெறும் 5 சதம் கூட இல்லாத சி.பி.எஸ்.சி. பள்ளி மாணவர்கள், சுமார் 35 சத மருத்துவக்கல்லூரி இடங்களைப் பெற்றிருக் கிறார்கள். கடந்த ஆண்டு 64 இடங்களை பிடித்த வர்கள், இந்த ஆண்டு 1220 இடங்களை பிடித்திருக் கிறார்கள்.
நாம் கவனிக்கவேண்டிய இன்னொரு விசயம், முந்தைய ஆண்டுகளில் 12 ஆம் வகுப்புத் தேர்வு எழுதிய மாணவர்கள், இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதிப் பெற்றிருக்கும் மருத்துவ இடங்கள், மாநில பாடத்திட்டத்தில் படித்து, இந்த ஆண்டு மருத்துவ கல்லூரியில் இடம் பெற்றிருப்பவர்களில் 43 சதம் மாணவர்கள் இந்த ஆண்டு 12 ஆம் வகுப்பு எழுதிய மாணவர்கள் அல்ல.
அதேபோல, மத்திய அரசுப் பாடத்திட்டத்தில் படித்து, மருத்துவக்கல்லூரியில் இடம் பிடித்தவர் களில், 28 சதம் மாணவர்கள் இந்த ஆண்டு 12 ஆம் வகுப்புத் தேர்வு எழுதியவர்கள் இல்லை. வசதி வாய்ப்பு பெற்றவர்கள், மூன்று நான்கு ஆண்டுகள் கூட நீட் தேர்வுக்குப் பயிற்சி எடுத்து மருத்துவக் கல்லூரியில் இடம் பிடிக்க முடியும் என்பதைத்தான் இது காட்டுகிறது.
அரசுப்பள்ளியில் படித்து, இந்த ஆண்டு மருத்துவக்கல்லூரியில் இடம் பிடித்தவர்கள் வெறும் 5 பேர் மட்டும்தான். தமிழ்வழியில் படித்து இடம் பிடித்தவர்களின் எண்ணிக்கை இன்னமும் தெரியவில்லை.
மொத்தமாகப் பார்க்கும்போது, நீட் தேர்வு என்கிற பெயரில், ஒரு பலமுனைத் தாக்குதல் தமிழ் நாட்டு மாணவர்கள் மீது தொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்திருக்க வேண்டிய மாணவர்களில் சுமார் 2500 மாணவர்கள், தங்கள் மருத்துவக் கனவைப் பலிகொடுத்திருக் கிறார்கள்.
மத்திய ஆர்.எஸ்.எஸ் / பாஜக அரசின் நய வஞ்சகச் சூழ்ச்சி, உச்சநீதிமன்றத்தின் அலட்சியம், மாநில அதிமுக அரசின் கையாலாகாத்தனம் அனைத்தும் சேர்ந்து தமிழ்நாட்டின் சமூகநீதிப் பாரம்பரியத்தின் மீது ஒரு தாக்குதலை நிகழ்த்தி யிருக்கிறது.
இதிலிருந்து நாம் எப்படி மீள்வது? நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு நிரந்தர விலக்கு பெறுவது நம்முடைய முதல் இலக்காக இருக்க வேண்டும். அரியலூர் மாணவி அனிதாவின் மரணம் நம் மக்களிடம் மிகப்பெரிய எழுச்சியையும் விழிப்புணர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழகத்தில் நிலவும் நிலையற்ற அரசியல் சூழல் காரணமாக, மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்புகள் தென்படுகின்றன. சுயமரியாதை உணர்வுகொண்ட ஒரு மாநில அரசு அமையும் பட்சத்தில், எளிமையாக மீட்டெடுக்கப்படக்கூடிய ஒரு உரிமைதான் நீட் விலக்கு என்பது.
எனவே, மக்களிடம் தற்போது ஏற்பட்டி ருக்கும் இந்த எழுச்சி என்பது, நீட் தேர்வு விலக்கு என்பதோடு மட்டும் முடிந்துவிடாமல், கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவருவது, ஐஐடி, எய்ம்ஸ் போன்ற மத்திய அரசு கல்விநிறுவனங்களில் நம் மாணவர்கள் நுழைவதற்குத் தடையாக இருக்கிற நுழைவுத்தேர்வுகளை ஒழிப்பது போன்ற பெரிய இலட்சியங்களை நோக்கி நாம் நம் கோரிக்கை களையும் போராட்டங்களையும் வலுப்படுத்த வேண்டும்!