புறக்கணிக்கப்பட்ட மக்களைப் பற்றி சிந்தித்தது திராவிடர் இயக்கம் மட்டும்தான். நாம் இப்போது இருக்கிற சூழலில் நமக்கு வாய்த்திருக்கிற நன்மைகள் சிலவற்றைப் பேச வேண்டியுள்ளது. நீண்ட காலமாக இடதுசாரிகள் ஆட்சியில் இருந்த மாநிலம் மேற்கு வங்கம். இப்போதுதான் 10 ஆண்டுகளாக திரிணாமூல் காங்கிரசின் மம்தா பேனர்ஜி ஆட்சியில் இருக்கிறார். அந்த மேற்கு வங்கத்தில் இன்றும் கை ரிக்சா உள்ளது. மனிதனை மனிதன் இழுக்கிறான் என்ற அவல நிலையை நாம் 1970லேயே ஒழித்துவிட்டோம். “எங்கள் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் மேற்கு வங்கத்தின் எல்லா மாவட்டத் தலைநகரங்களிலும் அரசு மருத்துவமனைகள் கட்டுவோம்” என்று மம்தா பேனர்ஜி 2004 தேர்தலில் வாக்குறுதி அளித்தார்.

anna periyar and karunanidhiஆனால் கலைஞர் கடந்த ஆட்சியில் எல்லா மாவட்டத் தலைநகரிலும் அரசு மருத்துவக் கல்லூரி கட்டுவேன் என்று அறிவித்தார். 1970களிலேயே தமிழ்நாட்டின் அத்தனை ஒன்றியங்களிலும் ஆரம்ப சுகாதார நிலையம் வந்துவிட்டது. இப்போது 23 அரசு மருத்துவக் கல்லூரிகள் வந்துவிட்டது. ஒருவேளை திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் இருந்திருந்தால் எல்லா மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரிகள் வந்திருக்கலாம். அதுமட்டுமின்றி தனியார் மருத்துவக் கல்லூரிகள் ஏராளமாக இருக்கிறது. இந்த வேறுபாட்டைப் பார்த்தால்தான் திராவிட இயக்க ஆட்சியும், மற்றவர்களின் ஆட்சியும் எப்படி இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

தமிழ்நாட்டை மட்டும் தனியாகப் பார்த்தால் நம்முடைய வளர்ச்சி என்னவென்பதை நம்மால் அறிய முடியாது. ஒட்டுமொத்த இந்தியாவுடன் ஒப்பிட்டுப் பார்த்தால்தான் நம்முடைய வளர்ச்சியை என்னவென்பது தெரியும். தமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ் அதிகாரியாகப் பணியாற்றியவர் எஸ். நாராயண். அவர் ஒரு தமிழ்நாட்டுப் பார்ப்பனர். மத்திய அமைச்சரவையின் செயலாளராகவும் இருந்தார். ஓய்வுபெற்ற பின்னால் உலக நாடுகளுக்கு சென்று பொருளாதார ஆய்வாளராகவும், ஆலோசகராகவும் இருக்கிறார். இவர் 6 மாதத்திற்கு முன்னால் ‘Dravidian Year’ என்ற நூலை எழுதியிருக்கிறார். அதில் திராவிட இயக்க ஆட்சியில் துணை ஆட்சியராக, மாவட்ட ஆட்சியராகப் அரசு செயலாளராகப் பணியாற்றிய போது அவருக்கு கிடைத்த அனுபவங்களை எழுதியுள்ளார். திமுக ஆட்சிக்கு வந்த முன்பும் அவர் பதவியில் இருந்தார். ஆட்சிக்கு வந்த பின்பும் இருந்தார்.

“முன்பெல்லாம் ஏதேனும் ஒரு பகுதியில் ஒரு குறை இருக்கும், அதை அரசால் தீர்க்க முடியுமென்றால், அரசு அதிகாரிகள் அறிக்கை அனுப்புவார்கள், எங்களுக்கு அறிக்கை வரும். ஆனால் திராவிட முன்னேற்றக் கழகம் ஆரம்பித்த பின்னால்தான் கட்சியின் பிரதிநிதிகள் மக்களின் பிரச்சனைகளை எங்களிடம் எடுத்து வந்து பேசத் தொடங்கினார்கள். அரசு அதிகாரிகளிடமிருந்து நாங்கள் பெற்ற குறைகளை விட, கட்சியின் பிரதிநிதிகள் எடுத்து வைத்ததுதான் மிக அதிகம். தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளான சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமல்ல, கட்சியின் அனைத்து நிலை பொறுப்பில் இருப்பவர்களும் வந்து எளிய மக்களின் கோரிக்கையை அன்றாடம் எங்களிடம் பேசியதெல்லாம் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைந்த பின்னர்தான்” என்று பதிவு செய்திருக்கிறார் நாராயணன். தமிழ்நாட்டை விட்டு வெளியே போன பின்புதான் தமிழ்நாட்டை அவர் புரிந்து கொள்கிறார். ஒரு பெரிய நூலில் அதையெல்லாம் எழுதி வெளியிடுகிறார்.

தமிழர்கள் இந்தி படிக்காததால் நமக்கு வேலையே கிடைக்கவில்லை என்று சிலர் பேசுகின்றனர். ஆனால் இப்போது இந்தி பேசுபவர்கள் எல்லாம் வேலைக்காக தமிழ்நாட்டுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் பார்க்கிறோம். 2017ஆம் ஆண்டில் மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை இந்தியா முழுவதும் ஆய்வு செய்து ஒரு அறிக்கையை வெளியிட்டது. இந்தியா முழுவதும் உள்ள வேறுபாடுகளை இந்த ஆய்வில் சொல்லியிருந்தார்கள். பள்ளிக் கல்வியை முடித்து கல்லூரி சேருபவர்கள் இந்தியாவில் சராசரியாக 20.4 விழுக்காட்டினர் உள்ளார்கள் என்று இந்த ஆய்வில் சொல்லப்பட்டது. ஆனால் தமிழ்நாட்டில் சராசரியாக 38.2 விழுக்காட்டினர் பள்ளி முடித்து கல்லூரி செல்கின்றனர். இந்திய சராசரியைக் காட்டிலும் இருமடங்கு தமிழகத்தில் பள்ளி முடித்த மாணவர்கள் கல்லூரி சேருகின்றனர். ஆனால் மோடி 15 வருடம் முதல்வராக இருந்து ஆட்சி செய்த குஜராத்தில் 17 விழுக்காட்டினர்தான் கல்லூரி சேருகின்றனர். மத்தியப் பிரதேசத்தில் 17 விழுக்காட்டினரும், உத்தரப் பிரதேசத்தில் 16 விழுக்காட்டினரும்தான் கல்லூரியில் சேருகின்றனர்.

இந்த ஆய்வில் கல்வியின் தரத்தின் அடிப்படையில் இந்தியா முழுவதும் 100 சிறந்த கல்லூரிகளை தேர்ந்தெடுத்தார்கள். அதில் தமிழ்நாட்டில் இருந்து 37 கல்லூரிகள் தேர்ந்தெடுக்கப்பட்டது. குஜராத்தில் 3 கல்லூரிகள் மட்டும் தேர்வானது. 100 சிறந்த பொறியியல் கல்லூரிகளில் தமிழ்நாட்டில் 22 பொறியியல் கல்லூரிகள் தேர்வானது. குஜராத்தில் 5, மத்தியப் பிரதேசத்தில் 3, பீகாரில் 1, ராஜஸ்தானில் 3 கல்லூரிகள் தேர்வானது. இவையெல்லாம் பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்கள். 100 சிறந்த பல்கலைக் கழகங்களின் பட்டியலில் தமிழ்நாட்டில் 24 பல்கலைக் கழகங்கள் இடம் பெற்றுள்ளது. குஜராத்தில் 2, மத்தியப் பிரதேசத்தில் 0, பீகாரில் 0, ராஜஸ்தானில் 4 பல்கலைக்கழகங்கள் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. ஆனால் இவர்கள்தான் திராவிட இயக்க ஆட்சியில் எல்லாம் தரமில்லாமல் போய்விட்டது என்கிறார்கள்.

மகப்பேறு இறப்பு விகிதம், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டுதான் அமர்த்தியா சென் போன்ற பொருளாதார அறிஞர்கள் தங்கள் ஆய்வை எழுதினர். தமிழ்நாட்டில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இறப்பு விகிதம் 1000க்கு 21ஆகவும், குஜராத்தில் 36 ஆகவும், மத்தியப் பிரதேசத்தில் 54 ஆகவும், உத்தரப் பிரதேசத்தில் 50 ஆகவும் உள்ளது. இந்திய சராசரி 40 ஆக உள்ளது.  பிரவச காலத்தில் இறக்கும் தாய்மார்களின் சராசரி இறப்பு விகிதம் இந்திய அளவில் 1 லட்சத்துக்கு 167 ஆக உள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் 73 பேராக மட்டுமே உள்ளது. உத்தரப் பிரதேசத்தில் 285 பேராகவும், மத்தியப் பிரதேசத்தில் 221 பேராகவும், குஜராத்தில் 112 பேராகவும் உள்ளது.

இந்தியா முழுவதும் சராசரியாக 50 விழுக்காட்டினர் மட்டும்தான் தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். ஆனால் தமிழ்நாட்டில் 86.7 விழுக்காட்டினர் தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். குஜராத்தில் 55 விழுக்காட்டினரும், மத்தியப் பிரதேசத்தில் 48 விழுக்காட்டினரும், உத்தரப் பிரதேசத்தில் 25 விழுக்காட்டினரும், ராஜஸ்தானில் 31 விழுக்காட்டினரும் மட்டுமே தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். கல்வி விகிதாச்சாரத்தில் தமிழ்நாடு 80க்கும் அதிகமான விழுக்காட்டைக் கொண்டுள்ளது. ஒட்டுமொத்தத்தில் வட இந்திய மாநிலங்களைக் காட்டிலும் 2 மடங்கு உயர்ந்த மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. நமக்குப் போட்டியாக கேரளாதான் இருக்கிறது. ஒன்றில் நாம் முதலில் இருந்தால் மற்றொன்றில் கேரளா முதலில் இருக்கும். வட இந்தியாவில் இமாசலப் பிரதேசம் மட்டும்தான் போட்டியாக இருக்கிறது.

தமிழ்நாடு கண்ட இந்த வளர்ச்சியை 50 ஆண்டு கால வளர்ச்சியாக எடுத்துக்கொண்டாலும்கூட 1967க்குப் பின்னர்தான் நடந்திருக்கிறது. இந்த 50 ஆண்டுகளில் ஜெயலலிதாவின் ஆட்சியைத் தாண்டி (Beyond Amma) இந்த மாற்றங்கள் நடந்திருக்கிறது என்று அமர்த்தியா சென் போன்ற பொருளாதார அறிஞர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். எனவே இப்படிப்பட்ட ஆட்சி அமைப்பினுடைய காரணம், அடிப்படை சுயமரியாதை இயக்கத்திலிருந்து வந்த சிந்தனை. உன்னுடைய ஆட்சி மூன்றாந்தர ஆட்சி என்று ஹண்டே ஒருமுறை கலைஞரைப் பார்த்து சொன்னார். அதற்கு கலைஞர், “தவறாக சொல்லி விட்டார் நண்பர், எங்களுடைய ஆட்சி நான்காம் தர ஆட்சி. பிராமண, சத்திரிய, வைசிய வருணாசிரம வரிசையில் 4ஆம் ஜாதியான சூத்திரர்களால் சூத்திரர்களுக்காக நடத்தப்படுகிற ஆட்சி என்னுடைய ஆட்சி” என்று சட்ட மன்றத்தில் சொன்னார்.  சூத்திரர்களுக்காகத்தான் நாங்கள் ஆட்சி நடத்துகிறோம், அந்த மக்களுடைய மேம்பாடுதான் எங்கள் குறிக்கோள் என்று சிந்திக்கிற பார்வை கொண்ட அரசாக கலைஞரின் அரசு இருந்தது. 

அம்பேத்கருக்கும், பெரியாருக்கும் சில இடங்களில் சிறு சிறு வேறுபாடுகள் இருக்கும். “பட்டியலின மக்களையெல்லாம் ஒரு பகுதியில் வாழச் செய்யுங்கள். எண்ணிக்கையில் நாங்கள் பெருகி நின்றால் பாதுகாப்பாக உணர்வோம்” என்று அம்பேத்கர் சொன்னார். ஆனால் பெரியார், “பட்டியலின மக்களை பொதுமக்கள் மத்தியில் வாழ வையுங்கள். ஊர் என்றும், சேரி என்றும் பிரிக்க வேண்டாம். ஊரில் இருக்கிற காலி இடங்களில், இடம் குறைவாக இருந்தாலும் பரவாயில்லை அடுக்குமாடி கட்டடங்களாக கட்டிக் கொடுங்கள்” என்று சொன்னார். குடிசை மாற்று வாரியத்தை அப்படிப் பார்க்கலாம். ஆனால் சமத்துவபுரம் என்ற சிந்தனை அம்பேத்கரின் சிந்தனையையும் உள்ளடக்கியது. சமத்துவபுரங்களில் 40 விழுக்காடு பட்டியலின மக்களுக்கு கொடுக்க வேண்டுமென்பது அதிலுள்ள ஆணை. எல்லா ஜாதியினரும் சமத்துவபுரத்தில் சேர்ந்து வாழ்கின்றனர். அதே சமயத்தில் பட்டியலின மக்கள் அங்கு பெரும்பான்மை எண்ணிக்கையில் பாதுகாப்பாகவும் வாழ்கின்றனர்.  10 விழுக்காடு இடத்தை உயர் ஜாதியினருக்கும், சிறுபான்மையினருக்கும் வழங்கி அவர்களையும் சமத்துவபுரத்தில் வாழவைத்தார் கலைஞர்.

இந்தியாவில் வேறெங்கும் யாரும் இப்படி அமைத்ததில்லை என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். இப்போது தமிழ்நாட்டில் 200க்கும் அதிகமான சமத்துவபுரங்கள் இருக்கிறது. மொழி அடிப்படையிலானாலும் சரி, அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்கும் சட்டமாக இருந்தாலும் சரி, பெண்களுக்கான சொத்துரிமை வழங்கியதாக இருந்தாலும் சரி இந்தப் பார்வை கொண்ட முதல் இயக்கமாக திராவிட இயக்கம்தான் இருந்தது. இந்தியாவில் பெண்களுக்கான சொத்துரிமை சட்டம் முதன்முதலில் தமிழ்நாட்டில் தான் கொண்டு வரப்பட்டது. 1989ஆம் ஆண்டில் இதை கலைஞர்தான் கொண்டுவந்தார். ஆனால் அதற்குப் பிறகு 16 ஆண்டுகள் கழித்து 2005ஆம் ஆண்டில்தான் அகில இந்திய அளவில் பெண்களுக்கான சொத்துரிமை சட்டம் வந்தது.

பெண்களுக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீடு என்பதை மிக நீண்டகாலமாகப் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் பெண்களுக்கு அரசுப் பணிகளில் 30 விழுக்காடும், உள்ளாட்சி தேர்தலில் 33 விழுக்காடும் இட ஒதுக்கீடு வழங்கி சட்டம் நிறைவேற்றினார். இன்னமும் இந்தியாவில் இந்த இரண்டிலும் வேறெங்கும் பெண்களுக்கு இட ஒதுக்கீடு இல்லையென்பதையும் யோசித்துப் பார்த்தால் இதன் சிறப்பு புரியும். சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தனியாக தொகுதி நிதி ஒதுக்கீடு என்பதை முதன்முதலாகக் கலைஞர்தான் தமிழ்நாட்டில் வழங்கினார். இதனுடைய செயல்பாடுகளை பார்த்த பிறகு 10 வருடம் கழித்து இந்திய அரசு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதி வழங்கும் முறையைக் கொண்டு வந்தது.

விவசாயிகளுக்கு வழங்கப்படும் பயிர்க் கடனை உரிய நேரத்தில் கட்டினால் வட்டி இல்லை என்ற சட்டத்தையும் முதன்முதலில் தமிழ்நாட்டில் கலைஞர் கொண்டு வந்தார். இன்னும் ஏராளமான திட்டங்களைப் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். எந்த மக்களுக்கான இயக்கமாக திராவிடர் இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது என்ற சிந்தனையை நெஞ்சில் தாங்கியவராகத்தான் கலைஞர் செயல்பட்டார். ஒவ்வொரு இடத்திலும் அதைப் பேசியே வந்திருக்கிறார். அரசியலுக்கு வந்துவிட்டாலே பொது இடங்களில் வெளிப்படையாக பேசுவதைப் பலர் நிறுத்திக் கொள்வதைப் பார்க்கிறோம். ஆனால் ராமன் எந்த என்ஜினியரிங் கல்லூரியில் படித்துவிட்டு பாலம் கட்டினான் என்று கேட்டார் கலைஞர். வட இந்தியாவிலோ பொது மக்கள் ராமனைப் பற்றி பேசினாலே அடித்துக் கொல்கிறார்கள். அவ்வளவு ஏன், குரங்கை அடித்தாலே நம்மை அடிக்க வருவார்கள். அதனால்தான் அம்பேத்கர் அவர்களை பழமைவாதிகள் என்றும் - நம்மை புதுமைவாதிகள் என்றும், அவர்களை மூட நம்பிக்கைவாதிகள் என்றும்- நம்மை பகுத்தறிவுவாதிகள் என்றும் சொன்னார்.

இந்த பகுத்தறிவை மேலும் மேலும் வளர்த்தெடுத்தலில் கலைஞருக்கு பங்கு உண்டு. பெரியாருக்கு ஒரு உறுத்தல் இருந்துகொண்டே இருந்தது. ”பட்டியலின மக்களை சட்ட மன்றத்தில் பார்த்துவிட்டேன். ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளாகப் பார்த்துவிட்டேன். ஆனால் 110 ஆண்டுகால வரலாறு கொண்ட சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு தாழ்த்தப்பட்டவர் கூட நீதிபதியாக இல்லையே” என்று தன்னுடைய வருத்தத்தை தெரிவித்து கலைஞரிடம் வேண்டுகோளாக வைத்தார்.  அந்த வாரத்திலேயே ஆணை பிறப்பிக்கப்பட்டு, திண்டுக்கல்லில் மாவட்ட நீதிபதியாக இருந்த ஏ.வரதராஜன் அவர்களுக்குப் பதவி உயர்வு வழங்கப்பட்டு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியானர். இந்தியாவிலேயே உயர் நீதிமன்ற நீதிபதியான முதல் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர் இவர்தான். அதன் தொடர்ச்சியாக அவரே டெல்லி உச்ச நீதிமன்றத்திலும் முதல் பட்டியலினத்தைச் சேர்ந்த நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றார். அந்தப் பெருமையை உருவாக்கிக் கொடுத்தவர் கலைஞர். அதற்குக் காரணம் திராவிட இயக்கச் சிந்தனை.

1975ஆம் ஆண்டில் குரூப் 1 சர்வீஸ் நடந்தது. அதில் 112 இடங்களில் ஒரு இடத்தைக் கூட ஒரு பார்ப்பனனுக்கோ, உயர் ஜாதிக்காரனுக்கோ கொடுக்கவில்லை. பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மற்றும் பழங்குடியின மக்கள் அதிலும், பிற்படுத்தப்பட்ட மக்களில் குரலற்ற மக்களாக உள்ளவர்களுக்கும், குறவர்களுக்கும், சவரத் தொழிலாளர்களுக்கும், கல் உடைக்கும் மக்களுக்கும் கொடுக்கப்பட்டது. அப்போதுதான் முதன்முதலில் குரூப் 1 சர்வீசில் இவர்கள் வந்தார்கள். பார்ப்பனர்களுக்கு அதிகக் கோபம் இங்குதான் வந்தது. பெரிய ஜாதி பிற்படுத்தப்பட்டவர்களுக்கு தராமல் சிறிய ஜாதி பிற்படுத்தப்பட்டவர்களுக்கு கொடுத்திருக்கிறாரே என்றும் கூட சிலருக்கு கோபம் வந்திருக்கலாம். இப்படிப்பட்ட ஒரு சமூக நீதி சிந்தனை கொண்டவராய், திராவிட இயக்க சிந்தனையாளராய் கருஞ்சட்டைக் கலைஞராய் இருந்தார். நாமும் அப்படியிருக்க முயல்வோம். அப்படியிருப்பதற்கான உதவிகளைச் செய்வோம். அண்ணா ஆட்சிக்கு வந்து குறுகிய காலம்தான் வாழ்ந்தார் என்றாலும், அவர் ஆட்சியில் பல சாதனைகளை செய்தார். கலைஞரின் ஆட்சிக்கு அடிக்கோல் நாட்டியது திராவிடர் இயக்கமும், அண்ணாவின் ஆட்சியும்தான். நாம் இப்போது எதிர்பார்ப்பதும் - காத்திருப்பதும் கலைஞரின் வழியில் பகுத்தறிவு பார்வையோடும், பார்ப்பன எதிர்ப்புப் பார்வையோடும், அடித்தட்டு மக்களைப் பற்றிய சிந்தனையோடும் நடக்கிற ஆட்சி வரவேண்டும் என்பதே. அதைத்தான் விரும்புகிறோம், வரும் என்று நம்புகிறோம்.

(“கருஞ்சட்டைக் கலைஞர்” என்ற தலைப்பில் திருச்செங்கோட்டில் 30.09.2018 ஞாயிறு அன்று நடந்த கருத்தரங்கில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரை.)

(நிறைவு)

தொகுப்பு: ர.பிரகாசு.

Pin It