நாட்டில் ஆயிரம் சிக்கல்கள் உள்ளன. நாடு முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலை பரவிக் கொண்டிருக்கிறது. இதுவரையில், இந்தியாவில் மட்டும் 1,70,000 பேருக்கு மேல் இறந்துபோய் விட்டனர். ஏழை மக்களின் வாழ்வாதாரம் சிதைந்து கிடக்கிறது.
கொரோனாவில் பிழைத்தாலும், பசி, பட்டினியில் மக்கள் இறந்து போய்விடுவார்களோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இவற்றிலெல்லாம் கவனம் செலுத்த வேண்டிய அரசு, பெரியார், அண்ணா, காமராஜர் பெயர்களில் அமைந்துள்ள சாலைகளின் பெயர்களை மாற்றிக் கொண்டிருக்கிறது.
ஏன் பெயர்கள் மாற்றப்படுகின்றன என்று கேட்டால், அரசிதழில் பதிவாகவில்லை, வெளி மாநிலங்களிலிருந்து வருவோருக்கு வழிகாட்ட, மேற்கு, தெற்கு என்று திசை காட்டும் பெயர்கள்தாம் உதவும் என்று உப்புச் சப்பற்ற காரணங்களைக் கூறிக் கொண்டுள்ளனர்.
பெரியார் ஈ.வே.ரா. சாலை என்று பெயர் மாற்றப்பட்டு 42 ஆண்டுகள் ஆகின்றன, இப்போதுதான் அரசிதழைத் தேடுகின்றனர் போலும். சரியாகச் சொன்னால், இதற்குள் ஒரு பண்பாட்டுப் படையெடுப்பு உள்ளது.
தமிழ் நாட்டிற்கும், தமிழ் மக்களுக்கும் உழைத்த தலைவர்களின் பெயர்களைத் தமிழகத்தை விட்டே அகற்றிவிட வேண்டும் என்ற வஞ்சக எண்ணம் இதற்குள் ஒளிந்துள்ளது. இப்பொழுது இங்கிருக்கும் ஒரு காபந்து அரசை வைத்துத் தங்கள் எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்ளத் துடிப்பவர்கள் யார் என்பது உலகறிந்த உண்மை!
தவறுதலாக நடந்து விட்டது, யாரோ ஓர் அதிகாரி செய்துவிட்டார் என்பன போன்ற பொருந்தாக் காரணங்கள் வேறு சொல்லப்படுகின்றன. தவறுதலாக நடந்திருக்குமானால் இந்நேரம் அது சரி செய்யப்பட்டிருக்க வேண்டும். யாரேனும் ஓர் அதிகாரி உள்நோக்கத்துடன் செய்திருந்தால், அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும்
எதையும் செய்யாமல் மவுனம் காக்கும் தமிழக அரசின் நிலை கேள்விக்குரியதாகவும், கேலிக்குரியதாகவும் உள்ளது.
அண்மையில்தான், மகாதானபுரம் என்னும் ஊரின் பெயரை மஹாதானபுரம் என்று மாற்றினர். ‘கா’ என்னும் எழுத்து ‘ஹா’ என்று மாறுவது அல்லது மாற்றப்படுவது வெறும் தற்செயல் நிகழ்வன்று.
அதற்கு எதிர்ப்பு வந்தவுடன் மீண்டும் கா என்ற எழுத்தையே எழுதிவிட்டனர். ஒவ்வொரு முறையும் மெதுவாக வாலை மட்டும் நுழைத்துப் பார்ப்பது, அடி விழுந்தால் சுருட்டிக் கொள்வது அல்லது எதிர்ப்பு ஏதும் இல்லாத நிலையில் அதனையே நிலைப்படுத்தி விடுவது என்பதே இவர்களின் போக்காக உள்ளது.
இவையெல்லாம் வெறும் எழுத்து மாற்றமோ, பெயர் மாற்றங்களோ இல்லை. இதற்குள் ஒளிந்திருப்பது ஒரு பண்பாட்டுப் படையெடுப்பு. இதனை ஒருநாளும் தமிழகம் அனுமதிக்காது!
- சுப.வீரபாண்டியன்