தலையங்கம்

முஸ்லீம்கள் அனைத்துத் துறைகளிலும், புறக்கணிக்கப்பட்டு உள்ளார்கள் என்பது மறுக்கப்பட முடியாத உண்மை. எனவே தான் மன்மோகன் சிங் தலைமையிலான ஆட்சி உருவாக்கிய குறைந்தபட்ச வேலைத் திட்டத்தில், சிறுபான்மையினருக்கு இழைக்கப்பட்டுள்ள இந்த அநீதிக் களையப்படும் என்று அறிவித்தது. அதனடிப் படையில், ராஜேந்திரசச்சார் தலைமையில் மத்திய அரசு குழு ஒன்றை அமைத்துள்ளது.

அந்தக் குழு பல்வேறு துறைகளில் முஸ்லீம்களின் பிரதிநித்துவம் பற்றிய தகவல்களைத் திரட்டி வரும் நிலையில், ராணுவத்தில், முஸ்லீம்களின் எண்ணிக்கைப் பற்றிய தகவல்களையும் கேட்டிருந்தது. பார்ப்பன சங்பரிவாரங்கள் - ராணுவத்தில் மதத்தின் அடிப்படையில் கணக்கெடுக்கக் கூடாது என்றும், அது ராணுவத்தை மதரீதியாகப் பிளவுபடுத்திவிடும் என்றும் கூக்குரல் போடுகிறார்கள்.

இது மாய்மாலக் கூச்சல் ஆகும். ராணுவத்தில் இருப்பவர்கள் எல்லாம், தங்களது மத அடையாளத்தை வெளிப் படுத்தாமல் இருக்கிறார்களா, என்ன? ராணுவ அதிகாரியாக இருப்பவர் சீக்கியரா, கிறிஸ்துவரா, முஸ்லீமா, இந்துவா என்பது ராணுவத்தினருக்கு தெரியாமலா இருக்கிறது? ஏதோ மத அடையாளங்களை இவர்கள் வெளிப்படுத்தாமல் இருப்பது போலவும், தகவல் சேகரித்தால்தான் மத அடையாளமே தெரிய வரும் என்பதும், ஏமாற்றுவாதமே ஆகும்.

நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய ராணுவ அமைச்சர் பிரணாப் முகர்ஜி, இந்தியாவில் 138 மில்லியன் முஸ்லீம்கள்; வாழ்கிறார்கள் என்றும், மக்கள் தொகையில் இவர்கள் 13.4 சதவீதம் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். அதற்கேற்ப அவர்களுக்கு, கல்வி, பதவி, சட்டமன்றம், நாடாளுமன்றங்களில் உரிய பிரதிநித்துவம் அளிப்பதே நியாயமாகும். பாகிஸ்தான் பிரிவினைக்கு முன்பு ராணுவத்தில் முஸ்லீம்கள் 31 சதவீதமாக இருந்தார்கள்.

பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு, இது 2 சதவீதமாகக் குறைந்துவிட்டது. முஸ்லீம்களின் பிரதிநிதித்துவம் குறைந்து வருவதைப் பற்றிக் கவலைப்பட்ட பிரதமர் நேரு, 1953-ல் மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதி, “இந்தக் கவலைத் தரும் போக்கை, உடனடியாக திருத்தி அமைக்காவிட்டால், நிலைமை மேலும் மோசமாகிவிடும்” என்று கவலையுடன் குறிப்பிட்டார்.

அப்போது ராணுவ அமைச்சராக இருந்த மகாபீர் தியாகியும், முஸ்லீம்கள் பிரதிநிதித்துவம் 2 சதவீதமாகக் குறைந்துவிட்டது என்பதை ஒப்புக் கொண்டார். மிண்டோ மார்லி சீர்திருத்தத்தின் கீழ் - இந்தியாவிலே முதன்முதலாக, தனித் தொகுதியையும், வேலை வாய்ப்பில், தனி இடஒதுக்கீட்டையும் பெற்றவர்கள் முஸ்லீம்கள் தான். “சுதந்திர” இந்தியா, பிரிட்டிஷ் ஆட்சியில் கிடைத்த உரிமைகளை பறித்துக் கொண்டுவிட்டது.

ஒரு பக்கம் முஸ்லீம்களை திருப்திப்படுத்தும் நடவடிக்கைகளில், ஆட்சிகள் செயல்படுவதாகக் குற்றம் சாட்டுகிறவர்கள், இப்போது அவர்களைப் பற்றிய தகவல்களையே சேகரிக்கக் கூடாது என்று ஏன் பதற வேண்டும்? முஸ்லீம்கள் பற்றிய உண்மை நிலவரம் வெளியே தெரிந்து விட்டால், அரசுகள் முஸ்லீம்களுக்கு தனிச் சலுகைகள் காட்டுகின்றன என்ற வாதம் அடிபட்டுப் போய்விடுமே என்பதால் தானே?

 தமிழன் நிலையைப் பார்த்தீர்களா?

‘அரு.கோ.’வின் அடுத்த சரடு!

‘எழு கதிர்’ ஆசிரியர் அரு. கோபாலன், பெரியார் மீது அவதூறுகளைப் பொழிவதே - தான் தமிழனாகப் பிறந்ததற்கான அடையாளம் என்று கருதிக் கொண்டிருக்கிறார், அப்படிப்பட்ட ‘தன்மான தமிழ்ச் சிங்கம்’. 1943 ஆம் ஆண்டு இறந்து போன சத்தியமூர்த்தி அய்யர் - அதற்குப் பிறகு ஒரு ஆண்டு கழித்து சேலத்திலிருந்த பெரியாரிடம் அவசர அவசரமாக தொடர்பு கொண்டு, “ராமசாமி, உன் கட்சிக்கு தமிழர் கழகம் என்று பெயர் சூட்டி விடாதே” என்று ஆவியாக வந்து பேசினார் என்று ‘விக்ரமாதித்தன்’ கதை ஒன்றை வரலாறாக்கிக் காட்டினார்.

“பெரியார் முழக்கம்” இதைச் சுட்டிக் காட்டிய பிறகும், அப்படி ஒரு மறுப்பு வந்ததாக அன்பர் அரு. கோபாலன், காட்டிக் கொள்ளவே இல்லை. அடுத்து வந்த ‘எழுகதிரி’லும் இதே கருத்தை மீண்டும் உறுதிப்படுத்தியதோடு, பெரியாருக்கு எதிராக மற்றொரு பொய்யைப் பரப்பியிருக்கிறார். அருவை. தமிழன்பன் எழுதியதாக - ‘அரு.கோ.’ இம்மாதம் வெளியிட்டுள்ள கடிதத்தில், சத்தியமூர்த்தி பார்ப்பனர் பேச்சை பெரியார் கேட்டது போலவே - ராஜகோபாலாச்சாரியின் சொற்கேட்டு பெரியார், மணியம்மையை வயதான காலத்தில் மணந்து அண்ணா பிரிந்திடக் காரணமாக இருந்தார் என்று, ஒரு கதையை அவிழ்த்து விட்டிருக்கிறார்.

பெரியாரும் - ராஜகோபாலாச்சாரியும் நெருக்கமான நண்பர்கள்தான். பெரியாரை காங்கிரசுக்குள் கொண்டு வந்ததே ராஜகோபாலாச்சாரி தான். பிறகு ராஜ கோபாலாச்சாரி தனது பார்ப்பன சமுதாயத்துக்குத் தொண்டு செய்யப் போனார். பெரியார் - ‘அருகோ’ போன்ற “நன்றி”யுள்ள தமிழனுக்கும் சேர்த்து - மானமும் அறிவும் பெறுவதற்கு, வாழ்வின் இறுதி மூச்சு அடங்கும் வரை மூத்திரச் சட்டியைப் பிடித்துக் கொண்டே மேடைகளில் பேசினார்.

பெரியார் தனது திருமணத்தை, ராஜகோபாலாச்சாரி சொல் கேட்டுத்தான் செய்தார் என்பது உண்மை தானா? பச்சைப் பொய். 1949 இல் ‘கவர்னர் ஜெனரலாக’ இருந்த ராஜகோபாலாச்சாரியை திருவண்ணாமலை தொடர்வண்டி நிலையத்தில், பெரியார் மே 14 ஆம் தேதி சந்தித்துப் பேசினார். அதுவும் பெரியார் தானாகப் போய் பார்க்கவில்லை. தன்னை சந்திக்க வருமாறு ராஜகோபாலாச்சாரியார், பெரியாருக்கு தந்தி கொடுத்திருந்தார்.

எனவே அவர் அழைத்துத் தான் பெரியார் போனார். ராஜகோபாலாச்சாரியாரிடம் தனது திருமண ஏற்பாடு பற்றி பெரியார் பேசியதோடு, தனது பூர்வீக சொத்துக்களைப் பாதுகாப்பது தொடர்பாகவும், மணியம்மையாரை சட்டபூர்வ வாரிசாக்கிக் கொண்டு சொத்துக்களை பாதுகாப்பது தொடர்பாகவும், சட்ட ஆலோசனைகளைக் கேட்டறிந்தார்.

“மணியம்மையாரைத் திருமணம் செய்து கொள்ளுங்கள்” என்று பெரியாருக்கு ராஜாஜி ஆலோசனை கூறினார் என்பது, கலப்படமற்ற பொய். மாறாக - இத்திருமணம் வேண்டாம் என்று தான் ராஜகோபாலாச்சாரி பெரியாரிடம் கூறினார். 1949 பிப்.21 ஆம் தேதி பெரியாரின் திருமண ஏற்பாட்டுக்கு முன், ராஜகோபாலாச்சாரியார் பெரியாருக்கு ஒரு கடிதம் எழுதினார்.

அதில், “இந்த வயதில் விவாக எண்ணம் வேண்டாம்” என்று ராஜகோபாலாச்சாரியார் எழுதி இருந்தார். இத் திருமண ஏற்பாட்டை முன்வைத்து பெரியாருக்கு எதிரான பிரச்சாரங்களை கட்டவிழ்த்தபோது, பெரியார், ராஜகோபாலாச்சாரியாரின் கடிதத்தை எடுத்துப் போட்டிருந்தால், பொய்ப் பிரச்சாரங்கள் தூள் தூளாகியிருக்கும். ஆனால் பெரியார் அதை செய்யவில்லை. ஏன்? கடிதத்தின் தலைப்பில் ‘அந்தரங்கம்’ என்ற வார்த்தையை, ராஜகோபாலாச்சாரியார் குறிப்பிட்டிருந்தது தான்!

எனவே அதை பகிரங்கப்படுத்தக் கூடாது என்ற பண்பும் - உறுதியும், கடுமையான நெருக்கடியை சந்தித்த நேரத்தில் கூட பெரியாருக்கு இருந்தது. பெரியார் மறைவுக்குப் பிறகுதான், அவர் பாதுகாத்து வைத்திருந்த ஆவணங்களில், இந்தக் கடிதமும் இருந்தது தெரிய வந்தது. இதுதான் உண்மை.

‘ஆவி’கள் பேசியதையெல்லாம் ஆசிரியருக்குக் கடிதமாக வெளியிட்டு, “இதோ, யாரும் வெளியிடாத ஆவணம்” என்று ஆர்ப்பரிக்கிறார்கள் அரு. கோபாலன்கள். ஆனால் பெரியாரின் உயர்ந்த பண்போ இதற்கு நேர்மாறானது.

‘பெரியார் முழக்கம்’ வெளியிடும் இந்த மறுப்புகளைக் கண்டு கொள்ளாமல் - அரு.கோபாலன் இனி அடுத்த அவதூறுக்கு தாவினாலும் வியப்பதற்கு இல்லை.

யார் கண்டது? இனி “மகாத்மா” காந்தி - ‘பகத்சிங்’ எல்லாம் பெரியாருக்கு எதிராக ‘எழுகதிரு’க்கு கடிதம் எழுதலாம். அதை அருகோபாலன் ஆவணப்படுத்தி, ‘வரலாற்றை’ உருவாக்கலாம். கேட்டால் காந்தி எழுதிய கடிதத்தைத் தானே வெளியிட்டேன் என்று சொன்னாலும் சொல்லுவார்!