arakonam dalitsசாதி எனும் மன நோய் பிடித்தவர்கள் தண்ணீர் பிரிக்காத தனித்தனி தீவுகளாகவே வாழ்கிறார்கள். அவர்களது மனங்களோ புகைக்காமல் மண்டிய நுரையீரல்களாக சாதி நச்சால் அழுந்தி அழுகிக்கிடக்கின்றன.

தேர்தல் முடிந்த மறு நாளே அரங்கேறத் தொடங்கிவிட்டன சாதிய வன்மங்கள். சாதியாகவே பார்க்கப்படும் கட்சிகளைக் கடந்து இன்று பொதுக் கட்சியாக மக்களிடையே மாறிவரும் விடுதலைச் சிறுத்தைகளின் முன்னேற்றத்தைத் துளியும் விரும்பாத பிற்போக்கு அமைப்புகளும், கட்சிகளுமே இந்த மோதல்களின் பின்னணியில் உள்ளன என்பது தெளிவு.

வானூர், திருப்போரூர், அரக்கோணம் பகுதிகளில் “பானைச் சின்னத்துக்கா ஓட்டுக் கேட்டு வந்தீர்கள்?” என வன்மம் கக்கி உள்ளனர் சாதி வெறியர்கள்!

தி.மு.க வின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற “கலப்புத் திருமண நிதி உதவி உயர்த்தி வழங்கப்படும்” என்ற வாக்குறுதி கூட சாதி வெறியர்களுக்குக் கலக்கத்தை ஏற்படுத்திவிட்டது.

உங்கள் பெண்களைக் கீழ்ச்சாதியினர் நாடகக் காதல் செய்ய தி.மு.க பணம் கொடுக்கிறது என்று காணொளி போட்டது பா.ஜ.க. அதை விசிறி விட்டார் பா.ம.க.வின் கட்சித் தலைவர் இராமதாசு. பல சுற்றுகள் வந்த அந்தக் காணொளியைப் போட்டவர் மீது வழக்கு தொடர்ந்து, அந்தக் காணொளியை நீக்கச் செய்தது திராவிட முன்னேற்றக் கழகம்.

உச்சபட்சமாக அரக்கோணத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் கௌதம சன்னாவிற்கு வாக்கு சேகரித்த தலித் சமூகத்து இளைஞர்களைக் கொலை செய்யுமளவிற்குப் போயிருக்கிறது இந்த வெறி.

தேர்தல் நெருங்குவதற்குச் சில வாரங்களுக்கு முன்பாக அவசரக் கோலத்தில் வன்னியருக்கு 10.5% உள் ஒதுக்கீட்டைப் பெற்றோம் என தம் வன்னியப் பாசத்தைக் காட்டினர் பா.ம.கவின் அழிவுக்கு வித்திட்ட மருத்துவர் இராமதாசும் அவர் மகன் அன்புமணி இராமதாசும். காடுவெட்டி குருவின் இறப்புக்குப் பின் கலகலத்துப் போன அவர்களின் சாதிப் பாசத்தை மீட்க அவர்கள் போட்ட திட்டம்தான் அந்த உள் ஒதுக்கீடு.

ஆளும் அ.தி.மு.க.வினரே சொன்னது போல அது தற்காலிகமானது மட்டுமல்ல, சட்டப்பூர்வமானதும் அல்ல. அதைப் புரிந்துகொண்டவர்கள் பா.ம.க வை இந்தத் தேர்தலில் கட்டாயம் புறக்கணித்திருப்பார்கள். ஆனாலும் அவர்கள் ஓரிரு பத்தாண்டுகளாக விதைத்து வைத்திருக்கும் சாதியக் கொடு நஞ்சு இளைஞர்களின் மனதில் இருந்து அகலவில்லை.

அந்த இளைஞர்களுக்கு இடஒதுக்கீடெல்லாம் கூட இரண்டாம் பட்சம்தான். அவர்கள் அக்கினிச் சட்டியில் பிறந்தவர்கள்; சத்திரிய வம்சத்தவர்கள்; இரத்தம் பார்க்கும் வாளுக்கு சொந்தக்காரர்கள் போன்ற முழக்கங்களே அவர்கள் மனநிலையைச் செதுக்கி உள்ளன.

பானைச் சின்னத்துக்கு வாக்குக் கேட்டுத்தான் பல ஊர்களில் உள்ளே நுழைய முடியவில்லை என்றில்லை. உதயசூரியன் சின்னத்துக்கு வாக்குக் கேட்டுக் கூட நீலக்கொடிகள் பல ஊர்களுக்கு உள்ளே நுழைய முடியவில்லை என்பதுதான் உண்மை. விடுதலைச் சிறுத்தைகளின் கொடிகளைப் பிடுங்கியும் உடைத்தும் போட்டு, தடுத்து நிறுத்தி உள்ளனர் சாதி வெறியர்கள்.

இவை தமிழ்ச்சமூகத்தில் சாதிச் சங்கங்களும், சாதிக் கட்சிகளும் எந்த அளவுக்குப் பட்டியலின மக்கள் மீதான வெறுப்பையும் வன்மத்தையும் வளர்த்து வந்திருக்கின்றன என்பதற்குச் சான்று.

அரக்கோணம் தொகுதிக்குட்பட்ட சோகனூரைச் சேர்ந்த, கொலையுண்ட அந்த இரண்டு இளைஞர்களும், படுகாயம் பட்டு சிகிச்சை பெற்று வரும் ஏனைய மூன்று பேரும் தேர்தல் பணிகளைச் சுறுசுறுப்பாக மேற்கொண்டது மட்டுமில்லை, மணல் கொள்ளையில் ஈடுபட்டிருந்த பெருமாள்பேட்டையைச் சேர்ந்த அ.தி.மு.க பிரமுகரிடமும் எதிர்ப்பைக் காட்டியுள்ளனர்.

அவர்கள் அரசியல்மயப்படுவதும், அதிகாரத்தை நோக்கி நகர்வதும் தங்களுக்கு ஆபத்து என்று உணர்ந்த அந்த பிரமுகர் ஏவி விட்டே இந்தக் கொலைகள் நடந்திருப்பதாகச் செய்தியாளர்கள் பலரும் தெரிவிக்கின்றனர்.

அ.தி.மு.க.வுடனும், பா.ம.க.வுடனும் கூட்டணியில் இருந்த புரட்சி பாரதம் அமைப்பின் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி இது சாதிய, அரசியல் கொலை அல்ல என்று சொல்ல வைக்கப்பட்டிருக்கிறார்.

நேற்று வரை ஒரே குடும்பமாக ஓடோடி தேர்தலுக்காக உழைத்துக் கொண்டிருந்தவர்கள் இன்று தனித்தனிச் சமூகமாக நின்று குரல்கொடுப்பதா வேண்டாமா என்று கையைப் பிசைவதையும் பார்க்க முடிகிறது.

சமூக ஒடுக்குமுறை மிக மிக ஆழமாகவும் அகலமாகவும் வேரூன்றி உள்ள நிலத்தில் அதை அகற்ற நாம் அறிவாயுதங்களை முன்னும் பின்னுமாகவும், மேலும் கீழுமாகவும் எல்லா பக்கவாட்டுகளிலும் செலுத்தி நகர்த்த வேண்டியுள்ளது. ஓய்ந்துவிடாமல் அந்த நச்சு வேர்களை முற்றிலும் அகற்ற நம் அறிவாயுதங்களைத் தொடர்ந்து செலுத்துவோம்!

தன் வன்மையான கண்டனங்களைப் பதிவு செய்திருக்கும் வருங்கால முதல்வர் ஸ்டாலின் அவர்களின் ஆட்சி அமைந்ததும் சாதிய வன்கொடுமைகளைச் சட்ட ரீதியாக மட்டுமல்லாமல், பண்பாட்டு ரீதியாகவும் வென்றெடுப்போம்!

- சாரதா தேவி

Pin It