கடந்த 31 ஆம் தேதி, தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித் துறை இயக்குனர், தமிழ்நாட்டில் உள்ள எல்லாப் பள்ளிகளுக்கும் செயல்முறை நடவடிக்கை அறிவிப்பு ஒன்றை அனுப்பியிருந்தார். அதில்  இனிமேல் பள்ளிக்கு வரும் மாணவர்கள், சாதியின் அடையாளமாகக் கைகளில் கட்டிக்கொண்டு வரும் வண்ணக் கயிறுகள், நெற்றித்திலகம் ஆகியன கூடாது  என்றும், அதனை உடனே தடுக்க வேண்டும் என்றும், அவற்றைக் கட்டச்  சொல்பவர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இயக்குனர் தெரிவித்திருந்தார்.

brahmin boyசாதி அடையாளத்திற்கு எதிரான இந்த அறிக்கையைத் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட பலரும் வரவேற்றனர். இப்படி ஒரு முற்போக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ள தமிழக அரசையும். பள்ளிக் கல்வி அமைச்சரையும் நம் போன்றவர்களும் பாராட்டினோம்!

ஆனால், பாஜகவின் தேசியச்  செயலாளர்களில் ஒருவரான ஹெச்.ராஜா என்னும் ஹரிஹர ராஜா சர்மா அதனைக் கண்டித்தும், தமிழக அமைச்சரை மிரட்டியும் அறிக்கை விட்டார். அது ஒரு ஹிந்துப் பழக்கம், அதனை எப்படித் தடை செய்யலாம் என்று கேட்டார்.

மிரண்டுபோன தமிழக அமைச்சர் செங்கோட்டையன், அந்த அறிக்கை பற்றித் தனக்கு எதுவும் தெரியாது என்றும், பழைய நடைமுறையே தொடரும் என்றும் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

தனக்குத் தெரியாமல் ஓர் அறிக்கை தன் துறையிலிருந்து வெளியிடப்பட்டுள்ளது என்று கூற ஓர் அமைச்சர் வெட்கப்பட வேண்டாமா? இவ்வளவு  அச்சத்தில் வாழும் கோழைகளாக அமைச்சர்கள் இருக்கலாமா? நேர்மையானவர்கள்தாம் அச்சமற்று இருக்க முடியும் என்பதையே இது காட்டுகிறது.

இதனை இந்துப் பழக்கம் என்கிறார் ராஜா சர்மா. எந்த இந்து நூல், கையில் கயிறு கட்டச்  சொல்கிறது? மதத்திற்கும் இதற்கும் என்ன தொடர்பு? பேய், பிசாசு என்று பயந்துகொண்டும், காசிக் கயிறு என்னும் பெயரிலும், கைகளில் கறுப்புக் கயிறு கட்டியுள்ளவர்களைப் பார்க்க முடியும். ஆனால் இந்தச் சாதியினர் இந்த வண்ணத்தில் கயிறு கட்ட வேண்டும் என்பது எப்படி மதம் சார்ந்த பழக்கமாக இருக்க முடியும்?

இப்போதும் பார்ப்பனர்கள் சிலர் நம்மை முதுகில் தட்டிக் கொடுத்தால் நாம் எச்சரிக்கையாக இருக்க  வேண்டும். அவர்கள் நம்மைப்  பாராட்டுவதற்காகத் தட்டிக் கொடுக்கவில்லை.  பூணூல் இருக்கிறதா என்று பார்ப்பதற்காகவே முதுகைத்  தடவுகின்றனர்.

இப்போது அந்தச் சிரமம் கூட வேண்டாமென்று, கைகளில் கயிறு கட்டி வரவேண்டும் என்கின்றனர். ஒவ்வொரு சாதிக்கும் ஒவ்வொரு வண்ணம் என்று முடிவு செய்து, அந்தச் சாதியைச் சேர்ந்தவர்கள் அந்த வண்ணத்தில்தான் கயிறு கட்டிக்  கொள்ள வேண்டும் என்பது எவ்வளவு பெரிய கொடுமை!

தங்களை இந்துக்கள் என்று கருதிக்  கொண்டிருக்கும் மக்களே, சாதி இழிவே உங்கள் கைகளில் கயிறுகளாகக் கட்டப்பட்டுள்ளன. எப்போது அறுத்தெறியப்  போகின்றீர்கள்?

எது ராஜதந்திரம் ?

கண்ணனும் அர்ஜுனனும் மறுபடி அவதரித்து விட்டார்களாம். ஆனால் யார் கண்ணன், யார் அர்ஜுனன் என்று தெரியவில்லையாம். கவலைப்படுகிறார் ரஜினிகாந்த். நாமும் கவலைப்படுகிறோம் - யார் மீது போர் தொடுக்கப்பட்டுள்ளது என்பதை எண்ணி! அன்று யூத மக்களின் மீது இட்லர் போர் தொடுத்தார். இன்று இஸ்லாமியர்கள் மீது மோடி போர் தொடுத்துள்ளார்.

மக்களின் உரிமைகளைப்  பறிப்பது ராஜதந்திரம் என்கிறார் ரஜினிகாந்த்.  தனக்கு வந்தால் தெரியும் தலைவலியும் காய்ச்சலும்!

Pin It