பஞ்சசீலம்... ஒரு கருத்தியல் போர்

 காசிக்கு அருகில், சாரநாத்தில் புத்தர் தன் முதற்பேருரையை நிகழ்த்தியபோது ஐந்து ஒழுக்கங்கள் பற்றிப் பேசினார்.

1.கொலைசெய்யக்கூடாது 2. பொய் சொல்லக் கூடாது 3.திருடக்கூடாது 4.காமம் கொள்ளக் கூடாது 5.கள்அருந்தக் கூடாது. இவைதான் அந்த ஒழுக்கங்கள். இவற்றைப் ‘பஞ்சீலம்’ என்று பவுத்தம் குறிப்பிடுகிறது.

உலக மக்கள் அனைவருக்குமே உரிய பொதுவான ஒழுக்க நெறிகள் இவை. ஆனாலும் பவுத்தம் இதற்கு ஒரு முன்னுரிமை கொடுத்துப் பேசுகிறது.

பவுத்தத் துறவிகள் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்க நெறிகளுள் இப்பஞ்சீல மும் ஒன்று என்கின்றன பவுத்த நூல்கள்.

பஞ்சீலம் என்ற இவ்வொழுக்கங்கள் துறவிகளுக்கு உரிய அல்லது ஒவ்வொரு மனிதனுக்கும் உரிய தனிமனித ஒழுக்கமா அல்லது சமூக ஒழுக்கமா என்ற ஐயம் இங்கே எழுகிறது.

புத்தர் தனிமனித ஒழுக்கத்தை விட, சமூக ஒழுக்கத்திற்கே முன்னுரிமை தருபவர். குறிப்பாக சமூக ஒழுக்கம் என்பதை புத்தர் எப்படிப் பார்த்தார் என்பதையும் கவனத்தில் எடுக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. அதைப் பஞ்சசீலம் என்ற புள்ளியில் இருந்து பார்ப்போம்.

பண்டைய இனக்குழு அமைப்பான சன்ஸ்தகார் அமைப்பை முன்மாதிரியாகக் கொண்டு, புத்தர் தன்(பவுத்த) சங்கத்தை அமைத்தார் என்பதை முன்னர் பார்த்தோம். புத்தர் சாக்கிய இனக்குழுச் சன்ஸ்தகார் அமைப்பின் உறுப்பினராக இருந்தவர்.

சன்ஸ்தகார் அமைப்பில் ஒருவர் உறுப்பினராகச் சேர வேண்டுமென்றால், அதற்கெனச் சில விதிமுறைகள் உண்டு. அதில் கொலை, திருட்டு, பொய், காமம், கள் அருந்துவது ஆகிய ஐந்து தீய செயல்களைச் செய்யமாட் டேன் என்று உறுதி மொழி ஏற்பதும் ஒன்று.

சன்ஸ்தகார் சங்கத்தில் உறுதி மொழியாக இருந்த பஞ்ச சீலம்தான், பவுத்த சங்கத்தில் துறவிகளின் ஒழுக்க விதியாக அமையப் பெற்றுள்ளது.

பவுத்த சங்கத்தில் துறவிகள் இரண்டு வகையாகப் பிரிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

20 வயதுக்குக் கீழே உள்ள இளம் துறவிகள் தொடக்கப் படிநிலையில் இருப் பார்கள். இவர்கள் ‘சிரமணர்’ என்று அழைக் கப்படுவார்கள். 20 வயதுக்கு மேல் இவர்கள் ‘உபசம்பதா’ என்று அழைக்கப்படுவார்கள். இவர்களே ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு முறையாக துறவிகளாக ஏற்றுக்கொள் ளப்படுவார்கள்.

இதில் முதல்நிலை இளம் துறவிகளான சிரமணர்கள், சங்கத்தில் சேரும் போது, பத்து உறுதி மொழிகள் ஏற்க வேண்டும். அதில் முதல் ஐந்து உறுதி மொழிகள்தான் மேற் சொன்ன கொலை, பொய், களவு, காமம், கள் ஆகியவைகளை ஏற்கமாட்டேன் என்ற உறுதிமொழி ஏற்பு. இதுவே துறவிகளுக்கான சங்க விதியாகவும் மாறுகிறது.

இது ஒருபுறம் இருக்க மறுபுறத்தில் பஞ்சசீலம் என்ற இந்த ஐந்து ஒழுக்கங்களைப் பவுத்தம், எப்படித் துறவிகளுக்குச் சொல்லித் தருகிறது என்பதும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.

பவுத்தத்தின் மூலநூல் திரிபிடகம். இதில் சுத்தபிடகம் என்ற பிரிவு 5 தொகுப்புகளாக இருக்கிறது. 4ஆம் தொகுப்பு ‘அங்குத்ர நிகா யம்’ என்ற பெயரால் அமைந்துள்ளது. 2308 சுலோகங்களைக் கொண்ட 11 பகுதிகள் இதனுள் அடங்கும். இந்த நிகாயம் புத்தரை தெய்வமாகவே பெருமைப்படுத்திப் பேசுகி றது. இந்த அங்குத்ர நிகாயம் பஞ்சசீலத்தை இப்படித் துறவிகளுக்கு உபதேசம் செய்கிறது.

1.துறவிகளே! பிற உயிரை ஒருவன் கொன்றால், அவன் அடுத்த பிறவியில் விலங்கின் யோனியில் இருந்து பிறப்பான். நரகத்திற்குச் சென்று உழல்வான்.

2. துறவிகளே! திருடுவதை ஒருவன் மேற்கொள்வான் என்றால்,அவன் இருள் சூழ்ந்த நரகத்திற்குப் போவான்.

3.துறவிகளே! காமத்தை ஒருவன் மேற் கொண்டால், அவன் நரகத்தில் முழ்குவான்.

4.துறவிகளே! ஒருவன் பொய் பேசுவான் என்றால், அவன் மீளா நரகத்திற்குச் செல்வான்.

5.துறவிகளே! ஒருவன் கள் அருந்தினால் அவன் நரகத்திற்குச் செல்வான்.

இங்கே கவனிக்க வேண்டிய செய்தி, மறுபிறவி - விலங்கின் யோனி(பிறப்பு றுப்பு)யில் இருந்து மனிதன் பிறப்பு - நரகம் - இருள் சூழ்ந்த நரகம் - மீளா நரகம் ஆகிய சொற்கள் மிக இயல்பாகப் பயன்படுத்தப் பட்டுள்ளன.

விலங்கின் பிறப்புறுப்பில் இருந்து விலங்குதான் பிறக்கும். மனிதன் பிறக்க மாட்டான். விலங்கிடம் இருந்து மனிதன் பிறக்கும் ஆபாசக் கதைகளை ஆரியப் புராணங்களிலும், ஆரியவாதச் சிங்கள மகா வம்சத்திலும்தான் பார்க்க முடியும்.

பொதுவாக மோட்சம் நரகம் என்று இரண்டோடு கிருத்துவமும், இஸ்லாமும் முடித்துக் கொள்கின்றன. ஆனால் மூன்று லோகம், ஈரேழு லோகம், இந்திர லோகம் நரகலோகம் என்று எண்ணிலடங்கா லோகங்களை ஆரிய மதம் கொஞ்சமும் கூச்சம் இல்லாமல் சொல்லிக்கொண்டு இருக்கிறது.

அந்த வகையில் நரகம், அதுவும் வெளிச்சமே இல்லாத இருட்டான நரகம், ஏதோ இந்திரலோகத்திற்குப் போனால் திரும்பி வந்துவிடுவோம், நரகத்திற்குப் போனால் மீண்டும் வரமுடியாது என்பது போல, மீளா நரகம் என்று அளந்துள்ள ஆரியவாதக் கருத்துகள் இங்கே பஞ்சசீல ஒழுக்கத்தைச் சொன்ன புத்தர் மீதும், அவரின் உயர்வான கருத்துகள் மீதும் நுழைக்கப்பட்டு இருப்பதைப் பார்க்கலாம். இதில் புத்தரே ஏற்றுக்கொள்ளாத மறுபிறவிப் படலம் வேறு.

புத்தர் ஒரு பகுத்தறிவாளர். சிறந்த நாத்திகர் மனித நேயத்தை மனித நேயத் தோடு பேசும் சமநீதிப் போராளி. அவர் ஒரு திராவிடர்.

பகுத்தறிவை ஏற்காத, நாத்திகத்தை ஏற்காத மனித நேயத்தை ஏற்காத, சமநீதியை ஏற்காத, திராவிடருக்கு எதிரான ஆரியம், மகாயானம் என்ற ஆரிய பவுத்தமாக உருமாறி, புத்தரைச் சிதைத்து அவரின் நேரிய கருத்துகளைப் புராண மூட்டைகளுக்குள் நுழைக்க முயற்சித்திருப்பதற்கு அங்குத்தர நிகாயத்தின் பஞ்சசீல விளக்கம் சான்றாக அமைவதை இங்கே பார்க்கிறோம்.

ஐந்து ஒழுக்கங்களான பஞ்சசீலம் மனித வாழ்வின் ஓர் உயர்ந்த நெறியாக இருக்கும் போது, ஆரியம் மகாயானத்தின் மூலம் அந்த நெறியை விரிவுபடுத்தாமல் குறுகவைப்ப தற்கு என்ன காரணம்?

இதற்கு விடைகான பஞ்சசீலம் குறித்துப் புத்தரின் பார்வை என்ன? எப்படிப் பார்த்தார் - பார்த்திருப்பார் என்ற துணைக்கேள்விக ளோடு புத்தரிடம்தான் போக வேண்டும்.

காசியில் புத்தர் இப்படிப் பேசுகிறார், துன்புறுத்தவோ, கொலைசெய்யவோ கூடாது, திருடவோ பிறருக்குரிய எதையும் தனதாக்கிக் கொள்ளவோ கூடாது. காம வெறியில் ஈடுபடலாகாது. பொய்சொல்லக் கூடாது. போதையூட்டும் பானங்கள் அருந்தக் கூடாது”

தொடர்ந்து பேசும் புத்தர், “இந்தக் கோட்பாடுகள் தனிமனிதனுக்கு நன்மையைத் தருமா அல்லது சமூகத்தின் நன்மையைப் பெருக்குமா என்றால் இரண்டிற்கும் இது பொருந்தும்” என்றும் கூறுகிறார்.

இந்தச் சமூகத்தில் மக்கள் வீழ்ச்சியுள்ள (பதித்) அடிமை களாக இருக்கிறார்கள். அவர்களில் ஒரு பகுதியினர் வீழ்ச்சியில் இருந்து மீள முயல்கிறார்கள். இன்னொரு பகுதியினர் தாம் வீழ்ந்து கிடப்பது எதனால் என்று அறியாமல் இருக்கிறார்கள்.

அவர்களின் வீழ்ச்சிக்குக் காரணம் அறியாமை. அதற்காக அவர்களின் வீழ்ச்சியைப் பொருட் படுத்தாமல் இருக்க முடியாது என்கிறார் புத்தர்.

தனிமனிதனின் வீழ்ச்சி வேறு; ஓர் இனத்தின் வீழ்ச்சி வேறு! தனி மனித ஒழுக்கம் வேறு; சமூகத்தின் ஒழுக்கம் வேறு!

கொலை, திருட்டு, பொய், காமம், மது ஆகியவை தனிமனித ஒழுக்கம் என்ற அடிப்படையில் அவனை மட்டுமே சாரும். அது அவனின் செயல்பாட்டைப் பொறுத்தது.

அதுவே சமூகம், இனம் என்ற அடிப்படையில் வரும்போது, அது செயல் என்ற இடத்தையும் தாண்டி கருத்து என்ற இடத்தில் வந்து நிற்கிறது.

நல்ல கருத்து மக்களை விழிப்படையச் செய்யும், எழுச்சி பெறும். அறியாமையைப் போக்கும் - அது பகுத்தறிவு.

தீய கருத்து மக்களை விழிப்படையச் செய்யாது, எழுச்சி பெற விடாது, அறியாமை யில் ஆழ்த்தும் - அது மூடநம்பிக்கை.

பகுத்தறிவு- நாத்திகம், மூடநம்பிக்கை -ஆத்திகம்.

கொலை, திருட்டு,பொய், காமம், மது என்ற இப்பஞ்சசீலம் கருத்தியல் அடிப்படை யில் ஆத்திகத்தை எப்படி எதிர்கொள்ளப் போகிறது? எப்படி எதிர்கொள்ள வைக்கிறார் புத்தர் என்பதை இனிநாம் பார்க்கப் போகிறோம் - சரியா?

                                                  -தொடரும்