எந்த ஊருக்குப் போனாலும், 'யார் யாரோடு கூட்டணி சேர்வார்கள்?', மொத்தம் எத்தனை கூட்டணி அமையும்?'  என்னும் வினாக்கள் எல்லோரிடமிருந்தும் வெளிப்படுகின்றன.

2016 தமிழகச் சட்டமன்றத்திற்கான  தேர்தல் அறிவிப்பு வரும்வரை, கூட்டணி பற்றிய பேச்சுகள் நடந்துகொண்டேதான் இருக்கும். அதன் பிறகே, உண்மை நிலவரங்கள் அரங்கேறும். நேற்றுவரை, யாரை எதிர்த்து வசை பாடிக் கொண்டிருந்தார்களோ, அவர்களோடும் சில கட்சிகள்  கூட்டணி அமைத்துக் கொள்வார்கள். 'அரசியலில் இதெல்லாம் சகஜம்' என்று மக்களும் ஏற்றுக் கொள்வார்கள். ஏனெனில், இங்கு நடப்பதெல்லாம் வெறும் தொகுதி உடன்பாடுதானே தவிர, கூட்டணி நிகழ்வு அன்று.

தமிழகத் தேர்தலில் எத்தனை கூட்டணிகள் ஏற்பட்டாலும், இன்றைய நிலையில், தி.மு.க. - அ.தி.மு.க. என்னும் இரண்டு கூட்டணிகளுக்கு இடையில்தான் உண்மையான தேர்தல் நடைபெறும். அடுத்தடுத்த தேர்தல்களில் என்னென்ன நிலைமைகள் மாறும் என்பதை இப்போதே எவராலும் கூறிவிட முடியாது. ஆனால் இன்றுள்ள நிலை இதுதான்.

மக்கள் நலக் கூட்டணி, பா.ம.க. கூட்டணி, பா.ஜ.க. கூட்டணி  ஆகியன, அடுத்து நாங்கள்தான் ஆட்சிக்கு வருவோம் என்று கூறுவது  எள்ளளவும் உண்மையில்லை என்பதை அவர்களே அறிவார்கள்.

இன்னும் சில கட்சிகள் 234 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளதே வெற்றுப் பேச்சுதான். 234 தொகுதிகளிலும் வாக்குச் சாவடிக் குழுக்களை (பூத் கமிட்டி) அமைப்பது என்பதே ஆகக் கூடிய செயலன்று.  ஒரு சட்டமன்றத்   தொகுதியில்  ஏறத்தாழ 300 வாக்குச் சாவடிகள் இருக்கும். 450 வாக்குச் சாவடிகளைக் கொண்ட பெரிய தொகுதிகளும் உண்டு.

தி,மு.க.வில், ஒரு வாக்குச் சாவடிக்கு 7, 8 பேருக்குக் குறையாத குழுவை அமைக்கின்றனர். அ.தி.மு.க.விலும் அப்படித்தான். மற்ற கட்சிகளைப் பொறுத்தமட்டில், ஒரு சாவடிக்கு 4 பேர் என்று வைத்துக் கொண்டால் கூட, ஒவ்வொரு தொகுதிக்கும் 1000 பேருக்குக் குறையாமல் கட்சி உறுப்பினர்கள் வேண்டும்.

இந்த அமைப்பு வலிமை இன்று தமிழ்நாட்டில் ஏழு அல்லது எட்டுக் கட்சிகளிடம் மட்டுமே உள்ளது. மற்ற கட்சிகளால் எல்லாம் வாக்குச்சாவடிக் குழுக்களையே நாடு முழுவதும் அமைக்க முடியாது என்பதுதான் உண்மை நிலை.

இச்சூழலில், விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.க எந்த அணியுடன் கைகோத்துக் கொள்ளும் என்பது இன்றுவரை தெளிவாகவில்லை. தே.மு.தி.கவை எதிர்காலத்தில் வலிவுடன் கொண்டு செல்ல வேண்டுமென்றால், தி.மு.க அணியில் இணைவது ஒன்றே வழி என்பதை அவர் உணராமல் இருக்க வாய்ப்பில்லை. 

எவ்வாறாயினும், மக்கள் தெளிவாக உள்ளனர். தேர்தலுக்குப் பின் இருள் முடியும், உதய சூரியனால் உலகம் விடியும்.

Pin It