subavee_ravikumar_640

ஈழ மக்களுக்கு ஆதரவு தெரிவித்து, சென்னை, லயோலா கல்லூரி மாணவர்கள் கோயம்பேட்டில் காலவரையற்ற பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அவர்களைச் சந்திப்பதற்காகத் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், திராவிட இயக்கத் தமிழர் பேரவைப் பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன் ஆகியோர் 10.03.2013 மதியம் 12 மணியளவில் அங்கு சென்றிருந்தனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த சிலர் (நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பது பிறகு தெரியவந்தது) டி.கே.எஸ்.இளங்கோவனுக்கும், சுப. வீரபாண்டியனுக்கும் எதிராகக் குரல் எழுப்பினர்.

அப்போது பட்டினிப் போரில் ஈடுபட்டிருந்த மாணவர்களின் ஒருவரான பிரிட்டோ, ‘நாங்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள். எங்கள் போராட்டத்திற்கு எல்லோரது ஆதரவும் தேவை. எனவே எங்கள் போராட்டத்தில் சிலர் உள்ளே புகுந்து இதனை அரசியலாக்க வேண்டாம்’ என்று ஒலி வாங்கி மூலம் கேட்டுக் கொண்டார். உடனே பந்தலில் இருந்த மாணவர்கள் அனைவரும் எழுந்து நின்று கலவரம் செய்தவர்களைப் பார்த்து, ‘வெளியேறு, வெளியேறு, எங்கள் போராட்டத்தை அரசியல் ஆக்காமல், வெளியேறு, வெளியேறு’ என்று முழக்கமிட்டனர். அதன்பின், அந்தக் கலவரக் குழு கலைந்து சென்றது. இதுதான் அங்கு உண்மையில் நடந்தது. 

வெல்லட்டும் மாணவர் போராட்டம்! 

தனித்தமிழ் ஈழம் கோரியும், ராஜபக்சேயின் மீது சுதந்திரமான பன்னாட்டுப் புலனாய்வு வேண்டும் என்று கேட்டும், தமிழகம் முழுவதும் இன்று மாணவர்கள் போராட் டக்களத்தில் இறங்கி யுள்ளனர். பல ஆண்டுகளுக்குப் பிறகு மாணவர்களின் எழுச்சியை இப்போது பார்க்க முடிகிறது.

ஆண், பெண் வேறுபாடு இன்றி மாணவர்கள் அனைவ ரும் களத்திற்கு வந்திருப்பது பாராட்டுக்குரியதாக உள்ளது. வகுப்புகளைப் புறக்கணித்தும், பேரணிகள் நடத்தியும், முழக்கங்கள் எழுப்பியும் மாண வர்கள் போராடுகின்றனர். இவையனைத்தையும் தாண்டி, காலவரையற்ற பட்டினிப் போராட்டத்திலும் பல்வேறு கல்லூரி மாணவர்கள் ஈடுபட்டு உள்ளனர். இளம் வயதில் தங்கள் உடலை வருத்திக் கொண்டு, தன்னலம் ஏதுமின்றி மாணவர் கள் போராடுவது இன்னும் தமிழகத்தில் மாணவத் தீ அணைந்துவிடவில்லை என்பதையே காட்டுகிறது.

எழுச்சி மிக்க மாணவர் போராட்டத்தில் கவனிக்கப்பட வேண்டிய சில செய்திகளும் உள்ளன. அரசியலுக்கு அப்பாற்பட்டு மாணவர்கள் நிற்கின்றனர் என்றாலும், அவர்களுக்குள்ளும் கூட இன்னும் ஓர் ஒருங்கிணைப்பு ஏற்படாமல் உள்ளது. வலியுறுத்தப்படும் கோரிக்கைகளிலும் சில வேறுபாடுகள் காணப்படுகின்றன. குறிப்பாக அமெரிக்கத் தீர்மானம் குறித்து மாணவர்கள் இடையே ஒருமித்த கருத்து ஏற்படாமல் உள்ளதைக் காணமுடிகிறது. விரைவில் இந்நிலையிலிருந்து விடுபட்டு அடுத்த கட்டத்தை நோக்கி மாணவர் போராட்டம் நகரும் என்பது நம் நம்பிக்கை.

உலக வரலாற்றில் மாணவர்கள் முன்னெடுத்த போராட்டங்களே பல நாடுகளில் வெற்றி பெற்றுள்ளன. ஈழப் போராட்டம் கூட, தொடக்கத்தில் மாணவர்களால்தான் முன்னெடுக் கப்பட்டது. 1965ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தையும் இங்கே நாம் நினைவு கூர்வது பொருத்தமாக இருக்கும்.

வெல்லட்டும் மாணவர் போராட்டம்!

Pin It