இவ்வளவு காலமாகச் செயல்பட்டு வந்த இந்திய மருத்துவக் குழுவுக்கு மாற்றாகத் தேசிய மருத்துவ ஆணையத்தைக் கொண்டுவந்துள்ளது நடுவண் பாசக மோடி அரசு. கடந்த 2010-ம் ஆண்டிலேயே இந்திய மருத்துவக் குழுவில் அதன் தலைவராக இருந்த மருத்துவர் கேதன் தேசாய் செய்த மாபெரும் ஊழல் காரணமாகக் கலைக்கப்பட்டுவிட்டது.
2017ம் ஆண்டு முதல் தேசிய மருத்துவ ஆணையத் தை கொண்டு வர முயற்சி செய்த பா.ச.க. அரசு தற்போது தனது நோக்கத்தை நிறைவேற்றிக் கொண்டது.
இந்திய மருத்துவக் குழு தன்னாட்சி பெற்ற அமைப்பாக இருந்தது. இந்திய மருத்துவக் குழு 160க்கும் மேலான உறுப்பினர்களைக் கொண்டது அதில் மூன்றில் 2 பங்கு உறுப்பினர்கள் மருத்துவர்களால் ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
ஆனால் தற்போது வந்துள்ள தேசிய மருத்துவ ஆணையத்தில் 25 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். உறுப்பினர்கள் மருத்துவர்களாலும் மாநிலங்களாலும் தேர்ந்தெடுக்கப்படாமல் நடுவண் அரசால் நேரடியாக நியமிக்கப்படும் உறுப்பினர்கள் ஆவார்கள்.
இந்திய மருத்துவக் குழு ஊழல் நிறைந்ததாக மாறிவிட்டது. அது தனது நோக்கத்தை நிறைவேற்ற வில்லை. அது தனது பணியைச் செய்வதில் இருந்து தவறிவிட்டது. மருத்துவக் கல்வித் துறையில் பெருகிவிட்ட ஊழலைக் கட்டுப்படுத்த இந்திய மருத்துவக் குழுவால் முடியவில்லை. நாட்டில் போதுமான மருத்துவர்களை உருவாக்க குழு முயற்சி எடுக்கவில்லை என்று அதன் மீது குற்றச்சாட்டுகள் பல ஆண்டுகளாக வைக்கப்பட்டு வருகின்றன . இவை அனைத்தும் உண்மையும்கூட .
இந்தக் குளறுபடிகளைக் களைவதற்காகத்தான் தேசிய மருத்துவ ஆணையம் கொண்டுவரப்படுகிறது என்று சொல்கிறார்கள் .
அதற்கான திறன் புதிய ஆணையத்திற்கு இருக்கிறதா என்று பார்ப்போம்.
தேசிய மருத்துவ ஆணையம் சட்ட முன்வரைவு என்ன சொல்கிறது ?
இப்புதிய ஆணையத்தில் நான்கு தன்னாட்சி பெற்ற குழுக்கள் செயல்படும்.
1) எம்.பி.பி.எஸ். உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளை நிர்வகிக்கும். மருத்துவ கல்வியின் தரத்தை நிர்ணயிக்கும். நீட் தேர்வை நடத்தும்.
2) மருத்துவ பட்ட மேற்படிப்புகளை நிர்வகிக்கும்
3) மருத்துவக் கல்வி நிலையங்களை ஆய்வு செய்து அவற்றுக்குத் தர மதிப்பீடு வழங்கும்
4) மருத்துவ அறம் மற்றும் மருத்துவர் பதிவுப் பட்டியலை நிர்வகிக்கும் தேசிய அளவில் பதிவு பெற்ற மருத்துவர்கள் பட்டியலையும் சமூக சுகாதார வழங்குனர் பட்டியலையும் பராமரிக்கும்.
சமூக சுகாதார வழங்குனர்
தேசிய மருத்துவ ஆணையம் கிராமப்புறங்களில் உள்ள மருத்துவர் பற்றாக்குறையைத் தீர்ப்பதற்காகச் சமூக சுகாதார பணியாளர்களை உருவாக்கப் பரிந்து ரைக்கிறது. இவர்கள் பதிவுபெற்ற மருத்துவர்களில் மூன்றில் ஒரு பங்கு இருப்பார்கள்.
இவர்கள் நவீன மருத்துவமுறையைக் கையாள் வார்கள் என்று தெரிகிறது. ஏற்கனவே ஊர்ப்புற மருத்து வர்கள் என மூன்று ஆண்டுப் படிப்பு வந்தது. அதனு டைய மறுவடிவம்தான் சமூகச் சுகாதார வழங்குனர்கள்.
இதற்கு முன்பு பிரிட்ஜ் கோர்ஸ்என்று ஆறு மாத பயிற்சி அளித்து சித்தா , ஆயுர்வேத, யுனானி, ஓமியோ, யோகா இயற்கை மருத்துவம் படித்தவர்களை நவீன அலோபதி மருத்துவராக ஆக்கப்போவதாக நடுவண் அரசு சொல்லி வந்தது. இத்திட்டம் இந்தியா முழுவதும் மருத்துவர்களின் கடும் எதிர்ப்புக்கு உள்ளானது .
அதனால் அத்திட்டத்தை கைவிட்டுவிட்டு தற்போது மருத்துவத்துறையில் பணிபுரியும் செவிலியர் மருந்தாளு னர் எக்ஸ்ரே எடுப்பவர் ஆய்வக நுட்பனர், கட்டு கட்டுவது போன்ற வேலைகளைச் செய்யும் செவிலியர் உதவியா ளர்கள் போன்றவர்களுக்கு ஆறுமாத பயிற்சி அளித்து அவர்களை ஊர்ப்புறங்களில் நவீன மருத்துவம் செய்ய அனுமதி தரப் போவதாக நடுவண் அரசின் தேசிய மருத்துவ ஆணையம் தீர்மானித்துள்ளது. முதற்கட்டமாக இத்தகைய துணை மருத்துவப் பணியாளர்கள் மூன்றரை இலட்சம் பேருக்கு பயிற்சி அளிக்க இருப்பதாகத் தெரிகிறது.
இம்முடிவு முற்றிலும் எதிர்க்கப்பட வேண்டிய கைவிடப்பட வேண்டிய முடிவாகும்.
ஏனென்றால் கிராமப்புறங்களில் உள்ள ஏழை எளிய மக்களின் உயிரோடு விளையாடும் முடிவாகும்.
போதுமான மருத்துவர்களை உருவாக்கவில்லை என்று இந்திய மருத்துவக்குழு மீது குற்றம்சாட்டப்பட்டது. அதே பாதையில்தான் தேசிய மருத்துவ ஆணையமும் செல்கிறது.
போதுமான தகுதியான எம்.பி.பி.எஸ். படித்த மருத்துவர்களை உருவாக்காமல் ஆறு மாத பயிற்சி கொடுத்து துணை மருத்துவப் பணியாளர்களை மருத்துவம் செய்ய உருவாக்குகிறது.
நீட் மற்றும் நெக்ஸ்ட் தேர்வு
தேசியத் தகுதிகாண் மற்றும் நுழைவு தேர்வு' நாடு முழுமைக்கும் பொதுவாக ஒரே சீரான தேர்வாக முன்மொழியப்பட்டுள்ளது தவறான தகவல் ஆகும். இதுபோன்ற கல்வி நிறுவனங்களுக்கு இந்த தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தேர்வானது கொண்டுவரப்பட்டதன் முதன்மை நோக்கமே, தனியார் மருத்துவ கல்லூரிகளில் திறமைக்கு மதிப்பின்றி பணம் முன்னுரிமை பெற்றதைக் கூறினார்கள். ஆனால், வந்த பிறகு, அந்த நோக்கத்திற்கு முரணாக, நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் 2017-18, 19 கல்வி ஆண்டின் மாணவர் சேர்க்கையில், ஆண்டுக் கல்வி கட்டணத்தை 2 முதல் 5 மடங்கு வரை உயர்த்தி, தேர்வின் அடிப்படை நோக்கத்தையே தோற்கடித்தன. மேலும் நாடாளுமன்ற நிலைக்குழு தன்னுடைய அறிக்கையில் மிகத்தெளிவாக, தேர்வில் பங்கு கொள்ள விருப்பம் இல்லாத மாநில அரசுகளுக்கு தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருக்கிறது.
எனினும், அந்த முக்கியப் பரிந்துரையை இந்தச் சட்ட முன்வரைவு புறந்தள்ளி யிருப்பது, அனைத்து மாநிலங்களையும் தன் கட்டுப் பாட்டில் நிற்கச் செய்யும் மத்திய அரசின் எதேச்சாதிகாரச் செயல் ஆகும். இது நடுவண் அரசின் அதிகாரக் குவிப்பின் வெளிப்பாடே. இப்படியான ஒரு செயல், தமிழ் நாடு, கேரளா போன்ற மாநிலங்களில் அந்தந்த மாநில சூழ்நிலைகளுக்கு ஏற்ப பின்பற்றபட்டு வந்த பலவகை யான, சமத்துவமான மருத்துவக் கல்லூரி சேர்க்கை முறையை அழித்தொழித்துவிட்டது. 50 சதவிகித கட்டண நிர்ணய விதிமுறை எதிர்காலங்களில் தனியார் கல்வி கட்டணம் மேலும் உயரவே வழிகோலும்.
தனியாரில் மருத்துவம் ஏற்கனவே பெருநிறுவன மயமாகி விட்டது. தற்போது மருத்துவக் கல்வியும் பெருநிறுவன மயமாகிக் கொண்டுள்ளது.
தேசியத் தகுதிச்சான்றுடைமைத் தேர்வு' (அல்லது) மருத்துவ மாணவர் மேல் சுமத்தப்படும் கூடுதல் சுமை. ஐந்தரை ஆண்டுகள் மருத்துவக் கழகமும், தேசிய ஆணையமும் வரையறுத்து, சான்றளித்த பல்வேறு வகையான தேர்வுகளை எழுதி தேர்ச்சி பெற்ற பின்னர், மேலும் ஒரு தேர்வை எழுதச் சொல்வது மருத்துவ மாணவர்கள் மீது ஏற்றப்படும் கூடுதல் சுமை. மேலும், இது நம் நாட்டில் ஏற்கனவே தட்டுபாடான நிலையில் உள்ள மருத்துவ மனித வளத்தை மேலும் நலிவடையச் செய்யும். இத் தகுதிச்சான்றுடைமை தேர்வை முதுநிலை நுழைவுத் தேர்வோடு இணைக்க உள்ளதாக கூறப் பட்டுள்ளது மேலும் குழப்பத்தையே தருகிறது.
ஆனால், தகுதிச்சான்றுடைமைத் தேர்வு உள்ளபடியே நம் இந்திய நாட்டிற்கு தேவையற்ற ஒன்று. இவ்வாறு இளம் மாணாக்கர் மேல் தேர்வுகளைத் திணிப்பதற்கு மாறாக, தேசிய மருத்துவ ஆணையம், மருத்துவ கல்வி கற்கும் ஆண்டுகளில் மருத்துவ மாணவரின் திறன் மற்றும் அறிவு மேம்பாடு அடைய ஆக்கபூர்வமான நடவடிக்கை களில் ஈடு பட வேண்டும். நெக்ஸ்ட் போன்ற தேர்வுகளால் மாணவர்கள் நோயாளிகளிடம் மருத்துவமனைகளில் கற்றுக்கொள்வதை குறைத்துக்கொண்டு நெக்ஸ்ட் தேர்வு பயிற்சி மையங்களில் தமது காலத்தையும் பணத்தையும் செலவழிப்பார்கள். இதனால் இளம் மருத்துவர்களின் திறமையும் பயிற்சியும் வீணடிக்கப்படும்.
தற்போது இந்தியா முழுவதும் ஓராண்டில் 500 மருத்துவக் கல்லூரிகளில் இருந்து சுமார் 68,000 எம்பிபிஎஸ்மருத்துவர்கள் படித்து முடித்து வெளியே வருகிறார்கள் இவர்களில் சுமார் 23 ஆயிரம் பேர்தான் முதுநிலைபட்ட மேற்படிப்புகளில் சேர்கிறார்கள். மீத முள்ள 45 ஆயிரம் இளம் மருத்துவர்கள் ஒன்று வேலை தேடுகிறார்கள் அல்லது முதுநிலைப்பட்ட மேற்படிப்புக் கான நீட் பிஜி பயிற்சி மையங்களில் சேர்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் புதிதாக வருகின்ற பல்லாயிரக் கணக்கான எம்.பி.பி.எஸ். மருத்துவர்கள் வேலை வாய்ப்பு இன்றி உள்ளனர். அவர்களுக்கு அரசு வேலை தருவதைப் பற்றி புதிய ஆணையம் எதுவும் சொல்லவில்லை.
ஆனால். சமுதாய சுகாதார வழங்குனர்களை உருவாக்கி அவர்களை நவீன மருத்துவம் செய்ய அனுப்புவது முட்டாள்தனமான பொதுமக்கள் உயிருக்கு கேடு விளை விக்கும் செயலாகும். இந்தியாவில் நகர்ப்புற பணக்கார வர்க்கத்தினருக்கு அனைத்துப் பயிற்சிகளும் பெற்ற சிறப்பு மருத்துவர்கள். கிராமப்புற ஏழை எளியோருக்கு அரைகுறை பயிற்சிபெற்ற மருத்துவர்கள் என்று அரசாங் கமே முடிவு செய்வது வேதனையான ஒன்றாகும்.
மருத்துவக் கல்வியில் வணிகமயக் கல்விக் கொள்ளை தடுக்கப்படுமா?
நீட் தேர்வைக் கொண்டு வரும்போது என்ன சொன்னார்கள். மருத்துவக் கல்வியில் வணிகமயம் பெருகிவிட்டது கல்விக் கொள்ளை அதிகமாக நடக்கிறது. அதனைத் தடுப்பதற்குத்தான் நீட் தேர்வு. நீட் தேர்வால் தகுதியான மருத்துவர்கள் உருவாகி வருவார்கள் என்று சொன்னார்கள். அவர்கள் சொன்ன நோக்கம் இரண்டு மூன்று ஆண்டுகளிலேயே தோல்வி அடைந்து விட்டது முன்பு மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கு நன்கொடை யாக கொடுத்தவர்கள் இப்போது அதையே கட்டணமாகக் கொடுத்துக் கொண்டுள்ளனர்.
டாக்டர் ராய் சவுத்ரி கமிட்டி 2014 நாடாளுமன்ற நிலைக் குழு அறிக்கை 92-ஆவது குறிப்பில் கூறுகிறது “தனியார் மருத்துவக்கல்லூரிகளின் தவறான நடவடிக் கையைக் கட்டுப்படுத்தத்தான் இவற்றை நாங்கள் கொண்டு வருகிறோம் மாநில அரசுகள் இவற்றை விரும்பவில்லை என்றால் கட்டாயப்படுத்தக்கூடாது என்று சொன்னது. ஆனால் இந்தப் பரிந்துரைகளை எல்லாம் நடுவணரசு மீறிவிட்டது. இன்று நீட் நெக்ஸ்ட் போன்ற தேர்வுகளின் மூலம் மாநில அரசுகளின் உரிமையை நடுவண் அரசு பறித்துவிட்டது. தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் கிராமப்புற அரசு மருத்துவர்களுக்கு இருந்த சர்வீஸ்கோட்டா அழிக்கப்பட்டுவிட்டது.
டிஎம், எம் சி ஹெச் போன்ற உயர் சிறப்பு மருத்துவ பட்ட மேற்படிப்புகளில் மாநில அரசுப் பங்கினை இல்லா மலாக்கி அகில இந்தியத் தொகுப்பில் சேர்த்து விட்ட அரம்பத் தனமான போக்கு கண்டிக்கத்தக்கது. இதனால் தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்கு எதிர்காலத்தில் சிறப்பு நிபு ணர்கள் பற்றாக்குறை ஏற்பட அனைத்து வாய்ப்புகளும் உண்டு.
முன்பு இருந்த இந்திய மருத்துவக் குழு கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டது. ஓரளவு சனநாயகத் தன்மையுடன் செயல்பட்டது. மருத்துவர்கள் தங்களுக்குள் வாக்களித்து தேர்வு செய்கிற அமைப்பாக இருந்தது. ஆனால்,' தேசிய மருத்துவ ஆணையம் அதற்கு நேரெதிராக மாநிலங்களின் பங்களிப்பு எதுவும் இன்றி நடுவண் அரசால் தனக்குத் தேவையான நிர்வாக அதிகாரிகளை நேரடியாக நியமிக்கும் வகையில் உள்ளது. தேசிய மருத்துவ ஆணையத்தில் ஒரு நேரத்தில் 6 மாநிலங்களின் பிரதிநிதிகள்தான் இடம்பெறுவார்கள் . மற்ற 23 மாநிலங்களின் பிரதிநிதிகள் குழுக்களில் எப் போதுமே பங்கேற்க முடியாது என்ற நிலைதான் உள்ளது.
ஒரு மாநிலம் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் இவ்வமைப்பில் இடம் பெற முடியும் என்றவாறு விதிகள் உள்ளன.
தேசிய மருத்துவ ஆணையம் என்பது அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது.
கூட்டாட்சித் தத்துவத்திற்கு, சமூக நீதிக்கு எதிரானது தேசிய மருத்துவ ஆணையம். மருத்துவம் என்பது மாநிலப் பட்டியலில் உள்ளது. பொது சுகாதாரம் மருத்து வம் அனைத்துமே மாநில அரசுகளால் நிறைவேற்றப்பட வேண்டிய செயல்களாகும். ஆனால் தேசிய மருத்துவ ஆணையம் மாநில உரிமைகளைப் பறிக்கின்ற வகை யில் விதிகளைக் கொண்டுள்ளது.
“மாநில அரசுக்குக் கொடுக்கப்பட்டுள்ள உரிமை அரசியல் சட்டத்தால்தான் கொடுக்கப்பட்டுள்ளது தவிர நடுவண் அரசால் கொடுக்கப்படவில்லை எனவே அந்த எல்லைக்கோட்டை நடுவணரசு நினைத்தபோது எல்லாம் மாற்ற முடியாது” என்று மேதை அம்பேத்கர் 25.11.1949 இல் அரசமைப்பு அவையில் குறிப்பிட்டார். ஆனால் இன்றைய நடுவண் அரசு, மாநில அரசு உரிமைகளை முற்று முழுதாகவே அழித்துக் கொண்டிருக்கிறது. அதற்குச் சிறப்பான எடுத்துக்காட்டு தேசிய மருத்துவ ஆணையம்.
மேலும் மேலும் கடினமான விதிகள் மூலம் உள்நாட்டு மருத்துவர்களை ஒடுக்குவது, மாணவர்களை அதிலும் ஏழை எளிய மாணவர்களை நீட் போன்ற தேர்வு மூலம் மருத்துவக் கல்வியின் பக்கம் திரும்பாமல் பார்த்துக் கொள்வது. மருத்துவக் கல்வியை 100 விழுக்காடு தனியார் மயமாக்குவது, மருத்துவ சிகிச் சையை 100 விழுக்காடு பெருநிறுவன மயமாக்குவது, காப்பீடு மயமாக்குவது. தனியார் சிறு மருத்துவமனை களை விரைவில் மூட வைப்பது, அல்லது பெருநிறு வனங்களின் கிளைகளாக மாற்றுவது. இதுவே நோக்கம்.
இந்திய அரசே!
மக்களுக்கு எதிரான
மருத்துவர்களுக்கு எதிரான
மாணவர்களுக்கு எதிரான
மாநில உரிமைகளுக்கு எதிரான
தேசிய மருத்துவ ஆணைய சட்ட முன்வடிவை திரும்பப் பெறு!
மருத்துவம், மருத்துவக் கல்வி இவற்றை மாநில அரசிடமே வழங்கு!
மருத்துவக் கல்வியை மருத்துவ சேவையை இலவயமாக்கு!
மருத்துவம் மக்களுக்கானது. மத்திய அரசுக்கானதல்ல பெருநிறுவன கொள்ளையர் களுக்கானதல்ல..