இந்த வாரம் நடைபெற்ற கோவை மாவட்டம், வெள்ளியங்கிரி மலைப் பழங்குடியினப் பாதுகாப்புச் சங்கத் தலைவர் முத்தம்மாள் அவர்களின் பொதுநல வழக்கின் மீதான விசாரணையில் சென்னை உயர் நீதிமன்றம், விதிகளை மீறிய கட்டுமானங்களை அகற்றிப் பழங்குடியினருக்குச் சொந்தமான நஞ்சை நிலங்களை மீட்டுத் தர உத்தரவிட்டுள்ளது.isha center 364அது மட்டுமல்லாமல், ஈஷா யோகா மையம் முறைப்படி எந்த அனுமதியும் வாங்கவில்லை என்பதை ஆய்வு செய்து, அதுகுறித்து கோவை நகரத் திட்ட இணைய இயக்குநர் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.சத்குரு என்று தன்னை அழைத்துக்கொள்ளும் ஜக்கி வாசுதேவ் 20 ஹெக்டேர் நிலப்பரப்பில் வெள்ளியங்கிரி மலைப் பகுதியை ஆக்கிரமித்து யோகா மையம், சிவன் கோயில் என்று 1992 முதல் கோவைப் பகுதியில் ஒரு சலசலப்பை ஏற்படுத்தி வந்துள்ளார். கோவையில் பா.ஜ.க. வளர்வதற்கு ஜக்கி வாசுதேவும், அவருடைய செல்வாக்கும், செல்வமும் பெரும் அளவில் உதவி புரிந்து வருகின்றன.

2017 ஆம் ஆண்டு ஒன்றியத் தலைமை அமைச்சர் திரு.நரேந்திர மோடியால் 112 அடி உயரமும், 147 அடி நீளமும், 82 அடி அகலமும் கொண்ட எஃகாலான சிவன் சிலை திறந்து வைக்கப்பட்டது. ஈஷா மையத்தின் இந்த ஆதியோகி சிலை திறக்கப்பட்ட போதே, அதற்கு பலத்த எதிர்ப்புகள் இருந்தன.

 அங்கு அன்றாடம் நடத்தப்படும் களேபர நிகழ்வுகளும், ஆட்டம் பாட்டங்களும், அந்த மலைப்பகுதியின் அமைதியையும் இயற்கை எழிலையும் மட்டுமன்றி அங்கு வாழும் மலைப்பகுதி மக்களின் அன்றாட வாழ்வையும் சீரழித்துள்ளன.

உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி கங்காபுர்வாலா, மற்றும் நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் நடத்திய விசாரணையில், தமிழக நகரமைப்பு திட்டமிடல் துறை தரப்பில், 20 ஹெக்டேரில் கட்டுமானம் செய்ய எந்த அனுமதியும் வாங்கியப் பதிவுகள் இல்லை எனவும் கூறி உள்ளது. ஆட்சியரின் தடையில்லாச் சான்று, மாசுக்கட்டுப்பாட்டு வாரியச் சான்று, மலைகள் பிரதேசப் பாதுகாப்பு ஆணையத்திடம் இருந்தும், தீயணைப்புத் துறையிடமிருந்தும் எந்த ஒரு சான்றும் வாங்கப்பட இல்லை எனப்போட்டுடைத்து உள்ளனர்.

இதற்கு எதிராக ஈஷா யோகா மையத்தின் சார்பில் எந்த ஆவணமும் கையளிக்கப்படாததால், உயர்நீதிமன்றம் இரண்டு வாரகால அவகாசம் கொடுத்து, இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளதாகத் தெரிகிறது. இந்தக் கால அவகாசத்தைப் பயன்படுத்தி மேல் முறையீடுக்கு அவர்கள் செல்ல வாய்ப்பிருக்கிறது.

 அவர்களின் வளர்ச்சி, மதவாதப் பிற்போக்குத் தனங்கள், அதை வலுப்படுத்தும் செயல்களைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுத்து காக்க வேண்டும் .

- சாரதாதேவி

Pin It