புதிது புதிதாகப் பல மூடநம்பிக்கைகள் சமூகத்தில் பரப்பப்படுகின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு,உடன்பிறந்த அக்காள்,தங்கைகளுக்குப் பச்சை வண்ணத்தில் சேலை எடுத்துக் கொடுக்க வேண்டும் என்று ஒரு செய்தியைக் கிளப்பி விட்டார்கள். அந்த ஆண்டு அத்தனை பச்சை சேலைகளும் விற்றுத் தீர்ந்தன.

சில ஆண்டுகளாக, அக்ஷ‌ய திரிதயை நாளில் தங்கம் வாங்கினால், வீட்டில் செல்வம் வந்து குவியும் என்று கூறினர். அதை நம்பி, அலைமோதிய மக்கள், நெரிசலில் சிக்கி இருந்த நகையையும் இழந்தார்கள்.இப்போது தங்கம்தான் வாங்க வேண்டும் என்பதில்லை, ஏதேனும் ஒரு பொருள் வாங்கினாலே போதும்,லட்சுமி வீட்டிற்கே வந்து கதவைத் தட்டுவாள் என்றார்கள்.

இதில் என்ன வேடிக்கை என்றால்,அக்ஷ‌ய திரிதயை என்பது 60ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் வரும்.தமிழ் ஆண்டுகள் என்று சொல்லப்படுகிற 60ஆண்டுகளில் ஒன்றுதான் அக்ஷ‌ய. அந்தக் குறிப்பிட்ட ஆண்டில் வரும் திரிதயை (அமாவாசைக்குப் பிறகு வரும் மூன்றாவது நாள்)அன்று தங்கம் வாங்கினால் செல்வம் பெருகும் என்பது இந்து மதம் மற்றும் சமண மதம் சார்ந்த நம்பிக்கை.அந்த நாளில்தான் விஷ்ணுவின் ஆறாவது அவதாரமான பரசுராமர் பிறந்தார் என்றும்,மகாபாரதம் அந்த நாளில்தான் எழுதப்பட்டது என்றும் பல்வேறு விதமான புராணக் கதைகள் உள்ளன. எவ்வாறாயினும் அக்ஷ‌ய ஆண்டு, ஆண்டுதோறும் வராது.

அதைப்பற்றியயல்லாம் கவலை கொள்ளாமல்,சித்திரையில் திரிதயை எப்போது வருகிறதோ,அதனை அக்ஷ‌ய திரிதயை என்கிறார்கள்.அது நள ஆண்டில் வந்தாலும் சரி, விரோதிகிருது ஆண்டில் வந்தாலும் சரி, எல்லாம் அக்ஷ‌ய திரிதயைதான்.

வணிக நோக்கத்தை மட்டுமேகொண்டு உருவாக்கப்படும் இதுபோன்ற மூடநம்பிக்கைகளை என்றைக்குத்தான் புரிந்து கொண்டு மக்கள் கைவிடுவார்களோ தெரியவில்லை.

Pin It