பவுத்தம்: ஆரிய - திராவிடப் போரின் தொடக்கம் - 13

புத்தர் காலத்தில் சாதி இருந்ததா? இல்லையா?

“சாதிக்கொடுமைகளையும்,குருமார்களின்ஏமாற்று வித்தைகளையும், சடங்கு முறைகளையும் ஒழிக்க எழுந்தது பவுத்தம்”என்று சொல்வதன் மூலம் சாதி இருந்தது என்பதை ஜவகர்லால் நேரு ஒத்துக் கொள்கிறார்.

ஆனால் பெரும்பாலான பவுத்த ஆய்வாளர்கள்,புத்தர் காலத்தில் சாதிகள் இருக்கவில்லை. வருணங்கள்தான் இருந்தன. அவையும தொழில் அடிப்படையானவையே. இப்பிரிவுகளைச் சாதிகள் என்று சொல்ல முடியாது. வருணம் வேறு, சாதி வேறு என்று வாதாடுகிறார்கள்.

வருணம் என்றால் என்ன? சாதி என்றால் என்ன?

ரிக், யஜுர், சாம, அதர்வண ஆரிய வேதங்களும், அதற்கு அடுத்த நூல்களாக அறியப்படும் பிரமாணங்களும் ஆரியர்களின் புனித நூல்கள்.இவை இரண்டும் பொதுவாக ஸ்மிருதி என்று அழைக்கப்படுகின்றன.

இவ்வேதங்கள் மிகவும் புனிதமானவை.குற்றம் குறைகள் இல்லாதவை.அவைகளைக் கேள்வி கேட்கக்கூடாது, விமர்சனம் செய்யக்கூடாது. அவ்வேதங்கள் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது ஆரியம்.

வருணம் என்ற பெயர்,ஆரியர்களின் ஓர் இலட்சிய சமுதாயத்திற்கான கோட்பாடாக வேதத்தில் காணப்படுகிறது.அவர்களின் இலட்சியச் சமுதாயத்தை ஆரியர்கள் சதுர்வருணம் (நால்வருணம்) என்று அழைத்தார்கள் என்பதும் வேதத்தில் காணப்படுகிறது.

வேதம் எப்படிப் புனிதமானதோ அப்படியே சதுர்வருணமும் புனிதமானது.வேதத்தை எப்படிக் கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொள்ள வேண்டுமோ அப்படியே சதுர் வருணத்தையும் கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

சதுர் வருணம் என்றால் மனித இனத்தை நான்கு வருணங்களாகப் பிரிவுபடுத்தி வைக்கும் அமைப்பு முறை.அதன்படி பிராமணர்-சத்திரியர்-வைசியர்-சூத்திரர் என்ற அமைப்புமுறை சதுர்வருணமஆயின.இவ்வருண அமைப்பு முறைக்கு அடிப்படை யயனச் சொல்லப்பட்டவை தொழிலும், தகுதியும். எப்படி?

பிராமணர்களுக்கு ஓதலும்,ஓதுவித்தலும் அதாவது அறிவு சார்ந்தவை தொழில். சத்திரியருக்குப் போரும், அரசுரிமையும் அதாவது பாதுகாப்புத் தொழில். வைசியருக்கு உற்பத்தியும், வணிகமும் அதாவது பொருளியல் சார்ந்த வணிகம் தொழில். சூத்திரருக்குக் குறிப்பிட்ட எந்தத் தொழிலும் இல்லை. பிராமணர், சத்ரியர், சூத்திரர் ஆகிய மூன்று வருணங்களுக்கும் சூத்திரின் வேலை அடிமைத் தொழில்.

பிராமணர் அறிவுசார்ந்த தொழிலால் சமூகத்தில் மேல்தட்டில் மிக உயர்ந்த இடத்தில் இருக்கிறார்கள். சத்திரியர் போரும் வீரமும் தொழில் என்பதால், பிராமணருக்குக் கீழாகவும், வைசியருக்கு மேலாகவும் இருக்கிறார்கள்.வைசியரின் தொழில் வணிகம் என்பதால் இவர்கள் சத்திரியருக்குக் கீழாகவும், சூத்திரருக்கு மேலாகவும் இருக்கிறார்கள். சூத்திரருக்குத் தொழில் என்பது ஏதும் இல்லாமல், அடிமை வேலை செய்ய வேண்டும் என்பதால் இவர்கள் அனைவருக்கும் கீழானவர்களாக வைக்கப்பட்டார்கள்.இவர்களுக்குக் கீழே யாரும் இல்லை.

வருணங்கள் நான்கு.அவைகளுக்குரிய தொழில்கள் நான்கு.அத்தொழில்களால் ஏற்பட்டத் தகுதிகள் நான்கு.

இங்கே கேட்கப்படவேண்டிய கேள்வி,இந்நான்கு வருணங்களுக்கும் உரிய தொழில்களும், அத்தொழிலால் வரும் தகுதிகளும் அவ்வப்போது மாறுதல்களுக்கு உட்படும் நியமனமா அல்லது மாற்றமே இல்லாத பரம்பரைப் பிறப்புரிமையா?

ஆரியப் புனித நூல்களும், மனுஸ்மிருதியும் சொல்கின்றன, மாற்றமே இல்லாமல், தந்தை வழி மகனுக்கு என்று வழி வழியாக அதாவது பரம்பரைப் பிறப்புரிமை யாக நால்வருணங்களும், தொழில்களும், தகுதிகளும் தொடர்ந்து வருகின் றன என்று. அதற்குப் பெயர்தான் சாதி. சாதி முதன் முதலாகப் பிறந்த இடம் இதுதான்.

ஆகவே வருணம் என்பதும்,சாதி என்பதும் ஒன்றல்ல வேறுவேறு என்ற வாதம் இங்கே தகர்ந்து விடுகிறது. வருணமும் சாதியும் வேறுவேறல்ல இரண்டும் ஒன்றுதான்.எனவே புத்தர் காலத்தில் வருணம் என்ற பெயரில் சாதி இருந்தது என்ற முடிவை நாம் உறுதி செய்வோம்.

வருணம் சாதியாக மாறியதன் நோக்கம் என்ன?

கேட்போம் டாக்டர் அம்பேத்கர் தரும் விளக்கத்தை,“பிராமணியம் வருணத்தைச் சாதியாக மாற்றியதன் நோக்கம் என்ன என்பதை ஊகிப்பது கடினமல்ல.பிராமணர்களில் சிலருக்கு அவர்களுடைய சிறப்பியல்பு காரணமாகக் கிடைத்திருந்த உயர்ந்த அந்தஸ்துக்கு ஒவ்வொரு பிராமணனையும்,அவன் எவ்வளவு இழி தகைமை கொண்டவனாக இருந்தாலும் உயர்த்திவைக்க வேண்டும் என்பதே நோக்கம். பிராமண சமுதாயம் முழுவதையும் ஒருவர் கூட விடுபடாமல்,உயர்ந்தவர்கள் என்று ஆக்கும் முயற்சியே இது..முன்னேற முடியாத ஒரு சமுதாயத்தை உருவாக்குவதற்கு இதைவிடச் சிறந்த வழி இருக்க முடியாது.”

டாக்டர் அம்பேத்கர் இரண்டு செய்திகளை இங்கே தந்திருக்கிறார்.சாதியின் பெயரால் ஆரியர்கள் தங்களை பிராமணன் என்று சமூகத்தின் மிக உயர்ந்த முதன்மையான இடத்தில் நிலை நிறுத்திக் கொள்கிறார்கள்.மற்றொன்று இதே சாதியின் பெயரால் முன்னேற முடியாத ஒரு சமுதாயத்தை உருவாக்குகிறார்கள்.

முன்னேற முடியாத சமுதாயம் எது?சூத்திரச் சமுதாயம்!எது சூத்திரச் சமுதாயம்? நுணுக்கமான கேள்வி இது.

இந்தியாவில் இரண்டே இனங்கள்தான் இருக்கின்றன. ஒன்று ஆரிய இனம். மற்றொன்று ஆரியர் அல்லாத திராவிட இனம்.

திராவிடர்களைத் தஸ்யூ என்றும் தாசர் என்றும் ஆரிய வேதங்கள் சொல்கின்றன.தாசர் என்றால் சூத்திரர் என்பது மனுஸ்மிருதியின் விளக்கம்.

எனவே ஆரியக் கூத்தின்படி,ஆரியர் அல்லாத திராவிடர் அனைவருமே சூத்திரர் என்ற முடிவுக்கு வரவேண்டி இருக்கிறது. இருந்தாலும் சூத்திரரிலும் மூன்று பிரிவினர் உள்ளனர். அவர்களுக்கு வெவ்வேறு உரிமைகள் தரப்பட்டுள்ளன என்பதையும் பார்க்கிறோம்.

சத்திரியன், பிராமணின் உரிமைகளையும், சலுகையையும் கோர முடியாது. ஆனால் அவனுக்குக் கீழே இருக்கும் வைசியனின் உரிமை சலுகைகளை விடக் கூடுதலாகப் பெற்றிருக்கிறார்.

வைசியன்,சத்திரியனின் உரிமை சலுகைகளைக் கோர முடியாது. ஆனால் அவனுக்குக் கீழே இருக்கும் சூத்திரனின் உரிமை சலுகைகளை விடக் கூடுதலாகப் பெற்றிருக்கிறான்.
சூத்திரன்? எந்த உரிமையும் இல்லை, சலுகையும் இல்லை.

சத்திரியர்களும் வைசியர்களும் சமூகத்தில் வெவ்வேறு அளவீடுகளில் உரிமைகளையும் சலுகைகளையும் பெற்றிருக் கிறார்கள் என்பதால் இவர்களுக்கு ஒரு சமூக அங்கீகாரம் கிடைத்துவிடுகிறது.

சூத்திரர் எந்த உரிமைக்கும், உரிமை உடையவர் அல்லர். எந்தச் சலுகை குறித்தும் அவர்கள் பேசவே கூடாது. சமூக அங்கீகாரம் இல்லாத ஒரு அடிமைச் சமூகம்.

இதைத்தான் டாக்டர் அம்பேத்கர் முன்னேற முடியாத சமூகம் என்றார்.இதுவே உண்மையான சூத்திரச் சமூகம்.

ஆரியர்கள் சிறுபான்மையினர்.ஆரியர் அல்லாதத் திராவிடர் என்ற சூத்திரர்கள் பெரும்பான்மையினர். பெரும்பான்மைச் சூத்திரர்கள் பலம் பெற்றுவிடக்கூடாது என்பதனால், இவர்களைச் சத்திரியர்,வைசியர்,சூத்திரர் என்று பிளவுபடுத்திச் சமத்துவமற்ற சமூக ஏற்றத்தாழ்வை உருவாக்கியது ஆரியம்.

ஆரியம், சூத்திரர்களின் அனைத்து உரிமைகளையும் பறித்துக் கொண்டது. ஆரியர் அல்லாத சத்திரியரும், வைசியரும் சூத்திரர்களின் உரிமைகளை அங்கீகரிக்க மறுத்தனர்.

சூத்திரர்கள் தாழ்த்தப்பட்டார்கள். தீண்டாமைக்கு உள்ளாக்கப்பட்டார்கள். ஒதுக்கப்பட்டார்கள். ஒடுக்கப்பட்டார்கள். காரணம் சாதி. ஆரியத்தால் உருவாக்கப்பட்ட வருணம் என்ற சாதி!

இந்த மக்களை வேசியின் மகன் என்றது மனுஸ்மிருதி.சண்டாளர்கள் என்றனர் ஆதிக்கவாதிகள்.

இல்லை! அவர்கள் “தலிதா”க்கள், உழைக்கும் மக்கள் என்றது பவுத்தம்.

சாதியத்திற்கு எதிராக முதன்முதலாகக் குரல் எழுப்பினாரே புத்தர்!அதற்கு அதைவிட வேறு என்ன காரணம் இருக்க முடியும்?

- தொடரும்

Pin It