மரணதண்டனை ஏன் கூடாது என்பது குறித்துப் பல பத்தாண்டுகளாகத் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது.

மனித உரிமைகளுக்காகப் போராடி வரும் மக்கள் சிவில் உரிமைக் கழகம்,மரண தண்டனைக்கு எதிராகவும் நீண்டகாலமாக சட்டப் போராட்டங்களையும், பரப்புரை களையும், கருத்தரங்குகளையும், களப்பணி களையும் செய்து வருகிறது. இவ்வமைப்பின் சார்பில் மே முதல் நாளன்று,சென்னை தியாகராயர் நகரிலுள்ள சி.டி.நாயகம் பள்ளியில் மரணதண்டனை எதிர்ப்புக் கருத்தரங்கு நடைபெற்றது. மக்கள் சிவில் உரிமைக் கழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் வீ.சுரேஷ், பேராசிரியர் சரசுவதி, வழக்.சா.பாலமுருகன், வரலாற்று ஆய்வாளர் வ.கீதா,எழுத்தாளர் ஓவியா மற்றும் அற்புதம்குயில்தாசன் ஆகியோர் தங்களுடைய கருத்துகளை அவரவர் தளத்திலிருந்து எடுத்து வைத்தனர்.

இக்கருத்தரங்கு ஒரு புதிய செய்தியைப் பதிவு செய்தது.மரணதண்டனை குறித்த விழிப்புணர்வுப் பயணத்தில், சட்டநுணுக்கங்களை, இதற்கு மேல் சொல்வதற்குப் புதிதாக ஏதும் இல்லை என்கின்ற அளவிற்கு எடுத்துச் சொல்லி வந்திருக்கிறோம். ராஜீவ் கொலை வழக்கில், கொலைக்கான பின்னணி என்ன, அதில் உள்ள அரசியல் சித்து விளையாட்டு கள் என்னென்ன,இன்னும் விடுவிக்கப்பட வேண்டிய சுப்பிரமணிய சாமி போன்ற சிக்கல்கள், பேரறிவாளன், முருகன், சாந்தன் உள்ளிட்டோரின் மீது சுமத்தப்பட்ட புனைவுக் குற்றம் இது என்பதற்கான விளக்கங்கள் என நாம் பேசாத பக்கங்கள் எதுவுமே இல்லை.

இத்தனைக்குப் பிறகும்,தில்லியில் நடந்த பாலியல் வன்கொடுமை போன்ற கொடூரமான நிகழ்வுகளின் போது,உணர்ச்சிக் கொந்தளிப்பால் உந்தப்படும் பொதுமக்கள் குற்றவாளிகளைத் தூக்கிலிடு என்கின்ற முழக்கத்தைத்தான் முன்வைக்கின்றனர்.இது அந்த நேரத்தில் அவர்களின் உள்ளக்குமுறலின் வெளிப்பாடாகவே பெரும்பாலும் இருக்கக்கூடும்.ஒரு உயிரைக் கொல்கின்ற அளவிற்கு அவர்கள் அனைவரும் கொடூரர்கள் அல்லர்.எனவே உணர்ச்சிக் கொந்தளிப்பான நேரங்களில் பொது மக்களிடம் இருந்து வெளிப்படும் ‘தூக்கிலிடு’என்னும் தீர்வை அப்படியே எடுத்துக் கொள்வது மனித அறவியலுக்கு முரணானது.

காரணம் மரணதண்டனை என்பது, நம்முடைய நீதியமைப்பைப் பொறுத்தவரை அதிர்ஷ்டம் சார்ந்ததாகவே அமைகிறதுஇங்கே அதிர்ஷ்டம் என்று நாம் சொல்வது,தீர்ப்பளிக்கும் இடத்தில் அமர்ந்திருக்கும் நீதிபதிகளின் அப்போதைய எண்ண வோட்டம்,அவர்கள் வாழுகின்ற சமூகத்தின் சம்பிரதாயங்கள், மரபுகள், மதிப்பீடுகள் ஆகியவற்றைத்தான்.

அது எப்படி என்பதற்குச் சில செய்திகளை மட்டும் பார்ப்போம்.காலிஸ்தான் இயக்கத் தலைவர் தேவேந்தர் சிங் புல்லரின் வழக்கில், கருணை மனு நிராகரிக்கப்படுவதற்கு ஆன காலதாமத்தை, தண்டனைக் குறைப்புக்குச் சாதகமாக எடுத்துக்கொள்ள முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அசாமைச் சேர்ந்த எம்.என்.தாஸ் என்பவரின் கருணை மனுவை 2011இல் அப்போதைய குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் நிராகரித்தார். இவரின் கருணை மனு 12 ஆண்டுகள் கழித்துத் தாமதாகமாக நிராகரிக்கப்பட்டதால்,இவருக்கு வழங்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள்தண்ட னையாகக் குறைத்து உத்தரவிட்டதும் (01.05.2013)அதே உச்சநீதிமன்றம்தான்.

புல்லர் வழக்கின் தீர்ப்புக்குப் பிறகே எம்.என்.தாஸ் வழக்கில் இப்படி ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இரண்டு விதமான தீர்ப்புகளை வழங்கியவர்கள் ஒரே நீதிபதிகள் தான் என்பது கூடுதல் செய்தி.

நீதிபதி சதாசிவம் என்பவர் ஒரே நாளில் இரண்டு கொலை வழக்குகளில் வழங்கிய இருவேறுபட்ட தீர்ப்புகளும் நாம் மேலே குறிப்பிட்ட அதிர்ஷ்டக் கணக்கில் வருவதாகவே இருக்கிறது.

வழக்.1 - ஆண் குழந்தையைக் கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு மரணதண்டனை
வழக். 2 - பெண் குழந்தையைப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில், மரணதண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைப்பு இரண்டுமே குழந்தைகள்தான். கொடூரமான கொலைக்குற்றம்தான். ஆனால், முதல் வழக்கில், வேறு ஆண் வாரிசு இல்லாததால் அக்குடும்பத்தின் ஆண்வாரிசு முடிந்துவிடுகிற கொடுமை நடந்திருக்கிறது, எனவே மரணதண்டனை.இரண்டாவது வழக்கில்,குற்றவாளி குறைந்த வயதுடையவர் என்பதால் தண்டனைக் குறைப்புச் செய்யப்படுகிறது.

தென்னாப்பிரிக்காவில் வழக்கு ஒன்றில் தீர்ப்பளிக்கும்போது ஒரு நீதிபதி, ‘மரணதண்டனை என்பது மிகவும் ஆபத்தான சாகடிக்கும் ஒரு லாட்டரி’என்று குறிப்பிட் டாராம். மேற்சொன்ன தீர்ப்புகளைப் பார்க்கும் போது,அது சரிதான் என்றே படுகிறது.இந்நிலையில், அக்கருத்தரங்கில் வ.கீதா முன்வைத்த செய்தி,மரண தண்டனைக்கு எதிராக மக்களின் கருத்து களை ஒன்றுதிரட்ட மிகவும் உதவிகரமாக அமையும் என்று நம்புகிறோம்.

அது என்னவென்றால், குற்றம் சாட்டப் பட்டவர்களைப் பற்றி, அவர்களின் தனிப்பட்ட, சமூக வாழ்க்கை குறித்த செய்திகளைப் பொதுமக்களிடையே கொண்டு செல்வது.அதாவது அவர்களுடைய குடும்பம், பெற்றோர், உடன்பிறந்தோர், வளர்ந்த சூழல், சொந்த ஊரில் அவர்களைப் பற்றிய மதிப்பீடுகள், இன்று அவர்களுடைய குடும்பத்தின் சமூக, பொருளாதார நிலை என்ன,சிறையில் அவர்களின் நடத்தை,கல்வித் தகுதி போன்ற அனைத்துக் கூறுகளையும் விளக்கமாக மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்ல வேண்டும்.

காரணம், ‘கருணை மனுவின் மீதான பரிசீலனையின் போது, குற்றத்தைப் பார்க்கக் கூடாது, குற்றவாளியைப் பார்க்க வேண்டும்’ என்கின்ற கூறு அடிப்படையாக வைக்கப் பட்டுள்ளது. ஏற்கனவே குற்றத்தை மட்டுமே பார்த்துதான், தண்டனை வழங்கப்பட்டி ருக்கிறது. எனவே கருணை மனு பரிசீல னையின் போதாவது குற்றவாளியின் சூழலைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே இவைபோன்ற விதிகள் சொல்லப்பட்டுள்ளன போலும்!

வ.கீதா முன்வைத்த இந்தக் கருத்துக்கு வலுசேர்ப்பதாக இருந்தது,வழக்கறிஞர் சா.பாலமுருகன் எடுத்துரைத்த, வீரப்பன் கூட்டாளிகளின் நிலை. வீரப்பனை உயிரோடு பிடிக்க முடியாத கையறு நிலையில், மீசை மாதையன், பிலவேந்திரன், சைமன், ஞானபிரகாஷ் ஆகிய நால்வரைக் கைது செய்து,வீரப்பனின் கூட்டாளிகள் என்று கதை புனைந்து தூக்குக் கயிற்றின் நிழலில் நிற்க வைத்துள்ளனர்.இவர்களில் சைமனைத் தவிர மற்ற மூவரும் 60 வயதுடையவர்கள்.

மீசை மாதையன் 60ஐக் கடந்து,தெளிவற்றக் கண்பார்வையுடன் சாவோடு போராடி வருகிறார்இவர்களைக் குடும்பத்தினர் யாரும் எளிதில் சந்தித்துவிடாத தொலைவில், பெல்காம் சிறையில் அடைத்திருக்கின்றனர்.

இவர்களில் மாதையன் வீரப்பனின் அண்ணன். மற்ற மூவரும் வீரப்பனைப் பார்த்தது கூட இல்லை. இந்த இடத்தில்தான் குற்றவாளிகளைப் பார்க்க வேண்டும் என்கிற விதியை நாம் திரும்பத் திரும்பக் கூறவேண்டி வருகிறது.

கருணை மனு பரிசீலனையின் போது,குற்றவாளி இதற்கு முன் ஏதேனும் குற்றச் செயல்களில் தொடர்புடையவரா, அவருடைய குடும்பப் பின்னணி என்ன, தூக்கில் இருந்து விடுவிக்கப்படும் பட்சத்தில், எதிர்காலத்தில் குற்றமிழைக்க முகாந்திர முள்ளதா, இதுவரை சிறையாளியாக அவருடைய நடத்தை எப்படி இருந்தது என்பனவற்றை எல்லாம் கருத்தில் கொள்ள வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கும் சட்ட விதிகளை,நாம் மக்கள் மன்றத்திற்குச் சென்று விளக்க வேண்டும்.

பேரறிவாளன், முருகன், சாந்தன் - சிறையில் மற்ற கைதிகளுக்கு முன் மாதிரி யான வாழ்க்கை வாழ்ந்து கொண்டி ருப்பவர்கள். படிப்பு, இசை, விளையாட்டு என சிறைச் சாலையை அறச்சாலையாக மாற்றியவர்கள்.இதுவரை எந்த ஒரு சிறு தவறுக்கும் இடம் கொடுக்காமல் ஒழுக்கம் காப்பவர்கள்.பேரறிவாளன் தந்தை பெரியாரின் கொள்கைத் தோன்றல். முருகனும், சாந்தனும் ஆன்மீகத்தில் நாட்டமுடைய வர்கள். முருகன் சிறந்த ஓவியர். சாந்தன் நல்லதொரு எழுத்தாளர்.

இவர்களின் வாழ்க்கை அன்றும் இன்றும் என்றும் யாருக்கும் ஊறுவிளைக்க எண்ணாத வகையில் அமைந்தது என்பதை மக்கள் மன்றத்தின் முன் எடுத்துரைக்க வேண்டும்.

மனநிலை சரியில்லாத நிலையிலும், புல்லரைத் தூக்கில் ஏற்றியே தீர வேண்டும் என்கிறது சட்டம். வ.கீதா சொல்வது போல,இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் அறவியல் சார்ந்ததாக இல்லை என்பதை புல்லரின் நிலை காட்டுகிறது.

அறவியல் சார்ந்த அரசியல் அமைப்புச் சட்டம் குறித்தும் நாம் அதிகமாகப் பேச வேண்டியிருக்கிறது.

Pin It