(7.11.2021 அன்று குடியாத்தத்தில் ‘நான் இந்துவாக இறக்கப் போவதில்லை’ என்ற தலைப்பில் பெரியார் உரைகளின் தொகுப்பு குறித்து திறனாய்வுக் கூட்டம் நடந்தது. ‘தலித் முரசு - காட்டாறு’ இணைந்து வெளியிட்ட நூல் இது. இதில் பங்கேற்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிகழ்த்திய உரையிலிருந்து.)

 “நான் இந்துவாக இறக்கப் போவதில்லை” என்ற தலைப்பின் மேல் சிலருக்கு முரண்பட்ட கருத்து உண்டு. வேறு தலைப்பை வைத்திருக்கலாமே என்று. “இந்து மதத்தை வேரறுப்போம்” என்று வைத்திருக்கலாமே என்றும் கூறினார்கள். புத்தகத்தில், “நான் இந்துவாக இறக்கப் போவதில்லை” என்று 1926இல் கூறியதாகவும், அம்பேத்கர் 1935இல் கூறியதாகவும் குறிப்பிடப் பட்டிருக்கிறது. இதில் பெரியார் போகிற போக்கில் கூறிய கருத்து. ஆனால், அம்பேத்கர் திட்டவட்டமாக மாற வேண்டும் என்று அறிவித்த கருத்து. இரண்டையும் இணைத்துப் பார்ப்பதில் தான் எனக்கு கொஞ்சம் நெருடலாக இருக்கிறது. இருவரையும் இணைத்து பார்ப்பதற்கு என்றே சேர்த்ததாக தெரிந்தது.

kolathur mani 368சேஷாசலமாக பிறந்து, தமிழ் பற்றின் காரணமாக பூங்குன்றனாக மாறி, பெரியார் பற்றின் காரணமாக பெரியார்தாசன் ஆகி, அதன்பின் பவுத்தப் பற்றின் காரணமாக சித்தார்த்தா ஆகி, இஸ்லாமை ஏற்று அப்துல்லா ஆகி வாய்ப்புக் கேடாக இறந்து விட்டார். இல்லையென்றால் இன்னும் வேறு எதற்கோ மாறியிருப்பார். அவர், ‘பெரியார் இஸ்லாமை ஏற்றாரா? எதிர்த்தாரா?’ என்ற கேள்வியை முன் வைத்தார். மற்றொரு கேள்வியையும் கேட்டார். பெரியாரிஸ்டுகள் ஏன் இன்னும் இஸ்லாமிற்கு மாறவில்லை? என்றும் கேட்டார்.

பெரியார், இஸ்லாமை ஏற்றாரா என்றால் ஏற்றார்; எதிர்த்தாரா என்றால் எதிர்த்தார். இரண்டுமே இருந்தது. புஷ் கூறியதைப் போல, ‘நீ என் பக்கம் இல்லையென்றால் எதிர்ப் பக்கம் தான்’ என்று பெரியார் மாற்றியெல்லாம் பேசவில்லை. கருத்துக்களை வெளிப்படையாக, விமர்சனமாக வைத்தார். பௌத்தத்தைப் பற்றி அவர் என்ன கருத்தைக் கொண்டிருந்தார் என்பதை கூறியாக வேண்டும். குடியாத்தம் என்றாலே, பள்ளிகொண்டா கிருஷ்ணசாமியை எண்ணாமல் இருக்க முடியாது. அவர் தலைமையில் பெரியார், அக்டோபர் 1956 இல் வேலூர் நகராட்சியில், அம்பேத்கர் படத்தை திறந்து வைக்கிறார். அதற்கு பின் இரண்டு மாதங்கள் கழித்து தான் அம்பேத்கர் மறைந்தார். அதில் இரண்டு உரைகள் தான் படித்திருக்கிறோம். அதில் மூன்று உரைகள் வந்துள்ளன. அந்த மூன்றாவது உரையில் பௌத்தத்தைப் பற்றி பெரியார் பேசியிருக்கிறார். அந்த உரை இந்த புத்தகத்திலும் கொடுக்கப்பட்டுள்ளது.

அது என்னவென்றால், இருவரும் பர்மாவிற்கு செல்கிறார்கள் பௌத்த மாநாட்டிற்கு. இருவரும் உரையாடிக் கொண்டிருக்கும் போது, புத்த பிக்கு ஒருவர் வருகிறார். இருவரையும் பார்த்து, குறிப்பாக பெரியாரைப் பார்த்த படி, ‘யார் நீங்கள்?’ என்று கேட்கிறார். ‘தெரியவில்லையா இவர்தான் பெரியார் இராமசாமி’ என்று அம்பேத்கர் கூறுகிறார். அடுத்து, ‘நீங்கள் பௌத்தத்தை வளர்க்க வந்தீர்களா? ஒழிக்க வந்தீர்களா?’ என்று அந்த கேள்வியையும் பெரியாரைப் பார்த்து கேட்கிறார். அடுத்து பெரியார், ‘நீ பார்ப்பனனாக இருந்து பௌத்தராக மாறியவரா?’ என்று கேட்கிறார். ‘ஆமாம் வங்காளத்தைச் சேர்ந்த பார்ப்பனர்’ என்பதை அவர் கூறுகிறார். அப்போது பெரியார் அம்பேத்கரிடம், ‘இவர்களை வைத்து தான் பௌத்தத்தை வளர்க்கப் போகிறீர்களா?’ என்று வேடிக்கையாக கேட்கிறார்.

குலக்கல்வி எதிர்ப்பு மாநாடு பெரியார் நடத்துகிறார். அதில் பௌத்த மாநாட்டையும் இணைத்து நடத்துகிறார். மல்லசேகரா என்ற பௌத்த அறிஞரை அழைத்து பேச வைக்கிறார். மூன்று இடங்களில் பெரியார் பௌத்தத்தை நினைவூட்டிய வண்ணமே இருக்கிறார். 1953இல் விநாயகர் சிலை உடைப்பு, அடுத்து புத்தரின் பிறந்த நாளில் விநாயகரின் சிலையை உடைக்கிறார். 1956இல் புத்தரின் 2500ஆவது பிறந்த நாளில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். அனைவரின் உரையையும் ஒலிபரப்பிய வானொலி பெரியாரின் உரையை மட்டும் ஒலிபரப்பவில்லை. பெரியார் அதற்கு கண்டனம் தெரிவிப்பதும் இல்லை. அந்த உரையில் தான் இராமர் பட எரிப்பு போராட்டத்தை அறிவிக்கிறார். கடவுள் மறுப்பாளர் என்று சொல்லிக் கொண்டே வந்தாலும், இரண்டே இரண்டு நாத்திக போராட்டம் தான் பெரியார் நடத்தியிருக்கிறார். ஒன்று பாஜக பொதுச் செயலாளர் விநாயகன்; மற்றொன்று தலைவர் ராமர். அந்த இரண்டையும் புத்தரை நினைவூட்டிய வண்ணமே செய்தார்.

குலக்கல்வி திட்டத்தை எதிர்த்து மாநாடு நடக்கிறது. அதில் முதல் நாள் குலக்கல்வி எதிர்ப்பு மாநாடு. இரண்டாவது நாள் பவுத்த மாநாடு தான் நடக்கிறது. கடவுள்களின் பெயரால் நம் மீது சுமத்தப்பட்ட இழிவுகள். மற்றொரு பக்கம் அதை நடைமுறைப்படுத்த குலக்கல்வி திட்டம், இந்து மதத்தின் சூழ்ச்சியாகத்தான் குலக் கல்வியை பார்க்கிறார். அதற்கும் அவர் புத்தரை இணைத்துக் கொண்டு தான் வந்திருக்கிறார். புத்த மதத்தை பெரியார் எப்படி ஏற்றுக் கொண்டார் என்பதை நாம் பார்க்க வேண்டும். வெறும் சடங்காக ஏற்றுக் கொண்டவர்களைப் பற்றி புனிதப் பாண்டியன் விளக்கினார்.

‘ஜெய் பீம் காம்ரேட்’ என்ற ஆவணப் படத்தை ‘ஆனந்த் பட்வர்த்தன்’ என்பவர் எடுத்திருந்தார். அதில் பவுத்தம் மாறியவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதைக் காட்டியிருப்பார். எப்படிப்பட்ட பவுத்தத்தை பின்பற்ற வேண்டும் என்று அம்பேத்கர் கூறினாரோ, அதைத் தாங்கிய பள்ளிச் சிறுவன், ‘என்னை, கடவுள் இல்லை யென்று கூறுவதற்கு கேலி செய்தார்கள், கடவுள் இல்லாமல் எப்படி இருக்க முடியும் என்று கேட்டார்கள். நான் கூறினேன், ஆம் எங்கள் பவுத்தம் அப்படித் தான் கற்றுத் தந்திருக்கிறது’ என்று. அதே போல் ஒரு பாட்டி பேசும்போது, ‘நாங்கள் பவுத்தம் மாறிய பிறகு பவுத்தத்தைப் பரப்புவதற்குப் பாடல்களைப் பாடுவோம். அது கடவுள், ஜாதியை கேலி செய்யும் வகையில் தான் இருக்கும்’ என்று ஒரு பாட்டி கூறுவார். படத்தில் ‘தீக்ஷா பூமி’ க்கு செல்லும் போது, நுழைவாயிலிலேயே மக்கள் வரும்போது கையில், கழுத்தில் கட்டியுள்ள கயிறுகளை வெட்டுவதற்கு ஆட்களை நிறுத்தி வைத்திருப்பார்கள். வெட்டி தான் உள்ளே அனுப்புவார்கள். இவையெல்லாம் அந்த ஆவணப் படத்தில் வரும் காட்சிகள். இவற்றை யெல்லாம் உள்வாங்கிக் கொண்டு பவுத்தராக இருந்தால் அதை ஏற்றுக் கொள்ளலாம்.

பெரியார் மதத்தை மூன்று கட்டமாகப் பார்க்கிறார். அது இந்த புத்தகத்தில் கொடுக்கப் பட்டுள்ளது. முதலில் செங்கல்பட்டு சுயமரியாதை மாநாட்டில், கடவுளுக்கென பணத்தை செலவழிக்காதீர்கள் என்பது மட்டும் தான் தீர்மானம். மற்றொன்று கடவுளுக்கும் வணங்குபவனுக்கும் இடையில் தரகரோ, வேறு ஒரு மொழியோ தேவையில்லை என்பது மற்றொரு தீர்மானம். எப்படி மூன்று கட்டமாக மதத்தை பெரியார் பார்த்தார் என்பதை பெரியாரே குறிப்பிடுகிறார் இவ்வாறு குறிப்பிடுகிறார், “நமது மத ஒழிப்பு உணர்ச்சியானது, சுயமரியாதை இயக்கம் ஆரம்பித்த தினத்திலேயே பிரச்சாரம் செய்யப்பட்டு விடவில்லை. செங்கல்பட்டு மாநாட்டில் கடவுளுக்கென்று காசை தொலைக்க வேண்டாம் என்றோம், பூஜை, அபிசேகம், ஆராதனை, உற்சவம் ஆகியவை கூடாது என்றோம். ஈரோடு மாநாட்டில் கடவுளைப் பற்றி கவலைப் படாதே என்றோம். மூன்றாவது விருதுநகர் மாநாட்டில் தான் மதங்கள் கூடாது என்று கூறினோம்.”

மற்றொரு உரையில், “மதங்கள் வேண்டாமென்ற கருத்து முதலிலேயே இருந்திருந்தாலும், அதை கூறியிருந்தால் என்னுடன் யாரும் வந்திருக்க மாட்டார்களென்றும்” கூறியிருக்கிறார்.

ஈரோட்டில் 1930 இல் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டில் பார்ப்பனரல்லாத, தமிழ் இசைக் கலைஞர்களை அறிமுகப்படுத்துவார். ‘குடிஅரசில்’ பட்டியலிட்டு இவர்களை அழையுங்கள் என்று அறிவிப்பு கொடுத்தார். 1940களில் தமிழிசைக் கிளர்ச்சி வெற்றி பெற்ற பின் கூறுகிறார், ‘சமஸ்கிருதத்தில் பாடியிருந்தாலாவது யாருக்கும் புரிந்திருக்காது, நீ தமிழில் சாமி பாடல்களை பாடுகிறாய்’ என்று கேட்டார்.

1926லிருந்தே இஸ்லாமியர்களிடம் தனது கருத்தை தெரிவித்தவாறே வருகிறார் பெரியார். ஈரோடு, சத்தியமங்கலம், சாத்தான் குளம் இப்படி முகமது நபி பிறந்த நாள்களில் உரையாற்றுகிறார். ‘உன்னை இந்து மதத்திற்கு மாற்று என்று நினைத்தால், சந்தனக்கூடு நடத்துகிறாய், நீயும் முட்டாள் தனமாக ஆடுகிறாய்’ என்று கேட்டேன். அடுத்த ஆண்டு என்னை அழைக்க மாட்டார்கள் என்று நினைத்தேன். அழைத்தார்கள் ஆனால் அந்த விழாக்களை நிறுத்தி விட்டார்கள். இந்துக்கள் யாராவது இப்படி செய்வீர்களா? என்று பேசுகிறார். சத்தியமங்கலத்தில் பேசும் போது, ‘உங்கள் இஸ்லாம் மதம் நல்ல மதம் தான். உடன்படுகிறேன். ஆனல் மனிதனை விட மதம் தான் பெரியது என்கிறீர்கள் அந்த ஒரு வருத்தம் எனக்கு இருக்கிறது' என்று பேசுகிறார். விமர்சனத்தை வைத்து தான் ஆதரிக்கிறார். முழுமையாக இஸ்லாமை ஆதரிக்கவில்லை. இந்நூலில் இதை பதிவு செய்துள்ளார்கள்.

இஸ்லாமை பரிந்துரைத்தவுடன், ‘ஒரு சுயமரியாதைக்காரன் இப்படி பேசலாமா? ஒரு மதத்தை பரிந்துரைக்கலாமா? என்று கேள்விகள் கேட்கிறார்கள். அதற்கு பெரியார், ‘தீவிர சுயமரியாதைக்காரர் ஒருவரை ஒரு தீண்டப்படாத குலத்தில் பிறந்த ஒருவர் கண்டு வணங்கி, ‘அய்யா எனக்கு சாமியை விட்டுவிட போதிய அறிவு, தைரியமோ, தியாக புத்தியோ வரவில்லை, ஆனால் எனக்கு தீண்டாதவனாக இருக்க ஒரு நிமிடம் கூட சகிக்க முடியவில்லை. இதற்கு ஏதாவது ஒரு வழி சொல்லுங்கள் பார்ப்போம்’ என்று கேட்கிறார். அதற்கு நான் என்ன சொல்ல வேண்டும், ‘நான் சுயமரியாதைக்காரன், எனக்கு சாமியைப் பற்றி கவலையில்லை, நீ தீண்டாதவனாகவே இருந்து செத்துப் போ’ என்று கூற வேண்டுமா? அப்படி சொல்ல முடியுமா? அப்படி இருப்பவர்களுக்கு கூறுகிறேன். முகமதிய மதத்தில் பல கெடுதிகள் இருக்கலாம், கோஷா இருக்கலாம், கடவுள் இருக்கலாம், மூட நம்பிக்கை இருக்கலாம், மதச் சின்னம், மதச் சடங்கு இருக்கலாம், சமதர்மம் இல்லாமலும் இருக்கலாம் இவையெல்லாம் சுயமரியாதைக்காரருக்கு கூடாதாய் இருக்கலாம். மற்றும் பெண்ணுரிமை மாத்திரம் பேணுபவர்களுக்கு முகமதிய மதம் வேண்டாதவையாய் இருக்கலாம். மூடச்சடங்கு அனுஷ்டிக்காதவர்களுக்கும் முகமதிய மதம் வேண்டாதவையாய் இருக்கலாம். மத வேஷமும், மத சடங்கும் பயனற்றதாய் நினைப்பவர்களுக்கு முகமதிய மதம் வேண்டாதாய் இருக்கலாம். நாஸ்திகருக்கும், பகுத்தறிவாளருக்கும் முகமதிய மதம் வேண்டாதாய் இருக்கலாம். சமதர்மவாதிக்கும், பொதுவுடைமைக்காரருக்கும் முகமதிய மதம் வேண்டாதாய் இருக்கலாம். ஆனால் தீயர்கள், புலையர்கள், பறையர்கள், நாயாடிகள் என்று தாழ்த்தப்பட்டு, ஒதுக்கப்பட்டிருக்கிற நாயிலும், மலத்திலும் புழுத்த விசக் கிருமிகளிலும் கேவலமாக மதிக்கப்பட்டு வரும் மக்களிடம், தங்கள் மீதிருக்கும் தீண்டாமை மாத்திரம் ஒழிந்தால் போதும் என்று கருதிக் கொண்டிருக்கும் மக்களிடம் வேலையுண்டா இல்லையா என்று கேட்கிறேன்” அவர்களுக்கு பரிந்துரைக்கிற பரிந்துரையாகத் தான் மதமாற்றத்தைக் கூறுகிறார்.

1931 சாத்தான்குளத்தில் பேசும்போது, “என்னை நீங்கள் அழைப்பதே வேடிக்கையாக இருக்கிறது. நானோ மதம் கூடாது என்பவன். மதம் மனிதனை மூடமாக்கும் என்பவன். எங்காட்கள் என்னை அழைக்க மாட்டார்கள், நீங்கள் என்னை தைரியமாக அழைக்கிறீர்கள். உங்கள் நிகழ்வில் இந்துவாகிய என்னை அழைக்கிறீர்கள், ஆனால் இந்துக்கள் நிகழ்வில் முஸ்லீம் யாரையாவது அழைத்து பேச வைப்பார்களா?” என்று பேசுகிறார். அதில் அடிக்கடி ‘மத வேஷம் போடு’ என்று குறிப்பிடுகிறார். இஸ்லாமிய மத வேஷம் போடு என்று குறிப்பிடுகிறார். ‘நீ உண்மையான இஸ்லாமியனோ பொய்யான இஸ்லாமியனோ, நாஸ்திகனோ, ஆஸ்திகனோ எப்படியோ இரு. ஆனால் 5 மணிக்கு இஸ்லாமுக்கு மாறினால் 5.15க்கு உன் மேல் உள்ள தீண்டாமை ஒழிந்து விடும்’ என்கிறார்.

(தொடரும்)

- கொளத்தூர் மணி

Pin It