“ஹாதியா” எனும் பெயர் தற்போது பரபரப்பாகப் பேசப்படும் பெயராக மாறிப்போயிருக்கிறது.

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தைச் சேர்ந்த அசோகன் என்பவரது மகள் அகிலா. தான் விரும்பிய இசுலாமிய மதத்திற்கு மாறியதையும், இசுலாமிய மதத்தைச் சார்ந்த ஷபின் ஜகான் எனும் இளைஞரை திருமணம் செய்து கொண்டதையுமே தற்போது மிகப்பெரிய பிரச்சினையாக காட்ட முயல்கிறது பார்ப்பனியம்.

அகிலாவாக இருந்தவர் ஹாதியாவாக மாறியதாலேயே அரசும், இந்துத்வாவும், பார்ப்பனீய ஊடகங்களும், உலகமே அழிந்துவிடுவதைப்போல் துள்ளி குதிக்கின்றன.

ஒருவேளை ஹாதியாவாக இருந்தவர் அகிலாவாக மாறியிருப்பாரானால் “ஆஹா ஓஹோ” வென ஹாதியாவை புகழ்ந்து தள்ளியிருப்பார்கள். ஏன் மெத்தப்படித்தவர்கள் கூட மதம் மாறியதற்காக அவரை மனதாரப் பாராட்டியிருப்பார்கள்!

நான் இப்போது பாதுகாப்பான சூழ்நிலையில் உள்ளேனா என்பதைக் கூட என்னால் கூற முடியவில்லை என ஹாதியா பேட்டி அளித்துள்ளார்.

இதன் பொருள் என்ன? ஏகாதிபத்தியப் பார்ப்பனீயம் தன்னைச் சிறைப்படுத்தி வைத்திருக்கிறது என்பதையே அப்படிச் சொல்லியிருக்கிறார் ஹாதியா.

tamilmaravanஇந்த நாட்டில் தான் விரும்புகிற மதமோ, கட்சியோ, வாழ்க்கைத் துணையோ, தொழிலோ எதுவாயினும், அரசியலமைப்பிற்கு உட்பட்டு தேர்ந்தெடுத்துக் கொள்கிற உரிமை, வயதுவந்த (னீணீழீஷீக்ஷீ) ஒவ்வொருவருக்கும் உண்டு. எனினும் பார்ப்பன மனுநீதியை மறுக்கின்ற, எதிர்க்கின்ற அனிதாவாக இருந்தாலும், ஹாதியாவாக இருந்தாலும் இங்கே அவர்களின் குரல்வளை முறிக்கப்படுவதும், உரிமைகள் மறுக்கப்படுவதுமே நடைமுறையாக உள்ளது.

விரும்பி, சட்டப்படி திருமணம் செய்து கொண்ட இருவரை விலக்கி வைத்து, வீட்டுச் சிறையில் அடைப்பது எந்த சட்டத்தின் அடிப்படையில் என்பது புரியவில்லை. ஏனெனில் இங்கே நடைமுறையிலிருப்பது இந்துத்வாவின் பார்ப்பனீய மனுதர்மச் சட்டமே!

இப்படிச் சொல்வதற்கு ஆதாரமுண்டா எனக் கேட்கலாம். இதோ கடந்த 2016 ஆகஸ்ட் மாதம்

கோவை வேளாண் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் காமராஜ்& சத்தியஜோதி தம்பதியினர் தங்களின் இரு மகள்களான கீதா, லதாவை ஜக்கிவாசுதேவ் மூளைச்சலவை செய்து போதைப்பொருள் கொடுத்து மயக்கி மொட்டை அடித்துத் துறவரம் எனச் சித்ரவதை செய்கின்றார். எங்கள் மகள்களை மீட்டுத்தாருங்கள் எனக் கதறினரே! நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனரே! நினைவிருக்கிறதா?

அப்போது நாங்கள் மேஜர் எங்களுக்குத் துறவறத்தைத் தேர்தெடுத்துக் கொள்ள எல்லா உரிமையும் இருக்கிறது எனச் சொன்ன கீதா, லதாவின் பதிலை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், ஹாதியாவின் நியாயமான கோரிக்கைகளை செவிமடுக்கத் தயாராகவே இல்லை.

அறிவுக்குப் பொருந்தாத பொய்ப் புகாரின் அடிப்படையில் தன்னிடம் ஒரு கைபேசிகூட இல்லாத ஹாதியாவை, ஐ.எஸ் தீவிரவாதியா என தேசியப் புலனாய்வு ஆய்வு செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம், ஜக்கியின் ஈஷா மையம் குறித்த விசாரனையை மட்டும் கண்டும் காணாமல் கடந்துவிட்டதை மறக்க முடியுமா?

ஹாதியாவின் இசுலாமிய தோழிகளின் தந்தை, கணவர், நட்புகள் என அனைவரையும் விசாரனை, கைது என அலைக்கழிக்கும் அரச பயங்கரவாதம் ஜக்கியின் அறுந்த கால் செருப்பைக் கூடத் தொட்டுப் பார்க்க இயலவில்லை என்பதே கசப்பான உண்மை.

இந்தியாவில் அதிகார வர்க்கமான பார்ப்பனீயமும், அதன் சேனைகளும் ஒடுக்கப்பட்ட மக்களையும், பெண்களையும், இசுலாமியர்களையும் எப்படிப் பார்க்கிறது, நடத்துகிறதென்பதைத் தெளிவாக உணரும் தருணமிது.

நீதிமன்றம் கருணையோடு!!! உனக்கு என்ன தேவை? எனக் கேட்டபோது

“என்னைச் சுதந்திரமாக வாழவிடுங்கள்” என்ற ஹாதியாவின் முழக்கம், எழுபதாண்டுகால சுதந்திரநாடு என்பது ‘இந்து ராஷ்டிர’த்தின் மறு உருவமென்பதை அம்பலப்படுத்துகிறது.

“ஓர் இளம் பெண் நள்ளிரவில் அச்சமேதுமின்றி தன்னந்தனியாக என்று நடமாட முடிகிறதோ அன்றே பூரண சுயராஜ்யம் பெற்றவர்களாவோம்“ என்ற காந்தியார் உயிருடன் இருந்திருப்பாரானால் இந்திய கட்டமைப்பின் மீது காறி உமிழ்ந்திருப்பார்!

ஆம் தோழர்களே!

‘நமது அசோக சக்கரத்தின்

நான்கு சிங்கங்கள்

மிகவேகமாக

ஓநாய்களாக மாறிவிட்டன”

எனும் மனுஷ்யபுத்திரனின் வார்த்தைகளே நிழலாடுகின்றன.

அத்துனை இந்துத்வா ஓநாய்களின் வெறிபிடித்த ஓலத்திலும் கலங்காமல் “என் கல்விக்கு நீங்கள் என்ன செலவு செய்வது? என் கணவர் இருக்கிறாரே” என்ற ஹாதியாவின் குரல் ஓங்கி மதவெறியின் செவிட்டில் அறைந்தற்கு ஒப்பாகும்.

சமூக நீதிக்கெதிரான பார்ப்பனீயத்தின் ஒடுக்குமுறைக்கு எதிராக என்றென்றும் அனிதாக்களும், ஹாதியாக்களும் கிளர்ந்தெழுவார்கள்! அவர்களுக்குத் துணையாகத் தந்தை பெரியாரும் பயணித்துக் கொண்டேயிருப்பார்.

சட்டப்பூர்வமாக நமது உரிமைகளை பெற முடியும். நீதிமன்றத்தின் மூலம் நீதியை நிலை நாட்டி விடலாம் என்ற கனவுக்கோட்டையைத் தகர்த்தெறிந்துவிட்டு, உறுதியான போராட்டத்தின் மூலமே நமது உரிமைகளைப் பெற முடியும் எனும் பெரியாரியப் பாதையைத் தேர்ந்தெடுக்கிற சூழலைப் பெரியாரியல் வார்த்தெடுக்கும்!

திராவிட மண்ணிலிருந்து புறப்படும் பெரியாரின் புரட்சிகரச் சிந்தனைகளை எதிர்கொள்ள நேரிடும் பார்ப்பனீயத்தின் நிலை இனி வீழ்ச்சியடையும்.  

Pin It