லத்தீன் அமெரிக்க நாடுகளுள் ஒன்றான, வெனிசுலா நாட்டின் அதிபர் ஹியூகோ சாவேஸ் கடந்த 05.03.2013 அன்று புற்றுநோயால் மரணமடைந்தார். அமெரிக்காவின் சட்டாம்பிள்ளைத்தனத்திற்குச் சற்றும் அஞ்சாமல், 14 ஆண்டுகளாக வெனிசுலாவை முன்னேற்றப் பாதையில் அழைத்துக் கொண்டு வந்தவர். இப்போது மீண்டும் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், பதவியேற்பதற்கு முன்பே, தான் மிகவும் நேசித்த வெனிசுலா மக்களை விட்டு சாவேஸ் பிரிந்துவிட்டார்.
தென் அமெரிக்கக் கண்டத்தில் அதிக அளவு எண்ணெய் வளம் உள்ள நாடு வெனிசுலா. உலகின் எண்ணெய் வளங்களுக்கெல்லாம், தானே ஏகபோக உரிமையாளன் என்று செயல்பட்டு வரும், அமெரிக்கக் கழுகு, வெனிசுலாவின் எண்ணெய் வளத்தையும் 100 ஆண்டுகளுக்கும் மேலாக சுரண்டிக் கொழுத்தது. 1998 ஆம் ஆண்டு, ஐக்கிய சோலிஸ்ட் கட்சி சார்பில், ஆட்சியைப் பிடித்த சாவேஸ் முழுவீச்சில் அமெரிக்கக் கழுகை விரட்டும் நடவடிக்கைகளை மேற்கொண்டார். விரைவில் அமெரிக்காவின் தடம் கூட இல்லாமல், வெனிசுலா மண்ணிலிருந்து அது அப்புறப்படுத்தப்பட்டது. முன்னாள் அதிபர் புஷ்சை ஐ.நா.மன்றத்திலேயே பேய் என்று சொன்ன துணிச்சல்காரர் சாவேஸ்.
“நாளை என்பது மிகத் தாமதம்” என்பது சாவேசின் உத்வேகத் தொடர். அவரின் புயல்வேக நடவடிக்கைகளுக்கு இதுவே உந்து சக்தியாக இருந்தது. அவரின் மறைவு மிகப்பெரிய இழப்பு. ஆனாலும், வெனிசுலா மக்கள் ஒவ்வொருவரும் சாவேசின் பதிப்பு என்பதில் ஒரு நிறைவு கிடைக்கிறது.
“சோலிசம் என்பது நம் முன்னோர்களின் திட்டத்தை அப்படியே நகல் எடுப்பது அல்ல. கொள்கைகளை அப்படியே நகல் எடுத்ததுதான், 20ஆம் நூற்றாண்டில் நாம் செய்த மிகப்பெரிய தவறு. தனித்தன்மையோடு, இப்போதுள்ள வேறுபாடுகளோடு, ஒவ்வோர் இடத்தில் இருந்தும் உருவாகும் மக்கள் சக்தியில் இருந்தும் நாம் அந்தந்தப் பகுதி சார்ந்த, மண் சார்ந்த சோலிச சமுதாயத்தை உருவாக்க வேண்டும்” என்றார் ஹியூகோ சாவேஸ்.
அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பில் மிகத் தெளிவாகவும், துணிச்சலாகவும் நடந்துகொண்ட அவர், இனப்படுகொலை செய்த ராஜபக்சேவை அழைத்து விருந்தளித்து, சிறப்பித்தது நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. சீன ஆதரவு என்கிற நிலையில் இருந்தே, சாவேஸ் உள்பட கியுபா போன்ற நாடுகள், ஈழத்தமிழர் இன்னல்களைக் கணக்கில் எடுக்காது, இலங்கையை ஆதரித்து வருகின்றன. இது மிகவும் வருத்தத்திற்குரியதே!
எனினும் வல்லாதிக்க எதிர்ப்புப் போராளி ஹியூகோ சாவேசுக்கு நம்முடைய வீர வணக்கங்கள்!
-------------------------------------------------------------------------------------------------------------------
மார்ச் - 23 - பகத்சிங் - சுகதேவ் - ராஜகுரு 82ஆவது நினைவுநாள்
‘பக்குனின் (Bakunin) என்பவரின் நூல்களைக் கற்றேன். பொதுவுடைமைத் தத்துவத்தின் தந்தையாகிய மார்க்சின் நூல்களில் சிலவற்றைக் கற்றுணர்ந்தேன். ஏகச் சக்ராதிபத்திய ஆதிக்க இருள் அடர்ந்திருந்த தங்களுடைய நாட்டில் புரட்சியை வெற்றிகரமாகச் செய்து முடித்த கர்ம வீரர்களான லெனின், ட்ராட்ஸ்கி (Trotsky) இன்ன பிறரால் இயற்றப்பட்ட நூல்களில் பெரும்பாலானவற்றை அலசி அலசி ஆராய்ந்தேன்.
1926ஆம் ஆண்டு முடிவில், இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்து, காத்து, நடத்தி வரும் சர்வ சக்தி வாய்ந்த கடவுள் ஒருவர் உண்டு என்ற கொள்கை அடியோடு ஆதாரமற்றதென உணர்ந்து கொண்டு விட்டேன்.’
- பகத்சிங்